Scripture Portion: Hosea 8-14

ஓசியா 8

1உன் வாயிலே எக்காளத்தை வை; அவர்கள் என் உடன்படிக்கையை மீறி, என் நியாயப்பிரமாணத்துக்கு விரோதமாகத் துரோகம்பண்ணினபடியினால், கர்த்தருடைய வீட்டின்மேல் சத்துரு கழுகைப்போல் பறந்துவருகிறான்.
2எங்கள் தேவனே, உம்மை அறிந்திருக்கிறோம் என்று சொல்லி இஸ்ரவேலர் கூப்பிடுவார்கள்.
3ஆனாலும் இஸ்ரவேலர் நன்மையை வெறுத்தார்கள்; சத்துரு அவர்களைத் தொடருவான்.
4அவர்கள் ராஜாக்களை ஏற்படுத்திக்கொண்டார்கள், ஆனாலும் என்னாலே அல்ல; அதிபதிகளை வைத்துக்கொண்டார்கள், ஆனாலும் நான் அறியேன்; அவர்கள் வேரறுப்புண்டு போகும்படித் தங்கள் வெள்ளியினாலும் தங்கள் பொன்னினாலும் தங்களுக்கு விக்கிரகங்களைச் செய்வித்தார்கள்.
5சமாரியாவே, உன் கன்றுக்குட்டி உன்னை வெறுத்துவிடுகிறது; என் கோபம் அவர்கள்மேல் மூண்டது; எதுவரைக்கும் சுத்தாங்கம் அடையமாட்டாதிருப்பார்கள்?
6அதுவும் இஸ்ரவேலருடைய செய்கையே; தட்டான் அதைச் செய்தான், ஆதலால் அது தேவன் அல்லவே, சமாரியாவின் கன்றுக்குட்டி துண்டுதுண்டாய்ப்போகும்.
7அவர்கள் காற்றை விதைத்து, சூறைக்காற்றை அறுப்பார்கள்; விளைச்சல் அவர்களுக்கு இல்லை; கதிர் மாவைக் கொடுக்கமாட்டாது; கொடுத்தாலும் அந்நியர் அதை விழுங்குவார்கள்.
8இஸ்ரவேலர் விழுங்கப்படுகிறார்கள்; அவர்கள் இனிப் புறஜாதிகளுக்குள்ளே விரும்பப்படாத பாத்திரத்தைப்போல் இருப்பார்கள்.
9அவர்கள் தனித்துத் திரிகிற காட்டுக் கழுதையைப்போல் அசீரியரண்டைக்குப் போனார்கள்; எப்பிராயீமர் நேசரைக் கூலிக்குப் பொருத்திக்கொண்டார்கள்.
10அவர்கள் புறஜாதியாரைக் கூலிக்குப் பொருத்திக்கொண்டாலும், இப்பொழுது நான் அவர்களைக் கூட்டுவேன்; அதிபதிகளின் ராஜா சுமத்தும் சுமையினால் அவர்கள் கொஞ்சகாலத்துக்குள்ளே அகப்படுவார்கள்.
11எப்பிராயீம் பாவஞ்செய்வதற்கேதுவாய் பலிபீடங்களைப் பெருகப்பண்ணினார்கள்; ஆதலால் பலிபீடங்களே அவர்கள் பாவஞ்செய்வதற்கு ஏதுவாகும்.
12என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்.
13எனக்குச் செலுத்தும் பலிகளின் மாம்சத்தை அவர்கள் பலியிட்டுப் புசிக்கிறார்கள்; கர்த்தர் அவர்கள்மேல் பிரியமாயிரார்; அவர்களுடைய அக்கிரமத்தை அவர் நினைத்து, அவர்கள் பாவத்தை விசாரிக்கும்போதோவெனில், அவர்கள் எகிப்துக்குத் திரும்பிப்போவார்கள்.
14இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரை மறந்து கோவில்களைக் கட்டுகிறான்; யூதா அரணான பட்டணங்களைப் பெருகப்பண்ணுகிறான்; ஆனாலும் நான் அதின் நகரங்களில் அக்கினியை வரப்பண்ணுவேன்; அது அவைகளின் கோவில்களைப் பட்சிக்கும்.

ஓசியா 9

1இஸ்ரவேலே, மகிழ்ச்சியாயிராதே; மற்ற ஜனங்களைப்போல் களிகூராதே; உன் தேவனைவிட்டு நீ சோரம்போனாய்; தானியம் போரடிக்கிற சகல களங்களிலும் பணையத்தை நாடுகிறாய்.
2தானியக்களமும் திராட்சத்தொட்டியும் அவர்களைப் பிழைப்பூட்டுவதில்லை; அவர்களுக்குத் திராட்சரசம் ஒழிந்துபோகும்.
3அவர்கள் கர்த்தருடைய தேசத்தில் குடியிருப்பதில்லை; எப்பிராயீமர் திரும்ப எகிப்துக்குப் போவார்கள்; அசீரியாவில் தீட்டுள்ளதைப் புசிப்பார்கள்.
4அவர்கள் கர்த்தருக்குத் திராட்சரசத்தின் பானபலியை வார்ப்பதுமில்லை, அவருக்கு அங்கிகரிப்பாயிருப்பதுமில்லை; அவர்களுடைய பலிகள் அவர்களுக்குத் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைபோல இருக்கும்; அதைப் புசிக்கிற யாவரும் தீட்டுப்படுவார்கள்; அவர்களுடைய அப்பம் அவர்களுக்கேயாகும், அது கர்த்தருடைய ஆலயத்தில் வருவதில்லை.
5ஆசரிப்பு நாளிலும், கர்த்தருடைய பண்டிகைநாளிலும் என்ன செய்வீர்கள்?
6இதோ, அவர்கள் பாழ்க்கடிப்புக்குத் தப்பும்படி போய்விட்டார்கள்; எகிப்து அவர்களைச் சேர்த்துக்கொள்ளும், மோப் பட்டணம் அவர்களை அடக்கம்பண்ணும்; அவர்களுடைய வெள்ளியிருந்த விருப்பமான இடங்கள் காஞ்சொறிகளுக்குச் சுதந்தரமாகும்; அவர்களுடைய வாசஸ்தலங்களில் முட்செடிகள் முளைக்கும்.
7விசாரிப்பின் நாட்கள் வரும், நீதி சரிக்கட்டும் நாட்கள் வரும் என்பதை இஸ்ரவேலர் அறிந்துகொள்வார்கள்; உன் மிகுதியான அக்கிரமத்தினாலேயும், மிகுதியான பகையினாலேயும் தீர்க்கதரிசிகள் மூடரும், ஆவியைப் பெற்ற மனுஷர்கள் பித்தங்கொண்டவர்களுமாயிருக்கிறார்கள்.
8எப்பிராயீமின் காவற்காரர் என் தேவனோடு எதிர்த்து நிற்கிறார்கள்; தீர்க்கதரிசி தன் வழிகளிலெல்லாம் குருவிபிடிக்கிறவனுடைய கண்ணியாகவும், தன் தேவனுடைய ஆலயத்திலே பகையாளியாகவும் இருக்கிறான்.
9கிபியாவின் நாட்களில் நடந்தது போல, அவர்கள் தங்களை மிகவும் கெடுத்துக்கொண்டார்கள்; அவர்களுடைய அக்கிரமத்தை அவர் நினைப்பார், அவர்களுடைய பாவங்களை விசாரிப்பார்.
10வனாந்தரத்தில் திராட்சக்குலைகளைக் கண்டுபிடிப்பதுபோல இஸ்ரவேலைக் கண்டுபிடித்தேன்; அத்திமரத்தில் முதல் தரம் பழுத்த கனிகளைப்போல உங்கள் பிதாக்களைக் கண்டுபிடித்தேன்; ஆனாலும் அவர்கள் பாகால்பேயோர் அண்டைக்குப்போய், இலச்சையானதற்குத் தங்களை ஒப்புவித்து, தாங்கள் நேசித்தவைகளைப்போலத் தாங்களும் அருவருப்புள்ளவர்களானார்கள்.
11எப்பிராயீமின் மகிமை ஒரு பறவையைப்போல் பறந்துபோகும்; அது பிறப்பதுமில்லை, வயிற்றிலிருப்பதுமில்லை, கர்ப்பந்தரிப்பதுமில்லை.
12அவர்கள் தங்கள் பிள்ளைகளை வளர்த்தாலும், அவர்களுக்கு மனுஷர் இராதபடிக்கு அவர்களைப் பிள்ளைகள் அற்றவர்களாக்குவேன்; நான் அவர்களை விட்டுப்போகையில் அவர்களுக்கு ஐயோ!
13நான் எப்பிராயீமைத் தீருவின் திசைமட்டும் இருக்கிறதைப் பார்க்கிறபோது, அது நல்ல வசதியான ஸ்தலத்திலே நாட்டப்பட்டிருக்கிறது; ஆனாலும் எப்பிராயீமர் தங்கள் குமாரரைக் கொலை செய்கிறவனிடத்தில் வெளியே கொண்டுபோய்விடுவார்கள்.
14கர்த்தாவே, நீர் அவர்களுக்குக் கொடுப்பதைக் கொடும்; அவர்களுக்கு விழுந்துபோகிற கர்ப்பத்தையும் பாலற்ற முலைகளையும் கொடும்.
15அவர்களுடைய பொல்லாப்பெல்லாம் கில்காலிலே நடக்கும்; அங்கே நான் அவர்களை வெறுத்தேன்; அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களை நான் என் சமுகத்தைவிட்டுத் துரத்துவேன்; இனி அவர்களை நேசிக்கமாட்டேன்; அவர்களுடைய அதிபதிகள் எல்லாரும் துரோகிகள்.
16எப்பிராயீமர் வெட்டுண்டுபோனார்கள்; அவர்கள் வேர் உலர்ந்துபோயிற்று, கனிகொடுக்கமாட்டார்கள்; அவர்கள் பிள்ளைகளைப் பெற்றாலும், அவர்களுடைய கர்ப்பத்தின் பிரியமான கனிகளை அதம் பண்ணுவேன்.
17அவர்கள் அவருக்குச் செவிகொடாமற்போனபடியால் என் தேவன் அவர்களை வெறுத்துவிடுவார்; அவர்கள் அந்நிய ஜாதிகளுக்குள்ளே அலைந்து திரிவார்கள்.

ஓசியா 10

1இஸ்ரவேல் பலனற்ற திராட்சச்செடி, அது தனக்குத்தானே கனிகொடுக்கிறது; அவன் தன் கனியின் திரளுக்குச் சரியாய்ப் பலிபீடங்களைத் திரளாக்குகிறான்; தங்கள் தேசத்தின் செழிப்புக்குச் சரியாய்ச் சிறப்பான சிலைகளைச் செய்கிறார்கள்.
2அவர்கள் இருதயம் பிரிக்கப்பட்டிருக்கிறது; இப்போதும் குற்றஞ்சுமத்தப்படுவார்கள்; அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளை நாசமாக்குவார்.
3நாம் கர்த்தருக்குப் பயப்படாமற் போனபடியினால் நமக்கு ராஜா இல்லை; ராஜா இருந்தாலும் நமக்காக என்ன செய்வான் என்று இனிச் சொல்லுவார்கள்.
4பொய்யாணையிடுகிற வார்த்தைகளைச் சொல்லி, உடன்படிக்கைபண்ணிக்கொண்டார்கள்; ஆகையால் வயல்வெளியின் படைச்சால்களில் விஷப்பூண்டுகளைப்போல நியாயத்தீர்ப்பு முளைக்கும்.
5சமாரியாவின் குடிகள் பெத்தாவேனிலுள்ள கன்றுக்குட்டியினிமித்தம் பயம் அடைவார்கள்; அதற்காகக் களிகூர்ந்த அதின் ஜனமும், அதின் பூசாசாரிகளும் அதின் மகிமை அதைவிட்டு நீங்கிப்போயிற்றென்று அதற்காகத் துக்கங்கொண்டாடுவார்கள்.
6அதுவும் அசீரியாவிலே யாரேப் ராஜாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுபோகப்படும்; எப்பிராயீம் இலச்சையடைவான்; இஸ்ரவேல் தன் ஆலோசனையினாலே வெட்கப்படுவான்.
7சமாரியாவின் ராஜா தண்ணீரின்மேல் இருக்கிற நுரையைப்போல் அழிந்துபோவான்.
8இஸ்ரவேலுடைய பாவமாகிய ஆபேனின் மேடைகள் அழிக்கப்படும்; முட்செடிகளும் முட்பூண்டுகளும் அவர்கள் பலிபீடங்களின்மேல் முளைக்கும்; பர்வதங்களைப்பார்த்து எங்களை மூடுங்கள் என்றும், குன்றுகளைப்பார்த்து எங்கள்மேல் விழுங்கள் என்றும் சொல்லுவார்கள்.
9இஸ்ரவேலே, நீ கிபியாவின் நாட்கள் முதல் பாவஞ்செய்துவந்தாய்; கிபியாவிலே அக்கிரமக்காரர்மேல் வந்த யுத்தம் தங்களைக் கிட்டுவதில்லையென்று அந்த நிலையிலே நிற்கிறார்கள்.
10நான் அவர்களைத் தண்டிக்க விரும்புகிறேன்; அவர்கள் செய்த இரண்டுவித பாவங்களினிமித்தம் கட்டப்படும்போது, ஜனங்கள் அவர்களுக்கு விரோதமாய்க் கூடுவார்கள்.
11எப்பிராயீம் நன்றாய்ப் பழக்கப்பட்டுப் போரடிக்க விரும்புகிற கடாரியாயிருக்கிறான்; ஆனாலும் நான் அவன் அழகான கழுத்தின்மேல் நுகத்தடியை வைப்பேன்; எப்பிராயீமை ஏர் பூட்டி ஓட்டுவேன்; யூதா உழுவான், யாக்கோபு அவனுக்குப் பரம்படிப்பான்.
12நீங்கள் நீதிக்கென்று விதைவிதையுங்கள்; தயவுக்கொத்ததாய் அறுப்பு அறுங்கள்; உங்கள் தரிசுநிலத்தைப் பண்படுத்துங்கள்; கர்த்தர் வந்து உங்கள்மேல் நீதியை வருஷிக்கப்பண்ணுமட்டும், அவரைத் தேடக் காலமாயிருக்கிறது.
13அநியாயத்தை உழுதீர்கள், தீவினையை அறுத்தீர்கள்; பொய்யின் கனிகளைப் புசித்தீர்கள்; உங்கள் வழியையும் உங்கள் பராக்கிரமசாலிகளின் திரளையும் நம்பினீர்கள்.
14ஆகையால் உங்கள் ஜனங்களுக்குள் அமளி எழும்பும்; பிள்ளைகளின்மேல் தாய் மோதியடிக்கப்பட்ட யுத்தநாளிலே பெத்தார்பேலைச் சல்மான் அழித்ததுபோல, உங்கள் எல்லா அரண்களும் அழிக்கப்படும்.
15உங்கள் கொடிய பொல்லாப்பினால் பெத்தேல் இப்படிப்பட்டதை உங்களுக்குச் செய்யும்; அதிகாலமே இஸ்ரவேலின் ராஜா முற்றிலும் சங்கரிக்கப்படுவான்.

ஓசியா 11

1இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்.
2அவர்கள் தங்களை அழைக்கிறவர்களின் முகத்துக்கு விலகிப்போய்விட்டார்கள்; பாகால்களுக்குப் பலியிட்டு, விக்கிரகங்களுக்குத் தூபங்காட்டினார்கள்.
3நான் எப்பிராயீமைக் கைபிடித்து நடக்கப் பழக்கினேன்; ஆனாலும் நான் தங்களைக் குணமாக்குகிறவரென்று அறியாமற்போனார்கள்.
4மனுஷரைக் கட்டி இழுக்கிற அன்பின் கயிறுகளால் நான் அவர்களை இழுத்தேன், அவர்கள் கழுத்துகளின்மேல் இருந்த நுகத்தடியை எடுத்துப் போடுகிறவரைப்போல் இருந்து, அவர்கள் பட்சம் சாய்ந்து, அவர்களுக்கு ஆகாரங்கொடுத்தேன்.
5மனந்திரும்பமாட்டோ மென்றதினால் அவர்கள் எகிப்து தேசத்துக்குத் திரும்பிப்போவதில்லை; அசீரியன் அவர்களுக்கு ராஜா.
6ஆகையால் அவர்களுடைய ஆலோசனைகளினிமித்தம் பட்டயம் அவர்கள் பட்டணங்களுக்குள் பாய்ந்து, அவர்கள் தாழ்ப்பாள்களை நிர்மூலம்பண்ணி, அவர்களைப் பட்சிக்கும்.
7என் ஜனங்கள் என்னைவிட்டு விலகுகிற மாறுபாட்டைப் பற்றிக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களை உன்னதமானவரிடத்தில் வரவழைத்தாலும் ஒருவனும் எழும்புகிறதில்லை.
8எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான் உன்னை எப்படி அத்மாவைப்போலாக்குவேன்? உன்னை எப்படி செபோயீமைப்போல வைப்பேன்? என் இருதயம் எனக்குள் குழம்புகிறது; என் பரிதாபங்கள் ஏகமாய்ப் பொங்குகிறது.
9என் உக்கிர கோபத்தின்படியே செய்யமாட்டேன்; எப்பிராயீமை அழிக்கும்படித் திரும்பமாட்டேன்; ஏனென்றால் நான் மனுஷனல்ல, தேவனாயிருக்கிறேன்; நான் உன் நடுவிலுள்ள பரிசுத்தர்; ஆகையால் பட்டணத்துக்கு விரோதமாகவரேன்.
10அவர்கள் கர்த்தரைப் பின்பற்றுவார்கள்; அவர் சிங்கத்தைப்போல் கெர்ச்சிப்பார்; அவர் கெர்ச்சிக்கும்போது அவர்கள் சந்ததியார் மேற்குத்திசையிலிருந்து நடுங்கி வருவார்கள்.
11எகிப்திலிருந்து குருவிகளைப்போலவும், அசீரியா தேசத்திலிருந்து புறாக்களைப்போலவும் பயந்து வருவார்கள்; அப்பொழுது அவர்களை அவர்கள் வீடுகளில் குடியிருக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
12எப்பிராயீமர் பொய்களினாலும், இஸ்ரவேல் வம்சத்தார் வஞ்சகத்தினாலும் என்னைச் சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள்; யூதாவோவெனில் இன்னும் தேவனோடே அரசாண்டு, பரிசுத்தவான்களோடே உண்மையாயிருக்கிறான்.

ஓசியா 12

1எப்பிராயீம் காற்றை மேய்ந்து, கொண்டற்காற்றைப் பின்தொடருகிறான்; அவன் நாள்தோறும் பொய்யையும் கேட்டையும் வர்த்திக்கப்பண்ணி, அசீரியரோடே உடன்படிக்கைபண்ணுகிறான்; எகிப்துக்கு எண்ணெய் கொண்டுபோகப்படுகிறது.
2யூதாவோடும் கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; அவர் யாக்கோபை அவன் வழிகளுக்குத்தக்கதாக விசாரிக்கப்போகிறார்; அவன் கிரியைகளுக்குத்தக்கதாக அவனுக்கு நீதியைச் சரிக்கட்டுவார்.
3அவன் தாயின் கர்ப்பத்திலே தன் சகோதரனுடைய குதிகாலைப் பிடித்தான்; தன் பெலத்தினால் தேவனோடே போராடினான்.
4அவன் தூதனானவரோடே போராடி மேற்கொண்டான், அழுது அவரை நோக்கிக் கெஞ்சினான்; பெத்தேலிலே அவர் அவனைக் கண்டு சந்தித்து, அவ்விடத்திலும் நம்மோடே பேசினார்.
5கர்த்தராகிய அவர் சேனைகளின் தேவன்; யேகோவா என்பது அவருடைய நாமசங்கீர்த்தனம்.
6இப்போதும் நீ உன் தேவனிடத்தில் திரும்பு; தயவையும் நியாயத்தையும் கைக்கொண்டு, இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு.
7அவன் வியாபாரி, கள்ளத்தராசு அவன் கையில் இருக்கிறது; அநியாயஞ்செய்ய விரும்புகிறான்.
8எப்பிராயீம்: நான் ஐசுவரியவானானேன்; நான் பொருளைச் சம்பாதித்தேன்; நான் பிரயாசப்பட்டுத் தேடின எல்லாவற்றிலும் பாவமாகிய அக்கிரமம் என்னிடத்தில் கண்டுபிடிக்கப்படுவதில்லையென்று சொல்லுகிறான்.
9உன்னை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவந்தது முதற்கொண்டு உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான், பண்டிகை நாட்களில் செய்யப்படுகிறதுபோல், திரும்பவும் உன்னைக் கூடாரங்களில் தாபரிக்கப்பண்ணுவேன்.
10அப்படியே தீர்க்கதரிசிகளோடே சொன்னேன்; நான் அநேகம் தரிசனங்களை அருளினேன்; தீர்க்கதரிசிகளைக் கொண்டு உவமைகளால் பேசினேன்.
11கீலேயாத் அக்கிரம ஸ்தலமோ? ஆம், அவர்கள் அபத்தரானார்கள்; கில்காலிலே காளைகளைப் பலியிடுகிறார்கள்; அவர்களுடைய பீடங்கள் வயல்வரப்புகளில் இருக்கிற கற்குவியல்களைப்போல் இருக்கிறது.
12யாக்கோபு சீரியா தேசத்துக்கு ஓடிப்போய், இஸ்ரவேல் ஒரு பெண்ணுக்காக ஊழியஞ்செய்து, ஒரு பெண்ணுக்காக ஆடு மேய்த்தான்.
13கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியைக் கொண்டு இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; தீர்க்கதரிசியினால் காக்கப்பட்டான்.
14எப்பிராயீமோ அவரை மிகவும் கோபப்படுத்தினான்; ஆகையால் அவனுடைய ஆண்டவர் அவனுடைய இரத்தப்பழிகளை அவன்மேல் சுமத்தி, அவன் செய்த நிந்தையை அவன்மேல் திருப்புவார்.

ஓசியா 13

1எப்பிராயீம் பேசினபோது நடுக்கமுண்டாயிற்று; அவன் இஸ்ரவேலிலே மேன்மைபெற்றான்; அவன் பாகால் விஷயத்தில் குற்றஞ்செய்து மடிந்துபோனான்.
2இப்போதும் அவர்கள் அதிகமதிகமாய்ப் பாவஞ்செய்து, தங்கள் வெள்ளியினால் வார்ப்பித்த சுரூபங்களையும், தங்கள் புத்திக்கேற்க விக்கிரகங்களையும் தங்களுக்கு உண்டுபண்ணுகிறார்கள்; இவைகளெல்லாம் தட்டாருடைய வேலை; மனுஷரில் பலியிடுகிறவர்கள் கன்றுக்குட்டிகளை முத்தமிடலாமென்று இவைகளைக்குறித்துச் சொல்லுகிறார்கள்.
3ஆகையால் அவர்கள் காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் ஒழிந்துபோகிற பனியைப்போலவும், பெருங்காற்று களத்திலிருந்து பறக்கடிக்கிற பதரைப்போலவும், புகைக்கூண்டில் ஏறிப்போகிற புகையைப்போலவும் இருப்பார்கள்.
4நான் உன்னை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவந்ததுமுதல் உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிறேன்; ஆகையால் நீ என்னையன்றி வேறே தேவனை அறியவேண்டாம்; என்னையன்றி இரட்சகர் ஒருவரும் இல்லை.
5நான் உன்னை மகா வறட்சியான தேசமாகிய வனாந்தரத்திலே அறிந்துகொண்டேன்.
6தங்களுக்கு இருந்த மேய்ச்சலினால் திருப்தியானார்கள்; திருப்தியானபின்பு அவர்கள் இருதயம் மேட்டிமையாயிற்று; அதினால் என்னை மறந்தார்கள்.
7ஆகையால் நான் அவர்களுக்குச் சிங்கத்தைப்போல் இருப்பேன்; சிவிங்கியைப்போல் வழியருகே பதிவிருப்பேன்.
8குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல நான் அவர்களை எதிர்த்து, அவர்கள் ஈரற்குலையைக் கிழித்து, அவர்களை அங்கே சிங்கம் பட்சிக்கிறதுபோல் பட்சித்துப்போடுவேன்; காட்டுமிருகங்கள் அவர்களைப் பீறிப்போடும்.
9இஸ்ரவேலே, நீ உனக்குக் கேடுண்டாக்கிக்கொண்டாய்; ஆனாலும் என்னிடத்தில் உனக்குச் சகாயம் உண்டு.
10எனக்கு ராஜாவையும் அதிபதிகளையும் ஏற்படுத்தவேண்டும் என்றாயே; இப்போதும் உன்னுடைய எல்லாப் பட்டணங்களிலும் உன்னை இரட்சிக்கும் ராஜா எங்கே? உன் நியாயாதிபதிகள் எங்கே?
11நான் கோபத்திலே உனக்கு ராஜாவைக் கொடுத்தேன்; என் உக்கிரத்திலே அவனை எடுத்துக்கொண்டேன்.
12எப்பிராயீமின் அக்கிரமம் கட்டிவைத்திருக்கிறது; அவன் பாவம் பத்திரப்படுத்தப்பட்டிருக்கிறது.
13பிரசவஸ்திரீயின் வேதனை அவனுக்கு வரும்; அவன் விவேகமில்லாத பிள்ளை; பேறுகாலமட்டும் அவன் நிற்கவில்லை.
14அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்துக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் சங்காரம் எங்கே? மனமாறுதல் என் கண்களுக்கு மறைவானதாயிருக்கும்.
15இவன் சகோதரருக்குள்ளே ஜனம் பெருத்தவனாயிருந்தாலும், கர்த்தருடைய காற்றாகிய கீழ்க்காற்று வனாந்தரத்திலிருந்து எழும்பிவரும்; அதனால் அவனுடைய ஊற்றுகள் வற்றிப்போகும்; அவனுடைய துரவு சுவறிப்போகும்; அது இச்சிக்கப்படத்தக்க சகல பதார்த்தங்களுள்ள உத்தம பதார்த்தங்களையும் வாரிக்கொண்டுபோகும்.
16சமாரியா தன் தேவனுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினபடியால், குற்றஞ் சுமத்தப்பட்டதாயிருக்கும்; அவர்கள் பட்டயத்தால் விழுவார்கள்; அவர்களுடைய குழந்தைகள் மோதியடிக்கப்படும்; அவர்களுடைய கர்ப்பவதிகள் கீறப்பட்டுப்போவார்கள்.

ஓசியா 14

1இஸ்ரவேலே, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு; நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய்.
2வார்த்தைகளைக்கொண்டு கர்த்தரிடத்தில் திரும்புங்கள்; அவரை நோக்கி: தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாய் அங்கீகரித்தருளும்; அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் காளைகளைச் செலுத்துவோம்.
3அசீரியா எங்களை இரட்சிப்பதில்லை; நாங்கள் குதிரைகளின்மேல் ஏறமாட்டோம்; எங்கள் கைகளின் கிரியையைப்பார்த்து: நீங்கள் எங்கள் தேவர்கள் என்று இனிச் சொல்லமாட்டோம்; திக்கற்றவன் உம்மிடத்தில் இரக்கம்பெறுகிறான் என்று சொல்லுங்கள்.
4நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்; அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்; என் கோபம் அவர்களை விட்டு நீங்கிற்று.
5நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போலிருப்பேன்; அவன் லீலிப் புஷ்பத்தைப்போல் மலருவான்; லீபனோனைப்போல் வேரூன்றி நிற்பான்.
6அவன் கிளைகள் ஓங்கிப் படரும், அவன் அலங்காரம் ஒலிவமரத்தினுடைய அலங்காரத்தைப்போலவும், அவனுடைய வாசனை லீபனோனுடைய வாசனையைப்போலவும் இருக்கும்.
7அவன் நிழலில் குடியிருக்கிறவர்கள் திரும்புவார்கள்; தானிய விளைச்சலைப்போலச் செழித்து, திராட்சச்செடிகளைப்போலப் படருவார்கள்; அவன் வாசனை லீபனோனுடைய திராட்சரசத்தின் வாசனையைப்போல இருக்கும்.
8இனி எனக்கும் விக்கிரகங்களுக்கும் என்ன என்று எப்பிராயீம் சொல்லுவான்; நான் அவனுக்குச் செவிகொடுத்து, அவன்மேல் நோக்கமாயிருந்தேன்; நான் பச்சையான தேவதாரு விருட்சம் போலிருக்கிறேன்; என்னாலே உன் கனியுண்டாயிற்று என்று எப்பிராயீம் சொல்லுவான்.
9இவைகளை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? இவைகளைக் கிரகிக்கத்தக்க புத்தியுள்ளவன் யார்? கர்த்தருடைய வழிகள் செம்மையானவைகள், நீதிமான்கள் அவைகளில் நடப்பார்கள்; பாதகரோவென்றால் அவைகளில் இடறிவிழுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேவனுக்கு தூரமாகி விட்டேனா?

Am I away from God?

வாழும் சாட்சிகள்

Testimonies of God’s People

விடுதலை

ஆபாச பட அடிமைத்தனம்

இஸ்ரேல் – ஆய்வு கட்டுரை

(வேதாகம கால முதல் தற்போது வரை)

வேதாகம பண்டிகைகள்

(யூதர்களின் பண்டிகைகள்)

விசுவாச அறிக்கை

(தினமும் ஜெபிக்க சில அறிக்கைகள்)

நன்றியுடன் 21 நாட்கள்

December 2023

ஒரு வருட வேதாகம வாசிப்பு திட்டம்

2025 Chronological Bible Reading Plan