Scripture Portion: Judges 3-5

நியாயாதிபதிகள் 3

1கானான் தேசத்தில் நடந்த சகல யுத்தங்களையும் அறியாதிருந்த இஸ்ரவேலராகிய அனைவரையும் சோதிப்பதற்காகவும்,
2இஸ்ரவேல் புத்திரரின் சந்ததியாரும் அதற்குமுன் யுத்தஞ்செய்ய அறியாதிருந்தவர்களும் அவைகளை அறியும்படி பழக்குவிப்பதற்காகவும் கர்த்தர் விட்டுவைத்த ஜாதிகள் யாரென்றால்:
3பெலிஸ்தரின் ஐந்து அதிபதிகளும், சகல கானானியரும், சீதோனியரும், பாகால்எர்மோன் துவக்கி ஆமாத்திற்குள் பிரவேசிக்கும்வரைக்கும் லீபனோனின் மலைகளிலே குடியிருக்கிற ஏவியருமே.
4கர்த்தர் மோசேயைக்கொண்டு தங்கள் பிதாக்களுக்கு விதித்த கற்பனைகளுக்கு இஸ்ரவேலர் கீழ்ப்படிவார்களோ என்று அறியும்படி, இஸ்ரவேலரை அவர்களாலே சோதிப்பதற்காக அவர்கள் விடப்பட்டிருந்தார்கள்.
5இப்படி இஸ்ரவேல் புத்திரர், கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியராகிய இவர்கள் நடுவே குடியிருந்து,
6அவர்களுடைய குமாரத்திகளை விவாகம்பண்ணி, தங்களுடைய குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடுத்து, அவர்கள் தேவர்களைச் சேவித்தார்கள்.
7இப்படி இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்து, பாகால்களையும் தோப்பு விக்கிரகங்களையும் சேவிக்கிறபோது,
8கர்த்தர் இஸ்ரவேலின்மேல் கோபமூண்டவராகி, அவர்களை மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமின் கையிலே விற்றுப்போட்டார்; இப்படியே இஸ்ரவேல் புத்திரர் கூசான்ரிஷதாயீமை எட்டு வருஷம் சேவித்தார்கள்.
9இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை இரட்சிக்கும்படி காலேபின் தம்பியான கேனாசுடைய குமாரனாகிய ஒத்னியேல் என்னும் ஒரு இரட்சகனை அவர்களுக்கு எழும்பப்பண்ணினார்.
10அவன்மேல் கர்த்தருடைய ஆவி வந்திருந்ததினால், அவன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, யுத்தம்பண்ணப் புறப்பட்டான்; கர்த்தர் மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமை அவன் கையிலே ஒப்புக்கொடுத்தார்; ஆகையால் அவன் கை கூசான்ரிஷதாயீமின்மேல் பலங்கொண்டது.
11தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது. கேனாசின் குமாரனாகிய ஒத்னியேல் மரணமடைந்தான்.
12இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள்; அவர்கள் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவை இஸ்ரவேலுக்கு விரோதமாய்ப் பலக்கப்பண்ணினார்.
13அவன் அம்மோன் புத்திரரையும் அமலேக்கியரையும் கூட்டிக்கொண்டு வந்து, இஸ்ரவேலை முறிய அடித்தான்; பேரீச்சமரங்களின் பட்டணத்தையும் பிடித்தான்.
14இப்படியே இஸ்ரவேல் புத்திரர் எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவைப் பதினெட்டு வருஷம் சேவித்தார்கள்.
15இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, கர்த்தர் அவர்களுக்குப் பென்யமீன் கோத்திரத்தானாகிய கேராவின் மகன் ஏகூத் என்னும் இரட்சகனை எழும்பப்பண்ணினார்; அவன் இடதுகைப் பழக்கமுள்ளவனாயிருந்தான்; அவன் கையிலே இஸ்ரவேல் புத்திரர் மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்குக் காணிக்கை அனுப்பினார்கள்.
16ஏகூத், இருபுறமும் கருக்கும் ஒரு முழ நீளமுமான ஒரு கத்தியை உண்டுபண்ணி, அதைத் தன் வஸ்திரத்துக்குள்ளே தன் வலதுபுறத்து இடுப்பிலே கட்டிக்கொண்டு,
17காணிக்கையை மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்குச் செலுத்தினான்; எக்லோன் மிகவும் ஸ்தூலித்த மனுஷனாயிருந்தான்.
18அவன் காணிக்கையைச் செலுத்தித் தீர்ந்தபின்பு, காணிக்கையைச் சுமந்து வந்த ஜனங்களை அனுப்பிவிட்டான்.
19அவனோ கில்காலிலுள்ள சிலைகள் இருக்கும் இடத்திலிருந்து திரும்பிவந்து: ராஜாவே, உம்மிடத்தில் சொல்லவேண்டிய இரகசியமான ஒரு வார்த்தை உண்டு என்றான். அதற்கு அவன்: பொறு என்றான்; அப்பொழுது அவனிடத்தில் நின்ற யாவரும் அவனை விட்டு வெளியே போய்விட்டார்கள்.
20ஏகூத் அவன் கிட்டே போனான்; அவனோ தனக்குத் தனிப்புறம் இருந்த குளிர்ச்சியான அறைவீட்டில் உட்கார்ந்திருந்தான்; அப்பொழுது ஏகூத்: உம்மிடத்திலே சொல்லவேண்டிய தேவவாக்கு எனக்கு உண்டு என்றான்; அவன் தன் ஆசனத்திலிருந்து எழுந்திருந்தான்.
21உடனே ஏகூத் தன் இடதுகையை நீட்டி, தன் வலதுபுறத்து இடுப்பிலே கட்டியிருந்த கத்தியை உருவி, அதை அவன் வயிற்றிற்குள் பாய்ச்சினான்.
22அலகோடேகூடக் கைப்பிடியும் உள்ளே புகுந்தது; அவனுடைய வயிற்றிற்குள் போன கத்தியை இவன் இழுக்கக்கூடாதபடிக்கு, நிணம் அலகைச் சுற்றிக் கொண்டடைத்தது; அது பின்புறத்திலே புறப்பட்டது.
23ஏகூத் புறப்பட்டு, அறைவீட்டின் கதவைச் சாத்திப் பூட்டிப்போட்டு, கொலுக்கூடத்தின் வழியாய்ப் போய்விட்டான்.
24அவன் போனபின்பு ஊழியக்காரர் வந்து பார்த்தார்கள்; இதோ, அறைவீட்டின் கதவு பூட்டியிருந்தது; ஆகையால் அவர் அந்தக் குளிர்ச்சியான அறையிலே மலஜலாதிக்கிருக்கிறாராக்கும் என்றார்கள்.
25அவர்கள் சலித்துப்போகுமட்டும் காத்திருந்தார்கள்; அவன் அறைவீட்டின் கதவைத் திறக்கவில்லை; ஆகையால் ஒரு திறவுகோலை எடுத்துத் திறந்தார்கள்; இதோ, அவர்கள் ஆண்டவன் தரையிலே செத்துக்கிடந்தான்.
26அவர்கள் தாமதித்துக்கொண்டிருந்தபோது, ஏகூத் ஓடிப்போய், சிலைகளுள்ள இடத்தைக் கடந்து, சேயிராத்தைச் சேர்ந்து தப்பினான்.
27அங்கே வந்தபோது எப்பிராயீம் மலையில் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் அவனோடேகூட மலையிலிருந்து இறங்கினார்கள்; அவன் அவர்களுக்கு முன்பாக நடந்து:
28என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள்; கர்த்தர் உங்கள் பகைஞராகிய மோவாபியரை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார் என்றான். அவர்கள் அவனைப் பின்தொடர்ந்துபோய், மோவாபுக்கு எதிரான யோர்தான் துறைகளைப் பிடித்து, ஒருவனையும் கடந்துபோகவொட்டாமல்,
29அக்காலத்திலே மோவாபியரில் ஏறக்குறையப் பதினாயிரம் பேரை வெட்டினார்கள்; அவர்களெல்லாரும் புஷ்டியுள்ளவர்களும் பராக்கிரமசாலிகளுமாயிருந்தார்கள்; அவர்களில் ஒருவனும் தப்பவில்லை.
30இப்படியே அந்நாளிலே மோவாப் இஸ்ரவேலுடைய கையின்கீழ்த் தாழ்த்தப்பட்டது; அதனாலே தேசம் எண்பது வருஷம் அமைதலாயிருந்தது.
31அவனுக்குப்பிற்பாடு ஆனாத்தின் குமாரன் சம்கார் எழும்பினான்; அவன் பெலிஸ்தரில் அறுநூறு பேரை ஒரு தாற்றுக்கோலால் முறிய அடித்தான்; அவனும் இஸ்ரவேலை இரட்சித்தான்.

நியாயாதிபதிகள் 4

1ஏகூத் மரணமடைந்தபின்பு இஸ்ரவேல் புத்திரர் திரும்பக் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்துவந்தார்கள்.
2ஆகையால் கர்த்தர் அவர்களை ஆத்சோரில் ஆளுகிற யாபீன் என்னும் கானானியருடைய ராஜாவின் கையிலே விற்றுப்போட்டார்; அவனுடைய சேனாபதிக்குச் சிசெரா என்று பேர்; அவன் புறஜாதிகளுடைய பட்டணமாகிய அரோசேத்திலே குடியிருந்தான்.
3அவனுக்குத் தொளாயிரம் இரும்பு ரதங்கள் இருந்தது; அவன் இஸ்ரவேல் புத்திரரை இருபது வருஷம் கொடுமையாய் ஒடுக்கினான்; இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள்.
4அக்காலத்திலே லபிதோத்தின் மனைவியாகிய தெபொராள் என்னும் தீர்க்கதரிசியானவள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தாள்.
5அவள் எப்பிராயீம் மலைதேசமான ராமாவுக்கும் பெத்தேலுக்கும் நடுவிலிருக்கிற தெபொராளின் பேரீச்சமரத்தின்கீழே குடியிருந்தாள்; அங்கே இஸ்ரவேல் புத்திரர் அவளிடத்திற்கு நியாயவிசாரணைக்குப் போவார்கள்.
6அவள் நப்தலியிலுள்ள கேதேசிலிருக்கிற அபினோகாமின் குமாரன் பாராக்கை வரவழைத்து: நீ நப்தலி புத்திரரிலும், செபுலோன் புத்திரரிலும் பதினாயிரம்பேரைக் கூட்டிக்கொண்டு, தாபோர் மலைக்குப் போகக்கடவாய் என்றும்,
7நான் யாபீனின் சேனாபதியாகிய சிசெராவையும், அவன் ரதங்களையும், அவன் சேனையையும், கீசோன் பள்ளத்தாக்கிலே உன்னிடத்திற்கு வர இழுத்து, அவனை உன் கையில் ஒப்புகொடுப்பேன் என்றும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிடவில்லையா என்றாள்.
8அதற்குப் பாராக்: நீ என்னோடேகூட வந்தால் போவேன்; என்னோடேகூட வராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான்.
9அதற்கு அவள்: நான் உன்னோடேகூட நிச்சயமாய் வருவேன்; ஆனாலும் நீ போகிற பிரயாணத்தில் உண்டாகிற மேன்மை உனக்குக் கிடையாது; கர்த்தர் சிசெராவை ஒரு ஸ்திரீயின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்று சொல்லி, தெபொராள் எழும்பி, பாராக்கோடேகூடக் கேதேசுக்குப் போனாள்.
10அப்பொழுது பாராக்: செபுலோன் மனுஷரையும் நப்தலி மனுஷரையும் கேதேசுக்கு வரவழைத்து, தன்னைப் பின்செல்லும் பதினாயிரம்பேரோடே போனான்; தெபொராளும் அவனோடேகூடப் போனாள்.
11கேனியனான ஏபேர் என்பவன் மோசேயின் மாமனாகிய ஒபாபின் புத்திரராயிருக்கிற கேனியரை விட்டுப் பிரிந்து, கேதேசின் கிட்ட இருக்கிற சானாயிம் என்னும் கர்வாலி மரங்கள் அருகே தன் கூடாரத்தைப் போட்டிருந்தான்.
12அபினோகாமின் குமாரன் பாராக் தாபோர் மலையில் ஏறிப்போனான் என்று சிசெராவுக்கு அறிவிக்கப்பட்டபோது,
13சிசெரா தொளாயிரம் இரும்புரதங்களாகிய தன்னுடைய எல்லா ரதங்களையும், தன்னோடிருக்கும் எல்லா ஜனங்களையும், புறஜாதிகளின் பட்டணமாகிய அரோசேத்திலிருந்து கீசோன் பள்ளத்தாக்கிலே வரவழைத்தான்.
14அப்பொழுது தெபொராள் பாராக்கை நோக்கி: எழுந்துபோ; கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்படவில்லையா என்றாள்; அப்பொழுது பாராக்கும், அவன் பின்னாலே பதினாயிரம்பேரும், தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள்.
15கர்த்தர் சிசெராவையும் அந்த எல்லா ரதங்களையும் சேனையனைத்தையும் பாராக்குக்கு முன்பாகப் பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார்; சிசெரா ரதத்தைவிட்டிறங்கி கால்நடையாய் ஓடிப்போனான்.
16பாராக் ரதங்களையும் சேனையையும் புறஜாதிகளுடைய அரோசேத்மட்டும் துரத்தினான்; சிசெராவின் சேனையெல்லாம் பட்டயக்கருக்கினால் விழுந்தது; ஒருவனும் மீதியாயிருக்கவில்லை.
17சிசெரா கால்நடையாய்க் கேனியனான ஏபேரின் மனைவி யாகேலுடைய கூடாரத்திற்கு ஓடிவந்தான்; அப்பொழுது யாபீன் என்னும் ஆத்சோரின் ராஜாவுக்கும், கேனியனான ஏபேரின் வீட்டுக்கும் சமாதானம் உண்டாயிருந்தது.
18யாகேல் வெளியே சிசெராவுக்கு எதிர்கொண்டுபோய்: உள்ளே வாரும்; என் ஆண்டவனே, என்னண்டை உள்ளே வாரும், பயப்படாதேயும் என்று அவனோடே சொன்னாள்; அப்படியே அவளண்டை கூடாரத்தில் உள்ளே வந்தபோது, அவனை ஒரு சமுக்காளத்தினாலே மூடினாள்.
19அவன் அவளைப் பார்த்து; குடிக்க எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தா, தாகமாயிருக்கிறேன் என்றான்; அவள் பால்துருத்தியைத் திறந்து, அவனுக்குக் குடிக்கக்கொடுத்து, திரும்பவும் அவனை மூடினாள்.
20அப்பொழுது அவன்: நீ கூடாரவாசலிலே நின்று, யாராவது ஒருவன் வந்து, இங்கே யாராகிலும் இருக்கிறார்களா என்று உன்னிடத்தில் கேட்டால், இல்லை என்று சொல் என்றான்.
21பின்பு ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஒரு கூடார ஆணியை எடுத்து, தன் கையிலே சுத்தியைப் பிடித்துக் கொண்டு, மெள்ள அவனண்டையில் வந்து, அவன் நெற்றியிலே அந்த ஆணியை அடித்துப்போட்டாள்; அது உருவிப்போய், தரையிலே புதைந்தது; அப்பொழுது ஆயாசமாய்த் தூங்கின அவன் செத்துப்போனான்.
22பின்பு சிசெராவைத் தொடருகிற பாராக் வந்தான்; அப்பொழுது யாகேல் வெளியே அவனுக்கு எதிர்கொண்டுபோய்: வாரும், நீ தேடுகிற மனுஷனை உமக்குக் காண்பிப்பேன் என்று சொன்னாள்; அவன் அவளிடத்திற்கு வந்தபோது, இதோ, சிசெரா செத்துக்கிடந்தான்; ஆணி அவன் நெற்றிப் பொட்டில் அடித்திருந்தது.
23இப்படி தேவன் அந்நாளிலே கானானியரின் ராஜாவாகிய யாபீனை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் தாழ்த்தினார்.
24இஸ்ரவேல் புத்திரரின் கை கானானியரின் ராஜாவாகிய யாபீனை நிர்மூலமாக்குமட்டும் அவன்மேல் பலத்துக்கொண்டேயிருந்தது.

நியாயாதிபதிகள் 5

1அந்நாளிலே தெபொராளும் அபினோகாமின் குமாரன் பாராக்கும் பாடினதாவது:
2 கர்த்தர் இஸ்ரவேலுக்காக நீதியைச் சரிக்கட்டினதினிமித்தமும், ஜனங்கள் மனப்பூர்வமாய்த் தங்களை ஒப்புக்கொடுத்ததினிமித்தமும் அவரை ஸ்தோத்திரியுங்கள்.
3ராஜாக்களே, கேளுங்கள்; அதிபதிகளே, செவிகொடுங்கள்; நான் கர்த்தரைப் பாடி, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
4 கர்த்தாவே, நீர் சேயீரிலிருந்து புறப்பட்டு, ஏதோமின் வெளியிலிருந்து நடந்து வருகையில், பூமி அதிர்ந்தது, வானம் சொரிந்தது, மேகங்களும் தண்ணீராய்ப் பொழிந்தது.
5 கர்த்தருக்கு முன்பாகப் பர்வதங்கள் கரைந்தது; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக சீனாயும் கரைந்தது.
6ஆனாத்தின் குமாரனாகிய சம்காரின் நாட்களிலும், யாகேலின் நாட்களிலும், பெரும்பாதைகள் பாழாய்க் கிடந்தது; வழி நடக்கிறவர்கள் பக்கவழியாய் நடந்தார்கள்.
7தெபொராளாகிய நான் எழும்புமளவும், இஸ்ரவேலிலே நான் தாயாக எழும்புமளவும், கிராமங்கள் பாழாய்ப்போயின, இஸ்ரவேலின் கிராமங்கள் பாழாய்ப்போயின.
8நூதன தேவர்களைத் தெரிந்து கொண்டார்கள்; அப்பொழுது யுத்தம் வாசல்வரையும் வந்தது; இஸ்ரவேலிலே நாற்பதினாயிரம்பேருக்குள்ளே கேடகமும் ஈட்டியும் காணப்பட்டதுண்டோ?
9ஜனங்களுக்குள்ளே தங்களை மனப்பூர்வமாய் ஒப்புக்கொடுத்த இஸ்ரவேலின் அதிபதிகளை என் இருதயம் நாடுகிறது; கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.
10வெள்ளைக் கழுதைகளின்மேல் ஏறுகிறவர்களே, நியாயஸ்தலத்தில் வீற்றிருக்கிறவர்களே, வழியில் நடக்கிறவர்களே, இதைப் பிரஸ்தாபியுங்கள்.
11தண்ணீர் மொண்டுகொள்ளும் இடங்களில் வில்வீரரின் இரைச்சலுக்கு நீங்கினவர்கள் அங்கே கர்த்தரின் நீதிநியாயங்களையும், அவர் இஸ்ரவேலிலுள்ள தமது கிராமங்களுக்குச் செய்த நீதிநியாயங்களையுமே பிரஸ்தாபப்படுத்துவார்கள்; அதுமுதல் கர்த்தரின் ஜனங்கள் ஒலிமுகவாசல்களிலே போய் இறங்குவார்கள்.
12விழி, விழி, தெபொராளே, விழி, விழி, பாட்டுப்பாடு; பாராக்கே, எழும்பு; அபினோகாமின் குமாரனே, உன்னைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கிக்கொண்டுபோ.
13மீதியாயிருந்தவர்கள் ஜனத்தின் பிரபுக்களை ஆளும்படி செய்தார்; கர்த்தர் எனக்குப் பராக்கிரமசாலிகளின்மேல் ஆளுகை தந்தார்.
14அமலேக்குக்கு விரோதமாக இவர்களுடைய வேர் எப்பிராயீமிலிருந்து துளிர்த்தது; உன் ஜனங்களுக்குள்ளே பென்யமீன் மனுஷர் உனக்குப் பின்சென்றார்கள்; மாகீரிலிருந்து அதிபதிகளும், செபுலோனிலிருந்து எழுதுகோலைப் பிடிக்கிறவர்களும் இறங்கிவந்தார்கள்.
15இசக்காரின் பிரபுக்களும் தெபொராளோடே இருந்தார்கள்; பாராக்கைப்போல இசக்கார் மனுஷரும் பள்ளத்தாக்கில் கால்நடையாய் அனுப்பப்பட்டுப்போனார்கள்; ரூபனின் பிரிவினைகளால் உண்டான இருதயத்தின் நினைவுகள் மிகுதி.
16மந்தைகளின் சத்தத்தைக் கேட்க, நீ தொழுவங்களின் நடுவே இருந்துவிட்டதென்ன? ரூபனின் பிரிவினைகளால் மனோவிசாரங்கள் மிகுதி.
17கீலேயாத் மனுஷர் யோர்தானுக்கு அக்கரையிலே இருந்துவிட்டார்கள்; தாண் மனுஷர் கப்பல்களில் தங்கியிருந்ததென்ன? ஆசேர் மனுஷர் கடற்கரையிலே தங்கி, தங்கள் குடாக்களில் தாபரித்தார்கள்.
18செபுலோனும் நப்தலியும் போர்க்களத்து முனையிலே தங்கள் உயிரை எண்ணாமல் மரணத்துக்குத் துணிந்து நின்றார்கள்.
19ராஜாக்கள் வந்து யுத்தம்பண்ணினார்கள்; அப்பொழுது கானானியரின் ராஜாக்கள் மெகிதோவின் தண்ணீர் அருகான தானாக்கிலே யுத்தம்பண்ணினார்கள்; அவர்களுக்குத் திரவியக்கொள்ளை கிடைக்கவில்லை.
20வானத்திலிருந்து யுத்தம் உண்டாயிற்று; நட்சத்திரங்கள் தங்கள் அயனங்களிலிருந்து சிசெராவோடே யுத்தம்பண்ணின.
21கீசோன் நதி, பூர்வ நதியாகிய கீசோன் நதியே, அவர்களை அடித்துக்கொண்டு போயிற்று; என் ஆத்துமாவே, நீ பலவான்களை மிதித்தாய்.
22அப்பொழுது குதிரைகளின் குளம்புகள், பாய்ச்சலினாலே, பலவான்களின் பாய்ச்சலினாலேயே, பிளந்துபோயின.
23மேரோசைச் சபியுங்கள்; அதின் குடிகளைச் சபிக்கவே சபியுங்கள் என்று கர்த்தருடைய தூதனானவர் சொல்லுகிறார்; அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணை நிற்க வரவில்லை; பராக்கிரமசாலிகளுக்கு விரோதமாய் அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணைநிற்க வரவில்லையே.
24ஸ்திரீகளுக்குள்ளே கேனியனான ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஆசீர்வதிக்கப்பட்டவள்; கூடாரத்தில் வாசமாயிருக்கிற ஸ்திரீகளுக்குள்ளே அவள் ஆசீர்வதிக்கப்பட்டவளே.
25தண்ணீரைக் கேட்டான், பாலைக் கொடுத்தாள்; ராஜாக்களின் கிண்ணியிலே வெண்ணெயைக் கொண்டுவந்து கொடுத்தாள்.
26தன் கையால் ஆணியையும், தன் வலது கையால் தொழிலாளரின் சுத்தியையும் பிடித்து, சிசெராவை அடித்தாள்; அவன் நெற்றியில் உருவக்கடாவி, அவன் தலையை உடைத்துப்போட்டாள்.
27அவள் கால் அருகே அவன் மடங்கி விழுந்துகிடந்தான், அவள் கால் அருகே மடங்கி விழுந்தான்; அவன் எங்கே மடங்கி விழுந்தானோ அங்கே மடிந்துகிடந்தான்.
28சிசெராவின் தாய் ஜன்னலில் நின்று பலகணி வழியாய்ப் பார்த்துக்கொண்டிருந்து: அவனுடைய இரதம் வராமல் பிந்திப்போனதென்ன? அவனுடைய இரதங்களின் ஓட்டம் தாமதிக்கிறதென்ன என்று புலம்பினாள்.
29அவளுடைய நாயகிகளில் புத்திசாலிகள் அவளுக்கு உத்தரவு சொன்னதுமின்றி, அவள் தானும் தனக்கு மறுமொழியாக:
30அவர்கள் கொள்ளையைக் கண்டுபிடிக்கவில்லையோ, அதைப் பங்கிடவேண்டாமோ, ஆளுக்கு இரண்டொரு பெண்களையும், சிசெராவுக்குக் கொள்ளையிட்ட பலவருணமான ஆடைகளையும், கொள்ளையிட்ட பலவருணமான சித்திரத் தையலாடைகளையும், கொள்ளையிட்டவர்களின் கழுத்துக்கு இருபுறமும் பொருந்தும் சித்திரத்தையலுள்ள பலவருணமான ஆடையையும் கொடுக்கவேண்டாமோ என்றாள்.
31 கர்த்தாவே, உம்மைப் பகைக்கிற யாவரும் இப்படியே அழியக்கடவர்கள்; அவரில் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடே உதிக்கிற சூரியனைப்போல இருக்கக்கடவர்கள் என்று பாடினார்கள். பின்பு தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *