Scripture Portion: Jeremiah 1-3

எரேமியா 1

1பென்யமீன் தேசத்திலுள்ள ஆனதோத் ஊரிலிருந்த ஆசாரியர்களில் ஒருவனாகிய இல்க்கியாவின் குமாரன் எரேமியாவினுடைய வசனங்கள்:
2ஆமோனுடைய குமாரனாகிய யோசியா என்கிற யூதாவுடைய ராஜாவின் நாட்களில், அவன் அரசாண்ட பதின்மூன்றாம் வருஷத்தில் இவனுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று.
3அப்புறம் யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவுடைய ராஜாவின் நாட்களிலும், யோசியாவின் குமாரனாகிய சிதேக்கியா என்கிற யூதாவுடைய ராஜாவின் பதினோராம் வருஷத்து முடிவுமட்டாகவும், எருசலேம் ஊரார் ஐந்தாம் மாதத்தில் சிறைப்பட்டுப்போகும்வரைக்கும் கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று.
4கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
5நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார்.
6அப்பொழுது நான்: ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன் என்றேன்.
7ஆனாலும் கர்த்தர்: நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய், நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக.
8நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லி,
9கர்த்தர் தமது கரத்தை நீட்டி, என் வாயைத் தொட்டு: இதோ, என் வார்த்தைகளை உன் வாயிலே வைக்கிறேன்.
10பார், பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும் உன்னை நான் இன்றையதினம் ஜாதிகளின்மேலும் ராஜ்யங்களின்மேலும் ஏற்படுத்தினேன் என்று கர்த்தர் என்னுடனே சொன்னார்.
11பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்: எரேமியாவே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்று கேட்டார்; வாதுமை மரத்தின் கிளையைக் காண்கிறேன் என்றேன்.
12அப்பொழுது கர்த்தர்: நீ கண்டது சரியே; என் வார்த்தையைத் தீவிரமாய் நிறைவேற்றுவேன் என்றார்.
13கர்த்தருடைய வார்த்தை இரண்டாந்தரம் எனக்கு உண்டாகி, அவர்: நீ காண்கிறது என்ன என்று கேட்டார்; பொங்குகிற பானையைக் காண்கிறேன், அதின் வாய் வடக்கேயிருந்து நோக்குகிறது என்றேன்.
14அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: வடக்கேயிருந்து தீங்கு தேசத்தினுடைய குடிகள் எல்லார்மேலும் வரும்.
15இதோ, நான் வடதிசை ராஜ்யங்களின் வம்சங்களையெல்லாம் கூப்பிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் வந்து அவனவன் தன்தன் சிங்காசனத்தை எருசலேமின் ஒலிமுகவாசல்களுக்கும், அதின் சுற்றுமதில்கள் எல்லாவற்றிற்கும் விரோதமாகவும், யூதா தேசத்து எல்லாப் பட்டணங்களுக்கும் விரோதமாகவும் வைப்பார்கள்.
16அவர்கள் என்னைவிட்டு அந்நிய தேவர்களுக்குத் தூபங்காட்டி, தங்கள் கைகளின் கிரியையைப் பணிந்துகொண்ட அவர்களுடைய சகல தீமைகளினிமித்தமும் நான் என் நியாயத்தீர்ப்புகளை அவர்களுக்கு விரோதமாகக் கூறுவேன்.
17ஆகையால் நீ உன் அரையைக் கட்டிக்கொண்டு நின்று, நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் அவர்களுக்குச் சொல்; நான் உன்னை அவர்களுக்கு முன்பாகக் கலங்கப்பண்ணாதபடிக்கு, நீ அவர்கள் முகத்துக்கு அஞ்சாதிரு.
18இதோ, தேசமனைத்துக்கும், யூதாவின் ராஜாக்களுக்கும், அதின் பிரபுக்களுக்கும், அதின் ஆசாரியர்களுக்கும், தேசத்தின் ஜனங்களுக்கும் எதிராக நான் உன்னை இன்றையதினம் அரணிப்பான பட்டணமும், இரும்புத்தூணும், வெண்கல அலங்கமும் ஆக்கினேன்.
19அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 2

1கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2நீ போய், எருசலேமின் செவிகள் கேட்கும்படிக் கூப்பிட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால்: விதைக்கப்படாத தேசமாகிய வனாந்தரத்திலே நீ என்னைப் பின்பற்றிவந்த உன் இளவயதின் பக்தியையும், நீ வாழ்க்கைப்பட்டபோது உனக்கிருந்த நேசத்தையும் நினைத்திருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
3இஸ்ரவேல் கர்த்தருக்குப் பரிசுத்தமும், அவருடைய விளைவின் முதற்பலனுமாயிருந்தது; அதைப் பட்சித்த யாவரும் குற்றவாளிகளானார்கள்; பொல்லாப்பு அவர்கள்மேல் வந்ததென்று கர்த்தர் சொல்லுகிறார்.
4யாக்கோபின் குடும்பத்தாரே, இஸ்ரவேல் குடும்பத்தின் வம்சங்களே, நீங்கள் எல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
5கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எங்களை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணினவரும், அவாந்தரவெளியும், பள்ளங்களுமுள்ள தேசமும், வறட்சியும், மரண இருளுமுள்ள தேசமும், ஒருவனும் கடவாமலும் ஒரு மனுஷனும் குடியிராமலும் இருக்கிற தேசமுமான வனாந்தரத்தில் எங்களை நடத்தினவருமாகிய கர்த்தர் எங்கேயென்று உங்கள் பிதாக்கள் கேளாமல்,
6என்னைவிட்டுத் தூரப்பட்டு, மாயையைப் பின்பற்றி, வீணராய்ப் போகிறதற்கு என்னிடத்தில் என்ன அநியாயத்தைக் கண்டார்கள்?
7செழிப்பான தேசத்தின் கனியையும் நன்மையையும் சாப்பிடும்படிக்கு நான் உங்களை அவ்விடத்துக்கு அழைத்துக்கொண்டுவந்தேன்; ஆனாலும் நீங்கள் அதற்குள் பிரவேசித்தபோது, என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி, என் சுதந்தரத்தை அருவருப்பாக்கினீர்கள்.
8கர்த்தர் எங்கேயென்று ஆசாரியர்கள் சொல்லாமலும், வேதத்தைப் போதிக்கிறவர்கள் என்னை அறியாமலுமிருந்து, மேய்ப்பர்கள் எனக்குத் துரோகம்பண்ணினார்கள்; தீர்க்கதரிசிகள் பாகாலைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, வீணானவைகளைப் பின்பற்றினார்கள்.
9ஆதலால் இன்னும் நான் உங்களோடே வழக்காடுவேன், உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளோடும் வழக்காடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
10நீங்கள் கித்தீமின் தீவுகள்மட்டும் கடந்துபோய்ப் பார்த்து, கேதாருக்கு ஆள் அனுப்பி நன்றாய் விசாரித்து, இப்படிப்பட்ட காரியம் உண்டோ என்றும்,
11எந்த ஜாதியாவது தேவர்களல்லாத தங்கள் தேவர்களை மாற்றினது உண்டோ என்றும் பாருங்கள்; என் ஜனங்களோ வீணானவைகளுக்காகத் தங்கள் மகிமையை மாற்றினார்கள்.
12வானங்களே, இதினிமித்தம் பிரமித்துக் கொந்தளித்து, மிகவும் திடுக்கிடுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
13என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்.
14இஸ்ரவேல் ஒரு வேலைக்காரனோ? அவன் வீட்டில் பிறந்த அடிமையோ? ஏன் கொள்ளையானான்?
15பாலசிங்கங்கள் அவன்மேல் கெர்ச்சித்து, முழங்கி, அவன் தேசத்தைப் பாழாக்கிவிட்டன; அவன் பட்டணங்கள் குடியிராமல் சுட்டெரிக்கப்பட்டன.
16நோப், தகபானேஸ் என்னும் பட்டணங்களின் புத்திரரும், உன் உச்சந்தலையை நொறுக்கினார்கள்.
17உன் தேவனாகிய கர்த்தர் உன்னை வழியிலே நடத்திக்கொண்டுபோகுங்காலத்தில், நீ அவரை விட்டுப்போகிறதினால் அல்லவோ இதை உனக்கு நேரிடப்பண்ணினாய்?
18இப்போதும் சீகோரின் தண்ணீரைக் குடிப்பதற்கு எகிப்துக்குப் போகிறதினால் உனக்குப் பிரயோஜனம் என்ன? ஐப்பிராத்து நதியின் தண்ணீரைக் குடிப்பதற்கு அசீரியாவுக்குப் போகிறதினால் உனக்குப் பிரயோஜனம் என்ன?
19உன் தீமை உன்னைத் தண்டிக்கும், உன் மாறுபாடுகள் உன்னைக் கண்டிக்கும்; நீ உன் தேவனாகிய கர்த்தரை விடுகிறதும், என்னைப்பற்றும் பயம் உன்னிடத்தில் இல்லாமலிருக்கிறதும், எத்தனை பொல்லாப்பும் கசப்புமான காரியம் என்று உணர்ந்துகொள் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
20பூர்வகாலந்துவக்கி நான் உன் நுகத்தடியை முறித்து, உன் கட்டுகளை அறுத்தேன்; நான் அடிமைப்படுவதில்லையென்று நீயும் சொன்னாயே; ஆகிலும், உயரமான சகல மேட்டின்மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும் நீ வேசியாய்த் திரிகிறாய்.
21நான் உன்னை முற்றிலும் நற்கனிதரும் உயர்குலத் திராட்சச்செடியாக நாட்டினேன்; நீ எனக்குக் காட்டுத்திராட்சச்செடியின் ஆகாத கொடிகளாய் மாறிப்போனது என்ன?
22நீ உன்னை உவர்மண்ணினாலே கழுவி, அதிக சவுக்காரத்தைக் கையாடினாலும், உன் அக்கிரமத்தின் கறைகள் எனக்கு முன்பாக இருக்குமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
23நான் தீட்டுப்படவில்லை; நான் பாகால்களைப் பின்பற்றவில்லை என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? பள்ளத்தாக்கிலே நீ நடக்கிற மார்க்கத்தைப் பார்; நீ செய்ததை உணர்ந்துகொள்; தாறுமாறாய் ஓடுகிற வேகமான பெண்ணொட்டகம் நீ.
24வனாந்தரத்திலே பழகினதும், தன் இச்சையின் மதவெறியிலே காற்றை உட்கொள்ளுகிறதுமான காட்டுக்கழுதை நீ; அதின் ஆவலை நிறுத்தி, அதைத் திருப்புகிறவன் யார்? அதைத் தேடுகிறவர்கள் ஒருவரும் வருத்தப்படவேண்டியதில்லை; அதின் மாசத்தில் அதைக் கண்டுபிடிப்பார்கள்.
25உன் கால் வெறுங்காலாகாதபடிக்கும், உன் தொண்டை வறட்சியடையாதபடிக்கும் அடக்கிக்கொள் என்றால், நீ: அது கூடாதகாரியம்; நான் அப்படிச் செய்யமாட்டேன்; அந்நியரை நேசிக்கிறேன்; அவர்கள் பிறகே போவேன் என்கிறாய்.
26திருடன் அகப்படுகிறபோது, எப்படி வெட்கப்படுகிறானோ, அப்படியே இஸ்ரவேல் வம்சத்தார் வெட்கப்படுவார்கள்; கட்டையைப் பார்த்து, நீ என் தகப்பன் என்றும்; கல்லைப்பார்த்து, நீ என்னைப் பெற்றாய் என்றும் சொல்லுகிற அவர்களும், அவர்கள் ராஜாக்களும், அவர்கள் பிரபுக்களும், அவர்கள் ஆசாரியர்களும், அவர்கள் தீர்க்தரிசிகளும் வெட்கப்படுவார்கள்.
27அவர்கள் தங்கள் முகத்தையல்ல, தங்கள் முதுகை எனக்குக் காட்டினார்கள்; தங்கள் ஆபத்துக்காலத்திலோ எழுந்து எங்களை இரட்சியும் என்கிறார்கள்.
28நீ உனக்கு உண்டுபண்ணின தேவர்கள் எங்கே? உன் ஆபத்துக்காலத்தில் உன்னை இரட்சிக்கக்கூடுமானால் அவைகள் எழும்பட்டும்; யூதாவே, உன் பட்டணங்களின் இலக்கமும், உன் தேவர்களின் இலக்கமும் சரி.
29என்னோடே நீங்கள் வழக்காடுவானேன்? நீங்கள் அனைவரும் எனக்கு விரோதமாய்த் துரோகம் பண்ணினீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
30நான் உங்கள் பிள்ளைகளை அடித்தது விருதா; சிட்சையை ஏற்றுக்கொள்ளாமற்போனார்கள்; அழிக்கிற சிங்கத்தைப்போல உங்கள் பட்டயம் உங்கள் தீர்க்கதரிசிகளைப் பட்சித்தது.
31சந்ததியாரே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைச் சிந்தித்துப்பாருங்கள்: நான் இஸ்ரவேலுக்கு வனாந்தரமும், காரிருளான பூமியுமாக இருந்தேனோ? பின்னை ஏன் என் ஜனங்கள்; நாங்களே எஜமான்கள், இனி உம்மிடத்தில் நாங்கள் வருவதில்லையென்று சொல்லுகிறார்கள்.
32ஒரு பெண் தன் ஆபரணத்தையும், ஒரு மணவாட்டி தன் ஆடைகளையும் மறப்பாளோ? என் ஜனங்களோ எண்ணிமுடியாத நாட்களாய் என்னை மறந்துவிட்டார்கள்.
33நேசத்தைத் தேடும்படிக்கு நீ உன் வழிகளை நயப்படுத்துகிறதென்ன? இவ்விதமாய் நீ பொல்லாத ஸ்திரீகளுக்கும் உன் வழிகளைக் கற்றுக்கொடுத்தாய்.
34உன் வஸ்திர ஓரங்களிலும் குற்றமில்லாத ஏழை ஆத்துமாக்களின் இரத்தம் காணப்படுகிறது; அதைத் தோண்டித் தேடுகிறதினால் அல்ல, அது எல்லாவற்றின்மேலும் வெளியாயிருக்கிறதினால் அதைக் கண்டுபிடித்தேன்.
35ஆகிலும்: குற்றமில்லாதிருக்கிறேன் என்றும், அவருடைய கோபம் என்னைவிட்டுத் திரும்பிற்று என்றும் சொல்லுகிறாய்; இதோ, நான் பாவஞ்செய்யவில்லையென்று நீ சொல்லுகிறதினிமித்தம் நான் உன்னோடே வழக்காடுவேன்.
36நீ உன் வழியை மாற்றிமாற்றி இவ்வளவாய் விலகிப்போகிறது என்ன? நீ அசீரியாவினால் வெட்கிப்போனதுபோல எகிப்தினாலும் வெட்கிப்போவாய்.
37நீ உன் கைகளை உன் தலையின்மேல் வைத்துக்கொண்டு இவ்விடத்திலிருந்து புறப்பட்டுப்போவாய்; ஏனெனில், உன் நம்பிக்கைகளைக் கர்த்தர் வெறுத்திருக்கிறார்; அவைகளால் உனக்குக் காரியம் வாய்க்காது.

எரேமியா 3

1ஒரு புருஷன் தன் மனைவியைத் தள்ளிவிட, அவள் அவனிடத்திலிருந்து புறப்பட்டுப்போய், அந்நியபுருஷனுக்கு மனைவியானால், அவன் அவளிடத்தில் இனித் திரும்பப் போவானோ? அந்த தேசம் மிகவும் தீட்டுப்படுமல்லவோ? என்று மனுஷர் சொல்லுவார்கள்; நீயோவென்றால் அநேக நேசரோடே வேசித்தனம்பண்ணினாய்; ஆகிலும் என்னிடத்திற்குத் திரும்பிவா என்று கர்த்தர் சொல்லுகிறார்.
2நீ மேடுகளின்மேல் உன் கண்களை ஏறெடுத்து, நீ வேசித்தனம்பண்ணாத இடம் ஒன்று உண்டோ என்று பார்; வனாந்தரத்திலே அரபியன் காத்துக்கொண்டிருக்கிறதுபோல, நீ வழி ஓரங்களில் உன் நேசருக்குக் காத்துக்கொண்டிருந்து, உன் வேசித்தனங்களாலும், உன் அக்கிரமங்களாலும் தேசத்தைத் தீட்டுப்படுத்தினாய்.
3அதினிமித்தம் மழை வருஷியாமலும், பின்மாரியில்லாமலும் போயிற்று; உனக்கோ, சோரஸ்திரீயின் நெற்றியிருக்கிறது; நீயோ: நாணமாட்டேன் என்கிறாய்.
4நீ இதுமுதல் என்னை நோக்கி: என் பிதாவே, தேவரீர் என் இளவயதின் அதிபதியென்று சொல்லி,
5சதாகாலமும் கோபத்தை வைப்பாரோ? அதை என்றென்றைக்கும் காப்பாரோ என்கிறாய் அல்லவோ? இதோ, இப்படி நீ சொல்லியும் பொல்லாப்புகளைச்செய்து, மிஞ்சிப்போகிறாய் என்கிறார்.
6யோசியா ராஜாவின் நாட்களிலே கர்த்தர் என்னை நோக்கி: சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் செய்ததைக் கண்டாயா? அவள் உயரமான சகல மலையின்மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும் போய், அங்கே வேசித்தனம்பண்ணினாள்.
7அவள் இப்படியெல்லாம் செய்த பின்பு: நீ என்னிடத்தில் திரும்பிவா என்று நான் சொன்னேன்; அவளோ திரும்பவில்லை; இதை அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி கண்டாள்.
8சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் விபசாரம்பண்ணின முகாந்தரங்கள் எல்லாவற்றினிமித்தமும் நான் அவளை அனுப்பிவிட்டு, அவளுடைய தள்ளுதற்சீட்டை அவளுக்குக் கொடுத்தபோதும், அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி பயப்படாமல்; இவளும் போய் வேசித்தனம்பண்ணினாள், இதை நான் கண்டேன்.
9பிரசித்தமான அவளுடைய வேசித்தனத்தினாலே தேசம் தீட்டுப்பட்டுப்போயிற்று; கல்லோடும் மரத்தோடும் விபசாரம்பண்ணிக்கொண்டிருந்தாள் என்றார்.
10இவைகளையெல்லாம் கண்டும், யூதா என்கிற அவளுடைய சகோதரியாகிய துரோகி, கள்ளத்தனமாய்த் திரும்பினாளேயன்றி, முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்பவில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.
11பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: யூதா என்கிற துரோகியைப்பார்க்கிலும் சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் தன்னை நீதியுள்ளவளாக்கினாள்.
12நீ போய் வடதிசையை நோக்கிக் கூறவேண்டிய வார்த்தைகள் என்னவென்றால்: சீர்கெட்ட இஸ்ரவேலே, திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள்மேல் என் கோபத்தை இறங்கப்பண்ணுவதில்லை; நான் கிருபையுள்ளவரென்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் என்றைக்கும் கோபம் வைக்கமாட்டேன்.
13நீயோ, உன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, பச்சையான சகல மரத்தின்கீழும் அந்நியரோடே சோரமார்க்கமாய் நடந்து, உன் அக்கிரமத்தையும், என் சத்தத்துக்குச் செவிகொடாமற்போனதையும் ஒத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
14சீர்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள் நாயகர்; நான் உங்களை ஊரில் ஒருவனும், வம்சத்தில் இரண்டு பேருமாகத் தெரிந்து, உங்களைச் சீயோனுக்கு அழைத்துக்கொண்டுவந்து,
15உங்களுக்கு என் இருதயத்துக்கு ஏற்ற மேய்ப்பர்களைக் கொடுப்பேன், அவர்கள் உங்களை அறிவோடும் புத்தியோடும் மேய்ப்பார்கள்.
16நீங்கள் தேசத்திலே பெருகிப் பலுகுகிற அந்நாட்களிலே, அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியென்று இனிச் சொல்வதில்லை; அது அவர்கள் மனதில் எழும்புவதும் இல்லை; அது அவர்கள் நினைவில் வருவதும் இல்லை; அதைக் குறித்து விசாரிப்பதும் இல்லை; அது இனிச் செப்பனிடப்படுவதும் இல்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.
17அக்காலத்திலே எருசலேமைக் கர்த்தருடைய சிங்காசனம் என்பார்கள்; சகல ஜாதியாரும் எருசலேமில் விளங்கிய கர்த்தருடைய நாமத்தினிமித்தம் அதினிடமாகச் சேர்வார்கள்; அவர்கள் இனித் தங்கள் பொல்லாத இருதயத்தின் இச்சையின்படி நடவார்கள்.
18அந்நாட்களிலே யூதா வம்சத்தார் இஸ்ரவேல் வம்சத்தாரோடே சேர்ந்து, அவர்கள் ஏகமாய் வடதேசத்திலிருந்து புறப்பட்டு, நான் தங்கள் பிதாக்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தேசத்திற்கு வருவார்கள்.
19நான் உன்னைப் பிள்ளைகளின் வரிசையிலே வைத்து, ஜனக்கூட்டங்களுக்குள்ளே நல்ல சுதந்தரமாகிய தேசத்தை உனக்குக் கொடுப்பது எப்படியென்று சொன்னேன்; ஆனாலும் நீ என்னை நோக்கி, என் பிதாவே என்று அழைப்பாய்; நீ என்னைவிட்டு விலகுவதில்லை என்று திரும்பவும் சொன்னேன்.
20ஒரு மனைவி தன் புருஷனுக்குத் துரோகம்செய்வதுபோல, இஸ்ரவேல் வம்சத்தாராகிய நீங்கள் எனக்குத் துரோகம்செய்தது மெய் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
21இஸ்ரவேல் புத்திரர் தங்கள் வழியை மாறுபாடாக்கி, தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்ததினிமித்தம் அழுதுகொண்டு விண்ணப்பஞ்செய்யும் சத்தம் உயர்ந்த ஸ்தானங்களிலே கேட்கப்படும்.
22சீர்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள்; உங்கள் சீர்கேடுகளைக் குணமாக்குவேன் என்றார். இதோ, உம்மிடத்தில் வருகிறோம்; நீரே எங்கள் தேவனாகிய கர்த்தர்.
23குன்றுகளையும், திரளான மலைகளையும் நம்புகிறது விருதா என்பது மெய்; இஸ்ரவேலின் இரட்சிப்பு எங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் இருப்பது என்பது மெய்யே.
24இந்த இலச்சையானது எங்கள் சிறுவயதுமுதல் எங்கள் பிதாக்களுடைய பிரயாசத்தையும், அவர்கள் ஆடுகளையும் மாடுகளையும், அவர்கள் குமாரரையும் குமாரத்திகளையும் பட்சித்துப்போட்டது.
25எங்கள் இலச்சையிலே கிடக்கிறோம்; எங்கள் அவமானம் எங்களை மூடியிருக்கிறது; நாங்களும், எங்கள் பிதாக்களும் எங்கள் சிறுவயது முதல் இந்நாள்வரைக்கும் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; எங்கள் தேவனாகிய கர்த்தருடைய சொல்லைக் கேளாமலும்போனோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *