Scripture Portion: Exodus 16-18

யாத்திராகமம் 16

1இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் ஏலிமைவிட்டுப் பிரயாணம் பண்ணி, எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே, ஏலிமுக்கும் சீனாய்க்கும் நடுவே இருக்கிற சீன்வனாந்தரத்தில் சேர்ந்தார்கள்.
2அந்த வனாந்தரத்திலே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து:
3நாங்கள் இறைச்சிப் பாத்திரங்களண்டையிலே உட்கார்ந்து அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்ட எகிப்து தேசத்திலே, கர்த்தரின் கையால் செத்துப்போனோமானால் தாவிளை; இந்தக் கூட்டம் முழுவதையும் பட்டினியினால் கொல்லும்படி நீங்கள் எங்களைப் புறப்படப்பண்ணி, இந்த வனாந்தரத்திலே அழைத்துவந்தீர்களே என்று அவர்களிடத்தில் சொன்னார்கள்.
4அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வருஷிக்கப்பண்ணுவேன்; ஜனங்கள் போய், ஒவ்வொரு நாளுக்கு வேண்டியதை ஒவ்வொரு நாளிலும் சேர்த்துக்கொள்ளவேண்டும்; அதினால் அவர்கள் என் நியாயப்பிரமாணத்தின்படி நடப்பார்களோ நடக்கமாட்டார்களோ என்று அவர்களைச் சோதிப்பேன்.
5ஆறாம் நாளிலோ, அவர்கள் நாள்தோறும் சேர்க்கிறதைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்ச் சேர்த்து, அதை ஆயத்தம்பண்ணி வைக்கக்கடவர்கள் என்றார்.
6அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரையும் நோக்கி: கர்த்தர் உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினவர் என்பதைச் சாயங்காலத்தில் அறிவீர்கள்;
7விடியற்காலத்தில் கர்த்தருடைய மகிமையையும் காண்பீர்கள்; கர்த்தருக்கு விரோதமான உங்கள் முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நீங்கள் எங்களுக்கு விரோதமாய் முறுமுறுக்கிறதற்கு நாங்கள் எம்மாத்திரம் என்றார்கள்.
8பின்னும் மோசே: சாயங்காலத்தில் நீங்கள் புசிக்கிறதற்குக் கர்த்தர் உங்களுக்கு இறைச்சியையும், விடியற்காலத்தில் நீங்கள் திருப்தியடைகிறதற்கு அப்பத்தையும் கொடுக்கையில் இது விளங்கும்; கர்த்தருக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுத்த உங்கள் முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நாங்கள் எம்மாத்திரம்? உங்கள் முறுமுறுப்புகள் எங்களுக்கு அல்ல, கர்த்தருக்கே விரோதமாய் இருக்கிறது என்றான்.
9அப்பொழுது மோசே ஆரோனைப் பார்த்து: நீ இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரையும் நோக்கி: கர்த்தருடைய சந்நிதியில் சேருங்கள், அவர் உங்கள் முறுமுறுப்புகளைக் கேட்டார் என்று சொல் என்றான்.
10ஆரோன் இஸ்ரவேல் புத்திரராகிய சபையாருக்கெல்லாம் இதைச் சொல்லுகிறபோது, அவர்கள் வனாந்தரதிசையாகத் திரும்பிப்பார்த்தார்கள்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை மேகத்திலே காணப்பட்டது.
11கர்த்தர் மோசேயை நோக்கி:
12இஸ்ரவேல் புத்திரரின் முறுமுறுப்புகளைக் கேட்டிருக்கிறேன்; நீ அவர்களோடே பேசி, நீங்கள் சாயங்காலத்தில் இறைச்சியைப் புசித்து, விடியற்காலத்தில் அப்பத்தால் திருப்தியாகி, நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்பதை அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.
13சாயங்காலத்தில் காடைகள் வந்து விழுந்து பாளயத்தை மூடிக்கொண்டது. விடியற்காலத்தில் பாளயத்தைச் சுற்றி பனி பெய்திருந்தது.
14பெய்திருந்த பனி நீங்கினபின், இதோ, வனாந்தரத்தின்மீதெங்கும் உருட்சியான ஒரு சிறிய வஸ்து உறைந்த பனிக்கட்டிப் பொடியத்தனையாய்த் தரையின்மேல் கிடந்தது.
15இஸ்ரவேல் புத்திரர் அதைக் கண்டு, அது இன்னது என்று அறியாதிருந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, இது என்ன என்றார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: இது கர்த்தர் உங்களுக்குப் புசிக்கக்கொடுத்த அப்பம்.
16கர்த்தர் கட்டளையிடுகிறது என்னவென்றால், அவரவர் புசிக்கும் அளவுக்குத் தக்கதாக அதில் எடுத்துச் சேர்க்கக்கடவீர்கள்; உங்களிலுள்ள ஆத்துமாக்களின் இலக்கத்தின்படி, அவனவன் தன் தன் கூடாரத்தில் இருக்கிறவர்களுக்காக தலைக்கு ஒரு ஓமர் அளவு எடுத்துக்கொள்ளக்கடவன் என்றான்.
17இஸ்ரவேல் புத்திரர் அப்படியே செய்து, சிலர் மிகுதியாயும் சிலர் கொஞ்சமாயும் சேர்த்தார்கள்.
18பின்பு, அதை ஓமரால் அளந்தார்கள்: மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு மீதியானதும் இல்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதும் இல்லை; அவரவர் தாங்கள் புசிக்கும் அளவுக்குத்தக்கதாகச் சேர்த்தார்கள்.
19மோசே அவர்களை நோக்கி: ஒருவனும் விடியற்காலம்மட்டும் அதில் ஒன்றும் வைக்கக்கூடாது என்று அவர்களுக்குச் சொல்லியும்;
20மோசேயின் சொல் கேளாமல், சிலர் அதில் விடியற்காலம்மட்டும் கொஞ்சம் மீதியாய் வைத்தார்கள்; அது பூச்சி பிடித்து நாற்றமெடுத்தது. அவர்கள்மேல் மோசே கோபங்கொண்டான்.
21அதை விடியற்காலந்தோறும் அவரவர் புசிக்கும் அளவுக்குத்தக்கதாகச் சேர்த்தார்கள், வெயில் ஏறஏற அது உருகிப்போகும்.
22ஆறாம் நாளில் தலைக்கு இரண்டு ஓமர் வீதமாக இரண்டத்தனையாய் ஆகாரம் சேர்த்தார்கள்; அப்பொழுது சபையின் தலைவர் எல்லாரும் வந்து, அதை மோசேக்கு அறிவித்தார்கள்.
23அவன் அவர்களை நோக்கி: கர்த்தர் சொன்னது இதுதான்; நாளைக்குக் கர்த்தருக்குரிய பரிசுத்த ஓய்வுநாளாகிய ஓய்வு; நீங்கள் சுடவேண்டியதைச் சுட்டு, வேவிக்கவேண்டியதை வேவித்து, மீதியாயிருக்கிறதையெல்லாம் நாளைமட்டும் உங்களுக்காக வைத்துவையுங்கள் என்றான்.
24மோசே கட்டளையிட்டபடியே, அதை மறுநாள்வரைக்கும் வைத்துவைத்தார்கள்; அப்பொழுது அது நாறவும் இல்லை, அதிலே பூச்சிபிடிக்கவும் இல்லை.
25அப்பொழுது மோசே; அதை இன்றைக்குப் புசியுங்கள்; இன்று கர்த்தருக்குரிய ஓய்வுநாள்; இன்று நீங்கள் அதை வெளியிலே காணமாட்டீர்கள்.
26ஆறுநாளும் அதைச் சேர்ப்பீர்களாக; ஏழாம்நாள் ஓய்வுநாளாயிருக்கிறது; அதிலே அது உண்டாயிராது என்றான்.
27ஏழாம்நாளில் ஜனங்களில் சிலர் அதைச் சேர்க்கப் புறப்பட்டார்கள்; அவர்கள் அதைக் காணவில்லை.
28அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: என் கட்டளைகளையும் என் பிரமாணங்களையும் கைக்கொள்ள எந்தமட்டும் மனதில்லாதிருப்பீர்கள்?
29பாருங்கள், கர்த்தர் உங்களுக்கு ஓய்வுநாளை அருளினபடியால், அவர் உங்களுக்கு ஆறாம்நாளில் இரண்டு நாளுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கிறார்; ஏழாம்நாளில் உங்களில் ஒருவனும் தன்தன் ஸ்தானத்திலிருந்து புறப்படாமல், அவனவன் தன்தன் ஸ்தானத்திலே இருக்கவேண்டும் என்றார்.
30அப்படியே ஜனங்கள் ஏழாம்நாளில் ஓய்ந்திருந்தார்கள்.
31இஸ்ரவேல் வம்சத்தார் அதற்கு மன்னா என்று பேரிட்டார்கள்; அது கொத்துமல்லி அளவாயும் வெண்மைநிறமாயும் இருந்தது, அதின் ருசி தேனிட்ட பணிகாரத்திற்கு ஒப்பாயிருந்தது.
32அப்பொழுது மோசே: கர்த்தர் கட்டளையிட்ட காரியம் என்னவென்றால், நான் உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, வனாந்தரத்தில் உங்களுக்குப் புசிக்கக்கொடுத்த அப்பத்தை உங்கள் சந்ததியார் பார்க்கும்படிக்கு, அவர்களுக்காக அதைக் காப்பதற்கு, அதிலே ஒரு ஓமர் நிறைய எடுத்து வைக்கவேண்டும் என்றான்.
33மேலும், மோசே ஆரோனை நோக்கி: நீ ஒரு கலசத்தை எடுத்து, அதிலே ஒரு ஓமர் அளவு மன்னாவைப் போட்டு, அதை உங்கள் சந்ததியாருக்காகக் காப்பதற்குக் கர்த்தருடைய சந்நிதியிலே வை என்றான்.
34கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அது காக்கப்படும்படி ஆரோன் அதைச் சாட்சி சந்நிதியில் வைத்தான்.
35இஸ்ரவேல் புத்திரர் குடியிருப்பான தேசத்துக்கு வருமட்டும் நாற்பது வருஷமளவும் மன்னாவைப் புசித்தார்கள்; அவர்கள் கானான் தேசத்தின் எல்லையில் சேரும்வரைக்கும் மன்னாவைப் புசித்தார்கள்.
36ஒரு ஓமரானது எப்பாவிலே பத்தில் ஒரு பங்கு.

யாத்திராகமம் 17

1பின்பு இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் கர்த்தருடைய கட்டளையின்படியே சீன்வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு, பிரயாணம்பண்ணி, ரெவிதீமிலே வந்து பாளயமிறங்கினார்கள்; அங்கே ஜனங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாதிருந்தது.
2அப்பொழுது ஜனங்கள் மோசேயோடே வாதாடி: நாங்கள் குடிக்கிறதற்கு எங்களுக்குத் தண்ணீர் தரவேண்டும் என்றார்கள். அதற்கு மோசே: என்னோடே ஏன் வாதாடுகிறீர்கள், கர்த்தரை ஏன் பரீட்சை பார்க்கிறீர்கள் என்றான்.
3ஜனங்கள் அவ்விடத்திலே தண்ணீர்த் தவனமாயிருந்தபடியால், அவர்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: நீர் எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் எங்கள் ஆடுமாடுகளையும் தண்ணீர்த் தவனத்தினால் கொன்றுபோட எங்களை எகிப்திலிருந்து ஏன் கொண்டுவந்தீர் என்றார்கள்.
4மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: இந்த ஜனங்களுக்கு நான் என்ன செய்வேன், இவர்கள் என்மேல் கல்லெறியப் பார்க்கிறார்களே என்றான்.
5அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் மூப்பரில் சிலரை உன்னோடே கூட்டிக்கொண்டு, நீ நதியை அடித்த உன் கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு, ஜனங்களுக்கு முன்னே நடந்துபோ.
6அங்கே ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன்; நீ அந்தக் கன்மலையை அடி; அப்பொழுது ஜனங்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும் என்றார்; அப்படியே மோசே இஸ்ரவேல் மூப்பரின் கண்களுக்கு முன்பாகச் செய்தான்.
7இஸ்ரவேல் புத்திரர் வாதாடினதினிமித்தமும், கர்த்தர் எங்கள் நடுவில் இருக்கிறாரா இல்லையா என்று அவர்கள் கர்த்தரைப் பரீட்சை பார்த்ததினிமித்தமும், அவன் அந்த ஸ்தலத்திற்கு மாசா என்றும் மேரிபா என்றும் பேரிட்டான்.
8அமலேக்கியர் வந்து ரெவிதீமிலே இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினார்கள்.
9அப்பொழுது மோசே யோசுவாவை நோக்கி: நீ நமக்காக மனிதரைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கோடே யுத்தம்பண்ணு; நாளைக்கு நான் மலையுச்சியில் தேவனுடைய கோலை என் கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன் என்றான்.
10யோசுவா தனக்கு மோசே சொன்னபடியே செய்து, அமலேக்கோடே யுத்தம்பண்ணினான். மோசேயும் ஆரோனும் ஊர் என்பவனும் மலையுச்சியில் ஏறினார்கள்.
11மோசே தன் கையை ஏறெடுத்திருக்கையில், இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள்; அவன் தன் கையைத் தாழவிடுகையில், அமலேக்கு மேற்கொண்டான்.
12மோசேயின் கைகள் அசந்துபோயிற்று, அப்பொழுது அவர்கள் ஒரு கல்லைக் கொண்டுவந்து அவன் கீழே வைத்தார்கள்; அதின்மேல் உட்கார்ந்தான்; ஆரோனும் ஊரும் ஒருவன் ஒரு பக்கத்திலும் ஒருவன் மறு பக்கத்திலும் இருந்து, அவன் கைகளைத் தாங்கினார்கள்; இவ்விதமாய் அவன் கைகள் சூரியன் அஸ்தமிக்கும்வரைக்கும் ஒரே நிலையாயிருந்தது.
13யோசுவா அமலேக்கையும் அவன் ஜனங்களையும் பட்டயக்கருக்கினாலே முறிய அடித்தான்.
14பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: இதை நினைவுகூரும்பொருட்டு, நீ ஒரு புஸ்தகத்தில் எழுதி, யோசுவாவின் செவி கேட்கும்படி வாசி. அமலேக்கை வானத்தின் கீழெங்கும் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன் என்றார்.
15மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யேகோவாநிசி என்று பேரிட்டு,
16அமலேக்கின் கை கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாயிருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாய் கர்த்தரின் யுத்தம் நடக்கும் என்றான்.

யாத்திராகமம் 18

1தேவன் மோசேக்கும் தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் செய்த யாவையும், கர்த்தர் இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதையும், மீதியானில் ஆசாரியனாயிருந்த மோசேயின் மாமனாகிய எத்திரோ கேள்விப்பட்டபோது,
2மோசேயின் மாமனாகிய எத்திரோ, மோசேயினாலே திருப்பி அனுப்பிவிடப்பட்டிருந்த அவன் மனைவியாகிய சிப்போராளையும்,
3அவளுடைய இரண்டு குமாரரையும் கூட்டிக்கொண்டு பிரயாணப்பட்டான். நான் அந்நிய தேசத்திலே பரதேசியானேன் என்று மோசே சொல்லி, ஒரு மகனுக்குக் கெர்சோம் என்று பேரிட்டிருந்தான்.
4என் பிதாவின் தேவன் எனக்குத் துணைநின்று பார்வோனின் பட்டயத்துக்கு என்னைத் தப்புவித்தார் என்று சொல்லி, மற்றவனுக்கு எலியேசர் என்று பேரிட்டிருந்தான்.
5மோசேயின் மாமனாகிய எத்திரோ மோசேயின் குமாரரோடும் அவன் மனைவியோடுங்கூட, அவன் பாளயமிறங்கியிருந்த தேவ பர்வதத்தினிடத்தில் வனாந்தரத்துக்கு வந்து:
6எத்திரோ என்னும் உம்முடைய மாமனாகிய நானும், உம்முடைய மனைவியும், அவளோடேகூட அவளுடைய இரண்டு குமாரரும் உம்மிடத்திற்கு வந்திருக்கிறோம் என்று மோசேக்குச் சொல்லியனுப்பினான்.
7அப்பொழுது மோசே தன் மாமனுக்கு எதிர்கொண்டுபோய், அவனை வணங்கி, முத்தஞ்செய்தான்; ஒருவரை ஒருவர் சுகசெய்தி விசாரித்துக்கொண்டு, கூடாரத்துக்குள் பிரவேசித்தார்கள்.
8பின்பு மோசே கர்த்தர் இஸ்ரவேலினிமித்தம் பார்வோனுக்கும் எகிப்தியருக்கும் செய்த எல்லாவற்றையும், வழியிலே தங்களுக்கு நேரிட்ட எல்லா வருத்தத்தையும், கர்த்தர் தங்களை விடுவித்து இரட்சித்ததையும் தன் மாமனுக்கு விவரித்துச் சொன்னான்.
9 கர்த்தர் இஸ்ரவேலரை எகிப்தியரின் கைக்குத் தப்புவித்து, அவர்களுக்குச் செய்த சகல நன்மைகளையுங்குறித்து எத்திரோ சந்தோஷப்பட்டு:
10உங்களை எகிப்தியரின் கைக்கும் பார்வோனின் கைக்கும் தப்புவித்து, எகிப்தியருடைய கையின் கீழிருந்த ஜனத்தை விடுவித்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
11 கர்த்தர் எல்லாத் தேவர்களைப்பார்க்கிலும் பெரியவர் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; அவர்கள் இடும்பு செய்த காரியத்தில் அவர்களை மேற்கொண்டார் என்று சொல்லி;
12மோசேயின் மாமனாகிய எத்திரோ சர்வாங்க தகனபலியையும் மற்ற பலிகளையும் தேவனுக்குக் கொண்டுவந்து செலுத்தினான். பின்பு ஆரோனும் இஸ்ரவேல் மூப்பர் அனைவரும் வந்து, மோசேயின் மாமனுடனே தேவசமுகத்தில் போஜனம்பண்ணினார்கள்.
13மறுநாள் மோசே ஜனங்களை நியாயம் விசாரிக்க உட்கார்ந்தான்; ஜனங்கள் காலமே துவக்கிச் சாயங்காலம்மட்டும் மோசேக்கு முன்பாக நின்றார்கள்.
14ஜனங்களுக்கு அவன் செய்த யாவையும் மோசேயின் மாமன் கண்டு: நீர் ஜனங்களுக்குச் செய்கிற இந்தக் காரியம் என்ன? நீர் ஒன்றியாய் உட்கார்ந்திருக்கவும், ஜனங்கள் எல்லாரும் காலமே துவக்கிச் சாயங்காலம்மட்டும் உமக்கு முன்பாக நிற்கவும் வேண்டியது என்ன என்றான்.
15அப்பொழுது மோசே தன் மாமனை நோக்கி: தேவனிடத்தில் விசாரிக்கும்படி ஜனங்கள் என்னிடத்தில் வருகிறார்கள்.
16அவர்களுக்கு யாதொரு காரியம் உண்டானால், என்னிடத்தில் வருகிறார்கள்; நான் அவர்களுக்குள்ள வழக்கைத் தீர்த்து, தேவகட்டளைகளையும் அவருடைய பிரமாணங்களையும் தெரிவிக்கிறேன் என்றான்.
17அதற்கு மோசேயின் மாமன்: நீர் செய்கிற காரியம் நல்லதல்ல;
18நீரும் உம்மோடே இருக்கிற ஜனங்களும் தொய்ந்துபோவீர்கள்; இது உமக்கு மிகவும் பாரமான காரியம்; நீர் ஒருவராய் அதைச் செய்ய உம்மாலே கூடாது.
19இப்பொழுது என் சொல்லைக்கேளும், உமக்கு ஒரு ஆலோசனை சொல்லுகிறேன்; தேவனும் உம்மோடுகூட இருப்பார், நீர் தேவசந்நிதியிலே ஜனங்களுக்காக இரும்; விசேஷித்தவைகளைத் தேவனிடத்தில் கொண்டுபோய்;
20கட்டளைகளையும் பிரமாணங்களையும் அவர்களுக்கு வெளிப்படுத்தி; அவர்கள் நடக்கவேண்டிய வழியையும், அவர்கள் செய்யவேண்டிய காரியத்தையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தும்.
21ஜனங்கள் எல்லாருக்குள்ளும் தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்கு அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் ஏற்படுத்தும்.
22அவர்கள் எப்பொழுதும் ஜனங்களை நியாயம் விசாரித்து, பெரிய காரியங்கள் யாவையும் உம்மிடத்தில் கொண்டுவரட்டும், சிறிய காரியங்கள் யாவையும் தாங்களே தீர்க்கட்டும்; இப்படி அவர்கள் உம்மோடேகூட இந்தப் பாரத்தைச் சுமந்தால், உமக்கு இலகுவாயிருக்கும்.
23இந்தப்பிரகாரம் நீர் செய்வதும், இப்படித் தேவன் உமக்குக் கட்டளையிடுவதும் உண்டானால், உம்மாலே தாங்கக்கூடும்; இந்த ஜனங்கள் எல்லாரும் தாங்கள் போகும் இடத்துக்குச் சுகமாய்ப் போய்ச் சேரலாம் என்றான்.
24மோசே தன் மாமன் சொல்கேட்டு, அவன் சொன்னபடியெல்லாம் செய்தான்.
25மோசே இஸ்ரவேலர் எல்லாரிலும் திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்கு அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் ஜனங்கள்மேல் தலைவராக்கினான்.
26அவர்கள் எப்பொழுதும் ஜனங்களை நியாயம் விசாரித்தார்கள்; வருத்தமான காரியங்களைமாத்திரம் மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள்; சிறிய காரியங்களையெல்லாம் தாங்களே தீர்த்தார்கள்.
27பின்பு மோசே தன் மாமனை அனுப்பிவிட்டான்; அவன் திரும்பத் தன் தேசத்துக்குப் போய்விட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *