Scripture Portion: Exodus 1-3

யாத்திராகமம் 1

1எகிப்துக்குப் போன இஸ்ரவேலுடைய குமாரரின் நாமங்களாவன: ரூபன், சிமியோன், லேவி, யூதா,
2இசக்கார், செபுலோன், பென்யமீன்,
3தாண், நப்தலி, காத், ஆசேர் என்பவைகளே.
4இவர்கள் யாக்கோபுடனே தங்கள் தங்கள் குடும்பத்தோடுங்கூடப் போனார்கள்.
5யோசேப்போ அதற்கு முன்னமே எகிப்தில் போயிருந்தான். யாக்கோபின் கர்ப்பப்பிறப்பாகிய யாவரும் எழுபது பேர்.
6யோசேப்பும் அவனுடைய சகோதரர் யாவரும், அந்தத் தலைமுறையார் எல்லாரும் மரணமடைந்தார்கள்.
7இஸ்ரவேல் புத்திரர் மிகுதியும் பலுகி, ஏராளமாய்ப் பெருகிப் பலத்திருந்தார்கள்; தேசம் அவர்களால் நிறைந்தது.
8யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்.
9அவன் தன் ஜனங்களை நோக்கி: இதோ, இஸ்ரவேல் புத்திரராகிய ஜனங்கள் நம்மிலும் ஏராளமானவர்களும், பலத்தவர்களுமாய் இருக்கிறார்கள்.
10அவர்கள் பெருகாதபடிக்கும், ஒரு யுத்தம் உண்டானால், அவர்களும் நம்முடைய பகைஞரோடே கூடி, நமக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, தேசத்தைவிட்டுப் புறப்பட்டுப் போகாதபடிக்கும், நாம் அவர்களைக்குறித்து ஒரு உபாயம் பண்ணவேண்டும் என்றான்.
11அப்படியே அவர்களைச் சுமைசுமக்கிற வேலையினால் ஒடுக்கும்படிக்கு, அவர்கள்மேல் விசாரணைக்காரரை வைத்தார்கள்; அப்பொழுது அவர்கள் பார்வோனுக்காகப் பித்தோம், ராமசேஸ் என்னும் பண்டசாலைப் பட்டணங்களைக் கட்டினார்கள்.
12ஆனாலும் அவர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாய் அவர்கள் பலுகிப் பெருகினார்கள். ஆகையால் அவர்கள் இஸ்ரவேல் புத்திரரைக்குறித்து எரிச்சல் அடைந்தார்கள்.
13எகிப்தியர் இஸ்ரவேல் புத்திரரைக் கொடுமையாய் வேலைவாங்கினார்கள்.
14சாந்தும் செங்கலுமாகிய இவைகளைச் செய்யும் வேலையினாலும், வயலில் செய்யும் சகலவித வேலையினாலும், அவர்களுக்கு அவர்கள் ஜீவனையும் கசப்பாக்கினார்கள்; அவர்களைக்கொண்டு செய்வித்த மற்ற எல்லா வேலைகளிலும், அவர்களைக் கொடுமையாய் நடத்தினார்கள்.
15அதுவுமன்றி, எகிப்தின் ராஜா, சிப்பிராள் பூவாள் என்னும் பேருடைய எபிரெய மருத்துவச்சிகளோடே பேசி:
16நீங்கள் எபிரெய ஸ்திரீகளுக்கு மருத்துவம் செய்யும்போது, அவர்கள் மணையின்மேல் உட்கார்ந்திருக்கையில் பார்த்து, ஆண்பிள்ளையானால் கொன்றுபோடுங்கள், பெண்பிள்ளையானால் உயிரோடிருக்கட்டும் என்றான்.
17மருத்துவச்சிகளோ, தேவனுக்குப் பயந்ததினால், எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்யாமல், ஆண்பிள்ளைகளையும் உயிரோடே காப்பாற்றினார்கள்,
18அதினால் எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளை அழைப்பித்து: நீங்கள் ஆண்பிள்ளைகளை உயிரோடே காப்பாற்றுகிற காரியம் என்ன என்று கேட்டான்.
19அதற்கு மருத்துவச்சிகள் பார்வோனை நோக்கி: எபிரெய ஸ்திரீகள் எகிப்திய ஸ்திரீகளைப்போல் அல்ல, அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள்; மருத்துவச்சி அவர்களிடத்துக்குப் போகுமுன்னமே அவர்கள் பிரசவித்தாகும் என்றார்கள்.
20இதினிமித்தம் தேவன் மருத்துவச்சிகளுக்கு நன்மைசெய்தார். ஜனங்கள் பெருகி மிகுதியும் பலத்துப்போனார்கள்.
21மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால், அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார்.
22அப்பொழுது பார்வோன், பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் நதியிலே போட்டுவிடவும், பெண்பிள்ளைகளை யெல்லாம் உயிரோடே வைக்கவும் தன் ஜனங்கள் எல்லாருக்கும் கட்டளையிட்டான்.

யாத்திராகமம் 2

1லேவியின் குடும்பத்தாரில் ஒருவன் லேவியின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணினான்.
2அந்த ஸ்திரீ கர்ப்பவதியாகி, ஒரு ஆண்பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளது என்று கண்டு, அதை மூன்று மாதம் ஒளித்துவைத்தாள்.
3அவள் அதை அப்புறம் ஒளித்துவைக்கக்கூடாமல், ஒரு நாணற்பெட்டியை எடுத்து, அதற்குப் பிசினும் கீலும் பூசி, அதிலே பிள்ளையை வளர்த்தி, நதியோரமாய் நாணலுக்குள்ளே வைத்தாள்.
4அதற்கு என்ன சம்பவிக்கும் என்பதை அறியும்படி அதின் தமக்கை தூரத்திலே நின்றுகொண்டிருந்தாள்.
5அப்பொழுது பார்வோனுடைய குமாரத்தி நதியில் ஸ்நானம்பண்ண வந்தாள்; அவளுடைய தாதிகள் நதியோரத்தில் உலாவினார்கள்; அவள் நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியைக் கண்டு, தன் தாதியை அனுப்பி அதைக் கொண்டுவரும்படி செய்தாள்.
6அதைத் திறந்தபோது பிள்ளையைக்கண்டாள்; பிள்ளை அழுதது; அவள் அதின்மேல் இரக்கமுற்று, இது எபிரெயர் பிள்ளைகளில் ஒன்று என்றாள்.
7அப்பொழுது அதின் தமக்கை பார்வோனின் குமாரத்தியை நோக்கி: உமக்கு இந்தப் பிள்ளையை வளர்க்கும்படி எபிரெய ஸ்திரீகளில் பால்கொடுக்கிற ஒருத்தியை நான் போய் உம்மிடத்தில் அழைத்துக்கொண்டு வரட்டுமா என்றாள்.
8அதற்குப் பார்வோனுடைய குமாரத்தி: அழைத்துக்கொண்டுவா என்றாள். இந்தப் பெண் போய்ப் பிள்ளையின் தாயையே அழைத்துக்கொண்டு வந்தாள்.
9பார்வோனுடைய குமாரத்தி அவளை நோக்கி: நீ இந்தப் பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை எனக்கு வளர்த்திடு, நான் உனக்குச் சம்பளம் கொடுக்கிறேன் என்றாள். அந்த ஸ்திரீ பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை வளர்த்தாள்.
10பிள்ளை பெரிதானபோது, அவள் அதைப் பார்வோனுடைய குமாரத்தியினிடத்தில் கொண்டுபோய் விட்டாள். அவளுக்கு அவன் குமாரனானான். அவள்: அவனை ஜலத்தினின்று எடுத்தேன் என்று சொல்லி, அவனுக்கு மோசே என்று பேரிட்டாள்.
11மோசே பெரியவனான காலத்தில், அவன் தன் சகோதரரிடத்தில் போய், அவர்கள் சுமைசுமக்கிறதைப் பார்த்து, தன் சகோதரராகிய எபிரெயரில் ஒருவனை ஒரு எகிப்தியன் அடிக்கிறதைக் கண்டு,
12அங்கும் இங்கும் பார்த்து, ஒருவரும் இல்லை என்று அறிந்து, எகிப்தியனை வெட்டி, அவனை மணலிலே புதைத்துப் போட்டான்.
13அவன் மறுநாளிலும் வெளியே போனபோது, எபிரெய மனுஷர் இருவர் சண்டை பண்ணிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவன் அநியாயஞ் செய்கிறவனை நோக்கி: நீ உன் தோழனை அடிக்கிறது என்ன என்று கேட்டான்.
14அதற்கு அவன்: எங்கள்மேல் உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார்? நீ எகிப்தியனைக் கொன்றுபோட்டதுபோல, என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ என்றான். அப்பொழுது மோசே காரியம் நிச்சயமாக வெளிப்பட்டது என்று பயந்தான்.
15பார்வோன் அந்தக் காரியத்தைக் கேள்விப்பட்டபோது, மோசேயைக் கொலைசெய்ய வகைதேடினான். மோசே பார்வோனிடத்தினின்று தப்பியோடி, மீதியான் தேசத்தில் போய்த் தங்கி, ஒரு துரவண்டையிலே உட்கார்ந்திருந்தான்.
16மீதியான் தேசத்து ஆசாரியனுக்கு ஏழு குமாரத்திகள் இருந்தார்கள்; அவர்கள் தங்கள் தகப்பனுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டும்படிக்கு அங்கே வந்து, தண்ணீர் மொண்டு, தொட்டிகளை நிரப்பினார்கள்.
17அப்பொழுது மேய்ப்பர்கள் வந்து, அவர்களைத் துரத்தினார்கள்; மோசே எழுந்திருந்து, அவர்களுக்குத் துணை நின்று, அவர்களுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான்.
18அவர்கள் தங்கள் தகப்பனாகிய ரெகுவேலிடத்தில் வந்தபோது, அவன்: நீங்கள் இன்று இத்தனை சீக்கிரமாய் வந்தது என்ன என்று கேட்டான்.
19அதற்கு அவர்கள்: எகிப்தியன் ஒருவன் மேய்ப்பரின் கைகளுக்கு எங்களைத் தப்புவித்து, எங்களுக்குத் தண்ணீர் மொண்டு கொடுத்து, ஆடுகளுக்கும் தண்ணீர் காட்டினான் என்றார்கள்.
20அப்பொழுது அவன் தன் குமாரத்திகளைப் பார்த்து, அவன் எங்கே? அந்த மனிதனை நீங்கள் விட்டுவந்தது என்ன? போஜனம் பண்ணும்படிக்கு அவனை அழைத்துக் கொண்டுவாருங்கள் என்றான்.
21மோசே அந்த மனிதனிடத்தில் தங்கியிருக்கச் சம்மதித்தான். அவன் சிப்போராள் என்னும் தன் குமாரத்தியை மோசேக்குக் கொடுத்தான்.
22அவள் ஒரு குமாரனைப் பெற்றாள். நான் அந்நிய தேசத்தில் பரதேசியாய் இருக்கிறேன் என்று சொல்லி, அவனுக்கு கெர்சோம் என்று பேரிட்டான்.
23சிலகாலம் சென்றபின், எகிப்தின் ராஜா மரித்தான். இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டினது.
24தேவன் அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்.
25தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கினார்; தேவன் அவர்களை நினைத்தருளினார்.

யாத்திராகமம் 3

1மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்துவந்தான். அவன் ஆடுகளை வனாந்தரத்தின் பின்புறத்திலே ஓட்டி, தேவபர்வதமாகிய ஓரேப் மட்டும் வந்தான்.
2அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜூவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜூவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது.
3அப்பொழுது மோசே: இந்த முட்செடி வெந்துபோகாதிருக்கிறது என்ன, நான் கிட்டப்போய் இந்த அற்புதக்காட்சியைப் பார்ப்பேன் என்றான்.
4அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான்.
5அப்பொழுது அவர்: இங்கே கிட்டிச்சேராயாக; உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார்.
6பின்னும் அவர்: நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்றார். மோசே தேவனை நோக்கிப்பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான்.
7அப்பொழுது கர்த்தர்: எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன்.
8அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி, கானானியரும் ஏத்தியரும் எமோரியரும் பெரிசியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடமாகிய பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன்.
9இப்பொழுதும் இஸ்ரவேல் புத்திரரின் கூக்குரல் என் சந்நிதியில் வந்து எட்டினது; எகிப்தியர் அவர்களை ஒடுக்குகிற ஒடுக்குதலையும் கண்டேன்.
10நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா என்றார்.
11அப்பொழுது மோசே தேவனை நோக்கி: பார்வோனிடத்துக்குப் போகவும், இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்துவரவும், நான் எம்மாத்திரம் என்றான்.
12அதற்கு அவர்: நான் உன்னோடே இருப்பேன்; நீ ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்துவந்தபின், நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்; நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம் என்றார்.
13அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான்.
14அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.
15மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்.
16நீ போய், இஸ்ரவேலின் மூப்பரைக்கூட்டி, அவர்களிடத்தில்: ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் எனக்குத் தரிசனமாகி, உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, எகிப்தில் உங்களுக்குச் செய்யப்பட்டதைக் கண்டேன் என்றும்,
17நான் உங்களை எகிப்தின் சிறுமையிலிருந்து நீக்கி, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய கானானியர் ஏத்தியர் எமோரியர் பெரிசியர் ஏவியர் எபூசியருடைய தேசத்துக்குக் கொண்டுபோவேன் என்றும் சொன்னேன் என்றார் என்று சொல்லு.
18அவர்கள் உன் வாக்குக்குச் செவிகொடுப்பார்கள்; அப்பொழுது நீயும் இஸ்ரவேலின் மூப்பரும் எகிப்தின் ராஜாவினிடத்தில் போய்: எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் எங்களைச் சந்தித்தார்; இப்பொழுதும் நாங்கள் வனாந்தரத்தில் மூன்று நாள் பிரயாணம்போய், எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படி எங்களைப் போகவிடவேண்டுமென்று சொல்லுங்கள்.
19ஆனாலும், எகிப்தின் ராஜா கைவல்லமை கண்டாலொழிய, உங்களைப் போகவிடான் என்று நான் அறிவேன்.
20ஆகையால், நான் என் கையை நீட்டி, எகிப்தின் நடுவிலே நான் செய்யும் சகலவித அற்புதங்களாலும் அதை வாதிப்பேன்; அதற்குப்பின் அவன் உங்களைப் போகவிடுவான்.
21அப்பொழுது இந்த ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவுகிடைக்கப் பண்ணுவேன்; நீங்கள் போகும்போது வெறுமையாய்ப் போவதில்லை.
22ஒவ்வொரு ஸ்திரீயும், தன்தன் அயலகத்தாளிடத்திலும் தன்தன் வீட்டில் தங்குகிறவளிடத்திலும், வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் வஸ்திரங்களையும் கேட்டு வாங்குவாள்; அவைகளை உங்கள் குமாரருக்கும் உங்கள் குமாரத்திகளுக்கும் தரிப்பித்து, எகிப்தியரைக் கொள்ளையிடுவீர்கள் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *