Scripture Portion: Jeremiah 14-17

எரேமியா 14

1மழைத்தாழ்ச்சியைக் குறித்து எரேமியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்:
2யூதா துக்கிக்கிறது, அதின் வாசல்கள் பெலனற்றுக் கிடக்கிறது; தரைமட்டும் குனிந்து, கரிகறுத்துத் திரிகிறார்கள்; எருசலேமின் கூக்குரல் எழும்புகிறது.
3அவர்களில் பிரபலமானவர்கள் தங்கள் சிறுவர்களைத் தண்ணீருக்கு அனுப்புகிறார்கள்; இவர்கள் பள்ளங்களுக்குப்போய்த் தண்ணீரைக்காணாமல் வெறும் பாத்திரங்களோடே திரும்பிவருகிறார்கள்; வெட்கி நாணி, தங்கள் தலையை மூடிக்கொள்ளுகிறார்கள்.
4தேசத்தின்மேல் மழை இல்லாததினால் தரை வெடித்திருக்கிறது; பயிர் செய்கிறவர்கள் வெட்கி, தங்கள் தலையை மூடிக்கொள்ளுகிறார்கள்.
5வெளியின் பெண்மானும் குட்டிபோட்டு, புல்லில்லாததினால் அதை விட்டு ஓடிப்போகும்.
6காட்டுக்கழுதைகள் மேடுகளில் நின்று, வலுசர்ப்பங்களைப்போல் காற்றை உட்கொள்ளுகிறது; புல் இல்லாததினால் அவைகளுடைய கண்கள் பூத்துப்போகிறது என்றார்.
7கர்த்தாவே, எங்கள் அக்கிரமங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிட்டாலும், உம்முடைய நாமத்தினிமித்தம் கிருபைசெய்யும்; எங்கள் சீர்கேடுகள் மிகுதியாயிருக்கிறது; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம்.
8இஸ்ரவேலின் நம்பிக்கையே, ஆபத்துக்காலத்தில் அதின் இரட்சகரே, நீர் தேசத்தில் பரதேசியைப் போலவும், இராத்தங்க இறங்குகிற வழிப்போக்கனைப்போலவும் இருப்பானேன்?
9நீர் விடாய்த்துப்போன புருஷனைப்போலவும், இரட்சிக்கமாட்டாத பராக்கிரமசாலியைப்போலவும் இருப்பானேன்? கர்த்தாவே, நீர் எங்கள் நடுவிலிருக்கிறவராமே; உம்முடைய நாமம் எங்களுக்குத் தரிக்கப்பட்டுமிருக்கிறதே; எங்களைவிட்டுப்போகாதிரும்.
10அவர்கள் தங்கள் கால்களை அடக்கிக்கொள்ளாமல், அலைய விரும்புகிறார்களென்று கர்த்தர் இந்த ஜனத்தைக்குறித்துச் சொல்லுகிறார்; ஆகையால், கர்த்தர் அவர்கள்மேல் பிரியமாயிராமல், இப்பொழுது அவர்கள் அக்கிரமத்தை நினைத்து, அவர்கள் பாவங்களை விசாரிப்பார்.
11கர்த்தர் என்னை நோக்கி: நீ இந்த ஜனத்துக்கு நன்மையுண்டாக விண்ணப்பம்பண்ணவேண்டாம்.
12அவர்கள் உபவாசித்தாலும், நான் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்பதில்லை; அவர்கள் தகனபலிகளையும் காணிக்கைகளையும் செலுத்தினாலும், நான் அவர்கள்மேல் பிரியமாயிருப்பதில்லை; பட்டயத்தினாலும் பஞ்சத்தினாலும் கொள்ளை நோயினாலும் நான் அவர்களை நிர்மூலமாக்குவேன் என்றார்.
13அப்பொழுது நான்: ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நீங்கள் பட்டயத்தைக் காண்பதில்லை, உங்களுக்குப் பஞ்சமும் வருவதில்லை; உறுதியான சமாதானத்தையே இவ்விடத்தில் உங்களுக்குத் தருவோமென்றார் என்று தீர்க்கதரிசிகள் அவர்களுக்குச் சொல்லுகிறார்களே என்றேன்.
14அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: தீர்க்கதரிசிகள் என் நாமத்தைக்கொண்டு பொய்யாய்த் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறார்கள். நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை, அவர்களோடே பேசினதுமில்லை; அவர்கள் கள்ளத் தரிசனத்தையும், கள்ள சகுனத்தையும், இல்லாத விசேஷத்தையும், தங்கள் இருதயத்தின் கபடத்தையுமே, உங்களுக்குத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார்கள்.
15ஆதலால், நான் அனுப்பாதிருந்தும், என் நாமத்தைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, இந்தத் தேசத்திலே பட்டயமும் பஞ்சமும் வருவதில்லையென்கிற தீர்க்கதரிசிகளைக்குறித்து: இப்படிப்பட்ட தீர்க்கதரிசிகள் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் சாவார்கள்.
16அவர்களிடத்தில் தீர்க்கதரிசனம் கேட்கும் ஜனங்களும், எருசலேமின் வீதிகளிலே பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் அழிந்து, அவர்களும் அவர்கள் மனைவிகளும், அவர்கள் குமாரரும், அவர்கள் குமாரத்திகளும் அடக்கம்பண்ணுவாரில்லாமல் கிடப்பார்கள்; அவர்களுடைய பொல்லாப்பை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
17என் கண்களிலிருந்து இரவும்பகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்; என் ஜனமென்கிற குமாரத்தியாகிய கன்னிகை மகா வேதனையுள்ள அடியினாலும் கொடிய காயத்தினாலும் சேதப்பட்டிருக்கிறாள்.
18நான் வெளியே போனால், இதோ, பட்டயத்தால் கொல்லப்பட்டவர்கள்; நகரத்தில் வந்தால் இதோ, பஞ்சத்தால் வருந்துகிறவர்கள்; தீர்க்கதரிசிகளும் ஆசாரியர்களும் ஒன்றும் அறியாமல் தேசத்தில் அலைகிறார்கள் என்னும் இந்த வார்த்தையை அவர்களுக்குச் சொல் என்றார்.
19யூதாவை முற்றிலும் வெறுத்தீரோ? சீயோன் உம்முடைய ஆத்துமாவுக்கு அரோசிகமாயிற்றோ? நாங்கள் ஆரோக்கியம் அடையக்கூடாதபடி எங்களை ஏன் அடித்தீர்? சமாதானத்துக்குக் காத்திருந்தோம், ஒரு நன்மையுமில்லை; ஆரோக்கிய காலத்துக்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து.
20கர்த்தாவே, எங்கள் தீமையையும் எங்கள் பிதாக்களின் அக்கிரமத்தையும் நாங்கள் அறிந்திருக்கிறோம்; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம்.
21உம்முடைய நாமத்தினிமித்தம் எங்களை அருவருக்காதிரும், உமது மகிமையின் சிங்காசனத்தைக் கனவீனப்படுத்தாதேயும்; எங்களோடே உமக்கு இருக்கிற உடன்படிக்கை அபத்தமாகாதபடி எங்களை நினைத்தருளும்.
22புறஜாதிகளுடைய வீணான தேவர்களுக்குள் மழை வருஷிக்கப்பண்ணத்தக்கவர்கள் உண்டோ? அல்லது, வானங்கள் தானாய் மழைகளைக் கொடுக்குமோ? எங்கள் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நீரல்லவோ அதைச் செய்கிறவர்; ஆகையால், உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் இவைகளையெல்லாம் உண்டுபண்ணினீர்.

எரேமியா 15

1கர்த்தர் என்னை நோக்கி: மோசேயும் சாமுவேலும் என் முகத்துக்கு முன்பாக நின்றாலும், என் மனம் இந்த ஜனங்கள் பட்சமாய்ச் சாராது; இவர்கள் என் முகத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்படி இவர்களைத் துரத்திவிடு.
2எங்கே புறப்பட்டுப்போவோம் என்று இவர்கள் உன்னைக் கேட்டால், நீ அவர்களை நோக்கி: சாவுக்கு ஏதுவானவர்கள் சாவுக்கும், பட்டயத்துக்கு ஏதுவானவர்கள் பட்டயத்துக்கும், பஞ்சத்துக்கு ஏதுவானவர்கள் பஞ்சத்துக்கும், சிறையிருப்புக்கு ஏதுவானவர்கள் சிறையிருப்புக்கும் நேராய்ப் போகவேண்டும் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லு,
3கொன்றுபோடப் பட்டயமும், பிடித்து இழுக்க நாய்களும், பட்சித்து அழிக்க ஆகாயத்துப் பறவைகளும், பூமியின் மிருகங்களும் ஆகிய நான்கு விதமான வாதைகளை நான் அவர்கள்மேல் வரக் கட்டளையிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
4எசேக்கியாவின் குமாரனும், யூதாவின் ராஜாவுமாகிய மனாசே எருசலேமில் செய்தவைகளினிமித்தம் அவர்களைப் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் அலையப்பண்ணுவேன்.
5எருசலேமே, யார் உன்மேல் இரங்குவார்கள்? யார் உன்மேல் பரிதபிப்பார்கள்? யார் உன்னிடத்திற்குத் திரும்பி, உன் சுகசெய்தியை விசாரிப்பார்கள்?
6நீ என்னைவிட்டுப் பின்வாங்கிப்போனாய்; ஆகையால், என் கையை உனக்கு விரோதமாய் நீட்டி, உன்னை அழிப்பேன்; நான் பொறுத்துப்பொறுத்து இளைத்துப்போனேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
7தேசத்தின் வாசல்களில் அவர்களைத் தூற்றுக்கூடையால் தூற்றிப்போடுவேன்; என் ஜனங்கள் தங்கள் வழிகளைவிட்டுத் திரும்பாதபடியினால் நான் அவர்களைப் பிள்ளைகள் அற்றவர்களாக்கி அழிப்பேன்.
8கடற்கரை மணலைப்பார்க்கிலும் அதிக விதவைகள் அவர்களில் உண்டாயிருப்பார்கள்; பட்டப்பகலிலே பாழாக்குகிறவனைத் தாயின்மேலும் பிள்ளைகளின்மேலும் வரப்பண்ணுவேன்; அவர்கள்மேல் பட்டணத்தின் கலகத்தையும் பயங்கரங்களையும் விழப்பண்ணுவேன்.
9ஏழு பிள்ளைகளைப் பெற்றவள் களைத்துப்போகிறாள்; அவள் தன் பிராணனை விட்டுவிட்டாள்; இன்னும் பகலாயிருக்கையில் அவளுடைய சூரியன் அஸ்தமித்தது; வெட்கமும் இலச்சையும் அடைந்தாள்; அவர்களில் மீதியாகிறவர்களையோ அவர்களுடைய சத்துருக்களுக்கு முன்பாகப் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
10என் தாயே, தேசத்துக்கெல்லாம் வழக்குக்கும் வாதுக்கும் உள்ளானவனாயிருக்கும்படி என்னை நீ பெற்றாயே; ஐயோ! நான் அவர்களுக்கு வட்டிக்குக் கொடுத்ததுமில்லை, அவர்கள் எனக்கு வட்டிக்குக் கொடுத்ததுமில்லை; ஆனாலும், எல்லாரும் என்னைச் சபிக்கிறார்கள்.
11உன்னில் மீதியாயிருப்பவர்கள் நன்மையடைவார்கள்; தீங்கின் காலத்திலும் நெருக்கத்தின் காலத்திலும் உனக்காக நான் சத்துருவுக்கு எதிர்ப்பட்டு, உனக்குச் சகாயஞ்செய்வேன் என்று மெய்யாகவே சொல்லுகிறேன்.
12வடக்கேயிருந்து வரும் இரும்பையும் வெண்கலத்தையும் இரும்பு நொறுக்குமோ?
13உன்னுடைய எல்லாப் பாவங்களினிமித்தமும், உன்னுடைய எல்லா எல்லைகளிலும், நான் உன் ஆஸ்தியையும், உன் பொக்கிஷங்களையும் கிரயமில்லாமல் சூறையிடுவிப்பேன்.
14நீ அறியாத தேசத்தில் உன் சத்தருக்கள் வசமாக நான் உன்னைத் தாண்டிப்போகப்பண்ணுவேன்; உங்கள்மேல் எரியப்போகிற அக்கினி என்கோபத்தினாலே மூண்டது என்று கர்த்தர் சொன்னார்.
15கர்த்தாவே, நீர் அதை அறிவீர்; தேவரீர் என்னை நினைத்து, என்னை விசாரித்து, என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு என்னிமித்தம் நீதியைச் சரிக்கட்டும்; உம்முடைய நீடிய பொறுமையினிமித்தம் என்னை வாரிக்கொள்ளாதிரும்; நான் உம்முடைய நிமித்தம் நிந்தையைச் சகிக்கிறேன் என்று அறியும்.
16உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது.
17நான் பரியாசக்காரருடைய கூட்டத்தில் உட்கார்ந்து களிகூர்ந்ததில்லை; உமது கரத்தினிமித்தம் தனித்து உட்கார்ந்தேன்; சலிப்பினால் என்னை நிரப்பினீர்.
18என் நோவு நித்தியகாலமாகவும், என் காயம் ஆறாத கொடிய புண்ணாகவும் இருப்பானேன்? நீர் எனக்கு நம்பப்படாத ஊற்றைப்போலவும், வற்றிப்போகிற ஜலத்தைப்போலவும் இருப்பீரோ?
19இதினிமித்தம் நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்பச் சீர்ப்படுத்துவேன்; என் முகத்துக்கு முன்பாக நிலைத்துமிருப்பாய்; நீ தீழ்ப்பானதினின்று விலையேறப்பெற்றதைப் பிரித்தெடுத்தால், என் வாய் போலிருப்பாய்; நீ அவர்களிடத்தில் திரும்பாமல், அவர்கள் உன்னிடத்தில் திரும்புவார்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார்.
20உன்னை இந்த ஜனத்துக்கு எதிரே அரணான வெண்கல அலங்கமாக்குவேன்; அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும், நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
21நான் உன்னைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவித்து, உன்னைப் பலவந்தரின் கைக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன் என்கிறார்.

எரேமியா 16

1கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2நீ பெண்ணை விவாகம்பண்ணவேண்டாம்; இவ்விடத்தில் உனக்குக் குமாரரும் குமாரத்திகளும் இருக்கவேண்டாம் என்றார்.
3இவ்விடத்திலே பிறக்கிற குமாரரையும் குமாரத்திகளையும், இந்த தேசத்தில் அவர்களைப் பெற்ற தாய்களையும் அவர்களைப் பெற்ற பிதாக்களையுங்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்,
4மகா கொடிய வியாதிகளால் சாவார்கள், அவர்களுக்காகப் புலம்புவாரும், அவர்களை அடக்கம்பண்ணுவாருமில்லை, நிலத்தின்மேல் எருவாவார்கள்; பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் மடிந்து போவார்கள்; அவர்களுடைய பிரேதம் ஆகாசத்துப்பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்.
5ஆகையால், நீ துக்கவீட்டில் பிரவேசியாமலும், புலம்பப்போகாமலும் அவர்களுக்கு பரிதபிக்காமலும் இருப்பாயாக என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் சமாதானத்தையும், கிருபையையும், இரக்கத்தையும், இந்த ஜனத்தைவிட்டு எடுத்துப்போட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
6இந்த தேசத்திலே பெரியோரும் சிறியோரும் சாவார்கள்; அவர்களை அடக்கம்பண்ணுவாரில்லை; அவர்களுக்காகப் புலம்புவாருமில்லை; அவர்கள்நிமித்தம் கீறிக்கொண்டு, மொட்டையடித்துக்கொள்வாருமில்லை.
7செத்தவர்கள் நிமித்தம் உண்டான துக்கத்தை ஆற்ற அவர்களுக்கு அப்பம் பங்கிடப்படுவதுமில்லை; ஒருவனுடைய தகப்பனுக்காவது, ஒருவனுடைய தாய்க்காவது துக்கப்படுகிறவர்களுக்குத் தேற்றரவின் பாத்திரத்தைக் குடிக்கக்கொடுப்பாருமில்லை.
8நீ அவர்களோடே புசித்துக்குடிக்க உட்காரும்படி விருந்துவீட்டிலும் பிரவேசியாயாக.
9ஏனெனில், இதோ, இவ்விடத்திலே நான் உங்கள் கண்களுக்கு முன்பாகவும், உங்கள் நாட்களிலுமே, சந்தோஷத்தின் சத்தத்தையும், மகிழ்ச்சியின் சத்தத்தையும், மணவாளனின் சத்தத்தையும், மணவாட்டியின் சத்தத்தையும் ஓயப்பண்ணுவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
10நீ இந்த வார்த்தைகளையெல்லாம் இந்த ஜனத்துக்கு அறிவிக்கும்போது, அவர்கள் உன்னை நோக்கி: கர்த்தர் எங்கள்மேல் இத்தனை பெரிய தீங்கைக் கூறுவானேனென்றும், நாங்கள் செய்த அக்கிரமம் என்ன? நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகச் செய்த எங்கள் பாவம் என்ன? என்றும் கேட்பார்களானால்,
11நீ அவர்களை நோக்கி: உங்கள் பிதாக்கள் என்னைவிட்டு அந்நியதேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்துகொண்டு, என் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாமல் என்னை விட்டுவிட்டார்களே.
12நீங்கள் உங்கள் பிதாக்களைப் பார்க்கிலும் அதிக கேடாக நடந்தீர்களே; இதோ, உங்களில் ஒவ்வொருவரும் என் சொல்லைக் கேளாதபடிக்கு, உங்கள் பொல்லாத இருதயக் கடினத்தின்படி நடக்கிறீர்கள்.
13ஆதலால், உங்களை இந்த தேசத்திலிருந்து நீங்களும் உங்கள் பிதாக்களும் அறியாத தேசத்திற்குத் துரத்திவிடுவேன்; அங்கே இரவும் பகலும் அந்நிய தேவர்களைச் சேவிப்பீர்கள்; அங்கே நான் உங்களுக்குத் தயை செய்வதில்லை.
14ஆதலால், இதோ, நாட்கள் வரும், அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு இனிமேல் சத்தியம்பண்ணாமல்,
15இஸ்ரவேல் புத்திரரை வடதேசத்திலும், தாம் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா தேசங்களிலுமிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்பண்ணுவார்கள்; நான் அவர்கள் பிதாக்களுக்குக்கொடுத்த அவர்களுடைய தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
16இதோ, நான் மீன்பிடிக்கிற அநேகரை அழைத்தனுப்புவேன், இவர்கள் அவர்களைப் பிடிப்பார்கள்; அதற்குப் பின்பு வேட்டைக்காரராகிய அநேகரை அழைத்தனுப்புவேன், இவர்கள் அவர்களை எல்லா மலைகளிலும், எல்லாக் குன்றுகளிலும், கன்மலைகளின் வெடிப்புகளிலும் வேட்டையாடுவார்கள்.
17என் கண்கள் அவர்களுடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கிறது; அவைகள் என் முகத்துக்கு முன்பாக மறைந்திருக்கிறதில்லை; அவர்களுடைய அக்கிரமம் என் கண்களுக்கு முன்பாக மறைவாயிருக்கிறதுமில்லை.
18முதலாவது நான் அவர்களுடைய அக்கிரமத்துக்கும், அவர்களுடைய பாவத்துக்கும் இரட்டிப்பாய் நீதியைச் சரிக்கட்டுவேன்; அவர்கள் என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி, என் சுதந்தரத்தைச் சீயென்று அருவருக்கப்படத்தக்க தங்கள் காரியங்களின் நாற்றமான விக்கிரகங்களினாலே நிரப்பினார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
19என் பெலனும், என் கோட்டையும், நெருக்கப்படுகிற நாளில் என் அடைக்கலமுமாகிய கர்த்தாவே, புற ஜாதிகள் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து உம்மிடத்தில் வந்து: மெய்யாகவே, எங்கள் பிதாக்கள் பிரயோஜனமில்லாத பொய்யையும் மாயையையும் கைப்பற்றினார்கள் என்பார்கள்.
20மனுஷன் தனக்கு தேவர்களை உண்டுபண்ணலாமோ? அவைகள் தேவர்கள் அல்லவே.
21ஆதலால், இதோ, இப்பொழுது நான் அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன்; என் கரத்தையும் என் பெலத்தையுமே அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன்; என் நாமம் யேகோவா என்று அறிந்துகொள்வார்கள்.

எரேமியா 17

1யூதாவின் பாவம் இரும்பெழுத்தாணியினாலும், வைரத்தின் நுனியினாலும் எழுதப்பட்டு, அவர்களுடைய இருதயத்தின் பலகையிலும் உங்கள் பலிபீடங்களுடைய கொம்புகளிலும் பதிந்திருக்கிறது.
2உயர்ந்த மேடுகளின்மேல் பச்சையான மரங்களண்டையில் இருந்த அவர்களுடைய பலிபீடங்களையும் அவர்களுடைய தோப்புகளையும் அவர்கள் பிள்ளைகள் நினைக்கும்படி இப்படிச் செய்திருக்கிறது.
3வயல்நிலத்திலுள்ள என் மலையே, நீ உன் எல்லைகளிலெல்லாம் செய்த பாவத்தினிமித்தம் நான் உன் ஆஸ்தியையும், உன் எல்லாப் பொக்கிஷங்களையும், உன் மேடைகளையுங்கூடச் சூறையிடுவிப்பேன்.
4அப்படியே நான் உனக்குக் கொடுத்த சுதந்தரத்தை நீதானே விட்டுவிடுவாய்; நீ அறியாத தேசத்தில் உன்னை உன் சத்துருக்களுக்கு அடிமையுமாக்குவேன்; என்றென்றைக்கும் எரியத்தக்க என் கோபத்தின் அக்கினியை மூட்டிவிட்டீர்களே.
5மனுஷன்மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
6அவன் அந்தரவெளியில் கறளையாய்ப்போன செடியைப்போலிருந்து, நன்மைவருகிறதைக் காணாமல், வனாந்தரத்தின் வறட்சியான இடங்களிலும், குடியில்லாத உவர்நிலத்திலும் தங்குவான்.
7 கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக்கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
8அவன் தண்ணீரண்டையில் நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்.
9எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?
10 கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.
11அநியாயமாய் ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறவன் முட்டையிட்டு அவயங்காத்தும், குஞ்சுபொரிக்காமற்போகிற கவுதாரிக்குச் சமானமாயிருக்கிறான்; அவன் தன் பாதி வயதிலே அதைவிட்டு, தன் முடிவிலே மூடனாயிருப்பான்.
12எங்கள் பரிசுத்த ஸ்தானம் ஆதிமுதற்கொண்டு உயர்ந்த மகிமையுள்ள சிங்காசனமாயிருக்கிறது.
13இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய கர்த்தாவே, உம்மைவிட்டு விலகுகிறயாவரும் வெட்கப்படுவார்கள்; அவர்கள் ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றாகிய கர்த்தரை விட்டு விலகிப்போனபடியால், உம்மைவிட்டு அகன்றுபோகிறவர்களின் பெயர் புழுதியில் எழுதப்படும்.
14 கர்த்தாவே, என்னைக் குணமாக்கும், அப்பொழுது குணமாவேன்; என்னை இரட்சியும், அப்பொழுது இரட்சிக்கப்படுவேன்; தேவரீரே என் துதி.
15இதோ, இவர்கள் என்னைப் பார்த்து: கர்த்தருடைய வார்த்தை எங்கே? அது இப்பொழுது வரட்டும் என்கிறார்கள்.
16நானோ உம்மைப் பின்பற்றுகிற மேய்ப்பன், இதற்கு நான் மிஞ்சி நடக்கவில்லை; ஆபத்துநாளை விரும்புகிறதுமில்லையென்று நீர் அறிவீர்; என் உதடுகளிலிருந்து புறப்பட்டது உமக்கு முன்பாகச் செவ்வையாயிருந்தது.
17நீர் எனக்குப் பயங்கரமாயிராதேயும்; தீங்குநாளில் நீரே என் அடைக்கலம்.
18நான் வெட்கப்படாமல், என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் வெட்கப்படுவார்களாக; நான் கலங்காமல், அவர்கள் கலங்குவார்களாக; தேவரீர் தீங்குநாளை அவர்கள்மேல் வரப்பண்ணி, இரட்டிப்பான நொறுக்குதலால் அவர்களை நொறுக்கும்.
19 கர்த்தர் என்னை நோக்கி: நீ போய் யூதாவின் ராஜாக்கள் வரத்தும்போக்குமாயிருக்கிற இந்த ஜனங்களின் புத்திரருடைய வாசலிலும் எருசலேமின் எல்லா வாசல்களிலும் நின்றுகொண்டு,
20அவர்களுடனே சொல்லவேண்டியது என்னவென்றால்: இந்த வாசல்களில் பிரவேசிக்கிற யூதாவின் ராஜாக்களும், எல்லா யூதரும், எருசலேமின் எல்லாக் குடிகளுமாகிய நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
21நீங்கள் ஓய்வுநாளில் சுமைகளை எடுத்து, அவைகளை எருசலேமின் வாசல்களுக்குள் கொண்டுவராதபடிக்கும்,
22ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்து சுமையை வெளியே கொண்டுபோகாதபடிக்கும், ஒரு வேலையையும் செய்யாதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களுக்காக எச்சரிக்கையாயிருந்து, நான் உங்கள் பிதாக்களுக்குக் கட்டளையிட்டபடி ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்குங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
23அவர்களோ கேளாமலும் தங்கள் செவிகளைச் சாயாமலும் போய்க் கேளாதபடிக்கும் புத்தியை ஏற்றுக்கொள்ளாதபடிக்கும், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தினார்கள்.
24நீங்களோவெனில், ஓய்வுநாளில் இந்த நகரத்தின் வாசல்களுக்குள்ளே சுமையைக் கொண்டுவராதபடிக்கும், ஓய்வுநாளில் ஒரு வேலையையும் செய்யாமல் அதைப் பரிசுத்தமாக்கும்படிக்கும் என் சொல்லைக் கேட்பீர்களானால்,
25அப்பொழுது தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிறவர்களும், இரதங்களின்மேலும் குதிரைகளின்மேலும் ஏறுகிறவர்களுமாகிய ராஜாக்களும் ராஜகுமாரர்களும், அவர்கள் பிரபுக்களும், யூதாவின் மனுஷரும், எருசலேமின் குடிகளும் இந்த நகரத்தின் வாசல்களுக்குள் பிரவேசிப்பார்கள்; இந்த நகரமும் என்றைக்கும் குடியுள்ளதாயிருக்கும்.
26யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமின் சுற்றுப்புறமான ஊர்களிலும், பென்யமீன் தேசத்திலும், பள்ளத்தாக்கான சீமையிலும், மலைநாட்டிலும், தெற்கிலுமிருந்து ஜனங்கள் சர்வாங்க தகனங்களையும், பலிகளையும், போஜனபலிகளையும், தூபவர்க்கங்களையும், ஸ்தோத்திரபலிகளையும் கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவருவார்கள்.
27நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கும்படிக்கும் ஓய்வுநாளிலே சுமையை எருசலேமின் வாசல்களுக்குள் எடுத்துவராதிருக்கும்படிக்கும், என் சொல்லைக் கேளாமற்போனீர்களாகில், நான் அதின் வாசல்களில் தீக்கொளுத்துவேன்; அது எருசலேமின் அரமனைகளைப் பட்சித்தும், அவிந்து போகாதிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *