உபாகமம் 16:16 வருஷத்தில் மூன்றுதரம் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், உன் ஆண்மக்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள்.
தேவன் இஸ்ரவேலருக்கு கொடுத்த பண்டிகைகளில், மூன்று பண்டிகையில் தேவன் ஜனங்களை ஆலயத்துக்கு வரச் சொன்னார். அந்த மூன்று பண்டிகைகள், பஸ்கா, பெந்தெகோஸ்தே, சுக்கோத் எனப்படும் கூடாரப்பண்டிகை. ஏழு பண்டிகைகளில் தொடர்ச்சியாக அடுத்தடுத்த நாட்களில் வரும் பண்டிகை என்றால் அது, முதல் மூன்று பண்டிகைகள் தான். இந்த பண்டிகைகளில், தொடர்ச்சியாக விடுமுறை இருக்கும் இஸ்ரவேலருக்கு. பஸ்கா பண்டிகையில் பொதுவாக எல்லோரும் இணைந்து சாப்பிடுவர், புளிப்பில்லா அப்ப பண்டிகையில், புளிப்பில்லா அப்பம் சாப்பிடுவர். புளித்த அப்பத்தை வீடுகளில் தேடி எடுத்து, வெளியே போடும் வழக்கம் இஸ்ரேலில் இன்றும் காணப்படுகிறது. மூன்றாவது பண்டிகையான முதற்கனி பண்டிகையில், அப்போது தான் வளர்ந்து கொண்டிருக்கும் பயிரை பறித்து, ஆசாரியனிடம் கொடுக்க, ஆசாரியன் அதை கர்த்தருடைய சன்னிதியில் அசைவாட்டுவார் என்று ஏற்கனவே பார்த்தோம். இந்த முதற்கனி பண்டிகையை இப்பொழுது கொண்டாட முடியாது, ஏனெனில் இஸ்ரவேலருக்கு இப்பொழுது, ஆலயம் இல்லை.
இந்த மூன்று பண்டிகைகளும் மேசியாவுடன் தொடர்புடையது என்பதை ஏற்கனவே பார்த்து இருக்கிறோம். இந்த தொடர்ச்சியான மூன்று பண்டிகைகள், 3 வகையான இரட்சிப்பை அடையாளப்படுத்துகிறது.
பஸ்கா ( நீதிமானாக்கும் இரட்சிப்பு)
பஸ்கா (Passover in English) அதன் அர்த்தம், கடந்து போதல்.
When the Lord goes through the land to strike down the Egyptians, he will see the blood on the top and sides of the doorframe and will pass over that doorway, and he will not permit the destroyer to enter your houses and strike you down.
கர்த்தர் எகிப்தியரை அதம்பண்ணுகிறதற்குக் கடந்துவருவார்; நிலையின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் அந்த இரத்தத்தைக் காணும்போது, கர்த்தர் சங்காரக்காரனை உங்கள் வீடுகளில் உங்களை அதம்பண்ணுகிறதற்கு வரவொட்டாமல், வாசற்படியை விலகிக் கடந்துபோவார்.
யாத்திரகாமம் 12-23
ஆட்டுக்குட்டியின் இரத்தம், சங்காரத்தூதனை, (Angel of Death)அந்த வீடுகளைக் கடந்து போக வைத்தது. அது அவர்களுக்கு எகிப்திலிருந்து விடுதலையைக் கொடுத்தது.
மேசியாவின் இரத்தம், மரணத்தின் தூதனை கடந்து போக வைத்தது. அது நமக்கு விடுதலையைக் கொடுக்கிறது.
மேசியா உலகத்தின் பாவத்தை எடுத்துக் கொண்டு நம்மை நீதிமான்கள் ஆக்கிவிட்டார்.
நான் எப்படி இருக்கிறேனோ, அப்படியே தேவன் என்னை ஏற்றுக் கொண்டார். என்னை நீதிமான் என்று கூறிவிட்டார். என் சுய முயற்சியின் மூலமோ, என் செய்கைகளின் மூலமோ என்னால் நீதிமான் ஆகமுடியாது, இயேசுவின் இரத்தம் மட்டுமே என்னை நீதிமான் ஆக்கியது.
ஏழு நாட்கள் அவர்கள் புளிப்பில்லா அப்பம் புசிக்க வேண்டும். முதல் நாளிலே புளிப்புகளை வீடுகளில் இருந்து நீக்க வேண்டும்.
6. நீங்கள் மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா? 7. ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே. 8. ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.
1 கொரிந்தியர் 5
புளித்த அப்பம் என்பது பாவத்தைக் குறிக்குமானால், புளிப்பில்லா அப்பம் என்பது பரிசுத்தத்தைக் குறிக்கும். நம் ஆவியில் நாம் பரிசுத்தமாகிறோம்.
எனவே unleavened Bread என்பது பரிசுத்தமாக்கும் இரட்சிப்பைக் குறிக்கிறது.
நம் சிந்தையில், நம் இருதயத்தில், கசப்பான எண்ணங்கள், வெறுப்புகள், பாவங்கள் இருக்கிறதா என்று பார்த்து, அதை நீக்குவதற்கு தான் இந்த புளிப்பில்லா அப்ப பண்டிகை.
3, முதற்கனி பண்டிகை (மகிமைப்படுத்தும் இரட்சிப்பு)
முதற்கனி பண்டிகையில் மேசியாவாகிய இயேசு உயிரோடு எழுந்தார் என்பது நமக்குத் தெரியும். இப்பொழுது வேதத்தில் சொல்லப்பட்டபடி பண்டிகையைக் கொண்டாட, இஸ்ரவேலருக்கு தேவாலயம் இல்லை.
இயேசு முதற்கனி பண்டிகை அன்று தான் உயிர்த்தெழுந்தார்.
அவர் உயிர்த்தெழுந்ததும், மகிமையின் சரீரத்தோடு பரலோகத்துக்கு சென்றார்.
பரலோகத்தில் ஒரு ஆசரிப்புக் கூடாரம் உண்டு அல்லவா! உயிர்த்தெழுந்த பின்பு அங்கு சென்று, அவரே பிரதான ஆசாரியராய், தன்னையே தேவனுக்கு முன்பாக அசைவாட்டினார்.
முதற்கனி பண்டிகையில், வளர்ந்து கொண்டிருக்கும் பயிரை அசைவாட்டுவார்கள். நம் தேவன் அவரையே முதற்கனியாக அசைவாட்டியதால், உயிர்த்தெழுதலின் முதற்கனியாக அவர் மாறி, நமக்கும் அந்த நிச்சயத்தைக் கொடுக்கிறார்.
அவர் உயிர்த்தெழுந்ததும் மகிமையின் சரீரத்தைப் பெற்றது போல, நமக்கும் மகிமையின் சரீரத்தை தர காத்திருக்கிறார்.
எனவே முதற்கனி என்பது, மகிமைப்படுத்தும் இரட்சிப்பு.
ஆதாம் பாவம் செய்ததால் மரணம் வந்தது. ஆதாம் ஒருவருக்கு மட்டும் மரணம் வந்ததா? உலகம் முழுவதற்கும் வந்தது. அப்படியானால், இயேசு என்னும் ஒருவர் உயிர்த்தெழுந்ததால், நம் அன்னைவருக்கும் உயிர்த்தெழுதல் உள்ளது என்பது அதிக நிச்சயம்.
புளிப்பில்லா அப்ப பண்டிகையில், ஏழு நாட்களும் கூடி வழிபட, வழிபாட்டு முறை (LITURGY) இருக்கும். ஒருவேளை அதையும் விவரித்து எழுதினால், உங்களுக்கு அதிகமாக போர் அடித்துவிடும் என்று தான் எழுதவில்லை.
முதற்கனி பண்டிகையில், சபையாக கூடி இயேசுவின் உயிர்த்தெழுதலைப் பற்றி அதிகம் பேசுகின்றனர். அதே போல அந்த நாளில், மேசியானிக் யூதர்கள் அதிகமாக மீன் சாப்பிடுகிறார்கள். ஏனெனில் இயேசு உயிர்த்தெழுந்த பின், மீன் சாப்பிட்டதை நினைவுகூறும்படி இப்படி செய்கிறார்கள். (நாமும் அதே நாளில் தான் ஈஸ்டர் கொண்டாடுகிறோம்,) அடுத்த பதிவில் பெந்தெகோஸ்தே பண்டிகை பற்றி பார்க்கலாம்.
குறிப்பு:
முக நூல் நண்பர்கள் ‘நான் யூதரா?’ என்று கேட்கிறார்கள். நான் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவர். அவ்வளவு தான். என்னுடைய இஸ்ரவேல் என்னும் Facebook பதிவு மிகவும் பிரயோஜனமாய் இருந்தது என்று கூற கேட்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். கர்த்தருக்கு சித்தமானால், நமது தளத்திலும் அந்த பதிவுகளைப் போட முயற்சிக்கிறேன். கிட்டத்தட்ட 300 பக்கங்கள் கொண்ட பதிவு. முக நூலில் 35 பதிவுகளாக வெளியிட்டேன். நமது தளத்திலும் வெளியிட முயற்சிக்கிறேன்.
இஸ்ரவேல் போர் குறித்து ஒரு சகோதரர் என்னிடம் முக நூலில் குறுஞ்செய்தி அனுப்பினார். ஒரேஒரு காரியத்தை நான் பகிர நினைக்கிறேன். உக்ரைன் – ரஷ்யா போர் ஆரம்பித்த புதிதில், ஒரு youtube channelல் தினமும் செய்தி (NEWS) கேட்பேன். Tamil Pokkisham என்கிற அந்த channelல் தினமும் கேட்கும்போது, ஒருமுறை விக்கி என்கிற அந்த சகோதரர் கூறினார், ரஷ்ய அதிபர் புதின், இஸ்ரவேலரை தாக்கி பேசியுள்ளார். ‘ஹிட்லர் ஒரு யூதன் என்று அவர் பேசியதற்கு, ரஷ்யா மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று இஸ்ரேல் அதிபர் கூறி இருக்கிறார். ஒரு வேளை இந்த சண்டை, பெரிதாகுமானால், கிறிஸ்தவர்கள் பல வருடங்களாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற, இஸ்ரேல்- ரஷ்யா யுத்தம் வரும் என்று கூறினார். எனக்கு ஒரே ஆச்சரியம். “ஒரு கிறிஸ்தவரல்லாதவர், நமது வேதத்தில் போட்டிருப்பதாக ஒரு யுத்தத்தைப் பற்றி பேசுகிறார். ஆனால் எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியவில்லையே” என்று உண்மையாக மனம் வருந்தினேன். அப்பொழுது Youtube மூலமாக எசேக்கியேல் 36,37 அதிகாரங்களில், இஸ்ரேல் – ரஷ்யா யுத்தம் இருக்கிறது என்பதையும், அதேபோல கடைசி யுத்தமாகிய அர்மெகதோன் யுத்தத்திற்கு பூமி தயாராகி வருகிறது என்பதையும் அறிந்து கொண்டேன். இரண்டு யுத்தம் பற்றியும் எனக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் தெரியும். நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒருவேளை நீங்கள் இன்னும் அதைப் பற்றி அறியாமலிருந்தால், நிச்சயமாக அறிந்து கொள்ளுங்கள், தேவனை அறியாத ஒருவருக்கு நம் வேதம் தெரிகிறது, இத்தனை வருடங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கும் நமக்கு, அதைப்பற்றி தெரியவில்லை என்றால், நாம் தான் பரிதாபத்துக்கு உள்ளானவர்கள். நேரமிருந்தால் கேட்டுப் பாருங்கள். நன்றி
Leave a Reply