Scripture Portion: Amos 1-5

ஆமோஸ் 1

1தெக்கோவா ஊர் மேய்ப்பருக்குள் இருந்த ஆமோஸ், யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசுடைய குமாரனாகிய எரொபெயாமின் நாட்களிலும், பூமி அதிர்ச்சி உண்டாக இரண்டு வருஷத்துக்கு முன்னே, இஸ்ரவேலைக்குறித்துத் தரிசனங்கண்டு சொன்ன வார்த்தைகள்.
2கர்த்தர் சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; அதினால் மேய்ப்பரின் தாபரங்கள் துக்கங்கொண்டாடும்; கர்மேலின் கொடுமுடியும் காய்ந்துபோகும்.
3கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: தமஸ்குவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும் நாலு பாதகங்களினிமித்தமும், நான் அதின் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் கீலேயாத்தை இரும்புக் கருவிகளினால் போரடித்தார்களே.
4ஆசகேலின் வீட்டிலே தீக்கொளுத்துவேன்; அது பெனாதாதின் அரமனைகளைப் பட்சிக்கும்.
5நான் தமஸ்குவின் தாழ்ப்பாளை உடைத்து, குடிகளை ஆவேன் என்னும் பள்ளத்தாக்கிலும், செங்கோல் செலுத்துகிறவனை பெத் ஏதேனிலும் இராதபடிக்குச் சங்காரம்பண்ணுவேன்; அப்பொழுது சீரியாவின் ஜனங்கள் கீருக்குச் சிறைப்பட்டுப்போவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
6கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: காத்சாவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அதின் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் சிறைப்பட்டவர்களை ஏதோமியரிடத்தில் ஒப்புவிக்கும்படி முழுதும் சிறையாக்கினார்களே.
7காத்சாவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது அதினுடைய அரமனைகளைப் பட்சிக்கும்.
8நான் குடிகளை அஸ்தோத்திலும், செங்கோல் செலுத்துகிறவனை அஸ்கலோனிலும் இராதபடிக்குச் சங்காரம்பண்ணி, பெலிஸ்தரில் மீதியானவர்கள் அழியும்படிக்கு என் கையை எக்ரோனுக்கு விரோதமாகத் திருப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
9மேலும்: தீருவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதங்களினிமித்தமும், நான் அதின் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் சகோதரரின் உடன்படிக்கையை நினையாமல், சிறைப்பட்டவர்களை முழுதும் ஏதோமியர் கையில் ஒப்புவித்தார்களே.
10தீருவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது அதின் அரமனைகளைப் பட்சிக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
11மேலும்: ஏதோமுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவன் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவன் தன் சகோதரனைப் பட்டயத்தோடே தொடர்ந்து, தன் மனதை இரக்கமற்றதாக்கி, தன் கோபத்தினாலே என்றைக்கும் அவனைப் பீறிப்போட்டு, தன் மூர்க்கத்தை நித்தியகாலமாக வைத்திருக்கிறானே.
12தேமானிலே தீக்கொளுத்துவேன்; அது போஸ்றாவின் அரமனைகளைப் பட்சிக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
13கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: அம்மோன் புத்திரரின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவர்கள் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் தங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்கும்படிக்குக் கீலேயாத் தேசத்தின் கர்ப்பஸ்திரீகளைக் கீறிப்போட்டார்களே.
14ரப்பாவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது யுத்தநாளின் முழக்கமாகவும், பெருங்காற்றின் புசலாகவும் அதின் அரமனைகளைப் பட்சிக்கும்.
15அவர்களுடைய ராஜாவும், அவனுடைய அதிபதிகளும் சிறைப்பட்டுப்போவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஆமோஸ் 2

1கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: மோவாபின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவன் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவன் ஏதோமுடைய ராஜாவின் எலும்புகளை நீறாகச் சுட்டுப்போட்டானே.
2மோவாப் தேசத்தில் தீக்கொளுத்துவேன்; அது கீரியோத்தின் அரமனைகளைப் பட்சிக்கும்; மோவாபியர் அமளியோடும் ஆர்ப்பரிப்போடும் எக்காள சத்தத்தோடும் சாவார்கள்.
3நியாயாதிபதியை அவர்கள் நடுவில் இராதபடிக்கு நான் சங்காரம்பண்ணி, அவனோடேகூட அவர்களுடைய பிரபுக்களையெல்லாம் கொன்றுபோடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
4மேலும்: யூதாவின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவர்கள் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் கர்த்தருடைய வேதத்தை வெறுத்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், தங்கள் பிதாக்கள் பின்பற்றின பொய்களினால் மோசம்போனார்களே.
5யூதாவிலே நான் தீக்கொளுத்துவேன்; அது எருசலேமின் அரமனைகளைப் பட்சிக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
6மேலும்: இஸ்ரவேலின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவர்களுடைய ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் நீதிமானைப் பணத்துக்கும், எளியவனை ஒரு ஜோடு பாதரட்சைக்கும் விற்றுப்போட்டார்களே.
7அவர்கள் தரித்திரருடைய தலையின்மேல் மண்ணைவாரி இறைத்து, சிறுமையானவர்களின் வழியைப் புரட்டுகிறார்கள்; என் பரிசுத்த நாமத்தைக் குலைச்சலாக்கும்படிக்கு மகனும் தகப்பனும் ஒரு பெண்ணிடத்தில் பிரவேசிக்கிறார்கள்.
8அவர்கள் சகல பீடங்களருகிலும் அடைமானமாய் வாங்கின வஸ்திரங்களின்மேல் படுத்துக்கொண்டு, தெண்டம் பிடிக்கப்பட்டவர்களுடைய மதுபானத்தைத் தங்கள் தேவர்களின் கோவிலிலே குடிக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
9நானோ: கேதுருமரங்களைப்போல் உயரமும், கர்வாலி மரங்களைப்போல் வைரமுமாயிருந்த எமோரியனை அவர்களுக்கு முன்பாக அழித்தேன்; உயர இருந்த அவனுடைய கனியையும் தாழ இருந்த அவனுடைய வேர்களையும் அழித்துப்போட்டு,
10நீங்கள் எமோரியனுடைய தேசத்தைக் கட்டிக்கொள்ளும்படிக்கு உங்களை நான் எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணி, உங்களை நாற்பது வருஷமாக வனாந்தரத்திலே வழிநடத்தி,
11உங்கள் குமாரரில் சிலரை தீர்க்கதரிசிகளாகவும், உங்கள் வாலிபரில் சிலரை நசரேயராகவும் எழும்பப்பண்ணினேன்; இஸ்ரவேல் புத்திரரே, இப்படி நான் செய்யவில்லையா என்று கர்த்தர் கேட்கிறார்.
12நீங்களோ நசரேயருக்குத் திராட்சரசம் குடிக்கக் கொடுத்து, தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லவேண்டாம் என்று கற்பித்தீர்கள்.
13இதோ, கோதுமைக்கட்டுகள் நிறைபாரமாக ஏற்றப்பட்ட வண்டியில் இருத்துகிறதுபோல, நான் உங்களை நீங்கள் இருக்கிற ஸ்தலத்தில் இருத்துவேன்.
14அப்பொழுது வேகமானவன் ஓடியும் புகலிடமில்லை; பலவான் தன் பலத்தினால் பலப்படுவதுமில்லை; பராக்கிரமசாலி தன் பிராணனைத் தப்புவிப்பதுமில்லை.
15வில்லைப் பிடிக்கிறவன் நிற்பதுமில்லை; வேகமானவன் தன் கால்களால் தப்பிப்போவதுமில்லை; குதிரையின்மேல் ஏறுகிறவன் தன் பிராணனை இரட்சிப்பதுமில்லை.
16பலசாலிகளுக்குள்ளே தைரியவான் அந்நாளிலே நிர்வாணியாய் ஓடிப்போவான் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஆமோஸ் 3

1இஸ்ரவேல் புத்திரரே, கர்த்தராகிய நான் எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின முழுக்குடும்பமாகிய உங்களுக்கு விரோதமாய்ச் சொல்லிய இந்த வசனத்தைக் கேளுங்கள்.
2பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களைமாத்திரம் அறிந்துகொண்டேன்; ஆகையால் உங்களுடைய எல்லா அக்கிரமங்களினிமித்தமும் உங்களைத் தண்டிப்பேன்.
3இரண்டுபேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்துபோவார்களோ?
4தனக்கு இரை அகப்படாமலிருக்கக் காட்டிலே சிங்கம் கெர்ச்சிக்குமோ? இரைபிடியாமல் இருக்கும்போது பாலசிங்கம் தன் கெபியிலிருந்து சத்தமிடுமோ?
5குருவிக்குத் தரையிலே சுருக்குப் போடப்படாதிருந்தால், அது கண்ணியில் அகப்படுமோ? ஒன்றும் படாதிருக்கையில், கண்ணி தரையிலிருந்து எடுக்கப்படுமோ?
6ஊரில் எக்காளம் ஊதினால், ஜனங்கள் கலங்காதிருப்பார்களோ? கர்த்தருடைய செயல் இல்லாமல் ஊரில் தீங்கு உண்டாகுமோ?
7கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.
8சிங்கம் கெர்ச்சிக்கிறது, யார் பயப்படாதிருப்பான்? கர்த்தராகிய ஆண்டவர் பேசுகிறார், யார் தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பான்?
9நீங்கள் சமாரியாவின் பர்வதங்களில் வந்துகூடி, அதின் நடுவில் நடக்கிற பெரிய கலகங்களையும் அதற்குள் செய்யப்படுகிற இடுக்கண்களையும் பாருங்கள் என்று அஸ்தோத்தின் அரமனைகள்மேலும், எகிப்துதேசத்தின் அரமனைகள்மேலும் கூறுங்கள்.
10அவர்கள் செம்மையானதைச் செய்ய அறியாமல், தங்கள் அரமனைகளில் கொடுமையையும் கொள்ளையையும் குவித்துக்கொள்ளுகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
11ஆகையால் சத்துரு வந்து, தேசத்தைச் சூழ்ந்துகொண்டு, உன் பெலத்தை உன்னிலிருந்து அற்றுப்போகப்பண்ணுவான்; அப்பொழுது உன் அரமனைகள் கொள்ளையிடப்படும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
12மேலும்: ஒரு மேய்ப்பன் இரண்டு கால்களையாவது ஒரு காதின் துண்டையாவது சிங்கத்தின் வாயிலிருந்து பிடுங்கித் தப்புவிக்குமாப்போல, சமாரியாவில் குடியிருக்கிற இஸ்ரவேல் புத்திரர் ஒரு படுக்கையின் மூலையிலிருந்தும், ஒரு மஞ்சத்தின்மேலிருந்தும் தப்புவிக்கப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
13நீங்கள் கேட்டு யாக்கோபு வம்சத்தாருக்குள்ளே சாட்சியாக அறிவிக்கவேண்டியது: சேனைகளின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்:
14நான் இஸ்ரவேலுடைய பாதகங்களினிமித்தம் அவனை விசாரிக்கும் நாளிலே நான் பெத்தேலின் பலிபீடங்களை விசாரிப்பேன்; பலிபீடத்தின் கொம்புகள் வெட்டுண்டு தரையிலே விழும்.
15மாரிக்காலத்து வீட்டையும் கோடைகாலத்து வீட்டையும் அழிப்பேன்; அப்பொழுது யானைத்தந்தத்தால் செய்யப்பட்ட வீடுகள் அழியும்; பெரிய வீடுகளுக்கும் முடிவு வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஆமோஸ் 4

1சமாரியாவின் மலைகளிலுள்ள பாசானின் மாடுகளே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள்; தரித்திரரை ஒடுக்கி, எளியவர்களை நொறுக்கி, அவர்களுடைய எஜமான்களை நோக்கி: நாங்கள் குடிக்கும்படிக்கொண்டுவாருங்கள் என்று சொல்லுகிறீர்கள்.
2இதோ, கர்த்தராகிய ஆண்டவர் உங்களைத் துறடுகளாலும், உங்கள் பின் சந்ததியை மீன்பிடிக்கிற தூண்டில்களாலும் இழுத்துக்கொண்டுபோகும் நாட்கள் வருமென்று அவர் தம்முடைய பரிசுத்தத்தைக்கொண்டு ஆணையிட்டார்.
3அப்பொழுது நீங்கள் ஒவ்வொருவனும் அரமனைக்குச் சுமந்துகொண்டு போவதை எறிந்துவிட்டு, தனக்கு எதிரான திறப்புகளின் வழியாய்ப் புறப்பட்டுப்போவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
4பெத்தேலுக்குப் போய்த் துரோகம்பண்ணுங்கள், கில்காலுக்கும் போய்த் துரோகத்தைப் பெருகப்பண்ணி, காலைதோறும் உங்கள் பலிகளையும், மூன்றாம் வருஷத்திலே உங்கள் தசமபாகங்களையும் செலுத்தி,
5புளித்தமாவுள்ள ஸ்தோத்திரபலியோடே தூபங்காட்டி, உற்சாகபலிகளைக் கூறித் தெரியப்படுத்துங்கள்; இஸ்ரவேல் புத்திரரே, இப்படிச் செய்வதே உங்களுக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
6ஆகையால் நான் உங்கள் பட்டணங்களில் எல்லாம் உங்கள் பல்லுகளுக்கு ஓய்வையும், உங்கள் ஸ்தலங்களில் எல்லாம் அப்பக்குறைவையும் கட்டளையிட்டேன்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
7இதுவுமல்லாமல், அறுப்புக்காலம் வர இன்னும் மூன்றுமாதம் இருக்கும்போதே மழையை நான் தடுத்தேன், ஒரு பட்டணத்தின்மேல் மழைபெய்யவும் ஒரு பட்டணத்தின்மேல் மழை பெய்யாமலிருக்கவும் பண்ணினேன்; ஒரு வயலின்மேல் மழைபெய்தது, மழைபெய்யாத மற்ற வயல் காய்ந்துபோயிற்று.
8இரண்டு மூன்று பட்டணங்களின் மனுஷர் தண்ணீர் குடிக்க ஒரே பட்டணத்துக்குப் போய் அலைந்தும் தாகந்தீர்த்துக்கொள்ளவில்லை; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
9கருக்காயினாலும் விஷப்பனியினாலும் உங்களைத் தண்டித்தேன்; உங்கள் சோலைகளிலும் திராட்சத்தோட்டங்களிலும் அத்திமரங்களிலும் ஒலிவமரங்களிலும் மிகுதியானதைப் பச்சைப்புழு அரித்துப்போட்டது; ஆகிலும் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
10எகிப்திலே உண்டானதற்கு ஒத்த கொள்ளைநோயை உங்களுக்குள் அனுப்பினேன்; உங்கள் வாலிபரைப் பட்டயத்தாலே கொன்றேன்; உங்கள் குதிரைகளை அழித்துப்போட்டேன்; உங்கள் பாளயங்களின் நாற்றத்தை உங்கள் நாசிகளிலும் ஏறப்பண்ணினேன்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
11சோதோமையும் கொமோராவையும் தேவன் கவிழ்த்துப்போட்டதுபோல, உங்களைக் கவிழ்த்துப்போட்டேன்; நீங்கள் அக்கினியினின்று பறிக்கப்பட்ட கொள்ளியைப்போல இருந்தீர்கள்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
12ஆகையால் இஸ்ரவேலே, இந்தப்பிரகாரமாக உனக்குச் செய்வேன்; இஸ்ரவேலே, நான் இப்படி உனக்குச் செய்யப்போகிறபடியினால் உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு.
13அவர் பர்வதங்களை உருவாக்கினவரும், காற்றைச் சிருஷ்டித்தவரும், மனுஷனுடைய நினைவுகள் இன்னதென்று அவனுக்கு வெளிப்படுத்துகிறவரும், விடியற்காலத்தை அந்தகாரமாக்குகிறவரும், பூமியினுடைய உயர்ந்த ஸ்தானங்களின்மேல் உலாவுகிறவருமாயிருக்கிறார்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் என்பது அவருடைய நாமம்.

ஆமோஸ் 5

1இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்களைக்குறித்து நான் புலம்பிச் சொல்லும் இந்த வசனத்தைக் கேளுங்கள்.
2இஸ்ரவேல் என்னும் கன்னிகை விழுந்தாள், அவள் இனி ஒருபோதும் எழுந்திருக்கமாட்டாள்; தன் தேசத்தில் விழுந்துகிடக்கிறாள், அவளை எடுப்பாரில்லை.
3நகரத்திலிருந்து புறப்பட்ட ஆயிரம்பேரில் நூறுபேரும், நூறுபேரில் பத்துப்பேரும் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு மீந்திருப்பார்கள் என்று கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்.
4 கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாருக்குச் சொல்லுகிறது என்னவென்றால்: என்னைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்.
5பெத்தேலைத் தேடாதேயுங்கள், கில்காலிலும் சேராதேயுங்கள், பெயெர்செபாவுக்கும் போகாதேயுங்கள்; ஏனென்றால் கில்கால் சிறையிருப்பாகவும், பெத்தேல் பாழான ஸ்தலமாகவும் போகும்.
6 கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; இல்லாவிட்டால் பெத்தேலில் இருக்கிற ஒருவராலும் அவிக்கப்படாத அக்கினி யோசேப்பின் வீட்டில் பற்றி, அதைப் பட்சிக்கும்.
7நியாயத்தை எட்டியாக மாற்றி, நீதியைத் தரையிலே விழப்பண்ணுகிறவர்களே அவரைத் தேடுங்கள்.
8அவர் அறுமீனையும் மிருகசீரிஷத்தையும் உண்டாக்கினவர்; அவர் மரணஇருளை விடியற்காலமாக மாற்றி, பகலை இராத்திரியாக அந்தகாரப்படுத்துகிறவர்; அவர் சமுத்திரத்தின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளை பூமியின் விசாலத்தின்மேல் ஊற்றுகிறவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
9அரணான ஸ்தலத்தின்மேல் பாழ்க்கடிப்பு வரத்தக்கதாக, அவர் கொள்ளை கொடுத்தவனைப் பலத்தவனுக்கு விரோதமாய் லகுவடையப்பண்ணுகிறவர்.
10ஒலிமுகவாசலிலே கடிந்துகொள்ளுகிறவனை அவர்கள் பகைத்து, யதார்த்தமாய்ப் பேசுகிறவனை வெறுக்கிறார்கள்.
11நீங்கள் தரித்திரனை மிதித்து, அவன் கையிலே தானியத்தைச் சுமைசுமையாய் வாங்குகிறபடியினால், நீங்கள் பொளிந்த கற்களால் வீடுகளைக் கட்டினீர்கள், ஆனாலும் அவைகளில் நீங்கள் குடியிருப்பதில்லை; இன்பமான திராட்சத்தோட்டங்களை நாட்டினீர்கள், ஆனாலும் அவைகளின் இரசத்தை நீங்கள் குடிப்பதில்லை.
12உங்கள் மீறுதல்கள் மிகுதியென்றும், உங்கள் பாவங்கள் பலத்ததென்றும் அறிவேன்; நீதிமானை ஒடுக்கி, பரிதானம் வாங்கி, ஒலிமுகவாசலில் ஏழைகளின் நியாயத்தைப் புரட்டுகிறீர்கள்.
13ஆகையால் புத்திமான் அந்தக்காலத்திலே மௌனமாயிருக்கவேண்டும்; அந்தக் காலம் தீமையான காலம்.
14நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார்.
15நீங்கள் தீமையை வெறுத்து, நன்மையை விரும்பி, ஒலிமுகவாசலில் நியாயத்தை நிலைப்படுத்துங்கள்; ஒருவேளை சேனைகளின் தேவனாகிய கர்த்தர் யோசேப்பிலே மீதியானவர்களுக்கு இரங்குவார்.
16ஆதலால் ஆண்டவரும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எல்லாத்தெருக்களிலும் புலம்பல் உண்டாகும்; எல்லா வீதிகளிலும் ஐயோ! ஐயோ! என்று ஓலமிடுவார்கள்; பயிரிடுகிறவர்களைத் துக்கங்கொண்டாடுகிறதற்கும், ஒப்பாரிபாட அறிந்தவர்களைப் புலம்புகிறதற்கும் வரவழைப்பார்கள்.
17எல்லாத் திராட்சத்தோட்டங்களிலும் புலம்பல் உண்டாயிருக்கும். நான் உன் நடுவே கடந்துபோவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
18 கர்த்தருடைய நாளை விரும்புகிறவர்களுக்கு ஐயோ! அதினால் உங்களுக்கு என்ன உண்டு? கர்த்தருடைய நாள் வெளிச்சமாயிராமல் அந்தகாரமாயிருக்கும்.
19சிங்கத்துக்குத் தப்பினவனுக்குக் கரடி எதிர்ப்பட்டதுபோலவும், அல்லது வீட்டுக்குள்ளே வந்து சுவரின்மேல் தன் கையை வைத்தபோது பாம்பு அவனைக் கடித்ததுபோலவும் இருக்கும்.
20 கர்த்தருடைய நாள் வெளிச்சமாயிராமல், இருளும் பிரகாசமற்ற அந்தகாரமுமாயிருக்குமல்லவோ?
21உங்கள் பண்டிகைகளைப் பகைத்து வெறுக்கிறேன்; உங்கள் ஆசரிப்பு நாட்களில் எனக்குப் பிரியமில்லை.
22உங்கள் தகனபலிகளையும் போஜனபலிகளையும் எனக்குப் படைத்தாலும் நான் அங்கீகரிக்கமாட்டேன்; கொழுமையான உங்கள் மிருகங்களின் ஸ்தோத்திரபலிகளையும் நான் நோக்கிப் பார்க்கமாட்டேன்.
23உன் பாட்டுகளின் இரைச்சலை என்னைவிட்டு அகற்று; உன் வீணைகளின் ஓசையை நான் கேட்கமாட்டேன்.
24நியாயம் தண்ணீரைப்போலவும், நீதிவற்றாத நதியைப்போலவும் புரண்டுவரக்கடவது.
25இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்தரத்திலே இருந்த நாற்பது வருஷம்வரையில் பலிகளையும் காணிக்கைகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ?
26நீங்கள் உங்களுக்கு உண்டாக்கின மோளோகுடைய கூடாரத்தையும், உங்கள் தேவர்களின் நட்சத்திரராசியாகிய உங்கள் சொரூபங்களின் சப்பரத்தையும் சுமந்துகொண்டுவந்தீர்களே.
27ஆகையால் உங்களைத் தமஸ்குவுக்கு அப்பாலே குடியோட்டுவேன் என்று சேனைகளுடைய தேவன் என்னும் நாமமுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *