பாஸ்டர்.விளாட் அவர்களின் வாழ்க்கை

இந்த பதிவில், ஏற்கனவே இந்த பாவத்தில் மூழ்கி, மீண்டு வந்த பாஸ்டர்.விளாட் (Pastor.Vlad) அவர்கள் அனுபவத்தை பார்க்கலாம். “இது ஆபாச படம் பார்ப்பவர்களுக்கு தானே, எனக்கு இல்லையே” என்று தயவுசெய்து எண்ண வேண்டாம். யாரோ ஒருவருக்கு அறிவுரை சொல்லும் சூழல் வந்தால் உபயோகப்படும். நமது ஆவிக்குரிய வளர்ச்சிக்கும் உதவும் என்பதில் சந்தேகமில்லை.

விளாட் உக்ரைனில் பிறந்தவர். நல்ல தேவ பக்தியான குடும்பத்தில் பிறந்தவர். அவரது வீட்டுக்குள் நல்ல அழகான அன்பான குடும்ப வாழ்க்கை அவருக்கு கிடைத்து இருக்கிறது. ஆனால் வெளியில், பலவிதமான உருவ கேலிக்கு உள்ளாகியுள்ளார். அதாவது, விளாட் அவருக்கு, ஒரு கண் மட்டும் கொஞ்சம் ஊனமாக இருக்கும். இந்த கேலிகள், காலப்போக்கில் “நான் எதற்கும் உதவாதவன் (I am worthless)” என்ற எண்ணத்தை அவருக்குள் விதைத்தது.

விளாட் பிறக்கும்போது, அவர் தாய்க்கு டெலிவரியில் ஏற்பட்ட சிக்கலின் காரணமாக, அவரது கண்ணில் குறை ஏற்பட்டது. ஒரு கண் மற்றொரு கண்ணை விட வேறாக இருக்கும். ஆப்டிகல் நரம்பில் ஏற்பட்ட பாதிப்பு, அவர் கண்ணை அப்படி ஆக்கியது. ஆனால் அவருக்கு கண்கள் நன்றாகத் தெரியும். இன்னும் சொல்லப்போனால், உடன்பிறந்தவர்கள், அப்பா அம்மா எல்லாரையும் விட, விளாட் ஒருவர் தான் கண்ணாடியோ, லென்ஸோ அணியாதவர். ஆனால் பள்ளியில் பிள்ளைகள் கேலி செய்ய ஆரம்பித்தனர். புல்லி செய்வது தாங்காமல் வருந்திய மகனுக்காக விளாடின் குடும்பம், உக்ரைனிலிருந்து  அமெரிக்காவிற்கு(United States) குடிபெயர்ந்தது.

அமெரிக்காவில், படிப்பதற்கே மிகவும் கஷ்டப்பட்டார், ஆங்கிலம் தெரியாததால், அவர் நிலை மிகவும் மோசமாக இருந்தது. எனவே அங்கேயும் வாழ்க்கை சொல்லிக்கொள்ளுமளவு இல்லை. அப்போது தான், அவருடைய மாமா ஒருவர், புதிதாக சபை ஒன்று ஆரம்பித்தார். அங்கு ஆரம்ப காலத்தில், சபை மக்கள் என்பது, இவருடைய சொந்தங்களே. ஆனாலும் அங்கும் அவரை ஒதுக்கினர். பள்ளியில் ஒதுக்கம், சபையில் ஒதுக்கம் என்று எல்லா இடத்திலும் ஒதுக்கப்பட்டவர் விளாட். ஆனால் அவருடைய பெற்றோர் எப்போதுமே அவருக்கு சப்போர்ட்டாக இருந்தார்கள்.

அத்தகைய சூழலில், அவரது ஆவிக்குரிய வாழ்க்கை மாற ஆரம்பித்தது. பொதுவாக, உலகம் நம்மை ஒதுக்கினால் நாம் நெருங்குவது தேவனிடம் அல்லவா! அதேதான் அவரது வாழ்விலும் நடந்திருக்கிறது. அதுவரையில், கடமைக்காக வேதம் வாசித்தவர், இப்போது வேதம் வாசித்தால் வெளிப்பாடுகள் கிடைத்தது. ஒரு பக்கம் ஆவிக்குரிய வாழ்வில் அடியெடுத்து வைத்தாலும், மறுபுறம் அவருக்கான கண்ணியும் தயாராகிக் கொண்டிருந்தது.

அமெரிக்காவில் அவரது தனிமை வாழ்க்கை ஆரம்பித்தது. சரியாக ஆறு மாதம் கழித்து, அவரது வீட்டின் பக்கத்து வீட்டுக்காரர், “நான் 7 நாட்கள் விடுமுறைக்கு வெளியே செல்வதால், என் வீட்டிலிருக்கும் பூனைக்கு நீ சாப்பாடு கொடுக்க வேண்டும். அதற்கு பதிலாக நான் உனக்கு சம்பளம் கொடுக்கிறேன்” என்று கூறினார். விளாடும் அதற்கு ஒத்துக் கொண்டார்.

பின்னர், அவர் பூனைக்கு சாப்பாடு வைக்கும்போது, வீட்டை நோட்டம் விட ஆரம்பித்தார். அங்கு அவரது கண்களில், சில VHS tapes(வீடியோ கேசட்டுகள்) கிடைத்தது. 13 வயது சிறுவனான விளாட், அந்த வீடியோ கேசட்டின் கவரில், ஆபாச படங்கள் இருப்பதைக் காண்கிறார். அதை போட்டு பார்க்க வேண்டும் என்று டீன் ஏஜ் வேகம் உந்தி தள்ள, அதை பார்த்து விடுகிறார். அன்றிலிருந்து அவருடைய அடிமைத்தனம் (Addiction) ஆரம்பித்தது.

ஒரு அடிமைத்தனம் நம்மில் ஆரம்பித்தால், முதலில் நாம் செய்வது நம்மை பிறரிடம் இருந்து தனிமைப் படுத்துவோம். ஒருவேளை மொபைல் போனுக்கு, சோஷியல் மீடியாவுக்கு அடிமைப்பட்டவர்களுக்கு நன்றாகத் தெரியும். நாம் நம்மை தனிமைப் படுத்திக்கொண்டு, மொபைலுக்குள் மூழ்கி விடுவோம். அப்படித்தான் விளாடும், தனிமைப்படுத்த ஆரம்பித்தார்.

இந்த அடிமைத்தனங்களுக்கு தமிழில் அழகாக சிற்றின்பங்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஆம், சில நிமிட இன்பம் மட்டுமே தரக்கூடியவை. பின்னர் நம் மனதில், குற்ற உணர்ச்சியை விதைத்து நம்மை கஷ்டப்படுத்தும். அப்படித்தான் விளாடுக்கும். கொஞ்ச நாளில் குற்ற உணர்ச்சி ஆரம்பித்தது. “எப்படியாவது இந்த அடிமைத் தனத்திலிருந்து வெளிவரவேண்டும்” என துடித்தார். ஆனால் இச்சை அவரை விடவில்லை. ஆபாசபடங்கள் அவரை இழுத்தது.

நாட்கள் செல்ல செல்ல, குற்ற உணர்வு அவரை வாட்டி எடுத்தது. எப்படியாவது இந்த பாவத்திலிருந்து வெளிவர வேண்டும் என்று முடிவெடுத்தார். ஆனால் எப்படி என்று அவருக்கு தெரியவில்லை. “ஆண்டவரே நான் பாவி” என்று அவர் பாதத்தில் விழுந்தார். எந்த அளவு வெளிவர முயற்சித்தாரோ, அதை விட அதிகமாக மீண்டும் மீண்டும் அதற்குள் விழுந்தார். வேதத்தில் தாவீது-கோலியாத் சம்பவம் வாசிக்கும்போது, நான்தான் எழுந்து ஏதோ ஒன்று செய்ய வேண்டுமென தெரிந்து கொண்டார். அதேபோல தாவீது-சிங்கம் பற்றி படித்தபோதும் (நமது முந்தைய பதிவு), நான் செய்ய வேண்டியது ஏதோ உள்ளது என்பதை அறிந்து கொண்டார். ஆனால் என்ன செய்வது என்று தான் அவருக்கு தெரியவில்லை.

முதலாவதாக, தனது பாஸ்டரை தேடிப் போனவர், “நான் ஆபாச படங்களுக்கு அடிமையாக இருக்கிறேன். விடுதலை பெற விரும்புகிறேன். எனக்காக ஜெபியுங்கள்” என்று கேட்டார். அவரது பாஸ்டரும், வல்லமையாக ஜெபித்து அவரை அனுப்பி இருக்கிறார். உண்மையாகவே அவர் ஜெபிக்கும்போது, ஒரு விடுதலையை உள்ளத்தில் உணர்ந்தார் விளாட். ஆனால் 10 நாட்களில் மீண்டும் ஆபாசபடம் பார்க்க ஆரம்பித்து விட்டார் விளாட். ஏன் பாஸ்டரிடம் போனார்?

யாக்கோபு 5:16 நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.

இந்த வசனத்தின்படி, தனக்காக ஜெபிக்கும்படி அவரது போதகரிடம் சென்றிருக்கிறார் விளாட். ஆனால் 10 நாட்களில் மீண்டும் பாவத்தில் விழுந்து விட்டார். சாதாரண தேவனை அறியாத ஒரு குடும்பத்தில் பிறந்தவரே, குற்ற உணர்வுக்கு ஆளாகும்போது, ஜெபிக்கிற பெற்றோரின் மகன் எவ்வளவாய் கஷ்டப்பட்டிருப்பார்?

சரி, அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தார் விளாட். இரண்டாவதாக, உபவாசித்து ஜெபிப்பது அவருக்கு தோன்றிய வழியாக இருந்தது. எப்படியாவது ஆண்டவருக்காக பரிசுத்தமாக வாழ வேண்டும் என்ற வேட்கை அவருக்குள் இருந்தது. அதனால்தான் உபவாசத்துக்கு சென்றார். அந்த உபவாச நாட்காளாகிய 21 நாட்கள் நன்றாக இருப்பார். உபவாசம் முடிந்ததும், இருமடங்காக ஆபாச படம் பார்ப்பார் விளாட். “எவ்வளவு முயற்சித்தும், அவரால் ஒழுக்கமாக இருக்க முடியவில்லை” என்கிறார் விளாட்.

இப்படியே மாறி மாறி முயற்சி எடுத்தும், விளாட் தோற்றுப் போனார். ஆனால், நம் தேவன் அப்படியே விடுபவர் அல்ல. ஒரு நாள் தேவன் அவரோடு இடைபட்டார். “வெறும் ஜெபத்தால் இதை ஒன்றும் செய்ய முடியாது. இதன் பின்னால் சில ஆவிகள் இருக்கிறது. நீ தான் அதை துரத்த வேண்டும்” என்றார். அப்போதுதான் விளாடுக்கு, ஆவிகளின் பிடியில் தான் சிக்கி இருப்பது புரிந்தது. மூன்றாவதாக அவருக்கு உணர்த்தப்பட்டது, ஆவிகளை துரத்தவேண்டும். எப்படி துரத்தவேண்டும் அவருக்கு தெரியாது. வேதத்தின் மூலம் கற்றுக் கொண்டார். “சகல அதிகாரமும் எனக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. நான்தான் துரத்த வேண்டும்” என்று அறிந்துகொண்டார்.  அன்று அவர், அந்த ஆவிகளுக்கு எதிராக போர் புரியும்போது, தேவன் விடுதலையைக் கொடுத்தார். இன்று அனேக வாலிபர்களை இந்த பாவத்திலிருந்து மீட்டு வருகிறார்.தேவனுக்கே மகிமை உண்டாவதாக. (இந்த ஆழமான சத்தியங்களை தொடர்ச்சியாக வரும் பதிவுகளில் பார்க்கலாம்)

 திருமணத்துக்கு பின்புகூட ஒருமுறை, அவரது மனைவியிடம் அவர் பேசும்போது, “எனக்கு கொஞ்சம் பயமாக இருக்கிறது. மீண்டும் சிக்கிக் கொள்வேனோ என பயமாக உள்ளது” என்றாராம். அவரது மனைவி அவரிடம், “Instagram accountஐ uninstall செய்து விடு” என சொன்னார். “இப்போது தான் 3000 followers வந்திருக்கிறார்கள். நம் ministry எல்லா இடத்திலும் இப்போதுதான் reach ஆகிறது. இப்போது போய் uninstall செய்தால் என்ன செய்வது?” கவலையுடன் கேட்டார் விளாட். “உனக்கு பரிசுத்தமாக வாழ வேண்டுமா? அல்லது நிறைய followers வேண்டுமா? எது முக்கியம்?” என மனைவி கேட்க, உடனடியாக இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை uninstall செய்தாராம். அவர்களது நாட்டில், Nude photos பதிவிடுவது மிக சாதாரணமானது. இன்ஸ்ட்டாவில் மிக ஈஸியாக அதைப் பார்க்கலாம். அதனால்தான் அவர் மனைவி, இன்ஸ்ட்டா அக்கவுண்ட் வேண்டாம் என கூறி இருக்கிறார்.

“இப்போது அவர் பாவத்தில் விழுவாரா? எத்தனையோ பேருக்கு இயேசுவின் நாமத்தில் விடுதலை கொடுக்கிறார். வல்லமையாக ஊழியம் செய்கிறார். அவரால் மறுபடி பாவத்தில் விழ முடியுமா?” என கேட்டால், இல்லை என சொல்ல முடியாது. ஏனெனில் பிசாசு அமர்ந்த இடத்தின் வெற்றிடம் உள்ளது. சிறிது சறுக்கினால் போதும், ஏழு மடங்காக பிசாசு உள்ளே வர முடியும். அதனால்தான் தன் மனைவியிடம் போய் முதலிலேயே சொல்லி இருக்கிறார். நல்ல கணவன் மனைவியாக, தேவனுடைய பாதத்தில் இருந்து, அனேக வாலிபரை மீட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றும் இளம் ஊழியராக, அனேக இளம் வாலிபர்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டுக் கொண்டிருக்கிறார் விளாட். அவரது வாழ்வில் அனேக போராட்டங்கள் வந்தாலும், இன்று கர்த்தருக்காக இளம் தலைமுறையினரை வழிநடத்துகிறார் விளாட். பரிசுத்த ஆவியானவரோடு வாழும் வாழ்க்கை பற்றி அவர் எடுக்கும் பிரசங்கங்கள் நம்மை ஆவியானவரோடு இன்னும் ஆழமாக இணைக்கும். அப்படி தேவனோடு உறவில் இருப்பவர் விளாட். திருமணமாகி 13 வருடங்கள் கழித்து, மார்ச்2024ல் தான் அவருக்கு குழந்தை சாமுவேல் பிறந்திருக்கிறான் என்பது கூடுதல் தகவல்.

ஒரு ஊழியர், நான் இப்படிப்பட்ட பாவத்தில் இருந்தேன் என தைரியமாக ஏன் சொல்கிறார்? என தெரியுமா? அவருக்கு விடுதலை கொடுத்த அதே ஆவியானவர்தான் நம்மோடும் இருக்கிறார். நம்முடைய அடிமைத்தனம் எதுவாக இருந்தாலும், நிச்சயம் தேவனால் நமக்கு விடுதலை கொடுக்க முடியும் என்பது அதிக நிச்சயம். இதை நாமும் அறிந்து, நம்முடைய பாவங்களில் இருந்து வெளிவர வேண்டும், என்பதற்காகத்தான் பொதுவில் சொல்கிறார்கள். தொடர்ந்து இதைப்பற்றி பார்க்கலாம் வரும் பதிவுகளில்.

நாம் தொடர்ச்சியாக இதைப் பற்றி, ஒரு 10 பதிவுகள் பார்க்க போகிறோம். சிலரது அனுபவங்கள் மூலமாக கற்றுக் கொள்ளப் போகிறோம். கர்த்தர் வெளிப்படுத்திய சில காரியங்களை கற்றுக்கொண்டு, விடுதலை பெறப்போகிறோம். சில அற்புதங்கள் உடனே நடக்கிறது. சில அற்புதங்கள் நடக்க சில வருடங்கள் ஆகும். தேவனுடைய வேளை (Gods Timing) எப்போது என்பது நமக்கு தெரியாது. ஆனால் நாம் கற்றுக்கொள்கிற காரியங்களை தொடர்ச்சியாக செய்யும்போது, ஒருநாள் நிச்சயமாக விடுதலை அடைவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *