Scripture Portion: Isaiah 5-8

ஏசாயா 5

1இப்பொழுது நான் என் நேசரிடத்தில் அவருடைய திராட்சத்தோட்டத்தைக் குறித்து என் நேசருக்கேற்ற ஒரு பாட்டைப் பாடுவேன்; என் நேசருக்கு மகா செழிப்பான மேட்டிலே ஒரு திராட்சத்தோட்டம் உண்டு.
2அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச்செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக்கட்டி, அதில் ஆலையையும் உண்டுபண்ணி, அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று காத்திருந்தார்; அதுவோ கசப்பான பழங்களைத் தந்தது.
3எருசலேமின் குடிகளே, யூதாவின் மனுஷரே, எனக்கும் என் திராட்சத்தோட்டத்துக்கும் நியாயந்தீருங்கள்.
4நான் என் திராட்சத்தோட்டத்திற்காகச் செய்யாத எந்த வேலையை அதற்கு இனிச் செய்யலாம்? அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று நான் காத்திருக்க, அது கசப்பான பழங்களைத் தந்ததென்ன?
5இப்போதும் நான் என் திராட்சத்தோட்டத்துக்குச் செய்வதை உங்களுக்கு அறிவிப்பேன்; அதின் வேலியை எடுத்துப்போடுவேன், அது மேய்ந்துபோடப்படும்; அதின் அடைப்பைத் தகர்ப்பேன், அது மிதியுண்டுபோகும்.
6அதைப் பாழாக்கிவிடுவேன்; அதின் கிளை நறுக்கப்படாமலும், களை கொத்தி எடுக்கப்படாமலும் போவதினால், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்; அதின்மேல் மழை பெய்யாதபடிக்கு மேகங்களுக்கும் கட்டளையிடுவேன் என்கிறார்.
7சேனைகளின் கர்த்தருடைய திராட்சத்தோட்டம் இஸ்ரவேலின் வம்சமே; அவருடைய மனமகிழ்ச்சியின் நாற்று யூதாவின் மனுஷரே; அவர் நியாயத்துக்குக் காத்திருந்தார், இதோ, கொடுமை; நீதிக்குக் காத்திருந்தார், இதோ, முறைப்பாடு.
8தாங்கள்மாத்திரம் தேசத்தின் நடுவில் வாசமாயிருக்கும்படி மற்றவர்களுக்கு இடமில்லாமற்போகுமட்டும், வீட்டோடே வீட்டைச் சேர்த்து, வயலோடே வயலைக் கூட்டுகிறவர்களுக்கு ஐயோ!
9சேனைகளின் கர்த்தர் என் செவி கேட்கச் சொன்னது: மெய்யாகவே அந்தத் திரளான வீடுகள் பாழாகும்; பெரியவைகளும் நேர்த்தியானவைகளுமாகிய வீடுகள் குடியில்லாதிருக்கும்.
10பத்தேர் நிலமாகிய திராட்சத்தோட்டம் ஒரேபடி ரசம் தரும்; ஒரு கல விதை ஒரு குறுணி விளையும்.
11சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி தரித்திருந்து, இருட்டிப்போகுமளவும் குடித்துக்கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ!
12அவர்கள் சுரமண்டலத்தையும், தம்புருவையும், மேளத்தையும், நாகசுரத்தையும், மதுபானத்தையும் வைத்து விருந்துகொண்டாடுகிறார்கள்; ஆனாலும் கர்த்தரின் கிரியையை நோக்குகிறதுமில்லை; அவர் கரத்தின் செய்கையைச் சிந்திக்கிறதுமில்லை.
13என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சிறைப்பட்டுப்போகிறார்கள்; அவர்களில் கனமுள்ளவர்கள் பட்டினியினால் தொய்ந்துபோகிறார்கள்; அவர்களுடைய திரளான கூட்டத்தார் தாகத்தால் நாவறண்டு போகிறார்கள்.
14அதினிமித்தம் பாதாளம் தன்னை விரிவாக்கி, தன் வாயை ஆவென்று மட்டில்லாமல் திறந்தது; அவர்கள் மகிமையும், அவர்கள் திரள் கூட்டமும், அவர்கள் ஆடம்பரமும், அவர்களில் களிகூருகிறவர்களும் அதற்குள் இறங்கிப்போவார்கள்.
15சிறியவன் தாழ்த்தப்படுவான், பெரியவனும் தாழ்ச்சியடைவான்; மேட்டிமையானவர்களின் கண்கள் தாழ்ந்துபோகும்.
16சேனைகளின் கர்த்தர் நியாயத்தீர்ப்பினால் உயர்ந்து, பரிசுத்தமுள்ள தேவன் நீதியினால் பரிசுத்தராய் விளங்குவார்.
17அப்பொழுது ஆட்டுக்குட்டிகள் கண்டவிடமெல்லாம் மேயும்; கொழுத்தவர்களுடையதாயிருந்து பாழாய்ப்போன நிலங்களைப் பரதேசிகள் அநுபவிப்பார்கள்.
18மாயையின் கயிறுகளால் அக்கிரமத்தையும், வண்டியின் வடங்களால் பாவத்தையும் இழுத்துக்கொண்டு வந்து,
19நாம் பார்க்கும்படி அவர் தீவிரித்துத் தமது கிரியையைச் சீக்கிரமாய் நடப்பிக்கட்டுமென்றும், இஸ்ரவேலின் பரிசுத்தருடைய ஆலோசனையை நாம் அறியும்படி அது சமீபித்து வரட்டுமென்றும் சொல்லுகிறவர்களுக்கு ஐயோ!
20தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை வெளிச்சமும், வெளிச்சத்தை இருளுமாகப் பாவித்து, கசப்பைத் தித்திப்பும், தித்திப்பைக் கசப்புமென்று சாதிக்கிறவர்களுக்கு ஐயோ!
21தங்கள் பார்வைக்கு ஞானிகளும், தங்கள் எண்ணத்துக்குப் புத்திமான்களுமாய் இருக்கிறவர்களுக்கு ஐயோ!
22சாராயத்தைக் குடிக்க வீரரும், மதுவைக் கலந்துவைக்கப் பராக்கிரமசாலிகளுமாயிருந்து,
23பரிதானத்திற்காகக் குற்றவாளியை நீதிமானாகத் தீர்த்து, நீதிமானின் நியாயத்தை அவனுக்கு விரோதமாய்ப் புரட்டுகிறவர்களுக்கு ஐயோ!
24இதினிமித்தம் அக்கினிஜூவாலை வைக்கோலைப் பட்சிப்பதுபோலவும், செத்தையானது நெருப்புக்கு இரையாகி எரிந்துபோவதுபோலவும், அவர்கள் வேர் வாடி, அவர்கள் துளிர் தூசியைப்போல் பறந்துபோகும்; அவர்கள் சேனைகளின் கர்த்தருடைய வேதத்தை வெறுத்து, இஸ்ரவேலிலுள்ள பரிசுத்தருடைய வசனத்தை அசட்டைபண்ணினார்களே.
25ஆகையால் கர்த்தருடைய கோபம் தமது ஜனங்களுக்கு விரோதமாய் மூண்டது; அவர் தமது கையை அவர்களுக்கு விரோதமாய் நீட்டி, பர்வதங்கள் அதிரத்தக்கதாயும், அவர்கள் பிணங்கள் நடுவீதிகளில் குப்பை போலாகத்தக்கதாயும், அவர்களை அடித்தார்; இவை எல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.
26அவர் தூரத்திலுள்ள ஜாதியாருக்கு ஒரு கொடியை ஏற்றி, அவர்களைப் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து பயில்காட்டி அழைப்பார்; அப்பொழுது அவர்கள் தீவிரமும் வேகமுமாய் வருவார்கள்.
27அவர்களில் விடாய்த்தவனும் இடறுகிறவனும் இல்லை; தூங்குகிறவனும் உறங்குகிறவனும் இல்லை; அவர்களில் ஒருவனுடைய இடுப்பின் கச்சை அவிழ்வதும், பாதரட்சைகளின் வார் அறுந்துபோவதும் இல்லை.
28அவர்கள் அம்புகள் கூர்மையும், அவர்கள் வில்லுகளெல்லாம் நாணேற்றினவைகளும், அவர்கள் குதிரைகளின் குளம்புகள் கற்பாறையாக எண்ணப்பட்டவைகளும், அவர்கள் உருளைகள் சுழல்காற்றுக்கு ஒத்தவைகளுமாயிருக்கும்.
29அவர்கள் கெர்ச்சிப்பு சிங்கத்தின் கெர்ச்சிப்புபோலிருக்கிறது; பாலசிங்கங்களைப்போலக் கெர்ச்சித்து, உறுமி, இரையைப் பிடித்து, தப்புவிக்கிறவன் இல்லாமல், அதை எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள்.
30அந்நாளில், சமுத்திரம் இரைவதுபோல் அவர்களுக்கு விரோதமாய் இரைவார்கள்; அப்பொழுது தேசத்தைப்பார்த்தால், இதோ, அந்தகாரமும் வியாகுலமும் உண்டு; அதின் மேகங்களினால் வெளிச்சம் இருண்டுபோகும்.

ஏசாயா 6

1உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது.
2சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன்தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன்தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து;
3ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்.
4கூப்பிடுகிறவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைகள் அசைந்து, ஆலயம் புகையினால் நிறைந்தது.
5அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்.
6அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து, தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத் தழலை எடுத்து, என்னிடத்தில் பறந்துவந்து,
7அதினால் என் வாயைத் தொட்டு: இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது என்றான்.
8பின்பு: யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன்.
9அப்பொழுது அவர்: நீ போய், இந்த ஜனங்களை நோக்கி, நீங்கள் காதாரக் கேட்டும் உணராமலும், கண்ணாரக்கண்டும் அறியாமலும் இருங்கள் என்று சொல்.
10இந்த ஜனங்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும், தங்கள் இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலுமிருக்க, நீ அவர்கள் இருதயத்தைக் கொழுத்ததாக்கி, அவர்கள் காதுகளை மந்தப்படுத்தி, அவர்கள் கண்களை மூடிப்போடு என்றார்.
11அப்பொழுது நான்: ஆண்டவரே, எதுவரைக்கும் என்று கேட்டேன். அதற்கு அவர்: பட்டணங்கள் குடியில்லாமலும், வீடுகள் மனுஷசஞ்சாரமில்லாமலும் பாழாகி, பூமி அவாந்தரவெளியாகி,
12கர்த்தர் மனுஷரைத் தூரமாக விலக்குவதினால், தேசத்தின் நடுமையம் முற்றிலும் வெறுமையாக்கப்படும்வரைக்குமே.
13ஆகிலும் அதில் இன்னும் பத்தில் ஒரு பங்கிருக்கும், அதுவும் திரும்ப நிர்மூலமாக்கப்படும்; கர்வாலிமரமும் அரசமரமும் இலையற்றுப்போனபின்பு, அவைகளில் அடிமரம் இருப்பதுபோல, அதின் அடிமரமும் பரிசுத்த வித்தாயிருக்கும் என்றார்.

ஏசாயா 7

1உசியாவினுடைய குமாரனாகிய யோதாமின் குமாரன் ஆகாஸ் என்னும் யூதாதேசத்து ராஜாவின் நாட்களிலே, ரேத்சீன் என்னும் சீரியாவின் ராஜாவும், ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா என்னும் இஸ்ரவேலின் ராஜாவும் எருசலேமின்மேல் யுத்தம்பண்ணவந்தார்கள், அவர்களால் அதைப் பிடிக்கக்கூடாமற்போயிற்று.
2சீரியர் எப்பிராயீமைச் சார்ந்திருக்கிறார்களென்று தாவீதின் குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்டபோது, ராஜாவின் இருதயமும் அவன் ஜனத்தின் இருதயமும் காட்டிலுள்ள மரங்கள் காற்றினால் அசைகிறது போல் அசைந்தது.
3அப்பொழுது கர்த்தர் ஏசாயாவை நோக்கி: நீயும் உன் மகன் சேயார் யாசூபுமாக வண்ணார் துறைவழியிலுள்ள மேற்குளத்து மதகின் கடைசிமட்டும் ஆகாசுக்கு எதிர்கொண்டுபோய்,
4நீ அவனை நோக்கி: சீரியர் எப்பிராயீமோடும், ரெமலியாவின் மகனோடும் உனக்கு விரோதமாகத் துராலோசனைபண்ணி,
5நாம் யூதாவுக்கு விரோதமாய்ப்போய், அதை நெருக்கி, அதை நமக்குள்ளே பங்கிட்டுக்கொண்டு, அதற்குத் தபேயாலின் குமாரனை ராஜாவாக ஏற்படுத்துவோம் என்று சொன்னதினிமித்தம்;
6நீ பயப்படாமல் அமர்ந்திருக்கப்பார்; இந்த இரண்டு புகைகிற கொள்ளிக்கட்டைகளாகிய சீரியரோடே வந்த ரேத்சீனும், ரெமலியாவின் மகனும்கொண்ட உக்கிரக்கோபத்தினிமித்தம் உன் இருதயம் துவளவேண்டாம்.
7கர்த்தராகிய ஆண்டவர்: அந்த ஆலோசனை நிலைநிற்பதில்லை, அதின்படி சம்பவிப்பதுமில்லை.
8சீரியாவின் தலை தமஸ்கு, தமஸ்குவின் தலை ரேத்சீன்; இன்னும் அறுபத்தைந்து வருஷங்களிலே எப்பிராயீம் ஒரு ஜனமாயிராதபடிக்கு நொறுங்குண்டுபோகும்.
9எப்பிராயீமின் தலை சமாரியா, சமாரியாவின் தலை ரெமலியாவின் மகன்; நீங்கள் விசுவாசியாவிட்டால் நிலைபெறமாட்டீர்கள் என்று சொல் என்றார்.
10பின்னும் கர்த்தர் ஆகாசை நோக்கி:
11நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள்; அதை ஆழத்திலிருந்தாகிலும், உன்னதத்திலிருந்தாகிலும் உண்டாகக் கேட்டுக்கொள் என்று சொன்னார்.
12ஆகாசோ: நான் கேட்கமாட்டேன், நான் கர்த்தரைப் பரீட்சை செய்யமாட்டேன் என்றான்.
13அப்பொழுது ஏசாயா: தாவீதின் வம்சத்தாரே, கேளுங்கள்; நீங்கள் மனுஷரை விசனப்படுத்துகிறது போதாதென்று என் தேவனையும் விசனப்படுத்தப் பார்க்கிறீர்களோ?
14ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.
15தீமையை வெறுத்து நன்மையைத் தெரிந்துகொள்ள அறியும் வயதுமட்டும் அவர் வெண்ணெயையும் தேனையும் சாப்பிடுவார்.
16அந்தப் பிள்ளை தீமையை வெறுக்கவும், நன்மையைத் தெரிந்துகொள்ளவும் அறிகிறதற்குமுன்னே, நீ அருவருக்கிற தேசம் அதின் இரண்டு ராஜாக்களால் விட்டுவிடப்படும்.
17எப்பிராயீம் யூதாவைவிட்டுப் பிரிந்த நாள்முதல் வராத நாட்களைக் கர்த்தர் உன்மேலும், உன் ஜனத்தின்மேலும், உன் பிதாவுடைய வம்சத்தின்மேலும், அசீரியாவின் ராஜாவினாலே வரப்பண்ணுவார்.
18அந்நாட்களிலே, கர்த்தர் எகிப்து நதிகளின் கடையாந்தரத்திலுள்ள ஈயையும், அசீரியாதேசத்திலிருக்கும் தேனீயையும் பயில்காட்டி அழைப்பார்.
19அவைகள் வந்து ஏகமாய் வனாந்தரங்களின் பள்ளத்தாக்குகளிலும், கன்மலைகளின் வெடிப்புகளிலும், எல்லா முட்காடுகளிலும், மேய்ச்சலுள்ள எல்லா இடங்களிலும் தங்கும்.
20அக்காலத்தில் ஆண்டவர் கூலிக்கு வாங்கின சவரகன் கத்தியினால், அதாவது, நதியின் அக்கரையிலுள்ள அசீரியா ராஜாவினால், தலைமயிரையும் கால்மயிரையும் சிரைப்பித்து, தாடியையும் வாங்கிப்போடுவிப்பார்.
21அக்காலத்தில் ஒருவன் ஒரு இளம்பசுவையும், இரண்டு ஆடுகளையும் வளர்த்தால்,
22அவைகள் பூரணமாய்ப் பால்கறக்கிறபடியினால் வெண்ணெயைச் சாப்பிடுவான்; தேசத்தின் நடுவில் மீதியாயிருப்பவனெவனும் வெண்ணெயையும் தேனையுமே சாப்பிடுவான்.
23அந்நாளிலே, ஆயிரம் வெள்ளிக்காசு பெறும் ஆயிரம் திராட்சச்செடியிருந்த நிலமெல்லாம் முட்செடியும் நெரிஞ்சிலுமாகும்.
24தேசமெங்கும் முட்செடியும் நெரிஞ்சிலும் உண்டாயிருப்பதினால், அம்புகளையும் வில்லையும் பிடித்து அங்கே போகவேண்டியதாயிருக்கும்.
25மண்வெட்டியால் கொத்தப்படுகிற மலைகள் உண்டே; முட்செடிகளுக்கும் நெரிஞ்சில்களுக்கும் பயப்படுவதினால் அவைகளில் ஒன்றிற்கும் போகக்கூடாமையினால், அவைகள் மாடுகளை ஓட்டிவிடுவதற்கும், ஆடுகள் மிதிப்பதற்குமான இடமாயிருக்கும் என்றான்.

ஏசாயா 8

1பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: நீ ஒரு பெரிய பத்திரத்தை எடுத்து மனுஷன் எழுதுகிற பிரகாரமாய் அதிலே மகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்று எழுது என்றார்.
2அப்பொழுது நான் உண்மையுள்ள சாட்சிக்காரராகிய ஆசாரியனான உரியாவையும், யெபெரெகியாவின் குமாரனான சகரியாவையும் அதற்குச் சாட்சிகளாக வைத்துக்கொண்டேன்.
3நான் தீர்க்கதரிசியானவளைச் சேர்ந்தபோது, அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள்; அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: மகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்னும் பேரை அவனுக்கு இடு.
4இந்தப் பாலகன், அப்பா, அம்மா என்று கூப்பிட அறியுமுன்னே, தமஸ்குவின் ஆஸ்தியும், சமாரியாவின் கொள்ளையும், அசீரியாவின் ராஜாவுக்கு முன்பாகக் கொண்டுபோகப்படும் என்றார்.
5பின்னும் கர்த்தர் என்னை நோக்கி:
6இந்த ஜனம் மெதுவாய் ஓடுகிற சீலோவாவின் தண்ணீர்களை அசட்டைபண்ணி, ரேத்சீனையும் ரெமலியாவின் குமாரனையும் சார்ந்து சந்தோஷிக்கிறபடியினால்,
7இதோ, ஆண்டவர் வல்லமையுள்ள திரளான ஆற்றுநீரைப்போன்ற அசீரியாவின் ராஜாவையும், அவனுடைய சகல ஆடம்பரத்தையும் அவர்கள்மேல் புரளப்பண்ணுவார்; அது அவர்களுடைய ஓடைகளெல்லாவற்றின்மேலும் போய், அவர்களுடைய எல்லாக் கரைகள்மேலும் புரண்டு,
8யூதாவுக்குள் புகுந்து பிரவாகித்துக் கடந்து, கழுத்துமட்டும் வரும் என்றார். இம்மானுவேலே, அவன் செட்டைகளின் விரிவு உமது தேசத்தின் விசாலத்தை மூடும்.
9ஜனங்களே, நீங்கள் கூட்டங்கூடுங்கள், முறியடிக்கப்படுவீர்கள்; தூரதேசத்தாராகிய நீங்கள் எல்லாரும் செவிகொடுங்கள்; இடைக்கட்டிக்கொள்ளுங்கள், முறிந்தோடுவீர்கள்,
10ஆலோசனை செய்யுங்கள், அது அபத்தமாகும்; வார்த்தையை வசனியுங்கள், அது நிற்காது; தேவன் எங்களோடே இருக்கிறார்.
11 கர்த்தருடைய கரம் என்மேல் அமர்ந்து, அவர் என்னுடனே பேசி, நான் இந்த ஜனத்தின் வழியிலே நடவாதபடி எனக்குப் புத்திசொல்லி விளம்பினதாவது:
12இந்த ஜனங்கள் கட்டுப்பாடு என்று சொல்லுகிறதையெல்லாம் நீங்கள் கட்டுப்பாடு என்று சொல்லாமலும், அவர்கள் பயப்படுகிற பயத்தின்படி நீங்கள் பயப்படாமலும், கலங்காமலும்,
13சேனைகளின் கர்த்தரையே பரிசுத்தம்பண்ணுங்கள்; அவரே உங்கள் பயமும், அவரே உங்கள் அச்சமுமாயிருப்பாராக.
14அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாயிருப்பார்; ஆகிலும் இஸ்ரவேலின் இரண்டு கோத்திரத்துக்கும் தடுக்கலின் கல்லும், இடறுதலின் கன்மலையும், எருசலேமின் குடிகளுக்குச் சுருக்கும் கண்ணியுமாயிருப்பார்.
15அவர்களில் அநேகர் இடறிவிழுந்து நொறுங்கிச் சிக்குண்டு பிடிபடுவார்கள்.
16சாட்சி ஆகமத்தைக் கட்டி, என் சீஷருக்குள்ளே வேதத்தை முத்திரையிடு என்றார்.
17நானோ யாக்கோபின் குடும்பத்துக்குத் தமது முகத்தை மறைக்கிற கர்த்தருக்காகக் காத்திருந்து, அவருக்கு எதிர்பார்த்திருப்பேன்.
18இதோ, நானும் கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம்.
19அவர்கள் உங்களை நோக்கி: அஞ்சனம்பார்க்கிறவர்களிடத்திலும், முணுமுணென்று ஓதுகிற குறிகாரரிடத்திலும் விசாரியுங்கள் என்று சொல்லும்போது, ஜனங்கள் தன் தேவனிடத்தில் விசாரிக்கவேண்டியதல்லவோ? உயிருள்ளவர்களுக்காகச் செத்தவர்களிடத்தில் விசாரிக்கலாமோ?
20வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை.
21இடுக்கண் அடைந்தவர்களாயும் பட்டினியாயும் தேசத்தைக் கடந்துபோவார்கள்; அவர்கள் பட்டினியாயிருக்கும்போது, மூர்க்கவெறிகொண்டு, தங்கள் ராஜாவையும் தங்கள் தேவனையும் தூஷிப்பார்கள்.
22அவர்கள் அண்ணாந்துபார்ப்பார்கள், பூமியையும் நோக்கிப்பார்ப்பார்கள்; ஆனாலும் இதோ, இக்கட்டும் அந்தகாரமும் இருக்கும்; இடுக்கத்தால் இருளடைந்து, அந்தகாரத்திலே தள்ளுண்டு அலைவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *