Scripture Portion: Ezekiel 32-34

எசேக்கியேல் 32

1பன்னிரண்டாம் வருஷம் பன்னிரண்டாம் மாதம் முதலாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2மனுபுத்திரனே, நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனைக்குறித்துப் புலம்பி, அவனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஜாதிகளுக்குள்ளே நீ பாலசிங்கத்துக்கு ஒப்பானவன்; நீ பெருந்தண்ணீர்களில் முதலையைப்போல் இருந்து, உன் நதிகளில் எழும்பி, உன் கால்களால் தண்ணீர்களைக் கலக்கி, அவைகளின் ஆறுகளைக் குழப்பிவிட்டாய்.
3ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: நான் வெகு ஜனக்கூட்டத்தைக்கொண்டு உன்மேல் என் வலையை வீசுவேன்; அவர்கள் என் வலையில் உன்னை இழுத்துக்கொள்வார்கள்.
4உன்னைத் தரையிலே போட்டுவிடுவேன்; நான் உன்னை வெட்டவெளியில் எறிந்துவிட்டு, ஆகாயத்துப் பறவைகளையெல்லாம் உன்மேல் இறங்கப்பண்ணி, பூமியனைத்தின் மிருகங்களையும் உன்னால் திருப்தியாக்கி,
5உன் சதையைப் பர்வதங்களின்மேல் போட்டு, உன் உடலினாலே பள்ளத்தாக்குகளை நிரப்பி,
6நீ நீந்தின தேசத்தின்மேல் உன் இரத்தத்தைப் பர்வதங்கள்மட்டும் பாயச்செய்வேன்; ஆறுகள் உன்னாலே நிரம்பும்.
7உன்னை நான் அணைத்துப்போடுகையில், வானத்தை மூடி, அதின் நட்சத்திரங்களை இருண்டு போகப்பண்ணுவேன்; சூரியனை மேகத்தினால் மூடுவேன், சந்திரனும் தன் ஒளியைக் கொடாதிருக்கும்.
8நான் வானஜோதியான விளக்குகளையெல்லாம் உன்மேல் இருண்டு போகப்பண்ணி, உன் தேசத்தின்மேல் அந்தகாரத்தை வரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
9உன் சங்காரத்தை ஜாதிகள் மட்டும், நீ அறியாத தேசங்கள்மட்டும் நான் எட்டப்பண்ணுகையில், அநேகம் ஜனங்களின் இருதயத்தை விசனமடையப்பண்ணுவேன்.
10அநேகம் ஜனங்களை உன்னிமித்தம் திகைக்கப்பண்ணுவேன்; அவர்களின் ராஜாக்கள், தங்கள் முகங்களுக்கு முன்பாக என் பட்டயத்தை நான் வீசுகையில் மிகவும் திடுக்கிடுவார்கள்; நீ விழும் நாளில் அவரவர் தம்தம் பிராணனுக்காக நிமிஷந்தோறும் தத்தளிப்பார்கள்.
11கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: பாபிலோன் ராஜாவின் பட்டயம் உன்மேல் வரும்.
12பராக்கிரமசாலிகளின் பட்டயங்களால் உன் ஜனத்திரளை விழப்பண்ணுவேன்; அவர்களெல்லாரும் ஜாதிகளில் வல்லமையானவர்கள்; அவர்கள் எகிப்தின் ஆடம்பரத்தைக் கெடுப்பார்கள்; அதின் ஏராளமான கூட்டம் அழிக்கப்படும்.
13திரளான தண்ணீர்களின் கரைகளில் நடமாடுகிற அதின் மிருகஜீவன்களையெல்லாம் அழிப்பேன்; இனி மனுஷனுடைய கால் அவைகளைக் கலக்குவதுமில்லை, மிருகங்களுடைய குளம்புகள் அவைகளைக் குழப்புவதுமில்லை.
14அப்பொழுது அவர்களுடைய தண்ணீர்களைத் தெளியப்பண்ணி, அவர்கள் ஆறுகளை எண்ணெயைப்போல் ஓடப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
15நான் எகிப்துதேசத்தைப் பாழாக்கும்போதும், தேசம் தன் நிறைவை இழந்து வெறுமையாய்க் கிடக்கும்போதும், நான் அதில் குடியிருக்கிற யாவரையும் சங்கரிக்கும்போதும், நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
16இது புலம்பல்; இப்படிப் புலம்புவார்கள்; இப்படி ஜாதிகளின் குமாரத்திகள் புலம்புவார்கள்; இப்படி எகிப்துக்காகவும், அதினுடைய எல்லாத் திரளான ஜனங்களுக்காகவும் புலம்புவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
17பின்னும் பன்னிரண்டாம் வருஷம் அந்த மாதத்தின் பதினைந்தாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
18மனுபுத்திரனே, நீ எகிப்தினுடைய ஏராளமான ஜனத்தினிமித்தம் புலம்பி, அவர்களையும் பிரபலமான ஜாதிகளின் குமாரத்திகளையும் குழியில் இறங்கினவர்கள் அண்டையிலே பூமியின் தாழ்விடங்களில் தள்ளிவிடு.
19மற்றவர்களைப்பார்க்கிலும் நீ அழகில் சிறந்தவளோ? நீ இறங்கி, விருத்தசேதனமில்லாதவர்களிடத்தில் கிட.
20அவர்கள் பட்டயத்தால் வெட்டுண்டவர்களின் நடுவிலே விழுவார்கள், பட்டயத்துக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்; அவளையும் அவளுடைய ஜனத்திரள் யாவையும் பிடித்திழுங்கள்.
21பராக்கிரமசாலிகளில் வல்லவர்களும், அவனுக்குத் துணைநின்றவர்களும், பாதாளத்தின் நடுவிலிருந்து அவனோடே பேசுவார்கள்; அவர்கள் விருத்தசேதனமில்லாதவர்களாய் பட்டயத்தால் வெட்டுண்டு, இறங்கி, அங்கே கிடக்கிறார்கள்.
22அங்கே அசூரும் அவனுடைய எல்லாக் கூட்டத்தாரும் கிடக்கிறார்கள்; அவனைச் சுற்றிலும் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவர்கள் எல்லாரும் பட்டயத்தால் வெட்டுண்டு விழுந்தவர்கள்தானே.
23பாதாளத்தின் பக்கங்களில் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவனுடைய பிரேதக்குழியைச் சுற்றிலும் அவனுடைய கூட்டம் கிடக்கிறது, ஜீவனுள்ளோருடைய தேசத்திலே கெடியுண்டாக்கின அவர்களெல்லாரும் பட்டயத்தால் வெட்டுண்டு விழுந்தவர்கள்தானே.
24அங்கே ஏலாமும் அவனுடைய பிரேதக்குழியைச் சுற்றிலும் அவனுடைய எல்லா ஏராளமான ஜனமும் கிடக்கிறார்கள்; அவர்களெல்லாரும் பட்டயத்தால் வெட்டுண்டு விழுந்து, விருத்தசேதனமில்லாதவர்களாய் பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார்கள்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலே கெடியுண்டாக்கின அவர்கள், குழியில் இறங்கினவர்களோடேகூடத் தங்கள் அவமானத்தைச் சுமக்கிறார்கள்.
25வெட்டுண்டவர்களின் நடுவே அவனை அவனுடைய எல்லா ஏராளமான ஜனத்துக்குள்ளும் கிடத்தினார்கள்; அவனைச் சுற்றிலும் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவர்களெல்லாரும் பட்டயத்தால் வெட்டுண்ட விருத்தசேதனமில்லாதவர்கள்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலே அவர்கள் கெடியுண்டாக்கினவர்களாயிருந்தும், அவர்கள் குழியில் இறங்கினவர்களோடேகூடத் தங்கள் அவமானத்தைச் சுமக்கிறார்கள்; அவன் வெட்டுண்டவர்களின் நடுவே வைக்கப்பட்டிருக்கிறான்.
26அங்கே மேசேக்கும் தூபாலும் அவர்களுடைய ஏராளமான ஜனங்களும் கிடக்கிறார்கள்; அவர்களைச் சுற்றிலும் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவனுடைய ஜீவனுள்ளோருடைய தேசத்திலே கெடியுண்டாக்கினவர்களாயிருந்தும், அவர்களெல்லாரும் விருத்தசேதனமில்லாதவர்கள்; பட்டயத்தால் வெட்டுண்டு விழுவார்கள்.
27ஜீவனுள்ளோருடைய தேசத்திலே பராக்கிரமசாலிகளுக்குக் கெடியுண்டாக்குகிறவர்களாயிருந்தும், அவர்கள் விருத்தசேதனமில்லாதவர்களாய் விழுந்து, தங்கள் யுத்த ஆயுதங்களோடு பாதாளத்திலிறங்கின பராக்கிரமசாலிகளோடே இவர்கள் கிடப்பதில்லை; அவர்கள் தங்கள் பட்டயங்களைத் தங்கள் தலைகளின்கீழ் வைத்தார்கள்; ஆனாலும் அவர்களுடைய அக்கிரமம் தங்கள் எலும்புகளின்மேல் இருக்கும்.
28நீயும் விருத்தசேதனமில்லாதவர்களின் நடுவே நொறுங்குண்டு, பட்டயத்தால் வெட்டுண்டவர்களோடே கிடப்பாய்.
29அங்கே ஏதோமும் அதின் ராஜாக்களும் அதின் எல்லாப் பிரபுக்களும் கிடக்கிறார்கள்; பட்டயத்தால் வெட்டுண்டவர்களிடத்தில் இவர்கள் தங்கள் வல்லமையோடுங்கூடக் கிடத்தப்பட்டார்கள்; இவர்கள் விருத்தசேதனமில்லாதவர்களிடத்திலும், குழியில் இறங்குகிறவர்களிடத்திலும் கிடக்கிறார்கள்.
30அங்கே வடதிசை அதிபதிகள் அனைவரும் எல்லாச் சீதோனியரும் கிடக்கிறார்கள்; இவர்கள் கெடியுண்டாக்குகிறவர்களாயிருந்தாலும் தங்கள் பராக்கிரமத்தைக்குறித்து வெட்கப்பட்டு, வெட்டுண்டவர்களிடத்தில் இறங்கி, பட்டயத்தால் வெட்டுண்டவர்களோடே விருத்தசேதனமில்லாதவர்களாய்க் கிடந்து, குழியில் இறங்கினவர்களிடத்தில் தங்கள் அவமானத்தைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள்.
31பார்வோன் அவர்களைப் பார்த்து தன் ஏராளமான ஜனத்தின்பேரிலும் ஆறுதலடைவான்; பட்டயத்தால் வெட்டுண்டார்களென்று, பார்வோனும் அவனுடைய சர்வசேனையும் ஆறுதலடைவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
32என்னைப்பற்றிய கெடியை ஜீவனுள்ளோர் தேசத்தில் உண்டுபண்ணுகிறேன், பார்வோனும் அவனுடைய ஏராளமான ஜனமும் பட்டயத்தால் வெட்டுண்டவர்களிடத்தில் விருத்தசேதனமில்லாதவர்களின் நடுவே கிடத்தப்படுவார்கள் என்கிறதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

எசேக்கியேல் 33

1கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2மனுபுத்திரனே, நீ உன் ஜனத்தின்புத்திரரோடே பேசி, அவர்களோடே சொல்லவேண்டியதாவது: நான் தேசத்தின்மேல் பட்டயத்தை வரப்பண்ணுகையில் தேசத்தின் ஜனம் தங்கள் எல்லைகளிலுள்ள ஒருவனை அழைத்து, அவனைத் தங்களுக்குக் காவற்காரனாக வைத்தபின்பு,
3இவன் தேசத்தின்மேல் பட்டயம் வருவதைக்கண்டு, எக்காளம் ஊதி, ஜனத்தை எச்சரிக்கும்போது,
4எக்காளத்தின் சத்தத்தைக் கேட்கிறவன் அதைக் கேட்டும், எச்சரிக்கையாயிராமல், பட்டயம் வந்து அவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவனுடைய இரத்தப்பழி அவன் தலையின்மேல் சுமரும்.
5அவன் எக்காளத்தின் சத்தத்தைக் கேட்டும், எச்சரிக்கையாயிருக்கவில்லை; அவனுடைய இரத்தப்பழி அவன் பேரிலே சுமரும்; எச்சரிக்கையாயிருக்கிறவனோ தன் ஜீவனைத் தப்புவித்துக்கொள்ளுவான்.
6காவற்காரன் பட்டயம் வருவதைக் கண்டும், அவன் எக்காளம் ஊதாமலும் ஜனங்கள் எச்சரிக்கப்படாமலும், பட்டயம் வந்து அவர்களில் யாதொருவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவன் தன் அக்கிரமத்திலே வாரிக்கொள்ளப்பட்டான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியைக் காவற்காரன் கையிலே கேட்பேன்.
7மனுபுத்திரனே, நான் உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவற்காரனாக வைத்தேன்; ஆகையால் நீ என் வாயினாலே வார்த்தையைக் கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக.
8நான் துன்மார்க்கனை நோக்கி: துன்மார்க்கனே, நீ சாகவே சாவாய் என்று சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கத்தில் இராதபடி எச்சரிக்கத்தக்கதாக அதை அவனுக்குச் சொல்லாமற்போனால், அந்தத் துன்மார்க்கன் தன் அக்கிரமத்திலே சாவான்: ஆனாலும் அவன் இரத்தப்பழியை உன் கையிலே கேட்பேன்.
9துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பும்படி நீ அவனை எச்சரித்தும், அவன் தன் வழியைவிட்டுத் திரும்பாமற்போனால், அவன் தன் அக்கிரமத்திலே சாவான்; நீயோ உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய்.
10மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: எங்கள் துரோகங்களும் எங்கள் பாவங்களும் எங்கள்மேல் இருக்கிறது, நாங்கள் சோர்ந்துபோகிறோம், நாங்கள் பிழைப்பது எப்படியென்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.
11கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியை விட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்புங்கள், திரும்புங்கள்; நீங்கள் ஏன் சாகவேண்டும் என்கிறார் என்று அவர்களோடே சொல்லு.
12மனுபுத்திரனே, நீ உன் ஜனத்தின் புத்திரரை நோக்கி: நீதிமான் துரோகம்பண்ணுகிற நாளிலே அவனுடைய நீதி அவனைத் தப்புவிப்பதில்லை; துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்தைவிட்டுத் திரும்புகிற நாளிலே அவன் தன் அக்கிரமத்தினால் விழுந்து போவதுமில்லை; நீதிமான் பாவஞ்செய்கிற நாளிலே தன் நீதியினால் பிழைப்பதுமில்லை.
13பிழைக்கவே பிழைப்பாய் என்று நான் நீதிமானுக்குச் சொல்லும்போது, அவன் தன் நீதியை நம்பி, அநியாயஞ்செய்தால், அவனுடைய நீதியில் ஒன்றும் நினைக்கப்படுவதில்லை, அவன் செய்த தன் அநியாயத்திலே சாவான்.
14பின்னும் சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லும்போது, அவன் தன் பாவத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியுஞ்செய்து,
15துன்மார்க்கன் தான் வாங்கின அடைமானத்தையும் தான் கொள்ளையிட்ட பொருளையும் திரும்பக் கொடுத்துவிட்டு, அநியாயம் செய்யாதபடி ஜீவப்பிரமாணங்களில் நடந்தால், அவன் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான்.
16அவன் செய்த அவனுடைய எல்லாப் பாவங்களும் அவனுக்கு விரோதமாக நினைக்கப்படுவதில்லை; அவன் நியாயமும் நீதியும் செய்தான், பிழைக்கவே பிழைப்பான் என்று சொல்லு.
17உன் ஜனத்தின் புத்திரரோ, ஆண்டவருடைய வழி செம்மையானதல்ல என்கிறார்கள்; அவர்களுடைய வழியே செம்மையானதல்ல.
18நீதிமான் தன் நீதியைவிட்டுத்திரும்பி, அநியாயஞ்செய்தால், அவன் அதினால் சாவான்.
19துன்மார்க்கன் தன் அக்கிரமத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியும் செய்தால், அவன் அவைகளினால் பிழைப்பான்.
20நீங்களோ, ஆண்டவருடைய வழி செம்மையானதல்ல என்கிறீர்கள், இஸ்ரவேல் வீட்டாரே, நான் உங்களில் ஒவ்வொருவனையும் அவனவன் வழிகளின்படியே நியாயந்தீர்ப்பேன் என்று சொல் என்றார்.
21எங்கள் சிறையிருப்பின் பன்னிரண்டாம் வருஷம் பத்தாம் மாதம் ஐந்தாந்தேதியிலே எருசலேமிலிருந்து தப்பின ஒருவன் என்னிடத்தில் வந்து: நகரம் அழிக்கப்பட்டது என்றான்.
22தப்பினவன் வருகிறதற்கு முந்தின சாயங்காலத்திலே கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்து, அவன் காலையில் என்னிடத்தில் வருமட்டும் என் வாயைத் திறந்திருக்கப்பண்ணிற்று; என் வாய் திறக்கப்பட்டது, பின்பு நான் மௌனமாயிருக்கவில்லை.
23அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
24மனுபுத்திரனே, இஸ்ரவேல் தேசத்தின் பாழான இடங்களிலுள்ள குடிகள்: ஆபிரகாம் ஒருவனாயிருந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டான்; நாங்கள் அநேகராயிருக்கிறோம், எங்களுக்கு இந்த தேசம் சுதந்தரமாகக் கொடுக்கப்பட்டது என்று சொல்லுகிறார்கள்.
25ஆகையால், நீ அவர்களை நோக்கி: நீங்கள் இரத்தத்தோடே கூடியதைத் தின்று, உங்கள் நரகலான விக்கிரகங்களுக்கு நேராக உங்கள் கண்களை ஏறெடுத்து, இரத்தத்தைச் சிந்தியிருக்கிறீர்கள், நீங்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்வீர்களோ?
26நீங்கள் உங்கள் பட்டயத்தை நம்பிக்கொண்டு, அருவருப்பானதைச் செய்து, உங்களில் அவனவன் தன்தன் அயலான் மனைவியைத் தீட்டுப்படுத்துகிறீர்கள்; நீங்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்வீர்களோ என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்லு.
27நீ அவர்களை நோக்கி: பாழான இடங்களில் இருக்கிறவர்கள் பட்டயத்தால் விழுவார்கள்; வெளிகளில் இருக்கிறவனை மிருகங்களுக்கு இரையாக ஒப்புக்கொடுப்பேன்; கோட்டைகளிலும் கெபிகளிலும் இருக்கிறவர்கள் கொள்ளைநோயால் சாவார்கள்.
28நான் தேசத்தைப் பாழும் அவாந்தரமுமாக்குவேன்; அப்பொழுது அதினுடைய பெலத்தின் பெருமை ஒழிந்துபோகும்; அப்பொழுது இஸ்ரவேலின் மலைகள் கடந்துபோவாரில்லாமல் அவாந்தரமாய்க்கிடக்கும்.
29அவர்கள் செய்த அவர்களுடைய எல்லா அருவருப்புக்களினிமித்தமும் நான் தேசத்தைப் பாழும் அவாந்தரமுமாக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள், இதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்லு.
30மேலும் மனுபுத்திரனே, உன் ஜனத்தின் புத்திரர் சுவர் ஓரங்களிலும் வீட்டுவாசல்களிலும் உன்னைக்குறித்துப்பேசி, கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட வார்த்தை என்னவென்று கேட்போம் வாருங்கள் என்று ஒருவரோடொருவரும் சகோதரனோடே சகோதரனும் சொல்லி,
31ஜனங்கள் கூடிவருகிற வழக்கத்தின்படி உன்னிடத்தில் வந்து, உனக்கு முன்பாக என் ஜனங்கள்போல் உட்கார்ந்து, உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவர்கள் அவைகளின்படி செய்கிறதில்லை; அவர்கள் தங்கள் வாயினாலே இன்பமாய்ப் பேசுகிறார்கள், அவர்கள் இருதயமோ பொருளாசையைப் பின்பற்றிப்போகிறது.
32இதோ, நீ இனிய குரலும் கீதவாத்தியம் வாசிப்பதில் சாமர்த்தியமுமுடையவன் பாடும் இன்பமான பாட்டுக்குச் சமானமாயிருக்கிறாய்; அவர்கள் உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவைகளின்படி செய்யாமற்போகிறார்கள்.
33இதோ, அது வருகிறது, அது வருகையில் தங்கள் நடுவிலே ஒரு தீர்க்கதரிசி இருந்தான் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.

எசேக்கியேல் 34

1 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2மனுபுத்திரனே, இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரை; நீ தீர்க்கதரிசனம் உரைத்து, அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் மேய்ப்பருக்குச் சொல்லுகிறார்; தங்களையே மேய்க்கிற இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு ஐயோ! மேய்ப்பர் மந்தையை அல்லவா மேய்க்கவேண்டும்.
3நீங்கள் நெய்யைச் சாப்பிட்டு, ஆட்டுமயிரை உடுப்பாக்கிக்கொள்ளுகிறீர்கள்: கொழுத்ததை அடிக்கிறீர்கள்; மந்தையையோ மேய்க்காமற்போகிறீர்கள்.
4நீங்கள் பலவீனமானவைகளைப் பலப்படுத்தாமலும், நசல்கொண்டவைகளைக் குணமாக்காமலும், எலும்பு முறிந்தவைகளைக் காயங்கட்டாமலும், துரத்துண்டவைகளைத் திருப்பிக்கொண்டு வராமலும், காணாமற்போனவைகளைத் தேடாமலும் போய், பலாத்காரமும் கடூரமுமாய் அவைகளை ஆண்டீர்கள்.
5மேய்ப்பன் இல்லாததினால் அவைகள் சிதறுண்டுபோயின; சிதறுண்டு போனவைகள் காட்டு மிருகங்களுக்கெல்லாம் இரையாயின.
6என் ஆடுகள் சகல மலைகளிலும் உயரமான சகல மேடுகளிலும் அலைப்புண்டு, பூமியின்மீதெங்கும் என் ஆடுகள் சிதறித்திரிகிறது; விசாரிக்கிறவனுமில்லை, தேடுகிறவனுமில்லை.
7ஆகையால், மேய்ப்பரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
8 கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; மேய்ப்பன் இல்லாததினால் என் ஆடுகள் சூறையாகி, என் ஆடுகள் காட்டுமிருகங்களுக்கெல்லாம் இரையாய்ப் போயின; என் மேய்ப்பர்கள் என் ஆடுகளை விசாரியாமற்போனார்கள், மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்காமல் தங்களையே மேய்த்தார்கள்.
9ஆகையால் மேய்ப்பரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
10 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: இதோ, நான் மேய்ப்பருக்கு விரோதமாக வந்து, என் ஆடுகளை அவர்கள் கையிலே கேட்டு, மேய்ப்பர் இனித் தங்களையே மேய்க்காதபடி, மந்தையை மேய்க்கும் தொழிலைவிட்டு அவர்களை விலக்கி, என் ஆடுகள் அவர்களுக்கு ஆகாரமாயிராதபடி, அவைகளை அவர்கள் வாய்க்குத் தப்பப்பண்ணுவேன் என்று சொல்லு.
11 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன்.
12ஒரு மேய்ப்பன் சிதறுண்ட தன் ஆடுகளின் நடுவே இருக்கிற நாளில் தன் மந்தையைத் தேடிக்கொண்டிருக்கிறதுபோல, நான் என் ஆடுகளைத்தேடி, மப்பும் மந்தாரமுமான நாளிலே அவைகள் சிதறுண்டுபோன எல்லா இடங்களிலுமிருந்து அவைகளைத் தப்பிவரப்பண்ணி,
13அவைகளை ஜனங்களிடத்திலிருந்து புறப்படவும் தேசங்களிலிருந்து சேரவும்பண்ணி, அவைகளுடைய சுயதேசத்திலே அவைகளைக் கொண்டுவந்து, இஸ்ரவேல் மலைகளின்மேலும் ஆறுகள் அண்டையிலும் தேசத்தின் சகல வாசஸ்தலங்களிலும் அவைகளை மேய்ப்பேன்.
14அவைகளை நல்ல மேய்ச்சலிலே மேய்ப்பேன்; இஸ்ரவேலுடைய உயர்ந்த மலைகளில் அவைகளுடைய தொழுவம் இருக்கும்; அங்கே அவைகள் நல்ல தொழுவத்தில் படுத்துக்கொள்ளும், இஸ்ரவேலின் மலைகளின்மேல் நல்ல மேய்ச்சலை மேயும்.
15என் ஆடுகளை நான் மேய்த்து, அவைகளை நான் மடக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
16நான் காணாமற்போனதைத் தேடி, துரத்துண்டதைத் திரும்பக் கொண்டுவந்து, எலும்பு முறிந்ததைக் காயங்கட்டி, நசல் கொண்டதைத் திடப்படுத்துவேன்; நியாயத்துக்குத்தக்கதாய் அவைகளை மேய்த்து, புஷ்டியும் பெலமுமுள்ளவைகளை அழிப்பேன்.
17என் மந்தையே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, ஆட்டுக்கும் ஆட்டுக்கும், ஆட்டுக்கடாக்களுக்கும், வெள்ளாட்டுக்கடாக்களுக்கும் நான் நியாயந்தீர்ப்பேன்.
18நீங்கள் நல்ல மேய்ச்சலை மேய்ந்து, உங்கள் மேய்ச்சல்களில் மீதியானதை உங்கள் கால்களால் மிதிக்கலாமா? தெளிந்த தண்ணீரைக் குடித்து மீதியாயிருக்கிறதை உங்கள் கால்களால் குழப்பிப்போடலாமா?
19என் ஆடுகள் உங்கள் கால்களால் மிதிக்கப்பட்டதை மேயவும், உங்கள் கால்களால் குழப்பப்பட்டதைக் குடிக்கவும் வேண்டுமோ?
20ஆகையால், கர்த்தராகிய ஆண்டவர் அவைகளை நோக்கி: இதோ, நான், நானே கொழுத்த ஆடுகளுக்கும் இளைத்த ஆடுகளுக்கும் நியாயந்தீர்ப்பேன்.
21நீங்கள் பலவீனமாயிருக்கிறவை களையெல்லாம் புறம்பாக்கிச் சிதறப்பண்ணும்படி, அவைகளைப் பக்கத்தினாலும் முன்னந்தொடைகளினாலும் தள்ளி உங்கள் கொம்புகளைக்கொண்டு முட்டுகிறபடியினாலே,
22நான் என் ஆடுகளை இனிச் சூறையாகாதபடிக்கு இரட்சித்து, ஆடுகளுக்கும் ஆடுகளுக்கும் நியாயந்தீர்ப்பேன்.
23அவர்களை மேய்க்கும்படி என் தாசனாகிய தாவீது என்னும் ஒரே மேய்ப்பனை நான் அவர்கள்மேல் விசாரிப்பாயிருக்க ஏற்படுத்துவேன்; இவர் அவர்களை மேய்த்து, இவரே அவர்களுக்கு மேய்ப்பனாயிருப்பார்.
24 கர்த்தராகிய நான் அவர்களுக்குத் தேவனாக இருப்பேன், என் தாசனாகிய தாவீது அவர்கள் நடுவில் அதிபதியாயிருப்பார்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்.
25நான் அவர்களோடு சமாதான உடன்படிக்கைசெய்து, துஷ்ட மிருகங்களை தேசத்தில் இராதபடிக்கு ஒழியப்பண்ணுவேன்; அவர்கள் சுகமாய் வனாந்தரத்தில் தாபரித்து, காடுகளில் நித்திரைபண்ணுவார்கள்.
26நான் அவர்களையும் என் மேட்டின் சுற்றுப்புறங்களையும் ஆசீர்வாதமாக்கி, ஏற்றகாலத்திலே மழையைப் பெய்யப்பண்ணுவேன்; ஆசீர்வாதமான மழை பெய்யும்.
27வெளியின் விருட்சங்கள் தங்கள் கனியைத்தரும்; பூமி தன் பலனைக் கொடுக்கும்; அவர்கள் தங்கள் தேசத்தில் சுகமாயிருப்பார்கள்; நான் அவர்கள் நுகத்தின் கயிறுகளை அறுத்து, அவர்களை அடிமைகொண்டவர்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
28இனி அவர்கள் புறஜாதிகளுக்குக் கொள்ளையாவதில்லை, பூமியின் மிருகங்கள் அவர்களைப் பட்சிப்பதுமில்லை; தத்தளிக்கப்பண்ணுவார் இல்லாமல் சுகமாய்த் தங்குவார்கள்.
29நான் அவர்களுக்குக் கீர்த்திபொருந்திய ஒரு நாற்றை எழும்பப்பண்ணுவேன்; அவர்கள் இனி தேசத்திலே பஞ்சத்தால் வாரிக்கொள்ளப்படுவதுமில்லை, இனிப் புறஜாதிகள் செய்யும் அவமானத்தைச் சுமப்பதுமில்லை.
30தங்கள் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் தங்களோடே இருக்கிறதையும், இஸ்ரவேல் வம்சத்தாராகிய தாங்கள் என் ஜனமாயிருக்கிறதையும், அவர்கள் அறிந்துகொள்வார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
31என் மந்தையும் என் மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நீங்கள் மனுஷர்; நான் உங்கள் தேவன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *