Scripture Portion: Luke 17:11-37, Luke 18: 1-14

லூக்கா 17: (11-37)

11பின்பு அவர் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ணுகையில், அவர் சமாரியா கலிலேயா என்னும் நாடுகளின் வழியாக நடந்துபோனார்.
12அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தபோது, குஷ்டரோகமுள்ள மனுஷர் பத்துப்பேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்று:
13இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள்.
14அவர்களை அவர் பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள்.
15அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி,
16அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்; அவன் சமாரியனாயிருந்தான்.
17அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே?
18தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி,
19அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.
20தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது.
21இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்.
22பின்பு அவர் சீஷர்களை நோக்கி: மனுஷகுமாரனுடைய நாட்களிலொன்றைக் காணவேண்டுமென்று நீங்கள் ஆசைப்படுங்காலம் வரும்; ஆனாலும் அதைக் காணமாட்டீர்கள்.
23இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும், சிலர் உங்களிடத்தில் சொல்லுவார்கள்; நீங்களோ போகாமலும் பின்தொடராமலும் இருங்கள்.
24மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார்.
25அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுபட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாயிருக்கிறது.
26நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்.
27நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம் வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது.
28லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள்.
29லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப்போட்டது.
30மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.
31அந்த நாளிலே வீட்டின்மேலிருப்பவன் வீட்டிலுள்ள தன் பண்டங்களை எடுத்துக்கொண்டுபோக இறங்காமல் இருக்கக்கடவன்; அப்படியே வயலிலிருக்கிறவன் பின்னிட்டுத் திரும்பாமலும் இருக்கக்கடவன்.
32லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்.
33தன் ஜீவனை இரட்சிக்க வகைதேடுகிறவன் அதை இழந்து போவான்; இழந்துபோகிறவன் அதை உயிர்ப்பித்துக் கொள்ளுவான்.
34அந்த இராத்திரியில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான்.
35திரிகை திரிக்கிற இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், மற்றவள் கைவிடப்படுவாள்.
36வயலிலிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
37அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: எங்கே, ஆண்டவரே, என்றார்கள். அதற்கு அவர்: பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் என்றார்.

லூக்கா 18 (1-14)

1சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக்குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
2ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான்.
3அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில் போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம்பண்ணினாள்.
4வெகுநாள்வரைக்கும் அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன்: நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனுஷரை மதியாமலும் இருந்தும்,
5இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் என்றார்.
6பின்னும் கர்த்தர் அவர்களை நோக்கி: அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப்பாருங்கள்.
7அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?
8சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.
9அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
10இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.
11பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
12வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.
13ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.
14அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *