Scripture Portion: 2 chronicles 28, 2 kings 16-17
2 நாளாகமம் 28
1ஆகாஸ் ராஜாவாகிறபோது இருபது வயதாயிருந்து, பதினாறு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; ஆனாலும் அவன், தன் தகப்பனாகிய தாவீதைப்போல், கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்யாமல்,2இஸ்ரவேல் ராஜாக்களின் வழிகளில் நடந்து, பாகால்களுக்கு வார்ப்பு விக்கிரகங்களைச் செய்தான்.3அவன் இன்னோம் குமாரரின் பள்ளத்தாக்கிலே தூபங்காட்டி, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே தன் குமாரரை அக்கினியிலே தகித்துப்போட்டு,4மேடைகளிலும், மலைகளிலும், பச்சையான சகல மரங்களின் கீழும் பலியிட்டுத் தூபங்காட்டி வந்தான்.5ஆகையால் அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனைச் சீரியருடைய ராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் அவனை முறிய அடித்து, அவனுக்கு இருக்கிறவர்களிலே பெரிய கூட்டத்தைச் சிறைபிடித்துத் தமஸ்குவுக்குக் கொண்டு போனார்கள்; அவன் இஸ்ரவேலுடைய ராஜாவின் கையிலும் ஒப்புக்கொடுக்கப்பட்டான்; இவன் அவனை வெகுவாய் முறிய அடித்தான்.6எப்படியெனில், யூதா மனுஷர் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டபடியினால், ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா அவர்களில் ஒரே நாளில் லட்சத்திருபதினாயிரம்பேரைக் கொன்று போட்டான்; அவர்கள் எல்லாரும் மகா வீரராயிருந்தவர்கள்.7அன்றியும் எப்பிராயீமின் பராக்கிரமசாலியான சிக்ரியும், ராஜாவின் குமாரனாகிய மாசேயாவையும், அரமனைத் தலைவனாகிய அஸ்ரிக்காமையும், ராஜாவுக்கு இரண்டாவதான எல்க்கானாவையும் கொன்றுபோட்டான்.8இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சகோதரரில் இரண்டு லட்சம்பேராகிய ஸ்திரீகளையும் குமாரரையும் குமாரத்திகளையும் சிறைபிடித்து, அவர்களுடைய அநேக திரவியங்களைக் கொள்ளையிட்டு, கொள்ளைப்பொருளைச் சமாரியாவுக்குக் கொண்டுபோனார்கள்.9அங்கே ஓதேத் என்னும் பேருள்ள கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவன் இருந்தான்; அவன் சமாரியாவுக்கு வருகிற சேனைக்கு எதிராகப் போய், அவர்களை நோக்கி: இதோ, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் யூதாவின்மேல் கோபங்கொண்டபடியினால் அவர்களை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார்; நீங்களோ வானபரியந்தம் எட்டுகிற உக்கிரத்தோடே அவர்களைச் சங்காரம் பண்ணினீர்கள்.10இப்போதும் யூதாவின் புத்திரரையும் எருசலேமியரையும் நீங்கள் உங்களுக்கு வேலைக்காரராகவும் வேலைக்காரிகளாகவும் கீழ்ப்படுத்தவேண்டும் என்று நினைக்கிறீர்கள்; ஆனாலும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமான குற்றங்கள் உங்களிடத்திலும் இல்லையோ?11ஆதலால் நீங்கள் எனக்குச் செவிகொடுத்து, நீங்கள் உங்கள் சகோதரரிடத்தில் சிறைபிடித்துக்கொண்டுவந்தவர்களைத் திரும்ப அனுப்பிவிடுங்கள்; கர்த்தருடைய உக்கிரமான கோபம் உங்கள்மேல் இருக்கிறது என்றான்.12அப்பொழுது எப்பிராயீம் புத்திரரின் தலைவரில் சிலபேராகிய யோகனானின் குமாரன் அசரியாவும், மெஷிலெமோத்தின் குமாரன் பெரகியாவும், சல்லூமின் குமாரன் எகிஸ்கியாவும், அத்லாயின் குமாரன் அமாசாவும் யுத்தத்திலிருந்து வந்தவர்களுக்கு விரோதமாக எழும்பி,13அவர்களை நோக்கி: நீங்கள் சிறைபிடித்த இவர்களை இங்கே உள்ளே கொண்டுவரவேண்டாம்; நம்மேல் திரளான குற்றமும், இஸ்ரவேலின்மேல் உக்கிரமான கோபமும் இருக்கையில், நீங்கள் கர்த்தருக்கு முன்பாக நம்மேல் குற்றம் சுமரப்பண்ணத்தக்கதாய், நம்முடைய பாவங்களையும் நம்முடைய குற்றங்களையும் அதிகமாக்க நினைக்கிறீர்கள் என்றார்கள்.14அப்பொழுது ஆயுதபாணிகளானவர்கள் சிறைபிடித்தவர்களையும், கொள்ளையுடைமைகளையும், பிரபுக்களுக்கு முன்பாகவும் சமஸ்த சபைக்கு முன்பாகவும் விட்டுவிட்டார்கள்.15அப்பொழுது பேர் குறிக்கப்பட்ட மனுஷர் எழும்பி, சிறைபிடிக்கப்பட்டவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களில் வஸ்திரமில்லாத சகலருக்கும் கொள்ளையில் எடுக்கப்பட்ட வஸ்திரங்களைக் கொடுத்து, உடுப்பையும் பாதரட்சைகளையும் போடுவித்து, அவர்களுக்குச் சாப்பிடவும் குடிக்கவும் கொடுத்து, அவர்களுக்கு எண்ணெய் வார்த்து, அவர்களில் பலட்சயமானவர்களையெல்லாம் கழுதைகள்மேல் ஏற்றி, பேரீச்சமரங்களின் பட்டணமாகிய எரிகோவிலே அவர்கள் சகோதரரிடத்துக்குக் கொண்டுவந்துவிட்டு, சமாரியாவுக்குத் திரும்பினார்கள்.16அக்காலத்திலே ஆகாஸ் என்னும் ராஜா, அசீரியாவின் ராஜாக்கள் தனக்கு ஒத்தாசைபண்ண அவர்களிடத்துக்கு ஆட்களை அனுப்பினான்.17ஏதோமியரும் கூடவந்து, யூதாவை முறிய அடித்து, சிலரைச் சிறைபிடித்துப்போயிருந்தார்கள்.18பெலிஸ்தரும் யூதாவிலே சமபூமியிலும் தெற்கேயும் இருக்கிற பட்டணங்களின்மேல் விழுந்து, பெத்ஷிமேசையும், ஆயலோனையும், கெதெரோத்தையும், சொக்கோவையும் அதின் கிராமங்களையும், திம்னாவையும் அதின் கிராமங்களையும், கிம்சோவையும் அதின் கிராமங்களையும்பிடித்து அங்கே குடியேறினார்கள்.19யூதாவின் ராஜாவாகிய ஆகாசினிமித்தம் கர்த்தர் யூதாவைத் தாழ்த்தினார்; அவன் யூதாவைச் சீர்குலைத்து, கர்த்தருக்கு விரோதமாய் மிகவும் துரோகம்பண்ணினான்.20அசீரியாவின் ராஜாவாகிய தில்காத்பில்நேசர் அவனிடத்தில் வந்தான்; அவனை நெருக்கினானே அல்லாமல் அவனைப் பலப்படுத்தவில்லை.21ஆகாஸ் கர்த்தருடைய ஆலயத்தில் ஒரு பங்கும், ராஜ அரமனையில் ஒரு பங்கும், பிரபுக்களின் கையில் ஒரு பங்கும் எடுத்து, அசீரியாவின் ராஜாவுக்குக் கொடுத்தும், அவனுக்கு உதவி கிடைக்கவில்லை.22தான் நெருக்கப்படுகிற காலத்திலும் கர்த்தருக்கு விரோதமாய் அந்த ஆகாஸ் என்னும் ராஜா துரோகம்பண்ணிக்கொண்டே இருந்தான்.23எப்படியென்றால்: சீரியா ராஜாக்களின் தெய்வங்கள் அவர்களுக்குத் துணை செய்கிறபடியினால், அவர்கள் எனக்கும் துணைசெய்ய அவர்களுக்குப் பலியிடுவேன் என்று சொல்லி, தன்னை முறிய அடித்த தமஸ்குவின் தெய்வங்களுக்கு அவன் பலியிட்டான்; ஆனாலும் அது அவனும் இஸ்ரவேல் அனைத்தும் நாசமாகிறதற்கு ஏதுவாயிற்று.24ஆகாஸ் தேவனுடைய ஆலயத்தின் பணிமுட்டுகளைச் சேர்த்து, தேவனுடைய ஆலயத்தின் பணிமுட்டுகளைத் துண்டுதுண்டாக்கி, கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைப் பூட்டிப்போட்டு, எருசலேமில் மூலைக்குமூலை பலிபீடங்களை உண்டுபண்ணி,25அந்நிய தெய்வங்களுக்குத் தூபங்காட்டும்படிக்கு, யூதாவின் ஒவ்வொரு பட்டணத்திலும் மேடைகளை உண்டுபண்ணி; தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபமூட்டினான்.26அவனுடைய மற்ற வர்த்தமானங்களும், அவனுடைய ஆதியோடந்தமான சகல நடபடிகளும் யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.27ஆகாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனை எருசலேம் நகரத்தில் அடக்கம் பண்ணினார்கள்; ஆனாலும் இஸ்ரவேல் ராஜாக்களின் கல்லறைகளில் அவனைக் கொண்டுவந்து வைக்கவில்லை; அவன் குமாரனாகிய எசேக்கியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.2 இராஜாக்கள் 16
1ரெமலியாவின் குமாரனாகிய பெக்காவின் பதினேழாம் வருஷத்தில் யூதாவின் ராஜாவாகிய யோதாமின் குமாரன் ஆகாஸ் ராஜாவானான்.2ஆகாஸ் ராஜாவாகிறபோது இருபது வயதாயிருந்து, எருசலேமிலே பதினாறுவருஷம் அரசாண்டான்; அவன் தன் தகப்பனாகிய தாவீதைப்போல் தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்யாமல்,3இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே தன் குமாரனை முதலாய்த் தீக்கடக்கப்பண்ணினான்.4மேடைகளிலும் மலைகளின்மேலும் பச்சையான சகல மரத்தின் கீழும் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தான்.5அப்பொழுது சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீனும், இஸ்ரவேலின் ராஜாவாகிய ரெமலியாவின் குமாரன் பெக்காவும், எருசலேமின்மேல் யுத்தம்பண்ண வந்து ஆகாசை முற்றிக்கை போட்டார்கள்; ஆனாலும் ஜெயிக்கமாட்டாதே போனார்கள்.6அக்காலத்திலே சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீன் ஏலாத்தைத் திரும்பச் சீரியாவோடே சேர்த்துக்கொண்டு. யூதரை ஏலாத்திலிருந்து துரத்தினான்; சீரியர் ஏலாத்திற்கு வந்து இந்நாள்வரைக்கும் அவ்விடத்திலே குடியிருக்கிறார்கள்.7ஆகாஸ் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசரிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: நான் உம்முடைய அடியானும் உம்முடைய குமாரனுமாயிருக்கிறேன்; நீர் வந்து, எனக்கு விரோதமாயெழும்பின சீரியா ராஜாவின் கைக்கும், இஸ்ரவேல் ராஜாவின் கைக்கும் என்னை நீங்கலாக்கிவிடும் என்று சொல்லச் சொல்லி:8கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரமனைப் பொக்கிஷங்களிலும் அகப்பட்ட வெள்ளியையும் பொன்னையும் எடுத்து, அசீரியாவின் ராஜாவுக்குக் காணிக்கையாக அனுப்பினான்.9அசீரியா ராஜா அவனுக்குச் செவிகொடுத்து, தமஸ்குவுக்குப்போய் அதைப் பிடித்து, அதின் குடிகளைக் கீர்பட்டணத்திற்குச் சிறைபிடித்துக்கொண்டுபோய், ரேத்சீனைக் கொன்றுபோட்டான்.10அப்பொழுது ராஜாவாகிய ஆகாஸ் தமஸ்குவிலுள்ள அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசருக்கு எதிர்கொண்டுபோய்த் தமஸ்குவிலுள்ள பலிபீடத்தைக் கண்டான். ராஜாவாகிய ஆகாஸ் அந்தப் பலிபீடத்தின் சாயலையும், அதினுடைய சகல வேலைப்பாடாகிய அதின் மாதிரியையும் ஆசாரியனாகிய உரியாவுக்கு அனுப்பினான்.11ராஜாவாகிய ஆகாஸ் தமஸ்குவிலிருந்து வருகிறதற்குள் ஆசாரியனாகிய உரியா அப்படிக்கொத்த பலிபீடத்தைக் கட்டி, ராஜாவாகிய ஆகாஸ் தமஸ்குவிலிருந்து அனுப்பின கட்டளையின்படியெல்லாம் செய்தான்.12ராஜா தமஸ்குவிலிருந்து வந்தபோது, அவன் அந்தப் பலிபீடத்தைப் பார்த்து, அந்தப் பலிபீடத்தண்டையில் சேர்ந்து, அதின்மேல் பலியிட்டு,13தன் சர்வாங்க தகனபலியையும் தன் போஜனபலியையும் தகனித்து, தன் பானபலியை வார்த்து, தன் சமாதானபலிகளின் இரத்தத்தை அந்தப் பலிபீடத்தின்மேல் தெளித்தான்.14கர்த்தரின் சந்நிதியில் இருந்த வெண்கலப் பலிபீடத்தை அவன் தன் பலிபீடத்திற்கும் கர்த்தரின் ஆலயத்திற்கும் நடுவே ஆலயத்தின் முகப்பிலிருந்து எடுத்து, அதைத் தன் பலிபீடத்திற்கு வடபுறமாய் வைத்தான்.15ராஜாவாகிய ஆகாஸ் ஆசாரியனாகிய உரியாவை நோக்கி: இந்தப் பெரிய பலிபீடத்தின்மேல் நீ காலை சர்வாங்க தகனபலியையும், மாலை போஜனபலியையும், ராஜாவின் சர்வாங்க தகனபலியையும், அவருடைய போஜனபலியையும், தேசத்தினுடைய சகல ஜனத்தின் சர்வாங்க தகனபலியையும், அவர்கள் போஜனபலியையும், அவர்கள் பானபலிகளையும் செலுத்தி, அதின்மேல் சர்வாங்க தகனங்களின் சகல இரத்தத்தையும், பலிகளின் சகல இரத்தத்தையும் தெளிப்பாயாக; அந்த வெண்கலப் பலிபீடமோ, நான் சன்னதம் கேட்கிறதற்கு உதவும் என்றான்.16ராஜாவாகிய ஆகாஸ் கட்டளையிட்டபடியெல்லாம் ஆசாரியனாகிய உரியா செய்தான்.17பின்னும் ராஜாவாகிய ஆகாஸ் ஆதாரங்களின் சவுக்கைகளை அறுத்துவிட்டு, அவைகளின் மேலிருந்த கொப்பரைகளை எடுத்து, கடல்தொட்டியைக் கீழே நிற்கிற வெண்கல ரிஷபங்களின்மேலிருந்து இறக்கி, அதைக் கற்களின் தளவரிசையிலே வைத்து,18ஆலயத்தின் அருகே கட்டியிருந்த ஓய்வுநாளின் மண்டபத்தையும், ராஜா பிரவேசிக்கும் மண்டபத்தையும், அசீரியருடைய ராஜாவினிமித்தம் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து அப்புறப்படுத்தினான்.19ஆகாஸ் செய்த மற்ற வர்த்தமானங்கள் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.20ஆகாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் தாவீதின் நகரத்தில் தன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய எசேக்கியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
2 இராஜாக்கள் 17
1யூதாவின் ராஜாவாகிய ஆகாசின் பன்னிரண்டாம் வருஷத்தில், ஏலாவின் குமாரனாகிய ஓசெயா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, சமாரியாவிலே ஒன்பதுவருஷம் ராஜ்யபாரம்பண்ணி,2 கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; ஆனாலும் தனக்கு முன்னிருந்த இஸ்ரவேலின் ராஜாக்களைப்போல் செய்யவில்லை.3அவனுக்கு விரோதமாக அசீரியாவின் ராஜாவாகிய சல்மனாசார் வந்தான்; அப்பொழுது ஓசெயா அவனைச் சேவிக்கிறவனாகி, அவனுக்குப் பகுதி கட்டினான்.4ஓசெயா எகிப்தின் ராஜாவாகிய சோ என்பவனிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பினதும், தனக்கு வருஷந்தோறும் செய்ததுபோல், பகுதி அனுப்பாதே போனதுமான கலக யோசனையை அசீரியாவின் ராஜா ஓசெயாவினிடத்திலே கண்டு, அவனைப் பிடித்துக் கட்டிச் சிறைச்சாலையிலே வைத்தான்.5அசீரியா ராஜா தேசம் எங்கும் போய், சமாரியாவுக்கும் வந்து அதை மூன்றுவருஷம் முற்றிக்கை போட்டிருந்தான்.6ஓசெயாவின் ஒன்பதாம் வருஷத்தில் அசீரியா ராஜா சமாரியாவைப் பிடித்து, இஸ்ரவேலை அசீரியாவுக்குச் சிறையாகக் கொண்டுபோய் அவர்களைக் கோசான் நதி ஓரமான ஆலாகிலும் ஆபோரிலும் மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான்.7எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய கையின்கீழிருந்த தங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக இஸ்ரவேல் புத்திரர் பாவஞ்செய்து, அந்நிய தேவர்களுக்குப் பயந்து நடந்து,8 கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளின் வழிபாடுகளிலும் இஸ்ரவேல் ராஜாக்களின் வழிபாடுகளிலும் நடந்துகொண்டிருந்தார்கள்.9செய்யத்தகாத காரியங்களை இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக இரகசியத்தில் செய்ததுமன்றி, காவல்காக்கிற கோபுரங்கள் தொடங்கி அரணான பட்டணங்கள்மட்டுமுள்ள தங்கள் ஊர்களிலெல்லாம் தங்களுக்கு மேடைகளையும் கட்டி,10உயரமான சகல மேட்டின்மேலும் பச்சையான சகல மரத்தின்கீழும் தங்களுக்குச் சிலைகளையும் விக்கிரகத் தோப்புகளையும் நிறுத்தி,11 கர்த்தர் தங்களை விட்டுக் குடிவிலக்கின ஜாதிகளைப்போல, சகல மேடைகளிலும் தூபங்காட்டி, கர்த்தருக்குக் கோபமுண்டாகத் துர்க்கிரியைகளைச் செய்து,12இப்படிச் செய்யத்தகாது என்று கர்த்தர் தங்களுக்குச் சொல்லியிருந்தும், நரகலான விக்கிரகங்களைச் சேவித்து வந்தார்கள்.13நீங்கள் உங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பி, நான் உங்கள் பிதாக்களுக்குக் கட்டளையிட்டதும், என் ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளைக்கொண்டு உங்களுக்குச் சொல்லியனுப்பினதுமான நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் என் கற்பனைகளையும் என் கட்டளைகளையும் கைக்கொள்ளுங்கள் என்று கர்த்தர் தீர்க்கதரிசிகள் ஞான திருஷ்டிக்காரர் எல்லாரையுங்கொண்டு இஸ்ரவேலுக்கும் யூதாவுக்கும் திடச்சாட்சியாய் எச்சரித்துக்கொண்டிருந்தும்,14அவர்கள் செவிகொடாமல், தங்கள் தேவனாகிய கர்த்தர்மேல் விசுவாசியாமற்போன கடினக் கழுத்துள்ள தங்கள் பிதாக்களைப்போல், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி,15அவருடைய கட்டளைகளையும், அவர் தங்கள் பிதாக்களோடேபண்ணின அவருடைய உடன்படிக்கையையும், அவர் தங்களுக்குத் திடச்சாட்சியாய்க் காண்பித்த அவருடைய சாட்சிகளையும் வெறுத்துவிட்டு, வீணான விக்கிரகங்களைப் பின்பற்றி வீணராகி, அவர்களைச் சுற்றிலும் இருக்கிறவர்களைப்போல, செய்ய வேண்டாமென்று கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டு விலக்கியிருந்த ஜாதிகளுக்குப் பின்சென்று.16தங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் விட்டுவிட்டு, இரண்டு கன்றுக்குட்டிகளாகிய வார்ப்பித்த விக்கிரகங்களைத் தங்களுக்கு உண்டாக்கி, விக்கிரகத் தோப்புகளை நாட்டி, வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்துகொண்டு, பாகாலைச் சேவித்தார்கள்.17அவர்கள் தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தீக்கடக்கப்பண்ணி, குறிகேட்டு நிமித்தங்கள் பார்த்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக்க அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்கிறதற்குத் தங்களை விற்றுப்போட்டார்கள்.18ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் மிகவும் கோபமடைந்து, அவர்களைத் தம்முடைய முகத்தைவிட்டு அகற்றினார்; யூதா கோத்திரம் மாத்திரமே மீதியாயிற்று.19யூதா ஜனங்களும் தங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளைக் கைக்கொள்ளாமல் இஸ்ரவேல் உண்டாக்கின வழிபாடுகளில் நடந்தார்கள்.20ஆகையால் கர்த்தர் இஸ்ரவேல் சந்ததியாரையெல்லாம் புறக்கணித்து, அவர்களைத் தமது முகத்தைவிட்டுத் தள்ளுமட்டாக ஒடுக்கி, அவர்களைக் கொள்ளைக்காரர் கையில் ஒப்புக்கொடுத்தார்.21இஸ்ரவேலர் தாவீது வம்சத்தைவிட்டுப் பிரிந்து, நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமை ராஜாவாக்கினார்கள்; அப்பொழுது யெரொபெயாம் இஸ்ரவேலைக் கர்த்தரை விட்டுப் பின்வாங்கவும், பெரிய பாவத்தைச் செய்யவும்பண்ணினான்.22அப்படியே இஸ்ரவேல் புத்திரர் யெரொபெயாம் செய்த எல்லாப் பாவங்களிலும் நடந்து,23 கர்த்தர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரர் எல்லாரையும் கொண்டு சொல்லியிருந்தபடி. அவர்களைத் தமது சமுகத்தைவிட்டு அகற்றுகிறவரைக்கும், அவைகளை விட்டு விலகாதிருந்தார்கள்; இப்படியே இஸ்ரவேலர் தங்கள் தேசத்தினின்று அசீரியாவுக்குக் கொண்டுபோகப்பட்டு இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள்.24அசீரியா ராஜா, பாபிலோனிலும், கூத்தாவிலும், ஆபாவிலும், ஆமாத்திலும், செப்பர்வாயிமிலும் இருந்து மனுஷரை வரப்பண்ணி, அவர்களை இஸ்ரவேல் புத்திரருக்குப் பதிலாகச் சமாரியாவின் பட்டணங்களிலே குடியேற்றினான்; இவர்கள் சமாரியாவைச் சொந்தமாய்க் கட்டிக்கொண்டு அதின் பட்டணங்களிலே குடியிருந்தார்கள்.25அவர்கள் அங்கே குடியேறினது முதல், கர்த்தருக்குப் பயப்படாததினால், கர்த்தர் அவர்களுக்குள்ளே சிங்கங்களை அனுப்பினார்; அவைகள் அவர்களில் சிலரைக் கொன்றுபோட்டது.26அப்பொழுது ஜனங்கள் அசீரியா ராஜாவை நோக்கி: நீர் இங்கேயிருந்து அனுப்பி, சமாரியாவின் பட்டணங்களிலே குடியேற்றுவித்த ஜாதிகள் அந்த தேசத்து தேவனுடைய காரியத்தை அறியாதபடியினால், அவர் அவர்களுக்குள்ளே சிங்கங்களை அனுப்பினார்; அந்த தேசத்து தேவனுடைய காரியத்தை அவர்கள் அறியாதபடியினால், அவைகள் அவர்களைக் கொன்றுபோடுகிறது என்று சொன்னார்கள்.27அதற்கு அசீரியா ராஜா: நீங்கள் அங்கேயிருந்து கொண்டுவந்த ஆசாரியர்களில் ஒருவனை அங்கே அழைத்துக்கொண்டுபோங்கள்; அவர்கள் அங்கே குடியிருக்கும்படிக்கு, அவன் அவர்களுக்கு அந்த தேசத்து தேவனுடைய காரியத்தைப் போதிக்கக்கடவன் என்று கட்டளையிட்டான்.28அப்படியே அவர்கள் சமாரியாவிலிருந்து கொண்டுபோயிருந்த ஆசாரியர்களில் ஒருவன் வந்து, பெத்தேலிலே குடியிருந்து, கர்த்தருக்குப் பயந்து நடக்கவேண்டிய விதத்தை அவர்களுக்குப் போதித்தான்.29ஆனாலும் அந்தந்த ஜாதி தங்கள் தங்கள் தேவர்களைத் தங்களுக்கு உண்டுபண்ணி, அந்தந்த ஜாதியார் குடியேறின தங்கள் தங்கள் பட்டணங்களில் சமாரியர் உண்டுபண்ணின மேடைகளின் கோவில்களில் வைத்தார்கள்.30பாபிலோனின் மனுஷர் சுக்கோத் பெனோத்தையும், கூத்தின் மனுஷர் நேர்காலையும், ஆமாத்தின் மனுஷர் அசிமாவையும்,31ஆவியர் நிபேகாசையும் தர்தாக்கையும் உண்டாக்கினார்கள், செப்பர்வியர் செப்பர்வாயிமின் தேவர்களாகிய அத்ரமலேக்குக்கும் அன்னமலேக்குக்கும் தங்கள் பிள்ளைகளை அக்கினியில் தகனித்து வந்தார்கள்.32அவர்கள் கர்த்தருக்குப் பயந்ததுமன்றி, மேடைகளிலுள்ள கோவில்களில் தங்களுக்காக ஆராதனை செய்கிறதற்கு, தங்களுக்குள் ஈனமானவர்களை ஆசாரியர்களாகவும் ஏற்படுத்தினார்கள்.33அப்படியே கர்த்தருக்குப் பயந்தும், தாங்கள் விட்டுவந்த ஜாதிகளுடைய முறைமையின்படியே தங்கள் தேவர்களைச் சேவித்தும் வந்தார்கள்.34இந்நாள்வரைக்கும் அவர்கள் தங்கள் முந்தின முறைகளின்படியே செய்து வருகிறார்கள்; அவர்கள் கர்த்தருக்குப் பயந்து நடக்கிறதுமில்லை, தங்கள் சுய திட்டங்கள் முறைமைகளின்படியாகிலும், கர்த்தர் இஸ்ரவேல் என்று பேரிட்ட யாக்கோபின் புத்திரருக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்திற்கும் கற்பனைக்கும் ஒத்தபடியாகிலும் செய்கிறதுமில்லை.35 கர்த்தர் இவர்களோடே உடன்படிக்கைபண்ணி, இவர்களுக்குக் கற்பித்தது என்னவென்றால்: நீங்கள் அந்நிய தேவர்களுக்குப் பயப்படாமலும், அவர்களைப் பணிந்துகொள்ளாமலும், சேவியாமலும், அவர்களுக்குப் பலியிடாமலும்,36உங்களை மகா வல்லமையினாலும் ஓங்கிய புயத்தினாலும் எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தருக்கே பயந்து, அவரையே பணிந்துகொண்டு, அவருக்கே பலியிட்டு,37அவர் உங்களுக்கு எழுதிக்கொடுத்த திட்டங்களின்படியும், முறைமைகளின்படியும், நியாயப்பிரமாணத்தின்படியும், கற்பனைகளின்படியும், நீங்கள் சகல நாளும் செய்கிறதற்குக் கவனமாயிருந்து அந்நிய தேவர்களுக்குப் பயப்படாதிருங்கள்.38நான் உங்களோடே பண்ணின உடன்படிக்கையை நீங்கள் மறவாமலும், அந்நிய தேவர்களுக்குப் பயப்படாமலும்,39உங்கள் தேவனாகிய கர்த்தருக்கே பயந்து நடப்பீர்களாக; அப்பொழுது அவர் உங்கள் எல்லாச் சத்துருக்களின் கைக்கும் உங்களைத் தப்புவிப்பார் என்று அவர்களுக்குச் சொல்லியிருந்தார்.40ஆனாலும் அவர்கள் செவிகொடாமல் தங்கள் முந்தின முறைமைகளின்படியே செய்தார்கள்.41அப்படியே அந்த ஜாதிகள் கர்த்தருக்குப் பயந்தும், தங்கள் விக்கிரகங்களைச் சேவித்தும் வந்தார்கள்; அவர்கள் பிள்ளைகளும் அவர்கள் பிள்ளைகளின் பிள்ளைகளும் தங்கள் பிதாக்கள் செய்தபடியே இந்நாள்வரைக்கும் செய்து வருகிறார்கள்.
Leave a Reply