வேதத்தில் காணப்படும் அனேக தரிசனங்கள் நிறைவேறி விட்டன. நம்மில் ஒரு சிலர் அதைப் பற்றி அறியாமலே வேதம் வாசிக்கலாம். சில காரியங்களை நாம் வரும் பதிவுகளில் படிக்கலாம். பழைய ஏற்பாடு, இஸ்ரவேலருக்காக எழுதப்பட்டதால், இஸ்ரவேலில் அநேக தீர்க்கதரிசனங்கள் நிறைவேறி இருக்கின்றன. இஸ்ரேல்-35 பதிவில், இதுவரை பார்த்த எல்லா ராஜ்யம் பற்றியும் சுருக்கமாக, இவ்வளவு நாட்கள் படித்தை பதிவிட்டேன். அதை படித்தால் இப்பதிவு புரிந்து கொள்ள உபயோகமாக இருக்கும். அதாவது, இஸ்ரேல் எந்தெந்த சாம்ராஜ்யங்களின் கீழ் அடிமைப்பட்டது என பார்த்தோம். அசீரிய சாம்ராஜ்யம், பாபிலோனிய சாம்ராஜ்யம், மேதிய பெர்சிய சாம்ராஜ்யம், கிரேக்க சாம்ராஜ்யம், ரோம சாம்ராஜயம், ஒருங்கிணைந்த ரோம சாம்ராஜ்யம் என பல சாம்ராஜ்யங்களின் கீழ் இஸ்ரவேலர் இருந்தனர். இஸ்ரேல் என்ற தேசம் கிபி 70ல் அழிக்கப்பட்டு, பின்னர் கிபி 1900களில் மீண்டும் உருவாக்கப்பட்டு, 1948ல் சுதந்திர நாடாக உருவானது.

தானியேல் 2ம் அதிகாரம்

தானியேல் 2ம் அதிகாரத்தில் நேபுகாத்நேச்சார் ஒரு கனவு காண்கிறார். அந்த அதிகாரத்தை வாசித்துப் பார்த்தால் புரியும். அவரது கனவை கீழே வாசிக்கலாம்.

இது என்ன தரிசனம்? நிஜமாகவே இப்படி எல்லாம் கனவு காண முடியுமா என்று தான் தோன்றுகிறது அல்லவா! தானியேல் பார்க்கும் தரிசனத்தில், பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, களிமண், ஒரு கல் எல்லாம் பார்க்கிறார். இவை எல்லாம் ஒவ்வொரு ராஜ்யத்தைக் குறிக்கிறது. மேலே உள்ள படத்தில் விவரமாக பார்க்கலாம்.

தானியேல் ராஜாவிடம், நீர் பார்த்த தலை, தங்கம் ஆக இருந்தது உம்முடைய ராஜ்யம். அதாவது பாபிலோனிய சாம்ராஜ்யம். உமக்கு பின், நீர் பார்த்த வெள்ளி, உமக்கு அடுத்து வரும் சாம்ராஜ்யம் என்று கூறி இருப்பார். இதை வெளிப்படுத்தும் போது, தானியேலுக்கே சரியாக விளங்கி இருக்குமா என்பது தெரியாது. ஆனால் இப்பொழுது நம்முடைய காலத்தில் அவை நிறைவேறி முடிந்து விட்டதால், நம்மால், எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

நேபுகாத் நேச்சாரைத் தொடர்ந்து, மூன்று பெரிய சாம்ராஜ்யங்கள் வந்தன. மேதிய பெர்சிய சாம்ராஜ்யம், கிரேக்க சாம்ராஜ்யம், ரோம சாம்ராஜ்யம். அவைகள் நேபுகாத் நேச்சார் கனவில் கண்டதைப் போல, அந்தந்த குணங்களைக் கொண்டிருந்தன. பாபிலோனுக்கு ஏன் தங்கம் கொடுக்கப்பட்டது (தங்க தலை) என்றால், நேபுகாத் நேச்சார் நல்ல ஒரு அதிகாரம், ஆளுகை நிறைந்த ராஜாவாக இருந்தார். அவருக்குப் பிறகு வந்த ராஜ்யங்கள், அவரைக் காட்டிலும் அதிக வருடங்கள் நிலைத்திருந்தாலும், நேபுகாத் நேச்சாரை விட தாழ்ந்தவையாகவே இருந்தன.

முதலில் தங்கமாக இருப்பது, பாபிலோனிய சாம்ராஜ்யம். அது ஒரு முழுமையான சாம்ராஜ்யம். அடுத்து மார்பு மற்றும் புயம் பகுதியில் உள்ள வெள்ளி, மேதிய பெர்சிய சாம்ராஜ்யத்தைக் குறிக்கிறது. அடுத்ததாக உள்ள வெண்கல வயிறு மற்றும் தொடை, கிரேக்க சாம்ராஜ்யத்தைக் குறிக்கிறது. வெண்கலம் என்பது பித்தளை. அது இன்னும் குறைந்த மதிப்புடையது. அலெக்சாண்டர் மகாராஜா தான் இந்த படத்தில் உள்ள ராஜ்யத்தில், அதிக அளவு நாடுகளை அரசாண்டவர். அதாவது உலகையே ஆண்டவர் என்ற பெருமை உடையவர். இரும்பு கால் என்பது கொடுமையான ரோம சாம்ராஜ்யத்தைக் குறிக்கிறது. அதாவது, சிலுவை மரணம் போன்ற கடுமையான தண்டனை கொண்டு வந்த, இராணுவ கொடுங்கோல் ஆட்சி தான் ரோம். பாதி இரும்பு மற்றும் பாதி களிமண் கலந்த பாதம், வர இருக்கும் அந்தி கிறிஸ்து சாம்ராஜ்யத்தைக் குறிக்கிறது.

இந்த தரிசனங்கள் இஸ்ரேலைப் பற்றி மட்டுமே குறிப்பதால், இவை சரியாக இஸ்ரேலுடன் பொருந்துகிறது. ரோம சாம்ராஜ்யத்தைக் கடந்த பின்னர், தரிசனத்தின்படி வரப் போகிற கொடுமையான சாம்ராஜ்யம், அந்தி கிறிஸ்துவின் ஆட்சி.

அந்திக் கிறிஸ்துவின் ஆட்சியில், முதலில் இஸ்ரவேலர்கள் (யூதர்கள்) அவனுடன் இணைந்து இருப்பார்கள். ஆனால் களிமண் இரும்போடு ஒட்டாதது போல அவர்கள் கலந்து இருக்க முடியாது. கடைசியாக இஸ்ரவேலரை கொடுமைப் படுத்த போகும் ராஜ்யம், அந்தி கிறிஸ்துவின் ஆட்சி. ஏனெனில் அவர்களில் அனேகர் இன்னும் இயேசுவை ஏற்றுக் கொள்ளவில்லை.

இங்கே நேபுகாத் நேச்சார் கண்ட தரிசனத்தின்படி, ரோம சாம்ராஜ்யத்துக்கு அடுத்து உடனே அந்திக்கிறிஸ்துவின் ஆட்சி. அதன்பின் ஒரு கல் வந்து எல்லா ராஜ்யத்தையும் அடித்து நொறுக்குகிறது. அவர் தான் (அந்தக்கல்) மூலைக்கல்லாகிய நம் இயேசு. என்றைக்கும் அழியாத ராஜ்யம் என்றால், அது நம் ஆண்டவரின் ஆயிரம் வருட அரசாட்சி. ஆண்டவரின் 1000 வருட அரசாட்சி இந்த பூமியில் நடக்க போகிறது என்னும் விசுவாசத்தோடு நாம் காத்து இருக்கிறோம்.

நாம் உயிரோடு இருந்தால், மறுரூபமாகி அவருடன் செல்வோம். மரித்திருந்தால், உயிர்த்தெழுந்து அவரோடு செல்வோம். இது இஸ்ரவேலருக்கு மட்டும் அல்ல. அவரை ஏற்றுக் கொண்ட நம் எல்லாருக்கும் பொதுவானது. ஒரு நாள் இயேசு ராஜாவாக வரப் போகிறார். அவருடன் நாமும் இணைந்து வந்து ஆட்சி செய்ய போகிறோம். அந்த உலகில், சண்டை இல்லை. வறுமை இல்லை. வியாதி இல்லை. அன்பு மட்டுமே சூழ்ந்த உலகம். என்றைக்கும் அழியாத ராஜ்யம் அவரின் ராஜ்யம்.

சுவாரஸ்யமான விசயம்

தானியேல் இந்த தரிசனத்தை நேபுகாத் நேச்சாருக்கு சொன்ன பின்னர் தான், நேபுகாத் நேச்சார் ராஜா, “அது என்ன தலை மட்டும் நான்? எல்லாமே நானாக மட்டுமே இருக்க வேண்டும்” என்று பெருமையோடு, முழு தங்கத்திலான சிலை செய்து, எல்லாரும் தன்னை பணிந்து கொள்ளும்படி சொன்னது. ஆனால் என்றைக்கும் ராஜ்யபாரம் செய்யப் போகிற நம் ஆண்டவர், நான்காவது நபராக தீச்சூளைக்குள் வந்து, ராஜாவை மண்டியிட செய்தார். அடுத்தடுத்த தரிசன நிறைவேறுதலை வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *