Scripture Portion: Genesis 43-45
ஆதியாகமம் 43
1தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தது.2எகிப்திலிருந்து அவர்கள் கொண்டுவந்த தானியம் செலவழிந்தபோது, அவர்கள் தகப்பன் அவர்களை நோக்கி: நீங்கள் திரும்பப் போய், நமக்குக் கொஞ்சம் தானியம் வாங்கிக்கொண்டு வாருங்கள் என்றான்.3அதற்கு யூதா: உங்கள் சகோதரன் உங்களோடேகூட வராவிட்டால், நீங்கள் என் முகத்தைக் காண்பதில்லை என்று அந்த மனிதன் எங்களுக்குச் சத்தியமாய்ச் சொன்னான்.4எங்கள் சகோதரனை நீர் எங்களோடேகூட அனுப்பினால், நாங்கள் போய், உமக்குத் தானியம் வாங்கிக்கொண்டு வருவோம்.5அனுப்பாவிட்டால். நாங்கள் போகமாட்டோம்; உங்கள் சகோதரன் உங்களோடேகூட வராவிட்டால், நீங்கள் என் முகத்தைக் காண்பதில்லை என்று அந்த மனிதன் எங்களோடே சொல்லியிருக்கிறான் என்றான்.6அதற்கு இஸ்ரவேல்: உங்களுக்கு இன்னும் ஒரு சகோதரன் உண்டென்று நீங்கள் அந்த மனிதனுக்குச் சொல்லி, ஏன் எனக்கு இந்தத் துன்பத்தை வருவித்தீர்கள் என்றான்.7அதற்கு அவர்கள்: அந்த மனிதன், உங்கள் தகப்பன் இன்னும் உயிரோடிருக்கிறாரா? உங்களுக்கு இன்னும் ஒரு சகோதரன் உண்டா? என்று எங்களையும் எங்கள் வம்சத்தையும் குறித்து விபரமாய் விசாரித்தான்; அந்தக் கேள்விகளுக்குத் தக்கதாக உள்ளபடி அவனுக்குச் சொன்னோம்; உங்கள் சகோதரனை உங்களோடேகூட இங்கே கொண்டுவாருங்கள் என்று அவன் சொல்லுவான் என்பதை நாங்கள் அறிந்திருந்தோமா என்றார்கள்.8பின்னும், யூதா தன் தகப்பனாகிய இஸ்ரவேலை நோக்கி: நீரும் நாங்களும் எங்கள் குழந்தைகளும் சாகாமல் உயிரோடிருக்கும்படி, நாங்கள் புறப்பட்டுப் போகிறோம், பிள்ளையாண்டானை என்னோடே அனுப்பும்.9அவனுக்காக நான் உத்தரவாதம்பண்ணுவேன்; அவனை என்னிடத்திலே கேளும், நான் அவனை உம்மிடத்தில் கொண்டுவந்து, உமக்கு முன்பாக நிறுத்தாமற்போனால், எந்நாளும் அந்தக் குற்றம் என்மேல் இருப்பதாக.10நாங்கள் தாமதியாதிருந்தோமானால், இதற்குள்ளே இரண்டாந்தரம் போய்த் திரும்பி வந்திருப்போமே என்றான்.11அதற்கு அவர்கள் தகப்பனாகிய இஸ்ரவேல்: அப்படியானால், ஒன்று செய்யுங்கள்; இந்த தேசத்தின் உச்சிதமான வஸ்துக்களில் கொஞ்சம் பிசின் தைலமும், கொஞ்சம் தேனும், கந்தவர்க்கங்களும், வெள்ளைப்போளமும், தெரபிந்து கொட்டைகளும், வாதுமைக்கொட்டைகளும் உங்கள் சாக்குகளில் போட்டு, அந்த மனிதனுக்குக் காணிக்கையாகக் கொண்டுபோய்க் கொடுங்கள்.12பணத்தை இரட்டிப்பாய் உங்கள் கைகளில் கொண்டுபோங்கள், சாக்குகளின் வாயிலே திரும்பக் கொண்டுவந்த பணத்தையும் கொண்டுபோங்கள்; அது கைப்பிசகாய் வந்திருக்கும்.13உங்கள் சகோதரனையும் கூட்டிக்கொண்டு, அந்த மனிதனிடத்துக்கு மறுபடியும் போங்கள்.14அந்த மனிதன், அங்கிருக்கிற உங்கள் மற்ற சகோதரனையும் பென்யமீனையும் உங்களுடனே அனுப்பிவிடும்படிக்கு, சர்வவல்லமையுள்ள தேவன் அவன் சமுகத்தில் உங்களுக்கு இரக்கங்கிடைக்கப்பண்ணுவாராக; நானோ பிள்ளையற்றுப் போனவனைப்போல் இருப்பேன் என்றான்.15அப்பொழுது அவர்கள் காணிக்கையையும் தங்கள் கைகளில் இரட்டிப்பான பணத்தையும் எடுத்துக்கொண்டு, பென்யமீனையும் கூட்டிக்கொண்டு, பிரயாணப்பட்டு, எகிப்துக்குப்போய், யோசேப்பின் சமுகத்தில் வந்து நின்றார்கள்.16பென்யமீன் அவர்களோடேகூட வந்திருக்கிறதை யோசேப்பு கண்டு, தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ இந்த மனிதரை வீட்டுக்கு அழைத்துப்போய், சாப்பாட்டுக்கு வேண்டியவைகளை அடித்து, ஆயத்தம்பண்ணு, மத்தியானத்திலே இந்த மனிதர் என்னோடே சாப்பிடுவார்கள் என்றான்.17அவன் தனக்கு யோசேப்பு சொன்னபடியே செய்து, அந்த மனிதரை யோசேப்பின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனான்.18தாங்கள் யோசேப்பின் வீட்டுக்குக் கொண்டுபோகப்படுகிறதை அவர்கள் கண்டு பயந்து, முன்னே நம்முடைய சாக்குகளில் இருந்த பணத்தினிமித்தம் நம்மேல் குற்றம் சுமத்தி, நம்மைப் பிடித்துச் சிறைகளாக்கி, நம்முடைய கழுதைகளை எடுத்துக்கொள்ளும்படி நம்மைக்கொண்டுபோகிறார்கள் என்று சொல்லி,19யோசேப்பின் வீட்டு விசாரணைக்காரனண்டையிலே சேர்ந்து, வீட்டு வாசற்படியிலே அவனோடே பேசி:20ஆண்டவனே, நாங்கள் தானியம் கொள்ளும்படி முன்னே வந்துபோனோமே;21நாங்கள் தங்கும் இடத்தில் போய் எங்கள் சாக்குகளைத் திறந்தபோது, நாங்கள் நிறுத்துக்கொடுத்த நிறையின்படியே அவனவன் பணம் அவனவன் சாக்கின் வாயிலே இருக்கக் கண்டோம்; அதை நாங்கள் திரும்பவும் எங்கள் கையிலே கொண்டுவந்திருக்கிறோம்.22மேலும், தானியம் கொள்ளும்படி வேறே பணமும் எங்கள் கையில் கொண்டு வந்திருக்கிறோம்; நாங்கள் முன் கொடுத்த பணத்தை எங்கள் சாக்குகளில் போட்டது இன்னார் என்று அறியோம் என்றார்கள்.23அதற்கு அவன்: உங்களுக்குச் சமாதானம்; பயப்படவேண்டாம்; உங்கள் தேவனும் உங்கள் தகப்பனுடைய தேவனுமாயிருக்கிறவர் உங்கள் சாக்குகளில் அதை உங்களுக்குப் புதையலாகக் கட்டளையிட்டார்; நீங்கள் கொடுத்த பணம் என்னிடத்தில் வந்து சேர்ந்தது என்று சொல்லி, சிமியோனை வெளியே அழைத்து வந்து, அவர்களிடத்தில் விட்டான்.24மேலும், அந்த மனிதன் அவர்களை யோசேப்பின் வீட்டுக்குள்ளே கூட்டிக்கொண்டுபோய், அவர்கள் தங்கள் கால்களைக் கழுவும்படி தண்ணீர் கொடுத்து, அவர்களுடைய கழுதைகளுக்குத் தீவனம் போட்டான்.25தாங்கள் அங்கே போஜனம் செய்யப்போகிறதை அவர்கள் கேள்விப்பட்டபடியால், மத்தியானத்தில் யோசேப்பு வருமளவும் காணிக்கையை ஆயத்தமாய் வைத்துக் காத்துக்கொண்டிருந்தார்கள்.26யோசேப்பு வீட்டுக்கு வந்தபோது, அவர்கள் தங்கள் கையில் இருந்த காணிக்கையை வீட்டுக்குள் அவனிடத்தில் கொண்டுபோய் வைத்து, தரைமட்டும் குனிந்து, அவனை வணங்கினார்கள்.27அப்பொழுது அவன்: அவர்கள் சுகசெய்தியை விசாரித்து, நீங்கள் சொன்ன முதிர்வயதான உங்கள் தகப்பன் சுகமாயிருக்கிறாரா? அவர் இன்னும் உயிரோடிருக்கிறாரா? என்று அவர்களிடத்தில் விசாரித்தான்.28அதற்கு அவர்கள்: எங்கள் தகப்பனாராகிய உமது அடியான் சுகமாயிருக்கிறார், இன்னும் உயிரோடிருக்கிறார் என்று சொல்லி, குனிந்து வணங்கினார்கள்.29அவன் தன் கண்களை ஏறெடுத்து, தன் தாய் பெற்ற குமாரனாகிய தன் சகோதரன் பென்யமீனைக் கண்டு, நீங்கள் எனக்குச் சொன்ன உங்கள் இளைய சகோதரன் இவன்தானா என்று கேட்டு, மகனே, தேவன் உனக்குக் கிருபைசெய்யக்கடவர் என்றான்.30யோசேப்பின் உள்ளம் தன் சகோதரனுக்காகப் பொங்கினபடியால், அவன் அழுகிறதற்கு இடம் தேடி, துரிதமாய் அறைக்குள்ளே போய், அங்கே அழுதான்.31பின்பு, அவன் தன் முகத்தைக் கழுவி வெளியே வந்து, தன்னை அடக்கிக்கொண்டு, போஜனம் வையுங்கள் என்றான்.32எகிப்தியர் எபிரெயரோடே சாப்பிடமாட்டார்கள்; அப்படிச் செய்வது எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கும்; ஆகையால், அவனுக்குத் தனிப்படவும், அவர்களுக்குத் தனிப்படவும், அவனோடே சாப்பிடுகிற எகிப்தியருக்குத் தனிப்படவும் வைத்தார்கள்.33அவனுக்கு முன்பாக, மூத்தவன் முதல் இளையவன்வரைக்கும் அவனவன் வயதின்படியே அவர்களை உட்காரவைத்தார்கள்; அதற்காக அவர்கள், ஒருவரை ஒருவர் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.34அவன் தனக்குமுன் வைக்கப்பட்டிருந்த போஜனத்தில் அவர்களுக்குப் பங்கிட்டு அனுப்பினான்; அவர்கள் எல்லாருடைய பங்குகளைப்பார்க்கிலும் பென்யமீனுடைய பங்கு ஐந்துமடங்கு அதிகமாயிருந்தது; அவர்கள் பானம்பண்ணி, அவனுடனே சந்தோஷமாயிருந்தார்கள்.ஆதியாகமம் 44
1பின்பு, அவன் தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ இந்த மனிதருடைய சாக்குகளை அவர்கள் ஏற்றிக்கொண்டுபோகத்தக்க பாரமாய்த் தானியத்தினாலே நிரப்பி, அவனவன் பணத்தை அவனவன் சாக்கின் வாயிலே போட்டு,2இளையவனுடைய சாக்கின் வாயிலே வெள்ளிப்பாத்திரமாகிய என் பானபாத்திரத்தையும் தானியத்துக்கு அவன் கொடுத்த பணத்தையும் போடு என்று கட்டளையிட்டான்; யோசேப்பு சொன்னபடியே அவன் செய்தான்.3அதிகாலையிலே அந்த மனிதர்கள் தங்கள் கழுதைகளை ஓட்டிக்கொண்டுபோகும்படி அனுப்பிவிடப்பட்டார்கள்.4அவர்கள் பட்டணத்தை விட்டுப்புறப்பட்டு, வெகுதூரம் போவதற்கு முன்னே, யோசேப்பு தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ புறப்பட்டுப்போய், அந்த மனிதரைப் பின்தொடர்ந்து, அவர்களைப் பிடித்து: நீங்கள் நன்மைக்குத் தீமை செய்தது என்ன?5அது என் எஜமான் பானம்பண்ணுகிற பாத்திரம் அல்லவா? அது போனவகை ஞானதிருஷ்டியால் அவருக்குத் தெரியாதா? நீங்கள் செய்தது தகாதகாரியம் என்று அவர்களோடே சொல் என்றான்.6அவன் அவர்களைத் தொடர்ந்து பிடித்து, தன்னிடத்தில் சொல்லியிருந்த வார்த்தைகளை அவர்களுக்குச் சொன்னான்.7அதற்கு அவர்கள்: எங்கள் ஆண்டவன் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லுகிறது என்ன? இப்படிப்பட்ட காரியத்துக்கும் உம்முடைய அடியாராகிய எங்களுக்கும் வெகுதூரம்.8எங்கள் சாக்குகளின் வாயிலே நாங்கள் கண்ட பணத்தைக் கானான் தேசத்திலிருந்து திரும்ப உம்மிடத்துக்குக் கொண்டுவந்தோமே; நாங்கள் உம்முடைய எஜமானின் வீட்டிலிருந்து வெள்ளியையாகிலும், பொன்னையாகிலும் திருடிக்கொண்டு போவோமா?9உம்முடைய அடியாருக்குள்ளே அது எவனிடத்தில் காணப்படுமோ அவன் கொலையுண்ணக்கடவன்; நாங்களும் எங்கள் ஆண்டவனுக்கு அடிமைகளாவோம் என்றார்கள்.10அதற்கு அவன்: நீங்கள் சொன்னபடியே ஆகட்டும்; எவனிடத்தில் அது காணப்படுமோ, அவன் எனக்கு அடிமையாவான்; நீங்கள் குற்றமற்றிருப்பீர்கள் என்றான்.11அப்பொழுது அவர்கள் துரிதமாய் அவனவன் தன்தன் சாக்கைத் தரையிலே இறக்கி, தங்கள் சாக்குகளைத் திறந்து வைத்தார்கள்.12மூத்தவன் சாக்குமுதல் இளையவன் சாக்குமட்டும் அவன் சோதிக்கும்போது, அந்தப் பாத்திரம் பென்யமீனுடைய சாக்கிலே கண்டுபிடிக்கப்பட்டது.13அப்பொழுது அவர்கள் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, அவனவன் கழுதையின்மேல் பொதியை ஏற்றிக்கொண்டு, பட்டணத்திற்குத் திரும்பினார்கள்.14யூதாவும் அவன் சகோதரரும் யோசேப்பின் வீட்டுக்குப் போனார்கள். யோசேப்பு அதுவரையும் அங்கே இருந்தான்; அவனுக்கு முன்பாகத் தரையிலே விழுந்தார்கள்.15யோசேப்பு அவர்களை நோக்கி: நீங்கள் என்ன காரியம் செய்தீர்கள்? என்னைப் போலொத்த மனிதனுக்கு ஞானதிருஷ்டியினால் காரியம் தெரியவரும் என்று அறியாமற்போனீர்களா என்றான்.16அதற்கு யூதா: என் ஆண்டவனாகிய உம்மிடத்தில் நாங்கள் என்ன சொல்லுவோம்? என்னத்தைப் பேசுவோம்? எதினாலே எங்கள் நீதியை விளங்கப்பண்ணுவோம்? உம்முடைய அடியாரின் அக்கிரமத்தை தேவன் விளங்கப்பண்ணினார்; பாத்திரத்தை வைத்திருக்கிறவனும் நாங்களும் என் ஆண்டவனுக்கு அடிமைகள் என்றான்.17அதற்கு அவன்: அப்படிப்பட்ட செய்கை எனக்குத் தூரமாயிருப்பதாக; எவன் வசத்தில் பாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டதோ, அவனே எனக்கு அடிமையாயிருப்பான்; நீங்களோ சமாதானத்தோடே உங்கள் தகப்பனிடத்துக்குப் போங்கள் என்றான்.18அப்பொழுது யூதா அவனண்டையிலே சேர்ந்து: ஆ, என் ஆண்டவனே, உமது அடியேன் உம்முடைய செவிகள் கேட்க ஒரு வார்த்தை சொல்லுகிறேன் கேட்பீராக; அடியேன்மேல் உமது கோபம் மூளாதிருப்பதாக; நீர் பார்வோனுக்கு ஒப்பாயிருக்கிறீர்.19உங்களுக்குத் தகப்பனாவது சகோதரனாவது உண்டா என்று என் ஆண்டவன் உம்முடைய அடியாரிடத்தில் கேட்டீர்.20அதற்கு நாங்கள்: எங்களுக்கு முதிர்வயதுள்ள தகப்பனாரும், அவருக்கு முதிர்வயதிலே பிறந்த ஒரு இளைஞனும் உண்டு என்றும், அவனுடைய தமையன் இறந்துபோனான் என்றும், அவன் ஒருவன்மாத்திரமே அவனைப்பெற்ற தாயாருக்கு இருப்பதினால் தகப்பனார் அவன்மேல் பட்சமாயிருக்கிறார் என்றும் என் ஆண்டவனுக்குச் சொன்னோம்.21அப்பொழுது நீர்: அவனை என்னிடத்துக்குக் கொண்டுவாருங்கள்; என் கண்களினால் அவனைப் பார்க்கவேண்டும் என்று உமது அடியாருக்குச் சொன்னீர்.22நாங்கள் ஆண்டவனை நோக்கி: அந்த இளைஞன் தன் தகப்பனைவிட்டுப் பிரியக்கூடாது, பிரிந்தால் அவர் இறந்துபோவார் என்று சொன்னோம்.23அதற்கு நீர்: உங்கள் இளைய சகோதரனைக் கொண்டுவராவிட்டால், நீங்கள் இனி என் முகத்தைக் காண்பதில்லை என்று உமது அடியாருக்குச் சொன்னீர்.24நாங்கள் உமது அடியானாகிய என் தகப்பனாரிடத்துக்குப் போனபோது, என் ஆண்டவனுடைய வார்த்தைகளை அவருக்கு அறிவித்தோம்.25எங்கள் தகப்பனார் எங்களை நோக்கி: நீங்கள் திரும்பப்போய், நமக்குக் கொஞ்சம் தானியம் கொள்ளுங்கள் என்று சொன்னார்.26அதற்கு: நாங்கள் போகக்கூடாது; எங்கள் இளைய சகோதரன் எங்களோடே வந்தால் போவோம்; எங்கள் இளைய சகோதரன் எங்களோடே வராவிட்டால், நாங்கள் அந்தப் புருஷனுடைய முகத்தைக்காணக்கூடாது என்றோம்.27அப்பொழுது உம்முடைய அடியானாகிய என் தகப்பனார்: என் மனைவி எனக்கு இரண்டு பிள்ளைகளைப் பெற்றாள்;28அவர்களில் ஒருவன் என்னிடத்திலிருந்து போய்விட்டான், அவன் பீறுண்டுபோயிருப்பான் என்றிருந்தேன், இதுவரைக்கும் அவனைக் காணாதிருக்கிறேன், இதெல்லாம் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.29நீங்கள் இவனையும் என்னை விட்டுப்பிரித்து அழைத்துப்போகுமிடத்தில் இவனுக்கு மோசம் நேரிட்டால், என் நரைமயிரை வியாகுலத்தோடே பாதாளத்தில் இறங்கப்பண்ணுவீர்கள் என்றார்.30ஆகையால் இளையவனை விட்டு, நான் என் தகப்பனாகிய உமது அடியானிடத்துக்குப் போனால், அவருடைய ஜீவன் இவனுடைய ஜீவனோடே ஒன்றாய் இணைக்கப்பட்டிருக்கிறபடியினால்,31அவர் இளையவன் வரவில்லை என்று அறிந்தமாத்திரத்தில் இறந்துபோவார்; இப்படி உமது அடியாராகிய நாங்கள் உமது அடியானாகிய எங்கள் தகப்பனுடைய நரைமயிரை வியாகுலத்துடனே பாதாளத்தில் இறங்கப்பண்ணுவோம்.32இந்த இளையவனுக்காக உமது அடியானாகிய நான் என் தகப்பனுக்கு உத்தரவாதி; அன்றியும், நான் இவனை உம்மிடத்துக்குக் கொண்டுவராவிட்டால், நான் எந்நாளும் உமக்கு முன்பாகக் குற்றவாளியாயிருப்பேன் என்று அவருக்குச் சொல்லியிருக்கிறேன்.33இப்படியிருக்க, இளையவன் தன் சகோதரரோடேகூடப் போகவிடும்படி மன்றாடுகிறேன்; உம்முடைய அடியானாகிய நான் இளையவனுக்குப் பதிலாக இங்கே என் ஆண்டவனுக்கு அடிமையாயிருக்கிறேன்.34இளையவனை விட்டு, எப்படி என் தகப்பனிடத்துக்குப் போவேன்? போனால் என் தகப்பனுக்கு நேரிடும் தீங்கை நான் எப்படிக் காண்பேன் என்றான்.ஆதியாகமம் 45
1அப்பொழுது யோசேப்பு தன் அருகே நின்ற எல்லாருக்கும் முன்பாகத் தன்னை அடக்கிக்கொண்டிருக்கக்கூடாமல்: யாவரையும் என்னைவிட்டு வெளியே போகப்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டான். யோசேப்பு தன் சகோதரருக்குத் தன்னை வெளிப்படுத்துகையில், ஒருவரும் அவன் அருகில் நிற்கவில்லை.2அவன் சத்தமிட்டு அழுதான்; அதை எகிப்தியர் கேட்டார்கள், பார்வோனின் வீட்டாரும் கேட்டார்கள்.3யோசேப்பு தன் சகோதரரைப்பார்த்து: நான் யோசேப்பு; என் தகப்பனார் இன்னும் உயிரோடே இருக்கிறாரா என்றான். அவனுடைய சகோதரர் அவனுக்கு முன்பாகக் கலக்கமுற்றிருந்ததினாலே, அவனுக்கு உத்தரம் சொல்லக்கூடாமல் இருந்தார்கள்.4அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: என் கிட்ட வாருங்கள் என்றான். அவர்கள் கிட்டப்போனார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் எகிப்துக்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான்.5என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் சஞ்சலப்படவேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்.6தேசத்தில் இப்பொழுது இரண்டு வருஷமாகப் பஞ்சம் உண்டாயிருக்கிறது; இன்னும் ஐந்து வருஷம் உழவும் அறுப்பும் இல்லாமல் பஞ்சம் இருக்கும்.7பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிக்கிறதற்காகவும், பெரிய ரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார்.8ஆதலால் நீங்கள் அல்ல, தேவனே என்னை இவ்விடத்துக்கு அனுப்பி, என்னைப் பார்வோனுக்குத் தகப்பனாகவும், அவர் குடும்பம் அனைத்திற்கும் கர்த்தனாகவும், எகிப்துதேசம் முழுதுக்கும் அதிபதியாகவும் வைத்தார்.9நீங்கள் சீக்கிரமாய் என் தகப்பனிடத்தில் போய்: தேவன் என்னை எகிப்துதேசம் முழுவதுக்கும் அதிபதியாக வைத்தார்; என்னிடத்தில் வாரும், தாமதிக்க வேண்டாம்.10நீரும், உம்முடைய பிள்ளைகளும், அவர்களுடைய பிள்ளைகளும், உம்முடைய ஆடுமாடுகளோடும் உமக்கு உண்டாயிருக்கிற யாவற்றோடும் கோசேன் நாட்டில் வாசம்பண்ணி என் சமீபத்தில் இருக்கலாம்.11உமக்கும் உம்முடைய குடும்பத்தாருக்கும் உமக்கு இருக்கிற யாவற்றிற்கும் வறுமை வராதபடிக்கு, அங்கே உம்மைப் பராமரிப்பேன்; இன்னும் ஐந்து வருஷம் பஞ்சம் இருக்கும் என்று, உம்முடைய குமாரனாகிய யோசேப்பு சொல்லச்சொன்னான் என்று சொல்லுங்கள்.12இதோ, உங்களோடே பேசுகிற வாய் என் வாய்தான் என்பதை உங்கள் கண்களும் என் தம்பியாகிய பென்யமீனின் கண்களும் காண்கிறதே.13எகிப்திலே எனக்கு உண்டாயிருக்கிற சகல மகிமையையும், நீங்கள் கண்ட யாவையும் என் தகப்பனுக்கு அறிவித்து, அவர் சீக்கிரமாய் இவ்விடத்துக்கு வரும்படி செய்யுங்கள் என்று சொல்லி;14தன் தம்பியாகிய பென்யமீனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்; பென்யமீனும் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்.15பின்பு தன் சகோதரர் யாவரையும் முத்தஞ்செய்து, அவர்களையும் கட்டிக்கொண்டு அழுதான். அதற்குப்பின் அவன் சகோதரர் அவனோடே சம்பாஷித்தார்கள்.16யோசேப்பின் சகோதரர் வந்தார்கள் என்கிற சமாசாரம் பார்வோன் அரமனையில் பிரசித்தமானபோது, பார்வோனும் அவனுடைய ஊழியக்காரரும் சந்தோஷம் அடைந்தார்கள்.17பார்வோன் யோசேப்பை நோக்கி: நீ உன் சகோதரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் கழுதைகளின்மேல் பொதியேற்றிக்கொண்டு புறப்பட்டு, கானான் தேசத்துக்குப் போய்,18உங்கள் தகப்பனையும் உங்கள் குடும்பத்தாரையும் கூட்டிக்கொண்டு, என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு எகிப்து தேசத்தின் நன்மையைத் தருவேன்; தேசத்தின் கொழுமையைச் சாப்பிடுவீர்கள்.19நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காகவும் உங்கள் மனைவிகளுக்காகவும் வண்டிகளை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுபோய், அவர்களையும் உங்கள் தகப்பனுடனே ஏற்றிக்கொண்டு வாருங்கள்.20உங்கள் தட்டுமுட்டுகளைக் குறித்துக் கவலைப்படவேண்டாம்; எகிப்துதேசமெங்குமுள்ள நன்மை உங்களுடையதாயிருக்கும் என்று சொல்லச் சொல்லி, உனக்கு நான் இட்ட கட்டளைப்படியே செய் என்றான்.21இஸ்ரவேலின் குமாரர் அப்படியே செய்தார்கள், யோசேப்பு பார்வோனுடைய கட்டளையின்படியே அவர்களுக்கு வண்டிகளைக் கொடுத்ததுமன்றி, வழிக்கு ஆகாரத்தையும்,22அவர்களில் ஒவ்வொருவனுக்கும் மாற்று வஸ்திரங்களையும் கொடுத்தான்; பென்யமீனுக்கோ முந்நூறு வெள்ளிக்காசையும் ஐந்து மாற்று வஸ்திரங்களையும் கொடுத்தான்.23அப்படியே தன் தகப்பனுக்குப் பத்துக் கழுதைகளின்மேல் எகிப்தின் உச்சிதமான பதார்த்தங்களும், பத்துக் கோளிகைக் கழுதைகளின்மேல் தன் தகப்பனுக்காக வழிக்குத் தானியமும் அப்பமும் மற்றத் தின்பண்டங்களும் ஏற்றி அனுப்பினான்.24மேலும், நீங்கள் போகும் வழியிலே சண்டைபண்ணிக்கொள்ளாதிருங்கள் என்று அவன் தன் சகோதரருக்குச் சொல்லி அனுப்பினான்; அவர்கள் புறப்பட்டுப்போனார்கள்.25அவர்கள் எகிப்திலிருந்து போய், கானான் தேசத்திலே தங்கள் தகப்பனாகிய யாக்கோபினிடத்தில் வந்து:26யோசேப்பு உயிரோடிருக்கிறான், அவன் எகிப்துதேசத்துக்கெல்லாம் அதிபதியாயிருக்கிறான் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அவன் இருதயம் மூர்ச்சை அடைந்தது; அவன் அவர்களை நம்பவில்லை.27அவர்கள் யோசேப்பு தங்களுடனே சொன்ன வார்த்தைகள் யாவையும் அவனுக்குச் சொன்னபோதும், தன்னை ஏற்றிக்கொண்டு போகும்படி யோசேப்பு அனுப்பின வண்டிகளை அவன் கண்டபோதும், அவர்களுடைய தகப்பனாகிய யாக்கோபின் ஆவி உயிர்த்தது.28அப்பொழுது இஸ்ரவேல்: என் குமாரனாகிய யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறானே, இது போதும்; நான் மரணமடையுமுன்னே போய் அவனைப் பார்ப்பேன் என்றான்.
Leave a Reply