Scripture Portion: Ezekiel 24-27

எசேக்கியேல் 24

1ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதம் பத்தாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2மனுபுத்திரனே, இந்த நாளின் பேரையும், இந்தத் தேதியையும் நீ எழுதிவை, இந்தத் தேதியில்தானே பாபிலோன் ராஜா எருசலேமில் பாளயமிறங்கினான்.
3இப்போதும் நீ கலகவீட்டாருக்கு ஒரு உபமானத்தைக் காண்பித்து, அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், ஒரு கொப்பரையை அடுப்பிலே வை; அதை அடுப்பிலே வைத்து, அதிலே தண்ணீரை விடு.
4சகல நல்ல கண்டங்களான பின்னந்தொடைகளும் முன்னந்தொடைகளுமாகிய கண்டங்களைச் சேர்த்து அதிலே போடு; நல்ல எலும்புகளால் அதை நிரப்பு.
5ஆட்டுமந்தையில் தெரிந்துகொள்ளப்பட்டதை அதற்காகக் கொண்டுவந்து, எலும்புகளை அதின் கீழே குவித்து எரிக்கவேண்டும்; அதிலுள்ள எலும்புகளும் வேகத்தக்கதாக அதைப் பொங்கப்பொங்கக் காய்ச்சவேண்டும்.
6இதற்காகக் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நுரை ஒட்டிக்கொண்டிருக்கிறதும் நுரை நீங்காததுமாகிய கொப்பரை என்னப்பட்ட இரத்தஞ்சிந்திய நகரத்துக்கு ஐயோ! அதில் இருக்கிறதைக் கண்டங்கண்டமாக எடுத்துக்கொண்டுபோ; அதின்பேரில் சீட்டுப்போடலாகாது.
7அவள் இரத்தம் அவள் நடுவில் இருக்கிறது; மண்ணிலே மறைந்துபோகும்படி அதைத் தரையிலே ஊற்றாமல் கற்பாறையிலே ஊற்றிப்போட்டாள்.
8நீதியைச் சரிக்கட்டுவதற்காகக் கோபம் மூளும்படி நான் அவள் இரத்தத்தை மறைக்காமல் கன்மலையின்மேல் வைத்தேன்.
9ஆதலால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இரத்தஞ்சிந்திய நகரத்துக்கு ஐயோ! நான் பெரிதான கட்டைகளைக் குவித்து எரியப்பண்ணுவேன்.
10திரளான விறகுகளைக் கூட்டு, தீயை மூட்டு, இறைச்சியை முறுக வேவித்துச் சம்பாரங்களை இடு; எலும்புகளை எரித்துப்போடு.
11பின்பு கொப்பரை காய்ந்து, அதின் களிம்பு வெந்து, அதற்குள் இருக்கிற அதின் அழுக்கு உருகி, அதின் நுரை நீங்கும்படி அதை வெறுமையாகத் தழலின்மேல் வை.
12அது மகா வருத்தத்தை உண்டாக்கியும், அதின் திரளான நுரை அதை விட்டு நீங்கவில்லை; அதின் நுரை அக்கினிக்கு உள்ளாகவேண்டியது.
13உன் அசுத்தத்தோடே முறைகேடும் இருக்கிறது; நான் உன்னைச் சுத்திகரித்தும், நீ சுத்தமாகாதபடியினால், இனி என் உக்கிரம் உன்னில் ஆறித்தீருமட்டும் உன் அசுத்தம் நீங்கிச் சுத்திகரிக்கப்படமாட்டாய்.
14கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இது நிறைவேறும், நான் இதைச் செய்வேன்; நான் பின்வாங்குவதும் தப்பவிடுவதும் மனஸ்தாபப்படுவதும் இல்லை; உன் வழிகளுக்கும் உன் செய்கைகளுக்குத்தக்கதாக உன்னை நியாயந்தீர்ப்பார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
15பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
16மனுபுத்திரனே, இதோ, நான் உன் கண்களுக்கு விருப்பமானவளை ஒரே அடியினாலே உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளுவேன்; ஆனாலும் நீ புலம்பாமலும் அழாமலும் கண்ணீர்விடாமலும் இருப்பாயாக.
17அலறாமல் பெருமூச்சு விடு, இழவு கொண்டாடவேண்டாம்; உன் பாகையை உன் தலையிலே கட்டி, உன் பாதரட்சையை உன் பாதங்களில் தொடுத்துக்கொள்; உன் தாடியை மூடாமலும் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைப் புசியாமலும் இருக்கக்கடவாய் என்றார்.
18விடியற்காலத்தில் நான் ஜனங்களோடே பேசினேன்; அன்று சாயங்காலத்தில் என் மனைவி செத்துப்போனாள்; எனக்குக் கட்டளையிட்டபடியே விடியற்காலத்தில் செய்தேன்.
19அப்பொழுது ஜனங்கள் என்னை நோக்கி: நீர் செய்கிறவைகள் எங்களுக்கு என்னத்திற்கு அடையாளம் என்பதை எங்களுக்குத் தெரிவிக்கமாட்டீரா என்று கேட்டார்கள்.
20நான் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
21நீ இஸ்ரவேல் வீட்டாரை நோக்கி, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, உங்கள் பலத்தின் முக்கியமும் உங்கள் கண்களின் விருப்பமும் உங்கள் ஆத்துமாவின் வாஞ்சையுமாகிய என் பரிசுத்த ஸ்தலத்தை நான் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறேன்; நீங்கள் விட்டுவந்த உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் பட்டயத்தால் விழுவார்கள்.
22அப்பொழுது நான் செய்ததுபோல நீங்களும் செய்வீர்கள்; தாடியை மூடாமலும் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைப் புசியாமலும் இருப்பீர்கள்.
23உங்கள் பாகைகள் உங்கள் தலைகளிலும், உங்கள் பாதரட்சைகள் உங்கள் கால்களிலும் இருக்கும்; நீங்கள் புலம்பாமலும் அழாமலும் இருந்து, உங்கள் அக்கிரமங்களில் வாடிப்போய், ஒருவரையொருவர் பார்த்துத் தவிப்பீர்கள்.
24அப்படியே எசேக்கியேல் உங்களுக்கு அடையாளமாக இருப்பான்; அவன் செய்தபடி எல்லாம் நீங்களும் செய்வீர்கள்; இப்படி வரும்போது நான் கர்த்தராகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்று உரைத்தார் என்றேன்.
25பின்னும் மனுபுத்திரனே, நான் எந்த நாளிலே அவர்களுடைய பலத்தையும், அவர்களுடைய அலங்காரத்தின் மகிழ்ச்சியையும், அவர்களுடைய கண்களின் விருப்பத்தையும், அவர்களுடைய ஆத்துமாவின் விசேஷித்தவாஞ்சையையும், அவர்களுடைய குமாரரையும், அவர்களுடைய குமாரத்திகளையும் அவர்களைவிட்டு எடுத்துக்கொள்ளுகிறேனோ,
26அந்த நாளிலேதானே தப்பிவந்த ஒருவன் உன்னிடத்தில் வந்து உன் காதுகள் கேட்கச் சொல்லுவான் அல்லவோ?
27அந்த நாளிலேதானே உன் வாய் திறக்கப்பட்டு, நீ தப்பிவந்தவனோடே பேசுவாய்; இனி மவுனமாயிருக்கமாட்டாய்; இப்படி நீ அவர்களுக்கு அடையாளமாக இருப்பாய்; நான் கர்த்தர் என்று அப்பொழுது அறிந்துகொள்வார்கள் என்றார்.

எசேக்கியேல் 25

1கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்:
2மனுபுத்திரனே, நீ அம்மோன் புத்திரருக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி, அவர்களுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து,
3அம்மோன் புத்திரருக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்: என் பரிசுத்த ஸ்தலம் பரிசுத்தக்குலைச்சலாக்கப்படுகிறபோதும், இஸ்ரவேல்தேசம் பாழாக்கப்படுகிறபோதும், யூதா வம்சத்தார் சிறையிருப்பிலே போகிறபோதும், நீ அவர்களுக்கு விரோதமாக ஆ ஆ, என்று நிந்தித்தபடியினால்,
4இதோ, நான் உன்னைக் கிழக்கு தேசத்தாருக்குச் சுதந்தரமாக ஒப்புக்கொடுப்பேன், அவர்கள் உன்னில் தங்கள் அரண்களைக் கட்டி, உன்னில் தங்கள் வாசஸ்தலங்களை உண்டுபண்ணுவார்கள்; அவர்கள் உன் கனிகளைப்புசித்து, உன் பாலைக் குடிப்பார்கள்.
5நான் ரப்பாவை ஒட்டகங்களின் கொட்டகையும், அம்மோன் புத்திரரின் தேசத்தை ஆட்டுக்கிடையுமாக்குவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வீர்கள்.
6கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல்தேசத்துக்கு விரோதமாக நீ கை கொட்டி, உன் காலால் தட்டி, வர்மம் வைத்து, ஆகடியம் பண்ணினபடியினால்,
7இதோ, உனக்கு விரோதமாக நான் என் கையை நீட்டி, உன்னை ஜாதிகளுக்குக் கொள்ளையாக ஒப்புக்கொடுத்து, உன்னை ஜனங்களுக்குள்ளே வேரற்றுப்போகப்பண்ணி, உன்னை தேசங்களுக்குள்ளே அழித்து, உன்னை நிர்மூலமாக்குவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வாய்.
8கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: இதோ, யூதா வம்சத்தார் எல்லா ஜாதிகளுக்கும் ஒத்தவர்களென்று மோவாபும் சேயீரும் சொல்லுகிறபடியினால்,
9இதோ, அம்மோன் புத்திரரின் பேர் ஜாதிகளுக்குள் இராதபடிக்கு நான் அம்மோன் புத்திரரின் தேசத்தைக் கிழக்கு தேசத்தாருக்குத் திறந்துவைத்து, சுதந்தரமாய் ஒப்புக்கொடுக்கிறவண்ணமாக,
10நான் மோவாப் தேசத்தின் பக்கத்திலுள்ள அதின் கடையாந்தர ஊர்களாகிய பட்டணங்கள் முதற்கொண்டுள்ள தேசத்தின் அலங்காரமாகிய பெத்யெசிமோத்தையும், பாகால்மெயோனையும், கீரியாத்தாயீமையும் அவர்களுக்குத் திறந்துவைத்து,
11மோவாபிலே நியாயங்களைச் செய்வேன், அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
12கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: ஏதோம் யூதா வம்சத்தாரிடத்தில் குரோதந்தீர்த்து, பழிவாங்கி, பெரிய குற்றஞ்செய்தபடியினால்,
13கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: நான் ஏதோம் தேசத்துக்கு விரோதமாக என் கையை நீட்டி அதில் மனுஷரையும் மிருகங்களையும் இராதபடிக்குச் சங்காரம்பண்ணி, அதைத் தேமான் துவக்கித் தேதான்மட்டும் வனாந்தரமாக்குவேன்; பட்டயத்தால் விழுவார்கள்.
14நான் இஸ்ரவேலாகிய என் ஜனத்தின் கையினால் ஏதோமினிடத்தில் பழிவாங்குவேன்; அவர்கள் என் கோபத்தின்படியும் என் உக்கிரத்தின்படியும் ஏதோமுக்குச் செய்வார்கள்; அப்பொழுது நான் பழிவாங்குவது இன்னதென்று அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
15கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: பெலிஸ்தியர் குரோதக்காரராயிருந்து, பழம்பகையால் கேடுசெய்யவேண்டுமென்று, வர்மம் வைத்துப் பழிவாங்கினபடியினால்.
16இதோ, நான் பெலிஸ்தியருக்கு விரோதமாக என் கையை நீட்டி, கிரேத்தியரைச் சங்கரித்து, சமுத்திரக்கரையில் மீதியானவர்களை அழித்து,
17உக்கிரமான தண்டனைகளினால் அவர்களில் கொடிதாய்ப் பழிவாங்குவேன்; நான் அவர்களில் பழிவாங்கும்போது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

எசேக்கியேல் 26

1பதினோராம் வருஷம் முதலாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2மனுபுத்திரனே, தீருவானது எருசலேமுக்கு விரோதமாக, ஆ ஆ, ஜனசதளங்களின் ஒலிமுகவாசலாயிருந்த நகரி இடிக்கப்பட்டதென்றும் என்னிடமாக எல்லாம் புரண்டுவரும், அது பாழாக்கப்பட்டிருக்க நான் நிரப்பப்படுவேன் என்றும் சொல்லுகிறபடியினால்,
3கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: தீருவே, இதோ, நான் உனக்கு விரோதமாக வருகிறேன்; சமுத்திரம் தன் அலைகளை எழும்பிவரப்பண்ணுகிறவண்ணமாய் நான் அநேகம் ஜாதிகளை உனக்கு விரோதமாக எழும்பிவரப்பண்ணுவேன்.
4அவர்கள் தீருவின் மதில்களை அழித்து, அதின் கொத்தளங்களை இடித்துப்போடுவார்கள்; நான் அதின் மண்ணும் அதில் இராதபடிக்கு விளக்கிப்போட்டு, அதை வெறும் பாறையாக்கிவிடுவேன்.
5அது வலைகளை விரிக்கிற இடமாகச் சமுத்திரத்தின் நடுவிலே இருக்கும்; நான் இதைச் சொன்னேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; அது ஜாதிகளுக்குக் கொள்ளையாகும்.
6வெளியில் இருக்கிற அதின் குமாரத்திகளோ பட்டயத்தால் கொன்றுபோடப்படுவார்கள்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
7கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ராஜாதிராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவை வடக்கேயிருந்து குதிரைகளோடும் இரதங்களோடும் குதிரைவீரரோடும் கூட்டத்தோடும் திரளான ஜனத்தோடும் தீருவுக்கு விரோதமாக வரப்பண்ணுவேன்.
8அவன் வெளியில் இருக்கிற உன் குமாரத்திகளைப் பட்டயத்தினால் கொன்று, உனக்கு விரோதமாகக் கொத்தளங்களைக் கட்டி உனக்கு விரோதமாக அணைபோட்டு, உனக்கு விரோதமாகக் கேடயங்களை எடுத்து,
9உன் மதில்களை இடிக்கிற இயந்திரங்களை எதிரே வைத்து, தன் கடப்பாரைகளால் உன் கொத்தளங்களை இடித்துப்போடுவான்.
10அவன் குதிரைகளின் ஏராளத்தினால் தூள் எழும்பி உன்னை மூடும்; இடித்துத் திறப்பாக்கப்பட்ட பட்டணத்தில் பிரவேசிக்கும்வண்ணமாக, அவன் உன் வாசல்களுக்குள் பிரவேசிக்கையில், குதிரை வீரரும் வண்டிகளும், இரதங்களும் இரைகிற சத்தத்தினாலே உன் மதில்கள் அதிரும்.
11தன் குதிரைகளின் குளம்புகளினால் உன் வீதிகளையெல்லாம் மிதிப்பான்; உன் ஜனத்தைப் பட்டயத்தினால் கொன்றுபோடுவான்; உன் பலமான தூண்கள் தரையில் விழுந்துபோகும்.
12அவர்கள் உன் ஆஸ்தியைக் கொள்ளையிட்டு, உன் சரக்குகளைச் சூறையாடி, உன் மதில்களை இடித்து, உனக்கு விருப்பமான வீடுகளை அழித்து, உன் கல்லுகளையும் உன் மரங்களையும் உன் மண்ணையும் கடலின் நடுவிலே போட்டுவிடுவார்கள்.
13உன் பாட்டுகளின் சத்தத்தை ஓயப்பண்ணுவேன்; உன் சுரமண்டலங்களின் சத்தம் இனிக் கேட்கப்படுவதில்லை.
14உன்னை வெறும் பாறையாக்கிவிடுவேன்; நீ வலைகளை விரிக்கிற ஸ்தலமாயிருப்பாய்; இனிக் கட்டப்படாய்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
15தீருவுக்குக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: காயம்பட்டவர்கள் அலறும்போதும், உன் நடுவில் சங்காரம் நடக்கும்போதும், நீ விழுகிற சத்தத்தினால் தீவுகள் அதிராதோ?
16கடலரசர் எல்லாரும் தங்கள் சிங்காசனங்களைவிட்டு இறங்கி; தங்கள் சால்வைகளைக் கழற்றி, தங்கள் சித்திரத்தையலாடைகளை உரிந்துபோடுவார்கள்; நடுக்கமே அவர்கள் உடையாகும்; தரையிலே உட்கார்ந்து, நிமிஷந்தோறும் தத்தளித்து, உன்னிமித்தம் பிரமிப்பார்கள்.
17அவர்கள் உன்னிமித்தம் புலம்பி, உன்னைக்குறித்து: கடல் சஞ்சாரிகள் குடியிருந்த புகழ்பெற்ற நகரியே, ஐயோ! உன்னில் தங்கினவர்களுக்கெல்லாம் பயமுண்டாக்கின உன் குடிகளோடுங்கூடச் சமுத்திரத்திலே பலத்திருந்த நீ அழிந்துபோனாயோ!
18நீ விழும் நாளில் தீவுகள் தத்தளிக்கும்; நீ அகன்றுபோகும்போது சமுத்திரத்திலுள்ள தீவுகள் கலங்கும் என்பார்கள்.
19கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உன்னைக் குடியில்லாத நகரங்களைப்போலப் பாழானநகரமாக்கும்போதும், மிகுந்த தண்ணீர்கள் உன்னை மூடத்தக்கதாய் நான் உன்மேல் சமுத்திரத்தை வரப்பண்ணும்போதும்,
20பூர்வகாலத்து ஜனத்தண்டைக்குக் குழியில் இறங்குகிறவர்களோடே நான் உன்னை இறங்கப்பண்ணுவேன்; நீ குடியேறாதிருக்கும்படி பூர்வகாலமுதற்கொண்டு பாழாயிருக்கிற பூமியின் தாழ்விடங்களிலே குழியில் இறங்குகிறவர்ளோடேகூட நான் உன்னைத் தங்கியிருக்கப்பண்ணுவேன்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலோ மகிமை விளங்கச்செய்வேன்.
21உன்னை மகா பயங்கரமாக வைப்பேன்; இனி நீ இருக்கமாட்டாய்; நீ தேடப்பட்டாலும் இனி என்றைக்கும் காணப்படமாட்டாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்றார்.

எசேக்கியேல் 27

1 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்:
2மனுபுத்திரனாகிய நீ இப்போது தீருவின்பேரிலே புலம்பி,
3சமுத்திரக்கரை துறையிலே குடியிருந்து, அநேகம் தீவுகளின் ஜனங்களோடே வியாபாரம்பண்ணுகிற தீருவை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், தீருவே, நீ உன்னைப் பூரண சௌந்தரியவதி என்கிறாய்.
4கடல்களின் நடுமையத்திலே உன் தாபரம் இருக்கிறது; உன்னைக் கட்டினவர்கள் உன்னைப் பூரணவடிவாய்க் கட்டினார்கள்.
5சேனீரிலிருந்துவந்த தேவதாருமரத்தால் உன் கப்பற் பலகைகளைச் செய்தார்கள்; பாய்மரங்களைச் செய்யும்படிக்கு லீபனோனிலிருந்து கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள்.
6பாசானின் கர்வாலிமரங்களினாலே உன் துடுப்புகளைச் செய்தார்கள்; கித்தீம் தீவுகளிலிருந்து வந்த ஆஷூர் மரத்தால் உன் வாரிபலகைகளைச் செய்து, அதிலே யானைத்தந்தம் அழுத்தியிருந்தார்கள்.
7எகிப்திலிருந்து வந்த சித்திரத்தையலுள்ள சணல்நூல் புடவை நீ விரித்த பாயாயிருந்தது; எலீசா தீவுகளின் இளநீலமும் இரத்தாம்பரமும் உன் விதானமாயிருந்தது.
8சீதோன் அர்வாத் என்னும் பட்டணங்களின் குடிகள் உனக்குத் தண்டு வலிக்கிறவர்களாயிருந்தார்கள். தீருவே, உன்னிடத்திலிருந்த உன் சாஸ்திரிகள் உன் மாலுமிகளாயிருந்தார்கள்.
9கேபாரின் முதியோரும் அதின் சாஸ்திரிகளும் உன்னில் கம்பத்துப் பார்க்கிறவர்களாயிருந்தார்கள்; சமுத்திரத்தின் சகல கப்பல்களும் அவைகளிலுள்ள கப்பற்காரரும் உன்னோடே தொழில்துறை வியாபாரம் பண்ணுகிறதற்காக உன்னிடத்தில் இருந்தார்கள்.
10பெர்சியரும், லூதியரும், பூத்தியரும் உன் இராணுவத்தில் யுத்தவீரராயிருந்து உனக்குள் கேடகமும் தலைச்சீராவும் தூக்கிவைத்து, உன்னை அலங்கரித்தார்கள்.
11அர்வாத் புத்திரரும் உன் இராணுவ மனுஷரும் உன் மதில்கள்மேல் சுற்றிலும், கம்மாத்தியர் உன் கொத்தளங்களிலும் இருந்தார்கள்; இவர்கள் உன் மதில்கள்மேல் சுற்றிலும் தங்கள் பரிசைகளைத் தூக்கிவைத்து, உன் வடிவத்தைப் பூரணப்படுத்தினார்கள்.
12சகலவித பொருள்களின் திரளினாலும் தர்ஷீஸ் ஊரார் உன்னோடே வியாபாரம்பண்ணினார்கள்; வெள்ளியையும் இரும்பையும் தகரத்தையும் ஈயத்தையும் உன் சந்தைகளில் விற்க வந்தார்கள்.
13யாவான், தூபால், மேசேக் என்னும் ஜாதியார் உன் வியாபாரிகளாயிருந்து, மனுஷர்களையும் வெண்கலப் பாத்திரங்களையும் உன் தொழில்துறைக்குக் கொண்டுவந்தார்கள்.
14தொகர்மா வம்சத்தார் குதிரைகளையும் குதிரைவீரரையும் கோவேறுகழுதைகளையும் உன் சந்தைகளுக்குக் கொண்டுவந்தார்கள்.
15தேதான் புத்திரர் உன் வியாபாரிகளாயிருந்தார்கள்; அநேகம் தீவுகளின் வர்த்தகம் உன் வசமாகச் சேர்ந்தது; யானைத்தந்தங்களையும் கருங்காலி மரங்களையும் அவைகளுக்குப்பதிலாகக் கொண்டுவந்தார்கள்.
16சீரியர் உன் வேலைப்பாடான பற்பல பொருள்களினிமித்தம் உன்னோடே வியாபாரம்பண்ணி, மரகதங்களையும், இரத்தாம்பரங்களையும், சித்திரத்தையலாடைகளையும், உயர்ந்த வஸ்திரங்களையும், பவளங்களையும், பளிங்கையும் உன் சந்தைகளில் விற்கவந்தார்கள்.
17யூதரும் இஸ்ரவேல் தேசத்தாரும் உன்னோடே வியாபாரம்பண்ணி, மின்னீத், பன்னாக் என்கிற ஊர்களின் கோதுமையையும், தேனையும், எண்ணெயையும், பிசின்தைலத்தையும் உன் தொழில்துறைக்குக் கொண்டுவந்தார்கள்.
18தமஸ்கு உன் வேலைப்பாடான பற்பல பொருள்களினிமித்தமும், சகலவிதப் பொருள்களின் திரட்சியினிமித்தமும் உன்னோடே வர்த்தகம்பண்ணி, கெல்போனின் திராட்சரசத்தையும் வெண்மையான ஆட்டுமயிரையும் உனக்கு விற்றார்கள்.
19தாண் நாட்டாரும், போக்கும்வரத்துமான யாவானரும் துலக்கப்பட்ட இரும்பையும் இலவங்கத்தையும் வசம்பையும் உன் சந்தைகளில் கொண்டுவந்து உன் தொழில்துறையில் விற்றார்கள்.
20இரதங்களுக்குப் போடுகிற மேன்மையான இரத்தினக்கம்பளங்களை தேதானின் மனுஷர் கொண்டுவந்து, உன்னோடே வியாபாரம்பண்ணினார்கள்.
21அரபியரும், கேதாரின் சகல பிரபுக்களும் உனக்கு வாடிக்கையானவர்த்தகராகி, ஆட்டுக்குட்டிகளையும் ஆட்டுக்கடாக்களையும் வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, உன்னோடே வியாபாரம்பண்ணினார்கள்.
22சேபா, ராமா பட்டணங்களின் வியாபாரிகள் உன்னோடே வர்த்தகம்பண்ணி, மேல்தரமான சகலவித சம்பாரங்களையும், சகலவித இரத்தினக்கற்களையும், பொன்னையும் உன் சந்தைகளில் கொண்டுவந்தார்கள்.
23ஆரான், கன்னே, ஏதேன் என்னும் பட்டணத்தாரும், சேபாவின் வியாபாரிகளும், அசீரியரும், கில்மாத் பட்டணத்தாரும் உன்னோடே வியாபாரம்பண்ணினார்கள்.
24இவர்கள் சகலவித உயர்ந்த சரக்குகளையும், இளநீலப்பட்டுகளும் விசித்திரத்தையலாடைகளும் அடங்கிய புடவைக்கட்டுகளையும், விலை உயர்ந்த வஸ்திரங்கள் வைக்கப்பட்டு, கயிறுகளால் கட்டியிருக்கும் கேதுருமரப்பெட்டிகளையும் கொண்டுவந்து, உன்னோடே வியாபாரம்பண்ணினார்கள்.
25உன் தொழில் துறையில் தர்ஷீசின் கப்பலாட்கள் உன்னைப் போற்றிப்பாடினார்கள்; நீ சமுத்திரத்தின் நடுவிலே உன்னைப் பூரணப்படுத்தி, உன்னை மிகவும் மகிமைப்படுத்தினாய்.
26தண்டுவலிக்கிறவர்கள் ஆழமான தண்ணீர்களில் உன்னை வலித்துக் கொண்டுபோனார்கள்; நடுச்சமுத்திரத்திலே கொண்டற்காற்று உன்னை உடைத்துப்போட்டது.
27நீ நாசமடையும் நாளிலே உன் ஆஸ்தியோடும், உன் சந்தைகளோடும், உன் தொழில் துறையோடுங்கூட உன் கப்பலாட்களும், உன் மாலுமிகளும், உன்னில் கம்பத்துப்பார்க்கிறவர்களும், உன் வியாபாரிகளும், உன்னிலுள்ள எல்லா யுத்தவீரரும், உன் நடுவில் இருக்கிற எல்லாக்கூட்டத்தாரும் நடுச்சமுத்திரத்திலே விழுவார்கள்.
28உன் மாலுமிகள் ஓலமிடும் சத்தத்தினால் சுற்றுப்புறங்கள் அதிரும்.
29தண்டுவலிக்கிற யாவரும், கப்பலாட்களும், கடல் மாலுமிகள் அனைவரும், தங்கள் கப்பல்களை விட்டு இறங்கி, கரையிலே நின்று,
30உன்னிமித்தம் சத்தமிட்டுப் புலம்பி, மனங்கசந்து அழுது, தங்கள் தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு, சாம்பலில் புரண்டு,
31உனக்காக மொட்டையிட்டு இரட்டுடுத்திக்கொண்டு, உனக்காக மனங்கசந்து அழுது, துக்கங்கொண்டாடுவார்கள்.
32அவர்கள் உனக்காகத் தங்கள் துக்கத்திலே ஓலமிட்டு, உன்னிமித்தம் புலம்பி, உன்னைக்குறித்து: சமுத்திரத்தின் நடுவிலே அழிந்துபோன தீருவுக்குச் சமான நகரம் உண்டோ?
33உன் சந்தைச்சரக்குகள் சமுத்திரங்கள் வழியாய்க் கொண்டுவரப்படுகையில், அநேக ஜனங்களைத் திருப்தியாக்கினாய்; உன் ஆஸ்தியின் திரளினாலும் உன் வியாபாரத்தினாலும் பூமியின் ராஜாக்களை ஐசுவரியவான்களாக்கினாய்.
34நீ சமுத்திரத் திரைகளினாலே ஆழங்களில் உடைக்கப்பட்டபோது, உன் தொழில் துறையும் உன் நடுவிலுள்ள கூட்டம் அனைத்தும் அழிந்துபோயின என்பார்கள்.
35தீவுகளின் குடிகள் எல்லாம் உன்னிமித்தம் திகைப்பார்கள்; அவர்களுடைய ராஜாக்கள் மிகவும் பிரமித்து, கலங்கின முகமாயிருப்பார்கள்.
36சகல ஜனங்களிலுமுள்ள வர்த்தகர் உன்பேரில் ஈசல்போடுவார்கள்; நீ பயங்கரமாவாய்; இனி ஒருபோதும் இருக்கமாட்டாய் என்கிறார் என்று சொல் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *