Scripture Portion: Genesis 27-29
ஆதியாகமம் 27
1ஈசாக்கு முதிர்வயதானதினால் அவன் கண்கள் இருளடைந்து பார்வையற்றுப் போனபோது, அவன் தன் மூத்த குமாரனாகிய ஏசாவை அழைத்து, என் மகனே என்றான்; அவன், இதோ, இருக்கிறேன் என்றான்.2அப்பொழுது அவன்: நான் முதிர்வயதானேன், என் மரணம் இன்ன நாளில் என்று அறியேன்.3ஆகையால், நீ உன் ஆயுதங்களாகிய உன் அம்பறாத்தூணியையும் உன் வில்லையும் எடுத்துக்கொண்டு வனத்துக்குப்போய், எனக்காக வேட்டையாடி,4அதை எனக்குப் பிரியமாயிருக்கிற ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைத்து, நான் புசிக்கவும், நான் மரணமடையுமுன்னே என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கவும், என்னிடத்தில் கொண்டுவா என்றான்.5ஈசாக்கு தன் குமாரனாகிய ஏசாவோடே பேசுகையில், ரெபெக்காள் கேட்டுக்கொண்டிருந்தாள். ஏசா வேட்டையாடிக்கொண்டுவரும்படி வனத்துக்குப் போனான்.6அப்பொழுது ரெபெக்காள் தன் குமாரனாகிய யாக்கோபை நோக்கி: உன் தகப்பன் உன் சகோதரனாகிய ஏசாவை அழைத்து:7நான் புசித்து, எனக்கு மரணம் வருமுன்னே, கர்த்தரை முன்னிட்டு உன்னை ஆசீர்வதிக்கும்படி, நீ எனக்காக வேட்டையாடி, அதை எனக்கு ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைத்துக்கொண்டுவா என்று சொல்லக்கேட்டேன்.8ஆகையால், என் மகனே, என் சொல்லைக் கேட்டு, நான் உனக்குக் கற்பிக்கிறபடி செய்.9நீ ஆட்டுமந்தைக்குப் போய், இரண்டு நல்ல வெள்ளாட்டுக்குட்டிகளைக் கொண்டுவா; நான் அவைகளை உன் தகப்பனுக்குப் பிரியமானபடி ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைப்பேன்.10உன் தகப்பன் தாம் மரணமடையுமுன்னே உன்னை ஆசீர்வதிக்குபடி அவர் புசிப்பதற்கு நீ அதை அவரிடத்தில் கொண்டுபோகவேண்டும் என்றாள்.11அதற்கு யாக்கோபு தன் தாயாகிய ரெபெக்காளை நோக்கி: என் சகோதரனாகிய ஏசா ரோமம் மிகுந்தவன், நான் ரோமமில்லாதவன்.12ஒருவேளை என் தகப்பன் என்னைத்தடவிப்பார்ப்பார்; அப்பொழுது நான் அவருக்கு எத்தனாய்க் காணப்பட்டு, என்மேல் ஆசீர்வாதத்தை அல்ல, சாபத்தை வரப்பண்ணிக்கொள்வேனே என்றான்.13அதற்கு அவன் தாய்: என் மகனே, உன்மேல் வரும் சாபம் என்மேல் வரட்டும்; என் சொல்லைமாத்திரம் கேட்டு, நீ போய், அவைகளை என்னிடத்தில் கொண்டுவா என்றாள்.14அவன் போய் அவைகளைப் பிடித்து, தன் தாயினிடத்தில் கொண்டுவந்தான்; அவனுடைய தாய் அவன் தகப்பனுக்குப்பிரியமானபடி ருசியுள்ள பதார்த்தங்களைச் சமைத்தாள்.15பின்பு, ரெபெக்காள் வீட்டிலே தன்னிடத்தில் இருந்த தன் மூத்த மகனாகிய ஏசாவின் நல்ல வஸ்திரங்களை எடுத்து, தன் இளைய மகனாகிய யாக்கோபுக்கு உடுத்தி,16வெள்ளாட்டுக்குட்டிகளின் தோலை அவன் கைகளிலேயும் ரோமமில்லாத அவன் கழுத்திலேயும் போட்டு;17தான் சமைத்த ருசியுள்ள பதார்த்தங்களையும் அப்பங்களையும் தன் குமாரனாகிய யாக்கோபின் கையிலே கொடுத்தாள்.18அவன் தன் தகப்பனிடத்தில் வந்து, என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன்; நீ யார், என் மகனே என்றான்.19அப்பொழுது யாக்கோபு தன் தகப்பனை நோக்கி: நான் உமது மூத்த மகனாகிய ஏசா; நீர் எனக்குச் சொன்னபடியே செய்தேன்; உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும்படி, நீர் எழுந்து உட்கார்ந்து, நான் வேட்டையாடிக்கொண்டு வந்ததைப் புசியும் என்றான்.20அப்பொழுது ஈசாக்குத் தன் குமாரனை நோக்கி: என் மகனே, இது உனக்கு இத்தனை சீக்கிரமாய் எப்படி அகப்பட்டது என்றான். அவன்: உம்முடைய தேவனாகிய கர்த்தர் எனக்கு நேரிடப்பண்ணினார் என்றான்.21அப்பொழுது ஈசாக்கு யாக்கோபை நோக்கி: என் மகனே, நீ என் குமாரனாகிய ஏசாதானோ அல்லவோ என்று நான் உன்னைத் தடவிப்பார்க்கும்படி கிட்ட வா என்றான்.22யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கண்டையில் கிட்டப் போனான்; அவன் இவனைத் தடவிப்பார்த்து: சத்தம் யாக்கோபின் சத்தம், கைகளோ ஏசாவின் கைகள் என்று சொல்லி,23அவனுடைய கைகள் அவன் சகோதரனாகிய ஏசாவின் கைகளைப்போல ரோமமுள்ளவைகளாயிருந்தபடியினாலே, இன்னான் என்று அறியாமல், அவனை ஆசீர்வதித்து,24நீ என் குமாரனாகிய ஏசாதானோ என்றான்; அவன்: நான்தான் என்றான்.25அப்பொழுது அவன்: என் குமாரனே, நீ வேட்டையாடிக் கொண்டுவந்ததை நான் புசித்து, என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கும்படி அதை என்கிட்டக் கொண்டுவா என்றான்; அவன் அதைக் கிட்டக் கொண்டுபோனான்; அப்பொழுது அவன் புசித்தான்; பிற்பாடு, திராட்சரசம் அவனுக்குக் கொண்டுவந்து கொடுத்தான், அவன் குடித்தான்.26அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு அவனை நோக்கி: என் மகனே, நீ கிட்ட வந்து என்னை முத்தஞ்செய் என்றான்.27அவன் கிட்டப் போய், அவனை முத்தஞ்செய்தான்; அப்பொழுது அவனுடைய வஸ்திரங்களின் வாசனையை மோந்து: இதோ, என் குமாரனுடைய வாசனை கர்த்தர் ஆசீர்வதித்த வயல்வெளியின் வாசனையைப்போல் இருக்கிறது.28தேவன் உனக்கு வானத்துப் பனியையும் பூமியின் கொழுமையையும் கொடுத்து, மிகுந்த தானியத்தையும் திராட்சரசத்தையும் தந்தருளுவாராக.29ஜனங்கள் உன்னைச் சேவிக்கவும் ஜாதிகள் உன்னை வணங்கவும்கடவர்கள்; உன் சகோதரருக்கு எஜமானாயிருப்பாய்; உன் தாயின் பிள்ளைகள் உன்னை வணங்குவார்கள்; உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்பட்டவர்களும், உன்னை ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களுமாய் இருப்பார்கள் என்று சொல்லி அவனை ஆசீர்வதித்தான்.30ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து முடிந்தபோது, யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கின் சமுகத்தைவிட்டுப் புறப்பட்டவுடனே, அவன் சகோதரனாகிய ஏசா வேட்டையாடி வந்து சேர்ந்தான்.31அவனும் ருசியுள்ள பதார்த்தங்களைச் சமைத்து, தன் தகப்பனண்டைக்குக் கொண்டுவந்து, தகப்பனை நோக்கி: உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும்படி, என் தகப்பனார் எழுந்திருந்து, உம்முடைய குமாரனாகிய நான் வேட்டையாடிக் கொண்டுவந்ததைப் புசிப்பாராக என்றான்.32அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு: நீ யார் என்றான்; அதற்கு அவன்: நான் உமது மூத்த மகனாகிய ஏசா என்றான்.33அப்பொழுது ஈசாக்கு மிகவும் பிரமித்து நடுங்கி: வேட்டையாடி எனக்குக் கொண்டுவந்தானே, அவன் யார்? நீ வருமுன்னே அவையெல்லாவற்றிலும் நான் புசித்து அவனை ஆசீர்வதித்தேனே, அவன் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருப்பான் என்றான்.34ஏசா தன் தகப்பனுடைய வார்த்தைகளைக் கேட்டவுடனே, மிகவும் மனங்கசந்து உரத்த சத்தமிட்டு அலறி, தன் தகப்பனை நோக்கி: என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்றான்.35அதற்கு அவன்: உன் சகோதரன் தந்திரமாய் வந்து, உன்னுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டான் என்றான்.36அப்பொழுது அவன்: அவன் பெயர் யாக்கோபு என்னப்படுவது சரியல்லவா? இதோடே இரண்டுதரம் என்னை மோசம் போக்கினான்; என் சேஷ்ட புத்திரபாகத்தை எடுத்துக்கொண்டான்; இதோ, இப்பொழுது என் ஆசீர்வாதத்தையும் வாங்கிக்கொண்டான் என்று சொல்லி, நீர் எனக்கு ஒரு ஆசீர்வாதத்தையாகிலும் வைத்துவைக்கவில்லையா என்றான்.37ஈசாக்கு ஏசாவுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, நான் அவனை உனக்கு எஜமானாக வைத்தேன்; அவன் சகோதரர் எல்லாரையும் அவனுக்கு ஊழியக்காரராகக் கொடுத்து, அவனைத் தானியத்தினாலும் திராட்சரசத்தினாலும் ஆதரித்தேன்; இப்பொழுதும் என் மகனே, நான் உனக்கு என்னசெய்வேன் என்றான்.38ஏசா தன் தகப்பனை நோக்கி: என் தகப்பனே, இந்த ஒரே ஆசீர்வாதம் மாத்திரமா உம்மிடத்தில் உண்டு? என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்று சொல்லி, ஏசா சத்தமிட்டு அழுதான்.39அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு அவனுக்குப் பிரதியுத்தரமாக: உன் வாசஸ்தலம் பூமியின் சாரத்தோடும் உயர வானத்திலிருந்து இறங்கும் பனியோடும் இருக்கும்.40உன் பட்டயத்தினாலே நீ பிழைத்து, உன் சகோதரனைச் சேவிப்பாய்; நீ மேற்கொள்ளும் காலம் வரும்போதோ, உன் கழுத்தில் இருக்கிற அவனுடைய நுகத்தடியை முறித்துப்போடுவாய் என்றான்.41யாக்கோபைத் தன் தகப்பன் ஆசீர்வதித்ததினிமித்தம் ஏசா யாக்கோபைப் பகைத்து: என் தகப்பனுக்காகத் துக்கிக்கும் நாட்கள் சீக்கிரமாய் வரும், அப்பொழுது என் சகோதரனாகிய யாக்கோபைக் கொன்றுபோடுவேன் என்று ஏசா தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டான்.42மூத்த மகனாகிய ஏசாவின் வார்த்தைகள் ரெபெக்காளுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது அவள் தன் இளைய மகனாகிய யாக்கோபை அழைத்து: உன் சகோதரனாகிய ஏசா உன்னைக் கொன்றுபோட நினைத்து, தன்னைத் தேற்றிக்கொள்ளுகிறான்.43ஆகையால், என் மகனே, நான் சொல்வதைக் கேட்டு, எழுந்து புறப்பட்டு, ஆரானில் இருக்கிற என் சகோதரனாகிய லாபானிடத்துக்கு ஓடிப்போய்,44உன் சகோதரன் உன்மேல் வைத்த கோபம் தணியுமட்டும் சிலநாள் அவனிடத்திலே இரு.45உன் சகோதரன் உன்மேல் வைத்த கோபம் தணிந்து, நீ அவனுக்குச் செய்ததை அவன் மறந்தபின், நான் ஆள் அனுப்பி, அவ்விடத்திலிருந்து உன்னை அழைப்பிப்பேன்; நான் ஒரே நாளில் உங்கள் இருவரையும் ஏன் இழந்துபோகவேண்டும் என்றாள்.46பின்பு, ரெபெக்காள் ஈசாக்கை நோக்கி: ஏத்தின் குமாரத்திகளினிமித்தம் என் உயிர் எனக்கு வெறுப்பாயிருக்கிறது; இந்தத் தேசத்துப் பெண்களாகிய ஏத்தின் குமாரத்திகளில் யாக்கோபு ஒரு பெண்ணைக் கொள்வானானால் என் உயிர் இருந்து ஆவதென்ன என்றாள்.ஆதியாகமம் 28
1ஈசாக்கு யாக்கோபை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ளாமல்,2எழுந்து புறப்பட்டு, பதான் அராமிலிருக்கிற உன் தாயினுடைய தகப்பனாகிய பெத்துவேலுடைய வீட்டுக்குப் போய், அவ்விடத்தில் உன் தாயின் சகோதரனாகிய லாபானின் குமாரத்திகளுக்குள் பெண்கொள் என்று அவனுக்குக் கட்டளையிட்டான்.3சர்வவல்லமையுள்ள தேவன் உன்னை ஆசீர்வதித்து, நீ பல ஜனக்கூட்டமாகும்படி உன்னைப் பலுகவும் பெருகவும்பண்ணி;4தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்ததும் நீ பரதேசியாய்த் தங்குகிறதுமான தேசத்தை நீ சுதந்தரித்துக்கொள்ளும்படி ஆபிரகாமுக்கு அருளிய ஆசீர்வாதத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் அருளுவாராக என்று சொல்லி;5ஈசாக்கு யாக்கோபை அனுப்பிவிட்டான். அப்பொழுது அவன் பதான் அராமிலிருக்கும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுடைய குமாரனும், தனக்கும் ஏசாவுக்கும் தாயாகிய ரெபெக்காளின் சகோதரனுமான லாபானிடத்துக்குப் போகப் புறப்பட்டான்.6ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து, ஒரு பெண்ணைக் கொள்ளும்படி அவனைப் பதான் அராமுக்கு அனுப்பினதையும், அவனை ஆசீர்வதிக்கையில்: நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ளவேண்டாம் என்று அவனுக்குக் கட்டளையிட்டதையும்,7யாக்கோபு தன் தகப்பனுக்கும் தன் தாய்க்கும் கீழ்ப்படிந்து, பதான் அராமுக்குப் புறப்பட்டுப்போனதையும் ஏசா கண்டதினாலும்,8கானானியருடைய குமாரத்திகள் தன் தகப்பனாகிய ஈசாக்கின் பார்வைக்கு ஆகாதவர்கள் என்பதை ஏசா அறிந்ததினாலும்,9ஏசா இஸ்மவேலிடத்துக்குப் போய், தனக்கு முன்னிருந்த மனைவிகளுமன்றி, ஆபிரகாமுடைய குமாரனாகிய இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய மகலாத்தையும் விவாகம் பண்ணினான்.10யாக்கோபு பெயெர்செபாவை விட்டுப் புறப்பட்டு ஆரானுக்குப் போகப் பிரயாணம்பண்ணி,11ஒரு இடத்திலே வந்து, சூரியன் அஸ்தமித்தபடியினால், அங்கே ராத்தங்கி, அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின்கீழ் வைத்து, அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக்கொண்டான்.12அங்கே அவன் ஒரு சொப்பனங்கண்டான்; இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள்.13அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்.14உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும்; நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.15நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத்திரும்பி வரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.16யாக்கோபு நித்திரை தெளிந்து விழித்தபோது: மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேன் என்றான்.17அவன் பயந்து, இந்த ஸ்தலம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல் என்றான்.18அதிகாலையிலே யாக்கோபு எழுந்து, தன் தலையின்கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதின்மேல் எண்ணெய் வார்த்து,19அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் என்று பேரிட்டான்; அதற்கு முன்னே அவ்வூருக்கு லூஸ் என்னும் பேர் இருந்தது.20அப்பொழுது யாக்கோபு: தேவன் என்னோடே இருந்து, நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்து,21என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திரும்பிவரப்பண்ணுவாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்;22நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனைபண்ணிக்கொண்டான்.
ஆதியாகமம் 29
1யாக்கோபு பிரயாணம்பண்ணி, கீழ்த்திசையாரின் தேசத்தில் போய்ச் சேர்ந்தான்.2அங்கே வயல்வெளியிலே ஒரு கிணற்றையும், அதின் அருகே மடக்கியிருக்கிற மூன்று ஆட்டுமந்தைகளையும் கண்டான்; அந்தக் கிணற்றிலே மந்தைகளுக்குத் தண்ணீர் காட்டுவார்கள்; அந்தக் கிணற்றின் வாய் ஒரு பெரிய கல்லினால் அடைக்கப்பட்டிருந்தது.3அவ்விடத்தில் மந்தைகள் எல்லாம் சேர்ந்தபின் கிணற்றின் வாயிலிருக்கும் கல்லை மேய்ப்பர் புரட்டி, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, மறுபடியும் கல்லை முன்னிருந்தபடி கிணற்றின் வாயில் வைப்பார்கள்.4யாக்கோபு அவர்களைப் பார்த்து: சகோதரரே, நீங்கள் எவ்விடத்தார் என்றான்; அவர்கள், நாங்கள் ஆரான் ஊரார் என்றார்கள்.5அப்பொழுது அவன்: நாகோரின் குமாரனாகிய லாபானை அறிவீர்களா என்று கேட்டான்; அறிவோம் என்றார்கள்.6அவன் சுகமாயிருக்கிறானா என்று விசாரித்தான்; அதற்கு அவர்கள்: சுகமாயிருக்கிறான்; அவன் குமாரத்தியாகிய ராகேல், அதோ, ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறாள் என்று சொன்னார்கள்.7அப்பொழுது அவன்: இன்னும் வெகு பொழுதிருக்கிறதே; இது மந்தைகளைச் சேர்க்கிற வேளை அல்லவே, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, இன்னும் மேயவிடலாம் என்றான்.8அதற்கு அவர்கள்: எல்லா மந்தைகளும் சேருமுன்னே அப்படிச் செய்யக் கூடாது; சேர்ந்தபின் கிணற்றின் வாயிலுள்ள கல்லைப் புரட்டுவார்கள்; அப்பொழுது ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம் என்றார்கள்.9அவர்களோடே அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே, தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ராகேல் அந்த ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தாள்.10யாக்கோபு தன் தாயின் சகோதரனான லாபானுடைய குமாரத்தியாகிய ராகேலையும், தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளையும் கண்டபோது, யாக்கோபு போய், கிணற்றின் வாயிலிருந்த கல்லைப் புரட்டி, தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான்.11பின்பு யாக்கோபு ராகேலை முத்தஞ்செய்து, சத்தமிட்டு அழுது,12தான் அவள் தகப்பனுடைய மருமகனென்றும், ரெபெக்காளின் குமாரனென்றும் ராகேலுக்கு அறிவித்தான். அவள் ஓடிப்போய்த் தன் தகப்பனுக்கு அறிவித்தாள்.13லாபான் தன் சகோதரியின் குமாரனாகிய யாக்கோபுடைய செய்தியைக் கேட்டபோது, அவனுக்கு எதிர்கொண்டோடி, அவனைக் கட்டிக்கொண்டு முத்தஞ்செய்து, தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோனான்; அவன் தன் காரியங்களையெல்லாம் விவரமாய் லாபானுக்குச் சொன்னான்.14அப்பொழுது லாபான்: நீ என் எலும்பும் என் மாம்சமுமானவன் என்றான். ஒரு மாதம்வரைக்கும் யாக்கோபு அவனிடத்தில் தங்கினான்.15பின்பு லாபான் யாக்கோபை நோக்கி: நீ என் மருமகனாயிருப்பதினால், சும்மா எனக்கு வேலைசெய்யலாமா? சம்பளம் எவ்வளவு கேட்கிறாய், சொல் என்றான்.16லாபானுக்கு இரண்டு குமாரத்திகள் இருந்தார்கள்; மூத்தவள் பேர் லேயாள், இளையவள் பேர் ராகேல்.17லேயாளுடைய கண்கள் கூச்சப்பார்வையாயிருந்தது; ராகேலோ ரூபவதியும் பார்வைக்கு அழகானவளுமாயிருந்தாள்.18யாக்கோபு ராகேல் பேரில் பிரியப்பட்டு: உம்முடைய இளைய குமாரத்தியாகிய ராகேலுக்காக உம்மிடத்தில் ஏழு வருஷம் வேலை செய்கிறேன் என்றான்.19அதற்கு லாபான்: நான் அவளை அந்நிய புருஷனுக்குக் கொடுக்கிறதைப்பார்க்கிலும், அவளை உனக்குக் கொடுக்கிறது உத்தமம், என்னிடத்தில் தரித்திரு என்றான்.20அந்தப்படியே யாக்கோபு ராகேலுக்காக ஏழு வருஷம் வேலை செய்தான்; அவள் பேரில் இருந்த பிரியத்தினாலே அந்த வருஷங்கள் அவனுக்குக் கொஞ்ச நாளாகத் தோன்றினது.21பின்பு யாக்கோபு லாபானை நோக்கி: என் நாட்கள் நிறைவேறினபடியால், என் மனைவியிடத்தில் நான் சேரும்படி அவளை எனக்குத் தரவேண்டும் என்றான்.22அப்பொழுது லாபான் அவ்விடத்து மனிதர் எல்லாரையும் கூடிவரச்செய்து விருந்துபண்ணினான்.23அன்று இரவிலே அவன் தன் குமாரத்தியாகிய லேயாளை அழைத்துக்கொண்டுபோய், அவனிடத்தில் விட்டான்; அவளை அவன் சேர்ந்தான்.24லாபான் தன் வேலைக்காரியாகிய சில்பாளைத் தன் குமாரத்தியாகிய லேயாளுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான்.25காலையிலே, இதோ, அவள் லேயாள் என்று யாக்கோபு கண்டு, லாபானை நோக்கி: ஏன் எனக்கு இப்படிச் செய்தீர்? ராகேலுக்காக அல்லவா உம்மிடத்தில் வேலைசெய்தேன்; பின்னை ஏன் எனக்கு வஞ்சகம்பண்ணினீர் என்றான்.26அதற்கு லாபான்: மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது இவ்விடத்து வழக்கம் அல்ல.27இவளுடைய ஏழு நாளை நிறைவேற்று; அவளையும் உனக்குத் தருவேன்; அவளுக்காகவும் நீ இன்னும் ஏழு வருஷம் என்னிடத்திலே வேலைசெய் என்றான்.28அந்தப்படியே யாக்கோபு, இவளுடைய ஏழு நாளை நிறைவேற்றினான். அப்பொழுது தன் குமாரத்தியாகிய ராகேலையும் அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.29மேலும் லாபான் தன் வேலைக்காரியாகிய பில்காளைத் தன் குமாரத்தியாகிய ராகேலுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான்.30யாக்கோபு ராகேலையும் சேர்ந்தான்; லேயாளைப்பார்க்கிலும் ராகேலை அவன் அதிகமாய் நேசித்து, பின்னும் ஏழு வருஷம் அவனிடத்தில் சேவித்தான்.31லேயாள் அற்பமாய் எண்ணப்பட்டாள் என்று கர்த்தர் கண்டு, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்; ராகேலோ மலடியாயிருந்தாள்.32லேயாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தருளினார்; இப்பொழுது என் புருஷன் என்னை நேசிப்பார் என்று சொல்லி, அவனுக்கு ரூபன் என்று பேரிட்டாள்.33மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: நான் அற்பமாய் எண்ணப்பட்டதைக் கர்த்தர் கேட்டருளி, இவனையும் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்குச் சிமியோன் என்று பேரிட்டாள்.34பின்னும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: என் புருஷனுக்கு மூன்று குமாரரைப் பெற்றபடியால் அவர் இப்பொழுது என்னோடே சேர்ந்திருப்பார் என்று சொல்லி, அவனுக்கு லேவி என்று பேரிட்டாள்.35மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன் என்று சொல்லி, அவனுக்கு யூதா என்று பேரிட்டாள்; பிற்பாடு அவளுக்குப் பிள்ளைப்பேறு நின்று போயிற்று.
Leave a Reply