Scripture Portion: Genesis 35-37

ஆதியாகமம் 35

1தேவன் யாக்கோபை நோக்கி: நீ எழுந்து பெத்தேலுக்குப் போய், அங்கே குடியிருந்து, நீ உன் சகோதரனாகிய ஏசாவின் முகத்திற்கு விலகி ஓடிப்போகிறபோது, உனக்குத் தரிசனமான தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு என்றார்.
2அப்பொழுது யாக்கோபு தன் வீட்டாரையும் தன்னோடேகூட இருந்த மற்ற அனைவரையும் நோக்கி: உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம்பண்ணிக் கொண்டு, உங்கள் வஸ்திரங்களை மாற்றுங்கள்.
3நாம் எழுந்து பெத்தேலுக்குப் போவோம் வாருங்கள்; எனக்கு ஆபத்து நேரிட்ட நாளில் என் விண்ணப்பத்துக்கு உத்தரவு அருளிச்செய்து, நான் நடந்த வழியிலே என்னோடேகூட இருந்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்குவேன் என்றான்.
4அப்பொழுது அவர்கள் தங்கள் கையில் இருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதணிகளையும் யாக்கோபிடத்தில் கொடுத்தார்கள்; யாக்கோபு அவைகளைச் சீகேம் ஊர் அருகே இருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழே புதைத்துப் போட்டான்.
5பின்பு பிரயாணம் புறப்பட்டார்கள்; அவர்களைச் சுற்றிலும் இருந்த பட்டணத்தாருக்குத் தேவனாலே பயங்கரம் உண்டானதினால், அவர்கள் யாக்கோபின் குமாரரைப் பின்தொடராதிருந்தார்கள்.
6யாக்கோபும் அவனோடேகூட இருந்த எல்லா ஜனங்களும் கானான் தேசத்திலுள்ள பெத்தேல் என்னும் லூசுக்கு வந்தார்கள்.
7அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, தன் சகோதரனுடைய முகத்துக்குத் தப்பி ஓடினபோது, அங்கே தனக்கு தேவன் தரிசனமானபடியால், அந்த ஸ்தலத்திற்கு ஏல்பெத்தேல் என்று பேரிட்டான்.
8ரெபெக்காளின் தாதியாகிய தெபொராள் மரித்து, பெத்தேலுக்குச் சமீபமாயிருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழ் அடக்கம்பண்ணப்பட்டாள்; அதற்கு அல்லோன்பாகூத் என்னும் பேர் உண்டாயிற்று.
9யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின்பு தேவன் அவனுக்கு மறுபடியும் தரிசனமாகி, அவனை ஆசீர்வதித்து:
10இப்பொழுது உன் பேர் யாக்கோபு, இனி உன் பேர் யாக்கோபு என்னப்படாமல், இஸ்ரவேல் என்று உனக்குப் பேர் வழங்கும் என்று சொல்லி, அவனுக்கு இஸ்ரவேல் என்று பேரிட்டார்.
11பின்னும் தேவன் அவனை நோக்கி: நான் சர்வவல்லமையுள்ள தேவன், நீ பலுகிப் பெருகுவாயாக; ஒரு ஜாதியும் பற்பல ஜாதிகளின் கூட்டங்களும் உன்னிலிருந்து உண்டாகும்; ராஜாக்களும் உன் சந்ததியில் பிறப்பார்கள்.
12நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் கொடுத்த தேசத்தை உனக்குக் கொடுப்பேன்; உனக்குப்பின் உன் சந்ததிக்கும் இந்த தேசத்தைக் கொடுப்பேன் என்று சொல்லி,
13தேவன் அவனோடே பேசின ஸ்தலத்திலிருந்து அவனைவிட்டு எழுந்தருளிப்போனார்.
14அப்பொழுது யாக்கோபு தன்னோடே அவர் பேசின ஸ்தலத்திலே ஒரு கற்றூணை நிறுத்தி, அதின்மேல் பானபலியை ஊற்றி, எண்ணையையும் வார்த்தான்.
15தேவன் தன்னோடே பேசின அந்த ஸ்தலத்திற்கு யாக்கோபு பெத்தேல் என்று பேரிட்டான்.
16பின்பு, பெத்தேலை விட்டுப் பிரயாணம் புறப்பட்டார்கள். எப்பிராத்தாவுக்கு வர இன்னும் கொஞ்சம் தூரமிருக்கும்போது, ராகேல் பிள்ளைபெற்றாள்; பிரசவத்தில் அவளுக்குக் கடும்வேதனை உண்டாயிற்று.
17பிரசவிக்கும்போது, அவளுக்குக் கடும் வேதனையாயிருக்கையில், மருத்துவச்சி அவளைப் பார்த்து: பயப்படாதே, இந்த முறையும் புத்திரனைப் பெறுவாய் என்றாள்.
18மரணகாலத்தில் அவள் ஆத்துமா பிரியும் போது, அவள் அவனுக்கு பெனொனி என்று பேரிட்டாள்; அவன் தகப்பனோ, அவனுக்கு பென்யமீன் என்று பேரிட்டான்.
19ராகேல் மரித்து, பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம் பண்ணப்பட்டாள்.
20அவள் கல்லறையின்மேல் யாக்கோபு ஒரு தூணை நிறுத்தினான்; அதுவே இந்நாள் வரைக்கும் இருக்கிற ராகேலுடைய கல்லறையின் தூண்.
21இஸ்ரவேல் பிரயாணம்பண்ணி, ஏதேர் என்கிற கோபுரத்திற்கு அப்புறத்தில் கூடாரம் போட்டான்.
22இஸ்ரவேல் அந்த தேசத்தில் தங்கிக் குடியிருக்கும்போது, ரூபன் போய், தன் தகப்பனுடைய மறுமனையாட்டியாகிய பில்காளோடே சயனித்தான்; அதை இஸ்ரவேல் கேள்விப்பட்டான்.
23யாக்கோபின் குமாரர் பன்னிரண்டு பேர். யாக்கோபின் மூத்தமகனாகிய ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன் என்பவர்கள் லேயாள் பெற்ற குமாரர்.
24யோசேப்பு, பென்யமீன் என்பவர்கள் ராகேல் பெற்ற குமாரர்.
25தாண், நப்தலி என்பவர்கள் ராகேலுடைய பணிவிடைக்காரியாகிய பில்காள் பெற்ற குமாரர்.
26காத், ஆசேர் என்பவர்கள் லேயாளின் பணிவிடைக்காரியாகிய சில்பாள் பெற்ற குமாரர்; இவர்களே யாக்கோபுக்குப் பதான் அராமிலே பிறந்த குமாரர்.
27பின்பு, யாக்கோபு அர்பாவின் ஊராகிய மம்ரேக்கு தன் தகப்பனாகிய ஈசாக்கினிடத்தில் வந்தான்; அது ஆபிரகாமும் ஈசாக்கும் தங்கியிருந்த எபிரோன் என்னும் ஊர்.
28ஈசாக்கு விருத்தாப்பியமும் பூரண ஆயுசுமுள்ளவனாகி, நூற்றெண்பது வருஷம் ஜீவித்திருந்து,
29பிராணன்போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான். அவன் குமாரராகிய ஏசாவும் யாக்கோபும் அவனை அடக்கம்பண்ணினார்கள்.

ஆதியாகமம் 36

1ஏதோமியரின் தகப்பனாகிய ஏசாவின் வம்ச வரலாறு:
2ஏசா கானான் தேசத்துப் பெண்களில் ஏத்தியனான ஏலோனின் குமாரத்தியாகிய ஆதாளையும், ஏவியனாகிய சிபியோனின் குமாரத்தியும் ஆனாகின் குமாரத்தியுமாகிய அகோலிபாமாளையும்,
3இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய பஸ்மாத்தையும் விவாகம் பண்ணியிருந்தான்.
4ஆதாள் ஏசாவுக்கு எலீப்பாசைப் பெற்றாள்; பஸ்மாத்து ரெகுவேலைப் பெற்றாள்.
5அகோலிபாமாள் எயூஷையும், யாலாமையும், கோராகையும் பெற்றாள்; இவர்களே ஏசாவுக்குக் கானான் தேசத்திலே பிறந்த குமாரர்.
6ஏசா தன் மனைவிகளையும், தன் குமாரரையும், தன் குமாரத்திகளையும், தன் வீட்டிலுள்ள யாவரையும், தன் ஆடுமாடுகளையும், மற்ற ஜீவஜந்துக்கள் யாவையும், தான் கானான் தேசத்திலே சம்பாதித்த ஆஸ்தி முழுவதையும் சேர்த்துக்கொண்டு, தன் சகோதரனாகிய யாக்கோபை விட்டுப் பிரிந்து வேறே தேசத்துக்குப்போனான்.
7அவர்களுடைய சம்பத்து மிகுதியாயிருந்தபடியினால் அவர்கள் ஒருமித்துக் குடியிருக்கக் கூடாமற்போயிற்று; அவர்களுடைய மந்தைகளினிமித்தமாய் அவர்கள் தங்கியிருந்த பூமி அவர்களைத் தாங்கக்கூடாததாயிருந்தது.
8ஆதலால் ஏசா சேயீர்மலையில் குடியேறினான்; ஏசாவுக்கு ஏதோம் என்றும் பேர்.
9சேயீர்மலையில் இருக்கிற ஏதோமியருடைய தகப்பனாகிய ஏசாவின் சந்ததிகளும்,
10ஏசாவின் குமாரருடைய நாமங்களுமாவன: ஏசாவின் மனைவியாகிய ஆதாளுடைய குமாரனுக்கு எலீப்பாஸ் என்று பேர்; ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்துடைய குமாரனுக்கு ரெகுவேல் என்று பேர்.
11எலீப்பாசின் குமாரர், தேமான், ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ் என்பவர்கள்.
12திம்னாள் ஏசாவின் குமாரனாகிய எலீப்பாசுக்கு மறுமனையாட்டியாயிருந்து, எலீப்பாசுக்கு அமலேக்கைப் பெற்றாள்; இவர்களே ஏசாவின் மனைவியாகிய ஆதாளுடைய புத்திரர்.
13ரெகுவேலுடைய குமாரர், நகாத், செராகு, சம்மா, மீசா என்பவர்கள்; இவர்களே ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் புத்திரர்.
14சிபியோனின் குமாரத்தியும் ஆனாகின் குமாரத்தியுமான அகோலிபாமாள் என்கிற ஏசாவின் மனைவி எயூஷ், யாலாம், கோராகு என்னும் புத்திரரை ஏசாவுக்குப் பெற்றாள்.
15ஏசாவின் குமாரரில் தோன்றிய பிரபுக்களாவன: ஏசாவுக்கு மூத்த மகனாகிய எலீப்பாசுடைய குமாரரில் தேமான் பிரபு, ஓமார் பிரபு, செப்போ பிரபு, கேனாஸ் பிரபு,
16கோராகு பிரபு, கத்தாம் பிரபு, அமலேக்கு பிரபு என்பவர்கள்; இவர்கள் ஏதோம் தேசத்தில் எலீப்பாசின் சந்ததியும் ஆதாளின் குமாரருமாயிருந்த பிரபுக்கள்.
17ஏசாவின் குமாரனாகிய ரெகுவேலின் புத்திரரில் நகாத் பிரபு, செராகு பிரபு, சம்மா பிரபு, மீசா பிரபு என்பவர்கள்; இவர்கள் ஏதோம் தேசத்தில் ரெகுவேலின் சந்ததியும் ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் குமாரருமாயிருந்த பிரபுக்கள்.
18ஏசாவின் மனைவியாகிய அகோலிபாமாளின் குமாரர், எயூஷ் பிரபு, யாலாம் பிரபு, கோராகு பிரபு என்பவர்கள்; இவர்கள் ஆனாகின் குமாரத்தியும் ஏசாவுடைய மனைவியுமாகிய அகோலிபாமாளின் சந்ததியாயிருந்த பிரபுக்கள்.
19இவர்களே ஏதோம் என்னும் ஏசாவின் சந்ததி; இவர்களே அவர்களிலிருந்த பிரபுக்கள்.
20அந்தத் தேசத்தின் குடிகளாகிய ஓரியனான சேயீரின் குமாரர், லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு,
21திஷோன், ஏத்சேர், திஷான் என்பவர்கள்; இவர்களே ஏதோம் தேசத்தில் சேயீரின் புத்திரராகிய ஓரியருடைய சந்ததியாயிருந்த பிரபுக்கள்.
22லோத்தானுடைய குமாரர், ஓரி, ஏமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள்.
23சோபாலின் குமாரர், அல்வான், மானகாத், ஏபால், செப்போ, ஓனாம் என்பவர்கள்.
24சிபியோனின் குமாரர், அயா, ஆனாகு என்பவர்கள்; வனாந்தரத்திலே தன் தகப்பனாகிய சீபெயோனின் கழுதைகளை மேய்க்கையில், கோவேறு கழுதைகளைக் கண்டுபிடித்த ஆனாகு இவன்தான்.
25ஆனாகின் பிள்ளைகள், திஷோன், அகோலிபாமாள் என்பவர்கள்; இந்த அகோலிபாமாள் ஆனாகின் குமாரத்தி.
26திஷோனுடைய குமாரர், எம்தான், எஸ்பான், இத்தரான், கெரான் என்பவர்கள்.
27ஏத்சேருடைய குமாரர், பில்கான், சகவான், அக்கான் என்பவர்கள்.
28திஷானுடைய குமாரர், ஊத்ஸ், அரான் என்பவர்கள்.
29ஓரியரின் சந்ததியில் தோன்றிய பிரபுக்கள், லோத்தான் பிரபு, சோபால் பிரபு, சிபியோன் பிரபு, ஆனாகு பிரபு.
30திஷோன் பிரபு, ஏத்சேர் பிரபு, திஷான் பிரபு என்பவர்கள்; இவர்களே சேயீர் தேசத்திலே தங்கள் தங்கள் இடங்களில் இருந்த ஓரியர் சந்ததியான பிரபுக்கள்.
31இஸ்ரவேல் புத்திரர்மேல் ராஜாக்கள் அரசாளுகிறதற்கு முன்னே, ஏதோம் தேசத்திலே ஆண்ட ராஜாக்களாவன:
32பேயோருடைய குமாரனாகிய பேலா ஏதோமிலே அரசாண்டான்; அவனுடைய பட்டணத்துக்குத் தின்காபா என்று பேர்.
33பேலா மரித்தபின், போஸ்றா பட்டணத்தானாகிய சேராகுடைய குமாரனாகிய யோபாப் அவன் பட்டத்திற்கு வந்தான்.
34யோபாப் மரித்தபின், தேமானிய தேசத்தானாகிய உஷாம் அவன் பட்டத்திற்கு வந்தான்.
35உஷாம் மரித்தபின், மோவாபின் நாட்டிலே மீதியானியரை முறிய அடித்த பேதாதின் குமாரனாகிய ஆதாத் அவன் பட்டத்திற்கு வந்தான்; அவனுடைய பட்டணத்துக்கு ஆவீத் என்று பேர்.
36ஆதாத் மரித்தபின், மஸ்ரேக்கா ஊரானாகிய சம்லா அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.
37சம்லா மரித்தபின், அங்கே இருக்கிற நதிக்குச் சமீபமான ரெகொபோத் என்னும் ஊரானாகிய சவுல் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.
38சவுல் மரித்தபின், அக்போருடைய குமாரனாகிய பாகால்கானான் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.
39அக்போருடைய குமாரனாகிய பாகால்கானான் மரித்தபின், ஆதார் அவனுடைய பட்டத்திற்கு வந்தான். அவனுடைய பட்டணத்துக்குப் பாகு என்று பேர்; அவன் மனைவியின் பேர் மெகேதபேல்; அவள் மத்ரேத்துடைய குமாரத்தியும் மேசகாவின் குமாரத்தியுமாய் இருந்தாள்.
40தங்கள் பற்பல வம்சங்களின்படியேயும் வாசஸ்தலங்களின்படியேயும் நாமதேயங்களின்படியேயும் ஏசாவின் சந்ததியில் தோன்றிய பிரபுக்களுடைய நாமங்களாவன: திம்னா பிரபு, அல்வா பிரபு, ஏதேத் பிரபு,
41அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு,
42கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு.
43மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு; இவர்களே தங்கள் சொந்தமான தேசத்திலே பற்பல இடங்களில் குடியிருந்த ஏதோம் சந்ததிப் பிரபுக்கள்; இந்த ஏதோமியருக்குத் தகப்பன் ஏசா.

ஆதியாகமம் 37

1யாக்கோபு தன் தகப்பன் தங்கியிருந்த கானான் தேசத்திலே குடியிருந்தான்.
2யாக்கோபுடைய சந்ததியின் வரலாறு: யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்; அந்த இளைஞன் பில்காள் சில்பாள் என்னும் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளின் குமாரரோடே இருந்து, அவர்களுடைய துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்லிவருவான்.
3இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்பு தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான்.
4அவனுடைய சகோதரர் எல்லாரிலும் அவனைத் தங்கள் தகப்பன் அதிகமாய் நேசிக்கிறதை அவன் சகோதரர் கண்ட போது, அவனோடே பட்சமாய்ப் பேசாமல் அவனைப் பகைத்தார்கள்.
5யோசேப்பு ஒரு சொப்பனம் கண்டு, அதைத் தன் சகோதரருக்கு அறிவித்தான்; அதினிமித்தம் அவனை இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள்.
6அவன் அவர்களை நோக்கி: நான் கண்ட சொப்பனத்தைக் கேளுங்கள்:
7நாம் வயலில் அறுத்த அரிகளைக் கட்டிக்கொண்டிருந்தோம்; அப்பொழுது என்னுடைய அரிக்கட்டு நிமிர்ந்திருந்தது; உங்கள் அரிக்கட்டுகள் என் அரிக்கட்டைச் சுற்றி வணங்கி நின்றது என்றான்.
8அப்பொழுது அவன் சகோதரர் அவனைப் பார்த்து: நீ எங்கள்மேல் துரைத்தனம் பண்ணுவாயோ? நீ எங்களை ஆளப்போகிறாயோ? என்று சொல்லி, அவனை அவன் சொப்பனங்களின் நிமித்தமும், அவன் வார்த்தைகளின் நிமித்தமும் இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள்.
9அவன் வேறொரு சொப்பனம் கண்டு, தன் சகோதரரை நோக்கி: நான் இன்னும் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது என்றான்.
10இதை அவன் தன் தகப்பனுக்கும் தன் சகோதரருக்கும் சொன்னபோது, அவன் தகப்பன் அவனைப் பார்த்து: நீ கண்ட இந்தச் சொப்பனம் என்ன? நானும் உன் தாயாரும் உன் சகோதரரும் தரைமட்டும் குனிந்து உன்னை வணங்கவருவோமோ? என்று அவனைக் கடிந்து கொண்டான்.
11அவன் சகோதரர் அவன் மேல் பொறாமைகொண்டார்கள்; அவன் தகப்பனோ அவன் சொன்னதை மனதிலே வைத்துக்கொண்டான்.
12பின்பு, அவன் சகோதரர் சீகேமிலே தங்கள் தகப்பனுடைய ஆடுகளை மேய்க்கப் போனார்கள்.
13அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: உன் சகோதரர் சீகேமிலே ஆடுகளை மேய்க்கிறார்கள் அல்லவா? உன்னை அவர்களிடத்துக்கு அனுப்பப் போகிறேன், வா என்றான். அவன்: இதோ, போகிறேன் என்றான்.
14அப்பொழுது அவன்: நீ போய், உன் சகோதரருடைய ஷேமம் எப்படி என்றும், ஆடுகள் எப்படி இருக்கிறது என்றும் பார்த்து, எனக்கு மறுசெய்தி கொண்டுவா என்று அவனுக்குச் சொல்லி, எபிரோன் பள்ளத்தாக்கிலே இருந்து அவனை அனுப்பினான்; அந்தப்படியே அவன் சீகேமுக்குப் போனான்.
15அப்பொழுது ஒரு மனிதன் அவன் வெளியிலே வழிதப்பித் திரிகிறதைக் கண்டு, என்ன தேடுகிறாய்? என்று அவனைக் கேட்டான்.
16அதற்கு அவன்: என் சகோதரரைத் தேடுகிறேன், அவர்கள் எங்கே ஆடு மேய்க்கிறார்கள், சொல்லும் என்றான்.
17அந்த மனிதன்: அவர்கள் இவ்விடத்திலிருந்து போய்விட்டார்கள், தோத்தானுக்குப் போவோம் என்று அவர்கள் சொல்லக்கேட்டேன் என்றான்; அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரைத் தொடர்ந்துபோய், அவர்களைத் தோத்தானிலே கண்டுபிடித்தான்.
18அவர்கள் அவனைத் தூரத்தில் வரக்கண்டு, அவன் தங்களுக்குச் சமீபமாய் வருமுன்னே, அவனைக் கொலைசெய்யும்படி சதியோசனைபண்ணி,
19ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, சொப்பனக்காரன் வருகிறான்,
20நாம் அவனைக் கொன்று, இந்தக் குழிகள் ஒன்றிலே அவனைப் போட்டு, ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்தது என்று சொல்லுவோம் வாருங்கள்; அவனுடைய சொப்பனங்கள் எப்படி முடியும் பார்ப்போம் என்றார்கள்.
21ரூபன் அதைக்கேட்டு, அவனை அவர்கள் கைக்குத் தப்புவித்து, அவனை அவன் தகப்பனிடத்துக்குத் திரும்பவும் கொண்டுபோக மனதுள்ளவனாய்,
22அவர்களை நோக்கி: அவனைக் கொல்ல வேண்டாம், நீங்கள் இரத்தம் சிந்தலாகாது; நீங்கள் அவன்மேல் கை வையாமல், அவனை வனாந்தரத்திலுள்ள இந்தக் குழியிலே போட்டுவிடுங்கள் என்று சொல்லி, இவ்விதமாய் ரூபன் அவனை அவர்கள் கைக்குத் தப்புவித்தான்.
23யோசேப்பு தன் சகோதரரிடத்தில் சேர்ந்தபோது யோசேப்பு உடுத்திக்கொண்டிருந்த பலவருண அங்கியை அவர்கள் கழற்றி,
24அவனை எடுத்து, அந்தக் குழியிலே போட்டார்கள்; அது தண்ணீரில்லாத வெறுங்குழியாயிருந்தது.
25பின்பு, அவர்கள் போஜனஞ்செய்யும்படி உட்கார்ந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, இதோ, கீலேயாத்திலிருந்து வருகிற இஸ்மவேலருடைய கூட்டத்தைக் கண்டார்கள்; அவர்கள் எகிப்துக்குக் கொண்டுபோகும்படி கந்தவர்க்கங்களையும் பிசின்தைலத்தையும் வெள்ளைப்போளத்தையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றிக்கொண்டுவந்தார்கள்.
26அப்பொழுது யூதா தன் சகோதரரை நோக்கி: நாம் நம்முடைய சகோதரனைக் கொன்று, அவன் இரத்தத்தை மறைப்பதினால் லாபம் என்ன?
27அவனை இந்த இஸ்மவேலருக்கு விற்றுப்போடுவோம் வாருங்கள்; நமது கை அவன்மேல் படாதிருப்பதாக; அவன் நம்முடைய சகோதரனும் நம்முடைய மாம்சமுமாய் இருக்கிறானே என்றான். அவன் சகோதரர் அவன் சொல்லுக்கு இணங்கினார்கள்.
28அந்த வர்த்தகரான மீதியானியர் கடந்து போகிறபோது, அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டு போனார்கள்.
29பின்பு, ரூபன் அந்தக் குழியினிடத்துக்குத் திரும்பிப்போனபோது, யோசேப்பு குழியில் இல்லையென்று கண்டு, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,
30தன் சகோதரரிடத்துக்குத் திரும்பி வந்து: இளைஞன் இல்லையே, ஐயோ! நான் எங்கே போவேன் என்றான்.
31அவர்கள் யோசேப்பின் அங்கியை எடுத்து, ஒரு வெள்ளாட்டுக்கடாவை அடித்து, அந்த அங்கியை இரத்தத்திலே தோய்த்து,
32பல வருணமான அந்த அங்கியைத் தங்கள் தகப்பனிடத்துக்கு அனுப்பி: இதை நாங்கள் கண்டெடுத்தோம், இது உம்முடைய குமாரன் அங்கியோ, அல்லவோ, பாரும் என்று சொல்லச்சொன்னார்கள்.
33யாக்கோபு அதைக் கண்டு, இது என் குமாரனுடைய அங்கிதான், ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்துப்போட்டது, யோசேப்பு பீறுண்டு போனான் என்று புலம்பி,
34தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் அரையில் இரட்டுக் கட்டிக்கொண்டு, அநேகநாள் தன் குமாரனுக்காகத் துக்கித்துக் கொண்டிருந்தான்.
35அவனுடைய குமாரர் குமாரத்திகள் எல்லாரும் அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்து நின்றார்கள்; ஆனாலும் அவன் ஆறுதலுக்கு இடங்கொடாமல், நான் துக்கத்தோடே என் குமாரனிடத்தில் பாதாளத்தில் இறங்குவேன் என்றான். இவ்விதமாய் அவனுடைய தகப்பன் அவனுக்காக அழுதுகொண்டிருந்தான்.
36அந்த மீதியானியர் யோசேப்பை எகிப்திலே பார்வோனின் பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்பவனிடத்தில் விற்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *