Scripture Portion: Job 10-13

யோபு 10

1என் ஆத்துமா ஜீவனை அரோசிக்கிறது, நான் என் துயரத்துக்கு எனக்குள்ளே இடங்கொடுத்து, என் மனச்சஞ்சலத்தினாலே பேசுவேன்.
2நான் தேவனை நோக்கி: என்னைக் குற்றவாளியென்று தீர்க்காதிரும்; நீர் எதினிமித்தம் என்னோடே வழக்காடுகிறீர், அதை எனக்குத் தெரியப்படுத்தும் என்பேன்.
3நீர் என்னை ஒடுக்கி, உம்முடைய கைகளின் கிரியையை வெறுத்து, துன்மார்க்கரின் யோசனையைக் கிருபையாய்ப் பார்க்கிறது உமக்கு நன்றாயிருக்குமோ?
4மாம்சக்கண்கள் உமக்கு உண்டோ? மனுஷன் பார்க்கிறபிரகாரமாய்ப் பார்க்கிறீரோ?
5நீர் என் அக்கிரமத்தைக் கிண்டிக்கிளப்பி, என் பாவத்தை ஆராய்ந்து விசாரிக்கிறதற்கு,
6உம்முடைய நாட்கள் ஒரு மனுஷனுடைய நாட்களைப்போலவும், உம்முடைய வருஷங்கள் ஒரு புருஷனுடைய ஜீவகாலத்தைப்போலவும் இருக்கிறதோ?
7நான் துன்மார்க்கன் அல்ல என்பது உமக்குத் தெரியும்; உம்முடைய கைக்கு என்னைத் தப்புவிக்கிறவன் இல்லை.
8உம்முடைய கரங்கள் என்னையும் எனக்குரிய எல்லாவற்றையும் உருவாக்கிப் படைத்திருந்தும், என்னை நிர்மூலமாக்குகிறீர்.
9களிமண்போல என்னை உருவாக்கினீர் என்பதையும், என்னைத் திரும்பத் தூளாகப்போகப்பண்ணுவீர் என்பதையும் நினைத்தருளும்.
10நீர் என்னைப் பால்போல் வார்த்து, தயிர்போல் உறையப்பண்ணினீர் அல்லவோ?
11தோலையும் சதையையும் எனக்குத் தரித்து, எலும்புகளாலும் நரம்புகளாலும் என்னை இசைத்தீர்.
12எனக்கு ஜீவனைத் தந்ததும் அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர்; உம்முடைய பராமரிப்பு என் ஆவியைக் காப்பாற்றினது.
13இவைகள் உம்முடைய உள்ளத்தில் மறைந்திருந்தாலும், இது உமக்குள் இருக்கிறது என்று அறிவேன்.
14நான் பாவஞ்செய்தால், அதை நீர் என்னிடத்தில் விசாரித்து, என் அக்கிரமத்தை என்மேல் சுமத்தாமல் விடீர்.
15நான் துன்மார்க்கனாயிருந்தால் எனக்கு ஐயோ! நான் நீதிமானாயிருந்தாலும் என் தலையை நான் எடுக்கமாட்டேன்; அவமானத்தால் நிரப்பப்பட்டேன்; நீர் என் சிறுமையைப் பார்த்தருளும், அது அதிகரிக்கிறது.
16சிங்கத்தைப்போல என்னை வேட்டையாடி, எனக்கு விரோதமாய் உமது அதிசய வல்லமையை விளங்கப்பண்ணுகிறீர்.
17நீர் உம்முடைய சாட்சிகளை எனக்கு விரோதமாய் இரட்டிக்கப்பண்ணுகிறீர்; என்மேல் உம்முடைய கோபத்தை அதிகரிக்கப்பண்ணுகிறீர்; போராட்டத்தின்மேல் போராட்டம் அதிகரிக்கிறது.
18நீர் என்னைக் கர்ப்பத்திலிருந்து புறப்படப்பண்ணினது என்ன? ஒரு கண்ணும் என்னைக் காணாதபடி, நான் அப்பொழுதே ஜீவித்துப்போனால் நலமாமே.
19நான் ஒருக்காலும் இல்லாதது போலிருந்து, கர்ப்பத்திலிருந்து பிரேதக்குழிக்குக் கொண்டுபோகப்பட்டிருப்பேன்.
20என் நாட்கள் கொஞ்சமல்லவோ?
21காரிருளும் மரணாந்தகாரமுமான இருண்ட தேசமும், இருள்சூழ்ந்த ஒழுங்கில்லாத மரணாந்தகாரமுள்ள தேசமும், ஒளியும் இருளாகும் தேசமுமாகிய, போனால் திரும்பிவராத தேசத்துக்கு, நான் போகுமுன்னே,
22நான் சற்று இளைப்பாறும்படி நீர் என்னைவிட்டு ஓய்ந்திரும் என்றான்.

யோபு 11

1அப்பொழுது நாகமாத்தியனாகிய சோப்பார் பிரதியுத்தரமாக:
2ஏராளமான வார்த்தைகளுக்கு உத்தரவு சொல்லவேண்டாமோ? வாய்ச்சாலகன் நீதிமானாய் விளங்குவானோ?
3உம்முடைய வீம்புவார்த்தைகளுக்கு மனுஷர் மவுனமாயிருப்பார்களோ? நீர் பரியாசம்பண்ணும்போது, ஒருவரும் உம்மை வெட்கப்படுத்தவேண்டாமோ?
4என் சொல் சுத்தம் என்றும், நான் தேவரீருடைய பார்வைக்குத் துப்புரவானவன் என்றும் நீர் சொல்லுகிறீர்.
5ஆனாலும் தேவன் பேசி, உமக்கு விரோதமாய்த் தம்முடைய உதடுகளைத் திறந்து,
6உமக்கு ஞானத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தினால் நலமாயிருக்கும்; உள்ளபடி பார்த்தால், அது இரட்டிப்புள்ளதாயிருக்கிறது; ஆகையால் உம்முடைய அக்கிரமத்திற்கேற்றபடி தேவன் உம்மைத் தண்டிக்கவில்லையென்று அறிந்துகொள்ளும்.
7தேவனுடைய அந்தரங்க ஞானத்தை நீர் ஆராய்ந்து, சர்வவல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியக்கூடுமோ?
8அது வானபரியந்தம் உயர்ந்தது; உம்மால் என்ன ஆகும்? அது பாதாளத்திலும் ஆழமானது, நீர் அறியக்கூடியது என்ன?
9அதின் அளவு பூமியைப்பார்க்கிலும் நீளமும், சமுத்திரத்தைப்பார்க்கிலும் அகலமுமாயிருக்கிறது.
10அவர் பிடித்தாலும், அவர் அடைத்தாலும், அவர் நியாயத்தில் கொண்டுவந்து நிறுத்தினாலும், அவரைத் தடைபண்ணுகிறவன் யார்?
11மனுஷருடைய மாயத்தை அவர் அறிவார்; அக்கிரமத்தை அவர் கண்டும், அதைக் கவனியாதிருப்பாரோ?
12புத்தியில்லாத மனுஷன் காட்டுக்கழுதைக்குட்டிக்கு ஒப்பாகப் பிறந்திருந்தாலும், பெருநெஞ்சுள்ளவனாயிருக்கிறான்.
13நீர் உம்முடைய இருதயத்தை ஆயத்தப்படுத்தி, உம்முடைய கைகளை அவருக்கு நேராக விரித்தால் நலமாயிருக்கும்.
14உம்முடைய கையிலே அக்கிரமம் இருந்தால், அதைத் தூரத்தில் அகற்றிவிட்டு, அநியாயம் உம்முடைய கூடாரங்களில் வாசமாயிருக்கவொட்டாதிரும்.
15அப்பொழுது உம்முடைய முகத்தை மாசில்லாமல் ஏறெடுத்து, பயப்படாமல் திடன்கொண்டிருப்பீர்.
16அப்பொழுது நீர் வருத்தத்தை மறந்து, கடந்துபோன தண்ணீரைப்போல அதை நினைப்பீர்.
17அப்பொழுது உம்முடைய ஆயுசுகாலம் பட்டப்பகலைப்பார்க்கிலும் பிரகாசமாயிருக்கும்; இருள் அடைந்த நீர் விடியற்காலத்தைப்போலிருப்பீர்.
18நம்பிக்கை உண்டாயிருக்கிறதினால் திடனாயிருப்பீர்; தோண்டி ஆராய்ந்து சுகமாய்ப் படுத்துக்கொள்வீர்.
19பயப்படுத்துவாரில்லாமல் நித்திரை செய்வீர்; அநேகர் உமது முகத்தை நோக்கி விண்ணப்பம் பண்ணுவார்கள்.
20துன்மார்க்கருடைய கண்கள் பூத்துப்போய், அவர்கள் அடைக்கலம் அவர்களை விட்டொழிந்து, அவர்கள் நம்பிக்கை சாகிறவன் சுவாசம்போல் அழிந்துபோகும் என்றான்.

யோபு 12

1யோபு பிரதியுத்தரமாக:
2ஆம், நீங்களே ஞானமுள்ள ஜனங்கள்; உங்களுடனே ஞானம் சாகும்.
3உங்களைப்போல எனக்கும் புத்தியுண்டு; உங்களிலும் நான் தாழ்ந்தவன் அல்ல; இப்படிப்பட்டவைகளை அறியாதவன் யார்?
4என் சிநேகிதரால் நான் நிந்திக்கப்பட்டு, தேவனை நோக்கிப் பிரார்த்திப்பேன்; அவர் எனக்கு மறு உத்தரவு அருளுவார்; உத்தமனாகிய நீதிமான் பரியாசம்பண்ணப்படுகிறான்.
5ஆபத்துக்குள்ளானவன் சுகமாயிருக்கிறவனுடைய நினைவில் இகழ்ச்சியடைகிறான்; காலிடறினவர்களுக்கு இது நேரிடும்.
6கள்ளருடைய கூடாரங்களில் செல்வமுண்டு; தேவனைக் கோபப்படுத்துகிறவர்களுக்குச் சாங்கோபாங்கமுண்டு; அவர்கள் கையிலே தேவன் கொண்டுவந்து கொடுக்கிறார்.
7இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார், அவைகள் உனக்குப் போதிக்கும்; ஆகாயத்துப் பறவைகளைக் கேள், அவைகள் உனக்கு அறிவிக்கும்.
8அல்லது பூமியை விசாரித்துக் கேள், அது உனக்கு உபதேசிக்கும்; சமுத்திரத்தின் மச்சங்களைக் கேள், அவைகள் உனக்கு விவரிக்கும்.
9கர்த்தருடைய கரம் இதைச் செய்ததென்று இவைகளெல்லாவற்றினாலும் அறியாதவன் யார்?
10சகல பிராணிகளின் ஜீவனும், மாம்சமான சகல மனுஷரின் ஆவியும் அவர் கையிலிருக்கிறது.
11வாயானது போஜனத்தை ருசிபார்க்கிறதுபோல, செவியானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கிறதல்லவா?
12முதியோரிடத்தில் ஞானமும் வயது சென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே.
13அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாய் இருக்கும்? அவருக்குத்தான் ஆலோசனையும் புத்தியும் உண்டு.
14இதோ, அவர் இடித்தால் கட்டமுடியாது; அவர் மனுஷனை அடைத்தால் விடுவிக்கமுடியாது.
15இதோ, அவர் தண்ணீர்களை அடக்கினால் எல்லாம் உலர்ந்துபோம்; அவர் அவைகளை வரவிட்டால், பூமியைக் கீழதுமேலதாக்கும்.
16அவரிடத்தில் பெலனும் ஞானமுமுண்டு; மோசம் போகிறவனும் மோசம் போக்குகிறவனும், அவர் கையின் கீழிருக்கிறார்கள்.
17அவர் ஆலோசனைக்காரரைச் சிறைபிடித்து, நியாயாதிபதிகளை மதிமயக்குகிறார்.
18அவர் ராஜாக்களுடைய கட்டுகளை அவிழ்த்து, அவர்கள் இடுப்புகளைக் கச்சைகட்டுகிறார்.
19அவர் மந்திரிகளைச் சிறைபிடித்துக்கொண்டுபோய், பெலவான்களைக் கவிழ்த்துப்போடுகிறார்.
20அவர் நம்பிக்கையுள்ளவர்களுடைய வாக்கை விலக்கி, முதிர்வயதுள்ளவர்களின் ஆலோசனையை வாங்கிப்போடுகிறார்.
21அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி வரப்பண்ணுகிறார்; பலவான்களின் கச்சையைத் தளர்ந்துபோகப்பண்ணுகிறார்.
22அவர் அந்தகாரத்திலிருக்கிற ஆழங்களை வெளியரங்கமாக்கி, மரண இருளை வெளிச்சத்தில் கொண்டுவருகிறார்.
23அவர் ஜாதிகளைப் பெருகவும் அழியவும்பண்ணுகிறார்; அவர் ஜாதிகளைப் பரவவும் குறுகவும் பண்ணுகிறார்.
24அவர் பூமியிலுள்ள ஜனத்தினுடைய அதிபதிகளின் நெஞ்சை அகற்றிப்போட்டு, அவர்களை வழியில்லாத அந்தரத்திலே அலையப்பண்ணுகிறார்.
25அவர்கள் வெளிச்சமற்ற இருளிலே தடவித்திரிகிறார்கள்; வெறித்தவர்களைப்போல அவர்களைத் தடுமாறித் திரியப்பண்ணுகிறார்.

யோபு 13

1இதோ, இவைகளெல்லாவற்றையும் என் கண் கண்டு, என் காது கேட்டு அறிந்திருக்கிறது.
2நீங்கள் அறிந்திருக்கிறதை நானும் அறிந்திருக்கிறேன்; நான் உங்களுக்குத் தாழ்ந்தவன் அல்ல.
3சர்வவல்லவரோடே நான் பேசினால் நல்லது; தேவனோடே நியாயத்திற்காக வழக்காட விரும்புவேன்.
4நீங்கள் பொய்யைப் பிணைக்கிறவர்கள்; நீங்கள் எல்லாரும் காரியத்துக்குதவாத வைத்தியர்கள்.
5நீங்கள் பேசாமலிருந்தால் நலமாகும்; அது உங்களுக்கு ஞானமாயிருக்கும்.
6நீங்கள் என் நியாயத்தைக் கேட்டு, என் உதடுகள் சொல்லும் விசேஷங்களைக் கவனியுங்கள்.
7நீங்கள் தேவனுக்காக நியாயக்கேடாய்ப் பேசி, அவருக்காக வஞ்சகமாய் வசனிக்கவேண்டுமோ?
8அவருக்கு முகதாட்சிணியம்பண்ணுவீர்களோ? தேவனுக்காக வழக்காடுவீர்களோ?
9அவர் உங்களை ஆராய்ந்துபார்த்தால் அது உங்களுக்கு நலமாயிருக்குமோ? மனுஷனைப் பரியாசம் பண்ணுகிறதுபோல அவரைப் பரியாசம்பண்ணுவீர்களோ?
10நீங்கள் அந்தரங்கமாய் முகதாட்சிணியம்பண்ணினால், அவர் உங்களை எவ்விதத்திலும் கண்டிப்பார்.
11அவருடைய மகத்துவம் உங்களைத் திடுக்கிடப்பண்ணாதோ? அவருடைய பயங்கரம் உங்களைப் பிடிக்கமாட்டாதோ?
12உங்கள் பேரை நினைக்கப்பண்ணும் அடையாளங்கள் சாம்பலுக்குச் சரி; உங்கள் மேட்டிமைகள் சேற்றுக்குவியல்களுக்குச் சமானம்.
13நீங்கள் மவுனமாயிருங்கள், நான் பேசுகிறேன், எனக்கு வருகிறது வரட்டும்.
14நான் என் பற்களினால் என் சதையைப் பிடுங்கி, என் பிராணனை என் கையிலே வைப்பானேன்?
15அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபகாரம்பண்ணுவேன்.
16அவரே என் இரட்சிப்பு; மாயக்காரனோ அவர் சந்நிதியில் சேரான்.
17என் வசனத்தையும், நான் சொல்லிக் காண்பிக்கிறதையும், உங்கள் செவிகளால் கவனமாய்க் கேளுங்கள்.
18இதோ, என் நியாயங்களை அணியணியாக வைத்தேன்; என் நீதி விளங்கும் என்று அறிவேன்.
19என்னோடே வழக்காடவேண்டுமென்று இருக்கிறவன் யார்? நான் மவுனமாயிருந்தால் ஜீவித்துப்போவேனே.
20இரண்டு காரியங்களை மாத்திரம் எனக்குச் செய்யாதிருப்பீராக; அப்பொழுது உமது முகத்துக்கு முன்பாக ஒளித்துக்கொள்ளாதிருப்பேன்.
21உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்; உம்முடைய பயங்கரம் என்னைக் கலங்கப்பண்ணாதிருப்பதாக.
22நீர் கூப்பிடும், நான் உத்தரவு கொடுப்பேன்; அல்லது நான் பேசுவேன்; நீர் எனக்கு மறுமொழி சொல்லும்.
23என் அக்கிரமங்களும் பாவங்களும் எத்தனை? என் மீறுதலையும் என்பாவத்தையும் எனக்கு உணர்த்தும்.
24நீர் உமது முகத்தை மறைத்து, என்னை உமக்குப் பகைஞனாக எண்ணுவானேன்?
25காற்றடித்த சருகை நொறுக்குவீரோ? காய்ந்துபோன துரும்பைப் பின்தொடருவீரோ?
26மகா கசப்பான தீர்ப்புகளை என்பேரில் எழுதுகிறீர்; என் சிறுவயதின் அக்கிரமங்களை எனக்குப் பலிக்கப்பண்ணுகிறீர்.
27என் கால்களைத் தொழுவடித்துப்போட்டு, என் வழிகளையெல்லாம் காவல்பண்ணுகிறீர்; என் காலடிகளில் அடையாளத்தைப் போடுகிறீர்.
28இப்படிப்பட்டவன் அழுகிப்போகிற வஸ்துபோலவும், பொட்டரித்த வஸ்திரம் போலவும் அழிந்து போவான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *