இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். இந்த தளம் ஆரம்பித்து இதுதான் என் முதல் பதிவு. இந்தக் கிருபையைக் கொடுத்த ஆண்டவருக்கு நன்றி. இன்று ஒரு விசேஷித்த நாள். இன்றைக்கு இஸ்ரேலில் New year (Rosh Hashanna) கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். நேற்று (15-09-2023) எபிரேய காலண்டரில் தேதி 29-Elul-5783. இன்று (16-09-2023) எபிரேய காலண்டரில் 1-Tishri-5784. அதாவது 5783ம் வருடத்திலிருந்து, 5784ம் வருடம் பிறந்திருக்கிறது. புதுவருட கொண்டாட்டம் அங்கே நடந்து கொண்டிருக்கிறது. நமக்கு ஜனவரி 1ம் தேதி ஆங்கில வருடப்பிறப்பு, சித்திரை 1ல் தமிழ் வருடப்பிறப்பு கொண்டாடுவது போல, இஸ்ரேலிலும் ஆங்கில வருடப்பிறப்பு மற்றும் எபிரேய வருடப்பிறப்பு கொண்டாடுவார்கள். இன்று எபிரேய வருட பிறப்பு. இதில் உனக்கு என்ன சிறப்பு இருக்கிறது என்று நீங்கள் யோசிக்கலாம். ஆம்… மிகப்பெரிய சிறப்பு உள்ளது.
நாம் உபயோகிப்பது கிரிகோரியன் காலண்டர். ரோமப்பேரரசு, கிறிஸ்துவுக்கு முன், கிறிஸ்துவுக்கு பின் என்று, வருடங்களை இரண்டாகப் பிரித்து, உலகம் முழுவதும் ஒரே வருடக் கணக்கை உபயோகிக்கும்படி கொண்டு வந்தது. அதற்கு முன்பாக, அந்தந்த ராஜா அரசாண்ட காலம் என்று கணக்கிடுவார்கள். எடுத்துக்காட்டாக வேதத்தில் கூட, தீர்க்கதரிசன புத்தகங்களில், “இந்த ராஜா அரசாண்ட இந்த வருடத்தில் இதைக் கண்டேன்” என்பதாக வசனங்கள் இருக்கும். ரோமர்கள் தான் உலகம் முழுவதும் ஒரே வருடக் கணக்கீட்டை உபயோகிக்கும்படி கொண்டு வந்தனர்.
ஆனால் இந்த எபிரேயர்கள் ஒரு காலண்டர் உபயோகிக்கிறார்கள் அல்லவா! அந்தக் காலண்டரை கொடுத்தவர் கர்த்தர். அதனால் தான் இந்த வருடப்பிறப்பு கொண்டாட்டம் சிறப்பானது என்று நம்புகிறார்கள் இஸ்ரவேலர். யார் இந்த இஸ்ரவேலர்? எப்போது அவர்களுக்கு புது காலண்டர் கொடுக்கப்பட்டது? உண்மையில் தேவன் தான் அவர்களுக்கு காலண்டர் கொடுத்தாரா? இந்த Rosh Hashanna என்பது வெறும் புதுவருடப் பிறப்புதானா? அல்லது வேறு ஏதேனும் கர்த்தர் கூறிய பண்டிகையா? வரும் பதிவுகளில் விரிவாக ஒவ்வொரு கொண்டாட்டத்தையும், அதன் அர்த்தங்களையும் பார்க்க இருக்கிறோம்.
முதலாவதாக, ஒரு சிறிய வரலாற்றை நாம் திரும்பி பார்க்கலாம். தேவன் ஆபிரகாமைத் தெரிந்து கொண்டார். அவருடைய ஊராகிய பாபிலோனிலிருந்து, வெளியே வரச் சொல்லி, கானானைக் கொடுத்தார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யாக்கோபின் 12 பிள்ளைகள் என்று, சந்ததியாக இவர்கள், கானானில்தான் வாழ்கிறார்கள். திடீரென கானானில் பஞ்சம். அந்நேரத்தில் யாக்கோபிடம் தேவனே, ‘குடும்பத்துடன் எகிப்துக்கு போ’ என்று கூறுகிறார். ஒரு தலைமுறை முடிந்து, அடுத்த தலைமுறையிலிருந்து, எகிப்திலே வாழ்ந்த ஆபிரகாமின் குடும்பத்தார், அடிமை வாழ்வுதான் வாழ்கின்றனர். சும்மா இருந்த ஆபிரகாமை, “நான் சொல்கிற தேசத்துக்கு போ. உன் சந்ததி வாழப்போகும் இடம் அதுதான்” என்று தேவன் கூறினார். ஆனால் மூன்றாவது தலைமுறையில், அதே தேவன் யாக்கோபிடம், “எகிப்துக்கு போ” என்கிறார். இப்பொழுது எகிப்தில் அடிமையாக கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஏன் அவர்களுக்கு இந்தக் கொடுமை?
நம்முடைய மாம்சக் கண்களில் நாம் பார்த்தால், அது கொடுமைதான். ஆனால் ஆவிக்குரிய கண்களில் பார்த்தால், அது தேவனுடைய பாதுகாப்பு. ஆம், ஒருவேளை யாக்கோபு எகிப்துக்கு போகாமல், கானானிலேயே வாழ்ந்திருந்தால், அவர்கள் கானானியராக மட்டுமே வாழ்ந்திருப்பார்கள். ஒருவேளை எகிப்தில் வளமாக வாழ்ந்திருந்தால், எகிப்தியரோடு சம்பந்தங்கலந்து எகிப்தியராகவே இருந்திருப்பார்கள். ஆனால் இப்பொழுது எகிப்தில் அவர்கள் இருப்பது அடிமைவாழ்வு. அடிமையுடன் சம்பந்தங்கலக்க எகிப்தியர் விரும்ப மாட்டார்கள். அதனால் பெண் கொடுப்பது, பெண் எடுப்பது எல்லாம் தங்கள் இனத்துக்குள்ளேயே நடந்தது. அதனால்தான் இஸ்ரவேலர் எனும் பெரிய கூட்டம் உருவானது. கிட்டத்தட்ட 70 பேராக போனவர்கள், 400 வருடங்கள் கழித்து, ஆண்கள் மட்டும் 6,00,000பேராகத் திரும்பினார்கள். அவர்கள் மனைவி, பிள்ளைகள் என்று கணக்கிட்டால், கிட்டத்தட்ட 30,00,000பேர் எகிப்திலிருந்து திரும்பியிருக்கலாம் என்று வேதவல்லுனர்கள் கூறுகிறார்கள்.
எகிப்திலிருந்து அவர்களை மீட்க மோசே வருகிறார். மோசேயுடன் தேவன் பேசும்போது, தேவனிடம் மோசே கேட்ட முதல் கேள்வி, “உங்கள் பெயர் என்ன?” என்பதுதான். ஏனென்றால் தேவன் யார் என்பது மோசேக்கு தெரியவில்லை. தேவன் ஆபிரகாமோடு பேசினார். ஈசாக்கோடு பேசினார். யாக்கோபோடு பேசினார். இப்பொழுது 400 வருடங்கள் கடந்து விட்டது. இஸ்ரவேலர் வாழ்வது எகிப்தில். எகிப்தியருக்கு திரும்பும் இடமெல்லாம் தெய்வம். பேன் ஒரு தெய்வம், வண்டு ஒரு தெய்வம், சூரியன் ஒரு தெய்வம், நைல் நதி ஒரு தெய்வம், தவளை ஒரு தெய்வம், இப்படி தெய்வங்களின் எண்ணிக்கையை அடுக்கிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொரு பண்டிகை என்று எப்பொழுதும் பண்டிகை கொண்டாடிக் கொண்டு இருப்பவர்கள் எகிப்தியர். இஸ்ரவேலருக்கோ, ‘எங்களுக்கு ஒரு தெய்வம் உண்டு. அவர் ஆபிரகாம் கிட்ட பேசினார். ஈசாக்கு கிட்ட பேசினார். யாக்கோபு கிட்ட பேசினார்’. அவ்வளவுதான். அதைத்தவிர எதுவுமே தெரியாது. ஒரு பண்டிகை கிடையாது. ஏதோ ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தனர். அதனால்தான் மோசே கேட்கிறார், “நீர்தான் எங்கள் தெய்வமா? உங்கள் பெயர் என்ன?” என்று. அதே மோசே மூலமாக, 10 வாதைகள் என்ற பெயரில், பிரதான 10 தெய்வங்களை அடித்து ஓடவிட்டு, ‘நான் தான் உங்கள் தேவன். என்னைத்தவிர வேறு தெய்வமே கிடையாது’ என்று சொல்லி அழைத்து வருகிறார் நம் தேவன். பத்தாவது வாதையான தலைப்பிள்ளை சங்காரத்தில் தான், மோசேயிடம் புதிய ஆரம்பத்தைக் கூறுகிறார்.
யாத்திராகமம் 12ம் அதிகாரத்தில், திடீரென ஒரு காலண்டர் கர்த்தர் ஆரம்பிக்கிறார். இந்த மாதம் உங்களுக்கு பிரதான மாதம் என்று சொல்லி, ஒரு புதிய மாதக்கணக்கைக் கூறுகிறார். இந்த மாதம் 10ம் தேதி ஒரு ஆட்டுக்குட்டி எடுக்க வேண்டும், 14ம் தேதி ஆட்டை அடித்து நிலைக்கால்களில் இரத்தம் பூச வேண்டும் என்று ஆண்டவர் புதிய வருடத்தின் கணக்கை ஆரம்பித்தார். அன்று ஆரம்பித்ததில் இருந்து இன்று 5784 வருடங்கள் ஆகிவிட்டன. அந்தக் காலண்டரில் தான் இன்று New year. இது சிறப்பானது தானே. மனிதன் உருவாக்கிய காலண்டரில் New year கொண்டாடி சிறப்பிக்கும் நாம், தேவன் உருவாக்கிய காலண்டரில் New year என்பது சிறப்பானதுதான் என்பதை ஒத்துக் கொள்ளலாமே.
தேவன் ஒரு நாளை சாயங்காலத்தில்தான் ஆரம்பித்தார். ஆதியாகமம் 1ம் அதிகாரத்திலே அது தெளிவாகப் புரியும். இன்றும் இஸ்ரவேலருக்கு நாள் தொடக்கம் என்பது மாலை ஆறு மணிக்கு தான் ஆரம்பிக்கும். Tishri 1ம் தேதி என்பது நேற்று மாலை ஆறு மணிக்கு ஆரம்பமாகி விட்டது. நமக்கு இரவு 12 மணிக்கு செப்டம்பர் 16ம் தேதி ஆரம்பித்தது போல, எபிரேய காலண்டரில் நேற்று மாலை 6 மணிக்கு Tishri 1ம் தேதி ஆரம்பித்து விட்டது. இவ்வளவு நேரம் New year என்று பார்த்தோம், அப்படியானால் Tishri மாதம் என்பது எபிரேய காலண்டரில் முதல் மாதமா என்று கேட்டால், இல்லை. ஏழாவது மாதம். அதாவது எபிரேய காலண்டரில் ஏழாவது மாதம் முதல் தேதியில் தான், அடுத்த வருடம் (5783லிருந்து 5784) ஆரம்பிக்கும். இப்படி பல விசித்திரமான விஷயங்கள் இஸ்ரேலில் உள்ளன.
லேவியராகமம் 23ம் அதிகாரத்தில், இஸ்ரவேலரை கொண்டாடச் சொல்லி ஏழு பண்டிகைகள் தேவன் கூறியிருக்கிறார். அதில் 5,6,7வது பண்டிகை ஏழாவது மாதத்தில் தான் உள்ளது. ஐந்தாவது பண்டிகையான எக்காள பண்டிகை என்பதும் ஏழாம் மாதம் முதல் தேதியில் தான். அப்படியானால் இன்று எவ்வளவு சிறப்பான நாள் அல்லவா! இவை ஒவ்வொரு பண்டிகையும் நம்மோடு தொடர்புடையது. இதைப்பற்றி வரும் பதிவுகளில் தொடர்ச்சியாக பார்க்கலாம்.
ஏழு பண்டிகைகள்
- பஸ்கா – இயேசு மரித்தார்
- புளிப்பில்லாத அப்ப பண்டிகை – இயேசு அடக்கம் பண்ணப்பட்டார்.
- முதற்கனி – இயேசு உயிர்த்தெழுந்தார்
- வாரங்களின் பண்டிகை – பெந்தேகோஸ்தே அனுபவம்
- எக்காள பண்டிகை – இரகசிய வருகை
- பாவ நிவிர்த்தி நாள் – நியாயத்தீர்ப்பு
- கூடாரப்பண்டிகை – நித்திய கூடாரம் செல்லுதல்.
இந்த ஏழு பண்டிகைகளுமே தேவன் யூதருக்கு கொடுத்தது. அதை நாம் கொண்டாட வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவைகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியம். நாம் தெளிவாக வரும் பதிவுகளில் பார்க்கலாம்.
என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்.
ஓசியா 8:12
வேதத்தில் எழுதப்பட்டிருக்கிற மகத்துவங்களை, பரிசுத்த ஆவியானவர் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
Leave a Reply