Scripture Portion: Exodus 33-35

யாத்திராகமம் 33

1கர்த்தர் மோசேயை நோக்கி: நீயும், எகிப்துதேசத்திலிருந்து நீ அழைத்துக்கொண்டு வந்த ஜனங்களும் இவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு. உன் சந்ததிக்குக் கொடுப்பேன் என்று நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்குப் போங்கள்.
2நான் ஒரு தூதனை உங்களுக்கு முன்பாக அனுப்பி, கானானியனையும் எமோரியனையும் ஏத்தியனையும் பெரிசியனையும் ஏவியனையும் எபூசியனையும் துரத்திவிடுவேன்.
3ஆனாலும், வழியிலே நான் உங்களை நிர்மூலம்பண்ணாதபடிக்கு, நான் உங்கள் நடுவே செல்லமாட்டேன், நீங்கள் வணங்காக்கழுத்துள்ள ஜனங்கள் என்றார்.
4துக்கமான இவ்வார்த்தைகளை ஜனங்கள் கேட்டபோது, ஒருவரும் தங்கள் ஆபரணங்களைப் போட்டுக்கொள்ளாமல் துக்கித்துக்கொண்டிருந்தார்கள்.
5ஏனென்றால், நீங்கள் வணங்காக்கழுத்துள்ள ஜனங்கள், நான் ஒரு நிமிஷத்தில் உங்கள் நடுவில் எழும்பி, உங்களை நிர்மூலம்பண்ணுவேன்; ஆகையால், நீங்கள் போட்டிருக்கிற உங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போடுங்கள்; அப்பொழுது நான் உங்களுக்குச் செய்யவேண்டியதை அறிவேன் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல் என்று கர்த்தர் மோசேயோடே சொல்லியிருந்தார்.
6ஆகையால், இஸ்ரவேல் புத்திரர் ஓரேப் மலையருகே தங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போட்டார்கள்.
7மோசே கூடாரத்தைப் பெயர்த்து, அதைப் பாளயத்துக்குப் புறம்பே தூரத்திலே போட்டு, அதற்கு ஆசரிப்புக்கூடாரம் என்று பேரிட்டான். கர்த்தரைத் தேடும் யாவரும் பாளயத்துக்குப் புறம்பான ஆசரிப்புக் கூடாரத்துக்குப் போவார்கள்.
8மோசே கூடாரத்துக்குப் போகும் போது, ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்றுகொண்டு, அவன் கூடாரத்துக்குள் பிரவேசிக்குமட்டும், அவன் பின்னே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
9மோசே கூடாரத்துக்குள் பிரவேசிக்கையில், மேகஸ்தம்பம் இறங்கி, கூடாரவாசலில் நின்றது; கர்த்தர் மோசேயோடே பேசினார்.
10ஜனங்கள் எல்லாரும் மேகஸ்தம்பம் கூடாரவாசலில் நிற்கக்கண்டார்கள்; ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் பணிந்துகொண்டார்கள்.
11ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்; பின்பு, அவன் பாளையத்துக்குத் திரும்பினான்; நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான்.
12மோசே கர்த்தரை நோக்கி: தேவரீர் இந்த ஜனங்களை அழைத்துக்கொண்டுபோ என்று சொன்னீர்; ஆகிலும், என்னோடேகூட இன்னாரை அனுப்புவேன் என்பதை எனக்கு நீர் அறிவிக்கவில்லை; என்றாலும், உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றும், என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது என்றும், தேவரீர் சொன்னதுண்டே;
13உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும்; இந்த ஜாதி உம்முடைய ஜனமென்று நினைத்தருளும் என்றான்.
14அதற்கு அவர்: என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்.
15அப்பொழுது அவன் அவரை நோக்கி: உம்முடைய சமுகம் என்னோடேகூடச் செல்லாமற்போனால், எங்களை இவ்விடத்திலிருந்து கொண்டுபோகாதிரும்.
16எனக்கும் உமது ஜனங்களுக்கும் உம்முடைய கண்களிலே கிருபை கிடைத்ததென்பது எதினால் அறியப்படும்; நீர் எங்களோடே வருவதினால் அல்லவா? இப்படியே பூமியின்மேலுள்ள ஜனங்கள் எல்லாரிலும், நானும் உம்முடைய ஜனங்களும் விசேஷித்தவர்கள் என்று விளங்கும் என்றான்.
17அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ சொன்ன இந்த வார்த்தையின்படியே செய்வேன்; என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது; உன்னைப்பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றார்.
18அப்பொழுது அவன்: உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் என்றான்.
19அதற்கு அவர்: என்னுடைய தயையை எல்லாம் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணி, கர்த்தருடைய நாமத்தை உனக்கு முன்பாகக்கூறுவேன்; எவன்மேல் கிருபையாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் கிருபையாயிருப்பேன்; எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் இரக்கமாயிருப்பேன் என்று சொல்லி,
20நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக்கூடாது என்றார்.
21பின்னும் கர்த்தர்: இதோ, என்னண்டையில் ஒரு இடம் உண்டு; நீ அங்கே கன்மலையில் நில்லு.
22என் மகிமை கடந்துபோகும்போது, நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, நான் கடந்துபோகுமட்டும் என் கரத்தினால் உன்னை மூடுவேன்;
23பின்பு, என் கரத்தை எடுப்பேன்; அப்பொழுது என் பின்பக்கத்தைக் காண்பாய்; என் முகமோ காணப்படாது என்றார்.

யாத்திராகமம் 34

1கர்த்தர் மோசேயை நோக்கி: முந்தின கற்பலகைகளுக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்துக்கொள்; நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை அவைகளில் எழுதுவேன்.
2விடியற்காலத்தில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலையில் ஏறி, அங்கே மலையின் உச்சியில் காலமே என் சமுகத்தில் வந்து நில்.
3உன்னோடே ஒருவனும் அங்கே வரக்கூடாது; மலையிலெங்கும் ஒருவனும் காணப்படவுங்கூடாது; இந்த மலையின் சமீபத்தில் ஆடுமாடு மேயவுங்கூடாது என்றார்.
4அப்பொழுது மோசே முந்தின கற்பலகைகளுக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்து, அதிகாலமே எழுந்திருந்து, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே அவ்விரண்டு கற்பலகைகளையும் தன் கையிலே எடுத்துக்கொண்டு, சீனாய் மலையில் ஏறினான்.
5கர்த்தர் ஒரு மேகத்தில் இறங்கி, அங்கே அவன் அருகே நின்று, கர்த்தருடைய நாமத்தைக் கூறினார்.
6கர்த்தர் அவனுக்கு முன்பாகக் கடந்துபோகிறபோது, அவர்: கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்.
7ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்று கூறினார்.
8மோசே தீவிரமாகத் தரைமட்டும் குனிந்து பணிந்துகொண்டு:
9ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், எங்கள் நடுவில் ஆண்டவர் எழுந்தருளவேண்டும்; இந்த ஜனங்கள் வணங்காக்கழுத்துள்ளவர்கள்; நீரோ, எங்கள் அக்கிரமத்தையும் எங்கள் பாவத்தையும் மன்னித்து, எங்களை உமக்குச் சுதந்தரமாக ஏற்றுக்கொள்ளும் என்றான்.
10அதற்கு அவர்: இதோ, நான் ஒரு உடன்படிக்கைபண்ணுகிறேன்; பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன்; உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள்; உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்.
11இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறதைக் கைக்கொள்; எமோரியனையும், கானானியனையும், ஏத்தியனையும், பெரிசியனையும், ஏவியனையும், எபூசியனையும் உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறேன்.
12நீ போய்ச் சேருகிற தேசத்தின் குடிகளோடு உடன்படிக்கைபண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிரு; பண்ணினால் அது உன் நடுவில் கண்ணியாயிருக்கும்.
13அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை வெட்டிப்போடுங்கள்.
14கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, அவர் எரிச்சலுள்ள தேவனே; ஆகையால், அந்நிய தேவனை நீ பணிந்துகொள்ளவேண்டாம்.
15அந்தத் தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கைபண்ணுவாயானால், அவர்கள் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றி, தங்களுடைய தேவர்களுக்குப் பலியிடுவார்கள்; ஒருவன் உன்னை அழைக்கையில், நீ போய், அவன் பலியிட்டதிலே புசிப்பாய்;
16அவர்கள் குமாரத்திகளில் உன் குமாரருக்குப் பெண்களைக் கொள்ளுவாய்; அவர்கள் குமாரத்திகள் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றுவதும் அல்லாமல், உன் குமாரரையும் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றும்படி செய்வார்கள்.
17வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்கவேண்டாம்.
18புளிப்பில்லா அப்பப்பண்டிகையை நீங்கள் கைக்கொண்டு, நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, ஆபீப் மாதத்தில் குறித்த காலத்திலே ஏழுநாள் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள்; ஆபீப் மாதத்திலே எகிப்திலிருந்து புறப்பட்டாயே.
19கர்ப்பந்திறந்து பிறக்கிற யாவும், உன் ஆடுமாடுகளின் தலையீற்றான ஆண்கள் யாவும் என்னுடையவைகள்.
20கழுதையின் தலையீற்றை ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்வாயாக; அதை மீட்டுக்கொள்ளாதிருந்தால் அதின் கழுத்தை முறித்துப்போடு; உன் பிள்ளைகளில் முதற்பேறானவைகளையெல்லாம் மீட்டுக்கொள்ளவேண்டும். வெறுங்கையோடே என் சந்நிதியில் ஒருவனும் வரக்கூடாது.
21ஆறுநாள் வேலைசெய்து, ஏழாம் நாளிலே ஓய்ந்திருப்பாயாக; விதைப்புக் காலத்திலும் அறுப்புக் காலத்திலும் ஓய்ந்திருப்பாயாக.
22கோதுமை அறுப்பின் முதற்பலனைச் செலுத்தும் ஏழு வாரங்களின் பண்டிகையையும், வருஷமுடிவிலே சேர்ப்புக்கால பண்டிகையையும் ஆசரிப்பாயாக.
23வருஷத்தில் மூன்றுதரம் உங்கள் ஆண்மக்கள் எல்லாரும் இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய ஆண்டவரின் சந்நிதியில் வரக்கடவர்கள்.
24நான் புறஜாதிகளை உங்கள் முன்னின்று துரத்திவிட்டு, உங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்குவேன்; வருஷத்தில் மூன்றுதரம் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு முன்பாகக் காணப்படப் போயிருக்கும்போது ஒருவரும் உங்கள் தேசத்தை இச்சிப்பதில்லை.
25எனக்கு இடும் பலியின் இரத்தத்தைப் புளித்தமாவுடன் செலுத்தவேண்டாம்; பஸ்கா பண்டிகையின் பலியை விடியற்காலம்வரைக்கும் வைக்கவும் வேண்டாம்.
26உங்கள் நிலத்தில் முதல் முதல் விளைந்த முதற்பலத்தை உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்துக்குக் கொண்டுவாருங்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம் என்றார்.
27பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த வார்த்தைகளை நீ எழுது; இந்த வார்த்தைகளின்படியே உன்னோடும் இஸ்ரவேலோடும் உடன்படிக்கைபண்ணினேன் என்றார்.
28அங்கே அவன் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இரவும் பகலும் நாற்பதுநாள் கர்த்தரோடே இருந்தான்; அவன் பத்துக்கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளைப் பலகைகளில் எழுதினான்.
29மோசே சாட்சிப் பலகைகள் இரண்டையும் தன் கையில் எடுத்துக்கொண்டு, சீனாய் மலையிலிருந்து இறங்குகிறபோது, தன்னோடே அவர் பேசினதினாலே தன் முகம் பிரகாசித்திருப்பதை அவன் அறியாதிருந்தான்.
30ஆரோனும் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேயைப் பார்க்கும்போது, அவன் முகம் பிரகாசித்திருப்பதைக் கண்டு, அவன் சமீபத்தில் சேரப்பயந்தார்கள்.
31மோசே அவர்களை அழைத்தான்; அப்பொழுது ஆரோனும் சபையிலுள்ள பிரபுக்கள் யாவரும் அவனிடத்திற்குத் திரும்பி வந்தார்கள்; மோசே அவர்களோடே பேசினான்.
32பின்பு இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் அவனிடத்தில் சேர்ந்தார்கள்; அப்பொழுது அவன் சீனாய் மலையில் கர்த்தர் தன்னோடே பேசினவைகளையெல்லாம் அவர்களுக்குக் கற்பித்தான்.
33மோசே அவர்களோடே பேசி முடியுமளவும், தன் முகத்தின்மேல் முக்காடு போட்டிருந்தான்.
34மோசே கர்த்தருடைய சந்நிதியில் அவரோடே பேசும்படிக்கு உட்பிரவேசித்ததுமுதல் வெளியே புறப்படும்மட்டும் முக்காடு போடாதிருந்தான்; அவன் வெளியே வந்து தனக்குக் கற்பிக்கப்பட்டதை இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லும்போது,
35இஸ்ரவேல் புத்திரர் அவன் முகம் பிரகாசித்திருப்பதைக் கண்டார்கள். மோசே அவரோடே பேசும்படிக்கு உள்ளே பிரவேசிக்கும்வரைக்கும், முக்காட்டைத் திரும்பத் தன் முகத்தின்மேல் போட்டுக்கொள்ளுவான்.

யாத்திராகமம் 35

1மோசே இஸ்ரவேல், புத்திரராகிய சபையார் எல்லாரையும் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி;
2நீங்கள் ஆறுநாள் வேலைசெய்யவேண்டும், ஏழாம் நாளோ உங்களுக்குப் பரிசுத்த நாளாய் இருப்பதாக; அது கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வுநாள்; அதிலே வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படக்கடவன்.
3ஓய்வுநாளில் உங்கள் வாசஸ்தலங்களில் எங்கும் நெருப்பு மூட்டாதிருப்பீர்களாக என்னும் இவ்வார்த்தைகளைக் கைக்கொள்ளும்படி கர்த்தர் கட்டளையிட்டார் என்றான்.
4பின்னும் மோசே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரையும் நோக்கி:
5உங்களுக்கு உண்டானதிலே கர்த்தருக்கு ஒரு காணிக்கையைக் கொண்டுவந்து செலுத்துங்கள்; மனமுள்ளவன் எவனோ, அவன் அதைக் கொண்டுவரட்டும்; கர்த்தருக்குச் செலுத்தும் காணிக்கை என்னவென்றால், பொன்னும், வெள்ளியும், வெண்கலமும்,
6இளநீலநூலும், இரத்தாம்பரநூலும், சிவப்புநூலும், மெல்லிய பஞ்சுநூலும், வெள்ளாட்டு மயிரும்,
7சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலும், தகசுத்தோலும், சீத்திம் மரமும்,
8விளக்குக்கு எண்ணெயும், அபிஷேக தைலத்துக்குப் பரிமளவர்க்கங்களும், தூபத்துக்குச் சுகந்தவர்க்கங்களும்,
9ஆசாரியருடைய ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கத்தக்க கோமேதகம் முதலிய இரத்தினங்களுமே.
10உங்களில் ஞானஇருதயமுள்ள அனைவரும் வந்து, கர்த்தர் கட்டளையிட்டவைகளையெல்லாம் செய்வார்களாக.
11வாசஸ்தலத்தையும், அதின் கூடாரத்தையும், அதின் மூடியையும், அதின் கொக்கிகளையும், அதின் பலகைகளையும், அதின் தாழ்ப்பாள்களையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும்,
12பெட்டியையும், அதின் தண்டுகளையும், கிருபாசனத்தையும், மறைவின் திரைச்சீலையையும்,
13மேஜையையும், அதின் தண்டுகளையும், அதின் சகல பணிமுட்டுகளையும், சமுகத்தப்பங்களையும்,
14வெளிச்சங்கொடுக்கும் குத்துவிளக்கையும், அதின் கருவிகளையும், அதின் அகல்களையும், வெளிச்சத்துக்கு எண்ணெயையும்,
15தூபப்பீடத்தையும், அதின் தண்டுகளையும், அபிஷேகத்தைலத்தையும், சுகந்த தூபவர்க்கத்தையும், வாசஸ்தலத்தின் வாசலுக்குத் தொங்குதிரையையும்,
16தகனபலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், அதின் தண்டுகளையும், அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும், அதின் பாதத்தையும்,
17பிராகாரத்தின் தொங்குதிரைகளையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், பிராகாரத்து வாசலின் தொங்குதிரையையும்,
18வாசஸ்தலத்தின் முளைகளையும், பிராகாரத்தின் முளைகளையும், அவைகளின் கயிறுகளையும்,
19பரிசுத்த ஸ்தலத்திலே ஆராதனை செய்வதற்குரிய வஸ்திரங்களையும், ஆசாரிய ஊழியஞ்செய்கிற ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்களையும் அவன் குமாரரின் வஸ்திரங்களையும் அவர்கள் செய்யக்கடவர்கள் என்றான்.
20அப்பொழுது இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் மோசேயின் சமுகத்தைவிட்டுப் புறப்பட்டார்கள்.
21பின்பு எவர்களை அவர்கள் இருதயம் எழுப்பி, எவர்களை அவர்கள் ஆவி உற்சாகப்படுத்தினதோ, அவர்கள் எல்லாரும் ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைக்கும், அதின் சகல ஊழியத்துக்கும், பரிசுத்த வஸ்திரங்களுக்கும் ஏற்றவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள்.
22மனப்பூர்வமுள்ள ஸ்திரீ புருஷர் யாவரும், அஸ்தகடகங்கள், காதணிகள், மோதிரங்கள், ஆரங்கள் முதலான சகலவித பொன்னாபரணங்களையும் கொண்டு வந்தார்கள்; கர்த்தருக்குக் காணிக்கை செலுத்தின ஒவ்வொருவனும் பொன்னைக் காணிக்கையாகச் செலுத்தினான்.
23இளநீலநூலையும் இரத்தாம்பரநூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சுநூலையும் வெள்ளாட்டு மயிரையும் சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலையும் தகசுத்தோலையும் தங்களிடத்தில் வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள்.
24வெள்ளியையும் வெண்கலத்தையும் கொடுக்கத்தக்க யாவரும் அவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்தார்கள். பற்பல வேலைகளுக்கு உதவும் சீத்திம் மரத்தைத் தங்களிடத்தில் வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள்.
25ஞான இருதயமுள்ள ஸ்திரீகள் எல்லாரும் தங்கள் கைகளினால் நூற்று, தாங்கள் நூற்ற இளநீலநூலையும் இரத்தாம்பரநூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சுநூலையும் கொண்டுவந்தார்கள்.
26எந்த ஸ்திரீகளுடைய இருதயம் ஞான எழுப்புதல் அடைந்ததோ, அவர்கள் எல்லாரும் வெள்ளாட்டு மயிரைத்திரித்தார்கள்.
27பிரபுக்கள் ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகம் முதலிய இரத்தினங்களையும்,
28பரிமளவர்க்கங்களையும், விளக்கெண்ணெயையும், அபிஷேகதைலத்துக்கும் சுகந்தவர்க்க தூபத்துக்கும் வேண்டியவைகளையும் கொண்டுவந்தார்கள்.
29செய்யப்படும்படி கர்த்தர் மோசேயைக்கொண்டு கற்பித்த வேலைக்குரிய யாவையும் கொண்டுவர, இஸ்ரவேல் புத்திரருக்குள் தங்கள் இருதயத்தில் உற்சாகமடைந்த ஸ்திரீ புருஷர் யாவரும் கர்த்தருக்குக் காணிக்கையை மனப்பூர்வமாய்க் கொண்டுவந்தார்கள்.
30பின்பு மோசே இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: பாருங்கள், கர்த்தர் யூதாவின் கோத்திரத்தில் ஊரின் மகனான ஊரியின் குமாரன் பெசலெயேலைப் பேர்சொல்லி அழைத்து,
31அவன் விசித்திரமான வேலைகளை யோசித்துச் செய்யவும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலை செய்யவும்,
32இரத்தினங்களை முத்திரை வெட்டாக வெட்டிப் பதிக்கவும், மரத்தில் சித்திரவேலை செய்து சகல விநோதமான வேலைகளைச் செய்யவும்,
33அவனுக்கு ஞானத்தையும் புத்தியையும் அறிவையும் அருளி, அவன் சகலவித வேலைகளையும் செய்யும்படி தேவஆவியினாலே அவனை நிரப்பினார்.
34அவன் இருதயத்திலும், தாண் கோத்திரத்து அகிசாமாகின் குமாரனாகிய அகோலியாபின் இருதயத்திலும், போதிக்கும் வரத்தையும் அருளினார்.
35சித்திரவேலையையும் சிற்பவேலையையும், இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்படும் விசித்திரத் தையல்வேலையையும், சகல விசித்திர நெசவு வேலைகளையும் விநோதமான வேலைகளை யூகிக்கிறவர்களும் செய்கிறவர்களும் நிறைவேற்றும் சகலவித வேலைகளையும் செய்யும்படிக்கு அவர்களுடைய இருதயத்தை ஞானத்தினால் நிரப்பினார் என்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *