Scripture Portion: Deuteronomy 5-7

உபாகமம் 5

1மோசே இஸ்ரவேலர் எல்லாரையும் அழைப்பித்து, அவர்களை நோக்கி: இஸ்ரவேலரே, நான் இன்று உங்கள் காதுகள் கேட்கச் சொல்லும் கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள்; நீங்கள் அவைகளின்படியே செய்யும்படிக்கு அவைகளைக் கற்றுக் கைக்கொள்ளக்கடவீர்கள்.
2நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஓரேபிலே நம்மோடே உடன்படிக்கைபண்ணினார்.
3அந்த உடன்படிக்கையைக் கர்த்தர் நம்முடைய பிதாக்களுடன் பண்ணாமல், இந்நாளில் இங்கே உயிரோடிருக்கிற நம்மெல்லாரோடும் பண்ணினார்.
4கர்த்தர் மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து முகமுகமாய் உங்களோடே பேசினார்.
5கர்த்தருடைய வார்த்தையை உங்களுக்கு அறிவிக்கும்படி, அக்காலத்திலே நான் கர்த்தருக்கும், உங்களுக்கும் நடுவாக நின்றேன்; நீங்கள் அக்கினிக்குப் பயந்து மலையில் ஏறாமல் இருந்தீர்கள்; அப்பொழுது அவர் சொன்னது என்னவென்றால்:
6உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.
7என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.
8மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சுரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்.
9நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்து பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம், நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.
10என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்.
11உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.
12உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே, ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிப்பாயாக.
13ஆறு நாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக.
14ஏழாம் நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வு நாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் எருதானாலும், உன் கழுதையானாலும், உனக்கு இருக்கிற மற்றெந்த மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும் யாதொரு வேலையும் செய்யவேண்டாம்; நீ இளைப்பாறுவதுபோல உன் வேலைக்காரனும் உன் வேலைக்காரியும் இளைப்பாறவேண்டும்;
15நீ எகிப்து தேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அவ்விடத்திலிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் புறப்படப்பண்ணினார் என்றும் நினைப்பாயாக; ஆகையால் ஓய்வு நாளை ஆசரிக்க உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டார்.
16உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கும், நீ நன்றாயிருப்பதற்கும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.
17கொலை செய்யாதிருப்பாயாக.
18விபசாரம் செய்யாதிருப்பாயாக.
19களவு செய்யாதிருப்பாயாக.
20பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
21பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய வீட்டையும், அவனுடைய நிலத்தையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.
22இந்த வார்த்தைகளைக் கர்த்தர் மலையிலே அக்கினியிலும் மேகத்திலும் காரிருளிலும் இருந்து உங்கள் சபையார் எல்லாரோடும் மகா சத்தத்துடனே சொன்னார்; அவைகளோடு ஒன்றும் கூட்டாமல், அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதி, என்னிடத்தில் கொடுத்தார்.
23மலை அக்கினியாய் எரிகையில் இருளின் நடுவிலிருந்து உண்டான சத்தத்தை நீங்கள் கேட்டபோது, கோத்திரத் தலைவரும் மூப்பருமாகிய நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து;
24இதோ, நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குத் தம்முடைய மகிமையையும் தம்முடைய மகத்துவத்தையும் காண்பித்தார்; அக்கினியின் நடுவிலிருந்து உண்டான அவருடைய சத்தத்தையும் கேட்டோம்; தேவன் மனுஷனோடே பேசியும், அவன் உயிரோடிருக்கிறதை இந்நாளிலே கண்டோம்.
25இப்பொழுது நாங்கள் சாவானேன்? இந்தப் பெரிய அக்கினி எங்களைப் பட்சிக்குமே; நாங்கள் இன்னும் நம்முடைய தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கேட்போமாகில் சாவோம்.
26நாங்கள் கேட்டதுபோல, அக்கினியின் நடுவிலிருந்து பேசுகிற ஜீவனுள்ள தேவனுடைய சத்தத்தை மாம்சமானவர்களில் யாராவது கேட்டு உயிரோடிருந்தது உண்டோ?
27நீரோ சமீபித்துப்போய், நம்முடைய தேவனாகிய கர்த்தர் சொல்வதையெல்லாம் கேட்டு, நம்முடைய தேவனாகிய கர்த்தர் சொல்வதையெல்லாம் நீரே எங்களுக்குச் சொல்லவேண்டும்; நாங்கள் கேட்டு, அதின்படியே செய்வோம் என்றீர்கள்.
28நீங்கள் என்னோடே பேசுகையில், கர்த்தர் உங்கள் வார்த்தைகளைக் கேட்டு, கர்த்தர் என்னை நோக்கி; இந்த ஜனங்கள் உன்னோடே சொன்ன வார்த்தைகளைக் கேட்டேன்; அவர்கள் சொன்னது எல்லாம் நன்றாய்ச் சொன்னார்கள்.
29அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருக்கும்படி, அவர்கள் எந்நாளும் எனக்குப் பயந்து, என் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கேற்ற இருதயம் அவர்களுக்கு இருந்தால் நலமாயிருக்கும்.
30நீ போய்: உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப்போங்கள் என்று அவர்களுக்குச் சொல்.
31நீயோ இங்கே என்னிடத்தில் நில்; நான் அவர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தில் அவர்கள் செய்யும்படி நீ அவர்களுக்குப் போதிக்கவேண்டிய சகல கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் உனக்குச் சொல்லுவேன் என்றார்.
32உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கற்பித்தபடியே செய்ய சாவதானமாயிருங்கள்; வலதுபுறம் இடதுபுறம் சாயாதிருப்பீர்களாக.
33நீங்கள் சுதந்தரிக்கும் தேசத்திலே பிழைத்து சுகித்து நீடித்திருக்கும்படி, உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு விதித்த வழிகளெல்லாவற்றிலும் நடக்கக்கடவீர்கள்.

உபாகமம் 6

1நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம், நீயும் உன் குமாரனும் உன் குமாரத்தியும், நான் உனக்கு விதிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளுகிறதினாலே உன் வாழ்நாட்கள் நீடித்திருக்கும்படி,
2நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசத்திலே கைக்கொள்வதற்காக, உங்களுக்குப் போதிக்கவேண்டும் என்று உங்கள் தேவனாகிய கர்த்தர் கற்பித்த கற்பனைகளும் கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே.
3இஸ்ரவேலே, நீ நன்றாயிருப்பதற்கும், உன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி, பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் நீ மிகவும் விருத்தியடைவதற்கும், அவைகளுக்குச் செவிகொடுத்து, அவைகளின்படி செய்யச் சாவதானமாயிரு.
4இஸ்ரவேலே கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
5நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக.
6இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது.
7நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசி,
8அவைகளை உன் கையின்மேல் அடையாளமாகக் கட்டிக்கொள்வாயாக; அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபக்குறியாய் இருக்கக்கடவது.
9அவைகளை உன் வீட்டு நிலைகளிலும், உன் வாசல்களிலும் எழுதுவாயாக.
10உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களாகிய உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணும்போதும், நீ கட்டாத வசதியான பெரிய பட்டணங்களையும்,
11நீ நிரப்பாத சகல நல்ல வஸ்துக்களாலும் நிரம்பிய வீடுகளையும், நீ வெட்டாமல் வெட்டப்பட்டிருக்கிற துரவுகளையும், நீ நடாத திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும், அவர் உனக்குக் கொடுப்பதினால், நீ சாப்பிட்டுத் திருப்தியாகும்போதும்,
12நீ அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து உன்னைப் புறப்படப்பண்ணின கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.
13உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவருக்கே ஆராதனைசெய்து, அவருடைய நாமத்தைக்கொண்டே ஆணையிடுவாயாக.
14உன் தேவனாகிய கர்த்தருடைய கோபம் உன்மேல் மூண்டு, உன்னைப் பூமியில் வைக்காமல் அழித்துப்போடாதபடிக்கு, உங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்களின் தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றாதிருப்பீர்களாக.
15உன் நடுவிலிருக்கிற உன் தேவனாகிய கர்த்தர் எரிச்சலுள்ள தேவனாயிருக்கிறாரே.
16நீங்கள் மாசாவிலே செய்ததுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பரிட்சை பாராதிருப்பீர்களாக.
17உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் கருத்தாய்க் கைக்கொள்வீர்களாக.
18நீ நன்றாயிருக்கிறதற்கும், கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த நல்ல தேசத்தில் நீ பிரவேசித்து, அதைச் சுதந்தரிப்பதற்கும்,
19கர்த்தர் தாம் சொன்னபடி, உன் சத்துருக்களையெல்லாம் உன் முகத்திற்கு முன்பாகத் துரத்திவிடுவதற்கும், நீ கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையும் நன்மையுமாய் இருக்கிறதைச் செய்வாயாக.
20நாளைக்கு உன் புத்திரன்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிட்ட இந்த சாட்சிகளும் கட்டளைகளும் நியாயங்களும் என்ன என்று உன்னிடத்தில் கேட்டால்;
21நீ உன் புத்திரனை நோக்கி: நாங்கள் எகிப்திலே பார்வோனுக்கு அடிமைகளாயிருந்தோம்; கர்த்தர் பலத்த கையினாலே எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்.
22கர்த்தர் எங்கள் கண்களுக்கு முன்பாக, எகிப்தின்மேலும் பார்வோன் மேலும் அவன் குடும்பம் அனைத்தின்மேலும் கொடிதான பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் விளங்கப்பண்ணி,
23தாம் நம்முடைய பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்துக்கு எங்களை அழைத்துக்கொண்டுபோய், அதை நமக்குக் கொடுக்கும்படி எங்களை அவ்விடத்திலிருந்து புறப்படப்பண்ணினார்.
24இந்நாளில் இருக்கிறதுபோல, நம்மை அவர் உயிரோடே காப்பதற்கும், எந்நாளும் நன்றாயிருக்கிறதற்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து இந்த எல்லாக் கட்டளைகளின்படியேயும் செய்யக் கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டார்.
25நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டபடியே நாம் அவர் சமூகத்தில் இந்த எல்லாக் கட்டளைகளின்படியும் செய்யச் சாவதானமாயிருந்தால், நமக்கு நீதியாயிருக்கும் என்று சொல்வாயாக.

உபாகமம் 7

1நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணி, உன்னைப்பார்க்கிலும் ஜனம் பெருத்த ஜாதிகளாகிய ஏத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஏழு பலத்த ஜாதிகளை உனக்கு முன்பாகத் துரத்தி,
2உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன்னிடத்தில் ஒப்புக்கொடுக்கும்போது, அவர்களை முறிய அடித்து, அவர்களைச் சங்காரம்பண்ணக்கடவாய்; அவர்களோடே உடன்படிக்கைபண்ணவும் அவர்களுக்கு இரங்கவும் வேண்டாம்.
3அவர்களோடே சம்பந்தம் கலவாயாக; உன் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளை உன் குமாரருக்குக் கொள்ளாமலும் இருப்பாயாக.
4என்னைப் பின்பற்றாமல், அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி அவர்கள் உன் குமாரரை விலகப்பண்ணுவார்கள்; அப்பொழுது கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் மூண்டு, உங்களைச் சீக்கிரத்தில் அழிக்கும்.
5நீங்கள் அவர்களுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்: அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை வெட்டி, அவர்கள் விக்கிரகங்களை அக்கினியிலே எரித்துப்போடவேண்டும்.
6நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார்.
7சகல ஜனங்களிலும் நீங்கள் திரட்சியான ஜனமென்று கர்த்தர் உங்கள் பேரில் அன்புவைத்து உங்களைத் தெரிந்து கொள்ளவில்லை; நீங்கள் சகல ஜனங்களிலும் கொஞ்சமாயிருந்தீர்கள்.
8 கர்த்தர் உங்களில் அன்புகூர்ந்ததினாலும், உங்கள் பிதாக்களுக்கு இட்ட ஆணையைக் காக்கவேண்டும் என்பதினாலும்; கர்த்தர் பலத்த கையினால் உங்களைப் புறப்படப்பண்ணி, அடிமைத்தன வீடாகிய எகிப்தினின்றும் அதின் ராஜாவான பார்வோனின் கையினின்றும் உங்களை மீட்டுக்கொண்டார்.
9ஆகையால் உன் தேவனாகிய கர்த்தரே தேவன் என்றும், தம்மில் அன்புகூர்ந்து, தமது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறைமட்டும் உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன் என்றும்,
10தம்மைப் பகைக்கிறவர்களுக்குப் பிரத்தியட்சமாய்ப் பதிலளித்து அவர்களை அழிப்பார் என்றும், தம்மைப் பகைக்கிறவனுக்கு அவர் தாமதியாமல் பிரத்தியட்சமாய்ப் பதிலளிப்பார் என்றும் நீ அறியக்கடவாய்.
11ஆகையால் நீ செய்யும்படி நான் இன்று உனக்குக் கட்டளையிடுகிற கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்வாயாக.
12இந்த நியாயங்களை நீங்கள் கேட்டு, கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், அப்பொழுது உன் தேவனாகிய கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த உடன்படிக்கையையும் கிருபையையும் உனக்காகக் காத்து,
13உன்மேல் அன்பு வைத்து, உன்னை ஆசீர்வதித்து, உனக்குக் கொடுப்பேன் என்று உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் உன்னைப் பெருகப்பண்ணி, உன் கர்ப்பக்கனியையும், உன் நிலத்தின் கனிகளாகிய உன் தானியத்தையும், உன் திராட்சரசத்தையும், உன் எண்ணெயையும், உன் மாடுகளின் பலனையும், உன் ஆட்டுமந்தைகளையும் ஆசீர்வதிப்பார்.
14சகல ஜனங்களைப்பார்க்கிலும் நீ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; உங்களுக்குள்ளும் உங்கள் மிருக ஜீவன்களுக்குள்ளும் ஆணிலாகிலும் பெண்ணிலாகிலும் மலடிருப்பதில்லை.
15 கர்த்தர் சகல நோய்களையும் உன்னை விட்டு விலக்குவார்; உனக்குத் தெரிந்திருக்கிற எகிப்தியரின் கொடிய ரோகங்களில் ஒன்றும் உன்மேல் வரப்பண்ணாமல், உன்னைப் பகைக்கிற யாவர்மேலும் அவைகளை வரப்பண்ணுவார்.
16உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் ஒப்புக்கொடுக்கும் சகல ஜனங்களையும் நிர்மூலமாக்கக்கடவாய்; உன் கண் அவர்களுக்கு இரங்காதிருப்பதாக; அவர்கள் தேவர்களை நீ சேவியாமல் இருப்பாயாக; அது உனக்குக் கண்ணியாயிருக்கும்.
17அந்த ஜாதிகள் என்னிலும் ஜனம் பெருத்தவைகள், நான் அவர்களைத் துரத்திவிடுவது எப்படி என்று உன் இருதயத்தில் சொல்லிக்கொண்டாயானால்,
18உன் தேவனாகிய கர்த்தர் பார்வோனுக்கும் எகிப்தியர் யாவருக்கும் செய்ததையும்,
19உன் கண்கள் கண்ட பெரிய சோதனைகளையும், அடையாளங்களையும் அற்புதங்களையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் புறப்படப்பண்ணிக் காண்பித்த பலத்த கையையும் ஓங்கிய புயத்தையும் நன்றாய் நினைத்து, அவர்களுக்குப் பயப்படாதிரு; நீ பார்த்துப் பயப்படுகிற எல்லா ஜனங்களுக்கும் உன் தேவனாகிய கர்த்தர் அப்படியே செய்வார்.
20மீதியாயிருந்து உனக்குத் தப்பி ஒளித்துக்கொள்ளுகிறவர்களும் அழிந்து போகுமட்டும் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குள்ளே குளவிகளை அனுப்புவார்.
21அவர்களைப் பார்த்துப் பயப்படவேண்டாம்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன்.
22அந்த ஜாதிகளை உன் தேவனாகிய கர்த்தர் கொஞ்சம் கொஞ்சமாய் உன்னைவிட்டுத் துரத்திவிடுவார்; நீ அவர்களை ஒருமிக்க நிர்மூலமாக்கவேண்டாம்; நிர்மூலமாக்கினால் காட்டுமிருகங்கள் உன்னிடத்தில் பெருகிப்போகும்.
23உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன்னிடத்தில் ஒப்புக்கொடுத்து, அவர்கள் அழியுமட்டும் அவர்களை மிகவும் கலங்கடிப்பார்.
24அவர்களுடைய ராஜாக்களை உன் கையில் ஒப்புக்கொடுப்பார்; அவர்கள் பேர் வானத்தின்கீழ் இராதபடிக்கு அவர்களைச் சங்கரிக்கக்கடவாய்; நீ அவர்களைச் சங்கரித்துத் தீருமட்டும் ஒருவரும் உனக்கு எதிர்த்து நிற்கமாட்டார்கள்.
25அவர்கள் தேவர்களின் விக்கிரகங்களை அக்கினியினால் சுட்டெரிக்கக்கடவாய்; நீ அவைகளால் சிக்கிக்கொள்ளாதபடிக்கு, அவைகளில் இருக்கிற வெள்ளியையும் பொன்னையும் இச்சியாமலும், அதை எடுத்துக்கொள்ளாமலும் இருப்பாயாக; அவைகள் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவைகள்.
26அவைகளைப் போல நீ சாபத்துக்குள்ளாகாதபடி அருவருப்பானதை உன் வீட்டிலே கொண்டுபோகாயாக; அதைச் சீ என்று வெறுத்து முற்றிலும் அருவருக்கக்கடவாய், அது சாபத்திற்குள்ளானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *