Scripture Portion: Ezekiel 38-39

எசேக்கியேல் 38

1கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2மனுபுத்திரனே, மேசேக் தூபால் ஜாதிகளின் தலைமையான அதிபதியாகிய மாகோகுதேசத்தானான கோகுக்கு எதிராக நீ உன் முகத்தைத் திருப்பி, அவனுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து,
3சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், மேசேக் தூபால் ஜாதிகளின் அதிபதியாகிய கோகே, இதோ, நான் உனக்கு விரோதமாக வருவேன்.
4நான் உன்னைத் திருப்பி, உன் வாயில் துறடுகளைப் போட்டு, உன்னையும் உன்னுடைய எல்லாச் சேனையையும் குதிரைகளையும், சர்வாயுதந்தரித்த குதிரை வீரர்களையும், பரிசையும் கேடகமுமுடைய திரளான கூட்டத்தையும் புறப்படப்பண்ணுவேன்; அவர்கள் எல்லாரும் பட்டயங்களைப் பிடித்திருப்பார்கள்.
5அவர்களோடுகூட பெர்சியரும், எத்தியோப்பியரும், லீபியரும் இருப்பார்கள்; அவர்களெல்லாரும் கேடகம்பிடித்து, தலைச்சீராவுந்தரித்திருப்பவர்கள்.
6கோமேரும் அவனுடைய எல்லா இராணுவங்களும் வடதிசையிலுள்ள தோகர்மா வம்சத்தாரும் அவர்களுடைய எல்லா இராணுவங்களுமாகிய திரளான ஜனங்கள் உன்னுடனேகூட இருப்பார்கள்.
7நீ ஆயத்தப்படு, உன்னுடனேகூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து; நீ அவர்களுக்குக் காவலாளனாயிரு.
8அநேக நாட்களுக்குப் பிற்பாடு நீ விசாரிக்கப்படுவாய்; பட்டயத்துக்கு நீங்கலாகி, பற்பல ஜனங்களிலிருந்து சேர்த்துக்கொள்ளப்பட்டு வந்தவர்களின் தேசத்தில் கடைசி வருஷங்களிலே வருவாய்; நெடுநாள் பாழாய்க்கிடந்து, பிற்பாடு ஜாதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள் எல்லாரும் சுகத்தோடே குடியிருக்கும் இஸ்ரவேலின் மலைகளுக்கு விரோதமாய் வருவாய்; அவர்கள் எல்லாரும் அஞ்சாமல் குடியிருக்கும்போது,
9பெருங்காற்றைப்போல் எழும்பி வருவாய்; நீயும் உன்னுடைய எல்லா இராணுவங்களும் உன்னோடேகூட இருக்கும் திரளான ஜனங்களும் கார்மேகம்போல் தேசத்தை மூடுவீர்கள்.
10கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அந்நாளிலே பாழாய்க்கிடந்து திரும்பக் குடியேற்றப்பட்ட ஸ்தலங்களுக்கு விரோதமாகவும், ஜாதிகளிடத்திலிருந்து சேர்க்கப்பட்டதும், ஆடுகளையும், மாடுகளையும், ஆஸ்திகளையும் சம்பாதித்து, தேசத்தின் நடுவில் குடியிருக்கிறதுமான ஜனத்துக்கு விரோதமாகவும், நீ உன் கையைத் திருப்பும்படிக்கு,
11உன் இருதயத்தில் யோசனைகள் எழும்ப, நீ பொல்லாத நினைவை நினைத்து,
12நான் கொள்ளையிடவும் சூறையாடவும், மதில்களில்லாமல் கிடக்கிற கிராமங்களுள்ள தேசத்துக்கு விரோதமாய்ப்போவேன்; நிர்விசாரமாய்ச் சுகத்தோடே குடியிருக்கிறவர்களின்மேல் வருவேன்; அவர்கள் எல்லாரும் மதில்களில்லாமல் குடியிருக்கிறார்கள்; அவர்களுக்குத் தாழ்ப்பாளும் இல்லை, கதவுகளும் இல்லை என்பாய்.
13சேபா தேசத்தாரும், தேதான் தேசத்தாரும், தர்ஷீசின் வர்த்தகரும் அதினுடைய பாலசிங்கங்களான அனைவரும் உன்னை நோக்கி: நீ கொள்ளையிட அல்லவோ வருகிறாயென்றும், நீ சூறையாடி, வெள்ளியையும் பொன்னையும் ஆஸ்தியையும் எடுத்துக்கொள்ளுகிறதற்கும், ஆடுகளையும் மாடுகளையும் பிடிக்கிறதற்கும், மிகவும் கொள்ளையிடுகிறதற்கும் அல்லவோ உன்னுடைய கூட்டத்தைக் கூட்டினாயென்றும் சொல்லுவார்கள்.
14ஆகையால் மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, கோகை நோக்கிச் சொல்லவேண்டியது என்னவென்றால்; கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; என் ஜனமாகிய இஸ்ரவேல் சுகமாய்க் குடியிருக்கிற அக்காலத்திலே நீ அதை அறிவாய் அல்லவோ?
15அப்பொழுது நீயும் உன்னுடனேகூடத் திரளான ஜனங்களும் வடதிசையிலுள்ள உன் ஸ்தானத்திலிருந்து வருவீர்கள்; அவர்கள் பெரிய கூட்டமும் திரளான சேனையுமாயிருந்து, எல்லாரும் குதிரைகளின்மேல் ஏறுகிறவர்களாயிருப்பார்கள்.
16நீ தேசத்தைக் கார்மேகம்போல்மூட, என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாக எழும்பிவருவாய்; கடைசி நாட்களிலே இது சம்பவிக்கும்; கோகே, ஜாதிகளின் கண்களுக்கு முன்பாக உன்மூலமாய் நான் பரிசுத்தர் என்று விளங்கப்படுகிறதினால் அவர்கள் என்னை அறியும்படிக்கு உன்னை என் தேசத்துக்கு விரோதமாக வரப்பண்ணுவேன்.
17உன்னை அவர்களுக்கு விரோதமாக வரப்பண்ணுவேன் என்று பூர்வ நாட்களிலே அநேக வருஷகாலமாய்த் தீர்க்கதரிசனம் உரைத்து, இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரைக்கொண்டு, அந்நாட்களிலே நான் குறித்துச்சொன்னவன் நீ அல்லவோ என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
18இஸ்ரவேல் தேசத்துக்கு விரோதமாக கோகு வரும்காலத்தில் என் உக்கிரம் என் நாசியில் ஏறுமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
19அந்நாளிலே இஸ்ரவேல் தேசத்திலே பெரிய அதிர்ச்சி உண்டாகி,
20என் பிரசன்னத்தினால் சமுத்திரத்து மச்சங்களும், ஆகாயத்துப்பறவைகளும், வெளியின் மிருகங்களும், தரையில் ஊருகிற சகல பிராணிகளும், தேசமெங்குமுள்ள சகல நரஜீவன்களும் அதிரும்; பர்வதங்கள் இடியும்; செங்குத்தானவைகள் விழும்; எல்லா மதில்களும் தரையிலே விழுந்துபோகும் என்று என் எரிச்சலினாலும் என் சினத்தின் அக்கினியினாலும் நிச்சயமாய்ச் சொல்லுகிறேன்.
21என் எல்லா மலைகளிலும் பட்டயத்தை அவனுக்கு விரோதமாக வரவழைப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; அவனவன் பட்டயம் அவனவன் சகோதரனுக்கு விரோதமாயிருக்கும்.
22கொள்ளைநோயினாலும் இரத்தம்சிந்துதலினாலும் நான் அவனோடே வழக்காடி, அவன்மேலும் அவன் இராணுவங்களின்மேலும் அவனோடிருக்கும் திரளான ஜனங்களின்மேலும் வெள்ளமாய் அடிக்கும் மழையையும், பெருங்கல்மழையையும், அக்கினியையும், கந்தகத்தையும் வருஷிக்கப்பண்ணுவேன்.
23இவ்விதமாய் நான் அநேக ஜாதிகளின் கண்களுக்கு முன்பாக என் மகத்துவத்தையும் என் பரிசுத்தத்தையும் விளங்கப்பண்ணி, அறியப்படுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

எசேக்கியேல் 39

1இப்போதும் மனுபுத்திரனே, நீ கோகுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், மேசேக் தூபால் ஜாதிகளின் அதிபதியாகிய கோகே, இதோ, நான் உனக்கு விரோதமாகவருகிறேன்.
2நான் உன்னைத் திருப்பி உன்னை ஆறு துறடுகளால் இழுத்து, உன்னை வடபுறங்களிலிருந்து எழும்பவும் இஸ்ரவேல் மலைகளில் வரவும்பண்ணி,
3உன் வில்லை உன் இடதுகையிலிருந்து தட்டிவிட்டு, உன் அம்புகளை வலது கையிலிருந்து விழப்பண்ணுவேன்.
4நீயும் உன் எல்லா இராணுவங்களும் உன்னோடிருக்கிற ஜனங்களும் இஸ்ரவேல் மலைகளில் விழுவீர்கள்; உராய்ஞ்சுகிற சகலவித பட்சிகளுக்கும் வெளியின் மிருகங்களுக்கும் உன்னை இரையாகக் கொடுப்பேன்.
5விசாலமான வெளியில் விழுவாய்; நான் இதைச் சொன்னேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
6நான் மாகோகிடத்திலும் தீவுகளில் நிர்விசாரமாய்க் குடியிருக்கிறவர்களிடத்திலும் அக்கினியை அனுப்புவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
7இவ்விதமாய் நான் என் ஜனமாகிய இஸ்ரவேலின் நடுவிலே என் பரிசுத்த நாமத்தைத் தெரிவிப்பேன்; என் பரிசுத்த நாமத்தை இனிப் பரிசுத்தக் குலைச்சலாக்கவொட்டேன்; அதினால் நான் இஸ்ரவேலில் பரிசுத்தராகிய கர்த்தர் என்று புறஜாதிகள் அறிந்துகொள்வார்கள்.
8இதோ, அது வந்து, அது சம்பவித்தது என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நான் சொன்ன நாள் இதுவே.
9இஸ்ரவேல் பட்டணங்களின் குடிகள் வெளியேபோய், கேடகங்களும், பரிசைகளும், வில்லுகளும், அம்புகளும், வளைதடிகளும், ஈட்டிகளுமாகிய ஆயதங்களை எடுத்து எரிப்பார்கள்; ஏழு வருஷம் அவைகளை எடுத்து எரிப்பார்கள்.
10அவர்கள் வெளியிலிருந்து விறகு கொண்டுவராமலும் காடுகளில் வெட்டாமலும், ஆயுதங்களை எடுத்து எரிப்பார்கள்; அவர்கள் தங்களைக் கொள்ளையிட்டவர்களைக் கொள்ளையிட்டு, தங்களைச் சூறையாடினவர்களைச் சூறையாடுவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
11அந்நாளில் இஸ்ரவேல் தேசத்திலே சமுத்திரத்துக்குக் கிழக்கே பிரயாணக்காரரின் பள்ளத்தாக்கைப் புதைக்கிற ஸ்தானமாக கோகுக்குக் கொடுப்பேன்; அது வழிப்போக்கர் மூக்கைப் பொத்திக்கொண்டுபோகப்பண்ணும்; அங்கே கோகையும் அவனுடைய எல்லாச் சேனையையும் புதைத்து, அதை ஆமோன்கோகின் பள்ளத்தாக்கு என்பார்கள்.
12இஸ்ரவேல் வம்சத்தார், தேசத்தைச் சுத்தம்பண்ணும்படிக்கு அவர்களைப் புதைத்துத்தீர ஏழுமாதம் செல்லும்.
13தேசத்தின் ஜனங்களெல்லாரும் புதைத்துக்கொண்டிருப்பார்கள்; நான் மகிமைப்படும் அந்நாளிலே அது அவர்களுக்குக் கீர்த்தியாக இருக்கும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
14தேசத்தைச் சுத்தம்பண்ணுவதற்காக அதில் கிடக்கும் மற்ற பிரேதங்களைப் புதைக்கும்படிக்கு நித்தமும் தேசத்தில் சுற்றித்திரியும் மனுஷரையும், சுற்றித்திரிகிறவர்களோடேகூடப் புதைக்கிறவர்களையும் தெரிந்து நியமிப்பார்கள்; ஏழுமாதங்கள் முடிந்தபின்பும் இவர்கள் தேடிக்கொண்டிருப்பார்கள்.
15தேசத்தில் சுற்றித்திரிகிறவர்கள் திரிந்துகொண்டிருப்பார்கள்; யாராவது ஒருவன் மனுஷனின் எலும்பைக் காணும்போது புதைக்கிறவர்கள் அதை ஆமோன்கோகுடைய பள்ளத்தாக்கிலே புதைக்குமட்டும் அதினண்டையிலே ஒரு அடையாளத்தை நாட்டுவான்.
16அந்த நகரத்துக்கு ஆமோனா என்று பெயரிடப்படும்; இவ்விதமாய் தேசத்தைச் சுத்தம் பண்ணுவார்கள்.
17மனுபுத்திரனே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ சகலவித பட்சிகளையும் வெளியில் இருக்கிற சகல மிருகங்களையும் நோக்கி: நீங்கள் ஏகமாய்க் கூடிக்கொண்டு, இஸ்ரவேலின் மலைகளில் நான் உங்களுக்காகச் செய்யும் யாகமாகிய மகா யாகத்துக்குச் சுற்றிலுமிருந்து வந்து சேர்ந்து, மாம்சம் தின்று இரத்தங்குடியுங்கள்.
18நீங்கள் பராக்கிரமசாலிகளின் மாம்சத்தைத் தின்று பூமியினுடைய பிரபுக்களின் இரத்தத்தைக் குடிப்பீர்கள்; அவர்கள் எல்லாரும் பாசானிலே கொழுத்துப்போன ஆட்டுக்கடாக்களுக்கும், ஆட்டுக்குட்டிகளுக்கும் வெள்ளாட்டுக் கடாக்களுக்கும் காளைகளுக்கும் சமானமானவர்கள்.
19நான் உங்களுக்காகச் செய்யும் யாகத்திலே நீங்கள் திருப்தியாகுமளவும் கொழுப்பைத் தின்று, வெறியாகுமளவும் இரத்தத்தைக் குடிப்பீர்கள்.
20இவ்விதமாய் என் பந்தியிலே குதிரைகளையும், இரதவீரர்களையும், பராக்கிரமசாலிகளையும், சகல யுத்தவீரர்களையும் தின்று, திருப்தியாவீர்களென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்லு.
21இவ்விதமாய் என் மகிமையை நான் புறஜாதிகளுக்குள்ளே விளங்கப்பண்ணுவேன்; நான் செய்த என் நியாயத்தையும் அவர்கள்மேல் நான் வைத்த என் கையையும் எல்லா ஜாதிகளும் காண்பார்கள்.
22அன்றுமுதல் என்றும் நான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று இஸ்ரவேல் வம்சத்தார் அறிந்துகொள்வார்கள்.
23இஸ்ரவேல் வம்சத்தார் தங்கள் அக்கிரமத்தினிமித்தமே சிறைப்பட்டுப்போனார்கள் என்று அப்பொழுது புறஜாதிகள் அறிந்துகொள்வார்கள்; அவர்கள் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணினபடியால், என் முகத்தை நான் அவர்களுக்கு மறைத்து, அவர்கள் சத்துருக்களின் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்தேன்; அவர்கள் அனைவரும் பட்டயத்தால் விழுந்தார்கள்.
24அவர்களுடைய அசுத்தத்துக்குத்தக்கதாகவும், அவர்களுடைய மீறுதல்களுக்குத்தக்கதாகவும், நான் அவர்களுக்குச் செய்து, என் முகத்தை அவர்களுக்கு மறைத்தேன்.
25ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்:
26அவர்கள் தங்கள் அவமானத்தையும், பயப்படுத்துவார் இல்லாமல், தாங்கள் சுகமாய்த் தங்கள் தேசத்தில் குடியிருக்கும்போது எனக்கு விரோதமாய்த் தாங்கள் செய்த எல்லாத் துரோகத்தையும் சுமந்து தீர்த்தபின்பு, நான் யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பி, இஸ்ரவேல் வம்சமனைத்துக்கும் இரங்கி, என் பரிசுத்த நாமத்துக்காக வைராக்கியமாயிருப்பேன்.
27நான் அவர்களை ஜனசதளங்களிலிருந்து திரும்பிவரப்பண்ணி, அவர்களுடைய பகைஞரின் தேசங்களிலிருந்து அவர்களைக் கூட்டிக்கொண்டு வந்து, திரளான ஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக அவர்களுக்குள் நான் பரிசுத்தர் என்று விளங்கும்போது,
28தங்களைப் புறஜாதிகளிடத்தில் சிறைப்பட்டுப்போகப்பண்ணின நான் தங்களில் ஒருவரையும் அங்கே அப்புறம் வைக்காமல், தங்களைத் தங்கள் சுயதேசத்திலே திரும்பக்கூட்டிக்கொண்டுவந்தேன் என்பதினால், நான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
29நான் இஸ்ரவேல் வம்சத்தார்மேல் என் ஆவியை ஊற்றினபடியினால் என் முகத்தை இனி அவர்களுக்கு மறைக்கமாட்டேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேவனுக்கு தூரமாகி விட்டேனா?

Am I away from God?

வாழும் சாட்சிகள்

Testimonies of God’s People

விடுதலை

ஆபாச பட அடிமைத்தனம்

இஸ்ரேல் – ஆய்வு கட்டுரை

(வேதாகம கால முதல் தற்போது வரை)

வேதாகம பண்டிகைகள்

(யூதர்களின் பண்டிகைகள்)

விசுவாச அறிக்கை

(தினமும் ஜெபிக்க சில அறிக்கைகள்)

நன்றியுடன் 21 நாட்கள்

December 2023

ஒரு வருட வேதாகம வாசிப்பு திட்டம்

2025 Chronological Bible Reading Plan