Scripture Portion: Isaiah 28-30

ஏசாயா 28

1எப்பிராயீமுடைய வெறியரின் பெருமையான கிரீடத்துக்கு ஐயோ, மதுபானத்தால் மயக்கமடைந்தவர்களின் செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பு வாடிப்போகும் புஷ்பமே!
2இதோ, திராணியும் வல்லமையுமுடைய ஒருவன் ஆண்டவரிடத்தில் இருக்கிறான்; அவன் கல்மழைபோலவும், சங்காரப் புசல்போலவும், புரண்டுவருகிற பெருவெள்ளம்போலவும் வந்து, கையினாலே அதைத் தரையில் தள்ளிவிடுவான்.
3எப்பிராயீமுடைய வெறியரின் பெருமையான கிரீடம் காலால் மிதித்துப்போடப்படும்.
4செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பாகிய வாடிய புஷ்பம், பருவகாலத்துக்குமுன் பழுத்ததும், காண்கிறவன் பார்த்து, அது தன் கையில் இருக்கும்போதே விழுங்குகிறதுமான முதல் கனியைப்போல இருக்கும்.
5அக்காலத்திலே சேனைகளின் கர்த்தர் தமது ஜனத்தில் மீதியானவர்களுக்கு மகிமையான கிரீடமாகவும், அலங்காரமான முடியாகவும்,
6நியாயம் விசாரிக்க உட்காருகிறவனுக்கு நியாயத்தின் ஆவியாகவும், யுத்தத்தை அதின் வாசல்மட்டும் திருப்புகிறவர்களின் பராக்கிரமமாகவும் இருப்பார்.
7ஆனாலும் இவர்களும் திராட்சரசத்தால் மயங்கி, மதுபானத்தால் வழிதப்பிப்போகிறார்கள்; ஆசாரியனும் தீர்க்கதரிசியும் மதுபானத்தால் மதிமயங்கி, திராட்சரசத்தால் விழுங்கப்பட்டு, சாராயத்தினால் வழிதப்பி, தீர்க்கதரிசனத்தில் மோசம்போய், நியாயந்தீர்க்கிறதில் இடறுகிறார்கள்.
8போஜனபீடங்களெல்லாம் வாந்தியினாலும் அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கிறது; சுத்தமான இடமில்லை.
9அவர் யாருக்கு அறிவைப் போதிப்பார்? யாருக்கு உபதேசத்தை உணர்த்துவார்? பால்மறந்தவர்களுக்கும், முலை மறக்கப்பண்ணப்பட்டவர்களுக்குமே.
10கற்பனையின்மேல் கற்பனையும் கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாம் என்கிறார்கள்.
11பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார்.
12இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப்பண்ணத்தக்க இளைப்பாறுதல்; இதுவே ஆறுதல் என்று அவர்களோடே அவர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிறார்கள்.
13ஆதலால் அவர்கள் போய், பின்னிட்டு விழுந்து, நொறுங்கும்படிக்கும், சிக்குண்டு பிடிபடும்படிக்கும், கர்த்தருடைய வார்த்தை அவர்களுக்குக் கற்பனையின்மேல் கற்பனையும், கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக இருக்கும்.
14ஆகையால் எருசலேமிலுள்ள இந்த ஜனத்தை ஆளுகிற நிந்தனைக்காரரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
15நீங்கள்: மரணத்தோடே உடன்படிக்கையையும், பாதாளத்தோடே ஒப்பந்தமும் பண்ணினோம்; வாதை பெருவெள்ளமாய்ப் புரண்டுவந்தாலும் எங்களை அணுகாது; நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோம் என்கிறீர்களே.
16ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும், விசுவாசிக்கிறவன் பதறான்.
17நான் நியாயத்தை நூலும், நீதியைத் தூக்கு நூலுமாக வைப்பேன்; பொய் என்னும் அடைக்கலத்தைக் கல்மழை அழித்துவிடும்; மறைவிடத்தை ஜலப்பிரவாகம் அடித்துக்கொண்டுபோகும்.
18நீங்கள் மரணத்தோடு செய்த உடன்படிக்கை விருதாவாகி, நீங்கள் பாதாளத்தோடு செய்த ஒப்பந்தம் நிற்காதேபோகும்; வாதை புரண்டுவரும்போது அதின்கீழ் மிதிக்கப்படுவீர்கள்.
19அது புரண்டுவந்தமாத்திரத்தில் உங்களை அடித்துக்கொண்டுபோகும்; அது நாள்தோறும் இரவும்பகலும் புரண்டுவரும்; அதைப்பற்றிப் பிறக்குஞ்செய்தியைக் கேட்பதும் சஞ்சலத்தை உண்டாக்கும்.
20கால் நீட்டப் படுக்கையின் நீளம்போதாது; மூடிக்கொள்ளப் போர்வையின் அகலமும் போதாது.
21கர்த்தர் தமது கிரியையாகிய அபூர்வமான கிரியையைச் செய்யவும், தமது வேலையாகிய அபூர்வமான வேலையை நிறைவேற்றவும், அவர் பெராத்சீம் மலையிலே எழும்பினதுபோல எழும்பி, கிபியோனின் பள்ளத்தாக்கில் கோபங்கொண்டதுபோல கோபங்கொள்வார்.
22இப்பொழுதும் உங்கள் கட்டுகள் பலத்துப்போகாதபடிக்குப் பரியாசம்பண்ணாதிருங்கள்; தேசம் அனைத்தின்மேலும் நிர்ணயிக்கப்பட்ட சங்காரத்தின் செய்தியைச் சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவராலே கேள்விப்பட்டிருக்கிறேன்.
23செவிகொடுத்து என் சத்தத்தைக் கேளுங்கள்; நான் சொல்வதைக் கவனித்துக் கேளுங்கள்.
24உழுகிறவன் விதைக்கிறதற்காக நாள்தோறும் உழுகிறதுண்டோ? தன் நிலத்தைக் கொத்தி நாள்தோறும் பரம்படிக்கிறது உண்டோ?
25அவன் அதை மேலாக நிரவினபின்பு, அதற்கேற்ற இடத்தில் உளுந்தைத் தெளித்து, சீரகத்தைத் தூவி, முதல்தரமான கோதுமையையும் தெரிந்துகொண்ட வாற்கோதுமையையும் கம்பையும் விதைக்கிறான் அல்லவோ?
26அவனுடைய தேவன் அவனை நன்றாய்ப் போதித்து, அவனை உணர்த்துகிறார்.
27உளுந்து தூலத்தாலே போரடிக்கப்படுகிறதில்லை; சீரகத்தின்மேல் வண்டிலின் உருளை சுற்ற விடப்படுகிறதுமில்லை; உளுந்து கோலினாலும் சீரகம் மிலாற்றினாலும் அடிக்கப்படும்.
28அப்பத்துக்குத் தானியம் இடிக்கப்படும்; இடைவிடாமல் அவன் அதைப் போரடிக்கிறதில்லை; அவன் தன் வண்டிலின் உருளையால் அதை நசுக்குகிறதுமில்லை, தன் குதிரைகளால் அதை நொறுக்குகிறதுமில்லை.
29இதுவும் சேனைகளின் கர்த்தராலே உண்டாகிறது; அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர்.

ஏசாயா 29

1தாவீது வாசம்பண்ணின நகரமாகிய அரியேலே, அரியேலே, ஐயோ! வருஷாவருஷம் பண்டிகைகளை அனுசரித்துவந்தாலும்,
2அரியேலுக்கு இடுக்கம் உண்டாக்குவேன்; அப்பொழுது துக்கமும் சலிப்பும் உண்டாகும்; அது எனக்கு அரியேலாகத்தான் இருக்கும்.
3உன்னைச் சூழப் பாளயமிறங்கி, உன்னைத் தெற்றுகளால் முற்றிக்கைபோட்டு, உனக்கு விரோதமாகக் கொத்தளங்களை எடுப்பிப்பேன்.
4அப்பொழுது நீ தாழ்த்தப்பட்டுத் தரையிலிருந்து பேசுவாய்; உன் பேச்சுப் பணிந்ததாய் மண்ணிலிருந்து புறப்பட்டு, உன் சத்தம் அஞ்சனம்பார்க்கிறவனுடைய சத்தத்தைப்போல் தரையிலிருந்து முணுமுணுத்து, உன் வாக்கு மண்ணிலிருந்து கசுகுசென்று உரைக்கும்.
5உன்மேல் வருகிற அந்நியரின் திரள் பொடித்தூளத்தனையாகவும், பலவந்தரின் திரள் பறக்கும் பதர்களத்தனையாகவும் இருக்கும்; அது திடீரென்று சடிதியாய்ச் சம்பவிக்கும்.
6இடிகளினாலும், பூமி அதிர்ச்சியினாலும், பெரிய இரைச்சலினாலும், பெருங்காற்றினாலும், புசலினாலும், பட்சிக்கிற அக்கினிஜூவாலையினாலும், சேனைகளின் கர்த்தராலே விசாரிக்கப்படுவாய்.
7அரியேலின்மேல் யுத்தம்பண்ணுகிற திரளான சகல ஜாதிகளும், அதின்மேலும் அதின் அரண்மேலும் யுத்தம்பண்ணி, அதற்கு இடுக்கண் செய்கிற அனைவரும், இராக்காலத்தரிசனமாகிய சொப்பனத்தைக் காண்கிறவர்களுக்கு ஒப்பாயிருப்பார்கள்.
8அது, பசியாயிருக்கிறவன் தான் புசிக்கிறதாகச் சொப்பனம் கண்டும், விழிக்கும்போது அவன் வெறுமையாயிருக்கிறதுபோலவும், தாகமாயிருக்கிறவன், தான் குடிக்கிறதாகச் சொப்பனம் கண்டும், விழிக்கும்போது அவன் விடாய்த்து தவனத்தோடிருக்கிறதுபோலவும் சீயோன் மலைக்கு விரோதமாக யுத்தம்பண்ணுகிற திரளான சகல ஜாதிகளும் இருக்கும்.
9தரித்துநின்று திகையுங்கள்; பிரமித்துக் கூப்பிடுங்கள்; வெறித்திருக்கிறார்கள், திராட்சரசத்தினால் அல்ல; தள்ளாடுகிறார்கள், மதுபானத்தினால் அல்ல.
10கர்த்தர் உங்கள்மேல் கனநித்திரையின் ஆவியை வரப்பண்ணி, உங்கள் கண்களை அடைத்து, ஞானதிருஷ்டிக்காரராகிய உங்கள் தீர்க்கதரிசிகளுக்கும் தலைவர்களுக்கும் முக்காடு போட்டார்.
11ஆதலால் தரிசனமெல்லாம் உங்களுக்கு முத்திரிக்கப்பட்ட புஸ்தகத்தின் வசனங்களைப்போலிருக்கும்; வாசிக்க அறிந்திருக்கிற ஒருவனுக்கு அதைக் கொடுத்து; நீ இதை வாசி என்றால், அவன்: இது என்னால் கூடாது, இது முத்திரித்திருக்கிறது என்பான்.
12அல்லது வாசிக்கத் தெரியாதவனிடத்தில் புஸ்தகத்தைக் கொடுத்து; நீ இதை வாசி என்றால், அவன்: எனக்கு வாசிக்கத் தெரியாது என்பான்.
13இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.
14ஆதலால் இதோ, நான் அற்புதமும் ஆச்சரியமுமான பிரகாரமாக இந்த ஜனங்களுக்குள்ளே ஒரு அதிசயத்தைச் செய்வேன்; அவர்களுடைய ஞானிகளின் ஞானம் கெட்டு, அவர்களுடைய விவேகிகளின் விவேகம் மறைந்துபோகும் என்று ஆண்டவர் சொல்லுகிறார்.
15தங்கள் ஆலோசனையைக் கர்த்தருக்கு மறைக்கும்படிக்கு மறைவிடங்களில் ஒளித்து, தங்கள் கிரியைகளை அந்தகாரத்தில் நடப்பித்து: நம்மைக் காண்கிறவர் யார்? நம்மை அறிகிறவர் யார்? என்கிறவர்களுக்கு ஐயோ!
16ஆ, நீங்கள் எவ்வளவு மாறுபாடுள்ளவர்கள்! குயவன் களிமண்ணுக்குச் சமானமாக எண்ணப்படலாமோ? உண்டாக்கப்பட்டது தன்னை உண்டாக்கினவரைக்குறித்து: அவர் என்னை உண்டாக்கினதில்லை என்றும்; உருவாக்கப்பட்டது தன்னை உருவாக்கினவரைக்குறித்து: அவருக்குப் புத்தியில்லையென்றும் சொல்லத்தகுமோ?
17இன்னும் கொஞ்சக்காலத்திலல்லவோ லீபனோன் செழிப்பான வயல்வெளியாக மாறும்; செழிப்பான வயல்வெளி காடாக எண்ணப்படும்.
18அக்காலத்திலே செவிடர் புஸ்தகத்தின் வசனங்களைக் கேட்பார்கள்; குருடரின் கண்கள் இருளுக்கும் அந்தகாரத்துக்கும் நீங்கலாகிப் பார்வையடையும்.
19சிறுமையானவர்கள் கர்த்தருக்குள் மிகவும் மகிழ்ந்து, மனுஷரில் எளிமையானவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள் களிகூருவார்கள்.
20கொடியன் அற்றுப்போவான், சக்கந்தக்காரன் இல்லாமற்போவான்.
21ஒரு வார்த்தையினிமித்தம் மனுஷனைக் குற்றப்படுத்தி, நியாயவாசலில் தங்களைக் கடிந்துகொள்ளுகிறவனுக்குக் கண்ணிவைத்து, நீதிமானை நிர்நிமித்தமாய்த் துரத்தி, இப்படி அக்கிரமஞ்செய்ய வகைதேடுகிற யாவரும் சங்கரிக்கப்படுவார்கள்.
22ஆகையால், ஆபிரகாமை மீட்டுக்கொண்ட கர்த்தர் யாக்கோபின் வம்சத்தைக்குறித்து: இனி யாக்கோபு வெட்கப்படுவதில்லை; இனி அவன் முகம் செத்துப்போவதுமில்லை.
23அவன் என் கரங்களின் செயலாகிய தன் பிள்ளைகளை தன் நடுவிலே காணும்போது, என் நாமத்தைப் பரிசுத்தப்படுத்துவார்கள்; யாக்கோபின் பரிசுத்தரை அவர்கள் பரிசுத்தப்படுத்தி, இஸ்ரவேலின் தேவனுக்குப் பயப்படுவார்கள்.
24வழுவிப்போகிற மனதை உடையவர்கள் புத்திமான்களாகி, முறுமுறுக்கிறவர்கள் உபதேசம் கற்றுக்கொள்ளுவார்கள்.

ஏசாயா 30

1பாவத்தோடே பாவத்தைக் கூட்டும்படி, என்னை அல்லாமல் ஆலோசனைபண்ணி, என்ஆவியை அல்லாமல் தங்களை மூடிக்கொள்ளப் பார்க்கிறவர்களும்,
2என் வாக்கைக் கேளாமல் பார்வோனின் பெலத்தினாலே பெலக்கவும், எகிப்தின் நிழலிலே ஒதுங்கவும் வேண்டும் என்று எகிப்துக்குப் போகிறவர்களுமாகிய முரட்டாட்டமுள்ள புத்திரருக்கு ஐயோ! என்று கர்த்தர் சொல்லுகிறார்.
3பார்வோனுடைய பெலன் உங்களுக்கு வெட்கமாகவும் எகிப்தினுடைய நிழலொதுக்கு உங்களுக்கு இலச்சையாகவும் இருக்கும்.
4அவர்கள் பிரபுக்கள் சோவானிலேபோய், அவர்கள் ஸ்தானாபதிகள் ஆனேஸ்மட்டும் சேருகிறார்கள்.
5ஆனாலும் தங்கள் சகாயத்துக்கும் பிரயோஜனத்துக்கும் உதவாமல், வெட்கத்துக்கும் நிந்தைக்குமே உதவும் ஜனத்தினாலே யாவரும் வெட்கப்படுவார்கள்.
6தெற்கேபோகிற மிருகஜீவன்களின் பாரம். துஷ்டசிங்கமும், கிழச்சிங்கமும், விரியனும், பறக்கிற கொள்ளிவாய்ச்சர்ப்பமும் வருகிறதும், நெருக்கமும் இடுக்கமும் அடைவிக்கிறதுமான தேசத்துக்கு, அவர்கள் கழுதை மறிகளுடைய முதுகின்மேல் தங்கள் ஆஸ்திகளையும், ஒட்டகங்களுடைய முதுகின்மேல் தங்கள் பொக்கிஷங்களையும், தங்களுக்கு உதவாத ஜனத்தண்டைக்கு ஏற்றிக்கொண்டுபோகிறார்கள்.
7எகிப்தியர் சகாயம்பண்ணுவது வியர்த்தமும் வீணுமாம்; ஆகையால், சும்மாயிருப்பதே அவர்களுக்குப் பெலன் என்று அதற்காகக் கூறுகிறேன்.
8இப்பொழுது நீ போய், இது பிற்காலத்துக்கு என்றென்றைக்கும் இருக்கும்படி, இதை அவர்களுக்கு முன்பாக ஒரு பலகையில் எழுதி, ஒரு புஸ்தகத்தில் வரை.
9இவர்கள் கலகமுள்ள ஜனங்களும், பொய்பேசுகிற பிள்ளைகளும், கர்த்தருடைய வேதத்தைக் கேட்க மனதில்லாத புத்திரருமாயிருக்கிறார்கள்.
10இவர்கள் தரிசனக்காரரை நோக்கி: தரிசனங் காணவேண்டாம் என்றும், ஞானதிருஷ்டிக்காரரை நோக்கி: யதார்த்தமாய் எங்களுக்குத் தரிசனஞ்சொல்லாமல், எங்களுக்கு இதமான சொற்களை உரைத்து, மாயமானவைகளைத் திருஷ்டியுங்கள் என்றும்,
11நீங்கள் வழியை விட்டு, பாதையினின்று விலகி, இஸ்ரவேலின் பரிசுத்தரை எங்கள் முன்பாக இராமல் ஓயப்பண்ணுங்கள் என்றும் சொல்லுகிறார்கள்.
12நீங்கள் இந்த வார்த்தையை வெறுத்து, இடுக்கமும் தாறுமாறும் செய்கிறதை நம்பி, அதைச் சார்ந்து கொள்ளுகிறபடியால்,
13இந்த அக்கிரமம் உங்களுக்கு உயர்ந்த சுவரில் விழப் பிதுங்கிநிற்கிறதும், திடீரென்று சடிதியாய் இடியப்போகிறதுமான வெடிப்பைப்போல இருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தர் சொல்லுகிறார்.
14அவர்களை அவர் தப்பவிடாமல் உடையும்படி குயக்கலத்தை நொறுக்குவதுபோல அவர்களை நொறுக்குவார்; அடுப்பிலே நெருப்பு எடுக்கிறதற்கும், குளத்திலே தண்ணீர் மொள்ளுகிறதற்கும் நொறுங்கின துண்டுகளில், ஒரு ஓடாகிலும் அகப்படாதேபோகும்.
15நீங்கள் மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவீர்கள்; அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்; நீங்களோ அப்படிச் செய்ய மனதாயிராமல்;
16அப்படியல்ல, குதிரைகளின்மேல் ஏறி ஓடிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே ஓடிப்போவீர்கள், வேகமான வாகனங்களின்மேல் ஏறிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே உங்களைத் துரத்துகிறவர்கள் வேகமாய்த் துரத்துவார்கள்.
17நீங்கள் மலையுச்சியின்மேல் ஒரு கம்பத்தைப்போலவும், மேட்டின்மேல் ஒரு கொடியைப்போலவும் மீந்திருக்குமட்டாக, ஒருவன் பயமுறுத்த ஆயிரம்பேரும், ஐந்துபேர் பயமுறுத்த நீங்கள் அனைவரும் ஓடிப்போவீர்கள்.
18ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கிவான்கள்.
19சீயோனைச் சேர்ந்த ஜனங்கள் எருசலேமில் வாசமாயிருப்பார்கள்; இனி நீ அழுதுகொண்டிராய்; உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி, அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார்.
20ஆண்டவர் உங்களுக்குத் துன்பத்தின் அப்பத்தையும், உபத்திரவத்தின் தண்ணீரையும் கொடுத்தாலும், உன் போதகர்கள் இனி ஒருபோதும் மறைந்திருக்கமாட்டார்கள்; உன் கண்கள் உன் போதகர்களைக் காணும்.
21நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.
22உன் சுரூபங்களை மூடிய வெள்ளித்தகட்டையும், உன் விக்கிரகங்களின் பொன் ஆடையாபரணத்தையும் தீட்டாக எண்ணி, அவைகளைத் தீட்டுப்பட்ட வஸ்திரம்போல எறிந்துவிட்டு, அதைச் சீ! போ என்பாய்.
23அப்பொழுது நீ நிலத்தில் விதைக்கும் உன் விதைக்கு அவர் மழையையும், நிலத்தின் பலனாகிய ஆகாரத்தையும் தருவார்; அது கொழுமையும் புஷ்டியுமாய் இருக்கும்; அக்காலத்திலே உன் ஆடுமாடுகள் விஸ்தாரமான மேய்ச்சலுள்ள ஸ்தலத்திலே மேயும்;
24நிலத்தை உழுகிற எருதுகளும் கழுதைமறிகளும், முறத்தினாலும் தூற்றுக்கூடையினாலும் தூற்றப்பட்ட ருசியுள்ள கப்பிகளைத் தின்னும்.
25கோபுரங்கள் விழுகிற மகா சங்காரத்தின் நாளிலே, உயரமான சகலமலைகளின்மேலும், உயரமான சகலமேடுகளின்மேலும் ஆறுகளும் வாய்க்கால்களும் உண்டாகும்.
26 கர்த்தர் தமது ஜனத்தின் முறிவைக் கட்டி, அதின் அடிக்காயத்தைக் குணமாக்கும் நாளிலே, சந்திரனுடைய வெளிச்சம் சூரியனுடைய வெளிச்சத்தைப்போலவும், சூரியனுடைய வெளிச்சம் ஏழத்தனையாய் ஏழு பகலின் வெளிச்சத்தைப்போலவும் இருக்கும்.
27இதோ, கர்த்தருடைய நாமம் தூரத்திலிருந்து வரும்; அவருடைய கோபம் எரிகிறதும் கனன்று புகைகிறதுமாயிருக்கும்; அவருடைய உதடுகள் சினத்தால் நிறைந்து, அவருடைய நாவு பட்சிக்கிற அக்கினிபோல இருக்கும்.
28நாசம் என்னும் சல்லடையிலே ஜாதிகளை அரிக்கும்படிக்கு அவர் ஊதும் சுவாசம் கழுத்துமட்டும் எட்டுகிற ஆற்றுவெள்ளத்தைப்போலவும், ஜனங்களுடைய வாயிலே போட்டு அலைக்கழிக்கிற கடிவாளத்தைப்போலவும் இருக்கும்.
29பண்டிகை ஆசரிக்கப்படும் இராத்திரியிலே பாடுகிறதுபோலப் பாடுவீர்கள்; கர்த்தருடைய பர்வதமாகிய இஸ்ரவேலின் கன்மலையண்டைக்குப்போக நாகசுரத்தோடே நடந்து வருகிறபோது மகிழுகிறதுபோல மகிழுவீர்கள்.
30 கர்த்தர் மகத்துவமானவர்; தமது சத்தத்தைக் கேட்கப்பண்ணி, உக்கிர கோபத்தினாலும், பட்சிக்கிற அக்கினிஜூவாலையினாலும், இடி பெருவெள்ளம் கல்மழையினாலும், தமது புயத்தின் வல்லமையைக் காண்பிப்பார்.
31அப்பொழுது தண்டாயுதத்தினால் அடித்த அசீரியன் கர்த்தருடைய சத்தத்தினாலே நொறுங்குண்டு போவான்.
32 கர்த்தர் அவன்மேல் சுமத்தும் ஆக்கினைத்தண்டம் செல்லுமிடமெங்கும், மேளங்களும் வீணைகளும் அதினுடன் போகும்; கொடிய யுத்தங்களினால் அவனை எதிர்த்து யுத்தஞ்செய்வார்.
33தோப்பேத் ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்டது; ராஜாவுக்கு அது ஆயத்தப்படுத்தப்பட்டது; அதை ஆழமும் விசாலமுமாக்கினார்; வேகும்படி அக்கினியும் மிகுந்த விறகுமுண்டு: கர்த்தரின் சுவாசம் கெந்தகத் தீயைப்போல அதைக் கொளுத்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *