Scripture Portion: Numbers 23-25

எண்ணாகமம் 23

1பிலேயாம் பாலாகை நோக்கி: நீர் இங்கே எனக்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி, ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் இங்கே எனக்கு ஆயத்தப்படுத்தும் என்றான்.
2பிலேயாம் சொன்னபடியே பாலாக் செய்தான்; பாலாகும் பிலேயாமும் ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டார்கள்.
3பின்பு பிலேயாம் பாலாகை நோக்கி: உம்முடைய சர்வாங்கதகனபலியண்டையில் நில்லும், நான் போய்வருகிறேன்; கர்த்தர் வந்து என்னைச் சந்திக்கிறதாயிருக்கும்; அவர் எனக்கு வெளிப்படுத்துவதை உமக்கு அறிவிப்பேன் என்று சொல்லி, ஒரு மேட்டின்மேல் ஏறினான்.
4தேவன் பிலேயாமைச் சந்தித்தார்; அப்பொழுது அவன் அவரை நோக்கி: நான் ஏழு பலிபீடங்களை ஆயத்தம்பண்ணி, ஒவ்வொரு பலிபீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டேன் என்றான்.
5 கர்த்தர் பிலேயாமின் வாயிலே வாக்கு அருளி: நீ பாலாகினிடத்தில் திரும்பிப் போய், இவ்விதமாய்ச் சொல்லக்கடவாய் என்றார்.
6அவனிடத்துக்கு அவன் திரும்பிப்போனான்; பாலாக் மோவாபுடைய சகல பிரபுக்களோடுங்கூட தன் சர்வாங்கதகனபலியண்டையிலே நின்று கொண்டிருந்தான்.
7அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: மோவாபின் ராஜாவாகிய பாலாக் என்னைக் கிழக்கு மலைகளிலுள்ள ஆராமிலிருந்து வரவழைத்து: நீ வந்து எனக்காக யாக்கோபைச் சபிக்கவேண்டும்; நீ வந்து இஸ்ரவேலை வெறுத்துவிடவேண்டும் என்று சொன்னான்.
8தேவன் சபிக்காதவனை நான் சபிப்பதெப்படி? கர்த்தர் வெறுக்காதவனை நான் வெறுப்பதெப்படி?
9கன்மலையுச்சியிலிருந்து நான் அவனைக் கண்டு, குன்றுகளிலிருந்து அவனைப் பார்க்கிறேன்; அந்த ஜனங்கள் ஜாதிகளோடே கலவாமல் தனியே வாசமாயிருப்பார்கள்.
10யாக்கோபின் தூளை எண்ணத்தக்கவன் யார்? இஸ்ரவேலின் காற்பங்கை எண்ணுகிறவன் யார்? நீதிமான் மரிப்பதுபோல் நான் மரிப்பேனாக, என் முடிவு அவன் முடிவுபோல் இருப்பதாக என்றான்.
11அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: நீர் எனக்கு என்ன செய்தீர்; என் சத்துருக்களைச் சபிக்கும்படி உம்மை அழைப்பித்தேன்; நீர் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தீர் என்றான்.
12அதற்கு அவன்: கர்த்தர் என் வாயில் அருளினதையே சொல்வது என் கடமையல்லவா என்றான்.
13பின்பு பாலாக் அவனை நோக்கி: நீர் அவர்களைப் பார்க்கத்தக்க வேறொரு இடத்திற்கு என்னோடேகூட வாரும்; அங்கே அவர்கள் எல்லாரையும் பாராமல், அவர்களுடைய கடைசிப் பாளயத்தை மாத்திரம் பார்ப்பீர்; அங்கேயிருந்து எனக்காக அவர்களைச் சபிக்கவேண்டும் என்று சொல்லி,
14அவனைப் பிஸ்காவின் கொடுமுடியில் இருக்கிற சோப்பீமின் வெளியிலே அழைத்துக்கொண்டுபோய், ஏழு பலிபீடங்களைக் கட்டி, ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டான்.
15அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இங்கே உம்முடைய சர்வாங்கதகனபலியண்டையில் நில்லும்; நான் அங்கே போய்க் கர்த்தரைச் சந்தித்துவருகிறேன் என்றான்.
16 கர்த்தர் பிலேயாமைச் சந்தித்து, அவன் வாயிலே வசனத்தை அருளி; நீ பாலாகினிடத்திற்குத் திரும்பிப்போய், இவ்விதமாய்ச் சொல்லக்கடவாய் என்றார்.
17அவனிடத்திற்கு அவன் வருகிறபோது, அவன் மோவாபின் பிரபுக்களோடுங்கூடத் தன்னுடைய சர்வாங்கதகனபலியண்டையிலே நின்று கொண்டிருந்தான்; பாலாக் அவனை நோக்கி: கர்த்தர் என்ன சொன்னார் என்று கேட்டான்.
18அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பாலாகே, எழுந்திருந்து கேளும்; சிப்போரின் குமாரனே, எனக்குச் செவிகொடும்.
19பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?
20இதோ, ஆசீர்வதிக்கக் கட்டளைபெற்றேன்; அவர் ஆசீர்வதிக்கிறார், அதை நான் திருப்பக்கூடாது.
21அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை, இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களோடே இருக்கிறார்; ராஜாவின் ஜயகெம்பீரம் அவர்களுக்குள்ளே இருக்கிறது.
22தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு.
23யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை; தேவன் என்னென்ன செய்தார் என்று கொஞ்சக்காலத்திலே யாக்கோபையும் இஸ்ரவேலையும் குறித்துச் சொல்லப்படும்.
24அந்த ஜனம் துஷ்ட சிங்கம்போல எழும்பும், பால சிங்கம்போல நிமிர்ந்து நிற்கும்; அது தான் பிடித்த இரையைப்பட்சித்து, வெட்டுண்டவர்களின் இரத்தத்தைக் குடிக்குமட்டும் படுத்துக்கொள்வதில்லை என்றான்.
25அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: நீர் அவர்களைச் சபிக்கவும் வேண்டாம், அவர்களை ஆசீர்வதிக்கவும் வேண்டாம் என்றான்.
26அதற்குப் பிலேயாம் பாலாகைப் பார்த்து: கர்த்தர் சொல்லுகிறபடியெல்லாம் செய்வேன் என்று உம்மோடே நான் சொல்லவில்லையா என்றான்.
27அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: வாரும், வேறொரு இடத்திற்கு உம்மை அழைத்துக்கொண்டு போகிறேன்; நீர் அங்கேயிருந்தாவது எனக்காக அவர்களைச் சபிக்கிறது தேவனுக்குப் பிரியமாயிருக்கும் என்று சொல்லி,
28அவனை எஷிமோனுக்கு எதிராயிருக்கிற பேயோரின் கொடுமுடிக்கு அழைத்துக்கொண்டு போனான்.
29அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இங்கே எனக்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி, இங்கே எனக்கு ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் ஆயத்தம்பண்ணும் என்றான்.
30பிலேயாம் சொன்னபடி பாலாக் செய்து, ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டான்.

எண்ணாகமம் 24

1இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் என்று பிலேயாம் கண்டபோது, அவன் முந்திச் செய்து வந்ததுபோல நிமித்தம் பார்க்கப் போகாமல், வனாந்தரத்திற்கு நேராகத் தன் முகத்தைத் திருப்பி,
2தன் கண்களை ஏறெடுத்து, இஸ்ரவேல் தன் கோத்திரங்களின்படியே பாளயமிறங்கியிருக்கிறதைப் பார்த்தான்; தேவஆவி அவன்மேல் வந்தது.
3அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின் குமாரனாகிய பிலேயாம் சொல்லுகிறதாவது, கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,
4தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு தாழவிழும்போது, கண்திறக்கப்பட்டவன் விளம்புகிறதாவது,
5யாக்கோபே, உன் கூடாரங்களும், இஸ்ரவேலே, உன் வாசஸ்தலங்களும் எவ்வளவு அழகானவைகள்!
6அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப்போலவும், நதியோரத்திலுள்ள தோட்டங்களைப்போலவும், கர்த்தர் நாட்டின சந்தனமரங்களைப்போலவும், தண்ணீர் அருகே உள்ள கேதுரு விருட்சங்களைப்போலவும் இருக்கிறது.
7அவர்களுடைய நீர்ச்சால்களிலிருந்து தண்ணீர் பாயும்; அவர்கள் வித்து திரளான தண்ணீர்களில் பரவும்; அவர்களுடைய ராஜா ஆகாகைப் பார்க்கிலும் உயருவான்; அவர்கள் ராஜ்யம் மேன்மையடையும்.
8தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு; அவர்கள் தங்கள் சத்துருக்களாகிய ஜாதிகளைப் பட்சித்து, அவர்கள் எலும்புகளை நொறுக்கி, அவர்களைத் தங்கள் அம்புகளாலே எய்வார்கள்.
9சிங்கம்போலவும் துஷ்ட சிங்கம்போலவும் மடங்கிப் படுத்துக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களை எழுப்புகிறவன் யார்? உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், உங்களைச் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்றான்.
10அப்பொழுது பாலாக் பிலேயாமின்மேல் கோபம் மூண்டவனாகி, கையோடே கைதட்டி, பிலேயாமை நோக்கி: என் சத்துருக்களைச் சபிக்க உன்னை அழைத்தனுப்பினேன்; நீயோ இந்த மூன்றுமுறையும் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தாய்.
11ஆகையால் உன் இடத்துக்கு ஓடிப்போ; உன்னை மிகவும் கனம்பண்ணுவேன் என்றேன்; நீ கனமடையாதபடிக்குக் கர்த்தர் தடுத்தார் என்றான்.
12அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: பாலாக் எனக்குத் தன் வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் கொடுத்தாலும், நான் என் மனதாய் நன்மையாகிலும் தீமையாகிலும் செய்கிறதற்குக் கர்த்தரின் கட்டளையை மீறக்கூடாது; கர்த்தர் சொல்வதையே சொல்வேன் என்று,
13நீர் என்னிடத்திற்கு அனுப்பின ஸ்தானாபதிகளிடத்தில் நான் சொல்லவில்லையா?
14இதோ, நான் என் ஜனத்தாரிடத்திற்குப் போகிறேன்; பிற்காலத்திலே இந்த ஜனங்கள் உம்முடைய ஜனங்களுக்குச் செய்வது இன்னதென்று உமக்குத் தெரிவிப்பேன் வாரும் என்று சொல்லி,
15அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின் குமாரன் பிலேயாம் சொல்லுகிறதாவது, கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,
16தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, உன்னதமானவர் அளித்த அறிவை அறிந்து, சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு, தாழவிழும்போது, கண் திறக்கப்பட்டவன் விளம்புகிறதாவது;
17அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல; ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத்புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும்.
18ஏதோம் சுதந்தரமாகும், சேயீர் தன் சத்துருக்களுக்குச் சுதந்தரமாகும்; இஸ்ரவேல் பராக்கிரமஞ்செய்யும்.
19யாக்கோபிலிருந்து தோன்றும் ஒருவர் ஆளுகை செய்வார்; பட்டணங்களில் மீதியானவர்களை அழிப்பார் என்றான்.
20மேலும், அவன் அமலேக்கைப் பார்த்து, தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: அமலேக்கு முந்தியெழும்பினவன்; ஆனாலும் அவன் முடிவில் முற்றிலும் நாசமாவான் என்றான்.
21அன்றியும் அவன் கேனியனைப் பார்த்து, தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: உன் வாசஸ்தலம் அரணிப்பானது; உன் கூட்டைக் கன்மலையில் கட்டினாய்.
22ஆகிலும் கேனியன் அழிந்துபோவான்; அசூர் உன்னைச் சிறைபிடித்துக்கொண்டுபோக எத்தனை நாள் செல்லும் என்றான்.
23பின்னும் அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: ஐயோ, தேவன் இதைச்செய்யும்போது யார் பிழைப்பான்;
24சித்தீமின் கரைதுறையிலிருந்து கப்பல்கள் வந்து, அசூரைச் சிறுமைப்படுத்தி, ஏபேரையும் வருத்தப்படுத்தும்; அவனும் முற்றிலும் அழிந்துபோவான் என்றான்.
25பின்பு பிலேயாம் எழுந்து புறப்பட்டு, தன் இடத்திற்குத் திரும்பினான்; பாலாகும் தன் வழியே போனான்.

எண்ணாகமம் 25

1இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கையில், ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணத்தொடங்கினார்கள்.
2அவர்கள் தங்கள் தேவர்களுக்கு இட்ட பலிகளை விருந்துண்ணும்படி ஜனங்களை அழைத்தார்கள்; ஜனங்கள் போய்ப் புசித்து, அவர்கள் தேவர்களைப் பணிந்துகொண்டார்கள்.
3இப்படி இஸ்ரவேலர் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டார்கள்; அதனால் இஸ்ரவேலர்மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது.
4 கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடைய உக்கிரமான கோபம் இஸ்ரவேலை விட்டு நீங்கும்படி நீ ஜனங்களின் தலைவர் எல்லாரையும் கூட்டிக்கொண்டு, அப்படிச் செய்தவர்களைச் சூரியனுக்கு எதிரே கர்த்தருடைய சந்நிதானத்தில் தூக்கிப்போடும்படி செய் என்றார்.
5அப்படியே மோசே இஸ்ரவேலின் நியாயாதிபதிகளை நோக்கி: நீங்கள் அவரவர் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்ட உங்கள் மனிதரைக் கொன்றுபோடுங்கள் என்றான்.
6அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் அனைவரும் ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக அழுதுகொண்டு நிற்கையில், அவர்கள் கண்களுக்கு முன்பாக இஸ்ரவேல் புத்திரரில் ஒருவன் ஒரு மீதியானிய ஸ்திரீயைத் தன் சகோதரரிடத்தில் அழைத்துக்கொண்டுவந்தான்.
7அதை ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனான எலெயாசாரின் மகன் பினெகாஸ் கண்டபோது, அவன் நடுச்சபையிலிருந்து எழுந்து, ஒரு ஈட்டியைத் தன்கையிலே பிடித்து,
8இஸ்ரவேலனாகிய அந்த மனிதன் வேசித்தனம்பண்ணும் அறையிலே அவன் பின்னாலே போய், இஸ்ரவேல் மனிதனும் அந்த ஸ்திரீயுமாகிய இருவருடைய வயிற்றிலும் ஈட்டி உருவிப்போக அவர்களைக் குத்திப்போட்டான்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரில் உண்டான வாதை நின்றுபோயிற்று.
9அந்த வாதையால் செத்தவர்கள் இருபத்துநாலாயிரம்பேர்.
10 கர்த்தர் மோசேயை நோக்கி:
11நான் என் எரிச்சலில் இஸ்ரவேல் புத்திரரை நிர்மூலமாக்காதபடிக்கு, ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனான எலெயாசாரின் மகன் பினெகாஸ், என் நிமித்தம் அவர்கள் நடுவில் பக்திவைராக்கியம் காண்பித்ததினால், இஸ்ரவேல் புத்திரர்மேல் உண்டான என் உக்கிரத்தைத் திருப்பினான்.
12ஆகையால், இதோ, அவனுக்கு என் சமாதானத்தின் உடன்படிக்கையைக் கட்டளையிடுகிறேன்.
13அவன் தன் தேவனுக்காக பக்திவைராக்கியம் காண்பித்து, இஸ்ரவேல் புத்திரருக்காகப் பாவநிவிர்த்தி செய்தபடியினால், அவனுக்கும் அவனுக்குப் பின்பு அவன் சந்ததிக்கும் நித்திய ஆசாரிய பட்டத்திற்குரிய உடன்படிக்கை உண்டாயிருக்கும் என்று சொல் என்றார்.
14மீதியானிய ஸ்திரீயோடே குத்துண்டு செத்த இஸ்ரவேல் மனிதருடைய பேர் சிம்ரி; அவன் சல்லூவின் குமாரனும், சிமியோனியரின் தகப்பன் வம்சத்தில் ஒரு பிரபுவுமாயிருந்தான்.
15குத்துண்ட மீதியானிய ஸ்திரீயின் பேர் கஸ்பி, அவள் சூரின் குமாரத்தி, அவன் மீதியானியருடைய தகப்பன் வம்சத்தாரான ஜனங்களுக்குத் தலைவனாயிருந்தான்.
16 கர்த்தர் மோசேயை நோக்கி:
17மீதியானியரை நெருக்கி அவர்களை வெட்டிப்போடுங்கள்.
18பேயோரின் சங்கதியிலும் பேயோரின் நிமித்தம் வாதையுண்டான நாளிலே குத்துண்ட அவர்கள் சகோதரியாகிய கஸ்பி என்னும் மீதியான் பிரபுவினுடைய குமாரத்தியின் சங்கதியிலும், அவர்கள் உங்களுக்குச் செய்த சர்ப்பனைகளினால் உங்களை மோசம்போக்கி நெருக்கினார்களே என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *