Scripture Portion: Judges 1-2

நியாயாதிபதிகள் 1

1யோசுவா மரித்தபின் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி: கானானியரை எதிர்த்து யுத்தம்பண்ணும்படி, எங்களில் யார் முதல்முதல் எழுந்து புறப்படவேண்டும் என்று கேட்டார்கள்.
2அதற்குக் கர்த்தர்: யூதா எழுந்து புறப்படக்கடவன்; இதோ, அந்த தேசத்தை அவன் கையிலே ஒப்புக்கொடுத்தேன் என்றார்.
3அப்பொழுது யூதா தன் சகோதரனாகிய சிமியோனை நோக்கி: நாம் கானானியரோடே யுத்தம்பண்ண நீ என் சுதந்தரப் பங்குவீதத்தில் என்னோடேகூட எழுந்துவா; உன் சுதந்தரப் பங்கு வீதத்தில் நானும் உன்னோடுகூட வருவேன் என்றான்; அப்படியே சிமியோன் அவனோடேகூடப் போனான்.
4யூதா எழுந்துபோனபோது, கர்த்தர் கானானியரையும், பெரிசியரையும் அவர்கள் கையிலே ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் பேசேக்கிலே பதினாயிரம்பேரை வெட்டினார்கள்.
5பேசேக்கிலே அதோனிபேசேக்கைக் கண்டு, அவனோடு யுத்தம்பண்ணி, கானானியரையும், பெரிசியரையும் வெட்டினார்கள்.
6அதோனிபேசேக் ஓடிப்போகையில், அவனைப் பின்தொடர்ந்து பிடித்து, அவன் கைகால்களின் பெருவிரல்களைத் தறித்துப்போட்டார்கள்.
7அப்பொழுது அதோனிபேசேக்: எழுபது ராஜாக்கள், கை கால்களின் பெருவிரல்கள் தறிக்கப்பட்டவர்களாய், என் மேஜையின்கீழ் விழுந்ததைப் பொறுக்கித் தின்றார்கள்; நான் எப்படிச் செய்தேனோ, அப்படியே தேவன் எனக்கும் செய்து சரிக்கட்டினார் என்றான். அவனை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்; அங்கே அவன் செத்துப்போனான்.
8யூதாவின் புத்திரர் எருசலேமின்மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, அதிலுள்ளவர்களைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, பட்டணத்தை அக்கினிக்கு இரையாக்கிவிட்டார்கள்.
9பின்பு யூதாவின் புத்திரர் மலைதேசத்திலேயும், தெற்கேயும், பள்ளத்தாக்குகளிலேயும் குடியிருக்கிற கானானியரோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டுப்போனார்கள்.
10அப்படியே யூதா கோத்திரத்தார் எபிரோனிலே குடியிருக்கிற கானானியருக்கு விரோதமாய்ப் போய், சேசாய், அகீமான், தல்மாய் என்பவர்களை வெட்டிப்போட்டார்கள். முற்காலத்தில் அந்த எபிரோனுக்கு கீரியாத்அர்பா என்று பேர்.
11அங்கேயிருந்து தெபீரின் குடிகளுக்கு விரோதமாகப் போனார்கள்; முற்காலத்தில் தெபீருக்கு கீரியாத்செப்பேர் என்று பேர்.
12அப்பொழுது காலேப்: கீரியாத்செப்பேரை சங்காரம்பண்ணிப் பிடிக்கிறவனுக்கு என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம்பண்ணிக் கொடுப்பேன் என்றான்.
13அப்பொழுது காலேபுடைய தம்பியாகிய கேனாசின் குமாரன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; ஆகையால் தன் குமாரத்தியாகிய அக்சாளை அவனுக்கு விவாகம்பண்ணிக் கொடுத்தான்.
14அவள் புறப்படுகையில், என் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று அவனிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கழுதையின்மேலிருந்து இறங்கினாள். காலேப் அவளை நோக்கி: உனக்கு என்னவேண்டும் என்றான்.
15அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; வறட்சியான நிலத்தை எனக்குத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலங்களையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது காலேப்: மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் அவளுக்கு நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.
16மோசேயின் மாமனாகிய கேனியனின் புத்திரரும் யூதாவின் புத்திரரோடேகூடப் பேரீச்சம்மரங்களின் பட்டணத்திலிருந்து ஆராத்திற்குத் தெற்கேயிருக்கிற யூதாவின் வனாந்தரத்திற்கு வந்து, ஜனங்களோடே குடியேறினார்கள்.
17யூதா தன் சகோதரனாகிய சிமியோனோடுங்கூடப் போனான்; அவர்கள் சேப்பாத்தில் குடியிருக்கிற கானானியரை முறிய அடித்து, அதைச் சங்காரம்பண்ணி, அந்தப் பட்டணத்திற்கு ஒர்மா என்று பேரிட்டார்கள்.
18யூதா காசாவையும் அதின் எல்லையையும், அஸ்கலோனையும் அதின் எல்லையையும், எக்ரோனையும் அதின் எல்லையையும் பிடித்தான்.
19கர்த்தர் யூதாவோடேகூட இருந்ததினால், மலைதேசத்தாரைத் துரத்திவிட்டார்கள்; பள்ளத்தாக்கின் குடிகளுக்கு இரும்பு ரதங்கள் இருந்தபடியினால், அவர்களைத் துரத்தக்கூடாமற்போயிற்று.
20மோசே சொன்னபடியே, எபிரோனைக் காலேபுக்குக் கொடுத்தார்கள்; அவன் அதிலிருந்த ஏனாக்கின் மூன்று குமாரரையும் துரத்திவிட்டான்.
21பென்யமீன் புத்திரர் எருசலேமிலே குடியிருந்த எபூசியரையும் துரத்திவிடவில்லை; ஆகையால் எபூசியர் இந்நாள் மட்டும் பென்யமீன் புத்திரரோடேகூட எருசலேமில் குடியிருக்கிறார்கள்.
22யோசேப்பின் குடும்பத்தாரும் பெத்தேலுக்கு விரோதமாய்ப் போனார்கள்; கர்த்தர் அவர்களோடேகூட இருந்தார்.
23யோசேப்பின் புத்திரர் பெத்தேலை வேவுபார்க்க ஆட்களை அனுப்பினார்கள்; முன்னே அந்தப் பட்டணத்திற்கு லூஸ் என்று பேர்.
24அந்த வேவுகாரர் பட்டணத்திலிருந்து புறப்பட்டுவருகிற ஒரு மனுஷனைக் கண்டு: பட்டணத்திற்குள் பிரவேசிக்கும் வழியை எங்களுக்குக் காண்பி, உனக்குத் தயைசெய்வோம் என்றார்கள்.
25அப்படியே பட்டணத்திற்குள் பிரவேசிக்கும் வழியை அவர்களுக்குக் காண்பித்தான்; அப்பொழுது அவர்கள் வந்து, பட்டணத்திலுள்ளவர்களைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அந்த மனுஷனையும் அவன் குடும்பத்தையும் விட்டுவிட்டார்கள்.
26அப்பொழுது அந்த மனுஷன் ஏத்தியரின் தேசத்திற்குப் போய், ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு லூஸ் என்று பேரிட்டான்; அதுதான் இந்நாள்மட்டும் அதின் பேர்.
27மனாசே கோத்திரத்தார் பெத்செயான் பட்டணத்தாரையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், தானாக் பட்டணத்தாரையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், தோரின் குடிகளையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், இப்லெயாம் பட்டணத்தாரையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், மெகிதோவின் குடிகளையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும் துரத்திவிடவில்லை; கானானியர் அந்த தேசத்திலேதானே குடியிருக்கவேண்டும் என்று இருந்தார்கள்.
28இஸ்ரவேலர் பலத்தபோது, கானானியரை முற்றிலும் துரத்திவிடாமல் பகுதி கட்டப்பண்ணினார்கள்.
29எப்பிராயீம் கோத்திரத்தார் கேசேரிலே குடியிருந்த கானானியரையும் துரத்திவிடவில்லை; ஆகையால் கானானியர் அவர்கள் நடுவே குடியிருந்தார்கள்.
30செபுலோன் கோத்திரத்தார் கித்ரோனின் குடிகளையும், நாகலோலின் குடிகளையும் துரத்திவிடவில்லை, ஆகையால் கானானியர் அவர்கள் நடுவே குடியிருந்து, பகுதிகட்டுகிறவர்களானார்கள்.
31ஆசேர் கோத்திரத்தார் அக்கோவின் குடிகளையும், சீதோனின் குடிகளையும், அக்லாப், அக்சீப், எல்பா, ஆப்பீக், ரேகோப் பட்டணங்களின் குடிகளையும் துரத்திவிடவில்லை.
32ஆசேரியர் தேசத்தின் குடிகளாகிய கானானியரின் நடுவே குடியிருந்தார்கள்; அவர்களை அவர்கள் துரத்திவிடவில்லை.
33நப்தலி கோத்திரத்தார் பெத்ஷிமேசின் குடிகளையும் பெத்தானாத்தின் குடிகளையும் துரத்திவிடாமல், தேசத்தின் குடிகளாகிய கானானியரின் நடுவே குடியிருந்தார்கள்; பெத்ஷிமேஸ், பெத்தானாத் பட்டணங்களின் குடிகள் அவர்களுக்குப் பகுதிகட்டுகிறவர்களானார்கள்.
34எமோரியர் தாண் புத்திரரைப் பள்ளத்தாக்கில் இறங்கவொட்டாமல், மலைதேசத்திற்குப் போகும்படி நெருக்கினார்கள்.
35எமோரியர் ஏரேஸ் மலைகளிலும் ஆயலோனிலும் சால்பீமிலும் குடியிருக்கவேண்டும் என்று இருந்தார்கள்; ஆனாலும் யோசேப்பின் குடும்பத்தாரின் கைபலத்தபடியினால், அவர்களுக்குப் பகுதிகட்டுகிறவர்களானார்கள்.
36எமோரியரின் எல்லை அக்கராபீமுக்குப் போகிற மேடுதொடங்கி அதற்கு அப்புறமும் போயிற்று.

நியாயாதிபதிகள் 2

1 கர்த்தருடைய தூதனானவர் கில்காலிலிருந்து போகீமுக்கு வந்து: நான் உங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி, உங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் நான் உங்களைக் கொண்டுவந்து விட்டு, உங்களோடே பண்ணின என் உடன்படிக்கையை நான் ஒருக்காலும் முறித்துப்போடுவதில்லை என்றும்,
2நீங்கள் இந்த தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கைபண்ணாமல், அவர்கள் பலிபீடங்களை இடித்துவிடக்கடவீர்கள் என்றும் சொன்னேன்; ஆனாலும் என் சொல்லைக் கேளாதேபோனீர்கள்; ஏன் இப்படிச் செய்தீர்கள்?
3ஆகையால் நான் அவர்களை உங்கள் முகத்திற்கு முன்பாகத் துரத்துவதில்லை என்றேன்; அவர்கள் உங்களை நெருக்குவார்கள்; அவர்களுடைய தேவர்கள் உங்களுக்குக் கண்ணியாவார்கள் என்றார்.
4 கர்த்தருடைய தூதனானவர் இந்த வார்த்தைகளை இஸ்ரவேல் புத்திரர் எல்லாரோடும் சொல்லுகையில், ஜனங்கள் உரத்த சத்தமிட்டு அழுதார்கள்.
5அவ்விடத்திற்குப் போகீம் என்று பேரிட்டு, அங்கே கர்த்தருக்குப் பலியிட்டார்கள்.
6யோசுவா இஸ்ரவேல் புத்திரராகிய ஜனங்களை அனுப்பிவிட்டபோது, அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ள அவரவர் தங்கள்தங்கள் சுதந்தர வீதத்திற்குப் போனார்கள்.
7யோசுவாவின் சகல நாட்களிலும் கர்த்தர் இஸ்ரவேலுக்காகச் செய்த அவருடைய பெரிய கிரியைகளையெல்லாம் கண்டவர்களும், யோசுவாவுக்குப் பின்பு உயிரோடிருந்தவர்களுமாகிய மூப்பரின் சகல நாட்களிலும் ஜனங்கள் கர்த்தரைச் சேவித்தார்கள்.
8நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் கர்த்தரின் ஊழியக்காரன் நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரணமடைந்தான்.
9அவனை எப்பிராயீமின் மலைதேசத்திலுள்ள காயாஸ் மலைக்கு வடக்கேயிருக்கிற அவனுடைய சுதந்தரத்தின் எல்லையாகிய திம்னாத்ஏரேசிலே அடக்கம்பண்ணினார்கள்.
10அக்காலத்தில் இருந்த அந்தச் சந்ததியார் எல்லாரும் தங்கள் பிதாக்களுடன் சேர்க்கப்பட்டபின்பு, கர்த்தரையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த கிரியையையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப்பின் எழும்பிற்று.
11அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, பாகால்களைச் சேவித்து,
12தங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின அவர்களுடைய தேவனாகிய கர்த்தரை விட்டு, தங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்களுடைய தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றிப்போய், அவர்களைப் பணிந்துகொண்டு, கர்த்தருக்குக் கோபமூட்டினார்கள்.
13அவர்கள் கர்த்தரை விட்டு, பாகாலையும் அஸ்தரோத்தையும் சேவித்தார்கள்.
14அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின் மேல் கோபமூண்டவராகி, அவர்கள் அப்புறம் தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக்கூடாதபடி கொள்ளையிடுகிற கொள்ளைக்காரர் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்து, அவர்களைச் சுற்றிலும் இருக்கிற அவர்கள் பகைஞரின் கையிலே விற்றுப்போட்டார்.
15 கர்த்தர் சொல்லியபடியும், கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தபடியும், அவர்கள் புறப்பட்டுப்போகிற இடமெல்லாம் கர்த்தருடைய கை தீமைக்கென்றே அவர்களுக்கு விரோதமாயிருந்தது; மிகவும் நெருக்கப்பட்டார்கள்.
16 கர்த்தர் நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணினார்; அவர்கள் கொள்ளையிடுகிறவர்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார்கள்.
17அவர்கள் தங்கள் நியாயாதிபதிகளின் சொல்லைக் கேளாமல், அந்நிய தேவர்களைப் பின்பற்றிச் சோரம்போய், அவைகளைப் பணிந்துகொண்டார்கள்; தங்கள் பிதாக்கள் கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகி, அவர்கள் செய்தபடி செய்யாமற்போனார்கள்.
18 கர்த்தர் அவர்களுக்கு நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணுகிறபோது, கர்த்தர் நியாயாதிபதியோடேகூட இருந்து அந்த நியாயாதிபதியின் நாட்களிலெல்லாம் அவர்கள் சத்துருக்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சித்துவருவார்; அவர்கள் தங்களை இறுகப்பிடித்து ஒடுக்குகிறவர்களினிமித்தம் தவிக்கிறதினாலே, கர்த்தர் மனஸ்தாபப்படுவார்.
19நியாயாதிபதி மரணமடைந்த உடனே, அவர்கள் திரும்பி, அந்நிய தேவர்களைப் பின்பற்றவும் சேவிக்கவும் பணிந்துகொள்ளவும், தங்கள் பிதாக்களைப்பார்க்கிலும் கேடாய் நடந்து, தங்கள் கிர்த்தியங்களையும் தங்கள் முரட்டாட்டமான வழியையும் விடாதிருப்பார்கள்.
20ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் கோபமூண்டவராகி: இந்த ஜனங்கள் தங்கள் பிதாக்களுக்கு நான் கற்பித்த என் உடன்படிக்கையை மீறி என் சொல்லைக் கேளாதேபோனபடியால்,
21யோசுவா மரித்துப் பின்வைத்துப்போன ஜாதிகளில் ஒருவரையும், நான் இனி அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிடாதிருப்பேன்.
22அவர்கள் பிதாக்கள் கர்த்தரின் வழியைக் கவனித்ததுபோல, அவர்கள் அதிலே நடக்கும்படிக்கு, அதைக் கவனிப்பார்களோ இல்லையோ என்று, அவர்களைக்கொண்டு இஸ்ரவேலைச் சோதிப்பதற்காக அப்படிச் செய்வேன் என்றார்.
23அதற்காகக் கர்த்தர் அந்த ஜாதிகளை யோசுவாவின் கையில் ஒப்புக்கொடாமலும், அவைகளைச் சீக்கிரமாய்த் துரத்திவிடாமலும் விட்டுவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *