அசீரிய சாம்ராஜ்யம்

வேதத்தில் இராஜாக்கள், நாளாகமம் புத்தகத்தில், யூதாவின் ராஜாக்கள், இஸ்ரேல் ராஜாக்களைப் பற்றி வரிசையாகக் கூறப்பட்டிருக்கும். இஸ்ரவேல் தேசம், அசீரியர்களின் கையில் ஒப்பு கொடுக்கப்படுவதோடு, இஸ்ரேல் தேசத்தைப் பற்றிய குறிப்புகள் வேதத்தில் முடிந்திருக்கும். ஆனால் யூதா தேசமோ, அதற்கு அடுத்து பாபிலோனுக்கு சிறைப்பட்டு செல்வது, பாபிலோனில் இருந்து மீண்டும் வருவது, என யூதாவைப் பற்றிய குறிப்புகள் வேதத்தில் தொடர்ந்து எழுதப்பட்டிருக்கும். யூதாவின் தலைநகர் எருசலேம். அதைப் பற்றி தொடர்ச்சியாக நாம் காண இருக்கிறோம். முதலாவது பெரிய சாம்ராஜ்யம் அசீரிய சாம்ராஜ்யம். ஆனால் அசீரியர்களால், இஸ்ரேல் தேசத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. யூதாவை தொட முடியவில்லை.

1.அசீரிய சாம்ராஜ்யம்

கிமு722ல் அசீரியர்கள், வடக்கு ராஜ்யத்தைப் பிடித்தனர். அசீரியர்கள் மொத்தம் 25 நாடுகளை பிடித்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. தான் சிறைபிடித்த நாடுகளில் உள்ள மக்கள், கூட்டமாக கலந்து , தங்களுக்கு எதிராக திரும்பக் கூடாது என்பதற்காக அசீரிய ராஜா ஒரு காரியம் செய்தார். 25 நாடுகளிலும் 25 நாட்டு மக்களை கலந்து வாழ வைத்தான். அதாவது, இஸ்ரேல் தேசமாகிய வட தேசத்தை எடுத்துக் கொண்டால், அதில் உள்ள மக்களை 25 பிரிவுகளாக பிரித்து, ஒரு பிரிவை மட்டும் இஸ்ரேல் தேசத்தில் வைத்து விட்டு, மற்ற 24 பிரிவுகளை 24 தேசத்தில் கலந்து வாழ விட்டான். இதே போல மற்ற 24 தேசங்களிலும் இருந்து, ஒவ்வொரு பிரிவு மக்கள் இஸ்ரேலுக்கு வந்தனர்.

எனவே இஸ்ரேல் தேசத்தில் இருந்த இஸ்ரவேலர்கள், தங்களுடன் கலந்த பிற நாட்டு மக்களுடன் சம்பந்தங் கலந்தார்கள். பிற நாட்டு மக்களைத் திருமணம் செய்து, விருத்தசேதனம் செய்து அவர்களையும் இஸ்ரவேலர் ஆக்குகிறார்கள். இதனைப் பார்த்த யூதர்களுக்கு கோபம் வருகிறது.

இஸ்ரவேல் என்பது கர்த்தருடைய தேசம். அங்கே கர்ததருக்கு பயப்படாதவர்கள் குடியேறியதால், சிங்கங்கள் வந்து சிலரைக் கொன்றது. எனவே அசீரியா ராஜாவிடம், இஸ்ரேலின் தெய்வம் பற்றி யாராவது எங்களுக்கு  கற்றுக்கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர். ஒரு ஆசாரியன் வந்து கற்றுக் கொடுத்தான். அவர்கள், தங்கள் தெய்வங்களையும் வழிபட்டு, கர்த்தரையும் வழிபட்டு, வாழ்ந்தார்கள். தங்கள் தெய்வத்தோடு ஒரு தெய்வமாக, கர்த்தரையும் இணைத்துக் கொண்டார்கள். இதைத்தான் ஆவிக்குரிய விபச்சாரம் என்று கருதினர் யூதர்கள்.

இஸ்ரவேலில் இருந்த சமாரியர்கள், பிற இனத்தாருடன் கலக்காத யூத ராஜ்ஜியத்துடன் இணைய விரும்பினர். புறஜாதிகளுடன் கலந்ததால், யூதர்கள் இஸ்ரவேலரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் சமாரியர்கள் தங்களுக்கு என்று ஒரு தோரா(வேதம்) எழுத ஆரம்பித்தார்கள், அதுதான் சமாரியர்களின் பஞ்ச ஆகமம். சமாரியாவின் கெர்சீம் மலையை தெரிந்தெடுத்து தொழுது கொள்ள ஆரம்பித்தார்கள். இதை பார்த்த பின்பு யூதர்களுக்கு சமாரியர் மீது இன்னும் வெறுப்பு வந்தது.

(எருசலேமில் இருந்து கலிலேயா போக வேண்டும் என்றால், சமாரியா தாண்டிப் போக வேண்டும். ஆனால் யூதர்கள் அப்படி போக மாட்டார்கள். எருசலேமில் இருந்து யோப்பா பட்டணம் போய், கடற்கரை வழியே நெகிடோ பள்ளத்தாக்கு போய், கலிலேயா வருவார்கள். அல்லது எருசலேமில் இருந்து எரிகோ பட்டணம் போய், யோர்தான நதி ஓரம் அப்படியே மேலே வந்து கலிலேயா வருவார்கள். (நல்ல சமாரியன் உவமை இப்போது வாசித்துப் பாருங்கள். புரியும்) யூதர்களுக்கு, இஸ்ரவேலர்கள் துரோகிகள், அருவருப்பானவர்கள், பரிசுத்தக்குலைச்சல் ஆனவர்கள்.

இயேசு சமாரியஸ்திரியிடம் பேசும்போது, தன் சீஷர்களோடு கலிலேயா சென்றவர், சமாரியா வழியாக செல்கிறார். யூதர்கள் சமாரியா வழியாக செல்ல மாட்டார்கள். அவரது சீஷர்களுக்கு அது குழப்பமாகத் தான் இருந்தது. இயேசு நேரடியாக சமாரியாவுக்குள் நுழைய முடியாது. அதனால் அந்த சமாரியா ஸ்திரீ வரும் நேரம் பார்த்து, தன் சீஷர்கள் எல்லாரையும் அனுப்பிவிட்டு, அவளுக்காகக் காத்திருக்கிறார். அவள் மூலமாக சமாரியர்கள் அனைவரிடமும் பேசுகிறார்).

இந்த அசீரியர்கள் தாங்கள் சிறைபிடித்துப்போன இஸ்ரவேலரை, எப்படி எல்லாம் கொடுமைபடுத்தினார்கள் என்பதை நம்மால் சிந்தித்துப் பார்க்கவும் முடியாது. அசீரியர் தாங்கள் சிறைபிடித்துப்போன மக்களை எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தினர் என்பதை களிமண் எழுத்து படிவங்களில் குறித்திருந்தனர். இவை இன்று பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ளது. இந்த அசீரியா தேசத்தின் தலைநகர் நினிவே. இந்தப் பட்டணத்தைத் கட்டியவர், நாம் ஏற்கனவே பார்த்த சர்வாதிகாரி நிம்ரோத் தான் (ஆதியாகமம் 10-11,12).

1842ல் நினிவே(அசீரியர்களின் தலைநகரம்) ஆராய்ச்சி செய்த பிரெஞ்சு ஆய்வாளர் அசீரியா மன்னர்களின் கொடுமைத் தன்மையை, கல்வெட்டுகளில் இருந்தும், களிமண் தட்டைகளில் இருந்தும் கண்டுபிடித்தார். அசிரிய ராஜாக்களுக்கு, பிடித்த பொழுதுபோக்கே, மனிதர்களை சித்திரவதை செய்வதுதான். தாங்கள் வெற்றி கொள்ளும் தேசத்து ஜனங்களை கைதிகளாகக் கொண்டு வந்து, அவர்கள் கைகளை வெட்டி, கண்களை குருடாக்கி, நாக்கை அறுத்து, கொலை செய்து ரசிப்பதே அசீரிய மன்னர்களின் பொழுதுபோக்கு. நினிவேயில் சித்ரவதை கூடங்கள் என்று ஏழு இடங்களைக் கண்டுபிடித்துள்ளார்கள்.

அசீரிய மன்னர், அசூர்பானிப்பால், கொடுமையின் ராஜா. அவர் குறிப்பில், “இன்று 400 பேரின் தலையை அறுத்து குவியலாக்கி மகிழ்ந்தேன்” என்றும், “இன்று 700 பேரின் கண்களைத் தோண்டினோம். அவர்கள் மண்டியிட்டு கதறியது என் காதுகளுக்கு இனிய பாடலாக இருந்தது. எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது” என்றும் எழுதியிருக்கிறார்.

யோனா நினிவே பட்டணத்துக்கு சென்ற சம்பவம் நம் அனைவருக்கும் தெரியும். யோனா இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரோபெயாமின் நாட்களில் வாழ்ந்தவர் (2இரா 14-25). யெரோபெயாம் காலத்தில் அசீரியாவை ஆண்டவர் சல்மனாசார். இவரது குறிப்பில் கூட, பொழுதுபோக்கு மக்களை இம்சித்து மகிழ்வது என்று கல்வெட்டு காணப்படுகிறது. “அரண்மனையில் சுமார் 14000கைதிகள் கண்கள் குருடாக்கப்பட்டு, விரல்கள் தரிக்கப்பட்டு, காவலில் வைக்கப்பட்டனர்” என்று குறிப்பு கிடைத்துள்ளது. அதனால்தான் யோனா நினிவே பட்டணத்துக்கு போவதற்கு பயந்தார்.

அசீரியர்களின் தெய்வம் இஷ்டார். இதுதவிர அஸ்ட்ராட், அஷாரேட், அஸ்தரோத் என்ற பெயர்களும் இஷ்டாருக்கு இருக்கிறது. பெண்களை கேவலமாக நடத்தி, நரபலி கொடுக்கும் சடங்கு இஷ்டாருக்கு உண்டு.

அசீரியரின் வீழ்ச்சி

யோனா எச்சரிக்கும்போது மனந்திரும்பியவர்கள், அடுத்த 100 ஆண்டுகளுக்குள் இன்னும் கொடுமை செய்ய ஆரம்பித்தனர். யோனாவிலிருந்து 100 ஆண்டுகள் கழித்து, நினிவேக்கு தீர்க்கதரிசனம் உரைத்தவர் நாகூம். அவர் உரைத்து 100 ஆண்டுகள் கழித்து, கிமு 612ல், பெரும் வெள்ளப்பெருக்கால் நினிவே அழிந்தது. தன் மக்கள் எவ்வளவு விலகிப் போனாலும், தேவன் அவர்களுக்காக வழக்காடுவார் என்பது நிரூபணம் ஆகிறது அல்லவா!

முதல் சாம்ராஜ்யமான அசீரியர்கள் கிமு 722ல் இஸ்ரவேலரை சிறைப்பிடித்து சென்று, சித்ரவதை செய்து மகிழ்ந்தனர். மூன்றாம் சாம்ராஜ்யமான மேதியர்கள், கிமு 612ல் நினிவேயை அழித்தனர். நாகூம் உரைத்த தரிசனம் கீழே வாசிக்கலாம்.

நினிவேயில் இரண்டு மதில்கள் இருந்தது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அங்கு கிடைத்த இடிந்து போன கோட்டைச் சுவரை ஆராய்ந்தவர்கள், இரண்டு மதில் சுவர்கள் அதாவது உட்புறச்சுவர், வெளிப்புறச்சுவர் என்று பாதுகாப்பு இருந்ததாக கண்டுபிடித்தார்கள். உட்புறச்சுவர் உயரம் 100அடி, அகலம் 46 அடி. இந்த 46அடி அகல கோட்டையை, கீழிருந்து மேலே சுற்றி சுற்றி ஏறி உச்சிக்கு செல்லும்படியான ராஜபாதை இருந்திருக்கிறது. இந்த 100அடி உயர கோட்டையின்மேல் பயமில்லாமல் ரதம் ஓட்டியிருக்கிறார்கள் அசீரியா ராஜாக்கள்.

நினிவேயின் நடுவே பெரிய நீர் நிரப்பும் குளங்களைக் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர், இது உண்டாக்கப்பட்ட காலத்தை கணக்கிட்டால், 5000வருடங்கள் பழமையானது. அதாவது சர்வாதிகாரி நிம்ரோத் காலத்தில் கட்டப்பட்டது என்று கண்டுபிடித்தார்.

மேதியர்கள், அசீரிய மன்னர்களின் பலம் அறிந்து, இரு மதில் கொண்ட கோட்டையைத் தாக்காமல், அந்த குளத்தின் மதகுகளைத் திறந்து விட்டனர். தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே நுழைந்து, நினிவேயை முழுதுமாக மூழ்கடித்து விட்டது.

பிரெஞ்சு ஆய்வாளர் மற்றொரு காரியமும் கண்டுபிடித்தார். முழு நினிவேயும் வெள்ளத்தால் அழிந்தபோது, அரமனையின் ஒரு சுவர் மட்டும் தீயினால் பாதிக்கப்பட்டு இருந்ததைப் பார்த்தார். இதற்கு விடை, மேதிய சரித்திரக் குறிப்புகளில் கிடைத்தது.

“அசீரியாவின் மன்னன் எசெர்ஷெடன் காலத்திலிருந்து மேதிய ராஜாக்களுடன் அசீரியா பல உடன்படிக்கை செய்திருந்தது. அசூர்பானிப்பால் ஆட்சியில் இதெல்லாம் மறுக்கப்பட்டது. அசீரியாவைக் கைப்பற்றி மேதிய ராஜ்யத்தை விரிவுபடுத்த திட்டமிட்ட நாங்கள் கோசேர் ஆற்றின் மதகுகளைத் திறந்து விட்டோம். நினிவே கோட்டைக்குள் வெள்ளம் புகுந்தது. இனி தப்ப முடியாது என்று அசூர், தன் மனைவி, வீட்டார், பணிப்பெண்கள் என்று 150பேரை ஒரு பகுதியில் அடைத்து, தீ வைத்தான், தன்மீதும் தீ வைத்து கொண்டான். ஆனால் அங்கு நுழைந்த எங்கள் வீரர்கள், எரிந்து கொண்டிருந்த அவனை வெட்டிக் கொலை செய்தனர்”

வேதம் எவ்வளவு உண்மை அல்லவா. தன் ஜனங்களை சித்ரவதை செய்த ராஜாவை, ஆண்டவர் எப்படி தண்டித்து இருக்கிறார் அல்லவா? நாகூமின் தீர்க்கதரிசனம் கிமு612ல் நிறைவேறியது. அசீரிய சாம்ராஜ்யம் அடியோடு அழிந்தது. இன்றும் அவ்வளவு கல்வெட்டுகளும் பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ளது.

இஸ்ரவேலரை துரத்தி வந்த எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் செங்கடலில் மூழ்கினார் என்று பார்த்தோம். இப்போது இஸ்ரவேலின் 10 கோத்திரங்களை சிறைப்பிடித்து சென்ற சனகெரிப் ராஜாவை ஆண்டவர் சும்மா விட்டிருப்பாரா? இஸ்ரேல் பிடிபட்ட போது, யூதாவை ஆண்டது எசேக்கியா ராஜா.

எசேக்கியா ராஜா, அசீரியா ராஜாவிடம் மன்னிப்பு கேட்டு, அசீரியா ராஜா கேட்ட வெள்ளி, பொன் எல்லாவற்றையும் தேவாலயத்தில் இருந்து கூட எடுத்து கொடுத்து விடுகிறார். ஆனால் அசீரியா ராஜா, எல்லாவற்றையும் பெற்றுகொண்டு பின்னர் ஒரு பெரிய படையை அனுப்புகிறார். எத்தனை தேசங்களைப் பிடித்திருக்கிறேன். அவர்கள் தேவன் யாரும் என்னை எதுவும் செய்ய முடியவில்லை. இஸ்ரேலையும் பிடித்து விட்டேன். உங்கள் யூதாவையும் பிடித்து விடுவேன் என்று பெருமையாகப் பேசுவார். நம் கர்த்தர், “இஸ்ரவேலின் தேவனையா பேசினாய்? உன் தேவனின் கோவிலிலே நீ செத்துப்போவாய்” என்று தண்டனை கொடுத்து விட்டார். 2இராஜாக்கள் 18,19ம் அதிகாரத்தில் தெளிவாக இருக்கும்.

அசீரிய ராஜாவின் பெருமை

தேவனின் பதில்

அசீரியா ராஜாவாகிய சனகெரிப், அவன் தேவனுடைய ஆலயத்தில், அவன் சொந்தக் குமாரர்களாலேயே வெட்டிக் கொல்லப்பட்டான். தேவன் நியாயம் செய்தார். இன்று நமக்காகவும், நம் அப்பா, வழக்காடுகிறவராகவும், யுத்தம் செய்கிறவராகவும் இருக்கிறார். நாம் அவரைப் புரிந்து கொண்டோமா?

இரண்டாவது பெரிய சாம்ராஜ்யம் பற்றி அடுத்த பதிவுகளில் தொடர்ச்சியாக காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *