Scripture Portion: Nehemiah 8-10

நெகேமியா 8

1ஜனங்கள் எல்லாரும் தண்ணீர் வாசலுக்கு முன்னான வீதியிலே ஒருமனப்பட்டுக் கூடி, கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த மோசேயின் நியாயப்பிரமாணப் புஸ்தகத்தைக் கொண்டுவரவேண்டுமென்று வேதபாரகனாகிய எஸ்றாவுக்குச் சொன்னார்கள்.
2அப்படியே ஏழாம் மாதம் முதல் தேதியில் ஆசாரியனாகிய எஸ்றா நியாயப்பிரமாணத்தைப் புருஷரும் ஸ்திரீகளும், கேட்டு அறியத்தக்க அனைவருமாகிய சபைக்கு முன்பாகக் கொண்டுவந்து,
3தண்ணீர் வாசலுக்கு முன்னான வீதிக்கு எதிரேயிருந்து காலமே தொடங்கி மத்தியானமட்டும் புருஷருக்கும் ஸ்திரீகளுக்கும், கேட்டு அறியத்தக்க மற்றவர்களுக்கும் முன்பாக அதை வாசித்தான்; சகல ஜனங்களும் நியாயப்பிரமாண புஸ்தகத்திற்குக் கவனமாய்ச் செவிகொடுத்தார்கள்.
4வேதபாரகனாகிய எஸ்றா அதற்கென்று மரத்தால் செய்யப்பட்ட ஒரு பிரசங்கபீடத்தின்மேல் நின்றான்; அவனண்டையில் அவனுக்கு வலதுபக்கமாக மத்தித்தியாவும், செமாவும், அனாயாவும், உரியாவும், இல்க்கியாவும், மாசெயாவும், அவனுக்கு இடதுபக்கமாகப் பெதாயாவும், மீசவேலும், மல்கியாவும், அசூமும், அஸ்பதானாவும், சகரியாவும், மெசுல்லாமும் நின்றார்கள்.
5எஸ்றா சகல ஜனங்களுக்கும் உயர நின்று, சகல ஜனங்களும் காணப் புஸ்தகத்தைத் திறந்தான்; அவன் அதைத் திறந்தபோது, ஜனங்கள் எல்லாரும் எழுந்துநின்றார்கள்.
6அப்பொழுது எஸ்றா மகத்துவமுள்ள தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரித்தான்; ஜனங்களெல்லாரும் தங்கள் கைகளைக் குவித்து, அதற்கு மறுமொழியாக, ஆமென், ஆமென் என்று சொல்லி, குனிந்து, முகங்குப்புற விழுந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள்.
7யெசுவா, பானி, செரெபியா, யாமின், அக்கூப், சபெதாயி, ஒதியா, மாசெயா, கேலிதா, அசரியா, யோசபாத், ஆனான், பெலாயா என்பவர்களும், லேவியரும், நியாயப்பிரமாணத்தை ஜனங்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்; ஜனங்கள் தங்கள் நிலையிலே நின்றார்கள்.
8அவர்கள் தேவனுடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தை தீர்க்கமாக வாசித்து, அர்த்தஞ்சொல்லி, வாசித்ததை அவர்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்.
9ஜனங்கள் எல்லாரும் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் கேட்ட போது, அழுதபடியால், திர்ஷாதா என்னப்பட்ட நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும், ஜனங்களுக்கு விளக்கிக்காட்டின லேவியரும் சகல ஜனங்களையும் நோக்கி: இந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான நாள்; நீங்கள் துக்கப்படவும் அழவும் வேண்டாம் என்றார்கள்.
10பின்னும் அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய்க் கொழுமையானதைப் புசித்து, மதுரமானதைக் குடித்து, ஒன்றுமில்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள்; இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம்; கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான்.
11லேவியரும் ஜனங்களையெல்லாம் அமர்த்தி: அழாதிருங்கள், இந்த நாள் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம் என்றார்கள்.
12அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட வார்த்தைகளை உணர்ந்துகொண்டபடியால், புசித்துக் குடிக்கவும், பங்குகளை அனுப்பவும், மிகுந்த சந்தோஷம் கொண்டாடவும் போனார்கள்.
13மறுநாளில் ஜனத்தின் சகல வம்சத்தலைவரும், ஆசாரியரும், லேவியரும், நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை அறிந்துகொள்ளவேண்டும் என்று வேதபாரகனாகிய எஸ்றாவினிடத்தில் கூடிவந்தார்கள்.
14அப்பொழுது நியாயப்பிரமாணத்திலே, இஸ்ரவேல் புத்திரர் ஏழாம் மாதத்தின் பண்டிகையிலே கூடாரங்களில் குடியிருக்க வேண்டும் என்று கர்த்தர் மோசேயைக்கொண்டு கற்பித்த காரியம் எழுதியிருக்கிறதைக் கண்டார்கள்.
15ஆகையால் எழுதியிருக்கிறபடி கூடாரங்களைப் போடும்படிக்கு, நீங்கள் மலைகளுக்குப் புறப்பட்டுப்போய் ஒலிவக்கிளைகளையும், காட்டு ஒலிவக்கிளைகளையும், மிருதுச் செடிகளின் கிளைகளையும், பேரீச்ச மட்டைகளையும், அடர்ந்த மரக்கிளைகளையும் கொண்டுவாருங்கள் என்று தங்களுடைய சகல பட்டணங்களிலும், எருசலேமிலும் கூறிப் பிரசித்தப்படுத்தினார்கள்.
16அப்படியே ஜனங்கள் வெளியே போய் அவைகளைக் கொண்டுவந்து, அவரவர் தங்கள் வீடுகள்மேலும், தங்கள் முற்றங்களிலும், தேவனுடைய ஆலயப்பிராகாரங்களிலும், தண்ணீர்வாசல் வீதியிலும், எப்பிராயீம்வாசல் வீதியிலும் தங்களுக்குக் கூடாரங்களைப் போட்டார்கள்.
17இந்தப்பிரகாரமாகச் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்களின் சபையார் எல்லாரும் கூடாரங்களைப் போட்டு, கூடாரங்களில் குடியிருந்தார்கள்; இப்படியே நூனின் குமாரனாகிய யோசுவாவின் நாட்கள்முதல் அந்நாள் மட்டும் இஸ்ரவேல் புத்திரர் செய்யாதிருந்து இப்பொழுது செய்தபடியால், மிகுந்த சந்தோஷமுண்டாயிருந்தது.
18முதலாம் நாள்தொடங்கிக் கடைசி நாள்மட்டும், தினம்தினம் தேவனுடைய நியாயப்பிரமாணபுஸ்தகம் வாசிக்கப்பட்டது; ஏழுநாள் பண்டிகையை ஆசரித்தார்கள்; எட்டாம்நாளோவெனில், முறைமையின்படியே விசேஷித்த ஆசரிப்பு நாளாயிருந்தது.

நெகேமியா 9

1அந்த மாதம் இருபத்துநாலாந்தேதியிலே இஸ்ரவேல் புத்திரர் உபவாசம்பண்ணி, இரட்டுடுத்தி, தங்கள்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டவர்களாய்க் கூடிவந்தார்கள்.
2இஸ்ரவேல் சந்ததியார் மறுஜாதியாரையெல்லாம் விட்டுப்பிரிந்து வந்து நின்று, தங்கள் பாவங்களையும், தங்கள் பிதாக்களின் அக்கிரமங்களையும் அறிக்கையிட்டார்கள்.
3அவர்கள் எழுந்திருந்து, தங்கள் நிலையில் நின்றார்கள்; அப்பொழுது ஒரு ஜாமமட்டும் அவர்களுடைய தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணப் புஸ்தகம் வாசிக்கப்பட்டது; பின்பு ஒரு ஜாமமட்டும் அவர்கள் பாவஅறிக்கைபண்ணி, தங்கள் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள்.
4யெசுவா, பானி, கத்மியேல், செப்பனியா, புன்னி, செரெபியா, பானி, கெனானி என்பவர்கள் லேவியருடைய படிகளின்மேல் நின்று, தங்கள் தேவனாகிய கர்த்தரை நோக்கி மகா சத்தமாய் ஓலமிட்டார்கள்.
5பின்பு லேவியரான யெசுவா, கத்மியேல், பானி, ஆசாப்நெயா, செரெபியா, ஒதியா, செப்பனியா, பெத்தகியா என்பவர்கள் ஜனங்களைப் பார்த்து: நீங்கள் எழுந்திருந்து, அநாதியாய் என்றென்றைக்குமிருக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் என்று சொல்லி, கர்த்தரை நோக்கி: எந்த ஸ்துதி ஸ்தோத்திரத்துக்கும் மேலான உம்முடைய மகிமையுள்ள நாமத்துக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.
6நீர் ஒருவரே கர்த்தர்; நீர் வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகளுடைய சர்வ சேனைகளையும், பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், சமுத்திரங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர்; அவைகளையெல்லாம் நீர் காப்பாற்றுகிறீர்; வானசேனைகள் உம்மைப் பணிந்துகொள்ளுகிறது.
7ஆபிராமைத் தெரிந்துகொண்டு, அவனை ஊர் என்னும் கல்தேயரின் பட்டணத்திலிருந்து புறப்படப்பண்ணி, அவனுக்கு ஆபிரகாம் என்னும் பேரிட்ட தேவனாகிய கர்த்தர் நீர்.
8அவன் இருதயத்தை உமக்கு முன்பாக உண்மையுள்ளதாகக்கண்டு, கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், எபூசியர், கிர்காசியருடைய தேசத்தை அவன் சந்ததிக்குக் கொடுக்கும்படி, அவனோடு உடன்படிக்கைபண்ணி, உம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றினீர்; நீர் நீதியுள்ளவர்.
9எகிப்திலே எங்கள் பிதாக்கள் அநுபவித்த சிறுமையை நீர் கண்டு, சிவந்த சமுத்திரத்தில் அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டீர்.
10பார்வோனிடத்திலும், அவனுடைய எல்லா ஊழியக்காரரிடத்திலும், அவன் தேசத்தின் சகல ஜனத்தினிடத்திலும், அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்தீர்; அவர்கள் உமது ஜனங்களை அகந்தையாய் நடத்தினார்கள் என்பதை அறிந்திருந்தீர்; இப்படியே இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி உமக்குக் கீர்த்தியை உண்டாக்கினீர்.
11நீர் அவர்களுக்கு முன்பாகச் சமுத்திரத்தைப் பிரித்ததினால், கடலின் நடுவாகக் கால்நனையாமல் நடந்தார்கள்; வலுவான தண்ணீர்களிலே கல்லைப்போடுகிறதுபோல, அவர்களைத் தொடர்ந்தவர்களை ஆழங்களிலே போட்டுவிட்டீர்.
12நீர் பகலிலே மேகஸ்தம்பத்தினாலும். அவர்கள் நடக்கவேண்டிய வழியை அவர்களுக்கு வெளிச்சமாக்க இரவிலே அக்கினிஸ்தம்பத்தினாலும், அவர்களை வழிநடத்தினீர்.
13நீர் சீனாய்மலையிலிறங்கி, வானத்திலிருந்து அவர்களோடே பேசி, அவர்களுக்குச் செம்மையான நீதிநியாயங்களையும், நல்ல கட்டளைகளும் கற்பனைகளுமாகிய உண்மையான பிரமாணங்களையும் கொடுத்தீர்.
14உமது பரிசுத்த ஓய்வுநாளை அவர்களுக்குத் தெரியப்படுத்தி, உமது தாசனாகிய மோசேயைக்கொண்டு, அவர்களுக்குக் கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயப்பிரமாணங்களையும் கற்பித்தீர்.
15அவர்கள் பசிக்கு வானத்திலிருந்து அப்பம் கொடுத்து, அவர்கள் தாகத்துக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, நீர் அவர்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தைச் சுதந்தரித்துக் கொள்ளப்பிரவேசியுங்கள் என்று அவர்களுக்குச் சொன்னீர்.
16எங்கள் பிதாக்களாகிய அவர்களோ அகங்காரமாய் நடந்து, தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, உம்முடைய கற்பனைகளுக்குச் செவிகொடாதேபோனார்கள்.
17அவர்கள் செவிகொடுக்க மனதில்லாமலும், அவர்களிடத்திலே நீர் செய்த உம்முடைய அற்புதங்களை நினையாமலும் போய், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, தங்கள் அடிமைத்தனத்துக்குத் திரும்பும்படிக்கு அவர்கள் கலகம்பண்ணி, ஒரு தலைவனை ஏற்படுத்தினார்கள்; ஆகிலும் வெகுவாய் மன்னிக்கிறவரும், இரக்கமும் மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மகா கிருபையுமுள்ளவருமான தேவனாகிய நீர் அவர்களைக் கைவிடவில்லை.
18அவர்கள் வார்ப்பிக்கப்பட்ட ஒரு கன்றுக்குட்டியைத் தங்களுக்கு உண்டாக்கி: இது உன்னை எகிப்திலிருந்து கொண்டுவந்த உன் தெய்வம் என்று சொல்லி, கோபமூட்டத்தக்க பெரிய அக்கிரமங்களைச் செய்திருந்தாலும்,
19நீர் உம்முடைய மிகுந்த மனவுருக்கத்தின்படியே, அவர்களை வனாந்தரத்திலே கைவிடவில்லை; அவர்களை வழிநடத்தப் பகலிலே மேகஸ்தம்பமும் அவர்களுக்கு வெளிச்சத்தையும் அவர்கள் நடக்கவேண்டிய வழியையும் காட்ட இரவிலே அக்கினிஸ்தம்பமும், அவர்களை விட்டு விலகவில்லை.
20அவர்களுக்கு அறிவை உணர்த்த உம்முடைய நல் ஆவியைக் கட்டளையிட்டீர்; அவர்கள் வாய்க்கு உம்முடைய மன்னாவை அருளி, அவர்கள் தாகத்துக்குத் தண்ணீரைக் கொடுத்தீர்.
21இப்படி நாற்பது வருஷமாக வனாந்தரத்தில் அவர்களுக்கு ஒன்றும் குறைவுபடாதபடிக்கு, அவர்களைப் பராமரித்து வந்தீர்; அவர்கள் வஸ்திரங்கள் பழமையாய்ப் போகவுமில்லை, அவர்கள் கால்கள் வீங்கவுமில்லை.
22அவர்களுக்கு ராஜ்யங்களையும் ஜனங்களையும் ஒப்புக்கொடுத்து, அவைகளை எல்லை எல்லையாக அவர்களுக்குப் பங்கிட்டீர்; எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் தேசத்தையும், பாசானின் ராஜாவாகிய ஓகின் தேசத்தையும் கட்டிக்கொண்டார்கள்,
23அவர்கள் பிள்ளைகளை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, சுதந்தரித்துக்கொள்ளும்படி நீர் அவர்கள் பிதாக்களுக்குச் சொன்ன தேசத்திலே அவர்களை அழைத்துவந்தீர்.
24அப்படியே பிள்ளைகள் உட்பிரவேசித்து, தேசத்தைச் சுதந்தரித்துக் கொண்டார்கள்; நீர் அவர்களுக்கு முன்பாக தேசத்தின் குடிகளாகிய கானானியரைத் தாழ்த்தி, அவர்களையும் அவர்கள் ராஜாக்களையும், தேசத்தின் ஜனங்களையும், தங்கள் இஷ்டப்படி செய்ய, அவர்கள் கையிலே ஒப்புக்கொடுத்தீர்.
25அவர்கள் அரணான பட்டணங்களையும், செழுமையான பூமியையும் கட்டிக்கொண்டு, சகலவித உடைமைகள் நிறைந்த வீடுகளையும், வெட்டப்பட்ட துரவுகளையும், ஏராளமான திராட்சத்தோட்டங்களையும், ஒலிவத்தோப்புகளையும், கனிகொடுக்கும் விருட்சங்களையும் சுதந்தரித்துக்­கொண்டு, புசித்துத் திருப்தியாகிக் கொழுத்து, உம்முடைய பெரிய தயையினால் செல்வமாய் வாழ்ந்தார்கள்.
26ஆனாலும் அவர்கள் கீழ்ப்படியாதவர்களாகி, உமக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, உம்முடைய நியாயப்பிரமாணத்தைத் தங்களுக்குப் புறம்பே எறிந்துவிட்டு, தங்களை உம்மிடத்தில் திருப்பும்படி அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்ட உம்முடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றுபோட்டு, கோபமூட்டுகிற பெரிய அக்கிரமங்களைச் செய்தார்கள்.
27ஆகையால் அவர்களை நெருக்குகிற அவர்கள் சத்துருக்களின் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்தீர்; அவர்கள் நெருக்கம் அநுபவிக்கிற காலத்தில் அவர்கள் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறபோதோ, நீர் பரலோகத்திலிருந்து கேட்டு, உம்முடைய மிகுந்த இரக்கத்தினால் அவர்களை அவர்கள் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கிவிடுகிற இரட்சகர்களை அவர்களுக்குக் கொடுத்தீர்.
28அவர்களுக்கு இளைப்பாறுதல் உண்டானபோதோ, உமக்கு முன்பாக மறுபடியும் பொல்லாப்புச் செய்யத் தொடங்கினார்கள்; ஆகையால் அவர்கள் சத்துருக்கள் அவர்களை ஆளும்படிக்கு, அவர்கள் கையிலே ஒப்புவித்தீர்; அவர்கள் மனந்திரும்பி, உம்மை நோக்கிக் கூப்பிட்டபோதோ, நீர் பரலோகத்திலிருந்து கேட்டு, அவர்களை உம்முடைய இரக்கங்களின்படியே அநேகந்தரம் விடுதலையாக்கிவிட்டீர்.
29அவர்களை உம்முடைய நியாயப்பிரமாணத்துக்குத் திருப்ப அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்து கொண்டீர்; ஆனாலும் அவர்கள் அகங்காரங்கொண்டு, உம்முடைய கற்பனைகளுக்குச் செவிகொடாமல், கீழ்ப்படிந்து நடக்கிற மனுஷன் செய்து பிழைக்கிற உம்முடைய நீதி நியாயங்களுக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, தங்கள் தோளை முரண்டுத்தனமாய் விலக்கி, செவிகொடாமல், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்திக்கொண்டார்கள்.
30நீர் அநேக வருஷமாக அவர்கள்மேல் பொறுமையாயிருந்து, உம்முடைய ஆவியினால் பேசின உம்முடைய தீர்க்கதரிசிகளைக்கொண்டு அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டாலும், அவர்கள் செவிகொடாதபடியினாலே அவர்களை அந்நிய தேசஜனங்களின் கையில் ஒப்புக்கொடுத்தீர்.
31ஆகிலும் உம்முடைய மிகுந்த இரக்கங்களின்படியே, அவர்களை நிர்மூலமாக்காமலும் அவர்களைக் கைவிடாமலும் இருந்தீர்; நீர் கிருபையும் இரக்கமுமுள்ள தேவன்.
32இப்பொழுதும் உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற வல்லமையும் பயங்கரமுமுள்ள மகா தேவனாகிய எங்கள் தேவனே, அசீரியா ராஜாக்களின் நாட்கள் முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் எங்களுக்கும், எங்கள் ராஜாக்களுக்கும், எங்கள் பிரபுக்களுக்கும், எங்கள் ஆசாரியர்களுக்கும், எங்கள் தீர்க்கதரிசிகளுக்கும், எங்கள் பிதாக்களுக்கும், உம்முடைய ஜனங்கள் அனைவருக்கும் நேரிட்ட சகல வருத்தமும் உமக்கு முன்பாக அற்பமாய்க் காணப்படாதிருப்பதாக.
33எங்களுக்கு நேரிடப்பண்ணின எல்லாவற்றிலும் நீர் நீதியுள்ளவர்; நீர் உண்மையாய் நடப்பித்தீர்; நாங்களோ ஆகாமியம்பண்ணினோம்.
34எங்கள் ராஜாக்களும், எங்கள் பிரபுக்களும், எங்கள் ஆசாரியர்களும், எங்கள் பிதாக்களும், உம்முடைய நியாயப்பிரமாணத்தின்படி செய்யாமலும், உம்முடைய கற்பனைகளையும், நீர் அவர்களைக் கடிந்துகொண்ட உம்முடைய சாட்சிகளையும் கவனியாமலும் போனார்கள்.
35அவர்கள் தங்கள் ராஜ்யத்திலும், நீர் அவர்களுக்குக் கொடுத்த உம்முடைய பெரிய தயையிலும், நீர் அவர்களுக்கு முன்பாகத் திறந்துவைத்த விசாலமும் செழிப்புமான தேசத்திலும் உமக்கு ஊழியஞ்செய்யாமலும், தங்கள் துர்க்கருமங்களை விட்டுத் திரும்பாமலும் போனார்கள்.
36இதோ, இன்றையதினம் நாங்கள் அடிமைகளாயிருக்கிறோம். இதோ, பலனையும் நன்மையையும் அநுபவிக்கும்படி நீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த இந்த தேசத்தில்தானே நாங்கள் அடிமைகளாயிருக்கிறோம்.
37அதின் வருமானம் எங்கள் பாவங்களினிமித்தம் நீர் எங்கள்மேல் வைத்த ராஜாக்களுக்குத் திரளாகப் போகிறது; அவர்கள் தங்களுக்கு இஷ்டமானபடியே எங்கள் சரீரங்களையும் எங்கள் மிருக ஜீவன்களையும் ஆளுகிறார்கள்; நாங்கள் மகா இக்கட்டில் அகப்பட்டிருக்கிறோம்.
38இவையெல்லாம் இப்படி இருக்கிறபடியால், நாங்கள் உறுதியான உடன்படிக்கைபண்ணி அதை எழுதி வைக்கிறோம்; எங்கள் பிரபுக்களும், எங்கள் லேவியரும், எங்கள் ஆசாரியரும் அதற்கு முத்திரை போடுவார்கள் என்றார்கள்.

நெகேமியா 10

1முத்திரை போட்டவர்கள் யாரென்றால்: அகலியாவின் குமாரனாகிய திர்ஷாதா என்னும் நெகேமியா, சிதேகியா,
2செராயா, அசரியா, எரேமியா,
3பஸ்கூர், அமரியா, மல்கிஜா,
4அத்தூஸ், செபனியா, மல்லூக்,
5ஆரீம், மெரெமோத், ஒபதியா,
6தானியேல், கிநேதோன், பாருக்,
7மெசுல்லாம், அபியா, மீயாமின்,
8மாசியா, பில்காய், செமாயா என்னும் ஆசாரியர்களும்,
9லேவியராகிய அசனியாவின் குமாரன் யெசுவா, எனாதாதின் குமாரரில் ஒருவனாகிய பின்னூயி, கத்மியேல் என்பவர்களும்,
10அவர்கள் சகோதரராகிய செபனியா, ஒதியா, கேலிதா, பெலாயா, ஆனான்,
11மீகா, ரேகோப், அசபியா,
12சக்கூர், செரெபியா, செபனியா,
13ஒதியா, பானி, பெனினு என்பவர்களும்,
14ஜனத்தின் தலைவராகிய பாரோஷ், பாகாத்மோவாப், ஏலாம், சத்தூ, பானி,
15புன்னி, அஸ்காத், பெபாயி,
16அதோனியா, பிக்வாய், ஆதின்,
17ஆதேர், இஸ்கியா, அசூர்,
18ஒதியா, ஆசூம், பெத்சாய்,
19ஆரீப், ஆனதோத், நெபாய்,
20மக்பியாஸ், மெசுல்லாம், ஏசீர்,
21மெஷெசாபெயேல், சாதோக், யதுவா,
22பெலத்தியா, ஆனான், ஆனாயா,
23ஓசெயா, அனனியா, அசூப்,
24அல்லோகேஸ், பிலகா, சோபேக்,
25ரேகூம், அஷபனா, மாசெயா,
26அகியா, கானான், ஆனான்,
27மல்லூக், ஆரிம், பானா என்பவர்களுமே.
28ஜனங்களில் மற்றவர்களாகிய ஆசாரியரும், லேவியரும், வாசல் காவலாளரும், பாடகரும், நிதனீமியரும், தேசங்களின் ஜனங்களைவிட்டுப் பிரிந்து விலகி தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குத் திரும்பின அனைவரும், அவர்கள் மனைவிகளும், அவர்கள் குமாரரும், அவர்கள் குமாரத்திகளுமாகிய அறிவும் புத்தியும் உள்ளவர்களெல்லாரும்,
29தங்களுக்குப் பெரியவர்களாகிய தங்கள் சகோதரரோடே கூடிக்கொண்டு: தேவனுடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு கொடுக்கப்பட்ட தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி நடந்துகொள்வோம் என்றும், எங்கள் ஆண்டவராகிய கர்த்தரின் கற்பனைகளையும் சகல நீதிநியாயங்களையும், கட்டளைகளையும் எல்லாம் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வோம் என்றும்,
30நாங்கள் எங்கள் குமாரத்திகளை தேசத்தின் ஜனங்களுக்குக் கொடாமலும், எங்கள் குமாரருக்கு அவர்கள் குமாரத்திகளைக்கொள்ளாமலும் இருப்போம் என்றும்,
31தேசத்தின் ஜனங்கள் ஓய்வுநாளிலே சரக்குகளையும், எந்தவிதத்தானியதவசத்தையும் விற்கிறதற்குக் கொண்டுவந்தால், நாங்கள் அதை ஓய்வுநாளிலும் பரிசுத்தநாளிலும் அவர்கள் கையில் கொள்ளாதிருப்போம் என்றும், நாங்கள் ஏழாம் வருஷத்தை விடுதலை வருஷமாக்கிச் சகல கடன்களையும் விட்டுவிடுவோம் என்றும் ஆணையிட்டுப் பிரமாணம்பண்ணினார்கள்.
32மேலும்: நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்காக சமுகத்தப்பங்களுக்கும், நித்திய போஜனபலிக்கும், ஓய்வு நாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் செலுத்தும் நித்திய சர்வாங்க தகனபலிகளுக்கும், பண்டிகைகளுக்கும், பிரதிஷ்டையான பொருள்களுக்கும், இஸ்ரவேலுக்காகப் பாவநிவிர்த்தி உண்டாக்கும் பலிகளுக்கும்,
33எங்கள் தேவனுடைய ஆலயத்தின் சகல வேலைக்கும், வருஷந்தோறும் நாங்கள் சேக்கலில் மூன்றில் ஒரு பங்கைக் கொடுப்போம் என்கிற கடனை எங்கள்மேல் ஏற்றுக்கொண்டோம்.
34நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே எங்கள் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் எரிகிறதற்காக, குறிக்கப்பட்ட காலங்களில் வருஷாவருஷம் எங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே, எங்கள் தேவனுடைய ஆலயத்துக்குக் கொண்டுவரவேண்டிய விறகு காணிக்கைக்­காகவும், ஆசாரியருக்கும். லேவியருக்கும், ஜனத்துக்கும் சீட்டுப்போட்டோம்.
35நாங்கள் வருஷந்தோறும் எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கு எங்கள் தேசத்தின் முதற்பலனையும், சகலவித விருட்சங்களின் எல்லா முதற்கனிகளையும் கொண்டுவரவும்.
36நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே, எங்கள் குமாரரில் முதற்பேறுகளையும், எங்கள் ஆடுமாடுகளாகிய மிருகஜீவன்களின் தலையீற்றுகளையும், எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கும் எங்கள் தேவனுடைய ஆலயத்திலே ஊழியஞ்செய்கிற ஆசாரியரிடத்துக்கும் கொண்டுவரவும்.
37நாங்கள் எங்கள் பிசைந்தமாவில் முதற்பாகத்தையும், எங்கள் படைப்புகளையும், சகல மரங்களின் முந்தின பலனாகிய திராட்சப்பழரசத்தையும், எண்ணெயையும், எங்கள் தேவனுடைய ஆலயத்தின் அறைகளில் வைக்கும்படி ஆசாரியரிடத்துக்கும், எங்கள் நிலப்பயிர்களில் தசமபாகம் லேவியரிடத்துக்கும் கொண்டுவரவும், லேவியராகிய இவர்கள் எங்கள் வெள்ளாண்மையின் பட்டணங்களிலெல்லாம் தசமபாகம் சேர்க்கவும்,
38லேவியர் தசமபாகம் சேர்க்கும்போது ஆரோனின் குமாரனாகிய ஒரு ஆசாரியன் லேவியரோடேகூட இருக்கவும், தசமபாகமாகிய அதிலே லேவியர் பத்தில் ஒரு பங்கை எங்கள் தேவனுடைய ஆலயத்திலுள்ள பொக்கிஷ அறைகளில் கொண்டுவரவும் திட்டம்பண்ணிக்கொண்டோம்.
39பரிசுத்தஸ்தலத்தின் பணிமுட்டுகளும், ஊழியஞ்செய்கிற ஆசாரியரும், வாசல் காவலாளரும், பாடகரும் இருக்கிற அந்த அறைகளிலே இஸ்ரவேல் புத்திரரும் லேவிபுத்திரரும் தானியம் திராட்சரசம் எண்ணெய் என்பவைகளின் படைப்புகளைக் கொண்டுவரவேண்டியது; இவ்விதமாய் நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தைப் பராமரியாமல் விடுவதில்லையென்று திட்டம்பண்ணிக்கொண்டோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *