Scripture Portion: Job 17-20

யோபு 17

1என் சுவாசம் ஒழிகிறது, என் நாட்கள் முடிகிறது; பிரேதக்குழி எனக்கு ஆயத்தமாயிருக்கிறது.
2பரியாசம்பண்ணுகிறவர்கள் என்னிடத்தில் இல்லையோ? அவர்கள் செய்யும் அநியாயங்களை என் கண் பார்த்துக்கொண்டிருக்கிறது.
3தேவரீர் என் காரியத்தை மேல்போட்டுக்கொண்டு, எனக்காகப் பிணைபடுவீராக; வேறே யார் எனக்குக் கைகொடுக்கத்தக்கவர்?
4நீர் அவர்கள் இருதயத்துக்கு ஞானத்தை மறைத்தீர்; ஆகையால் அவர்களை உயர்த்தாதிருப்பீர்.
5எவன் தன் சிநேகிதருக்குக் கேடாகத் துரோகம் பேசுகிறானோ, அவன் பிள்ளைகளின் கண்களும் பூத்துப்போகும்.
6ஜனங்களுக்குள்ளே அவர் என்னைப் பழமொழியாக வைத்தார்; அவர்கள் முகத்துக்குமுன் நான் அருவருப்பானேன்.
7இதினிமித்தம் என் கண்கள் சஞ்சலத்தினால் இருளடைந்தது; என் அவயவங்களெல்லாம் நிழலைப்போலிருக்கிறது.
8சன்மார்க்கர் இதற்காகப் பிரமிப்பார்கள்; குற்றமில்லாதவன் மாயக்காரனுக்கு விரோதமாக எழும்புவான்.
9நீதிமான் தன்வழியை உறுதியாய்ப் பிடிப்பான்; சுத்தமான கைகளுள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான்.
10இப்போதும் நீங்கள் எல்லாரும் போய்வாருங்கள்; உங்களில் ஞானமுள்ள ஒருவனையும் காணேன்.
11என் நாட்கள் போயிற்று; என் இருதயத்தில் எனக்கு உண்டாயிருந்த சிந்தனைகள் அற்றுப்போயிற்று.
12அவைகள் இரவைப் பகலாக்கிற்று; இருளை வெளிச்சம் தொடர்ந்துவரும் என்று எண்ணச்செய்தது.
13அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும், பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்; இருளில் என் படுக்கையைப் போடுவேன்.
14அழிவைப்பார்த்து, நீ எனக்குத் தகப்பன் என்கிறேன்; புழுக்களைப் பார்த்து, நீங்கள் எனக்குத் தாயும் எனக்குச் சகோதரியும் என்கிறேன்.
15என் நம்பிக்கை இப்போது எங்கே? நான் நம்பியிருந்ததைக் காண்பவன் யார்?
16அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்; அப்போது தூளில் ஏகமாய் இளைப்பாறுவோம் என்றான்.

யோபு 18

1அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக:
2நீங்கள் எந்தமட்டும் பேச்சுகளை முடிக்காதிருப்பீர்கள்? புத்திமான்களாயிருங்கள்; நாங்களும் பேசட்டும்.
3நாங்கள் மிருகங்களைப்போல எண்ணப்பட்டு, உங்கள் பார்வைக்குத் தீழ்ப்பானவர்களாயிருப்பானேன்?
4கோபத்தினால் உம்மைத்தானே பீறுகிற உமதுநிமித்தம் பூமி பாழாய்ப்போகுமோ? கன்மலை தன்னிடத்தைவிட்டுப் பேருமோ?
5துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோகும்; அவன் அடுப்பின் நெருப்பும் அவிந்துபோகும்.
6அவன் கூடாரத்தில் வெளிச்சம் அந்தகாரப்படும்; அவன் விளக்கு அவனுடனே அணைந்துபோகும்.
7அவன் பெலனாய் நடந்த நடைகள் குறைந்துபோம்; அவன் ஆலோசனை அவனை விழப்பண்ணும்.
8அவன் தன் கால்களினால் வலையில் அகப்பட்டு, வலைச்சிக்கலிலே நடக்கிறான்.
9கண்ணி அவன் குதிகாலைப் பிடிக்கும்; பறிகாரர் அவனை மேற்கொள்வார்கள்.
10அவனுக்காகச் சுருக்கு தரையிலும், அவனுக்காகக் கண்ணி வழியிலும் வைக்கப்பட்டிருக்கிறது.
11சுற்றிலுமிருந்துண்டாகும் பயங்கரங்கள் அவனைத் திடுக்கிடப்பண்ணி, அவன் கால்களைத் திசைதெரியாமல் அலையப்பண்ணும்.
12அவன் பெலனை பட்டினி தின்றுபோடும்; அவன் பக்கத்தில் கேடு ஆயத்தப்பட்டு நிற்கும்.
13அது அவன் அங்கத்தின் பலத்தைப் பட்சிக்கும்; பயங்கரமான மரணமே அவன் அவயவங்களைப் பட்சிக்கும்.
14அவன் நம்பிக்கை அவன் கூடாரத்திலிருந்து வேரோடே பிடுங்கப்படும்; அது அவனைப் பயங்கர ராஜாவினிடத்தில் துரத்தும்.
15அவனுக்கு ஒன்றுமில்லாமற் போனதினால், பயங்கரம் அவன் கூடாரத்தில் குடியிருக்கும்; கந்தகம் அவன் வாசஸ்தலத்தின்மேல் தெளிக்கப்படும்.
16கீழே இருக்கிற அவன் வேர்கள் அழிந்துபோகும்; மேலே இருக்கிற அவன் கிளைகள் பட்டுப்போகும்.
17அவனை நினைக்கும் நினைப்பு பூமியிலிருந்தழியும், வீதிகளில் அவன் பேரில்லாமற்போகும்.
18அவன் வெளிச்சத்திலிருந்து இருளில் துரத்திவிடப்பட்டு, பூலோகத்திலிருந்து தள்ளுண்டுபோவான்.
19அவன் ஜனத்துக்குள்ளே அவனுக்குப் புத்திரனும் இல்லை பெளத்திரனும் இல்லை; அவன் வீட்டில் மீதியாயிருக்கத்தக்கவன் ஒருவனும் இல்லை.
20அவன் காலத்தோர் அவன் நாளுக்காகத் திடுக்கிட்டதுபோல, பின்னடியாரும் பிரமிப்பார்கள்.
21அக்கிரமக்காரன் குடியிருந்த ஸ்தானங்கள் இவைகள்தான்; தேவனை அறியாமற்போனவனுடைய ஸ்தலம் இதுவே என்பார்கள் என்றான்.

யோபு 19

1யோபு பிரதியுத்தரமாக:
2நீங்கள் எந்தமட்டும் என் ஆத்துமாவை வருத்தப்படுத்தி, வார்த்தைகளினால் என்னை நொறுக்குவீர்கள்?
3இப்போது பத்துதரம் என்னை நிந்தித்தீர்கள்; நீங்கள் எனக்குக் கடினமுகம் காண்பிக்கிறதினால் உங்களுக்கு வெட்கமில்லை.
4நான் தப்பிநடந்தது மெய்யானாலும், என் தப்பிதம் என்னோடேதான் இருக்கிறது.
5நீங்கள் எனக்கு விரோதமாகப் பெருமைபாராட்டி, எனக்கு நிந்தையாக என்னைக் கடிந்துகொள்ளவேண்டும் என்றிருப்பீர்களாகில்,
6தேவன் என்னைக் கவிழ்த்து, தம்முடைய வலையை என்மேல் வீசினார் என்று அறியுங்கள்.
7இதோ, கொடுமை என்று கூப்பிடுகிறேன், கேட்பார் ஒருவரும் இல்லை; கூக்குரலிடுகிறேன், நியாயவிசாரணை இல்லை.
8நான் கடந்துபோகக்கூடாதபடிக்கு அவர் என் பாதையை வேலியடைத்து, என் வழிகளை இருளாக்கிவிட்டார்.
9என்னிலிருந்த என் மகிமையை அவர் உரிந்துகொண்டு, என் சிரசின் கிரீடத்தை எடுத்துப்போட்டார்.
10அவர் என்னை நான்கு புறத்திலும் நாசமாக்கினார், நான் அற்றுப்போகிறேன்; என் நம்பிக்கையை ஒரு செடியைப்போலப் பிடுங்கிப்போட்டார்.
11அவர் தமது கோபத்தை என்மேல் எரியப்பண்ணினார்; என்னைத் தம்முடைய சத்துருக்களில் ஒருவனாக எண்ணிக்கொள்ளுகிறார்.
12அவருடைய தண்டுப்படைகள் ஏகமாய் வந்து, எனக்கு விரோதமாய்த் தங்கள் வழியை உயர்த்தி, என் கூடாரத்தைச் சுற்றிப் பாளயமிறங்கினார்கள்.
13என் சகோதரரை என்னைவிட்டுத் தூரப்படுத்தினார்; எனக்கு அறிமுகமானவர்கள் எனக்கு அந்நியராய்ப் போனார்கள்.
14என் பந்துஜனங்கள் விலகிப்போனார்கள். என் சிநேகிதர் என்னை மறந்துவிட்டார்கள்.
15என் வீட்டு ஜனங்களும், என் வேலைக்காரிகளும், என்னை அந்நியனாக எண்ணுகிறார்கள்; அவர்கள் பார்வைக்கு நான் பரதேசியானேன்.
16நான் என் வேலைக்காரனைக் கூப்பிடுகிறபோது அவன் எனக்கு உத்தரவு கொடான்; என் வாயினால் நான் அவனைக் கெஞ்சவேண்டியதாயிற்று.
17என் சுவாசம் என் மனைவிக்கு வேறுபட்டிருக்கிறது; என் கர்ப்பத்தின் பிள்ளைகளுக்காகப் பரிதபிக்கிறேன்.
18சிறுபிள்ளைகளும் என்னை அசட்டைபண்ணுகிறார்கள்; நான் எழுந்தால், அவர்கள் எனக்கு விரோதமாய்ப் பேசுகிறார்கள்.
19என் பிராணசிநேகிதர் எல்லாரும் என்னை வெறுக்கிறார்கள்; நான் சிநேகித்தவர்கள் எனக்கு விரோதிகளானார்கள்.
20என் எலும்புகள் என் தோலோடும் என் மாம்சத்தோடும் ஒட்டிக்கொண்டிருக்கிறது என் பற்களை மூடக் கொஞ்சம் தோல்மாத்திரம் தப்பினது.
21என் சிநேகிதரே, எனக்கு இரங்குங்கள், எனக்கு இரங்குங்கள்; தேவனுடைய கை என்னைத் தொட்டது.
22தேவனைப்போல நீங்களும் என்னைத் துன்பப்படுத்துவானேன்? என் மாம்சம் பட்சிக்கப்பட்டாலும் நீங்கள் திருப்தியற்றிருக்கிறதென்ன?
23ஆ, நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்; அவைகள் ஒரு புஸ்தகத்தில் வரையப்பட்டு,
24அல்லது என்றைக்கும் நிலைக்க அவைகள் கருங்கல்லிலே உளிவெட்டாகவும் ஈய எழுத்தாகவும் பதிந்தால் நலமாயிருக்கும்.
25என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்.
26இந்த என் தோல்முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்.
27அவரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்; இந்த வாஞ்சையால் என் உள்ளிந்திரியங்கள் எனக்குள் சோர்ந்துபோகிறது.
28காரியத்தின் மூலம் எனக்குள் கண்டுபிடிக்கப்படுகையில், நாம் ஏன் அவனைத் துன்பப்படுத்துகிறோம் என்று நீங்கள் சொல்லவேண்டியதாமே.
29பட்டயத்துக்குப் பயப்படுங்கள்; நியாயத்தீர்ப்பு உண்டென்கிறதை நீங்கள் அறியும்பொருட்டு, மூர்க்கமானது பட்டயத்தினால் உண்டாகும் ஆக்கினையை வரப்பண்ணும் என்றான்.

யோபு 20

1அப்பொழுது நாகமாத்தியனான சோப்பார் பிரதியுத்தரமாக:
2இதற்காக மறு உத்தரவு கொடுக்க என் சிந்தனைகள் என்னை ஏவுகிறபடியால் நான் தீவிரித்துச் சொல்லுகிறேன்.
3நிந்தித்தேன் என்று நான் கடிந்து கொள்ளப்பட்டதைக் கேட்டேன்; ஆனாலும் உணர்வினால் என் ஆவி பிரதியுத்தரம் சொல்ல என்னை ஏவுகிறது.
4துன்மார்க்கனின் கெம்பீரம் குறுகினது என்பதையும், மாயக்காரனின் சந்தோஷம் ஒரு நிமிஷம்மாத்திரம் நிற்கும் என்பதையும்,
5அவர் மனுஷனைப் பூமியில் வைத்த ஆதிகாலமுதல் இப்படியிருக்கிறது என்பதையும் நீர் அறியீரோ?
6அவனுடைய மேன்மை வானபரியந்தம் உயர்ந்தாலும், அவனுடைய தலை மேகங்கள்மட்டும் எட்டினாலும்,
7அவன் தன் மலத்தைப்போல என்றைக்கும் அழிந்துபோவான்; அவனைக் கண்டவர்கள், அவன் எங்கே? என்பார்கள்.
8அவன் ஒரு சொப்பனத்தைப்போல் பறந்துபோய்க் காணப்படாதவனாவான்; இரவில் தோன்றும் தரிசனத்தைப்போல் பறக்கடிக்கப்படுவான்.
9அவனைப் பார்த்த கண் இனி அவனைப் பார்ப்பதில்லை; அவன் இருந்த ஸ்தலம் இனி அவனைக் காண்பதில்லை.
10அவன் பிள்ளைகள் எளிமையானவர்களின் சகாயத்தைத் தேடுவார்கள்; அவன் பறித்ததை அவன் கைகள் திரும்பக் கொடுக்கவேண்டியதாகும்.
11அவன் எலும்புகள் அவனுடைய வாலவயதின் பாவங்களினால் நிறைந்திருந்து, அவனோடேகூட மண்ணிலே படுத்துக்கொள்ளும்.
12பொல்லாப்பு அவன் வாயிலே இனிமையாயிருப்பதால், அவன் அதைத் தன் நாவின்கீழ் அடக்கி,
13அதை விடாமல் பதனம்பண்ணி, தன் வாய்க்குள்ளே வைத்துக்கொண்டிருந்தாலும்,
14அவன் போஜனம் அவன் குடல்களில் மாறி, அவனுக்குள் விரியன்பாம்புகளின் பிச்சாய்ப்போகும்.
15அவன் விழுங்கின ஆஸ்தியைக் கக்குவான்; தேவன் அதை அவன் வயிற்றிலிருந்து வெளியே தள்ளிவிடுவார்.
16அவன் விரியன்பாம்புகளின் விஷத்தை உறிஞ்சுவான்; விரியனின் நாக்கு அவனைக் கொல்லும்.
17தேனும் நெய்யும் ஓடும் வாய்க்கால்களையும் ஆறுகளையும் அவன் காண்பதில்லை.
18தான் பிரயாசப்பட்டுத் தேடினதை அவன் விழுங்காமல் திரும்பக் கொடுப்பான்; அவன் திரும்பக் கொடுக்கிறது அவன் ஆஸ்திக்குச் சரியாயிருக்கும்; அவன் களிகூராதிருப்பான்.
19அவன் ஒடுக்கி, ஏழைகளைக் கைவிட்டு, தான் கட்டாத வீட்டைப் பறித்தபடியினாலும்,
20தன் வயிறு திருப்தியற்றிருந்தபடியினாலும், அவன் இச்சித்த காரியங்களில் அவனுக்கு ஒன்றும் இருப்பதில்லை.
21அவன் போஜனத்தில் ஒன்றும் மீதியாவதில்லை; ஆகையால் அவன் ஆஸ்தி நிலைநிற்பதில்லை.
22அவன் வேண்டுமென்கிற பரிபூரணம் அவனுக்கு வந்தபின், அவனுக்கு வியாகுலம் உண்டாகும்; சிறுமைப்படுகிற ஒவ்வொருவருடைய கையும் அவன்மேல் வரும்.
23தன் வயிற்றை நிரப்பத்தக்கது இன்னும் அவனுக்கு இருந்தாலும், அவர் அவன்மேல் தமது கோபத்தின் உக்கிரத்தை வரவிட்டு, அவன் போஜனம்பண்ணுகையில், அதை அவன்மேல் சொரியப்பண்ணுவார்.
24இரும்பு ஆயுதத்துக்கு அவன் தப்பியோடினாலும் உருக்குவில் அவனை உருவ எய்யும்.
25உருவின பட்டயம் அவன் சரீரத்தையும், மின்னுகிற அம்பு அவன் பிச்சையும் உருவிப்போகும்; பயங்கரங்கள் அவன்மேல் வரும்.
26அவன் ஒளிக்கும் இடங்களில் காரிருள் அடங்கியிருக்கும்; அவியாத அக்கினி அவனைப் பட்சிக்கும்; அவன் கூடாரத்தில் மீதியாயிருக்கிறவன் தீங்கு அநுபவிப்பான்.
27வானங்கள் அவன் அக்கிரமத்தை வெளிப்படுத்தி, பூமி அவனுக்கு விரோதமாக எழும்பும்.
28அவன் வீட்டின் சம்பத்துப் போய்விடும்; அவருடைய கோபத்தின் நாளிலே அவைகள் கரைந்து போகும்.
29இதுவே தேவனால் துன்மார்க்கனுக்குக் கிடைக்கும் பங்கும், அவன் செய்கைக்கு தேவனால் அவனுக்கு வரும் சுதந்தரமுமாம் என்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *