Scripture Portion: Leviticus 19-21

லேவியராகமம் 19

1பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
2நீ இஸ்ரவேல் புத்திரரின் சபை அனைத்தோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்.
3உங்களில் அவனவன் தன்தன் தாய்க்கும் தன்தன் தகப்பனுக்கும் பயந்திருக்கவும், என் ஓய்வு நாட்களை ஆசரிக்கவும்கடவீர்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
4விக்கிரகங்களை நாடாமலும், வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
5நீங்கள் சமாதானபலியைக் கர்த்தருக்குச் செலுத்தினால், அதை மனோற்சாகமாய்ச் செலுத்துங்கள்.
6நீங்கள் அதைச் செலுத்துகிற நாளிலும் மறுநாளிலும் அதைப் புசிக்கவேண்டும்; மூன்றாம் நாள்மட்டும் மீதியானது அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது.
7மூன்றாம் நாளில் அதில் ஏதாகிலும் புசிக்கப்பட்டால் அருவருப்பாயிருக்கும்; அது அங்கிகரிக்கப்படமாட்டாது.
8அதைப் புசிக்கிறவன் கர்த்தருக்குப் பரிசுத்தமானதைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினபடியால் அவன் தன் அக்கிரமத்தைச் சுமந்து, தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
9நீங்கள் தேசத்தின் பயிரை அறுக்கும்போது, உன் வயலின் ஓரத்திலிருக்கிறதைத் தீர அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும்,
10உன் திராட்சத்தோட்டத்திலே பின் அறுப்பை அறுக்காமலும், அதிலே சிந்திக்கிடக்கிற பழங்களைப் பொறுக்காமலும், அவைகளை எளியவனுக்கும் பரதேசிக்கும் விட்டுவிடுவாயாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
11நீங்கள் களவுசெய்யாமலும், வஞ்சனைபண்ணாமலும், ஒருவருக்கொருவர் பொய் சொல்லாமலும் இருங்கள்.
12என் நாமத்தைக்கொண்டு பொய்யாணையிடுகிறதினால், உங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்காமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர்.
13பிறனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருப்பாயாக; கூலிக்காரனுடைய கூலி விடியற்காலம்மட்டும் உன்னிடத்தில் இருக்கலாகாது.
14செவிடனை நிந்தியாமலும், குருடனுக்கு முன்னே தடுக்கலை வையாமலும், உன் தேவனுக்குப் பயந்திருப்பாயாக; நான் கர்த்தர்.
15நியாயவிசாரணையில் அநியாயம் செய்யாதிருங்கள்; சிறியவனுக்கு முகதாட்சிணியம் செய்யாமலும், பெரியவனுடைய முகத்துக்கு அஞ்சாமலும், நீதியாகப் பிறனுக்கு நியாயந்தீர்ப்பாயாக.
16உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் கர்த்தர்.
17உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகையாயாக; பிறன்மேல் பாவம் சுமராதபடிக்கு அவனை எப்படியும் கடிந்து கொள்ளவேண்டும்.
18பழிக்குப்பழி வாங்காமலும் உன் ஜனப்புத்திரர் மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூறுவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் கர்த்தர்.
19என் கட்டளைகளைக் கைக்கொள்வீர்களாக; உன் மிருகஜீவன்களை வேறு ஜாதியோடே பொலியவிடாயாக; உன் வயலிலே வெவ்வேறு வகையான விதைகளைக் கலந்து விதையாயாக; சணல்நூலும் கம்பளிநூலும் கலந்த வஸ்திரத்தை உடுத்தாதிருப்பாயாக.
20ஒருவனுக்கு அடிமையானவள் ஒரு புருஷனுக்கு நியமிக்கப்பட்டவளாயிருந்து, முற்றிலும் மீட்கப்படாமலும் தன்னிச்சையாய் விடப்படாமலுமிருக்க, அவளோடே ஒருவன் சம்யோகமாய்ச் சயனம்பண்ணினால், அவர்கள் கொலை செய்யப்படாமல், அடிக்கப்படவேண்டும்; அவள் சுயாதீனமுள்ளவள் அல்ல.
21அவன் தன் குற்றநிவாரணபலியாய் ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் ஒரு ஆட்டுக்கடாவைக் கொண்டுவரக்கடவன்.
22அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தினிமித்தம் அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவன் செய்த பாவம் அவனுக்கு மன்னிக்கப்படும்.
23நீங்கள் அந்த தேசத்தில் வந்து, புசிக்கத்தக்க கனிகளைத் தருகிற பலவித மரங்களை நாட்டினபின்பு அவைகளின் கனிகளை விருத்தசேதனமில்லாதவைகளென்று எண்ணுவீர்களாக; மூன்று வருஷம் அது புசிக்கப்படாமல், விருத்தசேதனமில்லாததாய் உங்களுக்கு எண்ணப்படவேண்டும்.
24பின்பு நாலாம் வருஷத்திலே அவைகளின் கனிகளெல்லாம் கர்த்தருக்குத் துதிசெலுத்துகிறதற்கேற்ற பரிசுத்தமாயிருக்கும்.
25ஐந்தாம் வருஷத்திலே அவைகளின் கனிகளைப் புசிக்கலாம்; இப்படி அவைகளின் பலன் உங்களுக்குப் பெருகும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
26யாதொன்றையும் இரத்தத்துடன் புசிக்கவேண்டாம். குறிகேளாமலும், நாள்பாராமலும் இருப்பீர்களாக.
27உங்கள் தலைமயிரைச் சுற்றி ஒதுக்காமலும், தாடியின் ஓரங்களைக் கத்தரிக்காமலும்,
28செத்தவனுக்காக உங்கள் சரீரத்தைக் கீறிக்கொள்ளாமலும், அடையாளமான எழுத்துக்களை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர்.
29தேசத்தார் வேசித்தனம்பண்ணி தேசமெங்கும் முறைகேடான பாவம் நிறையாதபடிக்கு உன் குமாரத்தியை வேசித்தனம்பண்ண விடுகிறதினாலே பரிசுத்தக் குலைச்சலாக்காயாக.
30என் ஓய்வுநாட்களை ஆசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாயிருப்பீர்களாக; நான் கர்த்தர்.
31அஞ்சனம் பார்க்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள்; அவர்களாலே தீட்டுப்படவேண்டாம்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
32நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணி, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக; நான் கர்த்தர்.
33யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்தவேண்டாம்.
34உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தீர்களே; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
35நியாயவிசாரணையிலும், அளவிலும், நிறையிலும், படியிலும் அநியாயம் செய்யாதிருப்பீர்களாக.
36சுமுத்திரையான தராசும், சுமுத்திரையான நிறைகல்லும், சுமுத்திரையான மரக்காலும், சுமுத்திரையான படியும் உங்களுக்கு இருக்கவேண்டும்; நான் உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்.
37ஆகையால் என்னுடைய கட்டளைகள் யாவையும் என்னுடைய நியாயங்கள் யாவையும் கைக்கொண்டு, அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; நான் கர்த்தர் என்று சொல் என்றார்.

லேவியராகமம் 20

1கர்த்தர் மோசேயை நோக்கி:
2பின்னும் நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்; இஸ்ரவேல் புத்திரரிலும் இஸ்ரவேலில் வாசம்பண்ணுகிற அந்நியர்களிலும் எவனாகிலும் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுத்தால், அவன் கொலைசெய்யப்படவேண்டும்; தேசத்தின் ஜனங்கள் அவன்மேல் கல்லெறியவேண்டும்.
3அவன் என் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தி, என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்கும்படிக்கு, தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுத்ததினாலே, நான் அப்படிப்பட்டவனுக்கு விரோதமாக எதிர்த்து நின்று, அவனைத் தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டு போகப்பண்ணுவேன்.
4அவன் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுக்கும்போது, தேசத்தின் ஜனங்கள் அவனைக் கொலைசெய்யாதபடிக்குக் கண்சாடையாயிருந்தால்,
5நான் அந்த மனிதனுக்கும் அவன் குடும்பத்துக்கும் விரோதமாக எதிர்த்து நின்று, அவனையும், அவன் பிறகே மோளேகை விபசாரமார்க்கமாய்ப் பின்பற்றின யாவரையும், தங்கள் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகப்பண்ணுவேன்.
6அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் பின்தொடர்ந்து சோரம்போக எந்த ஆத்துமா அவர்களை நாடுகிறானோ, அந்த ஆத்துமாவுக்கு விரோதமாக எதிர்த்துநின்று, அவனைத் தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகப்பண்ணுவேன்.
7ஆதலால் நீங்கள் உங்களைப் பரிசுத்தப்படுத்திப் பரிசுத்தராயிருங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
8என் கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.
9தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபிக்கிற எவனும் கொலைசெய்யப்படக்கடவன்; அவன் தன் தகப்பனையும் தன் தாயையும் சபித்தான், அவன் இரத்தப்பழி அவன்மேல் இருப்பதாக.
10ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபசாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபசாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலைசெய்யப்படக்கடவர்கள்.
11தன் தகப்பன் மனைவியோடே சயனிக்கிறவன் தன் தகப்பனை நிர்வாணமாக்கினபடியால், இருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள்; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.
12ஒருவன் தன் மருமகளோடே சயனித்தால், இருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள்; அருவருப்பான தாறுமாறு பண்ணினார்கள்; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.
13ஒருவன் பெண்ணோடே சம்யோகம்பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம்பண்ணினால், அருவருப்பான காரியம் செய்த அவ்விருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள்; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.
14ஒருவன் ஒரு ஸ்திரீயையும் அவள் தாயையும் படைத்தால், அது முறைகேடு; இவ்வித முறைகேடு உங்களுக்குள் இராதபடிக்கு, அவனையும் அவர்களையும் அக்கினியில் சுட்டெரிக்கவேண்டும்.
15ஒருவன் மிருகத்தோடே புணர்ந்தால், அவன் கொலைசெய்யப்படக்கடவன்; அந்த மிருகத்தையும் கொல்லக்கடவீர்கள்.
16ஒரு ஸ்திரீ யாதொரு மிருகத்தோடே சேர்ந்து சயனித்தால், அந்த ஸ்திரீயையும் அந்த மிருகத்தையும் கொல்லக்கடவாய்; இருஜீவனும் கொலைசெய்யப்படவேண்டும்; அவைகளின் இரத்தப்பழி அவைகளின்மேல் இருப்பதாக.
17ஒருவன் தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது குமாரத்தியாயிருக்கிற தன் சகோதரியைச் சேர்த்துக்கொண்டு, அவன் அவளுடைய நிர்வாணத்தையும், அவள் அவனுடைய நிர்வாணத்தையும் பார்த்தால், அது பாதகம்; அவர்கள் தங்கள் ஜனங்களின் கண்களுக்கு முன்பாக அறுப்புண்டு போகக்கடவர்கள்; அவன் தன் சகோதரியை நிர்வாணப்படுத்தினான்; அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.
18ஒருவன் சூதகஸ்திரீயோடே சயனித்து, அவளை நிர்வாணமாக்கினால், அவன் அவளுடைய உதிர ஊற்றைத் திறந்து, அவளும் தன் உதிர ஊற்றை வெளிப்படுத்தினபடியால், இருவரும் தங்கள் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகவேண்டும்.
19உன் தாயினுடைய சகோதரியையும் உன் தகப்பனுடைய சகோதரியையும் நிர்வாணமாக்காயாக, அப்படிப்பட்டவன் தன் நெருங்கிய இனத்தை அவமானமாக்கினான்; அவர்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள்.
20ஒருவன் தன் தகப்பனின் சகோதரனுடைய மனைவியோடே சயனித்தால், அவன் தன் தகப்பனின் சகோதரனை நிர்வாணமாக்கினான்; அவர்கள் தங்கள் பாவத்தைச் சுமப்பார்கள், சந்தானமில்லாமல் சாவார்கள்.
21ஒருவன் தன் சகோதரன் மனைவியை விவாகம்பண்ணினால், அது அசுத்தம்; தன் சகோதரனை நிர்வாணமாக்கினான், அவர்கள் சந்தானமற்றிருப்பார்கள்.
22ஆகையால் நீங்கள் குடியிருப்பதற்காக நான் உங்களைக் கொண்டுபோகிற தேசம் உங்களைக் கக்கிப்போடாதபடிக்கு, நீங்கள் என் கட்டளைகள் யாவையும் என்னுடைய நியாயங்கள் யாவையும் கைக்கொண்டு நடவுங்கள்.
23நான் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுகிற ஜனத்தினுடைய வழிபாடுகளில் நடவாதிருங்கள்; அவர்கள் இப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் செய்தபடியால் நான் அவர்களை அரோசித்தேன்.
24நீங்கள் அவர்கள் தேசத்தைச் சுதந்தரிப்பீர்கள் என்று உங்களோடே சொன்னேன்; பாலும் தேனும் ஒடுகிற அந்த தேசத்தை உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுப்பேன்; உங்களை மற்ற ஜனங்களை விட்டுப் பிரித்தெடுத்த உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே.
25ஆகையால் சுத்தமான மிருகங்களுக்கும் அசுத்தமான மிருகங்களுக்கும், சுத்தமான பறவைகளுக்கும் அசுத்தமான பறவைகளுக்கும் நீங்கள் வித்தியாசம்பண்ணி, நான் உங்களுக்குத் தீட்டாக எண்ணச்சொல்லி விலக்கின மிருகங்களாலும் பறவைகளாலும் தரையிலே ஊருகிற யாதொரு பிராணிகளாலும் உங்களை அருவருப்பாக்காதிருப்பீர்களாக.
26கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன்.
27அஞ்சனம் பார்க்கிறவர்களும் குறிசொல்லுகிறவர்களுமாயிருக்கிற புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கொலைசெய்யப்படவேண்டும்; அவர்கள்மேல் கல்லெறிவார்களாக; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருக்கக்கடவது என்று சொல் என்றார்.

லேவியராகமம் 21

1பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்களில் ஒருவனும் தன் ஜனத்தாரில் இறந்துபோன யாதொருவருக்காகத் தங்களைத் தீட்டுப்படுத்தலாகாதென்று அவர்களோடே சொல்.
2தன் தாயும், தன் தகப்பனும், தன் குமாரனும், தன் குமாரத்தியும், தன் சகோதரனும்,
3புருஷனுக்கு வாழ்க்கைப்படாமல் தன்னிடத்திலிருக்கிற கன்னியாஸ்திரீயான தன் சகோதரியுமாகிய தனக்கு நெருங்கிய இனமான இவர்களுடைய சாவுக்காகத் தீட்டுப்படலாம்.
4தன் ஜனத்தாரில் பெரியவனாகிய அவன் வேறொருவருக்காகவும் தன்னைப் பரிசுத்தக்குலைச்சலாக்கித் தீட்டுப்படுத்தலாகாது.
5அவர்கள் தங்கள் தலையை மொட்டையடிக்காமலும், தங்கள் தாடியின் ஓரங்களைச் சிரைத்துப்போடாமலும், தங்கள் தேகத்தைக் கீறிக்கொள்ளாமலும் இருப்பார்களாக.
6தங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமல் அவருக்கேற்ற பரிசுத்தராயிருப்பார்களாக; அவர்கள் கர்த்தரின் தகனபலிகளையும் தங்கள் தேவனுடைய அப்பத்தையும் செலுத்துகிறவர்களாதலால் பரிசுத்தராயிருக்கவேண்டும்.
7அவர்கள் தங்கள் தேவனுக்குப் பரிசுத்தமானவர்கள், ஆகையால் வேசியையாகிலும் கற்புக்குலைந்தவளையாகிலும் விவாகம்பண்ணார்களாக; தன் புருஷனாலே தள்ளப்பட்ட ஸ்திரீயையும் விவாகம்பண்ணார்களாக.
8அவன் தேவனுடைய அப்பத்தைச் செலுத்துகிறபடியால் நீ அவனைப் பரிசுத்தப்படுத்தவேண்டும்; உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியால், அவனும் உனக்கு முன்பாகப் பரிசுத்தனாயிருப்பானாக.
9ஆசாரியனுடைய குமாரத்தி, வேசித்தனம்பண்ணி, தன்னைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினால், அவள் தன் தகப்பனையும் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறாள்; அவள் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவள்.
10தன் சகோதரருக்குள்ளே பிரதான ஆசாரியனாக தன் சிரசில் அபிஷேகதைலம் வார்க்கப்பட்டவனும், அவனுக்குரிய வஸ்திரங்களைத் தரிக்கும்படி பிரதிஷ்டை பண்ணப்பட்டவனுமாயிருக்கிறவன் எவனோ, அவன் தன் பாகையை எடுக்காமலும், தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொள்ளாமலும்,
11பிரேதம் கிடக்கும் இடத்தில் போகாமலும், தன் தகப்பனுக்காகவும் தன் தாய்க்காகவும் தன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாமலும்,
12பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படாமலும் தன் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமலும் இருப்பானாக; அவனுடைய தேவனின் அபிஷேகதைலம் என்னும் கிரீடம் அவன்மேல் இருக்கிறதே: நான் கர்த்தர்.
13கன்னிகையாயிருக்கிற பெண்ணை அவன் விவாகம்பண்ணவேண்டும்.
14விதவையையானாலும் தள்ளப்பட்டவளையானாலும் கற்புக்குலைந்தவளையானாலும் வேசியையானாலும் விவாகம்பண்ணாமல், தன் ஜனங்களுக்குள்ளே ஒரு கன்னிகையை விவாகம்பண்ணக்கடவன்.
15அவன் தன் வித்தைத் தன் ஜனங்களுக்குள்ளே பரிசுத்தக் குலைச்சலாக்காமல் இருப்பானாக; நான் அவனைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார்.
16பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
17நீ ஆரோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உன் சந்ததியாருக்குள்ளே அங்கவீனமுள்ளவன் தலைமுறைதோறும் தேவனுடைய அப்பத்தைச் செலுத்தும்படி சேரலாகாது.
18அங்கவீனமுள்ள ஒருவனும் அணுகலாகாது; குருடனானாலும், சப்பாணியானாலும், குறுகின அல்லது நீண்ட அவயவமுள்ளவனானாலும்,
19காலொடிந்தவனானாலும், கையொடிந்தவனானாலும்,
20கூனனானாலும், குள்ளனானாலும், பூவிழுந்த கண்ணனானாலும், சொறியனானாலும், அசறுள்ளவனானாலும், விதை நசுங்கினவனானாலும் அணுகலாகாது.
21ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததியாரில் அங்கவீனமுள்ள ஒருவனும் கர்த்தரின் தகனபலிகளைச் செலுத்தச் சேரலாகாது; அவன் அங்கவீனமுள்ளவனாகையால், அவன் தேவனுடைய அப்பத்தைச் செலுத்தச் சேரலாகாது.
22அவன் தன் தேவனுடைய அப்பமாகிய மகா பரிசுத்தமானவைகளிலும் மற்ற பரிசுத்தமானவைகளிலும் புசிக்கலாம்.
23ஆனாலும் அவன் அங்கவீனமுள்ளவனாகையால், அவன் என் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடிக்குத் திரைக்குள்ளே போகாமலும் பலிபீடத்தண்டையில் சேராமலும் இருப்பானாக; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார்.
24மோசே இவைகளை ஆரோனோடும் அவன் குமாரரோடும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொன்னான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *