Scripture Portion: Zechariah 1-7
சகரியா 1
1தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம் எட்டாம் மாதத்திலே இத்தோவின் மகனான பெரகியாவின் குமாரனாகிய சகரியாவுக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தை:2கர்த்தர் உங்கள் பிதாக்களின்மேல் கடுங்கோபமாயிருந்தார்.3ஆகையால் நீ அவர்களை நோக்கி: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: என்னிடத்தில் திரும்புங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது நான் உங்களிடத்துக்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.4உங்கள் பிதாக்களைப் போலிராதேயுங்கள்; முந்தின தீர்க்கதரிசிகள் அவர்களை நோக்கி: உங்கள் பொல்லாத வழிகளையும், உங்கள் பொல்லாத கிரியைகளையும் விட்டுத் திரும்புங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூப்பிட்டார்கள்; ஆனாலும் எனக்குச் செவிகொடாமலும் என்னைக் கவனியாமலும் போனார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.5உங்கள் பிதாக்கள் எங்கே? தீர்க்கதரிசிகள் என்றென்றைக்கும் உயிரோடிருப்பார்களோ?6இராமற்போனாலும், தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரருக்கு நான் கட்டளையிட்ட என் வார்த்தைகளும் என் தீர்மானங்களும் உங்கள் பிதாக்களிடத்தில் பலிக்கவில்லையோ? எங்கள் வழிகளின்படியேயும், எங்கள் கிரியைகளின்படியேயும் சேனைகளின் கர்த்தர் எங்களுக்குச் செய்ய நிர்ணயித்தபடியே எங்களுக்குச் செய்தாரென்று அவர்கள் திரும்பவந்து, சொன்னதில்லையோ என்று சொல் என்றார்.7தரியு அரசாண்ட இரண்டாம்வருஷம், சேபாத் மாதமாகிய பதினோராம் மாதம் இருபத்துநாலாந்தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை இத்தோவின் மகனான பெரகியாவின் குமாரன் சகரியா என்னும் தீர்க்கதரிசிக்கு உண்டாயிற்று; அவன் சொன்னது:8இதோ, இன்று இராத்திரி சிவப்புக்குதிரையின்மேல் ஏறியிருந்த ஒரு புருஷனைக் கண்டேன்; அவர் பள்ளத்தாக்கில் இருக்கிற மிருதுச்செடிகளுக்குள்ளே நின்றார்; அவருக்குப் பின்னாலே சிவப்பும் மங்கின நிறமும் வெண்மையுமான குதிரைகள் இருந்தன.9அப்பொழுது நான்: என் ஆண்டவரே, இவர்கள் யாரென்று கேட்டேன்; என்னோடே பேசுகிற தூதனானவர்: இவர்கள் யாரென்று நான் உனக்குக் காண்பிப்பேன் என்று சொன்னார்.10அப்பொழுது மிருதுச்செடிகளுக்குள்ளே நின்ற அந்தப் புருஷன் பிரதியுத்தரமாக: இவர்கள் பூமியெங்கும் சுற்றிப்பார்க்கக் கர்த்தர் அனுப்பினவர்கள் என்றார்.11பின்பு அவர்கள் மிருதுச்செடிகளுக்குள்ளே நின்ற கர்த்தருடைய தூதனை நோக்கி: நாங்கள் பூமியெங்கும் சுற்றிப்பார்த்தோம்; இதோ, பூமிமுழுவதும் அமைதலும் அமரிக்கையுமாய் இருக்கிறது என்றார்கள்.12அப்பொழுது கர்த்தருடைய தூதன் மறுமொழியாக: சேனைகளின் கர்த்தாவே, இந்த எழுபது வருஷமாய் நீர் கோபங்கொண்டிருக்கிற எருசலேமின்மேலும் யூதா பட்டணங்களின்மேலும் எந்தமட்டும் இரங்காதிருப்பீர் என்று சொல்ல,13அப்பொழுது கர்த்தர், என்னோடே பேசின தூதனுக்கு நல்வார்த்தைகளையும் ஆறுதலான வார்த்தைகளையும் பிரதியுத்தரமாகச் சொன்னார்.14அப்பொழுது என்னோடே பேசின தூதன் என்னை நோக்கி: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நான் எருசலேமுக்காகவும் சீயோனுக்காகவும் மகா வைராக்கியம் கொண்டிருக்கிறேன்.15நான் கொஞ்சங் கோபங்கொண்டிருந்தபோது அவர்கள் தங்கள் கேட்டை அதிகரிக்கத் தேடினபடியினால், சுகமாய் வாழுகிற புறஜாதிகள்பேரில் நான் கடுங்கோபங்கொண்டேன்.16ஆகையால் மனஉருக்கத்தோடே எருசலேமினிடத்தில் திரும்பினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் ஆலயம் அதிலே கட்டப்படும்; எருசலேமின்மேல் அளவுநூல் பிடிக்கப்படும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூறு என்றார்.17இன்னும் என் பட்டணங்கள் நன்மையினால் பரம்பியிருக்கும்; இன்னும் கர்த்தர் சீயோனைத் தேற்றரவு பண்ணுவார்; இன்னும் எருசலேமைத்தெரிந்துகொள்ளுவார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று பின்னும் கூறு என்றார்.18நான் என் கண்களை ஏறெடுத்துப்பார்த்தபோது, இதோ, நாலு கொம்புகளைக் கண்டேன்.19அவைகள் என்னவென்று என்னோடே பேசின தூதனைக்கேட்டேன்; அதற்கு அவர்: இவைகள் யூதாவையும் இஸ்ரவேலையும் எருசலேமையும் சிதறடித்த கொம்புகள் என்றார்.20பின்பு கர்த்தர் எனக்கு நாலு தொழிலாளிகளைக் காண்பித்தார்.21இவர்கள் என்ன செய்ய வருகிறார்களென்று கேட்டேன்; அதற்கு அவர்: ஒருவனும் தன் தலையை ஏறெடுக்கக்கூடாதபடி அந்தக் கொம்புகள் யூதாவைச் சிதறடித்ததே, அவைகளுக்குப் பயமுறுத்துகிறதற்கும், யூதாவின் தேசத்தைப் பாழாக்கத் தங்கள் கொம்பை எடுத்த ஜாதிகளுடைய கொம்புகளை விழத்தள்ளுகிறதற்கும் இவர்கள் வந்தார்கள் என்றார்.சகரியா 2
1நான் என் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, இதோ, தன் கையிலே அளவுநூல் பிடித்திருந்த ஒரு புருஷனைக் கண்டேன்.2நீர் எவ்விடத்துக்குப் போகிறீர் என்று கேட்டேன்; அதற்கு அவர்: எருசலேமின் அகலம் இவ்வளவு என்றும் அதின் நீளம் இவ்வளவு என்றும் அறியும்படி அதை அளக்கிறதற்குப் போகிறேன் என்றார்.3இதோ, என்னோடே பேசின தூதன் புறப்பட்டபோது, வேறொரு தூதன் அவரைச் சந்திக்கும்படிப் புறப்பட்டு வந்தான்.4இவனை அவர் நோக்கி: நீ ஓடி இந்த வாலிபனிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால்: எருசலேம் தன் நடுவிலே கூடும் மனுஷரின் திரளினாலும் மிருகஜீவன்களின் திரளினாலும் மதிலில்லாத பட்டணங்கள்போல் வாசஸ்தலமாகும்.5நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.6ஓகோ, நீங்கள் எழும்பி வடதேசத்திலிருந்து ஓடிவாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆகாயத்து நான்கு திசைகளிலும் உங்களை நான் சிதறப்பண்ணினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.7பாபிலோன் குமாரத்தியினிடத்தில் குடியிருக்கிற சீயோனே, உன்னை விடுவித்துக்கொள்.8பிற்பாடு மகிமையுண்டாகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; உங்களைக் கொள்ளையிட்ட ஜாதிகளிடத்துக்கு என்னை அனுப்பினார்; உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்.9இதோ, நான் என் கையை அவர்களுக்கு விரோதமாக அசைப்பேன்; அதினால் அவர்கள் தங்கள் அடிமைகளுக்குக் கொள்ளையாவார்கள்; அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை அனுப்பினாரென்று அறிவீர்கள்.10சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.11அந்நாளிலே அநேகம் ஜாதிகள் கர்த்தரைச் சேர்ந்து என் ஜனமாவார்கள்; நான் உன் நடுவில் வாசமாயிருப்பேன்; அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை உன்னிடத்தில் அனுப்பினாரென்று அறிவாய்.12கர்த்தர் பரிசுத்த தேசத்திலே யூதாவாகிய தமது பங்கைச் சுதந்தரித்து திரும்பவும் எருசலேமைத் தெரிந்துகொள்வார்.13மாம்சமான சகலமானபேர்களே, கர்த்தருக்கு முன்பாக மௌனமாயிருங்கள்; அவர் தமது பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து எழுந்தருளினார் என்று சொல் என்றார்.சகரியா 3
1அவர் பிரதான ஆசாரியனாகிய யோசுவாவை எனக்குக் காண்பித்தார்; அவன் கர்த்தருடைய தூதனுக்கு முன்பாக நின்றான்; சாத்தான் அவனுக்கு விரோதஞ்செய்ய அவன் வலதுபக்கத்திலே நின்றான்.2அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக; சாத்தானே, எருசலேமைத் தெரிந்துகொண்ட கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக; இவன் அக்கினியினின்று தப்புவிக்கப்பட்ட கொள்ளி அல்லவா என்றார்.3யோசுவாவோவெனில் அழுக்கு வஸ்திரம் தரித்தவனாய்த் தூதனுக்கு முன்பாக நின்றிருந்தான்.4அவர் தமக்கு முன்பாக நிற்கிறவர்களை நோக்கி: இவன்மேல் இருக்கிற அழுக்கு வஸ்திரங்களைக் களைந்துபோடுங்கள் என்றார்; பின்பு அவனை நோக்கி: பார், நான் உன் அக்கிரமத்தை உன்னிலிருந்து நீங்கச்செய்து, உனக்குச் சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பித்தேன் என்றார்.5அவன் சிரசின்மேல் சுத்தமான பாகையை வைப்பார்களாக என்றார்; அப்பொழுது சுத்தமான பாகையை அவன் சிரசின்மேல் வைத்து, அவனுக்கு வஸ்திரங்களைத் தரிப்பித்தார்கள்; கர்த்தருடைய தூதன் அங்கே நின்றார்.6கர்த்தருடைய தூதன் யோசுவாவுக்குச் சாட்சியாக:7சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நீ என் வழிகளில் நடந்து என் காவலைக் காத்தால், நீ என் ஆலயத்தில் நியாயம் விசாரிப்பாய்; என் பிராகாரங்களையும் காவல்காப்பாய்; இங்கே நிற்கிறவர்களுக்குள்ளே உலாவுகிறதற்கு இடம் நான் உனக்குக் கட்டளையிடுவேன்.8இப்போதும், பிரதான ஆசாரியனாகிய யோசுவாவே, நீ கேள்; உனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிற உன் தோழரும் கேட்கக்கடவர்கள்; இவர்கள் அடையாளமாயிருக்கிற புருஷர்; இதோ, கிளை என்னப்பட்டவராகிய என் தாசனை நான் வரப்பண்ணுவேன்.9இதோ, நான் யோசுவாவுக்கு முன்பாக வைத்த கல்; இந்த ஒரே கல்லின்மேல் ஏழு கண்களும் வைக்கப்பட்டிருக்கிறது; இதோ, நான் அதின் சித்திரவேலையை நிறைவேற்றி, இந்த தேசத்தில் அக்கிரமத்தை ஒரே நாளிலே நீக்கிப்போடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.10அந்நாளிலே நீங்கள் ஒருவரையொருவர் திராட்சச்செடியின்கீழும் அத்திமரத்தின்கீழும் வரவழைப்பீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.சகரியா 4
1என்னோடே பேசின தூதன் திரும்பி வந்து நித்திரைபண்ணுகிற ஒருவனை எழுப்புவதுபோல் என்னை எழுப்பி:2நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; அதற்கு நான்: இதோ, முழுவதும் பொன்னினால் செய்யப்பட்ட குத்துவிளக்கைக் காண்கிறேன்; அதின் உச்சியில் அதின் கிண்ணமும், அதின்மேல் அதின் ஏழு அகல்களும், அதின் உச்சியில் இருக்கிற அகல்களுக்குப்போகிற ஏழு குழாய்களும் இருக்கிறது.3அதின் அருகில் கிண்ணத்திற்கு வலதுபுறமாக ஒன்றும், அதற்கு இடதுபுறமாக ஒன்றும், ஆக இரண்டு ஒலிவமரங்கள் இருக்கிறது என்றேன்.4நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன்.5என்னோடே பேசின தூதன் மறுமொழியாக: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.6அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.7பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் என்றார்.8பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:9செருபாபேலின் கைகள் இந்த ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டது; அவன் கைகளே இதை முடித்துத் தீர்க்கும்; அதினால் சேனைகளின் கர்த்தர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினாரென்று அறிவாய்.10அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்? பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய கர்த்தருடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்குநூலைச் சந்தோஷமாய்ப் பார்க்கிறது என்றார்.11பின்பு நான் அவரை நோக்கி: குத்துவிளக்குக்கு வலதுபுறமாகவும் அதற்கு இடதுபுறமாகவும் இருக்கிற இந்த இரண்டு ஒலிவமரங்கள் என்னவென்று கேட்டேன்.12மறுபடியும் நான் அவரை நோக்கி: இரண்டு பொற்குழாய்களின் வழியாய்த் தொங்கி, பொன்னிறமான எண்ணெயைத் தங்களிலிருந்து இறங்கப்பண்ணுகிறவைகளாகிய ஒலிவமரங்களின் இரண்டு கிளைகள் என்னவென்று கேட்டேன்.13அதற்கு அவர்: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.14அப்பொழுது அவர்: இவைகள் இரண்டும் சர்வலோகத்துக்கும் ஆண்டவராயிருக்கிறவரின் சமுகத்தில் நிற்கிற அபிஷேகம் பெற்றவர்கள் என்றார்.சகரியா 5
1நான் திரும்பவும் என் கண்களை ஏறெடுத்துப் பார்க்கையில், இதோ, பறக்கிற ஒரு புஸ்தகச்சுருளைக் கண்டேன்.2தூதன்: நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; பறக்கிற ஒரு புஸ்தகச்சுருளைக் காண்கிறேன், அதின் நீளம் இருபது முழமும் அதின் அகலம் பத்து முழமுமாயிருக்கிறது என்றேன்.3அப்பொழுது அவர்: இது பூமியின் மீதெங்கும் புறப்பட்டுப்போகிற சாபம்; எந்தத் திருடனும் அதின் ஒரு புறத்திலிருக்கிறதின்படியே அழிக்கப்பட்டுப்போவான்; ஆணையிடுகிற எவனும், அதின் மறுபுறத்தில் இருக்கிறதின்படியே அழிக்கப்பட்டுப்போவான்.4அது திருடன் வீட்டிலும், என் நாமத்தைக்கொண்டு பொய்யாணையிடுகிறவன் வீட்டிலும் வந்து, அவனவன் வீட்டின் நடுவிலே தங்கி, அதை அதின் மரங்களோடும் அதின் கல்லுகளோடுங்கூட நிர்மூலமாக்கும்படி அதைப் புறப்பட்டுப்போகப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.5பின்பு என்னோடே பேசின தூதன் வெளியே வந்து என்னை நோக்கி: நீ உன் கண்களை ஏறெடுத்து, புறப்பட்டு வருகிறதை என்னவென்று பார் என்றார்.6அது என்னவென்று கேட்டேன்; அதற்கு அவர்: அது புறப்பட்டுவருகிறதாகிய ஒரு மரக்கால் என்றார். பின்னும் அவர்: பூமியெங்கும் இதுதான் அவர்களுடைய கண்ணோக்கம் என்றார்.7இதோ, ஒரு தாலந்து நிறையான ஈயமூடி தூக்கிவரப்பட்டது; மரக்காலின் நடுவிலே ஒரு ஸ்திரீ உட்கார்ந்திருந்தாள்.8அப்பொழுது அவர்: இவள் அக்கிரமக்காரி என்று சொல்லி, அவளை மரக்காலுக்குள்ளே தள்ளி ஈயக்கட்டியை அதின் வாயிலே போட்டார்.9அப்பொழுது நான் என் கண்களை ஏறெடுத்து, இதோ, புறப்பட்டு வருகிற இரண்டு ஸ்திரீகளைக் கண்டேன்; அவர்களுக்கு நாரையின் செட்டைகளுக்கொத்த செட்டைகள் இருந்தது; அவர்கள் செட்டைகளில் காற்றிருந்தது; இவர்கள் மரக்காலை பூமிக்கும் வானத்துக்கும் நடுவாய்த் தூக்கிக்கொண்டு போனார்கள்.10நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: இவர்கள் மரக்காலை எங்கே கொண்டுபோகிறார்கள் என்று கேட்டேன்.11அதற்கு அவர்: சிநெயார் தேசத்திலே அதற்கு ஒரு வீட்டைக் கட்டும்படிக்கு அதைக் கொண்டுபோகிறார்கள்; அங்கே அது ஸ்தாபிக்கப்பட்டு, தன் நிலையிலே வைக்கப்படும் என்றார்.சகரியா 6
1நான் திரும்பவும் என் கண்களை ஏறெடுத்து, இதோ, இரண்டு பர்வதங்களின் நடுவாகப் புறப்பட்டு வருகிற நாலு இரதங்களைக் கண்டேன்; அந்தப் பர்வதங்கள் வெண்கலப் பர்வதங்களாயிருந்தன.2முதலாம் இரதத்தில் சிவப்புக் குதிரைகளும், இரண்டாம் இரதத்தில் கறுப்புக் குதிரைகளும்,3மூன்றாம் இரதத்தில் வெள்ளைக்குதிரைகளும், நான்காம் இரதத்தில் புள்ளிபுள்ளியான சிவப்புக்குதிரைகளும் பூட்டியிருந்தன.4நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன்.5அந்தத் தூதன் எனக்குப் பிரதியுத்தரமாக: இவைகள் சர்வலோகத்துக்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய சமுகத்தில் நின்று புறப்படுகிற வானத்தினுடைய நாலு ஆவிகள் என்றார்.6ஒன்றில் பூட்டப்பட்டிருந்த கறுப்புக்குதிரைகள் வடதேசத்துக்குப் புறப்பட்டுப்போயின; வெண்மையான குதிரைகள் அவைகளின் பின்னாலே புறப்பட்டுப்போயின; புள்ளிபுள்ளியான குதிரைகள் தென்தேசத்துக்குப் புறப்பட்டுப்போயின.7சிவப்புக் குதிரைகளோவென்றால் புறப்பட்டுப்போய், பூமியிலே சுற்றித்திரியும்படி கேட்டுக்கொண்டன; அதற்கு அவர்: போய் பூமியில் சுற்றித்திரியுங்கள் என்றார்; அப்படியே பூமியிலே சுற்றித்திரிந்தன.8பின்பு அவர் என்னைக் கூப்பிட்டு: பார், வடதேசத்துக்குப் புறப்பட்டுப்போனவைகள், வடதேசத்திலே என் கோபத்தைச் சாந்திபண்ணிற்று என்று என்னோடே சொன்னார்.9பின்பு கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்:10சிறையிருப்பின் மனுஷராகிய எல்தாயும், தொபியாவும், யெதாயாவும் பாபிலோனிலிருந்து வந்திருக்கும் அந்நாளிலே நீ போய், செப்பனியாவின் குமாரனாகிய யோசியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து,11அங்கே அவர்கள் கையிலே வெள்ளியையும் பொன்னையும் வாங்கி, கிரீடங்களைச் செய்வித்து, யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுடைய சிரசிலே வைத்து,12அவனோடே சொல்லவேண்டியது: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: இதோ, ஒரு புருஷன், அவருடைய நாமம் கிளை என்னப்படும்; அவர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து முளைத்தெழும்பிக் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்.13அவரே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்; அவர் மகிமைபொருந்தினவராய், தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார்; தம்முடைய சிங்காசனத்தின்மேல் ஆசாரியராயும் இருப்பார்; இவ்விரண்டின் நடுவாகச் சமாதானத்தின் ஆலோசனை விளங்கும்.14இந்தக் கிரீடங்களோவென்றால், கர்த்தருடைய ஆலயத்திலே, ஏலேமுக்கும், தொபியாவுக்கும், யெதாயாவுக்கும், செப்பனியாவின் குமாரனாகிய ஏனுக்கும் நினைப்பூட்டுதலுக்கென்று வைக்கப்படுவதாக.15தூரத்திலுள்ளவர்கள் வந்து கர்த்தருடைய ஆலயத்தைக் கூட இருந்து கட்டுவார்கள்; அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினாரென்று அறிந்துகொள்வீர்கள்; நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கேட்டு நடந்தீர்களானால் இது நிறைவேறும் என்று சொல் என்றார்.
சகரியா 7
1தரியு ராஜா அரசாண்ட நாலாம் வருஷம், கிஸ்லே என்னும் ஒன்பதாம் மாதம், நாலாந்தேதியிலே, சகரியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று.2 கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும்,3நாங்கள் இத்தனை வருஷம்வரையிலே செய்ததுபோல ஐந்தாம் மாதத்திலே அழுது ஒடுக்கத்திலிருக்கவேண்டுமோ என்று சேனைகளுடைய கர்த்தரின் ஆலயத்திலிருக்கும் ஆசாரியரிடத்திலும் தீர்க்கதரிசிகளிடத்திலும் கேட்கவும், சரேத்சேரும் ரெகெம்மெலேகும் அவனுடைய மனுஷரும் தேவனுடைய ஆலயத்துக்கு அனுப்பப்பட்டார்கள்.4அப்பொழுது சேனைகளுடைய கர்த்தரின் வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:5நீ தேசத்தின் எல்லா ஜனத்தோடும் ஆசாரியர்களோடும் சொல்லவேண்டியது என்னவென்றால், நீங்கள் இந்த எழுபது வருஷமாக ஐந்தாம் மாதத்திலும் ஏழாம் மாதத்திலும் உபவாசம்பண்ணி துக்கங்கொண்டாடினபோது நீங்கள் எனக்கென்றுதானா உபவாசம்பண்ணினீர்கள்?6நீங்கள் புசிக்கிறபோதும் குடிக்கிறபோதும் உங்களுக்கென்றல்லவா புசிக்கிறீர்கள்? உங்களுக்கென்றல்லவா குடிக்கிறீர்கள்?7எருசலேமும் அதைச் சுற்றிலும் இருந்த பட்டணங்களும் குடிநிறைந்து சுகமாயிருந்தகாலத்திலும், தெற்கு நாடும் சமபூமியும் குடியேறியிருந்த காலத்திலும் முன்னிருந்த தீர்க்கதரிசிகளைக்கொண்டு கர்த்தர் கூறின வார்த்தைகள் இவைகள் அல்லவோ என்ற சொல் என்றார்.8பின்பு கர்த்தருடைய வார்த்தை சகரியாவுக்கு உண்டாகி, அவர்:9சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நீங்கள் உண்மையாய் நியாயந்தீர்த்து, அவனவன் தன்தன் சகோதரனுக்குத் தயவும் இரக்கமும் செய்து,10விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் பரதேசியையும் சிறுமையானவனையும் ஒடுக்காமலும், உங்களில் ஒருவனும் தன் சகோதரனுக்கு விரோதமாய்த் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும் இருங்கள் என்றார்.11அவர்களோ கவனிக்க மனதில்லாமல் தங்கள் தோளை முரட்டுத்தனமாய் விலக்கி, கேளாதபடிக்குத் தங்கள் செவிகளை அடைத்துக்கொண்டார்கள்.12வேதத்தையும் சேனைகளின் கர்த்தர் தம்முடைய ஆவியின் மூலமாய் முந்தின தீர்க்கதரிசிகளைக்கொண்டு சொல்லியனுப்பின வார்த்தைகளையும் கேளாதபடிக்குத் தங்கள் இருதயத்தை வைரமாக்கினார்கள்; ஆகையால் மகா கடுங்கோபம் சேனைகளின் கர்த்தரிடத்திலிருந்து உண்டாயிற்று.13ஆதலால் நான் கூப்பிட்டபோது, அவர்கள் எப்படி கேளாமற்போனார்களோ, அப்படியே அவர்கள் கூப்பிட்டபோது நானும் கேளாமலிருந்தேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.14அவர்கள் அறியாத புறஜாதிகளுக்குள்ளே அவர்களைப் பறக்கடித்தேன்; அதினால் அவர்கள் பின்வைத்துப்போன தேசம் போக்குவரத்தில்லாமல் பாழாய்ப்போயிற்று; அவர்கள் இன்பமான தேசத்தைப் பாழாய்ப்போகப்பண்ணினார்கள் என்றார்.
Leave a Reply