Scripture Portion: Exodus 22-24
யாத்திராகமம் 22
1ஒருவன் ஒரு மாட்டையாவது ஒரு ஆட்டையாவது திருடி, அதைக் கொன்றால், அல்லது அதை விற்றால், அவன் அந்த மாட்டுக்கு ஐந்து மாடுகளையும், அந்த ஆட்டுக்கு நாலு ஆடுகளையும் பதிலாகக் கொடுக்கக்கடவன்.2திருடன் கன்னமிடுகையில் கண்டுபிடிக்கப்பட்டு, அடிக்கப்பட்டுச் செத்தால், அவன் நிமித்தம் இரத்தப்பழி சுமராது.3சூரியன் அவன்மேல் உதித்திருந்ததானால், அவன் நிமித்தம் இரத்தப்பழி சுமரும்; திருடன் பதில் கொடுத்துத் தீர்க்கவேண்டும்; அவன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தால், தான் செய்த களவுக்காக விலைப்படக்கடவன்.4அவன் திருடின மாடாவது கழுதையாவது ஆடாவது உயிருடனே அவன் கையில் கண்டுபிடிக்கப்பட்டால், இரட்டிப்பாய் அவன் கொடுக்கவேண்டும்.5ஒருவன் பிறனுடைய வயலிலாவது திராட்சத்தோட்டத்திலாவது தன் மிருகஜீவனை மேயவிட்டால், அவன் தன் சுயவயலிலும் திராட்சத்தோட்டத்திலுமுள்ள பலனில் உத்தமமானதை எடுத்து, பதில் செலுத்தக்கடவன்.6அக்கினி எழும்பி, முட்களில் பற்றி, தானியப்போரையாவது, விளைந்த பயிரையாவது, வயலிலுள்ள வேறே எதையாவது எரித்துப்போட்டதேயானால், அக்கினியைக் கொளுத்தினவன் அக்கினிச் சேதத்திற்கு உத்தரவாதம்பண்ணவேண்டும்.7ஒருவன் பிறனுடைய வசத்தில் திரவியத்தையாவது, உடைமைகளையாவது அடைக்கலமாக வைத்திருக்கும்போது, அது அவன் வீட்டிலிருந்து திருடப்பட்டுப்போனால், திருடன் அகப்பட்டானாகில், அவன் அதற்கு இரட்டிப்பாகக் கொடுக்கவேண்டும்.8திருடன் அகப்படாதேபோனால், அந்த வீட்டுக்காரன் தானே பிறனுடைய பொருளை அபகரித்தானோ இல்லையோ என்று அறியும்படி நியாயாதிபதிகளிடத்தில் அவனைக் கொண்டுபோகவேண்டும்.9காணாமற்போன மாடு, கழுதை, ஆடு, வஸ்திரம் முதலியவைகளில் யாதொன்றைப் பிறனொருவன் தன்னுடையது என்று சொல்லி குற்றஞ்சாற்றினால், இருதிறத்தாருடைய வழக்கும் நியாயாதிபதிகளிடத்தில் வரக்கடவது; நியாயாதிபதிகள் எவனைக் குற்றவாளி என்று தீர்க்கிறார்களோ, அவன் மற்றவனுக்கு இரட்டிப்பாகக் கொடுக்கக்கடவன்.10ஒருவன் தன் கழுதையையாவது மாட்டையாவது ஆட்டையாவது மற்ற யாதொரு மிருகஜீவனையாவது பிறன் வசத்தில் விட்டிருக்கும்போது, அது செத்தாலும், சேதப்பட்டுப்போனாலும், ஒருவரும் காணாதபடி ஓட்டிக்கொண்டு போகப்பட்டாலும்,11அவன் தான் பிறனுடைய பொருளை அபகரிக்கவில்லையென்று கர்த்தர் பேரில் இடும் ஆணை அவர்கள் இருவருக்கும் நடுத்தீர்க்கக்கடவது; உடையவன் அதை அங்கிகரிக்கவேண்டும்; மற்றவன் பதிலளிக்கவேண்டுவதில்லை.12அது அவன் வசத்திலிருந்து திருடப்பட்டுப்போயிற்றானால், அவன் அதின் எஜமானுக்கு அதற்காக உத்தரவாதம்பண்ணக்கடவன்.13அது பீறுண்டுபோயிற்றானால், அதற்குச் சாட்சியை ஒப்புவிக்கவேண்டும். பீறுண்டதற்காக அவன் உத்தரவாதம்பண்ணவேண்டுவதில்லை.14ஒருவன் பிறனிடத்தில் எதையாகிலும் இரவலாக வாங்கினதுண்டானால், அதற்கு உடையவன் கூட இராதபோது, அது சேதப்பட்டாலும், செத்துப்போனாலும், அவன் அதற்கு உத்தரவாதம்பண்ணவேண்டும்.15அதற்கு உடையவன் கூட இருந்தானாகில், அவன் உத்தரவாதம்பண்ணவேண்டுவதில்லை; அது வாடகைக்கு வாங்கப்பட்டிருந்தால், அது அவன் வாடகைக்கு வந்த சேதம்.16நியமிக்கப்படாத ஒரு கன்னிகையை ஒருவன் மோசம்போக்கி அவளோடே சயனித்தால், அவன் அவளுக்காகப் பரிசம்கொடுத்து, அவளை விவாகம்பண்ணக்கடவன்.17அவள் தகப்பன் அவளை அவனுக்குக் கொடுக்கமாட்டேன் என்றானாகில், கன்னிகைகளுக்காகக் கொடுக்கப்படும் பரிச முறைமையின்படி அவன் பணத்தை நிறுத்துக் கொடுக்கவேண்டும்.18சூனியக்காரியை உயிரோடே வைக்கவேண்டாம்.19மிருகத்தோடே புணருகிறவன் எவனும் கொல்லப்படவேண்டும்.20கர்த்தர் ஒருவருக்கே ஒழிய வேறே தேவர்களுக்குப் பலியிடுகிறவன் சங்கரிக்கப்படக்கடவன்.21அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும் ஒடுக்காமலும் இருப்பீர்களாக; நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியர்களாயிருந்தீர்களே.22விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக;23அவர்களை எவ்வளவாகிலும் ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாய்க் கேட்டு,24கோபம்மூண்டவராகி, உங்களைப்பட்டயத்தினால் கொலைசெய்வேன்; உங்கள் மனைவிகள் விதவைகளும், உங்கள் பிள்ளைகள் திக்கற்ற பிள்ளைகளுமாவார்கள்.25உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டிவாங்குகிறவர்கள்போல அவனிடத்தில் வட்டி வாங்கவேண்டாம்.26பிறனுடைய வஸ்திரத்தை ஈடாக வாங்கினால், பொழுதுபோகுமுன்னமே அதை அவனுக்குத் திரும்பக் கொடுத்துவிடுவாயாக.27அவன் போர்வை அதுதானே, அதுவே அவன் தன் உடம்பை மூடிக்கொள்ளுகிற வஸ்திரம்; வேறு எதினாலே போர்த்துப் படுத்துக்கொள்ளுவான்? அவன் என்னை நோக்கி முறையிடும்போது, நான் அவனுக்குச் செவிகொடுப்பேன், நான் இரக்கமுள்ளவராயிருக்கிறேன்.28நியாயாதிபதிகளைத் தூஷியாமலும், உன் ஜனத்தின் அதிபதியைச் சபியாமலும் இருப்பாயாக.29முதல் முதல் பழுக்கும் உன் பழத்தையும், வடியும் உன் இரசத்தையும் காணிக்கையாகச் செலுத்தத் தாமதிக்கவேண்டாம். உன் குமாரரில் முதற்பேறானவனை எனக்குக் கொடுப்பாயாக.30உன் மாடுகளிலும் உன் ஆடுகளிலும் அப்படியே செய்வாயாக; குட்டியானது ஏழுநாள் தன் தாயோடே இருக்கட்டும்; எட்டாம் நாளிலே அதை எனக்குச் செலுத்துவாயாக.31நீங்கள் எனக்குப் பரிசுத்த மனுஷராயிருக்கக்கடவீர்கள்; வெளியிலே பீறுண்ட மாம்சத்தைப் புசியாமல், அதை நாய்களுக்குப் போட்டுவிடுங்கள்.யாத்திராகமம் 23
1அபாண்டமான சொல்லை ஏற்றுக்கொள்ளாயாக; கொடுமையுள்ள சாட்சிக்காரனாயிருக்க ஆகாதவனோடே கலவாயாக.2தீமைசெய்ய திரளானபேர்களைப் பின்பற்றாதிருப்பாயாக; வழக்கிலே நியாயத்தைப் புரட்ட மிகுதியானவர்களின் பட்சத்தில் சாய்ந்து, உத்தரவு சொல்லாதிருப்பாயாக.3வியாச்சியத்திலே தரித்திரனுடைய முகத்தைப் பாராயாக.4உன் சத்துருவின் மாடாவது அவனுடைய கழுதையாவது தப்பிப்போகக்கண்டால், அதைத் திரும்ப அவனிடத்தில் கொண்டுபோய் விடுவாயாக.5உன்னைப் பகைக்கிறவனுடைய கழுதை சுமையோடே விழுந்து கிடக்கக்கண்டாயானால், அதற்கு உதவிசெய்யாதிருக்கலாமா? அவசியமாய் அவனோடேகூட அதற்கு உதவிசெய்வாயாக.6உன்னிடத்திலிருக்கிற எளியவனுடைய வியாச்சியத்தில் அவனுடைய நியாயத்தைப் புரட்டாயாக.7கள்ளக்காரியத்துக்குத் தூரமாயிருப்பாயாக; குற்றமில்லாதவனையும் நீதிமானையும் கொலைசெய்யாயாக; நான் துன்மார்க்கனை நீதிமான் என்று தீர்க்கமாட்டேன்.8பரிதானம் வாங்காதிருப்பாயாக; பரிதானம் பார்வையுள்ளவர்களைக் குருடாக்கி, நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டும்.9அந்நியனை ஒடுக்காயாக; எகிப்துதேசத்தில் அந்நியர்களாயிருந்த நீங்கள் அந்நியனுடைய இருதயத்தை அறிந்திருக்கிறீர்களே.10ஆறுவருஷம் நீ உன் நிலத்தில் பயிரிட்டு, அதின் பலனைச் சேர்த்துக்கொள்.11ஏழாம் வருஷத்தில் உன் ஜனத்திலுள்ள எளியவர்கள் புசிக்கவும், மீதியானதை வெளியின் ஜெந்துக்கள் தின்னவும், அந்த நிலம் சும்மா கிடக்க விட்டுவிடுவாயாக; உன் திராட்சத்தோட்டத்தையும் உன் ஒலிவத்தோப்பையும் அப்படியே செய்வாயாக.12ஆறுநாள் உன் வேலையைச் செய்து, ஏழாம்நாளிலே உன் மாடும் உன் கழுதையும் இளைப்பாறவும், உன் அடிமைப்பெண்ணின் பிள்ளையும் அந்நியனும் இளைப்பாறவும் ஓய்ந்திருப்பாயாக.13நான் உங்களுக்குச் சொன்னவைகள் யாவற்றிலும் சாவதானமாயிருங்கள். அந்நிய தேவர்களின் பேரைச் சொல்லவேண்டாம்; அது உன் வாயிலிருந்து பிறக்கக் கேட்கப்படவும் வேண்டாம்.14வருஷத்தில் மூன்றுதரம் எனக்குப்பண்டிகை ஆசரிப்பாயாக.15புளிப்பில்லா அப்பப்பண்டிகையைக் கொண்டாடி, நான் உனக்குக் கட்டளையிட்டபடியே ஆபிப் மாதத்தின் குறித்தகாலத்தில் ஏழுநாள் புளிப்பில்லா அப்பம் புசிப்பாயாக; அந்த மாதத்தில் எகிப்திலிருந்து புறப்பட்டாயே, என் சந்நிதியில் வெறுங்கையாய் வரவேண்டாம்.16நீ வயலில் விதைத்த உன் பயிர் வேலைகளின் முதற்பலனைச் செலுத்துகிற அறுப்புக்கால பண்டிகையையும், வருஷமுடிவிலே நீ வயலில் உன் வேலைகளின் பலனைச் சேர்த்துத் தீர்ந்தபோது, சேர்ப்புக்கால பண்டிகையையும் ஆசரிப்பாயாக.17வருஷத்தில் மூன்றுதரம் உன் ஆண்மக்கள் எல்லாரும் கர்த்தராகிய ஆண்டவருடைய சந்நிதியில் வரக்கடவர்கள்.18எனக்கு இடும் பலியின் இரத்தத்தைப் புளித்தமாவுடன் செலுத்தவேண்டாம், எனக்கு இடும் பலியின் கொழுப்பை விடியற்காலம்வரைக்கும் வைக்கவும் வேண்டாம்.19உன் நிலத்தில் முதல் விளைச்சல்களின் முதற் கனியை உன் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவருவாயாக; வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்.20வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்.21அவர் சமுகத்தில் எச்சரிக்கையாயிருந்து, அவர் வாக்குக்குச் செவிகொடு; அவரைக் கோபப்படுத்தாதே; உங்கள் துரோகங்களை அவர் பொறுப்பதில்லை; என் நாமம் அவர் உள்ளத்தில் இருக்கிறது.22நீ அவர் வாக்கை நன்றாய்க் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்வாயாகில், நான் உன் சத்துருக்களுக்குச் சத்துருவாயும், உன் விரோதிகளுக்கு விரோதியாயும் இருப்பேன்.23என் தூதனானவர் உனக்குமுன்சென்று, எமோரியரும், ஏத்தியரும், பெரிசியரும், கானானியரும், ஏவியரும், எபூசியரும், இருக்கிற இடத்துக்கு உன்னை நடத்திக்கொண்டுபோவார்; அவர்களை நான் அதம்பண்ணுவேன்.24நீ அவர்களுடைய தேவர்களைப்பணிந்துகொள்ளாமலும், சேவியாமலும், அவர்கள் செய்கைகளின்படி செய்யாமலும், அவர்களை நிர்மூலம்பண்ணி, அவர்களுடைய சிலைகளை உடைத்துப்போடுவாயாக.25உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்.26கர்ப்பம் விழுகிறதும், மலடும் உன் தேசத்தில் இருப்பதில்லை; உன் ஆயுசு நாட்களைப் பூரணப்படுத்துவேன்.27எனக்குப் பயப்படும் பயத்தை உனக்குமுன் செல்லும்படி செய்வேன். நீ செல்லும் இடமெங்குமுள்ள ஜனங்கள் எல்லாரையும் கலங்கடித்து, உன் சத்துருக்கள் எல்லாரையும் முதுகு காட்டப்பண்ணுவேன்.28உன் முகத்திற்கு முன்னின்று ஏவியரையும் கானானியரையும் ஏத்தியரையும் துரத்திவிட, குளவிகளை உனக்கு முன்னே அனுப்புவேன்.29தேசம் பாழாய்ப்போகாமலும், காட்டுமிருகங்கள் உனக்கு விரோதமாய்ப் பெருகாமலும் இருக்கும்படி, நான் அவர்களை ஒரே வருஷத்திற்குள்ளே உன் முன்னின்று துரத்திவிடாமல்,30நீ விருத்தியடைந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்வரைக்கும், அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் உன் முன்னின்று துரத்திவிடுவேன்.31சிவந்த சமுத்திரம் தொடங்கி பெலிஸ்தரின் சமுத்திரம்வரைக்கும், வனாந்தரம் தொடங்கி நதிவரைக்கும் உன் எல்லையாயிருக்கும்படி செய்வேன்; நான் அந்தத் தேசத்தின் குடிகளை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுவாய்.32அவர்களோடும் அவர்கள் தேவர்களோடும் நீ உடன்படிக்கை பண்ணாதிருப்பாயாக.33அவர்கள் உன்னை எனக்கு விரோதமாகப் பாவஞ்செய்யப்பண்ணாதபடிக்கு உன் தேசத்திலே குடியிருக்கவேண்டாம்; நீ அவர்கள் தேவர்களைச் சேவித்தால், அது உனக்குக் கண்ணியாயிருக்கும் என்றார்.
யாத்திராகமம் 24
1பின்பு அவர் மோசேயை நோக்கி: நீயும் ஆரோனும் நாதாபும் அபியூவும் இஸ்ரவேலின் மூப்பரில் எழுபதுபேரும் கர்த்தரிடத்தில் ஏறிவந்து, தூரத்திலிருந்து பணிந்துகொள்ளுங்கள்.2மோசே மாத்திரம் கர்த்தரிடத்தில் சமீபித்து வரலாம்; அவர்கள் சமீபித்து வரலாகாது; ஜனங்கள் அவனோடேகூட ஏறிவரவேண்டாம் என்றார்.3மோசே வந்து, கர்த்தருடைய வார்த்தைகள் யாவையும் நியாயங்கள் யாவையும் ஜனங்களுக்கு அறிவித்தான்; அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் ஏகசத்தமாய்: கர்த்தர் அருளின எல்லா வார்த்தைகளின்படியும் செய்வோம் என்று பிரதியுத்தரம் சொன்னார்கள்.4மோசே கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் எழுதிவைத்து, அதிகாலமே எழுந்து, மலையின் அடியில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்ரவேலுடைய பன்னிரண்டு கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே பன்னிரண்டு தூண்களை நிறுத்தினான்.5இஸ்ரவேல் புத்திரரின் வாலிபரை அனுப்பினான்; அவர்கள் சர்வாங்கதகனபலிகளைச் செலுத்தி, கர்த்தருக்குச் சமாதானபலிகளாகக் காளைகளைப் பலியிட்டார்கள்.6அப்பொழுது மோசே அந்த இரத்தத்தில் பாதி எடுத்து, பாத்திரங்களில் வார்த்து, பாதி இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்து,7உடன்படிக்கையின் புஸ்தகத்தை எடுத்து, ஜனங்களின் காது கேட்க வாசித்தான்; அவர்கள் கர்த்தர் சொன்னபடியெல்லாம் செய்து, கீழ்ப்படிந்து நடப்போம் என்றார்கள்.8அப்பொழுது மோசே இரத்தத்தை எடுத்து, ஜனங்களின்மேல் தெளித்து, இந்த வார்த்தைகள் யாவையுங்குறித்து கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்றான்.9பின்பு மோசேயும் ஆரோனும் நாதாபும் அபியூவும், இஸ்ரவேலருடைய மூப்பரில் எழுபதுபேரும் ஏறிப்போய்,10இஸ்ரவேலின் தேவனைத் தரிசித்தார்கள். அவருடைய பாதத்தின்கீழே நீலக்கல்லிழைத்த வேலைக்கு ஒப்பாகவும் தெளிந்த வானத்தின் பிரபைக்கு ஒப்பாகவும் இருந்தது.11அவர் இஸ்ரவேல் புத்திரருடைய அதிபதிகள்மேல் தம்முடைய கையை நீட்டவில்லை; அவர்கள் தேவனைத் தரிசித்து, பின்பு புசித்துக் குடித்தார்கள்.12அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறிவந்து, அங்கே இரு நான் உனக்குக் கற்பலகைகளையும், நீ அவர்களுக்கு உபதேசிப்பதற்கு, நான் எழுதின நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் கொடுப்பேன் என்றார்.13அப்பொழுது மோசே தன் ஊழியக்காரனாகிய யோசுவாவோடே எழுந்து போனான். மோசே தேவ பர்வதத்தில் ஏறிப்போகையில்,14அவன் மூப்பரை நோக்கி: நாங்கள் உங்களிடத்தில் திரும்பிவருமட்டும், நீங்கள் இங்கே எங்களுக்காகக் காத்திருங்கள்; ஆரோனும் ஊரும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; ஒருவனுக்கு யாதொரு காரியம் உண்டானால், அவன் அவர்களிடத்தில் போகலாம் என்றான்.15மோசே மலையின்மேல் ஏறினபோது, ஒரு மேகம் மலையை மூடிற்று.16 கர்த்தருடைய மகிமை சீனாய்மலையின்மேல் தங்கியிருந்தது; மேகம் ஆறுநாள் அதை மூடியிருந்தது; ஏழாம்நாளில் அவர் மேகத்தின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டார்.17மலையின் கொடுமுடியிலே கர்த்தருடைய மகிமையின் காட்சி இஸ்ரவேல் புத்திரருடைய கண்களுக்குப் பட்சிக்கிற அக்கினியைப்போல் இருந்தது.18மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து, மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பதுநாள் மலையில் இருந்தான்.
Leave a Reply