3 அப்பொழுது வெவ்வேறு ரூபமுள்ள நாலு பெரிய மிருகங்கள் சமுத்திரத்திலிருந்து எழும்பின.
4 முந்தினது சிங்கத்தைப்போல இருந்தது; அதற்குக் கழுகின் செட்டைகள் உண்டாயிருந்தது; நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அதின் இறகுகள் பிடுங்கப்பட்டது; அது தரையிலிருந்து எடுக்கப்பட்டு, மனுஷனைப்போல இரண்டு காலின்மேல் நிமிர்ந்து நிற்கும்படி செய்யப்பட்டது; மனுஷ இருதயம் அதற்குக் கொடுக்கப்பட்டது.
5 பின்பு, கரடிக்கு ஒப்பாகிய வேறே இரண்டாம் மிருகத்தைக் கண்டேன்; அது ஒரு பக்கமாய்ச் சாய்ந்துநின்று, தன் வாயின் பற்களுக்குள்ளே மூன்று விலாவெலும்புகளைக் கவ்விக்கொண்டிருந்தது; எழும்பி வெகு மாம்சம் தின்னென்று அதற்குச் சொல்லப்பட்டது.
6 அதின் பின்பு, சிவிங்கியைப்போலிருக்கிற வேறொரு மிருகத்தைக் கண்டேன்; அதின் முதுகின்மேல் பட்சியின்செட்டைகள் நாலு இருந்தது; அந்த மிருகத்துக்கு நாலு தலைகளும் உண்டாயிருந்தது; அதற்கு ஆளுகை அளிக்கப்பட்டது.
7 அதற்குப்பின்பு, இராத்தரிசனங்களில் நாலாம் மிருகத்தைக் கண்டேன்; அது கெடியும் பயங்கரமும் மகா பலத்ததுமாயிருந்தது; அதற்குப் பெரிய இருப்புப்பற்கள் இருந்தது; அது நொறுக்கிப் பட்சித்து, மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப்போட்டது; அது தனக்கு முன்னிருந்த எல்லா மிருகங்களைப்பார்க்கிலும் வேற்றுருவமாயிருந்தது, அதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தது.
8 அந்தக் கொம்புகளை நான் கவனித்திருக்கையில், இதோ, அவைகளுக்கு இடையிலே வேறொரு சின்ன கொம்பு எழும்பிற்று; அதற்கு முன்பாக முந்தினகொம்புகளில் மூன்றுபிடுங்கப்படது; இதோ, அந்தக் கொம்பிலே மனுஷகண்களுக்கு ஒப்பான கண்களும் பெருமையானவகளைப் பேசும் வாயும் இருந்தது.
16 சமீபத்தில் நிற்கிறவர்களில் ஒருவனிடத்தில் நான் போய், இதன் பொருள் எல்லாவற்றையும் எனக்குச் சொல்லும்படி அவனை வேண்டிக்கொண்டேன்; அவன் அந்தக் காரியங்களின் அர்த்தத்தை எனக்கு அறிவித்துச்சொன்னது என்னவென்றால்:
17 அந்த நாலு பெரிய மிருகங்களும் பூமியிலிருந்து எழும்புகிற நாலு ராஜாக்கள்.
18 ஆனாலும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்கள் ராஜரிகத்தைப்பெற்று, என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்வார்கள் என்றான்.
23 அவன் சொன்னது: நாலாம் மிருகம் பூமியிலே உண்டாகும் நாலாம் ராஜ்யமாம்; அது எல்லா ராஜ்யங்களைப்பார்க்கிலும் வேறாயிருந்து, பூமியை எல்லாம் பட்சித்து, அதை மிதித்து, அதை நொறுக்கிப்போடும்.
24 அந்தப் பத்துக்கொம்புகள் என்னவென்றால், அந்த ராஜ்யத்திலே எழும்பும் பத்து ராஜாக்களாம்; அவர்களுக்குப்பின்பு வேறொருவன் எழும்புவான்; அவன் முந்தினவர்களைப்பார்க்கிலும் வேறாயிருந்து, மூன்று ராஜாக்களைத் தாழ்த்திப்போட்டு,
25 உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான்; அவர்கள் ஒருகாலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லுமட்டும் அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.
26 ஆனாலும் நியாயசங்கம் உட்காரும்; அப்பொழுது முடிவுபரியந்தம் அவனைச் சங்கரிக்கும்படியாகவும் அழிக்கும்படியாகவும் அவனுடைய ஆளுகையை நீக்கிப்போடுவார்கள்.
இங்கு மிருகம் என்பது ராஜ்யம் அதாவது ராஜ்யத்தைக் (கவர்மெண்ட்) குறிக்கிறது. முதலில் பார்க்கும் மிருகம் சிங்கம். அது நேபுகாத் நேச்சார் ராஜாவைக் குறிக்கிறது. சிங்கம் என்பது பெருமையானவைகளை பேசும் வாய். நேபுகாத் நேச்சார் பெருமையானவைகளை பேசினார் என்பதை வேதத்தில் இருந்தே அறியலாம். கழுகைப் போல வேட்டையாடியவர், ஆனால் அவரிடம் இருந்து இறகுகள் பிடுங்கப்பட்டது. பின்னர் தாழ்மையான இருதயம் அவருக்கு கொடுக்கப்பட்டது. அதாவது “நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா” என்று சொன்ன போது, அவர் மாட்டைப்போல புல்லை மேய்ந்தார். Boanthropy என்ற நோயால் பாதிக்கப்பட்டார் என்று பாபிலோன் சாம்ராஜ்யத்தில் படித்தோம் அல்லவா, அச்சம்பவத்தைக் குறிக்கிறது.
பாபிலோனிய சாம்ராஜ்யம் பற்றி விரிவாக படிக்க
https://rhematamil.org/israel-babylonian-kingdom
அடுத்த மிருகம் கரடி. கரடி என்பது மேதிய பெர்சிய சாம்ராஜ்யத்தைக் குறிக்கிறது. கரடி என்பது, சிங்கத்தை விட மெதுவாகவும், வலிமையாகவும், மேலும் நசுக்கக்கூடியதாகவும் இருக்கிறது – மேலும் இந்த கரடிக்கு வெற்றியின் மீது கொந்தளிப்பான பசி இருக்கும். (எழுந்திருந்து, நிறைய சதைகளை தின்றுவிடும்!) அப்படித்தான் கோரேஸ் ராஜாவும். மெதுவாக முன்னேறி சென்று, பாபிலோனை யுத்தங்கள் இன்றி, வெளியே இருந்த ஆற்றின் நீரை வேறு இடத்துக்கு மாற்றி விட்டு, பாபிலோனை பிடித்தார் என்று பார்த்தோம்.அந்த தன்மையைக் குறிக்கிறது.
கரடி ஒரு பக்கமாய் சாய்ந்து இருந்தது என்று குறிப்பிடுவது, ஒரு கால் மற்றொரு காலை விட சிறியது என்பதைக் குறிக்கும். அதாவது பெர்சியர்கள், மேதியர்களை விட சிறிய அரசர் என்று காட்டுகிறது. அதனுடைய வாயிலே 3 எலும்புகளை கவ்வி நிற்பது, 3 பெரிய சாம்ராஜ்யங்களான, எகிப்து, அசீரியா மற்றும் பாபிலோனைப் பிடித்ததைக் குறிக்கிறது.
அடுத்த மிருகம் சிவிங்கி. சிறுத்தையைப் போல வேகமாக அலெக்சாண்டர் உலகத்தைப் பிடித்ததைக் குறிக்கிறது. வெறும் 12 ஆண்டுகளுக்குள்ளாக உலகில் 70 சதவீத இடத்தை அவர் பிடித்ததைக் குறிக்கிறது. சிங்கம் விழுங்குகிறது, கரடி நசுக்குகிறது, சிறுத்தை அதன் இரையின் மீது பாய்கிறது. ஒவ்வொரு மிருகத்துக்கும் ஒரு குணம் உண்டு. நான்கு தலை என்பது, 33 வயதில் அவர் இறந்த பிறகு, அவர் ராஜ்யம் 4 தளபதிகளுக்கு (Casander, Lysimachus, Seleucus, and Ptolemy) பிரித்துக் கொடுக்கப்பட்டதைக் காட்டுகிறது.
கிரேக்க சாம்ராஜ்யம் பற்றி விரிவாகப் படிக்க
https://rhematamil.org/israel-kingdom-of-greece
நான்காம் மிருகம் என்பது, ரோம சாம்ராஜ்யத்தைக் குறிக்கிறது. அது கொடிய ஆட்சி என்பதை அம்மிருகம் காட்டுகிறது. அம்மிருகம் இதுதான் என்று ஏதோ ஒரு மிருகத்துடன் ஒப்பிட முடியவில்லை. நம் இயேசு நாதர் பிறப்பு, இறப்பு எல்லாம் ரோம சாம்ராஜ்ய காலத்தில் தான். இயேசுவின் மரணமான சிலுவை மரணத்தைக் கொண்டு வந்தவர்கள் ரோமர்கள்.
ரோம சாம்ராஜ்யத்தைப் பற்றி விரிவாகப் படிக்க
https://rhematamil.org/israel-roman-kingdom
அதன் தலையில் 10 கொம்பு என்பது 10 ராஜாவைக் குறிக்கிறது. மிருகம் என்பது கவர்மெண்ட் மற்றும் கொம்பு என்பது ராஜாவையும் குறிக்கும். 10 ராஜாக்களை தனக்கு கீழே வைத்து ஆட்சி செய்த ஒருங்கிணைந்த ரோம பேரரசைக் குறிக்கிறது என ஒரு சாராரும், இன்னொரு சாரார், வர இருக்கும் ஒரு உலக அரசைக் குறிக்கிறது என்றும் சொல்வார்கள். (European Unionல், கிட்டத்தட்ட 27 நாடுகள் இருந்தாலும், முடிவெடுக்கும் அதிகாரம் 10 நாடுகளுக்கு மட்டுமே உள்ளது. European Union பற்றிய பதிவில் தொடர்ந்து பார்க்கலாம்) 10 நாடுகள் சேர்ந்து உலகை ஆண்டாலும், 3 நாடுகள் அதிலிருந்து பிரியப் போவது (அல்லது பிரிந்தது) நிச்சயம்.
தானியேல் 2ம் அதிகாரத்தில் நேபுகாத் நேச்சார் கண்ட கனவில் கூட, நான்காவது சாம்ராஜ்யம் இரும்பைப் போல கொடிதாயிருக்கும். இப்போது தானியேல் 7ம் அதிகாரத்தில், தானியேல் கண்ட தரிசனத்தில், இரும்பு பற்கள் இருக்கின்றன. அவ்வளவு கொடுமையான சாம்ராஜ்யம் ரோம சாம்ராஜ்யம்.
25. உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான்; அவர்கள் ஒருகாலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லுமட்டும் அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.
சிறிய கொம்பு என்பது, உலகையே ஆளும் அந்தி கிறிஸ்துவாக இருக்கலாம் என கூறுகிறார்கள். அவன் தேவனுக்கு விரோதமாகப் பேசுவான். பரிசுத்தவான்களை ஒடுக்குவான். பிரமாணங்களை மாற்ற நினைப்பான் என வேதம் கூறுகிறது.
ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லும் என கூறுகிறது. “time, times and half a time”என ஆங்கிலத்தில் உள்ளது.
காலம் – ஒரு வருடம்
காலங்கள் – இரண்டு வருடம்
அரைக்காலம் – அரை வருடம்
(1+2+0.5=3.5)வருடங்கள்.
எனவே, காலமும், காலங்களும், அரைக்காலமும் என்பது மூன்றரை வருடத்தைக் குறிக்கிறது.
(வெளிப்படுத்தின விசேஷம் 11ம் அதிகார தரிசனத்தில், 42 மாதம் மற்றும் 1260 நாட்கள் என்பதும், மூன்றரை வருடங்களைக் குறிக்கும். வெளி 11ம் அதிகாரம் பார்க்கும்போது, அதையும் பார்க்கலாம்.)
11. அப்பொழுது நான் பார்த்தேன்; நான் பார்த்துகொண்டிருக்கையில் அந்தக் கொம்பு பெருமையான பேச்சுகளைப் பேசினதினிமித்தம் அந்த மிருகம் கொலைசெய்யப்பட்டது; அதின் உடல் அழிக்கப்பட்டு, எரிகிற அக்கினிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது.
12. மற்ற மிருகங்களுடைய ஆளுகையோவென்றால், அவைகளை விட்டு நீக்கப்பட்டது; ஆனாலும், அவைகளுக்குக் காலமும் சமயமும் ஆகுமட்டும் அவைகள் உயிரோடே இருக்கும்படி கட்டளையிடப்பட்டது.
11ம் வசனம் வைத்து பார்த்தால், நான்காம் மிருகம் மட்டும் அழிக்கப்பட்டது. மற்ற 3 மிருகங்கள் இன்னும் அழிக்கப்படவில்லை. அவைகள் வெளிப்படுத்துதல் 13ல் மீண்டும் வரும். வரும் பதிவுகளில் தொடர்ச்சியாகப் பார்க்கலாம்.
Leave a Reply