Scripture Portion: Judges 19-21

நியாயாதிபதிகள் 19

1இஸ்ரவேலில் ராஜா இல்லாத அந்நாட்களிலே, எப்பிராயீம் மலைகள் அருகே பரதேசியாய்த் தங்கின ஒரு லேவியன் இருந்தான்; அவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராளாகிய ஒரு ஸ்திரீயைத் தனக்கு மறுமனையாட்டியாகக் கொண்டிருந்தான்.
2அவள் அவனுக்குத் துரோகமாய் விபசாரம்பண்ணி, அவனை விட்டு, யூதா தேசத்துப் பெத்லெகேம் ஊரிலிருக்கிற தன் தகப்பன் வீட்டுக்குப் போய், அங்கே நாலு மாதம் வரைக்கும் இருந்தாள்.
3அவள் புருஷன் அவளோடே நலவு சொல்லவும், அவளைத் திரும்ப அழைத்து வரவும், இரண்டு கழுதைகளை ஆயத்தப்படுத்தி, தன் வேலைக்காரனைக் கூட்டிக்கொண்டு, அவளிடத்துக்குப் போனான்; அப்பொழுது அவள் அவனைத் தன் தகப்பன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனாள்; ஸ்திரீயின் தகப்பன் அவனைக்கண்டபோது சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டு,
4ஸ்திரீயின் தகப்பனாகிய அவனுடைய மாமன் அவனை இருத்திக்கொண்டதினால், மூன்றுநாள் அவனோடிருந்தான்; அவர்கள் அங்கே புசித்துக் குடித்து இராத்தங்கினார்கள்.
5நாலாம்நாள் காலமே அவர்கள் எழுந்திருந்தபோது, அவன் பிரயாணப்படுகையில், ஸ்திரீயின் தகப்பன் தன் மருமகனை நோக்கி: கொஞ்சம் அப்பம் புசித்து, உன் மனதைத் தேற்றிக்கொள்; பிற்பாடு நீங்கள் போகலாம் என்றான்.
6அவர்கள் உட்கார்ந்து, இருவரும் கூடப் புசித்துக் குடித்தார்கள்; ஸ்திரீயின் தகப்பன் அந்த மனுஷனைப் பார்த்து: நீ தயவுசெய்து, உன் இருதயம் மகிழ்ச்சியடைய இராத்திரிக்கும் இரு என்றான்.
7அப்படியே போகிறதற்கு அந்த மனுஷன் எழுந்தபோது, அவனுடைய மாமன் அவனை வருந்திக்கொண்டதினால், அவன் அன்று இராத்திரியும் அங்கே இருந்தான்.
8ஐந்தாம் நாளிலே அவன் போகிறதற்கு அதிகாலமே எழுந்திருந்தபோது, ஸ்திரீயின் தகப்பன்: இருந்து உன் இருதயத்தைத் தேற்றிக்கொள் என்றான்; அப்படியே அந்திநேரமட்டும் தாமதித்திருந்து, இருவரும் போஜனம்பண்ணினார்கள்.
9பின்பு அவனும், அவன் மறுமனையாட்டியும், அவன் வேலைக்காரனும் போகிறதற்கு எழுந்திருந்தபோது, ஸ்திரீயின் தகப்பனாகிய அவனுடைய மாமன்: இதோ, பொழுது அஸ்தமிக்கப்போகிறது, சாயங்காலமுமாயிற்று; இங்கே இராத்திரிக்கு இருங்கள்; பார், மாலைமயங்குகிற வேளையாயிற்று: உன் இருதயம் சந்தோஷமாயிருக்கும்படி, இங்கே இராத்தங்கி நாளை இருட்டோடே எழுந்திருந்து, உன் வீட்டுக்குப் போகலாம் என்றான்.
10அந்த மனுஷனோ, இராத்திரிக்கு இருக்க மனதில்லாமல், இரண்டு கழுதைகள்மேலும் சேணம்வைத்து, தன் மறுமனையாட்டியைக் கூட்டிக்கொண்டு, எழுந்து புறப்பட்டு, எருசலேமாகிய எபூசுக்கு நேராக வந்தான்.
11அவர்கள் எபூசுக்குச் சமீபமாய் வருகையில், பொழுதுபோகிறதாயிருந்தது; அப்பொழுது வேலைக்காரன் தன் எஜமானை நோக்கி: எபூசியர் இருக்கிற இந்தப் பட்டணத்திற்குப் போய், அங்கே இராத்தங்கலாம் என்றான்.
12அதற்கு அவன் எஜமான் நாம் வழியைவிட்டு, இஸ்ரவேல் புத்திரரில்லாத மறுஜாதியார் இருக்கிற பட்டணத்துக்குப் போகப்படாது; அப்பாலே கிபியா மட்டும் போவோம் என்று சொல்லி,
13தன் வேலைக்காரனைப் பார்த்து: நாம் கிபியாவிலாகிலும் ராமாவிலாகிலும் இராத்தங்கும்படிக்கு, அவைகளில் ஒரு இடத்திற்குப் போய்ச் சேரும்படி நடந்து போவோம் வா என்றான்.
14அப்படியே அப்பாலே நடந்துபோனார்கள்; பென்யமீன் நாட்டைச் சேர்ந்த கிபியாவின் கிட்ட வருகையில், சூரியன் அஸ்தமனமாயிற்று.
15ஆகையால் கிபியாவிலே வந்து இராத்தங்கும்படிக்கு, வழியைவிட்டு அவ்விடத்திற்குப் போனார்கள்; அவன் பட்டணத்துக்குள் போனபோது, இராத்தங்குகிறதற்கு அவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்வார் இல்லாததினால், வீதியில் உட்கார்ந்தான்.
16வயலிலே வேலைசெய்து, மாலையிலே திரும்புகிற ஒரு கிழவன் வந்தான்; அந்த மனுஷனும் எப்பிராயீம் மலைதேசத்தான், அவன் கிபியாவிலே சஞ்சரிக்க வந்தான்; அவ்விடத்து மனுஷரோ பென்யமீனர்.
17அந்தக் கிழவன் தன் கண்களை ஏறெடுத்துப் பட்டணத்து வீதியில் அந்தப் பிரயாணக்காரன் இருக்கக் கண்டு: எங்கே போகிறாய், எங்கேயிருந்து வந்தாய் என்று கேட்டான்.
18அதற்கு அவன்: நாங்கள் யூதாவிலுள்ள ஊராகிய பெத்லெகேமிலிருந்து வந்து, எப்பிராயீம் மலைதேசத்தின் புறங்கள்மட்டும் போகிறோம்; நான் அவ்விடத்தான்; யூதாவிலுள்ள பெத்லெகேம் மட்டும் போய்வந்தேன், நான் கர்த்தருடைய ஆலயத்துக்குப் போகிறேன்; இங்கே என்னை வீட்டிலே ஏற்றுக்கொள்வார் ஒருவரும் இல்லை.
19எங்கள் கழுதைகளுக்கு வைக்கோலும் தீவனமும் உண்டு; எனக்கும் உமது அடியாளுக்கும் உமது அடியானோடிருக்கிற வேலைக்காரனுக்கும் அப்பமும் திராட்சரசமும் உண்டு; ஒன்றிலும் குறைவில்லை என்றான்.
20அப்பொழுது அந்தக் கிழவன்: உனக்குச் சமாதானம்; உன் குறைவுகளெல்லாம் என்மேல் இருக்கட்டும்; வீதியிலே மாத்திரம் இராத்தங்க வேண்டாம் என்று சொல்லி,
21அவனைத் தன் வீட்டுக்குள் அழைத்துக்கொண்டுபோய், கழுதைகளுக்குத் தீவனம் போட்டான்; அவர்கள் தங்கள் கால்களைக் கழுவிக்கொண்டு, புசித்துக் குடித்தார்கள்.
22அவர்கள் மனமகிழ்ச்சியாயிருக்கிறபோது, இதோ, பேலியாளின் மக்களாகிய அந்த ஊர் மனுஷரில் சிலர் அந்த வீட்டைச் சூழ்ந்துகொண்டு, கதவைத் தட்டி: உன் வீட்டிலே வந்த அந்த மனுஷனை நாங்கள் அறியும்படிக்கு, வெளியே கொண்டுவா என்று வீட்டுக்காரனாகிய அந்தக் கிழவனோடே சொன்னார்கள்.
23அப்பொழுது வீட்டுக்காரனாகிய அந்த மனுஷன் வெளியே அவர்களிடத்தில் போய்: இப்படிச் செய்யவேண்டாம்; என் சகோதரரே, இப்படிப்பட்ட பொல்லாப்பைச் செய்யவேண்டாம்; அந்த மனுஷன் என் வீட்டிற்குள் வந்திருக்கையில், இப்படிக்கொத்த மதிகேட்டைச் செய்யீர்களாக.
24இதோ, கன்னியாஸ்திரீயாகிய என் மகளும், அந்த மனிதனுடைய மறுமனையாட்டியும் இருக்கிறார்கள்; அவர்களை உங்களிடத்தில் வெளியே கொண்டுவருகிறேன்; அவர்களை அவமானப்படுத்தி, உங்கள் பார்வைக்குச் சரிபோனபிரகாரம் அவர்களுக்குச் செய்யுங்கள்; ஆனாலும் இந்த மனுஷனுக்கு அப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்யவேண்டாம் என்றான்.
25அந்த மனுஷர் அவன் சொல்லைக்கேட்கவில்லை; அப்பொழுது அந்த மனுஷன் தன் மறுமனையாட்டியைப் பிடித்து, அவர்களிடத்தில் வெளியே கொண்டுவந்து விட்டான்; அவர்கள் அவளை அறிந்துகொண்டு, இராமுழுவதும் விடியுங்காலமட்டும் அவளை இலச்சையாய் நடத்தி, கிழக்கு வெளுக்கும்போது அவளைப்போகவிட்டார்கள்.
26விடியுங்காலத்திற்கு முன்னே அந்த ஸ்திரீ வந்து, வெளிச்சமாகுமட்டும் அங்கே தன் எஜமான் இருந்த வீட்டுவாசற்படியிலே விழுந்துகிடந்தாள்.
27அவள் எஜமான் காலமே எழுந்திருந்து வீட்டின் கதவைத் திறந்து, தன் வழியே போகப் புறப்படுகிறபோது, இதோ, அவன் மறுமனையாட்டியாகிய ஸ்திரீ வீட்டுவாசலுக்கு முன்பாகத் தன் கைகளை வாசற்படியின்மேல் வைத்தவளாய்க் கிடந்தாள்.
28எழுந்திரு போவோம் என்று அவன் அவளோடே சொன்னதற்குப் பிரதியுத்தரம் பிறக்கவில்லை. அப்பொழுது அந்த மனுஷன் அவளைக் கழுதையின்மேல் போட்டுக்கொண்டு, பிரயாணப்பட்டு, தன் இடத்திற்குப் போனான்.
29அவன் தன் வீட்டுக்கு வந்தபோது, ஒரு கத்தியை எடுத்து, தன் மறுமனையாட்டியைப் பிடித்து, அவளை அவளுடைய எலும்புகளோடுங்கூடப் பன்னிரண்டு துண்டமாக்கி, இஸ்ரவேலின் எல்லைகளுக்கெல்லாம் அனுப்பினான்.
30அப்பொழுது அதைக் கண்டவர்களெல்லாரும், இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து புறப்பட்ட நாள் முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் இதைப்போலொத்த காரியம் செய்யப்படவும் இல்லை, காணப்படவும் இல்லை; இந்தக் காரியத்தை யோசித்து ஆலோசனைபண்ணி செய்யவேண்டியது இன்னதென்று சொல்லுங்கள் என்றார்கள்.

நியாயாதிபதிகள் 20

1அப்பொழுது தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் கீலேயாத் தேசத்தாருடன் மிஸ்பாவிலே கர்த்தருக்கு முன்பாக ஏகோபித்து சபையாகக் கூடினார்கள்.
2சகல ஜனங்களின் அதிபதிகளும், இஸ்ரவேலின் சகல கோத்திரத்தாரும் தேவனுடைய ஜனமாகிய சபையாகக் கூடி நின்றார்கள்; அவர்கள் பட்டயம் உருவுகிற நாலு லட்சம் காலாட்கள்.
3இஸ்ரவேல் புத்திரர் மிஸ்பாவுக்கு வந்த செய்தியைப் பென்யமீன் புத்திரர் கேள்விப்பட்டார்கள்; அந்த அக்கிரமம் நடந்தது எப்படி, சொல்லுங்கள் என்று இஸ்ரவேல் புத்திரர் கேட்டார்கள்.
4அப்பொழுது கொலை செய்யப்பட்ட ஸ்திரீயின் புருஷனாகிய லேவியன் மாறுத்தரமாக: நானும் என் மறுமனையாட்டியும் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலே இராத்தங்க வந்தோம்.
5அப்பொழுது கிபியாபட்டணத்தார் எனக்கு விரோதமாய் எழும்பி, என்னைக் கொலை செய்ய நினைத்து, நான் இருந்த வீட்டை இராத்திரியிலே வளைந்து கொண்டு, என் மறுமனையாட்டியை அவமானப்படுத்தினார்கள்; அதினாலே அவள் செத்துப்போனாள்.
6ஆகையால் இஸ்ரவேலிலே அவர்கள் இப்படிப்பட்ட முறைகேட்டையும் மதிகேட்டையும் செய்தபடியினால், நான் என் மறுமனையாட்டியைப் பிடித்துத் துண்டித்து, இஸ்ரவேலின் சுதந்தரமான சகல நாடுகளுக்கும் அனுப்பினேன்.
7நீங்கள் எல்லாரும் இஸ்ரவேல் புத்திரராமே, இங்கே ஆலோசித்துத் தீர்மானம்பண்ணுங்கள் என்றான்.
8அப்பொழுது எல்லா ஜனங்களும் ஏகமாய் எழும்பி: நம்மில் ஒருவரும் தன் கூடாரத்திற்குப் போகவும்படாது, ஒருவனும் தன் வீட்டிற்குத் திரும்பவும்படாது.
9இப்பொழுது கிபியாவுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்: சீட்டுப்போட்டு அதற்கு விரோதமாகப் போவோம்.
10பென்யமீன் கோத்திரமான கிபியா பட்டணத்தார் இஸ்ரவேலிலே செய்த எல்லா மதிகேட்டுக்கும் தக்கதாக ஜனங்கள் வந்து செய்யும்படிக்கு, நாம் தானிய தவசங்களைச் சம்பாதிக்கிறதற்கு, இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் நூறு பேரில் பத்துப்பேரையும், ஆயிரம் பேரில் நூறுபேரையும், பதினாயிரம் பேரில் ஆயிரம்பேரையும் தெரிந்தெடுப்போம் என்றார்கள்.
11இஸ்ரவேலரெல்லாரும் ஒன்றுபோல ஏகோபித்துப் பட்டணத்திற்கு முன்பாகக் கூட்டங்கூடி,
12அங்கே இருந்த இஸ்ரவேலின் கோத்திரத்தார் பென்யமீன் கோத்திரமெங்கும் ஆட்களை அனுப்பி: உங்களுக்குள்ளே நடந்த இந்த அக்கிரமம் என்ன?
13இப்பொழுது கிபியாவில் இருக்கிற பேலியாளின் மக்களாகிய அந்த மனுஷரை நாங்கள் கொன்று, பொல்லாப்பை இஸ்ரவேலை விட்டு விலக்கும்படிக்கு, அவர்களை ஒப்புக்கொடுங்கள் என்று சொல்லச் சொன்னார்கள்; பென்யமீன் புத்திரர் இஸ்ரவேல் புத்திரராகிய தங்கள் சகோதரரின் சொல்லைக் கேட்க மனமில்லாமல்,
14இஸ்ரவேல் புத்திரரோடு யுத்தம்பண்ணப் புறப்படும்படிக்கு, பட்டணங்களிலிருந்து கிபியாவுக்கு வந்து கூடினார்கள்.
15கிபியாவின் குடிகளிலே தெரிந்து கொள்ளப்பட்ட எழுநூறு பேரையல்லாமல் அந்நாளில் பட்டணங்களிலிருந்து வந்து கூடின பட்டயம் உருவுகிற மனுஷரின் இலக்கம் இருபத்தாறாயிரம்பேர் என்று தொகையிடப்பட்டது.
16அந்த ஜனங்களெல்லாருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட இடது கை வாக்கான எழுநூறுபேர் இருந்தார்கள்; அவர்கள் அனைவரும் ஒரு மயிரிழையும் தப்பாதபடிக்குக் கவண்கல் எறிவார்கள்.
17பென்யமீன் கோத்திரத்தையல்லாமல் இஸ்ரவேலிலே பட்டயம் உருவுகிற மனுஷர் நாலு லட்சம்பேர் என்று தொகையிடப்பட்டது; இவர்களெல்லாரும் யுத்தவீரராயிருந்தார்கள்.
18இஸ்ரவேல் புத்திரரான அவர்கள் எழும்பி, தேவனுடைய வீட்டிற்குப் போய்: எங்களில் யார் முந்திப் போய் பென்யமீன் புத்திரரோடு யுத்தம்பண்ணவேண்டும் என்று தேவனிடத்தில் விசாரித்தார்கள்; அதற்குக் கர்த்தர்: யூதா முந்திப் போகவேண்டும் என்றார்.
19அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் காலமே எழுந்து புறப்பட்டு, கிபியாவுக்கு எதிராகப் பாளயமிறங்கினார்கள்.
20பின்பு இஸ்ரவேல் மனுஷர் பென்யமீனோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டு, கிபியாவிலே அவர்களுக்கு எதிராகப் போர்செய்ய அணிவகுத்து நின்றார்கள்.
21ஆனாலும் பென்யமீன் புத்திரர் கிபியாவிலிருந்து புறப்பட்டு, இஸ்ரவேலில் இருபத்தீராயிரம்பேரை அன்றையதினம் தரையிலே விழும்படி சங்கரித்தார்கள்.
22இஸ்ரவேல் ஜனங்கள் தங்களைத் திடப்படுத்திக்கொண்டு, முதல் நாளில் அணிவகுத்து நின்ற ஸ்தலத்திலே, மறுபடியும் போர் செய்ய அணிவகுத்து நின்றார்கள்.
23அவர்கள் போய், கர்த்தருடைய சந்நிதியில் சாயங்காலமட்டும் அழுது, எங்கள் சகோதரராகிய பென்யமீன் புத்திரரோடே திரும்பவும் யுத்தம் கலக்கப்போவோமா என்று கர்த்தரிடத்தில் விசாரித்தார்கள்; அப்பொழுது கர்த்தர்: அவர்களுக்கு விரோதமாய்ப் போங்கள் என்றார்.
24மறுநாளிலே இஸ்ரவேல் புத்திரர் பென்யமீன் புத்திரர் கிட்டச் சேருகிறபோது,
25பென்யமீன் கோத்திரத்தாரும் அந்நாளிலே கிபியாவிலிருந்து அவர்களுக்கு எதிராகப் புறப்பட்டுவந்து, பின்னும் இஸ்ரவேல் புத்திரரில் பட்டயம் உருவுகிற பதினெண்ணாயிரம்பேரைத் தரையிலே விழும்படி சங்கரித்தார்கள்.
26அப்பொழுது இஸ்ரவேல் புத்திரராகிய சகல ஜனங்களும் புறப்பட்டு, தேவனுடைய வீட்டிற்குப் போய், அங்கே கர்த்தருடைய சந்நிதியில் அழுது, தரித்திருந்து, அன்று சாயங்காலமட்டும் உபவாசித்து, கர்த்தருடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டு,
27கர்த்தரிடத்தில் விசாரித்தார்கள்; தேவனுடைய உடன்படிக்கையின் பெட்டி அந்நாட்களில் அங்கே இருந்தது.
28ஆரோனின் குமாரனாகிய எலெயாசாரின் மகன் பினெகாஸ் அந்நாட்களில் அவருடைய சந்நிதியில் நின்றான்; எங்கள் சகோதரராகிய பென்யமீன் புத்திரரோடே பின்னும் யுத்தம்பண்ணப் புறப்படலாமா புறப்படலாகாதா என்று அவர்கள் விசாரித்தார்கள்; அப்பொழுது கர்த்தர்: போங்கள்; நாளைக்கு அவர்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்.
29அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கிபியாவைச்சுற்றிலும் பதிவிடையாட்களை வைத்து,
30மூன்றாம் நாளிலே பென்யமீன் புத்திரருக்கு விரோதமாய்ப் போய், முன் இரண்டு தரம் செய்ததுபோல, கிபியாவுக்குச் சமீபமாய்ப் போருக்கு அணிவகுத்து நின்றார்கள்.
31அப்பொழுது பென்யமீன் புத்திரர் ஜனத்திற்கு விரோதமாய்ப் புறப்பட்டுப் பட்டணத்தை விட்டு, அப்பாலே வந்து, வெளியிலே பெத்தேலுக்கும் கிபியாவுக்கும் போகிற இரண்டு வழிகளில் இஸ்ரவேல் ஜனத்தில் ஏறக்குறைய முப்பதுபேரை, முதல் இரண்டுதரம் செய்ததுபோல, வெட்டவும் கொல்லவும் தொடங்கினார்கள்.
32முன்போல நமக்கு முன்பாக முறிய அடிக்கப்படுகிறார்கள் என்று பென்யமீன் புத்திரர் சொன்னார்கள்; இஸ்ரவேல் புத்திரரோ: அவர்களைப் பட்டணத்தை விட்டு அப்பாலேயிருக்கிற வழிகளிலே வரப்பண்ணும்படிக்கு, நாம் ஓடவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள்.
33அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் எல்லாரும் தங்கள் ஸ்தானத்திலிருந்து எழும்பி, பாகால்தாமாரிலே யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள்; இஸ்ரவேலரில் கிபியாவின் பள்ளத்தாக்கிலே பதிவிருந்தவர்கள் தங்கள் ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு,
34அவர்களில் எல்லா இஸ்ரவேலிலும் தெரிந்துகொள்ளப்பட்ட பதினாயிரம்பேர் கிபியாவுக்கு எதிரே வந்தார்கள்; யுத்தம் பலத்தது; ஆனாலும் தங்களுக்கு விக்கினம் நேரிட்டது என்று அவர்கள் அறியாதிருந்தார்கள்.
35கர்த்தர் இஸ்ரவேலுக்கு முன்பாகப் பென்யமீனை முறிய அடித்தார்; அந்நாளிலே இஸ்ரவேல் புத்திரர் பென்யமீனிலே பட்டயம் உருவுகிற ஆட்களாகிய இருபத்தையாயிரத்து நூறுபேரைச் சங்கரித்தார்கள்.
36இஸ்ரவேலர் கிபியாவுக்கு அப்பாலே வைத்த பதிவிடையை நம்பியிருந்தபடியினாலே, பென்யமீனருக்கு இடம் கொடுத்தார்கள்; அதினாலே அவர்கள் முறிய அடிக்கப்படுகிறார்கள் என்று பென்யமீன் புத்திரருக்குக் காணப்பட்டது.
37அப்பொழுது பதிவிடையிருந்தவர்கள் தீவிரமாய்க் கிபியாவின்மேல் பாய்ந்து பரவி, பட்டணத்தில் இருக்கிறவர்களெல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டினார்கள்.
38பட்டணத்திலிருந்து மகா பெரிய புகையை எழும்பப்பண்ணுவதே இஸ்ரவேலருக்கும் பதிவிடைக்காரருக்கும் குறிக்கப்பட்ட அடையாளமாயிருந்தது.
39ஆகையால் இஸ்ரவேலர் யுத்தத்திலே பின்வாங்கினபோது, பென்யமீனர்: முந்தின யுத்தத்தில் நடந்ததுபோல, அவர்கள் நமக்கு முன்பாக முறிய அடிக்கப்படுகிறார்களே என்று சொல்லி, இஸ்ரவேலரில் ஏறக்குறைய முப்பதுபேரை வெட்டவும் கொல்லவும் தொடங்கினார்கள்.
40பட்டணத்திலிருந்து புகையானது ஸ்தம்பம்போல உயர எழும்பினபோது, பென்யமீனர் பின்னாகப் பார்த்தார்கள்; இதோ, பட்டணத்தின் அக்கினி ஜூவாலை வானபரியந்தம் எழும்பிற்று.
41அப்பொழுது இஸ்ரவேலர் திரும்பிக் கொண்டார்கள்; பென்யமீன் மனுஷரோ, தங்களுக்கு விக்கினம் நேரிட்டதைக் கண்டு திகைத்து,
42இஸ்ரவேல் புத்திரரைவிட்டு, வனாந்தரத்திற்குப் போகிற வழிக்கு நேராய்த் திரும்பி ஓடிப்போனார்கள்; ஆனாலும் யுத்தம் அவர்களைத் தொடர்ந்தது; பட்டணங்களில் இருந்தவர்களும் தங்கள் நடுவே அகப்பட்டவர்களைக் கொன்றுபோட்டார்கள்.
43இப்படியே பென்யமீனரை வளைந்து கொண்டு துரத்தி, கிபியாவுக்குக் கிழக்குப்புறமாக வருமட்டும், அவர்களை லேசாய் மிதித்துப்போட்டார்கள்.
44இதினால் பென்யமீனரிலே பதினெண்ணாயிரம்பேர் விழுந்தார்கள்; அவர்களெல்லாரும் பலவான்களாயிருந்தார்கள்.
45மற்றவர்கள் விலகி, வனாந்தரத்தில் இருக்கிற ரிம்மோன் கன்மலைக்கு ஓடிப்போனார்கள்; அவர்களில் இன்னும் ஐயாயிரம்பேரை வழிகளிலே கொன்று, மற்றவர்களைக் கீதோம் மட்டும் பின்தொடர்ந்து, அவர்களில் இரண்டாயிரம்பேரை வெட்டிப்போட்டார்கள்.
46இவ்விதமாய் பென்யமீனரில் அந்நாளில் விழுந்தவர்களெல்லாரும் இருபத்தையாயிரம்பேர்; அவர்களெல்லாரும் பட்டயம் உருவுகிற பலவான்களாயிருந்தார்கள்.
47அறுநூறுபேர் திரும்பிக்கொண்டு ஓடி, வனாந்தரத்திலிருக்கிற ரிம்மோன் கன்மலைக்குப் போய், ரிம்மோன் கன்மலையிலே நாலு மாதம் இருந்தார்கள்.
48இஸ்ரவேலரோ பென்யமீன் புத்திரர் மேல் திரும்பி, பட்டணத்தில் மனுஷர் தொடங்கி மிருகங்கள்மட்டும் கண்டவைகள் எல்லாவற்றையும் பட்டயக்கருக்கினால் வெட்டி, கண்ட பட்டணங்களையெல்லாம் அக்கினியால் கொளுத்திப் போட்டார்கள்.

நியாயாதிபதிகள் 21

1இஸ்ரவேலர் மிஸ்பாவிலே இருக்கும்போது: நம்மில் ஒருவனும் தன் குமாரத்தியைப் பென்யமீனருக்கு விவாகம்பண்ணிக்கொடுப்பதில்லை என்று ஆணையிட்டிருந்தார்கள்.
2ஆகையால் ஜனங்கள் தேவனுடைய வீட்டிற்குப்போய், அங்கே தேவசந்நிதியிலே சாயங்காலமட்டும் இருந்து, சத்தமிட்டு, மிகவும் அழுது:
3இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, இன்று இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் குறைந்து போகத்தக்கதாக இஸ்ரவேலில் இந்தக் காரியம் நேரிட்டது என்ன என்றார்கள்.
4மறுநாளிலே, ஜனங்கள் காலமே எழுந்திருந்து, அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்கதகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினார்கள்.
5 கர்த்தருடைய சந்நிதியில் மிஸ்பாவுக்கு வராதவன் நிச்சயமாய்க் கொலை செய்யப்படக்கடவன் என்று அவர்கள் பெரிய ஆணையிட்டிருந்தபடியால், இஸ்ரவேல் புத்திரர்: கர்த்தருடைய சந்நிதியில் சபைகூடினபோது, இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலுமிருந்து வராதே போனவர்கள் யார் என்று விசாரித்தார்கள்.
6இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சகோதரராகிய பென்யமீனரை நினைத்து, மனஸ்தாபப்பட்டு: இன்று இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் அறுப்புண்டு போயிற்றே.
7மீந்திருப்பவர்களுக்கு மனைவிகள் கிடைக்கும்படி நாம் அவர்களுக்காக என்ன செய்யலாம்? நம்முடைய குமாரத்திகளில் ஒருத்தியையும் அவர்களுக்குக் கொடுப்பதில்லை என்று நாம் கர்த்தர்மேல் ஆணையிட்டுக் கொண்டோமே.
8இஸ்ரவேலின் கோத்திரங்களில் மிஸ்பாவிலே கர்த்தருடைய சந்நிதியில் வராதேபோன யாதொருவர் உண்டோ என்று விசாரித்தார்கள்; அப்பொழுது கீலேயாத்திலுள்ள யாபேசின் மனுஷரில் ஒருவரும் பாளயத்தில் சபைகூடினபோது வரவில்லை.
9ஜனங்கள் இலக்கம் பார்க்கப்பட்டபோது, கீலேயாத்திலிருக்கிற யாபேசின் குடிகளில் அங்கே ஒருவரும் இருந்ததில்லை.
10உடனே சபையார் பலவான்களில் பன்னீராயிரம்பேரை அங்கே அழைத்து: நீங்கள் போய், கீலேயாத்திலுள்ள யாபேசின் குடிகளை ஸ்திரீகளோடும் பிள்ளைகளோடும் பட்டயக்கருக்கினால் வெட்டுங்கள்.
11சகல ஆண்பிள்ளைகளையும், புருஷரை அறிந்த சகல பெண்பிள்ளைகளையும் சங்கரிக்கக்கடவீர்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டு அனுப்பினார்கள்.
12இவர்கள் கீலேயாத்திலுள்ள யாபேசின் குடிகளிடத்திலே புருஷரை அறியாத நானூறு கன்னிப்பெண்களைக் கண்டு பிடித்து, அவர்களைக் கானான்தேசமான சீலோவிலிருக்கிற பாளயத்திற்குக் கொண்டுவந்தார்கள்.
13அப்பொழுது ரிம்மோன் கன்மலையிலிருக்கிற பென்யமீன் புத்திரரோடே பேசவும், அவர்களுக்குச் சமாதானம் கூறவும், சபையார் எல்லாரும் மனுஷரை அனுப்பினார்கள்.
14அப்படியே அக்காலத்தில் பென்யமீனர் திரும்ப வந்தார்கள்; கீலேயாத்திலிருக்கிற யாபேசின் ஸ்திரீகளில் உயிரோடே வைத்த பெண்களை அவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படிச் செய்தும் அவர்கள் தொகைக்குக் காணாதிருந்தது.
15இஸ்ரவேல் கோத்திரங்களிலே கர்த்தர் ஒரு பிளப்பை உண்டாக்கினார் என்று ஜனங்கள் பென்யமீனருக்காக மனஸ்தாபப்பட்டார்கள்.
16பென்யமீன் கோத்திர ஸ்திரீகள் அழிந்தபடியினாலே, மீதியான மற்றபேர்களுக்கும் மனைவிகள் கிடைக்கும்படி என்ன செய்யலாம் என்று சபையின் மூப்பரானவர்கள் கேட்டு,
17இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் நிர்மூலமாகாதபடிக்கு, தப்பினவர்களுடைய சுதந்தரம் பென்யமீனுக்கு இருக்கவேண்டுமே,
18நாமோ நம்முடைய குமாரத்திகளில் அவர்களுக்கு பெண் கொடுக்கக்கூடாது; பென்யமீனருக்குப் பெண் கொடுக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று, இஸ்ரவேல் புத்திரர் ஆணையிட்டார்களே என்றார்கள்.
19பின்னும், இதோ, பெத்தேலுக்கு வடக்கே பெத்தேலிலிருந்து சீகேமுக்குப் போகிற பாதைக்குக் கிழக்காகவும் லிபோனாவுக்குத் தெற்காகவும் இருக்கிற சீலோவிலே வருஷந்தோறும் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாடப்படுகிறதே என்று சொல்லி,
20அவர்கள் பென்யமீன் புத்திரரை நோக்கி: நீங்கள் போய், திராட்சத்தோட்டங்களிலே பதிவிருந்து,
21சீலோவின் குமாரத்திகள் கீதவாத்தியத்தோடே நடனம் பண்ணுகிறவர்களாய்ப் புறப்பட்டு வருகிறதை நீங்கள் காணும்போது, திராட்சத்தோட்டங்களிலிருந்து புறப்பட்டு, உங்களில் அவரவர் சீலோவின் குமாரத்திகளில் ஒவ்வொரு பெண்ணைப் பிடித்துப் பென்யமீன் தேசத்திற்குக் கொண்டுபோங்கள்.
22அவர்களுடைய தகப்பன்மாராகிலும், சகோதரராகிலும் எங்களிடத்தில் முறையிட வரும்போது, நாங்கள் அவர்களை நோக்கி: எங்கள் நிமித்தம் அவர்களுக்குத் தயவு செய்யுங்கள்; நாங்கள் யுத்தம் பண்ணி, அவனவனுக்கு மனைவியை வாங்கிக்கொடுக்கவில்லை; உங்கள்மேல் குற்றமுண்டாக இப்போது நீங்கள் அவர்களுக்கு மனைவிகளைக் கொடுக்கவும் இல்லை என்போம் என்று சொன்னார்கள்.
23பென்யமீன் புத்திரர் அப்படியே செய்து, நடனம்பண்ணுகிறவர்களிலே தங்கள் தொகைக்குச் சரியான பெண்களை மனைவிகளாகப் பிடித்துக்கொண்டு, தங்கள் சுதந்தரத்திற்குத் திரும்பிப்போய், பட்டணங்களைப் புதுப்பித்துக் கட்டி, அவைகளில் குடியிருந்தார்கள்.
24இஸ்ரவேல் புத்திரரும் அக்காலத்திலே அவ்விடம் விட்டு அவரவர் தங்கள் கோத்திரத்துக்கும் தங்கள் குடும்பத்துக்கும் போய், அவரவர் தங்கள் சுதந்தரத்தில் சேர்ந்தார்கள்.
25அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்து வந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *