முதல் சாம்ராஜ்யம் அசீரிய சாம்ராஜ்யம் பற்றி பார்த்தோம். இப்போது இரண்டாவது சாம்ராஜ்யமான பாபிலோன் சாம்ராஜ்யம் பற்றி பார்க்கலாம். இந்த பாபிலோனியரின் கால கட்டத்தில் தான், எரேமியா, எசேக்கியேல், தானியேல் என்பவர்கள் இருந்தார்கள். எனவே இப்பதிவு கொஞ்சம் பெரியதாக இருக்கலாம். ஆனால் ஒரே பதிவில் கொடுத்தால், நன்றாகப் புரியும் என்பதால் பெரிய பதிவு. நேரம் ஒதுக்கி படியுங்கள். கோரேஸ் மன்னன் எப்படி பாபிலோனியரை மேற்கொண்டான் என்பதையும் இப்பதிவில் படிக்கலாம். இதைத் தெரிந்து கொண்ட பின், வேதம் வாசித்தால், இன்னும் நன்றாகப் புரியும்.
2. பாபிலோன் சாம்ராஜ்யம்
இஸ்ரவேல், யூதேயா என்றிருந்த நாடுகளில், இஸ்ரேல் என்ற 10 கோத்திரம் இருந்த நாடு, பல இன மக்கள் கலந்த, கலப்பு நாடாக மாறி விட்டது. மீதமிருந்த 2 கோத்திரமான யூதேயா தேசம். கிமு586 வரை யூதர்களின் தேசமாக இருந்தது. ரெகோபெயாம் முதல் சிதேக்கியா வரை மொத்தம் 20 ராஜாக்கள் அரசாண்டனர். 20பேருமே, தாவீதின் வம்சம். அதே வம்சத்தில் தான் யோசேப்பு, இயேசு கிறிஸ்து வருகிறார்கள்.
முதலாவதாக எரேமியா தீர்க்கதரிசி, யூதேயாவுக்கு தீர்க்கதரிசனம் உரைக்கிறார், “பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத் நேச்சார் வந்து, நம்மை சிறைப்பிடித்து செல்வார்” என்று. அதேபோல, “70 வருடங்கள் பாபிலோனில் இருப்பீர்கள். மீண்டும் யூதேயாவுக்கு வருவீர்கள்” என்று தீர்க்கதரிசனம் உரைத்தார் எரேமியா. இஸ்ரவேலர் அசீரியரின் ராஜ்யத்தில், கிமு722ல் பல தேசங்களுக்கு சிறைப்பட்டு போனார்கள். ஆனால் திரும்ப வரவே இல்லை. ஆனால் யூதேயா மக்களுக்கு, “பாபிலோனுக்கு செல்வீர்கள், 70 வருத்தில் திரும்புவீர்கள்” என்று தீர்க்கதரிசனம் உரைத்தார். ஆனால் இதைச் சொன்னதற்காக, எரேமியாவைக் காவற்கிடங்கில் போடுவித்தார் சிதேக்கியா. அவருடைய வீட்டில் உள்ளோர் அவரைத் துரத்தி விட்டனர். கிணற்றில் தூக்கி போடச் சொன்னார் ராஜா. பாதாள சிறையில் அடைத்தார்கள். இப்படி பலவாறு ஒடுக்கப்பட்டார். ஆனால் எரேமியா “எருசலேம் நகரம், சிறைபட்டு போகும்” என்று சொல்லிக் கொண்டே இருந்தார். அவர் உரைத்த தீர்க்கதரிசனங்கள்…
10 என் முகத்தை இந்த நகரத்துக்கு விரோதமாய் நன்மைக்கு அல்ல, தீமைக்கே வைத்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அது பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படும்; அவன் அக்கினியால் அதைச் சுட்டெரிப்பான் என்று சொல் என்றார்.
எரேமியா 21:10
9 இதோ, நான் வடக்கேயிருக்கிற சகல வம்சங்களையும், என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவையும் அழைத்தனுப்பி, அவர்களை இந்தத் தேசத்துக்கு விரோதமாகவும், இதின் குடிகளுக்கு விரோதமாகவும், சுற்றிலுமிருக்கிற இந்த எல்லா ஜாதிகளுக்கும் விரோதமாகவும் வரப்பண்ணி, அவைகளைச் சங்காரத்துக்கு ஒப்புக்கொடுத்து, அவைகளைப் பாழாகவும் இகழ்ச்சிக்குறியாகிய ஈசல்போடுதலாகவும், நித்திய வனாந்தரங்களாகவும் செய்வேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்
11 இந்தத் தேசமெல்லாம் வனாந்தரமும் பாழுமாகும்; இந்த ஜாதிகளோ, எழுபது வருஷமாகப் பாபிலோன் ராஜாவைச் சேவிப்பார்கள்.
12 எழுபது வருஷம் நிறைவேறினபின்பு, நான் பாபிலோன் ராஜாவினிடத்திலும், அந்த ஜாதியினிடத்திலும், கல்தேயருடைய தேசத்தினிடத்திலும், அவர்களுடைய அக்கிரமத்தை விசாரித்து, அதை நித்தியபாழிடமாக்கி,
எரேமியா 25:12
10 பாபிலோனிலே எழுபதுவருஷம் நிறைவேறினபின்பு நான் உங்களைச் சந்தித்து, உங்களை இவ்விடத்துக்குத் திரும்பிவரப்பண்ணும்படிக்கு உங்கள்மேல் என் நல்வார்த்தையை நிறைவேறப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 29:10
மேற்கண்ட வசனங்களை வாசிக்கும்போது நமக்குப் புரியும், யூதர்கள் 70 வருடங்கள் சிறைப்பட்டு போவார்கள் என்றும், மீண்டும் அவர்கள் தேசத்துக்கு அவர்கள் திரும்புவார்கள் என்றும், பாபிலோனை நித்திய பாழிடமாக்குவார் என்றும் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டதை அறியலாம்.
எரேமியா 24ம் அதிகாரத்தை தியானித்தால், நல்ல அத்தி பழங்களும், புசிக்க தகாத கெட்ட அத்திப்பழங்களும் இருந்தன. கர்த்தர் என்ன சொல்கிறார் என்றால், நல்ல அத்திப்பழங்கள் பாபிலோனுக்கு சிறைப்பட்டு போனவர்கள், அவர்கள் திரும்ப வருவார்கள் என்றும், கெட்டுப்போன அத்திப்பழங்கள், தேசத்தில் மீதியாக பாபிலோன் ராஜா விட்டுப் போனவர்கள், அவர்கள் எல்லா ராஜ்ஜியங்களிலும் சிதறடிக்கப்படுவார்கள், அவர்கள் சாபமாக வசை சொல்லாக இருப்பார்கள் என்று கர்த்தர் கூறினார். எரேமியா 24 ஆம் அதிகாரத்தை பொறுமையாக வாசித்து பார்த்தால் புரியும். இந்த தீர்க்கதரிசனம் அப்படியே நிறைவேறியது.
பாபிலோனியர்களுக்கு இன்னொரு பெயர் தான் கல்தேயர். பாபிலோனியருக்கு, யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா ராஜாவாக இருக்கும் போது, தேவாலயத்தின் சகல பொக்கிஷங்களையும் திறந்து காண்பித்தார் எசேக்கியா. அதுவே அவர்களுக்கு கண்ணியாயிற்று. நேபுகாத்நேச்சார், யூதாவை முற்றிகை போட்டு, மூன்று தவணையாக சிறைப்பிடித்து சென்றார். தேவாலயம் முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்டிருப்பதை அறிந்திருந்த நேபுகாத்நேச்சார், தேவாலயத்தை முழுவதுமாக அழித்துசென்று விட்டார்.
இந்த பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், அவர் பாபிலோனில் இருக்கும் போது, எரேமியா தீர்க்கதரிசியை பற்றி முன்னமே கேள்விப்பட்டிருந்தார். எரேமியா தீர்க்கதரிசி, “நேபுகாத்நேச்சார் வந்து முற்றுகை போட்டு, நகரத்தை அழிப்பான்” என்று தீர்க்கதரிசனம் உரைப்பதாக கேள்விப்பட்டிருந்தான். எனவே எரேமியா மீது நேபுகாத்நேச்சாருக்கு ஒரு மதிப்பு இருந்தது.
மூன்று படையெடுப்புகள்
1. முதன்முதலாக பாபிலோனிய பாதிப்பு யூதா தேசத்திற்கு வந்தது கிமு609. நேபுகாத்நேச்சார் தன் சேனையின் ஒரு பகுதியை அனுப்பி, யூதாவில் உள்ள வாலிபர்களை மட்டும் பிடித்துப் போனார். அதில் தான் தானியேல், மிஷாவேல், அனனியா, அசரியா என்ற நால்வரும் பிடிக்கப்பட்டு போனார்கள். எதற்காக அவர்களை பிடித்துப் போனார்? மூன்று வருடங்கள் அவர்களுக்கு பாபிலோனிய மொழி, பாபிலோனிய கலாச்சாரம், பாபிலோனிய பழக்கவழக்கங்கள் கற்றுக் கொடுத்து, அரசாங்க உத்தியோகம் கொடுப்பதற்கு. யூதர்கள் இயல்பாகவே நல்ல ஞானிகள். எனவே அவர்களில் சிறந்த வாலிபர்களை பாபிலோன் ராஜா பிடித்துப் போனார்.
2. இரண்டாவதாக தானியேலும் அவன் நண்பர்களும் நல்ல ஒரு நிலைக்கு வந்த பின்பு, அதாவது அரசாங்க வேலையில் ஓரளவு செட்டில் ஆன பின்பு, “நாங்கள் யூதர்கள் அல்லவா! எங்கள் கடவுளுக்கு ஆராதனை செய்ய மத சம்பந்தமான வேலை செய்ய ஆசாரியர்களை இங்கு அழைத்துக் கொண்டு வாருங்கள்” என்று ராஜாவிடம் ஒரு விண்ணப்பம் செய்தார்கள். அதனால் கிமு 597ல் ஆசாரியர்கள் சிலர் சிறைபிடிக்கப்பட்டு போனார்கள். அப்படி சிறைப்பட்டு சென்றதில் ஒரு ஆசாரியர் தான் எசேக்கியேல்.
3. மூன்றாவதாக கிமு 586 இல், யூதேயாவின் ராஜாவாகிய சிதேக்கியா ராஜா பாபிலோன் ராஜாவை ஏமாற்றியதால், எருசலேமை அழித்து, தேவாலயத்தை எரித்து, தேவாலயத்தின் பணி மூட்டுகளை எல்லாம் எடுத்து, மக்களை சிறை பிடித்து சென்றார் பாபிலோன் ராஜா. சாலமோன் ராஜா, தேவாலயம் கட்டும்போது, முழுவதும் பொன்னால் (தங்கத்தால்) கட்டியிருப்பார். தேவாலயத்தின் எல்லா பொருள்களும் பொன்னால் செய்யப்பட்டவை. எனவே தேவாலயத்தை முழுவதும் எரித்து, பொன்னை உருக்கி கொண்டு சென்றார்கள் பாபிலோனியர்கள்.
எரேமியா
நேபுகாத்நேச்சார் ஏற்கனவே எரேமியாவைப் பற்றி கேள்விப்பட்டதால், (நேபுகாத்நேச்சார் எருசலேமை சிறைப்படுத்துவார் என்ற தரிசனத்தைப் பற்றி) அவர் மூன்றாவது முறையாக எருசலேமை அழிக்க வரும்போது, எரேமியாவுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்து இருப்பார். தன்னுடைய படை வீரர்களை முதலாக எரேமியாவை தேடி அனுப்பி, ‘நீங்கள் உங்கள் தேசத்திலேயே இருக்க வேண்டுமானாலும் இருக்கலாம், அல்லது என் தேசத்தில் வந்து ராஜ மரியாதையுடன் இருக்கலாம்’ என்று ஆஃபர் கொடுத்திருப்பார். எரேமியா தீர்க்கதரிசி, தன் தேசத்திலேயே இருப்பதாக அந்த படைவீரர்களிடம் கூறியிருப்பார். எனவே எரேமியாவுடன், நோய்வாய்ப்பட்டவர்கள், வயது சென்றவர்கள் என்று சிலரை அந்த தேசத்திலேயே விட்டு, அவர்களுக்கு ஒரு ஆளுநரையும் நியமித்துச் சென்றார் நேபுகாத்நேச்சார். எரேமியா 39,40,41 அதிகாரங்களில் இச்சம்பவம் விளக்கமாக எழுதப்பட்டிருக்கிறது.
11 ஆனாலும் எரேமியாவைக் குறித்து, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதானை நோக்கி
12 நீ அவனை அழைப்பித்து, அவனுக்கு ஒரு பொல்லாப்பும் செய்யாமல், அவனைப்பத்திரமாய்ப் பார்த்து, அவன் உன்னோடே சொல்லுகிறபடியெல்லாம் அவனை நடத்தென்று கட்டளைகொடுத்தான்.
எரேமியா 39:12
4 இப்போதும், இதோ, உன் கைகளிலிடப்பட்ட விலங்குகளை இன்று நீக்கிப்போட்டேன், என்னோடேகூடப் பாபிலோனுக்கு வர உனக்கு நன்மையாய்த்தோன்றினால் வா, நான் உன்னைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்வேன், என்னோடேகூடப் பாபிலோனுக்கு வர உனக்கு நன்றாய்த் தோன்றாவிட்டால், இருக்கட்டும்: இதோ, தேசமெல்லாம் உனக்கு முன்பாக இருக்கிறது, எவ்விடத்துக்குப்போக உனக்கு நன்மையும் செவ்வையுமாய்க் காண்கிறதோ அவ்விடத்துக்குப் போ என்றான்.
எரேமியா 40:4
6 அப்படியே எரேமியா மிஸ்பாவுக்கு அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் போய், தேசத்தில் மீதியான ஜனங்களுக்குள் அவனோடே தங்கியிருந்தான்.
எரேமியா 40:6
எரேமியா, அவருரைத்த தீர்க்கதரிசனத்தின்படி, தன் சொந்த யூத ஜனங்கள் அடித்து இழுத்துச் செல்லப்படுவதை, தன் கண்களினாலே பார்த்து அழுகிறார்.
எப்படி இருந்த எருசலேம் இப்படி ஆகிவிட்டதே! என்று கவலைப்பட்டு தான், புலம்பல் புத்தகத்தை எழுதி இருப்பார் எரேமியா. ஆனால் இந்த புலம்பலை, அழகிய இலக்கிய நடையில் எழுதி இருப்பார். அவர் புலம்புவதையே அவ்வளவு கவிதைநயமாக புலம்பி இருப்பார் எரேமியா.
ஆங்கில எழுத்துக்கள் 26 இருப்பது போல, எபிரேய எழுத்துக்கள் மொத்தம் 22. Apple, Ball, Cat, Dog, Elephant, Fan, Goat… இப்படி எழுதி இருந்தால், சிறுபிள்ளைகள் கூட கூறுவார்கள் alphabetical orderல் எழுதப்பட்டிருக்கிறது என்று. அதையே தான், எரேமியாவும் செய்திருப்பார்.
புலம்பலில் மொத்தம் ஐந்து அதிகாரங்கள் இருக்கிறது. அதில் 1,2,4,5 அதிகாரங்களில், சரியாக 22 வசனங்கள் இருக்கும்.
1 வசனம் – எபிரேய முதல் எழுத்தில் தொடங்கி இருக்கும்
2ம் வசனம் – இரண்டாம் எழுத்தில் தொடங்கும்
3ம் வசனம் – மூன்றாம் எழுத்தில் தொடங்கும்
அப்படியே கடைசி வசனமான 22ம் வசனம், எபிரேய மொழியின் கடைசி எழுத்தில் ஆரம்பிக்கும். எபிரேய மொழியில் இதை வாசிக்கும்போது கவிதைநயமாக இருக்கும். புலம்பி எழுதப்பட்ட புலம்பல் புத்தகம், ஒரு கவிதை புத்தகமாக இருப்பது சிறப்பு. புலம்பல் 3ம் அதிகாரத்தில், 66 வசனங்கள் இருக்கும். முதல் 3 வசனங்கள் முதல் எபிரேய எழுத்தில் ஆரம்பிக்கும். 4,5,6 வசனங்கள் இரண்டாம் எபிரேய எழுத்தில் ஆரம்பிக்கும். 7,8,9 வசனங்கள் மூன்றாம் எபிரேய எழுத்தில் ஆரம்பிக்கும். இப்படியே 66 வசனங்களும் 22 எபிரேய மொழியில் alphabetical orderல் இருக்கும்
(இதேபோல, 119ம் சங்கீதம் கூட, இப்படித்தான் இருக்கும். மொத்தம் 176 வசனங்கள் இருக்கும். எட்டு எட்டு வசனமாக பிரித்து வைக்கப்பட்டிருக்கும். (22*8 =176) அதாவது, முதல் எட்டு வசனங்களின் முதல் எழுத்தும், எபிரேய முதல் எழுத்தில் ஆரம்பித்திருக்கும். இரண்டாவது எட்டு வசனங்கள், எபிரேய இரண்டாம் எழுத்தில் ஆரம்பித்திருக்கும். இப்படியே வரிசையாக, கடைசி வரை இருக்கும். நம் தமிழ் வேதத்தில், ஒவ்வொரு எட்டு வசனத்துக்கும் மேலே ஏதோ தலைப்பு கொடுத்திருப்பார்கள் அல்லவா! அதுதான் எபிரேய மொழி. முதல் எட்டு வசனத்துக்கு, ஆலெப் என்று தலைப்பிட்டிருப்பார்கள். ஆலெப் என்பதன் அருகில் ஒரு எழுத்து இருக்கிறதல்லவா! அதுதான் எபிரேய ஆலெப். எபிரேய முதல் எழுத்து. இப்படி எபிரேய 22 எழுத்துகளும், சங்கீதம் 119ல் நாம் கையில் வைத்திருக்கும் வேதத்திலேயே இருக்கிறது. இந்த சங்கீதமும் புலம்பலைப் போல, கவிதைநயத்தில் எழுதப்பட்டிருக்கிறது.)
22 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யூதேயாதேசத்தில் மீதியாக வைத்த ஜனத்தின்மேல், சாப்பானின் குமாரனாகிய அகீக்காமின் மகன் கெதலியாவை அதிகாரியாக வைத்தான்.
24 அப்பொழுது கெதலியா அவர்களுக்கும்; அவர்கள் மனுஷருக்கும் ஆணையிட்டு: நீங்கள் கல்தேயரைச் சேவிக்கப் பயப்படவேண்டாம்; தேசத்திலிருந்து பாபிலோன் ராஜாவைச் சேவியுங்கள்; அப்பொழுது உங்களுக்கு நன்மை உண்டாகும் என்றான்.
25 ஏழாம் மாதத்திலே, ராஜவம்சத்திலே பிறந்த எலிசாமாவின் குமாரனாகிய நெத்தனியாவின் குமாரன் இஸ்மவேல் பத்து மனுஷரோடேகூட வந்து, கெதலியாவையும், அவனோடே மிஸ்பாவிலிருந்த யூதரையும், கல்தேயரையும் வெட்டிக் கொன்றுபோட்டான்.
26 அப்பொழுது சிறியோரும் பெரியோருமாகிய ஜனங்கள் யாவரும் சேனாபதிகளும் கல்தேருக்குப் பயந்ததினாலே எழுந்து; புறப்பட்டு எகிப்திற்குப் போனார்கள்.
2 இராஜாக்கள் 25:26
பாபிலோன் ராஜா, சிலரை எருசலேமில் விட்டு விட்டு, அவர்களுக்கு ஒரு ஆளுநரை நியமித்துச் சென்றார். ஆனால் இஸ்மவேல் எனும் யூதன், அந்த ஆளுநரைக் கொன்று விடுகிறான். இது தெரிந்தால், நேபுகாத்நேச்சார் மீந்தவர்களைக் கொன்று விடுவான் என்று, எரேமியா தீர்க்கதரிசி, அனைவரையும் கூட்டிக்கொண்டு, எகிப்திலுள்ள அலெக்சாந்திரியா பட்டணத்துக்கு போய் விடுகிறார். யூதர்கள் என்பது, யூதா பென்யமீன் எனும் இரண்டு கோத்திரங்கள் என்பது நாம் அறிந்ததே. அந்த அலெக்சந்திரியா பட்டணத்தில் இருந்த பென்யமீன் சந்ததியில் வந்தவர் தான், பவுலாக மாறிய சவுல்.
ஏசாயா
ஏசாயா தீர்க்கதரிசி மூலமாக, ஆண்டவர் ஏற்கனவே வெளிப்படுத்தி இருப்பதை கீழ்க்கண்ட வசனத்தில் காணலாம்.எசேக்கியா ராஜா தன் அனைத்து பொக்கிஷங்களையும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்குத் திறந்து காட்டியிருப்பார். அப்போது ஏசாயா தீர்க்கதரிசி மூலமாக, எசேக்கியா ராஜாவுக்கு கிடைத்த வார்த்தை இது.
6 இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது வீட்டில் உள்ளதிலும் உன் பிதாக்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாய் வைக்கப்படாமல் எல்லா பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும்.
7 நீ பெறப்போகிற உன் சந்ததியாகிய உன் குமாரரிலும் சிலர் பாபிலோன் அரமனை வேலைக்காரராயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
ஏசாயா 39:7
இந்த வசனத்தின் படி, தானியேல் ராஜகுமாரனாக இருந்திருப்பார் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
3 அப்பொழுது இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே ராஜகுலத்தார்களிலும் துரைமக்களிலும் யாதொரு மாசும் இல்லாதவர்களும், அழகானவர்களும், சகல ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் நிபுணரும், ராஜாவின் அரமனையிலே சேவிக்கத் திறமையுள்ளவர்களுமாகிய சில வாலிபரை கொண்டுவரவும்,
4 அவர்களுக்குக் கல்தேயரின் எழுத்தையும் பாஷையையும் கற்றுக்கொடுக்கவும் ராஜா தன் பிரதானிகளின் தலைவனாகிய அஸ்பேனாசுக்குக் கற்பித்தான்.
6 அவர்களுக்குள் யூதா புத்திரராகிய தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள் இருந்தார்கள்.
7 பிரதானிகளின் தலைவன், தானியேலுக்கு பெல்தெஷாத்சார் என்றும், அனனியாவுக்கு சாத்ராக் என்றும், மீஷாவேலுக்கு மேஷாக் என்றும், அசரியாவுக்கு ஆபேத்நேகோ என்றும் மறுபெயரிட்டான்.
தானியேல் 1:7
பொதுவாக யூதப்பிள்ளைகளின் பெயர்கள் யா அல்லது யேலில் முடிந்திருக்கும். யா என்பது யாவே என்று பரிசுத்த தேவனின் நாமத்தைக் குறிக்கிறது. யேல் என்பது, ஏல் என்று தேவனின் நாமத்தைக் குறிக்கிறது. இந்த பாபிலோனியர்கள் முதலாவது மாற்றியது அவர்கள் பெயரைத்தான்.
தானியேல் என்னும் “கர்த்தருடைய நீதி” என்னும் அர்த்தமுள்ள பெயரை, பெல்தெஷாத்சார் என்று மாற்றினார்கள். பெல்திஸ் என்பது பாபிலோனிய தெய்வம், ஷாத்சார் என்றால் பாதுகாப்பு. கர்த்தருடைய நீதி என்னும் பெயரை, பெல்திஸ் தெய்வத்தின் பாதுகாப்பு என்று மாற்றிவிட்டார்கள்.
அனனியா என்றால், “கர்த்தர் கிருபையுள்ளவர்” என்று அர்த்தம். அதை, ஷாத்ராக், என்று மாற்றினார்கள். ஷாத்ராக் என்றால், சந்திர தெய்வத்தின் கட்டளை என்று அர்த்தம்.
மிஷாவேல் என்றால், “தேவனுக்கு ஒப்பானவன் யார்?” அவனுக்கு மேஷாக் அதாவது, சந்திர தெய்வத்துக்கு ஒப்பானவர் யார்? என்று மாற்றிவிட்டார்கள்.
அசரியா என்றால், “கர்த்தர் உதவி செய்கிறார்” என்று அர்த்தம். அவனுக்கு, ஆபேத்நேகோ, அதாவது கல்வியின் கடவுளாகிய நேபோ தெய்வத்தின் அடிமை என்று மாற்றி விட்டார்கள்.
நாம், நம் பிள்ளைகளுக்கு வேதத்தில் தேடித்தேடி பெயர் வைப்போம். பல பெண்களின் பெயர் எஸ்தர் என்றிருக்கும். ஆனால் எஸ்தர் என்பது, அவளுடைய யூத பெயர் அல்ல. இஷ்தார் என்ற பாபிலோனிய தெய்வம் தான் எஸ்தர். எஸ்தரின் யூத பெயர் Hadassah (அத்சாள்).
எஸ்தர் 2:7 அவன் தன் சிறிய தகப்பன் குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் அத்சாளை வளர்த்தான்; அவளுக்குத் தாய்தகப்பனில்லை; அந்தப் பெண் ரூபவதியும் சௌந்தரியமுடையவளுமாயிருந்தாள்; அவள் தகப்பனும் அவள் தாயும் மரணமடைந்தபோது, மொர்தெகாய் அவளைத் தன் குமாரத்தியாக எடுத்துக்கொண்டான்.
Thiru Viviliam மொர்தக்காய் ‘அதசா’ என்னும் மறுபெயர் கொண்ட எஸ்தர் என்பவரை எடுத்து வளர்த்தார். அவர் அவருடைய சிற்றப்பன் மகள்; தாய் தந்தையை இழந்தவர்; எழில்மிகு தோற்றமும் வடிவழகும் கொண்ட இளம் பெண்
வேதத்தைப் பார்த்து பெயர் வைப்பதால் மட்டும், எதுவும் நடந்துவிடாது. பெயரில் எதுவுமே இல்லை. மற்றொரு எடுத்துக்காட்டு, நமக்கு நன்றாகத் தெரிந்த வசனம்
6 நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார்.
1 கொரிந்தியர் 3- 6
இவ்வசனத்தைப் பார்த்து, அப்பொல்லோ என்று அனேகர் பெயர் வைத்திருக்கலாம். ஆனால் உண்மையில் அப்பொல்லோ என்பது கிரேக்க கடவுள். எனவே வெளிப்புற பெயரில் எதுவுமில்லை. மனதில் இரட்சகரை ஏற்றுக் கொண்டு, அவருக்காக வாழ்வதே உண்மையான வாழ்வு.
இந்த ஏசாயா தீர்க்கதரிசி, யூத நாட்டில்(2 கோத்திரம்) இருந்தவர். அவரது நாட்களில் தான், இஸ்ரேல் தேசம் (10 கோத்திரம்) அசீரியாவுக்கு சிறைப்பட்டு போனது. அதைக் கண்ணாரக் கண்டவர் ஏசாயா தீர்க்கதரிசி. அவர் யூத நாட்டு மக்களுக்கு தீர்க்கதரிசனம் உரைக்கிறார், ‘நீங்கள் பாபிலோனுக்கு சிறைப்பட்டு போவீர்கள், கோரேஸ் காலத்தில் திரும்ப வருவீர்கள்’ என்று. ஏசாயா வாழ்ந்த காலம் கிமு 700கள். யூதர்கள் சிறைப்பட்டு சென்றது, கிமு 500கள். கோரேஸ் ராஜா பிறப்பதற்கு முன்பே, அவரது பெயரைச் சொல்லி தீர்க்கதரிசனம் உரைத்தவர் ஏசாயா.
28 கோரேசைக் குறித்து: அவன் என் மேய்ப்பன்; அவன் எருசலேமை நோக்கி நீ கட்டப்படு என்றும்; தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்றும் சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் என்று சொல்லுகிறவர் நான்.
ஏசாயா 44:28
கோரேஸ் காலத்தில் ஆலயம் கட்டப்படும் என்று கோரேஸ் பிறப்பதற்கு 200 வருடங்களுக்கு முன், ஏசாயா உரைத்த தரிசனம் நிறைவேறியது. ஒரு பிரச்சனை ஆரம்பிப்பதற்கு முன்பதாகவே, அதன் தீர்வும், நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய கரத்தில் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கோரேஸ் எப்படி ஆட்சியைப் பிடித்தார் என்பதை இப்பதிவில் கடைசியில் காணலாம்.
தானியேல்
தானியேல் சில தரிசனங்களைக் காண்கிறார். அவையெல்லாம் நிறைவேறி விட்டது. இதைப்பற்றி பின்னர் பார்க்கலாம். ஆனால் தானியேலுக்கு ஆண்டவர் சில காரியங்களை வெளிப்படுத்துகிறார். ஆனால் அதை முத்திரை போட்டு வைத்து விட்டார். ஏனெனில் அவர் காலத்துக்கு அவை தேவையில்லை.
4 தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப்புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்குமங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம் என்றான்.
8 நான் எதைக் கேட்டும், அதின்பொருளை அறியவில்லை; ஆகையால்: என் ஆண்டவனே, இவைகளின் முடிவு என்னமாயிருக்கும் என்று கேட்டேன்.
9 அதற்கு அவன் தானியேலே, போகலாம்; இந்த வார்த்தைகள் முடிவுகாலமட்டும் புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்திரிக்கப்பட்டும் இருக்கும்.
தானியேல் 12:9
ஆண்டவர் இந்த முத்திரையை உடைத்து விட்டார். எப்பொழுது தெரியுமா?
1 அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்திலே கண்டேன்.
3 வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின் கீழாவது, ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறக்கவும், அதைப் பார்க்கவும் கூடாதிருந்தது.
4 ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறந்து வாசிக்கவும் அதைப் பார்க்கவும் பாத்திரவானாகக் காணப்படாததினால் நான் மிகவும் அழுதேன்.
5 அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.
வெளிப்படுத்தின விசேஷம் 5:5
அந்த முத்திரிக்கப்பட்ட புத்தகத்தைப் பார்த்து, யோவான் அழுகிறார், அதைத் திறக்க முடியவில்லையே என்று. இயேசு மரித்து உயிர்த்தெழுந்து, ஜெயங் கொண்டதினால், அந்த முத்திரையை உடைக்க அதிகாரம் பெற்றார். அந்த புத்தகத்தில் உள்ளது தான் வெளிப்படுத்தின விசேஷம். ஆண்டவர் நம் காலம், நமக்கும் பின்வரும் காலங்களில் என்ன நடக்கப் போகிறது என்பதை தானியேல் தீர்க்கதரிசிக்கு ஏற்கனவே உரைத்து விட்டார்.
இந்த தானியேல் புத்தகத்தில் உலக சரித்திரம் அப்படியே சொல்லப்பட்டிருக்கும். பாபிலோன் எப்படி மேதியப் பெர்சியரால் தாக்கப்படும்? மேதிய பெர்சியா எப்படி கிரேக்கர்களால் தாக்கப்படுவார்கள்? கிரேக்கர்களை அடித்து எப்படி ரோமர்கள் பிடிப்பார்கள்? அந்த ரோமர்கள் ஆட்சி செய்யும் காலத்தில், எப்படி மேசியா வந்து, தேவ ராஜ்யத்தை நிலை நாட்டுவார்? இப்படி உலக காரியங்கள் அந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும்.
பாபிலோனில் வைத்து எழுதப்பட்ட தீர்க்கதரிசன புத்தகம் தானியேல். தானியேல் தீர்க்கதரிசி, எரேமியாவின் தீர்க்கதரிசனத்தைக் கணித்து, ‘70 வருடங்களில் திரும்பி விடுவோம் என்று சொல்லி இருக்கிறாரே! இன்னமும் அடிமையாகவே இருக்கிறோமே’ என்று சொல்லி, 21 நாட்கள் உபவாசம் இருந்து ஜெபிக்கிறார். அப்போது தான் உலகத்தின் முடிவு வரை, ஆண்டவர் அவருக்கு வெளிப்படுத்துகிறார். தானியேல் தீர்க்கதரிசி, நல்ல அரசாங்க பதவியில் இருந்தாலும், பாபிலோன் சாம்ராஜ்யம் முடிந்தபின் மேதிய சாம்ராஜ்யத்தில், மேதிய அரசன் தரியுவுக்கு பிரியமானவனாக இருந்தாலும், அவர் இதயம் தன் சொந்த தேசம் யூதேயா நோக்கியே இருந்தது. அதையேதான், யூதர்கள் இப்போது இரண்டாயிரம் வருடங்களாக செய்தனர். யூதன் என்றாலே, அவன் தேசம் தான் அவனுக்கு மூச்சு.
எசேக்கியேல்
எசேக்கியேல் ஒரு ஆசாரியர். கிமு 609ல் தானியேல் போன்ற வாலிபர்கள் கேட்டதற்காக, எருசலேமில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் இந்தக் குழு. எசேக்கியேல் யூதர்களை, தான் தங்கியிருந்த வீட்டுக்கு வரவழைத்து, நியாயப்பிரமாணம் கற்றுக்கொடுத்தார். எருசலேமில் தேவாலயம் இருக்கும் போது, சகல ஜனங்களும் அங்கு சென்று பலியிட்டு, தேவனை வழிபடுவர். ஆனால் சபை கூடி ஆராதிக்கும் முறையை, முதன்முதலாக ஆரம்பித்தவர் எசேக்கியேல், அதுவும் கல்தேயரின் தேசமாகிய பாபிலோனில் ஆரம்பித்தார்.
எசேக்கியேல் புத்தகத்தை வாசித்துப் பார்த்தால், இந்த வருடம், இந்த நாள், நான் என் வீட்டிலிருக்கும்போது, மூப்பர்கள் வந்து அமர்ந்தார்கள் என்பது போன்ற வசனங்கள், இந்தக் கூடுகையைத் தான் குறிக்கிறது. இந்தக் கூடுகையில், யூதர்கள் ஒன்றுகூடி, சில சங்கீதங்கள் பாடி, நியாயப்பிரமாணத்தைக் கற்றுக்கொள்வர். இஸ்ரேல் எனும் நாடே இல்லாதபோது, யூதர்கள் எப்படி தங்கள் மதத்தை மறக்காமலும், பிற இனங்களுடன் கலக்காமலும் இருந்தர் என்பதற்கு இது ஒரு உதாரணம். அவர்கள் மற்றவர் பார்வைக்கு இனவெறி பிடித்தவர்களாகத் தான் தெரிவர். ஆனால் அவர்கள் தேவன் மீது, அவர்களுக்கு இருக்கிற வைராக்கியம், வேறு யாருக்கும் இருக்காது.
எசேக்கியேல் பாபிலோனிலிருந்து இரண்டு விதமான தீர்க்கதரிசனம் உரைக்கிறார்.
1. பாபிலோனில் அடிமையாக இருக்கும் யூதர்களே, கர்த்தர் திரும்ப யூதாவுக்கே உங்களை அழைத்துச் செல்வார். யூதாவில் கொண்டு போய் உங்களை மகிமைப்படுத்துவார் என்று கூறினார்.
2. கடைசி நாட்களில் சபை எடுத்துக் கொள்ளப்பட்டவுடன், ஏழு வருடம் உபத்திரவ காலம், மகா உபத்திரவ காலம். அதில் யூதர்களுக்கு என்ன நடக்கும் என்று கூறுகிறார்.
எசேக்கியேல் தீர்க்கதரிசனத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது, எசேக்கியேல் 37ம் அதிகாரம் தான். உலர்ந்த எலும்புகள் உயிர் பெறுவது பற்றி கூறப்பட்டுள்ளது. திரளான எலும்புகள், உலர்ந்து போய், கை தனியே, கால் தனியே கிடக்கும் போது, “இந்த எலும்புகள் உயிரடையுமா?” என்று ஆண்டவர் கேட்கிறார். “அடையும்” என்று கூறினால், “உயிரடையச் செய்” என்று கூறுவார், “இப்படி தனித்தனியே கிடக்கிற லட்சக்கணக்கான எலும்புகள் எப்படி உயிரடையும்” என்று கேட்டால், “உனக்கு விசுவாசம் இல்லையா?” என்று கேட்பார். எனவே எசேக்கியேல், “அது உமக்கே தெரியும்” என்று பதில் கூறிவிட்டார். ஆண்டவரிடம் பேசும்போது எவ்வளவு கவனமாக பேச வேண்டும் என்பதை அறிந்து வைத்திருந்தவர் எசேக்கியேல்.
3 அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இந்த எலும்புகள் உயிரடையுமா என்று கேட்டார்; அதற்கு நான்: கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் அதை அறிவீர் என்றேன்.
எசேக்கியேல் 37:3
அந்த எலும்புகள் உயிரடைந்து, மகா பெரிய சேனைகளாய் நின்றார்கள். இப்படித்தான் என் ஜனங்களும். அவர்களுக்கு சொல்லிக்கொள்ள ஒரு நாடு கூட இல்லாமல் இருந்தாலும், அவர்கள் அனைவரும் எங்கெங்கோ தேசங்களில் இருந்தாலும், அவர்கள் அனைவரையும் கூட்டி, ஒரே தேசமாக வைப்பேன். இஸ்ரேல் எனும் ஒரு தேசத்திலேயே, இஸ்ரேல், யூதா இரண்டு நாடுகளையும் சேர்த்து வைப்பேன் என்று ஆண்டவர் எசேக்கியேலுக்கு வாக்கு கொடுத்தவர், கிபி1948ல் நிறைவேற்றினார். ‘இஸ்ரேலுக்கு, தாவீது என்பவர் அதிகாரியாக இருப்பார்’ என்று, வேத தாவீதை பற்றி தீர்க்கதரிசனம் உரைத்தாலும், இஸ்ரேல் தேசம் உருவாகி, முதல் பிரதமரானவர் டேவிட் கேமரூன்.
எசேக்கியேல் உரைத்த தீர்க்கதரிசனங்கள் நம் காலத்தில் நிறைவேறிக் கொண்டிருக்கிறது.
21 நீ அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, நான் இஸ்ரவேல் வம்சத்தாரை அவர்கள் போயிருக்கும் ஜாதிகளிடத்திலிருந்து அழைத்து, சுற்றிலுமிருந்து அவர்களைச் சேர்த்து, அவர்களை அவர்கள் சுயதேசத்திலே வரப்பண்ணி,
22 அவர்களை இஸ்ரவேலின் மலைகளாகிய தேசத்திலே ஒரே ஜாதியாக்குவேன்; ஒரே ராஜா அவர்கள் எல்லாருக்கும் ராஜாவாக இருப்பார்; அவர் இனி இரண்டு ஜாதிகளாக இருப்பதில்லை: அவர்கள் இனி இரண்டு ராஜ்யங்களாகப் பிரிவதுமில்லை.
24 என் தாசனாகிய தாவீது என்பவர் அவர்கள்மேல் ராஜாவாக இருப்பார்;
எசேக்கியேல் 37:24
எசேக்கியேல் உரைத்த தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியது. இந்த எசேக்கியேல் உரைத்த இடம் பாபிலோன். பாபிலோனில் அடிமையாக இருக்கும் போது, அவருரைத்த தரிசனங்கள் இவை.
மொழி
பாபிலோனியர்களை கல்தேயர் என்று அழைப்பது வழக்கம். இந்த கல்தேயர்களின் பூர்வ மொழி அக்காத்(Akkadian) என்பதாகும். பிற்பாடு கொஞ்ச காலத்தில், அரமேயிக் மொழி பேச ஆரம்பித்தனர். தானியேல் காலத்தில் கற்றுக்கொடுத்த மொழி அரெமேயு தான். யூதர்களின் பூர்வீக மொழி எபிரேயுவாய் இருந்தாலும், பாபிலோனில் அடிமைகளாய் இருந்த காலம் தொட்டு, அரமேயுவை முக்கிய மொழியாக வைத்துக் கொண்டனர். இயேசு கிறிஸ்துவும் அரமிக் மொழியில் தான் அதிகம் பேசினார்.
பாபிலோனின் வீழ்ச்சி
பொதுவாக பாபிலோன் ராஜாக்கள், நகரம் கட்டுவதில் ஆர்வம் உள்ளவர்கள். சுவர்களை அலங்காரம் செய்வதில் அவர்களுக்கு அவ்வளவு ஆர்வம். நேபுகாத் நேச்சார் கூட, பாபிலோனை இன்னும் மேம்படுத்தி, அதைப் பார்த்து, “நான் கட்டிய மகாபாபிலோன் அல்லவா!” என்று கூறுகிறார்.
வேதத்தில் வாசிக்கலாம்
10 ஏனெனில், தேவன் தாமே கட்டி உணடாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான்.
15 தாங்கள் விட்டுவந்த தேசத்தை நினைத்தார்களானால், அதற்குத் திரும்பிப்போவதற்கு அவர்களுக்குச் சமயங்கிடைத்திருக்குமே.
16 அதையல்ல, அதிலும் மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்; ஆகையால் தேவன் அவர்களுடைய தேவனென்னப்பட வெட்கப்படுகிறதில்லை; அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே.
எபிரேயர் 11:16
ஆதிமுதல், தேவன் கட்டிய நகரத்துக்காக காத்திருக்கும் ஒரு கூட்ட ஜனங்கள் இருக்கிறார்கள். எபிரேயர் 11ம் அதிகாரத்தைப் பார்த்தால், ஆபேலிலிருந்து வரிசையாக பெயர்கள் அடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் எல்லாரும் அந்த நகரத்துக்கு காத்திருக்கிறார்கள். நம் இரட்சகர் இயேசு கிறிஸ்து கூட,
2 என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.
யோவான் 14 -2
என்று கூறியிருக்கிறார். இதுதான் தேவ திட்டம். இதை தடுப்பதற்காகவே, பிசாசானவன், நகரம் கட்டும்படி பூமியில் மனிதர்களை ஏவிவிடுகிறான்.
நேபுகாத்நேச்சாரும் பாபிலோனை கட்டி, பெருமையாக பேசுகிறார்.
30 இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான்.
தானியேல் 4:30
தன் மகிமைக்காக என்று அவர் பேசும்போது, அவர் வாயிலிருந்து வார்த்தை வெளிவரும்போதே, கர்த்தர் தண்டனை கொடுத்தார்.
31 இந்த வார்த்ததை ராஜாவின் வாயில் இருக்கும்போதே வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ராஜ்யபாரம் உன்னைவிட்டு நீங்கிற்று.
32 மனுஷரினின்று தள்ளப்படுவாய்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பாய்; மாடுகளைப்போல் புல்லை மேய்வாய்; இப்படியே உன்னதமாவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உன்மேல் கடந்துபோகும் என்று உனக்குச் சொல்லப்படுகிறது எனύறு விளம்பினது.
33 அந்நேரமே இந்த வார்த்தை நேபுகாத்நேச்சாரிடத்தில் நிறைவேறிற்று; அவன் மனுஷரினின்று தள்ளப்பட்டு, மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தான்; அவனுடைய தலைமயிர் கழுகுகளுடைய இறகுகளைப்போலவும் அவனுடைய நகங்கள் பட்சிகளுடைய நகங்களைப்போலவும் வளருமட்டும் அவன் சரீரம் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது.
தானியேல் 4:33
மனநல நோயாளி பிரச்சனையில், இது ஒரு வகையான மனநல நோய். இதை Boanthropy என்று குறிப்பிடுவர். இந்த மனநோயில் அந்த நோயாளி தன்னை ஒரு மாடாகவே நினைத்துக் கொள்வாராம். நேபுகாத்நேச்சார் பாதிக்கப்பட்டதே இந்த நோயில் தான்.
பாபிலோன் மன்னன் நேபுகாத்நேச்சார், மேதிய நாட்டு இளவரசியை திருமணம் செய்திருந்தார். அந்த ராணிக்கு தன் நாட்டைப் போல மலைகள், செடிகள் இல்லை என்று எப்போதும் வருத்தமாகவே இருந்தாராம். எனவே, அந்தக் காலத்தில், 2500 வருடங்களுக்கு முன், எந்த விஞ்ஞான வளர்ச்சியும் இல்லாத காலத்தில், 60அடி உயரத்தில் தொங்கு தோட்டம் ஒன்று அமைத்தார் நேபுகாத்நேச்சார். இப்போது தொல்பொருள் ஆய்வாளர்கள், அங்கிருந்த வேர்களை எல்லாம் ஆராய்ந்த போது, எல்லா நாட்டிலிருந்தும் சிறப்பான செடிகளின் விதைகளை வாங்கி வளர்த்து இருக்கிறார் ராஜா. 60 அடி உயர தோட்டத்துக்கு தண்ணீர் ஊற்ற அவர்கள் செய்திருந்த முறை, 60அடி உயர தோட்டம் என்று கட்டுமானத்தில் அவர்கள் எவ்வளவு பிரபலமாக இருந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
நினிவே, எரிகோவைப் போல, பாபிலோன் மதில்சுவரும் பெரியது. இரண்டு மதில்சுவர்கள். வெளிக்கோட்டை உயரம் 300அடியாம். 2500 வருடத்துக்கு முன், 300அடி உயர கோட்டை. அகலம் 87 அடி. எட்டு பஸ்கள், உரசாமல் ஓட்டலாம். அவ்வளவு அகலம். இவ்வளவு பலத்தவர்கள் பாபிலோனியர்கள். ஆனால் அவர்களை ஆளும் ராஜாக்கள் இருதயம் மேட்டிமையாக இருக்கும். விக்கிரகங்களுக்குப் பெயர் பெற்ற ஊர் பாபிலோன். வேதத்தில் கூட வெளிப்படுத்தின விசேஷத்தில் சகல அருவருப்புக்களுக்கும் வேசித்தனங்களுக்கும் தாய் மகா பாபிலோன் என்று கூறப்பட்டிருக்கும்.
அகழ்வாராய்ச்சியில் மார்த்துக் என்ற தெய்வத்திற்கு 55 கோவில்களும், பேல் என்ற தெய்வத்திற்கு 33 கோவில்களும். நேபோ என்ற தெய்வத்திற்கு 21 கோயில்களும், பூமி தெய்வத்துக்கு 300 கோவில்களும், வான தேவதைக்கு 600 கோவில்களும் இருந்ததாம். இதே போல தெய்வங்களுக்கென்று வழிபாட்டு மேடைகள் நிறைய இருந்ததாம். இஷ்டார் தெய்வத்துக்கு 180 நெர்கஸிக்கு 85 இப்படியே கணக்கு போட்டால் 470 மேடைகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பாபிலோன் நகரத்தின் சுற்றளவே 56 மைல் தான். தடுக்கி விழுந்தால் கோவில்கள் இருக்கும். அவ்வளவு விக்கிரகம் நிறைந்த ஊர்.
பாபிலோனியர்களின் பிரதான தெய்வம் நேபோ மற்றும் பேல். நேபுகாத் நேச்சார் அரசன் பெயரில் நேபோ, அவர் மகன் பெல்ஷாத்சார் பெயரில் பேல்.
பாபிலோனை யாரும் அவ்வளவு எளிதாக நெருங்கி விட முடியாது ஏனெனில் அதன் அரண் அவ்வளவு பாதுகாப்பானது. மூன்று விஷயங்கள் பாபிலோனை பாதுகாத்து வந்தது.
1.ஐபிராத்து நதி
2.இரட்டை மதில் சுவர்
3.மிகப் பெரிய வெண்கல கதவு
பாபிலோனியர்கள் தங்கள் கோட்டையை இரட்டை மதில் சுவராக உருவாக்கியிருந்தார்கள். அதில் பெரிய வெண்கல கதவும் இருந்தது. அவ்வளவு எளிதாக அதை உடைத்து விட்டு யாரும் உள்ளே நுழைய முடியாது. இந்த மதில் சுவரை நெருங்க வேண்டுமானால், அதற்கு முன்பாக அவர்கள் ஒரு பெரிய அகழியை தாண்ட வேண்டும். அதாவது அகழி என்றால் குளம் போன்ற அமைப்பு. பாபிலோனியர்கள் ஐபிராத்து நதியிலிருந்து செயற்கையாக தங்கள் கோட்டையை சுற்றி ஓடுமாறு ஒரு பெரிய அகழியை உருவாக்கினார்கள். அந்த அகழியில் முதலை பாம்பு போன்ற கொடூரமான கடல் வாழ் உயிரினங்களை போட்டு வைத்திருந்தார்கள், அந்த அகழியை தாண்டி யாரும் தங்களை நெருங்கி விடக்கூடாது என்று.
அகழி எனப்படுவது கோட்டை முன் சூழப்பட்டுள்ள நீர் அரணாகும். பண்டைக்காலத்தில் அரசர்கள் தங்கள் நாட்டு மக்களை எதிரிகளிடம் இருந்து காப்பதற்காகக் கோட்டைகளைக் கட்டினர். அக்கோட்டைகளை எதிரிகள் தாண்டி வராமல் இருக்க கோட்டையைச் சுற்றிலும் அகழிகள் அமைத்தனர். இதில் முதலைகள், பாம்புகள் போன்ற கொடிய விலங்குகள் நிறைந்திருக்கும். இதைத் தாண்டி கோட்டைக்குச் செல்வது என்பது மிகவும் அரிய செயலாகும். கோட்டையைச் சுற்றிலும் ஆழமான குழியை வெட்டி இருப்பார்கள். அதில் நீரால் நிரப்புவார்கள். பின்பு அதில் முட்களையும் நச்சுக் கொடிகளையும் வளர்த்து பகைவர் அண்டாவண்ணம் அமைப்பது அகழியாகும்
அவ்வளவு பாதுகாப்பான பாபிலோன் கோட்டையை ஒரே நாளில் கோரேஸ் மன்னன் பிடித்தார். எப்படி?
இரவோடு இரவாக கோரேஸ் மன்னன் அந்த அகழியிலிருந்து வேறு பாதைக்கு தண்ணீரை மாற்றி, அங்கு தண்ணீர் இல்லாத படி செய்தார். பாபிலோனியர்களுக்கு அந்த அகழியின் வழியாக மக்களின் பயன்பாட்டுக்காக ஐபிராத்து நதி தண்ணீர் உள்ளே சென்று கொண்டிருந்தது. ஒரு பொந்து தோண்டி பெருச்சாளி உள்ளே நுழைவது போல, இந்த தண்ணீர் செல்லும் குழாய்களின் வழியாக கோரஸ் மன்னனின் ஆட்கள் கத்தியின்றி ரத்தமின்றி உள்ளே நுழைந்து விட்டார்கள். அவர்களது மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் எதுவென்றால், அன்றைய இரவில் பெல்ஷாத்சார் மன்னன் மிகப்பெரிய விருந்து ஒன்றை ஆயத்தப்படுத்தி, அவனும் அவனைச் சேர்ந்தவர்களும் மதுபானத்தினால் நிறைந்திருந்தார்கள். எருசலேம் தேவாலயத்து பாத்திரங்களை எடுத்து, அதில் மதுபானத்தை ஊற்றி, மன்னன், மன்னனுடைய மனைவிகள், மன்னருடைய வைப்பாட்டிகள் என அனைவரும் அதில் குடித்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். கோரேஸ் மன்னன் படையெடுத்த அதே நாளில், அந்த இடத்துக்குள் தேவாலய பாத்திரங்கள் கறைபட்டதால் ஆண்டவரின் கோபம் அவன் மீது அன்று இரவே வெளிப்பட்டது. சண்டை இல்லாமல் தன் புத்தியை மட்டும் உபயோகித்து உள் நுழைந்த கோரேஸ் மன்னன், பாபிலோனின் ராஜாவாகிய பெல்ஷாத்சாரை வெட்டினான் என்று வரலாற்றில் குறிக்கப்பட்டிருக்கிறது, வேதத்திலும் உள்ளது. பாபிலோனியர்களைத் தோற்கடித்து, மேதிய பெர்சிய ராஜ்யம் அமைக்கப்பட்டது.
மூன்றாம் சாம்ராஜ்யமான மேதிய பெர்சிய சாம்ராஜ்யம் பற்றி அடுத்த பதிவில் தொடர்ச்சியாக பார்க்கலாம்.
Leave a Reply