Scripture Portion: Nehemiah 11-13, Psalm 126

நெகேமியா 11

1ஜனத்தின் அதிகாரிகள் எருசலேமிலே குடியிருந்தார்கள்; மற்ற ஜனங்கள், தங்களுக்குள்ளே பத்துப்பேரில் ஒருவனை எருசலேமென்னும் பரிசுத்த நகரத்திலும் ஒன்பதுபேரை மற்ற பட்டணங்களிலும் குடியிருக்கப்பண்ண, சீட்டுகளைப் போட்டார்கள்.
2ஆனாலும் எருசலேமிலே குடியிருக்க மனப்பூர்வமாய்ச் சம்மதித்த மனுஷர்களையெல்லாம் ஜனங்கள் வாழ்த்தினார்கள்.
3யூதாவின் பட்டணங்களில் இஸ்ரவேலரும், ஆசாரியரும், லேவியரும், நிதனீமியரும், சாலொமோனுடைய வேலைக்காரரின் புத்திரரும், அவரவர் தங்கள் பட்டணங்களிலுள்ள தங்கள் காணிபூமியிலே குடியிருந்தார்கள்; எருசலேமிலே குடியிருந்த நாடுகளின் தலைவர் யாரென்றால்:
4எருசலேமிலே யூதா புத்திரரில் சிலரும், பென்யமீன் புத்திரரில் சிலரும் குடியிருந்தார்கள்; யூதா புத்திரரிலே பேரேசின் புத்திரருக்குள் ஒருவனான மகலாலெயேலின் குமாரனாகிய செபதியாவின் குமாரன் அமரியாவுக்குப் பிறந்த சகரியாவுக்குக் குமாரனான உசியாவின் மகன் அத்தாயாவும்,
5சீலோனின் குமாரன் சகரியாவுக்குக் குமாரனாகிய யோயாரிபுக்குக் குமாரனான அதாயாவுக்குப் பிறந்த அசாயாவின் குமாரன் கொல்லோசே பெற்ற பாருக்கின் மகன் மாசெயாவுமே.
6எருசலேமிலே குடியிருக்கிற பேரேசின் புத்திரரெல்லாரும் நானூற்று அறுபத்தெட்டுப் பராக்கிரமசாலிகளாயிருந்தார்கள்.
7பென்யமீன் புத்திரரில் யாரென்றால், சல்லு என்பவன்; இவன் மெசுல்லாமுக்கும், இவன் யோவேலுக்கும், இவன் பெதாயாவுக்கும், இவன் கொலாயாவுக்கும், இவன் மாசெயாவுக்கும், இவன் இதியேலுக்கும், இவன் எசாயாவுக்கும் குமாரனானவன்.
8அவனுக்குப்பின் கப்பாய், சல்லாய் முதலானவர்கள் தொளாயிரத்து இருபத்தெட்டுப்பேர்.
9அவர்கள்மேல் விசாரிப்புக்காரனான சிக்ரியின் குமாரன் யோவேலும், பட்டணத்தின்மேல் இரண்டாவது விசாரிப்புக்காரனான செனூவாவின் குமாரன் யூதாவுமே.
10ஆசாரியர்களில் யோயாரிபின் குமாரன் யெதாயா, யாகின் என்பவர்களும்,
11அகிதூபின் குமாரன் மெராயோத்துக்குப் பிறந்த சாதோக்கின் குமாரன் மெசுல்லாம் பெற்ற இல்க்கியாவின் மகன் செராயா என்னும் தேவனுடைய ஆலயத்தின் விசாரணைக்கர்த்தனும்,
12ஆலயத்திலே பணிவிடை செய்கிற அவர்கள் சகோதரராகிய எண்ணூற்று இருபத்திரண்டுபேரும், மல்கியாவின் குமாரன் பஸ்கூருக்கு மகனான சகரியாவின் குமாரன் அம்சிக்குப் பிறந்த பெல்லியாவின் குமாரன் எரோகாமுக்குப் பிறந்த அதாயாவும்,
13பிதா வம்சத்தலைவராகிய அவனுடைய சகோதரர் இருநூற்று நாற்பத்திரண்டுபேரும், இம்மேரின் குமாரன் மெசில்லேமோத்தின் மகனாகிய அகசாய்க்குப் பிறந்த அசரெயேலின் மகன் அமாசாயும்,
14அவர்களுடைய சகோதரராகிய பராக்கிரமசாலிகள் நூற்று இருபத்தெட்டுப்பேருமே; இவர்கள்மேல் அகெதோலிமின் குமாரன் சப்தியேல் விசாரிப்புக்காரனாயிருந்தான்.
15லேவியரிலே புன்னியின் குமாரன் அசபியாவின் மகனாகிய அஸ்ரிக்காமின் குமாரனான அசூபின் மகன் செமாயாவும்,
16தேவனுடைய ஆலயத்தின் வெளிவேலையை விசாரிக்கிற லேவியரின் தலைவரிலே சபெதாயும், யோசபாத்தும்,
17ஆசாபின் குமாரன் சப்தியின் குமாரனாகிய மீகாவின் மகன் மத்தனியா ஜெபத்தில் ஸ்தோத்திரப்பாட்டைத் துவக்குகிற தலைவனும் அவன் சகோதரரில் இரண்டாவதான பக்பூக்கியா என்னும் ஒருவனும், எதுத்தூனின் குமாரன் காலாவின் மகனாகிய சமுவாவின் குமாரன் அப்தாவுமே.
18பரிசுத்த பட்டணத்திலிருந்த லேவியர் எல்லாரும் இருநூற்று எண்பத்துநாலுபேர்.
19வாசல் காவலாளர் அக்கூபும், தல்மோனும், வாசல்களில் காவல்காக்கிற அவர்கள் சகோதரரும் நூற்று எழுபத்திரண்டுபேர்.
20மற்ற இஸ்ரவேலரும், ஆசாரியரும், லேவியரும், யூதாவின் சகல பட்டணங்களிலும், அவரவர் தங்கள் சுதந்தரத்திலிருந்தார்கள்.
21நிதனீமியர் ஓபேலிலே குடியிருந்தார்கள்; அவர்கள்மேல் சீகாவும் கிஸ்பாவும் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.
22எருசலேமிலிருக்கிற லேவியரின் விசாரிப்புக்காரன் மீகாவின் குமாரன் மத்தனியாவின் மகனாகிய அசபியாவுக்குப் பிறந்த பானியின் குமாரன் ஊசி என்பவன் தேவனுடைய ஆலயத்தின் ஊழியத்துக்கு நிற்கிற பாடகராகிய ஆசாபின் குமாரரில் ஒருவன்.
23பாடகராகிய அவர்களுக்காக அன்றாடகப்படி கொடுக்கப்படும்படி ராஜாவினால் கட்டளையிடப்பட்டிருந்தது.
24யூதாவின் குமாரனாகிய சேராக்கின் புத்திரரில் மெசெசாபெயேலின் குமாரன் பெத்தகியா ஜனத்தின் காரியங்களுக்கெல்லாம் ராஜாவின் சமுகத்தில் நின்றான்.
25தங்கள் நாட்டுப்புறங்களான கிராமங்களில் இருக்கிறவர்களுக்குள்ளே யூதாவின் புத்திரரில் சிலர் கீரியாத்அர்பாவிலும் அதின் கிராமங்களிலும், தீபோனிலும் அதின் கிராமங்களிலும், எகாப்செயேலிலும் அதின் கிராமங்களிலும்,
26யெசுவாவிலும், மோலாதாகிலும், பெத்பெலேதிலும்,
27ஆத்சார்சூகாவிலும், பெயெர்செபாவிலும் அதின் கிராமங்களிலும்,
28சிக்லாகிலும், மேகோனாகிலும் அதின் கிராமங்களிலும்,
29என்ரிம்மோனிலும், சாரேயாகிலும், யர்மூத்திலும்,
30சானோவாகிலும், அதுல்லாமிலும் அவைகளின் கிராமங்களிலும், லாகீசிலும் அதின் நாட்டுப்புறங்களிலும், அசெக்காவிலும் அதின் கிராமங்களிலும், பெயெர்செபா தொடங்கி இன்னோமின் பள்ளத்தாக்குமட்டும் குடியேறினார்கள்.
31கேபாவின் ஊராராயிருந்த பென்யமீன் புத்திரர், மிக்மாஸ், ஆயா, பெத்தேல் ஊர்களிலும் அதின் கிராமங்களிலும்,
32ஆனதோத், நோப், அனனியா,
33ஆத்சோர், ராமா, கித்தாயிம்,
34ஆதீத், செபோயிம், நெபலாத்,
35லோத், ஓனோ என்னும் ஊர்களிலும், சிற்பாசாரிகளின் பள்ளத்தாக்கிலும் குடியிருந்தார்கள்.
36லேவியரிலே சில வகுப்பார் யூதாவிலும், சிலர் பென்யமீனிலும் இருந்தார்கள்.

நெகேமியா 12

1செயல்தியேலின் குமாரனாகிய செருபாபேலோடும் யெசுவாவோடும் வந்த ஆசாரியரும் லேவியரும் யாரென்றால்: செராயா, எரேமியா, எஸ்றா,
2அமரியா, மல்லூக், அத்தூஸ்,
3செகனியா, ரெகூம், மெரெமோத்,
4இத்தோ, கிநேதோ, அபியா,
5மியாமின், மாதியா, பில்கா,
6செமாயா, யோயாரிப், யெதாயா,
7சல்லு, ஆமோக், இல்க்கியா, யெதாயா என்பவர்கள்; இவர்கள் யெசுவாவின் நாட்களில், ஆசாரியருக்கும் தங்கள் சகோதரருக்கும் தலைவராயிருந்தார்கள்.
8லேவியர் யாரென்றால்: யெசுவா, பின்னூயி, கத்மியேல், செரெபியா, யூதா, மத்தனியா என்பவர்கள்; இவனும் இவன் சகோதரரும் துதிசெய்தலை விசாரித்தார்கள்.
9பக்புக்கியா, உன்னி என்கிற அவர்கள் சகோதரர் அவர்களுக்கு எதிரே காவல்காத்திருந்தார்கள்.
10யெசுவா யொயகீமைப் பெற்றான், யொயகீம் எலியாசிபைப் பெற்றான், எலியாசிப் யொயதாவைப் பெற்றான்.
11யொயதா யோனத்தானைப் பெற்றான், யோனத்தான் யதுவாவைப் பெற்றான்.
12யொயகீமின் நாட்களிலே பிதா வம்சங்களின் தலைவரான ஆசாரியர்கள் யாரென்றால்: செராயாவின் சந்ததியில் மெராயா, எரேமியாவின் சந்ததியில் அனனியா,
13எஸ்றாவின் சந்ததியில் மெசுல்லாம், அமரியாவின் சந்ததியில் யோகனான்,
14மெலிகுவின் சந்ததியில் யோனத்தான், செபனியாவின் சந்ததியில் யோசேப்பு,
15ஆரீமின் சந்ததியில் அத்னா, மெராயோதின் சந்ததியில் எல்காய்,
16இத்தோவின் சந்ததியில் சகரியா, கிநெதோனின் சந்ததியில் மெசுல்லாம்,
17அபியாவின் சந்ததியில் சிக்ரி, மினியாமீன் மொவதியா என்பவர்களின் சந்ததியில் பில்தாய்,
18பில்காவின் சந்ததியில் சம்முவா, செமாயாவின் சந்ததியில் யோனத்தான்,
19யோயரிபின் சந்ததியில் மத்தனா, யெதாயாவின் சந்ததியில் ஊசி,
20சல்லாயின் சந்ததியில் கல்லாய், ஆமோக்கின் சந்ததியில் ஏபேர்,
21இல்க்கியாவின் சந்ததியில் அசபியா, யெதாயாவின் சந்ததியில் நெதனெயேல் என்பவர்கள்.
22எலியாசிபின் நாட்களில் யொயதா, யோகனான், யதுவா என்கிற லேவியர் பிதா வம்சங்களின் தலைவராக எழுதப்பட்டார்கள்; பெர்சியனாகிய தரியுவின் ராஜ்யபாரமட்டும் இருந்த ஆசாரியர்களும் அப்படியே எழுதப்பட்டார்கள்.
23லேவி புத்திரராகிய பிதா வம்சங்களின் தலைவர் எலியாசிபின் குமாரனாகிய யோகனானின் நாட்கள் மட்டும் நாளாகமப் புஸ்தகத்தில் எழுதப்பட்டார்கள்.
24லேவியரின் தலைவராகிய அசபியாவும், செரெபியாவும், கத்மியேலின் குமாரன் யெசுவாவும், அவர்களுக்கு எதிரே நிற்கிற அவர்கள் சகோதரரும், தேவனுடைய மனுஷனாகிய தாவீதினுடைய கற்பனையின்படியே துதிக்கவும் தோத்திரிக்கவும், ஒருவருக்கொருவர் எதிர்முகமாக முறைமுறையாயிருந்தார்கள்.
25மத்தனியா, பக்புக்கியா, ஒபதியா, மெசுல்லாம், தல்மோன், அக்கூப் என்பவர்கள் வாசல்களிலிருக்கிற பொக்கிஷ அறைகளைக் காவல்காக்கிறவர்களாயிருந்தார்கள்.
26யோத்சதாக்கின் குமாரனாகிய யெசுவாவின் குமாரன் யொயகீமின் நாட்களிலும், அதிபதியாகிய நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும் இருக்கிற நாட்களிலும் அவர்கள் இருந்தார்கள்.
27எருசலேமின் அலங்கத்தைப் பிரதிஷ்டைபண்ணுகையில், துதியினாலும் பாடலினாலும், கைத்தாளம் தம்புரு சுரமண்டலம் முதலான கீதவாத்தியங்களினாலும், பிரதிஷ்டையை மகிழ்ச்சியோடே கொண்டாட எல்லா இடங்களிலும் இருக்கிற லேவியரை எருசலேமுக்கு வரும்படி தேடினார்கள்.
28அப்படியே பாடகரின் புத்திரர் எருசலேமின் சுற்றுப்புறங்களான சமபூமியிலும், நெத்தோபாத்தியரின் கிராமங்களிலும்,
29பெத்கில்காலிலும், கேபா, அஸ்மாவேத் ஊர்களின் நாட்டுப்புறங்களிலும் இருந்து வந்து கூடினார்கள்; பாடகர் எருசலேமைச் சுற்றிலும் தங்களுக்குக் கிராமங்களைக் கட்டியிருந்தார்கள்.
30ஆசாரியரும் லேவியரும் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, ஜனத்தையும் பட்டணவாசல்களையும் அலங்கத்தையும் சுத்தம்பண்ணினார்கள்.
31அப்பொழுது நான் யூதாவின் பிரபுக்களை அலங்கத்தின்மேல் ஏறப்பண்ணி, துதிசெய்து நடந்துபோகும்படி இரண்டு பெரிய கூட்டத்தாரை நிறுத்தினேன்; அவர்களில் ஒரு கூட்டத்தார் அலங்கத்தின்மேல் வலதுபுறமாகக் குப்பைமேட்டு வாசலுக்குப் போனார்கள்.
32அவர்கள் பிறகாலே ஒசாயாவும், யூதாவின் பிரபுக்களில் பாதிப்பேரும்,
33அசரியா, எஸ்றா, மெசுல்லாம்,
34யூதா, பென்யமீன், செமாயா, எரேமியா என்பவர்களும்,
35பூரிகைகளைப் பிடிக்கிற ஆசாரியரின் புத்திரரில் ஆசாப்பின் குமாரன் சக்கூரின் மகனாகிய மிகாயாவுக்குக் குமாரனான மத்தனியாவின் மகன் செமாயாவுக்குப் பிறந்த யோனத்தானின் குமாரன் சகரியாவும்,
36தேவனுடைய மனுஷனாகிய தாவீதின் கீதவாத்தியங்களை வாசிக்கிற அவன் சகோதரரான செமாயா, அசரெயேல், மிலாலாய், கிலாலாய், மகாய், நெதனெயேல், யூதா, அனானி என்பவர்களும் போனார்கள்; வேதபாரகனாகிய எஸ்றா இவர்களுக்கு முன்பாக நடந்தான்.
37அங்கேயிருந்து அவர்கள் தங்களுக்கு எதிரான ஊருணிவாசலுக்கு வந்தபோது, அலங்கத்தைப் பார்க்கிலும் உயரமான தாவீது நகரத்தின் படிகளில் ஏறி, தாவீது வீட்டின் மேலாகக் கிழக்கேயிருக்கிற தண்ணீர்வாசல் மட்டும் போனார்கள்.
38துதிசெய்கிற இரண்டாம் கூட்டத்தார் எதிரேயிருக்கிற வழியாய் நடந்து போனார்கள், அவர்கள் பிறகாலே நான் போனேன்; ஜனத்தில் பாதிப்பேர் அலங்கத்தின்மேல் சூளைகளின் கொம்மையைக் கடந்து, அகழ் மதில்மட்டும் நெடுகப்போய்,
39எப்பிராயீம்வாசலையும், பழையவாசலையும், மீன்வாசலையும், அனானெயேலின் கொம்மையையும், மேயா என்கிற கொம்மையையும் கடந்து, ஆட்டுவாசல்மட்டும் புறப்பட்டுக் காவல்வீட்டுவாசலிலே நின்றார்கள்.
40அதற்குப்பின்பு துதிசெய்கிற இரண்டு கூட்டத்தாரும் தேவனுடைய ஆலயத்திலே வந்து நின்றார்கள்; நானும் என்னோடேகூட இருக்கிற தலைவரில் பாதிப்பேரும்,
41பூரிகைகளைப் பிடிக்கிற எலியாக்கீம், மாசெயா, மினியாமீன், மிகாயா, எலியோனாய், சகரியா, அனானியா என்கிற ஆசாரியர்களும்,
42மாசெயா, செமாயா, எலெயாசார், ஊசி, யோகனான், மல்கியா, ஏலாம், ஏசேர் என்பவர்களும் நின்றோம்; பாடகரும், அவர்கள் விசாரிப்புக்காரனாகிய யெஷரகியாவும் சத்தமாய்ப் பாடினார்கள்.
43அந்நாளிலே மிகுதியான பலிகளைச் செலுத்தி, தேவன் தங்களுக்கு மகா சந்தோஷத்தை உண்டாக்கினதினால் மகிழ்ச்சியாயிருந்தார்கள்; ஸ்திரீகளும் பிள்ளைகளுங்கூடக் களிகூர்ந்தார்கள்; எருசலேமின் களிப்பு தூரத்திலே கேட்கப்பட்டது.
44அன்றையதினம் பொக்கிஷங்களையும், படைப்புகளையும், முதல் கனிகளையும், தசமபாகங்களையும் வைக்கும் அறைகளின்மேல், ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் நியாயப்பிரமாணத்தின்படியே வரவேண்டிய பட்டணங்களுடைய நிலங்களின் பங்குகளை அவைகளில் சேர்க்கும்படிக்கு, சில மனுஷர் விசாரிப்புக்காரராக வைக்கப்பட்டார்கள்; ஊழியஞ்செய்து நிற்கிற ஆசாரியர்மேலும் லேவியர்மேலும் யூதா மனிதர் சந்தோஷமாயிருந்தார்கள்.
45பாடகரும், வாசல் காவலாளரும், தாவீதும் அவன் குமாரனாகிய சாலொமோனும் கற்பித்தபடியே தங்கள் தேவனுடைய காவலையும், சுத்திகரிப்பின் காவலையும் காத்தார்கள்.
46தாவீதும் ஆசாப்பும் இருந்த பூர்வநாட்களில் பாடகரின் தலைவரும் வைக்கப்பட்டு, தேவனுக்குத் துதியும் தோத்திரங்களும் செலுத்துகிற சங்கீதங்கள் திட்டம்பண்ணப்பட்டிருந்தது.
47ஆகையால் செருபாபேலின் நாட்களிலும், நெகேமியாவின் நாட்களிலும், இஸ்ரவேலர் எல்லாரும் பாடகருக்கும் வாசல் காவலாளருக்கும் அன்றாடகத் திட்டமாகிய பங்குகளைக் கொடுத்தார்கள்; அவர்கள் லேவியருக்கென்று பிரதிஷ்டைபண்ணிக்கொடுத்தார்கள்; லேவியர் ஆரோனின் புத்திரருக்கென்று அவர்கள் பங்கைப் பிரதிஷ்டைபண்ணிக்கொடுத்தார்கள்.

நெகேமியா 13

1அன்றையதினம் ஜனங்கள் கேட்க, மோசேயின் புஸ்தகத்தை வாசித்தார்கள்; அதிலே அம்மோனியரும் மோவாபியரும், இஸ்ரவேல் புத்திரருக்கு அப்பமும் தண்ணீரும் கொடுக்க எதிர்கொண்டுவராமல், அவர்களைச் சபிக்க அவர்களுக்கு விரோதமாய்ப் பிலேயாமைக் கூலிபொருந்திக்கொண்டபடியினால்,
2அவர்கள் என்றைக்கும், அந்தச் சாபத்தை ஆசீர்வாதமாகத் திருப்பின எங்கள் தேவனுடைய சபைக்குட்படலாகாது என்று எழுதியிருக்கிறதாகக் காணப்பட்டது.
3ஆகையால் அவர்கள் அந்தக் கட்டளையைக் கேட்டபோது, பல ஜாதியான ஜனங்களையெல்லாம் இஸ்ரவேலைவிட்டுப் பிரித்துவிட்டார்கள்.
4இதற்குமுன்னே எங்கள் தேவனுடைய ஆலயத்தின் அறைகளை விசாரிக்க வைக்கப்பட்ட ஆசாரியனாகிய எலியாசிப் தொபியாவோடே சம்பந்தங்கலந்தவனாயிருந்து,
5முற்காலத்தில் காணிக்கைகளும், சாம்பிராணியும், பணிமுட்டுகளும், லேவியருக்கும் பாடகருக்கும் வாசல் காவலாளருக்கும் கட்டளைபண்ணப்பட்ட தானியம் திராட்சரசம் எண்ணெய் என்பவைகளிலே தசமபாகமும், ஆசாரியரைச் சேருகிற படைப்பான காணிக்கைகளும் வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஒரு பெரிய அறையை அவனுக்கு ஆயத்தம்பண்ணியிருந்தான்.
6இதெல்லாம் நடக்கும்போது நான் எருசலேமில் இல்லை; பாபிலோன் ராஜாவாகிய அர்தசஷ்டாவின் முப்பத்திரண்டாம் வருஷத்திலே நான் ராஜாவினிடத்திற்குபோய், சில நாளுக்குப்பின்பு திரும்ப ராஜாவினிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு,
7எருசலேமுக்கு வந்தேன்; அப்பொழுது எலியாசிப் தொபியாவுக்கு தேவனுடைய ஆலயத்துப் பிராகாரங்களில் ஒரு அறையை ஆயத்தம்பண்ணினதினால், செய்த பொல்லாப்பை அறிந்துகொண்டேன்.
8அதினால் நான் மிகவும் மனமடிவாகி, தொபியாவின் வீட்டுத் தட்டுமுட்டுகளையெல்லாம் அந்த அறையிலிருந்து வெளியே எறிந்துவிட்டேன்.
9பின்பு நான் அறைவீடுகளைச் சுத்திகரிக்கச்சொல்லி, தேவனுடைய ஆலயப்பணிமுட்டுகளையும் காணிக்கைகளையும் சாம்பிராணியையும் அங்கே திரும்பக் கொண்டுவந்து வைத்தேன்.
10பின்னையும் லேவியருக்கு அவர்கள் பங்குகள் கொடுக்கப்படவில்லையென்பதையும், பணிவிடை செய்கிற லேவியரும் பாடகரும் அவரவர் தங்கள் வெளிநிலங்களுக்கு ஓடிப்போனார்கள் என்பதையும் நான் அறிந்துகொண்டேன்.
11அப்பொழுது நான் தலைமையானவர்களோடே வழக்காடி, தேவனுடைய ஆலயம் கைவிடப்பட்டுப்போவானேன் என்று சொல்லி, அவர்களைச் சேர்த்து, அவரவர் நிலையில் அவர்களை வைத்தேன்.
12அப்பொழுது யூதர் எல்லாரும் தானியம் திராட்சரசம் எண்ணெய் என்பவைகளில் தசமபாகத்தைப் பொக்கிஷ அறைகளில் கொண்டுவந்தார்கள்.
13அப்பொழுது நான் ஆசாரியனாகிய செலேமியாவையும், வேதபாரகனாகிய சாதோக்கையும், லேவியரில் பெதாயாவையும், இவர்களுக்குக் கைத்துணையாக மத்தனியாவின் குமாரன் சக்கூரின் மகனாகிய ஆனானையும் பொக்கிஷ அறைகளின்மேல் விசாரிப்புக்காரராக வைத்தேன்; அவர்கள் உண்மையுள்ளவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்; ஆகையால் தங்கள் சகோதரருக்குப் பங்கிடுகிற வேலை அவர்களுக்கு ஒப்புவிக்கப்பட்டது.
14என் தேவனே, நான் என் தேவனுடைய ஆலயத்துக்காகவும் அதின் முறைமைகளுக்காகவும் செய்த நற்கிரியைகளைக் குலைத்துப்போடாமல், இந்தக் காரியத்திலே என்னை நினைத்தருளும்.
15அந்த நாட்களில் நான் யூதாவிலே ஓய்வுநாளில் சிலர் ஆலைகளை மிதிக்கிறதையும், சிலர் தானியப் பொதிகளைக் கழுதைகள்மேல் ஏற்றிக்கொண்டு வருகிறதையும், திராட்சரசம், திராட்சப்பழம், அத்திப்பழம் முதலானவைகளின் பற்பல சுமைகளை ஓய்வுநாளிலே எருசலேமுக்குக் கொண்டுவருகிறதையும் கண்டு, அவர்கள் தின்பண்டம் விற்கிற நாளைப்பற்றி அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டேன்.
16மீனையும், சகலவித சரக்குகளையும் கொண்டுவந்து, ஓய்வுநாளிலே யூதா புத்திரருக்கும் எருசலேமில் இருக்கிறவர்களுக்கும் விற்கிற சில தீரியரும் உள்ளே குடியிருந்தார்கள்.
17ஆகையால் நான் யூதாவின் பெரியவர்களைக் கடிந்துகொண்டு: நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிற இந்தப் பொல்லாத செய்கையென்ன?
18உங்கள் பிதாக்கள் இப்படிச் செய்ததினாலல்லவா, நமது தேவன் நம்மேலும் இந்த நகரத்தின்மேலும் இந்தத் தீங்கையெல்லாம் வரப்பண்ணினார்; நீங்களோவென்றால் ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறதினால், இஸ்ரவேலின் மேலிருக்கிற உக்கிரத்தை அதிகரிக்கப்பண்ணுகிறீர்கள் என்று அவர்களுக்குச் சொன்னேன்.
19ஆகையால் ஓய்வுநாளுக்கு முன்னே எருசலேமின் பட்டணவாசலில், மாலைமயங்கும்போது, கதவுகளைப் பூட்டவும், ஓய்வுநாள் முடியுமட்டும் அவைகளைத் திறவாதிருக்கவும் வேண்டுமென்று கட்டளையிட்டு, ஓய்வுநாளிலே ஒரு சுமையும் உள்ளே வராதபடிக்கு வாசலண்டையிலே என் வேலைக்காரரில் சிலரை நிறுத்தினேன்.
20அதினால் வர்த்தகரும், சகலவித சரக்குகளை விற்கிறவர்களும், இரண்டொருதரம் எருசலேமுக்குப் புறம்பே இராத்தங்கினார்கள்.
21அப்பொழுது நான் அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டு, நீங்கள் அலங்கத்தண்டையிலே இராத்தங்குகிறது என்ன? நீங்கள் மறுபடியும் இப்படிச் செய்தால், உங்கள்மேல் கைபோடுவேன் என்று அவர்களோடே சொன்னேன்; அதுமுதல் அவர்கள் ஓய்வுநாளில் வராதிருந்தார்கள்.
22ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கும்படிக்கு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு வாசல்களைக் காக்க வாருங்கள் என்று லேவியருக்கும் சொன்னேன். என் தேவனே, இதைக்குறித்து நீர் என்னை நினைத்தருளி, உம்முடைய மிகுந்த கிருபையின்படி எனக்கு இரங்குவீராக.
23அஸ்தோத், அம்மோன், மோவாப் ஜாதிகளான ஸ்திரீகளைச் சேர்த்துக் கொண்ட சில யூதரையும் அந்த நாட்களில் கண்டேன்.
24அவர்கள் பிள்ளைகள் பேசினபேச்சில் பாதி அஸ்தோத் பாஷையாயிருந்தது; இவர்கள் அந்தந்த ஜாதிகளின் பாஷையைத்தவிர, யூதபாஷையைத் திட்டமாகப் பேச அறியாதிருந்தார்கள்.
25அவர்களையும் நான் கடிந்துகொண்டு அவர்கள்மேல் வரும் சாபத்தைக் கூறி, அவர்களில் சிலரை அடித்து, மயிரைப் பிய்த்து: நீங்கள் உங்கள் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளில் ஒருவரையும் உங்கள் குமாரருக்காகிலும் உங்களுக்காகிலும் கொள்ளாமலும் இருக்கவேண்டுமென்று அவர்களை தேவன்மேல் ஆணையிடப்பண்ணி, நான் அவர்களை நோக்கி:
26இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் இதினாலே பாவஞ்செய்தானல்லவா? அவனைப்போன்ற ராஜா அநேகம் ஜாதிகளுக்குள்ளே உண்டாயிருந்ததில்லை; அவன் தன் தேவனால் சிநேகிக்கப்பட்டவனாயிருந்தான்; தேவன் அவனை இஸ்ரவேலனைத்தின் மேலும் ராஜாவாக வைத்தார்; அப்படிப்பட்டவனையும் மறுஜாதியான ஸ்திரீகள் பாவஞ்செய்யப்பண்ணினார்களே.
27நீங்கள் மறுஜாதியான ஸ்திரீகளைச் சேர்த்துக்கொள்ளுகிறதினால், நம்முடைய தேவனுக்குத் துரோகிகளாகி, இந்தப் பெரிய பொல்லாப்பையெல்லாம் செய்யும்படி, உங்களுக்கு இடங்கொடுப்போமோ என்றேன்.
28யொயதாவின் புத்திரரிலே பிரதான ஆசாரியனாகிய எலியாசிபினுடைய குமாரன் ஒருவன் ஓரோனியனான சன்பல்லாத்துக்கு மருமகனானான்; ஆகையால் அவனை என்னைவிட்டுத் துரத்தினேன்.
29என் தேவனே, அவர்கள் ஆசாரிய ஊழியத்தையும், ஆசாரிய ஊழியத்துக்கும் லேவியருக்கும் இருக்கிற உடன்படிக்கையையும் தீட்டுப்படுத்தினார்கள் என்று அவர்களை நினைத்துக்கொள்ளும்.
30இப்படியே நான் மறுஜாதியாரையெல்லாம் நீக்கி, ஆசாரியரையும் லேவியரையும் சுத்திகரித்து, அவரவரை அவர்கள் வேலையின் முறைகளில் நிறுத்தி,
31குறிக்கப்பட்ட காலங்களிலே செலுத்தப்படவேண்டிய விறகு காணிக்கையையும், முதற்பலன்களையுங்குறித்துத் திட்டம்பண்ணினேன். என் தேவனே எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்.

சங்கீதம் 126

(ஆரோகண சங்கீதம்)
1சீயோனின் சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பும்போது, சொப்பனம் காண்கிறவர்கள்போல் இருந்தோம்.
2அப்பொழுது நம்முடைய வாய் நகைப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது; அப்பொழுது: கர்த்தர் இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
3 கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம்.
4 கர்த்தாவே, தெற்கத்தி வெள்ளங்களைத் திருப்புவதுபோல, எங்கள் சிறையிருப்பைத் திருப்பும்.
5கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.
6அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *