Scripture Portion: Genesis 38-40

ஆதியாகமம் 38

1அக்காலத்திலே யூதா தன் சகோதரரை விட்டு, அதுல்லாம் ஊரானாகிய ஈரா என்னும் ஒரு மனிதனிடத்தில் போய்ச் சேர்ந்தான்.
2அங்கே யூதா, சூவா என்னும் பேருள்ள ஒரு கானானியனுடைய குமாரத்தியைக் கண்டு, அவளை விவாகம்பண்ணி, அவளோடே சேர்ந்தான்.
3அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனுக்கு ஏர் என்று பேரிட்டான்.
4அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு ஓனான் என்று பேரிட்டாள்.
5அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேலா என்று பேரிட்டாள்; அவள் இவனைப் பெறுகிறபோது, அவன் கெசீபிலே இருந்தான்.
6யூதா தன் மூத்த மகனாகிய ஏர் என்பவனுக்குத் தாமார் என்னும் பேருள்ள ஒரு பெண்ணைக் கொண்டான்.
7யூதாவின் மூத்த மகனாகிய ஏர் என்பவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனாயிருந்ததினால், கர்த்தர் அவனை அழித்துப்போட்டார்.
8அப்பொழுது யூதா ஓனானை நோக்கி: நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து, அவளை மைத்துனச் சுதந்தரமாய்ப்படைத்து, உன் தமையனுக்குச் சந்ததியை உண்டாக்கு என்றான்.
9அந்தச் சந்ததி தன் சந்ததியாயிராதென்று ஓனான் அறிந்தபடியினாலே, அவன் தன் தமையனுடைய மனைவியைச் சேரும்போது, தன் தமையனுக்குச் சந்ததி உண்டாகாதபடிக்குத் தன் வித்தைத் தரையிலே விழவிட்டுக் கெடுத்தான்.
10அவன் செய்தது கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்ததினால், அவனையும் அவர் அழித்துப்போட்டார்.
11அப்பொழுது யூதா, தன் குமாரனாகிய சேலாவும் அவன் சகோதரர் செத்தது போலச் சாவான் என்று அஞ்சி, தன் மருமகளாகிய தாமாரை நோக்கி: என் குமாரனாகிய சேலா பெரியவனாகுமட்டும், நீ உன் தகப்பன் வீட்டிலே கைம்பெண்ணாய்த் தங்கியிரு என்று சொன்னான்; அந்தப்படியே தாமார் போய்த் தன் தகப்பன் வீட்டிலே தங்கியிருந்தாள்.
12அநேகநாள் சென்றபின், சூவாவின் குமாரத்தியாகிய யூதாவின் மனைவி மரித்தாள். யூதாவினுடைய துக்கம் ஆறினபின், அவன் அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் ஈராவுடனே திம்னாவிலே தன் ஆடுகளை மயிர்க் கத்தரிக்கிறவர்களிடத்திற்குப் போனான்.
13அப்பொழுது: உன் மாமனார் தம்முடைய ஆடுகளை மயிர்க்கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார் என்று தாமாருக்கு அறிவிக்கப்பட்டது.
14சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்துபோட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள்.
15யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து,
16அந்த வழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா என்றான்; அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள்.
17அதற்கு அவன்: நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக்குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கு அவள்: நீர் அதை அனுப்புமளவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள்.
18அப்பொழுது அவன்: நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: உம்முடைய முத்திரை மோதிரமும் உம்முடைய ஆரமும் உம்முடைய கைக்கோலும் கொடுக்கவேண்டும் என்றாள். அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து, அவளிடத்தில் சேர்ந்தான்; அவள் அவனாலே கர்ப்பவதியாகி,
19எழுந்துபோய், தன் முக்காட்டைக் களைந்து, தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களை உடுத்திக்கொண்டாள்.
20யூதா அந்த ஸ்திரீயினிடத்தில் இருந்த அடைமானத்தை வாங்கிக்கொண்டு வரும்படி அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் கையிலே ஒரு வெள்ளாட்டுக்குட்டியைக் கொடுத்தனுப்பினான்; அவன் அவளைக் காணாமல்,
21அவ்விடத்து மனிதரை நோக்கி: வழியண்டை நீரூற்றுகள் அருகே இருந்த தாசி எங்கே என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: இங்கே தாசி இல்லை என்றார்கள்.
22அவன் யூதாவினிடத்தில் திரும்பி வந்து: அவளைக் காணோம், அங்கே தாசி இல்லையென்று அவ்விடத்து மனிதரும் சொல்லுகிறார்கள் என்றான்.
23அப்பொழுது யூதா: இதோ, இந்த ஆட்டுக்குட்டியை அனுப்பினேன், நீ அவளைக் காணவில்லை; நமக்கு அவகீர்த்திவராதபடிக்கு, அவள் அதைக் கொண்டுபோனால் போகட்டும் என்றான்.
24ஏறக்குறைய மூன்றுமாதம் சென்றபின்பு உன் மருகளாகிய தாமார் வேசித்தனம்பண்ணினாள், அந்த வேசித்தனத்தினால் கர்ப்பவதியுமானாள் என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது யூதா: அவளை வெளியே கொண்டுவாருங்கள், அவள் சுட்டெரிக்கப்படவேண்டும் என்றான்.
25அவள் வெளியே கொண்டுவரப்பட்டபோது, அவள் தன் மாமனிடத்துக்கு அந்த அடைமானத்தை அனுப்பி, இந்தப் பொருட்களை உடையவன் எவனோ அவனாலே நான் கர்ப்பவதியானேன்; இந்த முத்திரை மோதிரமும் இந்த ஆரமும் இந்தக் கோலும் யாருடையவைகள் பாரும் என்று சொல்லி அனுப்பினாள்.
26யூதா அவைகளைப் பார்த்தறிந்து: என்னிலும் அவள் நீதியுள்ளவள்; அவளை என் குமாரனாகிய சேலாவுக்குக் கொடாமற்போனேனே என்றான். அப்புறம் அவன் அவளைச் சேரவில்லை.
27அவளுக்குப் பிரசவகாலம் வந்தபோது, அவள் கர்ப்பத்தில் இரட்டைப்பிள்ளைகள் இருந்தன.
28அவள் பெறுகிறபேது, ஒரு பிள்ளை கையை நீட்டினது; அப்பொழுது மருத்துவச்சி அதின் கையைப் பிடித்து, அதில் சிவப்புநூலைக் கட்டி, இது முதலாவது வெளிப்பட்டது என்றாள்.
29அது தன் கையைத் திரும்ப உள்ளே வாங்கிக்கொண்டபோது, அதின் சகோதரன் வெளிப்பட்டான். அப்பொழுது அவள்: நீ மீறிவந்ததென்ன, இந்த மீறுதல் உன்மேல் நிற்கும் என்றாள்; அதினாலே அவனுக்குப் பாரேஸ் என்று பேரிடப்பட்டது.
30பிற்பாடு கையில் சிவப்புநூல் கட்டியிருந்த அவனுடைய தம்பி வெளிப்பட்டான்; அவனுக்கு சேரா என்று பேரிடப்பட்டது.

ஆதியாகமம் 39

1யோசேப்பு எகிப்துக்குக் கொண்டு போகப்பட்டான். பார்வோனுடைய பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்னும் எகிப்து தேசத்தான் அவனை அவ்விடத்திற்குக் கொண்டுவந்த இஸ்மவேலரிடத்தில் விலைக்கு வாங்கினான்.
2கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்; அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான்.
3கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும், அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்றும், அவன் எஜமான் கண்டு;
4யோசேப்பினிடத்தில் தயவுவைத்து, அவனைத் தனக்கு ஊழியக்காரனும் தன் வீட்டுக்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான்.
5அவனைத் தன் வீட்டுக்கும் தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் விசாரணைக்காரனாக்கினது முதற்கொண்டு, கர்த்தர் யோசேப்பினிமித்தம் அந்த எகிப்தியன் வீட்டை ஆசீர்வதித்தார்; வீட்டிலும் வெளியிலும் அவனுக்கு உண்டானவைகள் எல்லாவற்றிலும் கர்த்தருடைய ஆசீர்வாதம் இருந்தது.
6ஆகையால், அவன் தனக்கு உண்டானதையெல்லாம் யோசேப்பின் கையிலே ஒப்புக்கொடுத்துவிட்டு, தான் புசிக்கிற போஜனம் தவிர தன்னிடத்திலிருந்த மற்றொன்றைக்குறித்தும் விசாரியாதிருந்தான். யோசேப்பு அழகான ரூபமும் சௌந்தரிய முகமும் உள்ளவனாயிருந்தான்.
7சிலநாள் சென்றபின், அவனுடைய எஜமானின் மனைவி யோசேப்பின்மேல் கண்போட்டு, என்னோடே சயனி என்றாள்.
8அவனோ தன் எஜமானுடைய மனைவியின் சொல்லுக்கு இணங்காமல், அவளை நோக்கி: இதோ, வீட்டிலே என்னிடத்தில் இருக்கிறவைகளில் யாதொன்றைக்குறித்தும் என் ஆண்டவன் விசாரியாமல், தமக்கு உண்டான எல்லாவற்றையும் என்கையில் ஒப்பித்திருக்கிறார்.
9இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை; நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத்தவிர வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை; இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான்.
10அவள் நித்தம் நித்தம் யோசேப்போடே இப்படிப் பேசிக்கொண்டு வந்தும், அவன் அவளுடனே சயனிக்கவும் அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லை.
11இப்படியிருக்கும்போது, ஒருநாள் அவன் தன் வேலையைச் செய்கிறதற்கு வீட்டுக்குள் போனான்; வீட்டு மனிதரில் ஒருவரும் வீட்டில் இல்லை.
12அப்பொழுது அவள் அவனுடைய வஸ்திரத்தைப் பற்றிப் பிடித்து, என்னோடே சயனி என்றாள். அவனோ தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனான்.
13அவன் தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனதை அவள் கண்டபோது,
14அவள் தன் வீட்டு மனிதரைக் கூப்பிட்டு: பாருங்கள், எபிரெய மனுஷன் நம்மிடத்தில் சரசம்பண்ணும்படிக்கு அவனை நமக்குள் கொண்டுவந்தார், அவன் என்னோடே சயனிக்கும்படிக்கு என்னிடத்தில் வந்தான்; நான் மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டேன்.
15நான் சத்தமிட்டுக் கூப்பிடுகிறதை அவன் கேட்டு, தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு, வெளியே ஓடிப்போய்விட்டான் என்று சொன்னாள்.
16அவனுடைய எஜமான் வீட்டுக்கு வருமளவும் அவனுடைய வஸ்திரத்தைத் தன்னிடத்தில் வைத்திருந்து,
17அவனை நோக்கி: நீர் நம்மிடத்தில் கொண்டுவந்த அந்த எபிரெய வேலைக்காரன் சரசம்பண்ணும்படிக்கு என்னிடத்தில் வந்தான்.
18அப்பொழுது நான் சத்தமிட்டுக்கூப்பிட்டேன், அவன் தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு வெளியே ஓடிப்போனான் என்றாள்.
19உம்முடைய வேலைக்காரன் எனக்கு இப்படிச் செய்தான் என்று தன் மனைவி தன்னோடே சொன்ன வார்த்தைகளை அவனுடைய எஜமான் கேட்டபோது, அவனுக்குக் கோபம் மூண்டது.
20யோசேப்பின் எஜமான் அவனைப்பிடித்து, ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான். அந்தச் சிறைச்சாலையில் அவன் இருந்தான்.
21கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபைவைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார்.
22சிறைச்சாலைத் தலைவன் சிறைச்சாலையில் வைக்கப்பட்ட யாவரையும் யோசேப்பின் கையிலே ஒப்புவித்தான்; அங்கே அவர்கள் செய்வதெல்லாவற்றையும் யோசேப்பு செய்வித்தான்.
23கர்த்தர் அவனோடே இருந்தபடியினாலும், அவன் எதைச் செய்தானோ அதைக் கர்த்தர் வாய்க்கப்பண்ணினபடியினாலும், அவன் வசமாயிருந்த யாதொன்றையும் குறித்துச் சிறைச்சாலைத் தலைவன் விசாரிக்கவில்லை.

ஆதியாகமம் 40

1இந்த நடபடிகளுக்குப்பின்பு, எகிப்து ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனும் சுயம்பாகியும் எகிப்து ராஜாவாகிய தங்கள் ஆண்டவனுக்குக் குற்றம் செய்தார்கள்.
2பார்வோன் தன் பானபாத்திரக்காரரின் தலைவனும் சுயம்பாகிகளின் தலைவனும் ஆகிய இவ்விரண்டு பிரதானிகள் மேலும் கடுங்கோபங்கொண்டு,
3அவர்களை யோசேப்பு வைக்கப்பட்டிருந்த இடமும் தலையாரிகளின் அதிபதியின் வீடுமாகிய சிறைச்சாலையிலே காவல்பண்ணுவித்தான்.
4தலையாரிகளின் அதிபதி அவர்களை விசாரிக்கும்படி யோசேப்பின் வசத்தில் ஒப்புவித்தான்; அவன் அவர்களை விசாரித்து வந்தான்; அவர்கள் அநேகநாள் காவலில் இருந்தார்கள்.
5எகிப்து ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனும் சுயம்பாகியுமாகிய அவ்விரண்டுபேரும் சிறைச்சாலையில் இருக்கும்போது, ஒரே ராத்திரியிலே வெவ்வேறு பொருள்கொண்ட சொப்பனம் கண்டார்கள்.
6காலமே யோசேப்பு அவர்களிடத்தில் போய், அவர்களைப் பார்க்கும்போது, அவர்கள் கலங்கியிருந்தார்கள்.
7அப்பொழுது அவன் தன் எஜமானுடைய வீட்டில் தன்னோடே காவல்பண்ணப்பட்டிருந்த பார்வோனுடைய பிரதானிகளை நோக்கி: உங்கள் முகங்கள் இன்று துக்கமாயிருக்கிறது என்ன என்று கேட்டான்.
8அதற்கு அவர்கள்: சொப்பனம் கண்டோம், அதற்கு அர்த்தம் சொல்லுகிறவன் ஒருவனும் இல்லை என்றார்கள். அதற்கு யோசேப்பு: சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குரியதல்லவா? அவைகளை என்னிடத்தில் சொல்லுங்கள் என்றான்.
9அப்பொழுது பானபாத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நோக்கி: என் சொப்பனத்திலே ஒரு திராட்சச்செடி எனக்கு முன்பாக இருக்கக்கண்டேன்.
10அந்தத் திராட்சச்செடியிலே மூன்று கொடிகள் இருந்தது; அது துளிர்க்கிறதாயிருந்தது; அதில் பூக்கள் மலர்ந்திருந்தது; அதின் குலைகள் பழுத்த பழங்களாயிருந்தது.
11பார்வோனுடைய பாத்திரம் என்கையிலே இருந்தது; நான் அந்தப் பழங்களைப் பறித்து, அவைகளைப் பார்வோனுடைய பாத்திரத்தில் பிழிந்து, அந்தப் பாத்திரத்தைப் பார்வோனுடைய கையிலே கொடுத்தேன் என்று, தன் சொப்பனத்தைச் சொன்னான்.
12அதற்கு யோசேப்பு: அந்த மூன்று கொடிகளும் மூன்று நாளாம்.
13மூன்று நாளைக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மறுபடியும் உன் நிலையிலே நிறுத்துவார்; முன்னே அவருக்குப் பானம் கொடுத்துவந்த வழக்கத்தின்படி பார்வோனின் பாத்திரத்தை அவர் கையிலே கொடுப்பாய்;
14இதுதான் அதின் அர்த்தம் என்று சொன்னதும் அன்றி நீ வாழ்வடைந்திருக்கும்போது, என்னை நினைத்து, என்மேல் தயவுவைத்து, என் காரியத்தைப் பார்வோனுக்கு அறிவித்து, இந்த இடத்திலிருந்து என்னை விடுதலையாக்கவேண்டும்.
15நான் எபிரெயருடைய தேசத்திலிருந்து களவாய்க் கொண்டுவரப்பட்டேன்; என்னை இந்தக் காவல்கிடங்கில் வைக்கும்படிக்கும் நான் இவ்விடத்தில் ஒன்றும் செய்யவில்லை என்றும் சொன்னான்.
16அர்த்தம் நன்றாயிருக்கிறது என்று சுயம்பாகிகளின் தலைவன் கண்டு, யோசேப்பை நோக்கி: நானும் என் சொப்பனத்தில் மூன்று வெள்ளைக் கூடைகள் என் தலையின்மேல் இருக்கக்கண்டேன்;
17மேற்கூடையிலே பார்வோனுக்காக சமைக்கப்பட்ட சகலவித பலகாரங்களிலும் கொஞ்சம் கொஞ்சம் இருந்தது; என் தலையின் மேல் கூடையில் இருந்தவைகளைப் பறவைகள் வந்து பட்சித்தது என்றான்.
18அதற்கு யோசேப்பு: அந்த மூன்று கூடைகளும் மூன்று நாளாம்.
19இன்னும் மூன்று நாளைக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மரத்திலே தூக்கிப்போடுவார்; அப்பொழுது பறவைகள் உன் மாம்சத்தைத் தின்னும், இதுதான் அதின் அர்த்தம் என்று சொன்னான்.
20மூன்றாம் நாள் பார்வோனுடைய ஜன்ம நாளாயிருந்தது; அவன் தன் ஊழியக்காரர் எல்லாருக்கும் விருந்துபண்ணி, பானபாத்திரக்காரருடைய தலைவன் தலையையும் சுயம்பாகிகளுடைய தலைவன் தலையையும் தன் உத்தியோகஸ்தரின் நடுவே உயர்த்தி,
21பானபாத்திரக்காரரின் தலைவனைப் பானங்கொடுக்கிற தன் உத்தியோகத்திலே மறுபடியும் வைத்தான்; அந்தப்படியே அவன் பார்வோனுடைய கையிலே பாத்திரத்தைக் கொடுத்தான்.
22சுயம்பாகிகளின் தலைவனையோ தூக்கிப்போட்டான். யோசேப்பு அவர்களுக்குச் சொன்ன அர்த்தத்தின்படியே சம்பவித்தது.
23ஆனாலும் பானபாத்திரக்காரனின் தலைவன் யோசேப்பை நினையாமல் அவனை மறந்துவிட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *