இரு ஊழியர்கள், தங்களுடைய வாழ்வில், porn addictionல் இருந்து எப்படி வெளியே வந்தார்கள் என்ற சாட்சியைப் பார்த்தோம். அவர்கள் வாழ்விலிருந்து நாம் என்ன கற்றுக் கொண்டோம் என்பதை இப்பதிவில் பார்க்கலாம். முக்கியமான விஷயம் என்னவென்றால், இருவருமே ஒரு நல்ல ஜெபிக்கிற வீட்டில் பிறந்தவர்கள்.
Vlad:
Vlad சிறுவனாக இருக்கும்போது, டீன் ஏஜ் உந்துதலால், ஆபாச படத்தை பார்க்க ஆரம்பித்தவர், அதற்கு அடிமையாகி விட்டார். ஒரு ஜெபிக்கிற பெற்றோரின் மகனுக்கு, அதிக வருடங்கள் பாவத்தில் நிலைத்திருக்க முடியாது. vladம் நிறைய முறை மனதில் குத்தப்பட்டு, வெளியே வர முயற்சி செய்தார். ஆனால் அவரால் முடியவில்லை.
ஜெபிக்கிற வீட்டு பிள்ளைக்கு, தினமும் வேதம் படிப்பது பழக்கமான ஒன்று. விளாடுக்கு வேதத்தில் அனேக வெளிப்பாடுகள் கிடைத்தது. கோலியாத்தை மேற்கொள்ள, தாவீது தான் முதலில் சென்றான், சிங்கத்தை மேற்கொள்ள, தாவீது தான் முதலில் சென்றான். எனவே இந்த இரகசிய பாவத்திலிருந்து வெளிவர நான்தான் ஏதோ ஒன்று செய்ய வேண்டும் என விளாட் தெரிந்து கொண்டார். என்ன என்பதுதான் தெரியவில்லை.
முதலில் தன் பாஸ்டரிடம் சென்று, “நான் ஆபாச படத்துக்கு அடிமையாக இருக்கிறேன். என் விடுதலைக்காக ஜெபியுங்கள்” என்று கூறினார். பாஸ்டர் வல்லமையாக ஜெபிக்கும்போது, விடுதலை பெற்றதை உணர்ந்தார். ஆனால் சில நாளில் மீண்டும் பாவத்தில் விழுந்தார். பாஸ்டர் விடுதலைக்காக ஜெபிக்கும்போது, வல்லமையை உணர்ந்து, விடுதலையை உணர்ந்தார் விளாட். ஆனால் அது மட்டுமே அவருக்கு போதுமானதாக இருக்கவில்லை,
அடுத்ததாக உபவாசம் என்னும் ஆயுதத்தை கையிலெடுத்தார் விளாட். 21 நாட்கள் உபவாசமிருந்து, ஆத்துமாவை ஒடுக்கி, விடுதலைக்காக ஜெபித்து, விடுதலை பெற்றதைப் போல உணர்ந்தார். ஆனால் உபவாசம் முடிந்ததும், இவ்வளவு நாட்கள் பார்க்காததுக்கும் சேர்த்து, இரட்டிப்பாக பார்க்க ஆரம்பித்தார். “உபவாச ஜெபத்தில் விடுதலை வருவது உண்மைதான். ஆனால், இந்த இடத்தில், வேறு ஏதோ ஒன்றையும் நான் செய்ய வேண்டியுள்ளது” என்று அறிந்து கொண்டார்.
அதன்பின்னர், தேவன் அவருக்கு வெளிப்படுத்தினார். “நீ ஏதோ ஒன்று செய்ய வேண்டும் என நினைக்கிறாயல்லவா! இந்த பாவத்துக்கு பின்னால் இருப்பது அசுத்த ஆவிகள். நீ அந்த பிசாசை முழுமையாக துரத்த வேண்டும்” என தேவன் வெளிப்படுத்தினார். தேவன் தந்த அதிகாரத்தை கையிலெடுத்து, பிசாசை துரத்தினார் விளாட்.
இன்றைக்கும் ஒவ்வொரு மாதமும், முதல் திங்கள், செவ்வாய், புதனில், 3 நாட்கள் உபவாச ஜெபம் பண்ணுகிறார். Fast Forward – “Accelerate your Spiritual Life Through Fasting” என Telegramல், அவருடன் இணைந்து ஜெபிக்க பலரையும் வழிநடத்திக் கொண்டு இருக்கிறார். www.pastorvlad.org என்ற இணையதளத்தில் இதைப்பற்றி அறிந்து கொள்ளலாம். முழுமையாக பூரண விடுதலை பெற்றுக் கொண்டாலும், ஒவ்வொரு மாதம் ஆரம்பிக்கும்போதும், 3 நாட்கள் அந்த மாதத்துக்காக உபவாச ஜெபம் இருந்து, பலவானை முந்திக் கட்டிக்கொண்டு இருக்கிறார் விளாட்.
Daniel
Daniel எப்போதெல்லாம் மன அழுத்தத்தை உணர்கிறாரோ, அப்போதெல்லாம் porn பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார். ஒரு ஜெபிக்கிற தாயின் மகனாக, ஜெபிக்கிற மனைவியின் கணவனாக இருந்த Danielக்கு, இந்த அடிமைத்தனத்திலிருந்து வெளிவரவேண்டும் என்ற தாகம் இருந்தது. இரட்சிக்கப்பட்டு, அன்னிய பாஷை பேசும் அவரால், இந்த பாவத்திலிருந்து வெளிவருவது அவ்வளவு சுலபமாக இல்லை. இரட்சிக்கப்பட்ட அவரால், தான் ஒவ்வொரு முறை porn பார்த்து முடித்ததும், தனக்குள் அசுத்த ஆவிகள் நுழைவதை நன்றாக உணர முடிந்தது. ஆனால் விடுதலைதான் பெற்றுக் கொள்ள முடியவில்லை.
தனியே முயற்சித்து வெளிவர முயன்று, தோல்வியடைந்ததால், மனைவியிடம் மனம் விட்டு பேசினார். இணைந்து ஜெபித்தார்கள். விடுதலை பெற்றதைப் போல உணர்ந்தார். ஆனால் மீண்டும் பாவத்தில் விழுந்தார். தன் குடும்பத்தாரில் தனக்காக பாரத்தோடு ஜெபிப்பவர்களை அழைத்து, “நான் ஆபாச படத்துக்கு அடிமையாகிவிட்டேன். உங்கள் ஜெபம் எனக்கு வேண்டும்” என கேட்டார். கண்ணீரோடு உறவினர்கள் ஜெபிக்க, தாகத்தோடு Daniel ஜெபிக்க, கர்த்தர் விடுதலையைக் கொடுத்தார். அந்த அசுத்த ஆவி தன்னை விட்டு வெளியேறுவதை உணர்ந்தார். மனைவியுடன் இணைந்து தண்ணீர் கூட குடிக்காமல் உபவாசமிருந்து, முழு விடுதலை பெற்றார்.
அதோடு நிற்கவில்லை. என்னதான் பூரண விடுதலை பெற்றுக் கொண்டாலும், இன்றைக்கும் மாதத்தின் முதல் தேதியில், கணவனும் மனைவியும் இணைந்து, உபவாசமிருந்து, பலவானை முந்திக் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
நாம் என்ன செய்ய வேண்டும்?
இருவருடைய வாழ்க்கையைப் பார்த்தாலே தெரியும். இருவரும் தங்கள் மனைவியுடன் இணைந்து ஜெபித்தார்கள். உபவாசமிருந்து ஜெபித்தார்கள். பிறரிடம் ஜெபிக்க கூறினார்கள். எல்லாம் நடந்தாலும், முழுமையான வெற்றி என்பது அசுத்த ஆவி வெளியேறியபோது தான் கிடைத்தது. அப்படியானால், நாமும் நம் கண்ணால் அசுத்தஆவி வெளியேறுவதைப் பார்த்தால் மட்டுமே, நாம் விடுதலை பெற்றதாக அர்த்தமா? இல்லவே இல்லை.
அற்புதங்கள் ஒரே போல நடப்பது இல்லை. மத்தேயு 9 : 27-30ல் இரு குருடர்கள் வருகிறார்கள். இயேசு அவர்கள் கண்களை தொட்டு, உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்று சொல்லி சுகமாக்கினார். மாற்கு 8 : 22-25 பெத்சாயிதாவில், அவர் தொட்டு குணமாக்கும்படி ஒரு குருடனைக் கொண்டு வருகிறார்கள். அவரோ, அவனுடைய கண்களில் உமிழ்ந்து, சுகப்படுத்தினார். யோவான் 9: 1-7ல் பிறவிக்குருடனைக் கொண்டு வருகிறார்கள். அவனுக்கு, தரையில் உமிழ்ந்து, மண்ணோடு கலந்து, சேற்றை கண்களில் பூசி, சீலோவாம் குளத்தில் கழுவச் சொன்னார். மூவருக்கும் நடந்தது ஒரே அற்புதம்தான். ஆனால் இயேசு சுகமாக்கிய ஸ்டைல் வேறு.
“இயேசு என் பாவத்தை சுமந்து விட்டார். இப்போது நான் நீதிமான்” என்பது போன்ற சில சத்தியங்களை நன்றாக மனதில் பதித்து, தேவன் நமக்குக் கொடுத்த அதிகாரத்தை உபயோகித்து, நம்மிடமிருந்து நாமே பிசாசை வெளியேற்றி விடலாம். அதற்கு நமக்கு தேவையானது கர்த்தருடைய வசனம். எவ்வளவு அதிகமாக கர்த்தருடைய வசனத்தை வாசிக்கிறோமோ, அவ்வளவு பிசாசு நம்மை விட்டு ஓடிப்போவான்.
Vlad, Daniel இருவருமே விடுதலை பெற்றுக்கொண்டார்கள். ஆனால் இன்றும் ஏன் மாத துவக்கத்தில் உபவாசமிருந்து ஜெபிக்கிறார்கள்? அப்படியானால் நிரந்தர விடுதலை porn Addictionக்கு கிடையாதா? நிச்சயமாக அவர்கள் விடுதலை பெற்றுக் கொண்டார்கள். பின் ஏன் இந்த உபவாசம்?
பிசாசுக்கு இப்போது வல்லமை இல்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவு, பிசாசு வஞ்சிப்பவன், ஏமாற்றுக்காரன் என்பதும் உண்மை. சிறிதாக கோபம் என்னும் கதவை திறந்தால் போதும், அந்த கதவுக்குள் ஆத்திரம், முணுமுணுப்பு என்று பல பிசாசுகளை உள்ளே அனுப்பும் தந்திரமுள்ள அவன், ஆபாச படத்தின் அடிமைத்தனம் என்னும் பிசாசையும் அனுப்புவது சுலபமான விஷயம்தானே. அதனால்தான் ஒவ்வொரு மாதமும், அவனை முந்திக் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள் ஊழியர்கள்.
இன்றைக்கு பல விஷயங்களில், ஊழியர்கள் தவறுகிறார்கள் என நாம் எவ்வளவோ அவர்களைப் பற்றி பேசுகிறோம். ஆனால், தவறு செய்த அவர்கள், அந்தக் கதவை ஜெபத்தால் மூடிவிட்டு, மறுபடியும் ஆண்டவரோடு இணைந்து விடுவார்கள். ஆனால் நாமோ, அவர்களைப் பற்றி பேசி பேசி, பல கதவுகளை பிசாசுக்கு திறந்து வைத்துக் கொண்டிருப்போம். வெறும் ஊழியர்கள் மட்டுமல்ல, யாரோ ஒருவரைப் பற்றி நாம் கசப்பாக பேசும்போதே, நம் வாழ்வில் பிசாசுக்கு கதவுகளை திறக்கிறோம் என்பதை மறக்கக் கூடாது. முடிந்தவரையில் பிறரைப் பற்றி பேசாமலிருப்பதே நமக்கு நல்லது.
சில பதிவுகள், ஆபாச பட அடிமைத்தனத்திலிருந்து எப்படி வெளிவருவது என்று பார்க்க இருக்கிறோம். பின்னர், சில முக்கியமான சத்தியங்கள் (நான் எப்படி நீதிமான் ஆனேன்?) பார்க்க இருக்கிறோம். வெற்றி தொலைவில் அல்ல. நம் கையிலிருக்கும் வேதத்தை அனுதினமும் எடுத்து படித்தாலே, வெற்றி கிடைத்து விடும். தொடர்ந்து இணைந்திருங்கள்.
Leave a Reply