தானியேல் இரண்டாம் அதிகாரம், ஏழாம் அதிகாரம் மற்றும் ஒன்பதாம் அதிகாரத்தின் தரிசனங்களை நாம் விவரித்து பார்த்தோம். அதைப்பற்றிய சிறு தொகுப்பு தான் இப்பதிவு. தானியேலுடைய காலத்தில், அந்த தரிசனத்தின் அர்த்தங்கள், அவருக்கே தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் நம்முடைய காலத்தில், 90 சதவீதம் நிறைவேறி விட்டதால், நம்மால் அந்த தரிசனங்களை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
இரண்டாம் அதிகாரம்
இரண்டாம் அதிகாரத்தில், பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், ஒரு சொப்பனம் காண்கிறார். அதில் ஒரு பெரிய சிலை இருக்கிறது. அந்த சிலையின் தலை பொன்னாகவும், சிலையின் மார்பு வெள்ளியாகவும், வயிறு மற்றும் தொடை வெண்கலமாகவும், கால்கள் இரும்பாகவும், பாதங்கள் பாதி இரும்பு பாதி களிமண்ணாகவும் இருப்பதை பார்க்கிறார். திடீரென்று கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல், அந்த சிலையின் மீது விழுந்து, சிலையை முழுவதுமாக நொறுக்கிப் போடுவதையும் அவர் பார்க்கிறார். இதுதான் இரண்டாம் அதிகாரத்தில் அவர் கண்ட தீர்க்கதரிசனம்.
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் இந்த சொப்பனத்துக்கு, தானியேல் அர்த்தம் கூறுகிறார். பொன்னான தலை உம்முடைய அரசாங்கம் தான். உமக்கு பின்பு வெள்ளியைப்போல வேறொரு ராஜ்யம் தோன்றும். அதற்குப் பின்பு மூன்றாம் ராஜ்யமாக வேறொரு ராஜ்யம் வரும். நான்காவது ராஜ்யத்தின் ஆட்சி இரும்பைப் போல இருக்கும். அதற்குப் பின்பு இரும்பும் களிமண்ணும் கலந்து இருப்பதைப் பார்த்தது போல, ஜனங்கள் ஒருவரோடு ஒருவர் ஒட்டிக் கொள்ளாமல் இருப்பார்கள். அப்படி ஒரு ராஜ்யம் வரும். அந்த நாட்களில் தேவன் என்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை வரப்பண்ணுவார். கைகளால் பெயர்க்கப்படாத கல், அந்த புதிய ராஜ்யம், என்றைக்கும் அழியாத ராஜ்யம் என்று, ராஜாவுக்கு அர்த்தத்தை தானியேல் தெரிவிக்கிறார்.
இந்த அர்த்தம் நேபுகாத்நேச்சாருக்கு புரிந்ததோ இல்லையோ, நமக்கு இன்று அது தெளிவாகப் புரியும். ஏனெனில் பொன்னாலான தலையாக பாபிலோன் சாம்ராஜ்யமும், வெள்ளியாக மேதிய பெர்சிய சாம்ராஜ்யமும், அடுத்து வெண்கலமாக கிரேக்க சாம்ராஜ்யமும், இரும்பைப் போல கொடிதான ஆட்சியாக ரோம சாம்ராஜ்யமும், ஏற்கனவே நிறைவேறிவிட்டது. அடுத்து பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாக, அந்திக்கிறிஸ்துவின் ஆட்சி, வெகு சீக்கிரத்தில் வர இருக்கிறது. அதற்குப் பின்பு என்றென்றைக்கும் அழியாத மூலைக்கல்லாகிய நம் இயேசு கிறிஸ்துவின், ஆயிரம் வருட அரசாட்சி, இதே பூமியில் நடைபெறப்போகிறது. இதுதான் இந்த சொப்பனத்தின் அர்த்தம். நம் காலத்தில் அனைத்தும் நிறைவேறி விட்டதால், நமக்கு அது தெளிவாகப் புரியும்.
ஏழாம் அதிகாரம்
இரண்டாவதாக, தானியேலே, தான் தூங்கும் போது சொப்பனத்தில் ஒரு தரிசனத்தைக் காண்கிறார். தானியேல் ஏழாம் அதிகாரத்தில், நான்கு பெரிய மிருகங்கள் பற்றிய தரிசனம். அவரது சொப்பனத்தில், முதலாவது சிங்கம் கழுகின் இறகோடு இருப்பதைப் போன்றும், அடுத்தது இரண்டாவதாக, கரடி ஒரு பக்கமாக சாய்ந்து நின்று, அதன் வாயில் மூன்று விலா எலும்புகளை கவ்விக் கொண்டிருப்பதைப் போலவும், மூன்றாவதாக, சிவிங்கியை போல் ஒரு மிருகம், அதற்கு நான்கு செட்டைகளும் நான்கு தலைகளும் இருப்பதைப் போலவும், பின்பு நான்காவது பெரிய மிருகம், மிகவும் பயங்கரமான மிருகமாகவும், பயங்கரமான பற்களைக் கொண்டிருப்பதாகவும், அந்த மிருகத்துக்கு பத்து கொம்புகள் இருப்பதாகவும் பார்த்தார். அதற்குப் பின்பு அந்த நான்காவது மிருகம் மட்டும் அழிக்கப்பட்டது. மூன்று மிருகத்திடமிருந்து, ஆளுகை மட்டும் பறிக்கப்பட்டது. ஆனால் அவை உயிரோடுதான் இருக்கிறது. அதற்கென ஒரு காலம் இருக்கிறது. பின்பு மனுஷகுமாரனுடைய சாயலாக, ஒருவர் வந்து, ராஜரிகம் பண்ணுகிறார். அவருடைய ராஜ்யம் அழியாததாய் இருக்கும் என்று தரிசனம் பார்க்கிறார் தானியேல்.
இந்த தரிசனத்தின் அர்த்தம் என்ன என்று தானியேல் விசாரித்த போது, இந்த நான்கு மிருகங்களும் நான்கு ராஜாக்கள். ஆனாலும் உன்னதமானவர் சதா காலமும் அரசாளுவார் என்று மட்டும் அவருக்கு வெளிப்படுத்தப்பட்டது. பத்து கொம்புகள் 10 ராஜாக்கள் என்று அவருக்கு சொன்னார்கள். இதைத் தவிர வேறு எதுவும் தானியேலுக்கு வெளிப்படுத்தவில்லை. ஆனால் நம்முடைய காலத்தில், இவை எல்லாம் நிறைவேறி விட்டதால், நமக்கு அது எளிதாகப் புரியும்.
மிருகம் என்பது ராஜ்யத்தைக் குறிக்காமல், ராஜாவை மட்டும் குறிக்கிறது. அதாவது முதலாவது சிங்கத்தை பார்க்கும் போது, சிங்கத்தைப் போல பெருமையானவைகளைப் பேசிய, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரை அது குறிக்கிறது. இரண்டாவதாக, கரடி ஒரு பக்கமாக சாய்ந்து நின்று, மூன்று எலும்புகளை கவ்விக் கொண்டிருப்பது, மேதியாவும் பெர்சியாவும் இணைந்து, அதிக நாடுகளை கைப்பற்றப் போவதையும், அதில் முக்கியமாக, கோரேஸ் மன்னன் பாபிலோனைக் கைப்பற்ற போவதையும், இந்த தரிசனம் குறிக்கிறது. மூன்றாவதாக சிவிங்கி என்பது, இள வயதிலேயே, கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குள், 70% உலகத்தைப் பிடித்த, மகா அலெக்சாண்டரை குறிக்கிறது. நான்காவதாக, அந்த கொடிய மிருகம், ரோம சாம்ராஜ்யத்தில் வந்த ஒவ்வொரு கொடிய அரசர்களையும் குறிக்கிறது. அதிலும் 10 கொம்புகள் என்பது, பத்து ராஜாக்களை தனக்குக் கீழாக வைத்து அரசாண்ட, போப் ஆண்டவரின் ஆட்சியைக் குறிக்கிறது. ஒரு சிறிய கொம்பு எழும்பும் என்பது, போப் ஆண்டவரை குறிக்கிறது. ரோம சாம்ராஜ்யத்தில் மத தலைவர்கள், ராஜாக்களுடன் இணைந்து, ஆட்சி செய்ய ஆரம்பித்து, வேதத்தை மக்களிடமிருந்து மறைத்து வைத்து, அவர்கள் கூறுகிற கருத்தையே மக்களை நம்ப வைத்து, ஒரு இருண்ட காலமாக மாற்றிய அந்த காலங்களை, இந்த கொடிய மிருகம் நினைவுபடுத்துகிறது. மீண்டும் மற்ற மிருகங்கள் ஆட்சிக்கு வரும் என்பது அந்தி கிரிஸ்துவின் ஆட்சியைக் குறிக்கிறது. ஆனால் அதற்கு பின்பாக உன்னதமானவராகிய இயேசு, ராஜாதி ராஜாவாய் பூமியில் வந்து, ஆயிரம் வருடம் அரசாட்சி செய்வதை, தானியேல் பார்க்கிறார். இதுதான் இந்த தரிசனத்தின் அர்த்தம்.
ஒன்பதாம் அதிகாரம்
மூன்றாவதாக தானியலுடைய 70 வார தீர்க்கதரிசனத்தைப் பற்றி பார்த்தோம். தானியல் ஒன்பதாம் அதிகாரத்தில், 70 வருடம் முடிவில் பாபிலோனிலிருந்து விடுதலை அடைவோம் என்கிற எரேமியாவின் தரிசனத்தை, புத்தகம் மூலம் அறிந்த தானியேல், அதற்காக உபவாசம் பண்ணி ஜெபிக்கிறார். அப்பொழுது காபிரியேல் தூதன் அவரிடம் தோன்றி, உனக்கு அறிவை உணர்த்தும்படி வந்தேன். நீ இப்பொழுது பார்க்கும் 70 வருடம்(பாபிலோன் சிறையிருப்பு) ஒரு தீர்க்கதரிசனம். இதே போல் ஒரு 70 வார கணக்கு ஒன்று இருக்கிறது என்று சொல்லி, ஒரு புதிய கணக்கை அவருக்கு சொல்லுகிறார். எருசலேமை திரும்ப கட்டுவதற்கான கட்டளை வெளிப்படுவது முதல், மேசியா வரும் வரை, ஏழு வாரமும் 62 வாரமும் செல்லும். அந்த 62 வாரங்களுக்குப் பிறகு மேசியா சங்கரிக்கப்படுவார். ஒரு வாரம் அளவும் அவர் உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது, பலியையும் காணிக்கையும் ஒழியப் பண்ணுவார். அருவருப்பான செட்டைகளோடு பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், என்று ஒரு கணக்கை தானியேலிடம் சொல்கிறார். இதன் அர்த்தம் என்ன என்பது தானியேலுக்கு புரிந்திருக்காது. ஆனால் நம்முடைய காலத்தில், அனைத்தும் நிறைவேறிக் கொண்டு இருப்பதால், நமக்கு இது எளிதாகப் புரியும்.
இந்த தரிசனத்தை தானியேல் பார்க்கும்போது, அவர்கள் இன்னும் பாபிலோனில் தான் அடிமையாக இருக்கிறார்கள். ஆனால் தரிசனத்தில் ஆண்டவர் கூறுவது, “எருசலேம் கட்டுவதற்கு கட்டளை வெளிப்படும்போது” என்று கூறப்பட்டிருக்கிறது. முதலாவது ஒரு கூட்ட ஜனங்கள், பாபிலோனில் இருந்து விடுதலையாகி, இஸ்ரேலுக்கு செல்லும்போது, அவர்கள் தங்களுக்கு சொந்தமாக வீடுகளை கட்டிக்கொண்டு வாழ ஆரம்பித்து விட்டார்கள். இரண்டாவதாக, செருபாபேல் தலைமையில் ஜனங்கள் சென்று, இரண்டாவது தேவ ஆலயத்தை கட்டினார்கள். மூன்றாவதாக நெகேமியா தலைமையில், எருசலேம் கட்டப்படுவதற்கான கட்டளையுடன் ஜனங்கள் புறப்பட்டார்கள். எனவே எருசலேம் அலங்கம் கட்டப்படுவதற்கான கட்டளை வெளிப்பட்ட காலம், நெகேமியாவின் காலம் .
பிரபுவாகிய மேசியா வருமட்டும் என்று கூறியிருப்பது, இயேசுவின் பிறப்பை அல்ல. இயேசு கிறிஸ்து, ராஜாவாக எருசலேம் நகரத்தில் நுழைவதை இது குறிக்கிறது. எனவே அவர் பாடுபடுவதற்கு ஏழு நாளைக்கு முன்பு, கழுதை குட்டியின் மேல் ஏறி, ராஜாவாக எருசலேமுக்குள் நுழைந்ததை, இந்நிகழ்வு குறிக்கிறது. அந்த 62 வாரங்களுக்கு பிறகு மேசியா சங்கரிக்கப்படுவார் என்பது, அவர் ராஜாவாக உள்ளே நுழைந்து ஒரு வாரத்தில், அவர் சிலுவையில் அறையப்படுவார் என்று இந்த தரிசனம் கூறுகிறது.
அதற்குப் பின்பு ஒரு வாரம் மீதம் இருக்கிறது. அந்த ஒரு வாரத்தில், பாழாக்குகிறவன், அருவருப்பான செட்டைகளோடு வந்து இறங்குவான் என்று, அந்திகிறிஸ்துவின் ஆட்சியைக் குறிக்கிறது. பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப் பண்ணுவார் என்பது, மூன்றரை வருடங்கள் கடந்த பின்பு, எருசலேம் தேவாலயம் பூட்டப்பட்டுவிடும் என்று கூறுகிறது.
நெகேமியாவிடம், எருசலேம் கட்ட கட்டளை வெளிப்பட்ட போதிருந்து, மேசியா சங்கரிக்கப்பட்ட காலம்வரை சரியாக 483 ஆண்டுகள். (7+62= 69வாரங்கள், 69*7=483ஆண்டுகள்).
ஏற்கனவே பார்த்த இரண்டு தரிசனத்தைப் போலவே, இந்த தரிசனத்திலும், உடனடியாக ஒரு ஏழு ஆண்டுகள், அந்திக் கிறிஸ்துவின் ஆட்சி தொடர்கிறது. தேவன் இஸ்ரவேலருக்காக போட்ட நேர அட்டவணை இது. அவர்கள் ஒவ்வொரு சாம்ராஜ்யத்துக்கும் கீழிருந்து, அதன் பின்னர் அந்தி கிறிஸ்துவின் கீழ் இருப்பது, அவர்களுக்கு நியமிக்கப்பட்டது.
நம் காலம்
ஆனால் இந்த ரோம சாம்ராஜ்யத்துக்கும், அந்தி கிறிஸ்துவின் ஆட்சிக்கும் இடையில், தேவன் ஒரு இடைவெளியை விட்டுவிட்டார். அந்த இடைவெளியை, கிருபையின் காலம் என்றும், புறஜாதிகளின் காலம் என்றும், நாம் கூறுகிறோம். நாம் எல்லாரும் மீட்கப்படுவதற்காக, நாம் எல்லாரும் தேவனுடைய ஆயிரம் வருட அரசாட்சியில், அவரோடு மகிழ்வதற்காகவும், நமக்காக கொடுக்கப்பட்ட காலம் தான் இந்த இடைவெளி. இந்த இடைவெளி, எப்பொழுது முடியும் என்பது, யாருக்கும் தெரியாது. ஒருவேளை இப்பொழுதே கூட அது முடிவுக்கு வரலாம். ஆனால் கிடைக்கப்பட்ட இந்த கிருபையின் காலத்தை உபயோகப்படுத்திக் கொள்வது, நமது கைகளில் இருக்கிறது. இந்த இடைவெளிக்கு பின்னர், மீண்டுமாக அந்த ஏழு வருட ஆட்சி தொடரும். அதற்குப் பின்பாக ஆண்டவரின் ஆயிரம் வருட அரசாட்சி நடைபெறும்.
கிருபையின் காலம் என்றும், புறஜாதிகளின் காலம் என்றும் சொல்லப்படுகிற இந்தக் காலத்தை, நாம் திருச்சபையின் காலம் என்றும் சொல்லலாம். ஏனெனில் இந்த இடைவேளையில் ஆரம்பிக்கப்பட்டது தான் திருச்சபை. திருச்சபை உள்ளே நுழைந்ததும், இந்த நேர அட்டவணை அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. எப்பொழுது ஆவியானவர் ஊற்றப்பட்டாரோ(அப்போஸ்தலர்-2), அப்பொழுதே திருச்சபை தொடங்கிவிட்டது. ஆனால் ஆவியானவரும் சபையும் எடுத்துக் கொள்ளப்படும் காலம் வரும். அப்பொழுது மீண்டுமாக அந்த ஏழு வருட ஆட்சி நடைபெறும். அந்த ஏழு வருட ஆட்சி, இஸ்ரவேலருக்கு மட்டும்தானா? அல்லது ஆவிக்குரிய இஸ்ரவேலர்களாகிய நமக்குமா? என்பதை பிதா மட்டுமே அறிவார். நாம் அதை நிதானிக்க முடியாது.
இந்த ஏழு வருடங்களை, உபத்திரவ காலம் என்றும், மகா உபத்திரவ காலம் என்றும், இரண்டாகப் பிரிப்பார்கள். வெளிப்படுத்தின விசேஷம் பற்றிய தரிசனத்தில் படிக்கலாம். வரும் பதிவுகளில் அதை தொடர்ச்சியாக பார்க்கலாம்.
Leave a Reply