ஆபிரகாம்

நோவாவின் குமாரர் சேம், காம், யாப்பேத் என்று அறிவோம். எனவே சேம் தான் முதல் மகனாக இருப்பான் என்று நினைத்தால் தவறு. யாப்பேத் தான் முதல் மகன் என்றும், அவன் தம்பி தான் சேம் என்றும் வசனம் கூறுகிறது.

ஆனால் வேற்று மொழிபெயர்ப்பில், யாப்பேத்தின் மூத்த சகோதரன் சேம் என்றிருக்கும். எனவே யார் முதலாவது பிறந்தவர் என்பதில் குழப்பம் இருக்கிறது.

இரண்டாவது chartல், நோவா இறந்த வருடம், 2006. ஆபிரகாம் பிறந்த வருடம் 1948. அப்படியானால், ஆபிரகாம் பிறந்தபோது கூட, நோவா எங்கேயோ வாழ்ந்து கொண்டிருந்திருக்கிறார். பேலேகுவின் நாட்களில் பூமி பகுக்கப்பட்டது என்று அறிவோம். ஆனால் பூமி பகுக்கப்படும்போதும், பாஷைகள் பிரியும்போதும் கூட நோவா உயிரோடு இருந்திருக்கிறார். இவர்கள் சேமின் சந்ததி என்பதால், ஒருவேளை அவர்கள் ஒரே இடத்தில் வசித்திருக்கலாம். அப்படி இருந்தால், நோவா மூலமாக, அழிவுக்கு முன்னான உலகம், பேசும் தெய்வம் என்று எல்லாவற்றையும் ஆபிரகாம் அறிந்திருக்க முடியும். நோவா, ஆதாம் மூலமாக கேட்டு தெரிந்து கொண்ட  ஏதேன் தோட்டம் பற்றி கூட நோவா சிலருக்கு சொல்லிக் கொடுத்திருப்பார். அது ஆபிரகாமுக்கும் தெரிய வந்திருக்கலாம்.

அதே போல, அதிக வயது வாழ்ந்தவர் யார் என்று, அதே அட்டவணையில், இறந்த வருடத்தை வைத்துப் பார்த்தால், அது ஏபேர். அவரது இறக்கும்போது வருடம், 2187.  ஆபிரகாம் பிறக்கும்போது 1948, ஈசாக்கு பிறக்கும்போது 2048, யாக்கோபு பிறக்கும்போது 2108. ஆக முற்பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு பிறக்கும்வரையில் ஏபேர் உயிரோடு இருந்திருக்கிறார். இந்த ஏபேர் மரிக்கும் முன்பே ஆபிரகாம் மரித்து விட்டார்.

ஏன் இந்த ஏபேரைப் பற்றி இப்பொழுது பார்த்தோம்? இஸ்ரவேலருக்கு இன்னொரு பெயர் இருக்கிறது. அது எபிரேயர். எபிரேயர் என்கிற பெயருக்கும் இரண்டு விளக்கம் உண்டு. முதலாவது, ஆபிரகாமின் சந்ததியாக யாக்கோபு 70 பேராக எகிப்துக்கு போனதால், ஆபிரகாமின் சந்ததி, ஆபிராமியர் என்பது எபிரேயர் என்று மாறியதாக கூறுவர். இன்னொரு கூட்டத்தார், இந்த ஏபேர் என்பவர் முக்கியமானவராக இருந்திருக்கலாம். ஏனெனில் அவர் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு வாழ்வைக் கண்டவர். அதிக நாட்கள் உயிர் வாழ்ந்திருக்கிறார். இந்த ஏபேரின் நிமித்தமாகவே, எபிரேயர் என்று பெயர் வந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.

ஆபிரகாமின் சந்ததி தான் எபிரேயராக இருக்க முடியும். அதிலுமே கூடுதலாக, யாக்கோபின் சகோதரன் ஏசாவும் எபிரேயனாக வரலாம். ஏனெனில் அவனும் ஆபிரகாமின் வம்சம். இதையே ஏபேரிடம் பார்த்தால், இன்னும் அதிக எண்ணிக்கையிலான ஜனங்கள் எபிரேயர் என்கிற லிஸ்ட்டில் வர முடியும். இப்படி நாம், ஏபேரா? ஆபிரகாமா? என்று குழம்பக்கூடாது என்பதற்காகவே, தேவன் யாக்கோபின் சந்ததியை இஸ்ரவேலர் என்று பெயர்மாற்றி, இந்த குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். எதையுமே நேர்த்தியாகச் செய்கிறவர் நம் தேவன் அல்லவா!

ஆதி 10-21ன் வெவ்வேறு மொழிபெயர்ப்பு மேலே உள்ளது. இதன்படி பார்த்தால், ஏபேர் தான் எபிரேயர்களுக்கு காரணமானவர்.

மனிதன் தேவனுக்கு கீழ்ப்படியாமல், பாவம் செய்து விட்டான். தேவன் அவனுக்காக மீட்பின் திட்த்தைக் கொடுத்தார் என்று பார்த்தோம். பரிசுத்த வித்து, சாத்தானைக் கொல்வதற்காக மனிதரிடம் கொடுக்கப்பட்டு, மறைமுகமாக travel செய்து நோவா வரை வந்ததை நாம் பார்த்தோம். இந்த அட்டவணைகளில் கொடுக்கப்பட்ட வரிசையின்படி, வித்து travel ஆகி ஆபிரகாம் வரை வந்து விட்டது. இரண்டாம் அட்டவணையில், மகன் பிறக்கும்போது வயதைப் பார்த்தால், எல்லாருமே 35 வயதுக்குள் குழந்தை பெற்று இருப்பார்கள். ஆனால் ஆபிரகாம் பிறக்கும்போது அவர் தந்தைக்கு 70 வயது. ஈசாக்கு பிறக்கும்போது ஆபிரகாமுக்கு 100 வயது. ஏன் இந்த தாமதங்கள்? ஆபிரகாமைக்கொண்டு ஒரு பெரிய திட்டம் இருப்பதை சாத்தான் அறிந்து கொண்டதால், அவர் பிறப்பு தாமதமாகிறது. ஈசாக்கினைக் கொண்டு பெரிய திட்டம் இருப்பது தெரிந்ததால் அவர் பிறப்பும் தாமதமாகிறது. இன்று நமக்கும் குழந்தைப்பேறு தள்ளிப் போனால், நமக்கு பிறக்கவிருக்கிற பிள்ளையின் மீது கர்த்தரின் திட்டம் பெரிதாக உள்ளது என்பதை மறக்கக் கூடாது.

ஆபிரகாமை கர்த்தர் ஊர் என்கிற கல்தேயர் தேசத்திலிருந்து தேர்ந்தெடுத்தார் என்று நாம் வேதத்தில் காண்கிறோம். கல்தேயர் தேசம் என்றால் அதுதான் பாபிலோன். சகல விக்கிரகங்களுக்கும் அருவருப்புகளுக்கும் தாய் என்று வேதத்தில் குறிப்பிட்டிருப்பது பாபிலோன்தான். சகல மந்திரவாதங்களும் ஜோசியங்களும் குறி சொல்லுதலும் சகல விக்கிரகங்களும் பாபிலோனில் இருந்து மட்டுமே வந்தவை. நிம்ரோத் பதிவில், பாபிலோனைப் பற்றி பார்த்தோம். அந்த தேசத்திலிருந்து ஆண்டவர் தெரிந்து கொண்ட ஒருவர்தான் ஆபிரகாம். ஆபிரகாமின் தந்தையின் வேலை விக்கிரகங்கள் செய்வது. எனவே ஆபிரகாமும் விக்கிரகங்கள் செய்யும் தொழிலைத் தான் செய்து வந்தார் என்பதை அறிய முடிகிறது. பல விக்கிரகங்களை செய்து கொண்டிருந்த ஆபிரகாமுக்கு, உள்ளத்தின் ஆழத்தில் ஒரு ஏக்கம் இருந்தது. இத்தனை தெய்வங்கள் உண்டா? அல்லது ஏதேனும் ஒரு தெய்வம் தான் மெய் தெய்வமா? என்று. அந்த இதயத்தின் ஏக்கத்தின் நிமித்தமே ஆபிரகாம் தேவனை அறிந்து கொண்டார். (ஓருவேளை நோவா மூலமாக கேள்விப்பட்டிருக்க கூடும்)

தன் தந்தையுடன் விக்கிரகத் தொழிலைச் செய்து வந்து கொண்டிருந்த ஆபிரகாமுக்கு, ‘இத்தனை தெய்வங்கள் இருக்கின்றனவே! இவைகளில் எது பெரியது?’ என்ற சந்தேகம் இருந்து வந்தது. தன் தந்தையைக் கூப்பிட்டு, ‘இவைகளில் எது பெரிய தெய்வம்?’ என்று கேட்க, அப்படி எல்லாம் எதுவும் கிடையாது என்று கூறினார் தேராகு. ஒவ்வொரு சிலையிடமும் போய் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருப்பாராம் ஆபிரகாம். ‘நீ தான் உண்மையான தெய்வமா? எனக்கு சொல். உண்மையான தெய்வம் நீ எனில், என்னிடம் வந்து பேசு’ என்று ஒவ்வொரு சிலையையும் பார்த்து பேசிக் கொண்டே இருப்பாராம். ஒரு நாள் இரவில், எந்த சிலையும் பேசவில்லையென்று, அத்தனை சிலையையும் அடித்து நொறுக்கி போட்டாராம் ஆபிரகாம். அடுத்த நாள் காலையில் தேராகு எழுந்து பார்த்தபோது, அத்தனை சிலையும் உடைந்து இருப்பதை பார்த்ததும் அவருக்கு கோபம் வந்தது. ‘யார் இப்படி செய்தது?’ என்று தன்மகனிடம் கேட்க, ‘தங்களுக்குள் யார் பெரியவர் என்ற சண்டையில், சிலைகள் ஒன்றோடு ஒன்று சண்டை போட்டு உடைந்து விட்டன’ என்று கூறினாராம் ஆபிரகாம். ‘சிலை எப்படி பேசும்?’ என்று ஆபிரகாமைக் கடிந்து கொண்டாராம் தேராகு. இப்படியாக உண்மையான தெய்வத்தின் மீதான தேடல், ஆபிரகாமுக்கு இருந்தது. ஒருமுறை சிலைகள் இருந்த இடத்தை ஆபிரகாம் தீ வைத்து எரித்த போது, அந்த தீக்குள் சிக்கி, அவருடைய சகோதரன் ஆரான் இறந்து விட்டதால், ஆரானின் மகன் லோத்துவை தன்னுடனே வைத்துக் கொண்டார் என்று சில குறிப்புகள் கூறுகிறது. இப்படி உண்மையான தெய்வத்தின் மீதான அவருடைய தேடலே, தேவன் ஆபிரகாமிடம் வந்து பேச காரணமாய் அமைந்தது. நோவா கூறிய கதைகள் செவிவழி செய்தியாய் ஆபிரகாமை வந்தடைந்திருந்ததால், எப்படியாவது அந்த பேசும் தெய்வத்திடம் தானும் பேசியாக வேண்டும் என்று விருப்பத்தோடு இருந்தார் ஆபிரகாம்.

ஆண்டவர் ஆபிரகாமுக்கு கொடுத்த எல்லையையும், இப்பொழுது இந்த படத்தில் நாம் காண்கிற இஸ்ரவேல் தேசத்தின் எல்லையையும் பார்த்தாலே, நம்மால் புரிந்து கொள்ள முடியும், இஸ்ரவேல் தேசம் எவ்வளவு சிறிய தேசம் என்று. ஆபிரகாம் அந்தக் கானான் தேசத்தில் தான் வாழ்ந்தார், அது அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட தேசம்.

எதற்காக ஆபிரகாமை ஆண்டவர் தன் மகனை பலியாக தரச்சொன்னார்? ஆபிரகாமின் நாட்களில் தலைப்பிள்ளை பலி செலுத்துவது அவன் வாழ்ந்த ஊரில் இருந்தது. ஆபிரகாமுக்கு தேவனைப் பற்றி எதுவுமே தெரியாது. ஒருவேளை இந்த கடவுளும் என் குமரனை பலி செலுத்த சொல்லுமோ என்று அஞ்சிக் கொண்டே தான் வாழ்ந்தார் ஆப்ரகாம். அதனால்தான் ஆண்டவர் ஈசாக்கை பலி கொடுக்க சொல்லிவிட்டு, அதற்கு பதிலாக ஆட்டுக்கடாவை பலியிடச் சொன்னார். (அதாவது நீ உன் குமாரனை பலி செலுத்த வேண்டாம். நான் என் குமாரனை பலியாக தருகிறேன் என்பதற்கு அடையாளம்) வின்சென்ட் செல்வகுமார் அவர்கள் புத்தகத்தில், “அகழ்வாராய்ச்சியின் போது முள்ளில் சிக்கிய ஆட்டுக்கடா ஒன்று தங்கத்தில் செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடித்ததாகவும், அந்த சிலை செய்யப்பட்ட காலத்தைக் கணக்கிட்டு பார்த்தபோது, அது சரியாக ஆபிரகாம் வாழ்ந்த காலத்தை குறித்ததாகவும் கூறினார். ஆபிரகாம் தன் வாழ்க்கையில் நடந்த மிக முக்கிய நிகழ்வுக்கு அடையாளமாக அதை செய்து வைத்திருந்தார். ஏனெனில் அவர் தொழில் விக்கிரகம் செய்வது தானே. அதேபோல இஸ்ரவேலர் எக்காளம் ஊதுவதற்கும் இந்த சம்பவம் தான் காரணம் என்று குறிப்பிடுவர். அதாவது அந்த ஆட்டுக்கடாவின் கொம்பை எடுத்து, அதை எக்காளம் போல, முதன்முதலில் ஆபிரகாம் தான் எக்காளம் ஊதியதாக கூறுவார்கள்.

கர்த்தர் ஆபிரகாமை கானான் தேசத்துக்கு அழைக்கும் போது ஆபிரகாமுடன் சேர்ந்து அவன் தந்தை தேராகுவும் புறப்பட்டார். ஆதியாகமம் 11-31ன் படி அவர்கள் ஆரான் மட்டும் வந்தபோது அங்கே இருந்து விட்டார்கள். சில சமயம் வேதத்தில் சிலருடைய வயதை சில இடங்களில் குறிப்பிட்டிருப்பார் ஆவியானவர். நாம் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம். ஆனால் ஒவ்வொரு வயதையும் நாம் கணக்கிட்டு பார்க்கும்போது, பல வேத ரகசியங்கள் நமக்கு புரியும். உதாரணமாக இப்பொழுது இரண்டு வசனங்களை எடுத்துக் கொள்வோம்.

மேற்கண்ட இரண்டு வசனங்களின்படி பார்த்தால், தேராகு 70 வயதாக இருக்கும் போது ஆபிரகாம் பிறந்திருக்கிறார். தேராகு மரிக்கும்போது அவருடைய வயது 205. இந்த வசனத்தின் படி பார்த்தால், தேராகு மரிக்கும்போது ஆபிரகாமுக்கு 135 வயது.

ஆபிரகாமின் மகனாகிய இஸ்மவேலுக்கு 13 வயதாகும்போது ஆபிரகாம் விருத்தசேதனம் பண்ணிக் கொண்டார். இந்த இஸ்மவேலின் தாயாகிய ஆகாரை, திருமணம் செய்வதற்கு 10 ஆண்டுகள் முன்பே ஆபிரகாம் கானான் தேசத்துக்கு வந்து விட்டார் என்பதை மேற்கண்ட வசனங்கள் நமக்கு காட்டுகிறது.

ஆபிரகாமின் குமாரன் ஈசாக்கு பிறக்கும்போது ஆபிரகாமுக்கு 100 வயது. இப்பொழுது நன்றாக பார்த்தால் ஆபிரகாமுக்கு 135 வயதாகும் போது தான் தேராகு மரித்துள்ளார். அதாவது தேராகு மரிக்கும்போது ஆபிரகாமுக்கு 135 வயது, இஸ்மவேலுக்கு 49 வயது, ஈசாக்குக்கு 35 வயது. அவர் நினைத்தால் ஆபிரகாம் உடன் கானான் தேசத்தில் வந்து தங்கி இருக்கலாம். பேரன் ஈசாக்குடன் வாழ்ந்திருக்கலாம். ஆனால் வரும் பாதையிலே ஆரான் என்ற இடத்தைப் பார்த்ததும், நதியோரத்தில் இருந்த ஆரானின் செழுமையைப் பார்த்ததும், தேராகு ஆரானிலேயே தங்கி விட்டார். உண்மையில், அந்த இடம் ஆற்றின் ஓரத்தில் இருந்ததாகவும், அதை தங்கும் இடமாக மாற்றிய தேராகு, மரித்துப் போன தன் மகனின் நினைவாக, அவ்விடத்திற்கு ஆரான் என்று பேரிட்டதாகவும் கூறுகிறார்கள்.

இப்படித்தான் இன்று சில பேரும்… நாம் ஆவிக்குரிய வாழ்வில் வளர ஆரம்பிக்கும்போது, நம்முடன் இருப்பவர்கள், நாம் சிறிது வளர்ந்ததும் நம்மை விட்டு தூரமாகச் செல்வர். அப்போது நாம் வருத்தப்படக்கூடாது. ஆரானின் செழிப்பைப் பார்ப்பவர்கள் நம்முடன் இருக்க மாட்டார்கள். வாக்குத்தத்தம் பண்ணின கானானுக்குள் நுழைப்பவர்கள் மாத்திரமே, நம்முடன் இருப்பார்கள். எனவே, நாம் கடவுளுடன் நெருங்கி வாழும்போது, யாரேனும் நம்மை விட்டுப் பிரிந்தால், அவர்களை தேவன் நம்மை விட்டு பிரித்து விட்டார் என்று எண்ணி மகிழ்வோடு நம் பயணத்தை தொடரலாம்.

ஆபிரகாமின் குமாரன் ஈசாக்கு. ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு மூவரும் சேர்ந்து வாழ்ந்தனர்.

யாக்கோபு ஆபிரகாமிடமிருந்தே அனேக காரியங்களைக் கற்றிருக்க முடியும். ஆபிரகாம் மரித்த வருடம் 2123. யாக்கோபு பிறந்த வருடம் 2108. 15 வயதாகும் வரை, யாக்கோபின் தாத்தாவாகிய ஆபிரகாம் உயிரோடு இருந்திருக்கிறார். தேவன் பேசிய வார்த்தைகள், உடன்படிக்கைகள் யாக்கோபுக்கு கற்றுக் கொடுத்திருப்பார் ஆபிரகாம். ஏசா வெளியே போய் வேட்டையாடுவதில் பிஸியாக இருந்தபோது, யாக்கோபு கூடாரவாசியாக, தாத்தாவிடம் கர்த்தரைப் பற்றி அறிந்து கொண்டார்.

ஒரு காரியம் என்னவென்றால், ஆபிரகாமுக்கு ஈசாக்கு பிறந்த வருடம், 1948. இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்டு சுதந்திரம் பெற்றது கிபி1948. இப்படி ஆபிரகாமின் வாழ்க்கையை வைத்து அனேக காரியங்களை கணித்து வருகின்றனர் வேதவல்லுனர்கள்.   இஸ்ரேல் தேசம் உருவான விதம், கடந்து வந்த பாதைகள் பற்றி வரும் பதிவுகளில் தொடர்ந்து பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *