Scripture Portion: Hosea 1-7

ஓசியா 1

1யூதாதேசத்து ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களிலும், யோவாசின் குமாரனாகிய யெஸ்ரயேலின் ராஜாவாகிய யெரொபெயாம் என்பவனின் நாட்களிலும், பெயேரியின் குமாரனாகிய ஓசியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்.
2கர்த்தர் ஓசியாவைக்கொண்டு உரைக்கத்தொடங்கினபோது, கர்த்தர் ஓசியாவை நோக்கி: நீ போய், ஒரு சோரஸ்திரீயையும் சோரப்பிள்ளைகளையும் உன்னிடமாகச் சேர்த்துக்கொள்; தேசம் கர்த்தரை விட்டு விலகிச் சோரம்போயிற்று என்றார்.
3அவன் போய், திப்லாயிமின் குமாரத்தியாகிய கோமேரைச் சேர்த்துக்கொண்டான்; அவள் கர்ப்பந்தரித்து, அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.
4அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: இவனுக்கு யெஸ்ரயேல் என்னும் பேரிடு; ஏனெனில் இன்னும் கொஞ்சகாலத்திலே நான் ஏகூவின் வம்சத்தாரிடத்திலே யெஸ்ரயேலின் இரத்தப்பழியை விசாரித்து, இஸ்ரவேல் வம்சத்தாரின் ராஜ்யபாரத்தை ஒழியப்பண்ணுவேன்.
5அந்நாளில் யெஸ்ரயேலின் பள்ளத்தாக்கிலே இஸ்ரவேலின் வில்லை முறிப்பேன் என்றார்.
6அவள் திரும்பக் கர்ப்பந்தரித்து, ஒரு குமாரத்தியைப் பெற்றாள்; அப்பொழுது அவர் அவனை நோக்கி: இவளுக்கு லோருகாமா என்னும் பேரிடு; ஏனெனில், நான் இனி இஸ்ரவேல் வம்சத்தாருக்கு இரக்கஞ்செய்வதில்லை, நான் அவர்களை முழுவதும் அகற்றிவிடுவேன்.
7யூதாவின் வம்சத்தாருக்கோ நான் இரக்கஞ்செய்வேன்; வில்லினாலும், பட்டயத்தினாலும், யுத்தத்தினாலும், குதிரைகளினாலும், குதிரைவீரரினாலும் நான் அவர்களை இரட்சியாமல், அவர்களுடைய தேவனாகிய கர்த்தராலே அவர்களை இரட்சிப்பேன் என்றார்.
8அவள் லோருகாமாவை முலைமறக்கப்பண்ணின பிற்பாடு, கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெற்றாள்.
9அப்பொழுது அவர்: இவனுக்கு லோகம்மீ என்னும் பேரிடு; ஏனெனில் நீங்கள் என் ஜனமல்ல, நான் உங்கள் தேவனாயிருப்பதில்லை.
10என்றாலும், இஸ்ரவேல் புத்திரரின் தொகை அளக்கவும் எண்ணவுங்கூடாத கடற்கரை மணலைப்போலிருக்கும்; நீங்கள் என் ஜனமல்ல என்று அவர்களுக்குச் சொல்லுவதற்குப் பதிலாக நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.
11அப்பொழுது யூதா புத்திரரும் இஸ்ரவேல் புத்திரரும் ஏகமாய்க் கூட்டப்பட்டு, தங்களுக்கு ஒரே அதிபதியை ஏற்படுத்தி, தேசத்திலிருந்து புறப்பட்டு வருவார்கள்; யெஸ்ரயேலின் நாள் பெரிதாயிருக்கும்.

ஓசியா 2

1உங்கள் சகோதரரைப்பார்த்து அம்மீ என்றும், உங்கள் சகோதரிகளைப்பார்த்து ருகாமா என்றும் சொல்லுங்கள்.
2உங்கள் தாயோடே வழக்காடுங்கள்; அவள் எனக்கு மனைவியுமல்ல, நான் அவளுக்குப் புருஷனுமல்ல; அவள் தன் வேசித்தனங்களைத் தன் முகத்தினின்றும், தன் விபசாரங்களைத் தன் ஸ்தனங்களின் நடுவினின்றும் விலக்கிப்போடக்கடவள்.
3இல்லாவிட்டால் நான் அவளை நிர்வாணமாக உரிந்து, அவள் பிறந்தநாளில் இருந்தவண்ணமாக அவளை நிறுத்தி, அவளை அந்தரவெளியைப்போலாக்கி, அவளை வறண்டபூமியைப்போல் விட்டு, அவளைத் தாகத்தால் சாகப்பண்ணுவேன்.
4அவளுடைய பிள்ளைகள் சோரப்பிள்ளைகளாகையால் அவர்களுக்கு இரங்காதிருப்பேன்.
5அவர்களுடைய தாய் சோரம்போனாள், அவர்களைக் கர்ப்பந்தரித்தவள் இலச்சையான காரியங்களைச் செய்தாள்; அப்பத்தையும், தண்ணீரையும், ஆட்டுமயிரையும், பஞ்சையும், எண்ணெயையும், பானங்களையும் கொடுத்துவருகிற என் நேசர்களைப் பின்பற்றிப்போவேன் என்றாள்.
6ஆகையால், இதோ, நான் உன் வழியை முள்ளுகளினால் அடைப்பேன்; அவள் தன் பாதைகளைக் கண்டுபிடிக்கக்கூடாதபடிக்கு மதிலை எழுப்புவேன்.
7அவள் தன் நேசர்களைப் பின்தொடர்ந்தும் அவர்களைச் சேருவதில்லை, அவர்களைத் தேடியும் கண்டுபிடிப்பதில்லை; அப்பொழுது அவள்: நான் என் முந்தின புருஷனிடத்துக்குத் திரும்பிப்போவேன்; இப்பொழுது இருக்கிறதைப்பார்க்கிலும் அப்பொழுது எனக்கு நன்மையாயிருந்தது என்பாள்.
8தனக்கு நான் தானியத்தையும் திராட்சரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தவரென்றும், தனக்கு நான் வெள்ளியையும் பொன்னையும் பெருகப்பண்ணினவரென்றும் அவள் அறியாமற்போனாள்; அவைகளை அவர்கள் பாகாலுடையதாக்கினார்கள்.
9ஆதலால் நான் என் தானியத்தை அதின் காலத்திலும், என் திராட்சரசத்தை அதின் காலத்திலும் திரும்ப எடுத்துக்கொண்டு, அவளுடைய நிர்வாணத்தை மூடுகிறதற்கு நான் கொடுத்திருந்த ஆட்டுமயிரையும் சணலையும் திரும்பப் பிடுங்கிக்கொள்ளுவேன்.
10இப்போதும் அவளுடைய நேசர்களின் கண்களுக்கு முன்பாக அவளுடைய அவலட்சணத்தை வெளிப்படுத்துவேன்; ஒருவரும் அவளை என் கைக்கு நீங்கலாக்கி விடுவிப்பதில்லை.
11அவளுடைய எல்லா மகிழ்ச்சியையும், அவளுடைய பண்டிகைகளையும், அவளுடைய மாதப்பிறப்புகளையும், அவளுடைய ஓய்வுநாட்களையும், சபைகூடுகிற அவளுடைய எல்லா ஆசரிப்புகளையும் ஒழியப்பண்ணுவேன்.
12என் நேசர்கள் எனக்குக் கொடுத்த பணையம் என்று அவள் சொன்ன அவளுடைய திராட்சச்செடிகளையும், அவளுடைய அத்திமரங்களையும் நான் பாழாக்கி, அவைகளைக் காடாய்ப்போகப்பண்ணுவேன்; காட்டுமிருகங்கள் அவைகளைத் தின்னும்.
13அவள் பாகால்களுக்குத் தூபங்காட்டி, தன் நெற்றிப்பட்டங்களினாலும் தன் ஆபரணங்களினாலும் தன்னைச் சிங்காரித்துக்கொண்டு, தன் நேசரைப் பின்தொடர்ந்து, என்னை மறந்துபோன நாட்களினிமித்தம் அவளை விசாரிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
14ஆயினும், இதோ, நான் அவளுக்கு நயங்காட்டி, அவளை வனாந்தரத்தில் அழைத்துக்கொண்டுபோய், அவளோடே பட்சமாய்ப் பேசி,
15அவ்விடத்திலிருந்து அவளுக்கு அவளுடைய திராட்சத்தோட்டங்களையும், நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்; அப்பொழுது அவள் அங்கே, தன் இளவயதின் நாட்களிலும் தான் எகிப்துதேசத்திலிருந்து வந்த நாளிலும் பாடினதுபோல் பாடுவாள்.
16அக்காலத்தில் நீ என்னை இனி பாகாலி என்று சொல்லாமல், ஈஷி என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
17பாகால்களுடைய நாமங்களை அவள் வாயிலிருந்து அற்றுப்போகப்பண்ணுவேன்; இனி அவைகளின் பேரைச் சொல்லி, அவைகளை நினைக்கிற நினைப்பும் இல்லாமற்போகும்.
18அக்காலத்தில் நான் அவர்களுக்காகக் காட்டு மிருகங்களோடும், ஆகாயத்துப் பறவைகளோடும், பூமியிலே ஊரும் பிராணிகளோடும், ஒரு உடன்படிக்கைபண்ணி, வில்லையும் பட்டயத்தையும் யுத்தத்தையும் தேசத்திலே இராதபடிக்கு முறித்து, அவர்களைச் சுகமாய்ப் படுத்துக்கொண்டிருக்கப்பண்ணுவேன்.
19நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்.
20உண்மையாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீ கர்த்தரை அறிந்துகொள்ளுவாய்.
21அக்காலத்தில் நான் மறுமொழி கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் வானங்களுக்கு மறுமொழி கொடுப்பேன், அவைகள் பூமிக்கு மறுமொழி கொடுக்கும்.
22பூமி தானியத்துக்கும் திராட்சரசத்துக்கும் எண்ணெய்க்கும் மறுமொழிகொடுக்கும், இவைகள் யெஸ்ரயேலுக்கும் மறுமொழி கொடுக்கும்.
23நான் அவளை எனக்கென்று பூமியிலே விதைத்து, இரக்கம் பெறாதிருந்தவளுக்கு இரங்குவேன்; என் ஜனமல்லாதிருந்தவர்களை நோக்கி: நீ என் ஜனமென்று சொல்லுவேன்; அவர்கள் என் தேவனே என்பார்கள் என்றார்.

ஓசியா 3

1பின்பு கர்த்தர் என்னை நோக்கி: அந்நிய தேவர்களை மதித்து, திராட்சரசமுள்ள பாத்திரங்களை விரும்புகிறவர்களான இஸ்ரவேல் புத்திரர்பேரில் கர்த்தர் வைத்திருக்கிற அன்புக்கு ஒப்பாக நீ இன்னும் போய், தன் நேசரால் நேசிக்கப்பட்டவளும், விபசாரியுமான ஒரு ஸ்திரீயை நேசித்துக்கொள் என்று சொன்னார்.
2அப்பொழுது நான் அவளை எனக்குப் பதினைந்து வெள்ளிக்காசுக்கும், ஒன்றரைக்கலம் வாற்கோதுமைக்கும் கொண்டு,
3அவளை நோக்கி: நீ வேசித்தனம்பண்ணாமலும், ஒருவனையும் சேராமலும் அநேகநாள் எனக்காகக் காத்திரு; உனக்காக நானும் காத்திருப்பேன் என்றேன்.
4இஸ்ரவேல் புத்திரர் அநேகநாள் ராஜா இல்லாமலும், அதிபதி இல்லாமலும், பலி இல்லாமலும், சிலை இல்லாமலும், ஏபோத் வஸ்திரம் இல்லாமலும், தேராபீம் இல்லாமலும் இருப்பார்கள்.
5பின்பு இஸ்ரவேல் புத்திரர் திரும்பி, தங்கள் தேவனாகிய கர்த்தரையும், தங்கள் ராஜாவாகிய தாவீதையும் தேடி, கடைசி நாட்களில் கர்த்தரையும், அவருடைய தயவையும் நாடி அஞ்சிக்கையாய் வருவார்கள்.

ஓசியா 4

1இஸ்ரவேல் புத்திரரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; தேசத்துக்குடிகளோடே கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; அதேனென்றால் தேசத்திலே உண்மையும் இல்லை, இரக்கமும் இல்லை; தேவனைப்பற்றிய அறிவும் இல்லை.
2பொய்யாணையிட்டு, பொய்சொல்லி, கொலைசெய்து, திருடி, விபசாரம்பண்ணி, மிஞ்சி மிஞ்சிப்போகிறார்கள்; இரத்தப்பழிகளோடே இரத்தப்பழிகள் சேருகிறது.
3இதினிமித்தம் தேசம் புலம்பும்; அதில் குடியிருக்கிற அனைவரோடுங்கூட மிருகஜீவன்களும் ஆகாயத்துப் பறவைகளும் தொய்ந்துபோகும்; கடலின் மச்சங்களும் வாரிக்கொள்ளப்படும்.
4ஆகிலும் ஒருவனும் நியாயத்தைக் காண்பிக்கவும், ஒருவனும் அவர்களைக் கடிந்துகொள்ளவும் கூடாது; உன் ஜனங்கள் ஆசாரியனோடே வழக்காடுகிறவர்களைப்போல இருக்கிறார்கள்.
5ஆகையால் நீ பகலிலே இடறிவிழுவாய்; இரவிலே உன்னோடேகூடத் தீர்க்கதரிசியும் இடறிவிழுவான்; உன் தாயை நான் சங்காரம்பண்ணுவேன்.
6என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய், ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்துவிடுவேன்; நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன்.
7அவர்கள் எவ்வளவாய்ப் பெருகினார்களோ, அவ்வளவாய் எனக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தார்கள்; அவர்களுடைய மகிமையை இலச்சையாக மாறப்பண்ணுவேன்.
8அவர்கள் என் ஜனத்தின் பாவத்தைத் தின்று, அவர்களுடைய அக்கிரமத்தின்பேரில் பசிதாகமாயிருக்கிறார்கள்.
9ஆதலால் ஜனங்களுக்கு எப்படியோ ஆசாரியனுக்கும் அப்படியே; அவர்கள் வழிகளின்படி நான் அவர்களை விசாரித்து, அவர்கள் கிரியைகளின்படி அவர்களுக்குப் பலனளிப்பேன்.
10அவர்கள் கர்த்தரை மதியாமலிருக்கிறபடியினால் அவர்கள் தின்றாலும் திருப்தியடையாதிருப்பார்கள்; அவர்கள் வேசித்தனம்பண்ணினாலும் பலுகாதிருப்பார்கள்.
11வேசித்தனமும் திராட்சரசமும் மதுபானமும் இருதயத்தை மயக்கும்.
12என் ஜனங்கள் கட்டையினிடத்தில் ஆலோசனை கேட்கிறார்கள்; அவர்களுடைய கோல் அவர்களுக்குச் செய்தியை அறிவிக்குமென்றிருக்கிறார்கள்; வேசித்தன ஆவி அவர்களை வழிதப்பித் திரியப்பண்ணிற்று; அவர்கள் தங்கள் தேவனுக்குக் கீழ்ப்பட்டிராமல் சோரமார்க்கம்போனார்கள்.
13அவர்கள் மலையுச்சியில் பலியிட்டு, மேடுகளிலே கர்வாலிமரங்களின் கீழும், புன்னைமரங்களின் கீழும், அரசமரங்களின் கீழும், அவைகளின் நிழல் நல்லதென்று, தூபங்காட்டுகிறார்கள்; இதினிமித்தம் உங்கள் குமாரத்திகள் வேசித்தனமும், உங்கள் மருமக்கள்மார் விபசாரமும் செய்கிறார்கள்.
14உங்கள் குமாரத்திகள் வேசித்தனம் செய்கிறதினிமித்தமும், உங்கள் மருமக்கள்மார் விபசாரம் செய்கிறதினிமித்தமும், நான் அவர்களைத் தண்டியாமலிருப்பேனோ? அவர்கள் விலகி வேசிகளோடே கூடப்போய் தாசிகளோடே பலியிடுகிறார்கள்; உணர்வில்லாத ஜனங்கள் அதினால் சிக்குண்டு விழுவார்கள்.
15இஸ்ரவேலே, நீ சோரம்போனாலும், யூதாவாகிலும் அந்தப் பாவத்துக்குள்ளாகாதிருப்பதாக; கில்காலுக்கு வராமலும், பெத்தாவேனுக்குப் போகாமலும் கர்த்தருடைய ஜீவனாணை என்று ஆணையிடாமலும் இருப்பீர்களாக.
16இஸ்ரவேல் அடங்காத கிடாரியைப்போல் அடங்காதிருக்கிறது; இப்போது கர்த்தர் அவர்களை விஸ்தாரமான வெளியிலே ஆட்டுக்குட்டியைப்போல் மேய்ந்து அலையப்பண்ணுவார்.
17எப்பிராயீம் விக்கிரகங்களோடு இணைந்திருக்கிறான், அவனைப் போகவிடு.
18அவர்களுடைய மதுபானம் புளித்தது, அவர்கள் எப்போதும் சோரம்போகிறார்கள்; அவர்களுடைய அதிபதிகள் தாருங்களென்று இலச்சையானதை நாடுகிறார்கள்.
19காற்று அவர்களைத் தன் செட்டைகளில் இறுகப்பிடிக்கும்; அவர்கள் தங்கள் பலிகளால் வெட்கப்படுவார்கள்.

ஓசியா 5

1ஆசாரியர்களே, இதைக் கேளுங்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, கவனியுங்கள்; ராஜாவின் வீட்டாரே, செவிகொடுங்கள்; இந்த நியாயவிசாரிப்பு உங்கள்மேல் செல்லும்; நீங்கள் மிஸ்பாவில் கண்ணியும் தாபோரின்மேல் விரிக்கப்பட்ட வலையுமானீர்கள்.
2நெறிதவறினவர்கள் மிகுதியும் வதைசெய்கிறார்கள்; அவர்கள் எல்லாரையும் நான் தண்டிப்பேன்.
3எப்பிராயீமை நான் அறிவேன், இஸ்ரவேல் எனக்கு மறைவானதல்ல; எப்பிராயீமே, இப்போது நீ சோரம்போனாயே, இஸ்ரவேல் தீட்டுப்பட்டதே.
4அவர்கள் தங்கள் தேவனிடத்துக்குத் திரும்புவதற்குத் தங்கள் கிரியைகளைச் சீர்திருத்தமாட்டார்கள், வேசித்தன ஆவி அவர்கள் உள்ளத்தில் இருக்கிறது; கர்த்தரை அறியார்கள்.
5இஸ்ரவேலின் அகந்தை அவர்கள் முகத்துக்கு முன்பாகச் சாட்சியிடுகிறது; ஆகையால் இஸ்ரவேலும் எப்பிராயீமும் தங்கள் அக்கிரமத்தினால் இடறுண்டு விழுவார்கள்; அவர்களோடே யூதாவும் இடறுண்டு விழுவான்.
6அவர்கள் கர்த்தரைத் தேடும்படி தங்கள் ஆடுகளோடும் தங்கள் மாடுகளோடும் போவார்கள்; அவரைக் காணமாட்டார்கள்; அவர் அவர்களை விட்டு விலகினார்.
7கர்த்தருக்கு விரோதமாக துரோகம்பண்ணினார்கள்; அந்நியபிள்ளைகளைப் பெற்றார்கள்; இப்போதும் ஒரு மாதத்துக்குள்ளாக அவர்கள் தங்கள் பங்குகளோடே பட்சிக்கப்படுவார்கள்.
8கிபியாவிலே எக்காளத்தையும், ராமாவிலே பூரிகையையும் ஊதுங்கள்; பெத்தாவேனிலே கதறுங்கள்; பென்யமீனே உன்னைப் பின்தொடருகிறார்கள்.
9தண்டிப்பின் நாளிலே எப்பிராயீம் பாழாவான்; நிச்சயமாய் வரப்போகிறதை இஸ்ரவேலின் கோத்திரங்களுக்குள்ளே அறிவிக்கிறேன்.
10யூதாவின் பிரபுக்கள் எல்லைகளை ஒதுக்குகிறவர்களுக்கு ஒப்பானார்கள்; அவர்கள்மேல் என் உக்கிரகோபத்தைத் தண்ணீரைப்போல ஊற்றுவேன்.
11எப்பிராயீம் தகாத கற்பனையை மனதாரப் பின்பற்றிப்போனபடியால் அவன் ஒடுங்குண்டு, நியாயவிசாரணையில் நொறுக்கப்பட்டுப்போகிறான்.
12நான் எப்பிராயீமுக்குப் பொட்டரிப்பைப்போலவும், யூதாவின் வீட்டுக்கு உளுப்பைப்போலவும் இருப்பேன்.
13எப்பிராயீம் தன் வியாதியையும், யூதா தன் காயத்தையும் கண்டபோது, எப்பிராயீம் அசீரியனண்டைக்குப் போய் யாரேப் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பினான்; ஆனாலும் உங்களைக் குணமாக்கவும் உங்களில் இருக்கிற காயத்தை ஆற்றவும் அவனால் கூடாமற்போயிற்று.
14நான் எப்பிராயீமுக்குச் சிங்கம்போலவும், யூதாவின் வம்சத்தாருக்குப் பாலசிங்கம்போலவும் இருப்பேன்; நான் நானே பீறிவிட்டுப் போய்விடுவேன்; தப்புவிப்பார் இல்லாமல் எடுத்துக்கொண்டு போவேன்.
15அவர்கள் தங்கள் குற்றங்களை உணர்ந்து, என் முகத்தைத் தேடுமட்டும் நான் என் ஸ்தானத்துக்குத் திரும்பிப் போய்விடுவேன்; தங்கள் ஆபத்தில் என்னைக் கருத்தாய்த் தேடுவார்கள்.

ஓசியா 6

1கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்.
2இரண்டுநாளுக்குப்பின்பு அவர் நம்மை உயிர்ப்பிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்புவார்; அப்பொழுது நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருப்போம்.
3அப்பொழுது நாம் அறிவடைந்து, கர்த்தரை அறியும்படி தொடர்ந்து போவோம்; அவருடைய புறப்படுதல் அருணோதயம்போல ஆயத்தமாயிருக்கிறது; அவர் மழையைப்போலவும், பூமியின்மேல் பெய்யும் முன்மாரி பின்மாரியைப்போலவும் நம்மிடத்தில் வருவார்.
4எப்பிராயீமே, உனக்கு என்ன செய்வேன்? யூதாவே, உனக்கு என்ன செய்வேன்? உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் தோன்றும் பனியைப்போலவும் ஒழிந்துபோகிறது.
5ஆகையால் தீர்க்கதரிசிகளைக்கொண்டு அவர்களை வெட்டினேன்; என் வாய்மொழிகளைக்கொண்டு அவர்களை அதம்பண்ணினேன்; உன்மேல் வரும் தண்டனைகள் வெளிச்சத்தைப்போல் வெளிப்படும்.
6பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப்பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன்.
7அவர்களோ ஆதாமைப்போல் உடன்படிக்கையை மீறி, அங்கே எனக்கு விரோதமாய்த் துரோகம் பண்ணினார்கள்.
8கீலேயாத் அக்கிரமம் செய்கிறவர்களின் பட்டணம்; அது இரத்தக்காலடிகளால் மிதிக்கப்பட்டிருக்கிறது.
9பறிகாரரின் கூட்டங்கள் ஒருவனுக்குக் காத்திருக்கிறதுபோல, சீகேமுக்குப் போகிற வழியிலே கொலைசெய்கிற ஆசாரியரின் கூட்டம் காத்திருக்கிறது; தோஷமான காரியங்களையே செய்கிறார்கள்.
10பயங்கரமான காரியத்தை இஸ்ரவேல் வம்சத்தாரில் கண்டேன்; அங்கே எப்பிராயீமின் வேசித்தனம் உண்டு; இஸ்ரவேல் தீட்டுப்பட்டுப்போயிற்று.
11யூதாவே, உனக்கு ஒரு அறுப்புக்காலம் நியமிக்கப்பட்டிருக்கிறது.

ஓசியா 7

1நான் என் ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போதும், நான் இஸ்ரவேலை குணமாக்க விரும்பும்போதும், எப்பிராயீமின் அக்கிரமமும் சமாரியாவின் பொல்லாப்புகளும் வெளிப்படுத்தப்படும்; அவர்கள் வஞ்சனை செய்கிறார்கள்; திருடன் உள்ளே வருகிறான்; வெளியே பறிகாரரின் கூட்டத்தார் கொள்ளையிடுகிறார்கள்.
2அவர்கள் பொல்லாப்பையெல்லாம் நான் நினைவில் வைத்திருக்கிறேன் என்று அவர்கள் தங்கள் இருதயத்தில் சிந்திக்கிறதில்லை; இப்போதும் அவர்களுடைய கிரியைகள் அவர்களைச் சூழ்ந்துகொண்டது; அவைகள் என் முகத்துக்கு முன் இருக்கிறது.
3ராஜாவைத் தங்கள் பொல்லாப்பினாலும், அதிபதிகளைத் தங்கள் பொய்களினாலும் சந்தோஷப்படுத்துகிறார்கள்.
4அவர்கள் எல்லாரும் விபசாரக்கள்ளர்; அப்பஞ்சுடுகிறவன் எரிக்கும் அடுப்பைப்போல் இருக்கிறார்கள்; அவன் மாவைப் பிசைந்ததுமுதல் அது உப்பிப்போகுமட்டும், அனலை மூட்டாமல் ஓய்ந்திருக்கிறான்.
5நம்முடைய ராஜாவின் நாளென்று சொல்லி, அதிபதிகள் திராட்சரசத்துருத்திகளால் அவனுக்கு வியாதியுண்டாக்குகிறார்கள்; சரசக்காரரோடேகூட அவன் தன் கையை நீட்டுகிறான்.
6அவர்கள் பதிவிருக்கும்போது, தங்கள் இருதயத்தை அடுப்பைப்போல் ஆயத்தப்படுத்துகிறார்கள்; அவர்களில் அடுப்புமூட்டுகிறவன் இராமுழுதும் தூங்கினாலும், காலமேயோவென்றால் அது ஜூவாலிக்கிற அக்கினியாய் எரியும்.
7அவர்கள் எல்லாரும் அடுப்பைப்போல அனலாகி, தங்கள் நியாயாதிபதிகளைப் பட்சித்தார்கள்; அவர்களுடைய ராஜாக்கள் எல்லாரும் விழுந்தார்கள்; அவர்களில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறவன் ஒருவனும் இல்லை.
8எப்பிராயீம் அந்நியஜனங்களோடே கலந்திருக்கிறான்; எப்பிராயீம் திருப்பிப்போடாத அப்பம்.
9அந்நியர் அவனுடைய பலத்தைத் தின்கிறார்கள்; அவனோ அதை அறியான்; நரைமயிரும் அவனில் தெளித்திருக்கிறது, அவனோ அதை அறியாதிருக்கிறான்.
10இஸ்ரவேலின் அகந்தை அவர்கள் முகத்துக்கு முன்பாகச் சாட்சியிட்டாலும், அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பாமலும், இவை எல்லாவற்றிலும் அவரைத் தேடாமலும் இருக்கிறார்கள்.
11எப்பிராயீம் பேதையான புறாவைப்போல் இருக்கிறான், அவனுக்குப் புத்தியில்லை; எகிப்தியனைக் கூப்பிடுகிறார்கள்; அசீரியனிடத்துக்கும் போகிறார்கள்.
12அவர்கள் போகும்போது, என் வலையை அவர்கள்மேல் வீசுவேன்; அவர்களை ஆகாயத்துப் பறவைகளைப்போல கீழே விழப்பண்ணுவேன்; அவர்களுடைய சபையில் கேள்வியானதின்படியே அவர்களைத் தண்டிப்பேன்.
13அவர்கள் என்னைவிட்டு அலைந்து திரிகிறபடியினால் அவர்களுக்கு ஐயோ! அவர்களுக்குக் கேடுவரும்; எனக்கு விரோதமாக இரண்டகம்பண்ணினார்கள்; நான் அவர்களை மீட்டிருந்தும், அவர்கள் எனக்கு விரோதமாகப் பொய்பேசுகிறார்கள்.
14அவர்கள் தங்கள் படுக்கைகளில் அலறுகிறபோது, தங்கள் இருதயத்தில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறதில்லை; அவர்கள் தானியத்துக்காகவும் திராட்சரசத்துக்காகவும் கூடுகிறார்கள்; என்னை வெறுத்து விலகிப்போகிறார்கள்.
15நான் அவர்களைத் தண்டித்தேன்; அவர்களுடைய புயங்கள் திரும்பப் பலப்படவும்பண்ணினேன்; ஆகிலும் எனக்கு விரோதமாகப் பொல்லாப்பு நினைக்கிறார்கள்.
16திரும்புகிறார்கள், ஆனாலும் உன்னதமானவரிடத்திற்கு அல்ல; மோசம்போக்குகிற வில்லைப்போலிருக்கிறார்கள்; அவர்களுடைய அதிபதிகள் தங்கள் நாவினுடைய உக்கிரத்தினிமித்தம் பட்டயத்தால் விழுவார்கள்; இதுவே எகிப்து தேசத்தினிமித்தம் அவர்களுக்கு வரும் நிந்தை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *