முந்தைய பதிவில், ஆசரிப்பு கூடாரம், உடன்படிக்கை பெட்டி போன்றவை, எவ்வளவு பரிசுத்தமானவை என்று பார்த்தோம். ஆசரிப்பு கூடாரத்தை சுற்றி, லேவியர்கள் மட்டும்தான் வசிக்க முடியும். கோகாத் புத்திரர் லேவியராக இருந்தாலும், அவர்கள் மட்டுமே பரிசுத்த பொருட்களை தூக்கி செல்ல முடிந்தாலும், அவர்கள் சுமப்பதற்கு மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், பரிசுத்த பொருட்களை ஆரோன் குடும்பத்தார் மூடுவதைக் கூட கோகாத் புத்திரர் பார்க்ககூடாது என்று பார்த்தோம்.
இரு வருடத்துக்கு முன்பு, நான் என் தோழியிடம் ஒரு சந்தேகம் கேட்டேன், “ஏன் உடன்படிக்கை பெட்டியை தொட்டால் மரணம்? ஏன் லேவியரைத் தவிர யாரும் ஆசரிப்பு கூடாரத்துக்குள் செல்லக்கூடாது?” என்று கேட்டேன். எனக்கு இதெல்லாம் பயங்கர குழப்பம். அதிலும், ‘ஊசா என்பவர், பெட்டி விழக்கூடாது என்பதற்காக தொட்டார், அவரைப்போய் தேவன் அடித்து விட்டாரே’ என்று எனக்கு குழப்பமாக இருக்கும்.
“Father God (பிதா) மேலிருந்து பார்க்கும்போது, ஃபர்ஸ்ட் அவங்க கண்ணுக்கு மனுஷனுடைய பாவங்கள் தான் தெரியுமாம். ஏன்னா, அவர் நீதியுள்ள தேவன். அவரால், பாவத்தை சகிக்க முடியாது. அதனால்தான் இரத்தம் தேவைப்பட்டது. பிரதான ஆசாரியன் கூட, அந்த ஆட்டுக்குட்டி இரத்தத்துல, கொஞ்ச செகண்ட்ஸ் தான் மகா பரிசுத்த ஸ்தலம்குள்ள போக முடியும். எந்த இரத்தமும் இல்லாம, ஊசா தொட்டாருல, அதனால தான் செத்துட்டாரு. நமக்கு Jesus Blood இருக்குது. இப்போ Father God நம்மள பார்த்தா, நம்மகிட்ட உள்ள Jesus Blood தான் ஃபர்ஸ்ட் அவர் கண்ணுக்கு தெரியும். அந்த Blood, நம்ம Sin எல்லாம் cover பண்ணிரும். அதனாலதான் நாம் அவர்கிட்ட சுலபமா போக முடியும்” என்று பதில் கூறினாள்.
எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ அவன் பாக்கியவான்.சங்கீதம் 32-1
Blessed is he whose transgression is forgiven, whose sin is covered.
இந்த வசனத்தின் அர்த்தம் இப்பொழுதுதான் புரிந்தது. நாம் எவ்வளவு அருமையான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், எவ்வளவு பாக்கியம் பெற்றவர்கள் என்பது குறித்து இன்றும் படிக்க, என்னை உற்சாகப்படுத்தியது, என் தோழியின் பதில் தான்.
வனாந்திரத்தில் முதலில் மோசே, தேவன் காட்டிய மாதிரியின்படி, ஆசரிப்பு கூடாரம் கட்டினார். 40 வருடம் வனாந்திர பயணத்தில், மேகம் மேலே எழும்பும்போது, ஆசரிப்பு கூடாரத்தைக் கழட்டி, பயணம் செய்வார்கள். மேகம் நிற்கும்போது, ஆசரிப்பு கூடாரத்தை திரும்பக் கட்டுவார்கள். கழட்டி கழட்டி, திரும்ப கட்டுவார்கள். அடுத்து யோசுவாவின் காலம். யோசுவா-12ம் அதிகாரத்தில் பார்த்தால், மொத்தமாக 31 ராஜாக்களை முறியடித்து, கோத்திரங்களுக்கு தேசத்தை பங்கு போடுகிறார்கள். இப்போது, ஆசரிப்பு கூடாரத்தை வைக்க வேண்டும். இதுவரை, கழட்டி, கழட்டி, திரும்ப கட்டப்பட்ட ஆசரிப்பு கூடாரம், முதன்முறையாக நிலையான ஒரு இடத்தில் வைக்க வேண்டும். எங்கே வைப்பது?
மோசே இஸ்ரவேல் ஜனங்களிடம், ஆசரிப்பு கூடாரம் எங்கே வைக்க வேண்டும் என்பது பற்றி பேசினார். உபாகமம் 12ம் அதிகாரத்தில் அது குறிக்கப்பட்டுள்ளது.
11. உங்கள் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஓர் இடம் உண்டாயிருக்கும்; அங்கே நீங்கள் நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் உங்கள் சர்வாங்க தகனங்களையும், உங்கள் பலிகளையும், உங்கள் தசம பாகங்களையும், உங்கள் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், நீங்கள் கர்த்தருக்கு நேர்ந்துகொள்ளும் விசேஷித்த எல்லாப் பொருத்தனைகளையும் கொண்டுவந்து,
13. கண்ட இடமெல்லாம் நீ உன் சர்வாங்க தகனபலிகளை இடாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.
14. உன் கோத்திரங்கள் ஒன்றில் கர்த்தர் தெரிந்துகொள்ளும் இடத்தில்மாத்திரம் நீ உன் சர்வாங்க தகனபலிகளையிட்டு, நான் உனக்குக் கற்பிக்கிற யாவையும் அங்கே செய்வாயாக.
18. உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில் நீயும் உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அதைப் புசித்து, நீ கையிட்டுச் செய்யும் எல்லாக்காரியத்திலும் உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சந்தோஷப்படுவாயாக.
21. உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளஙகும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானம் உனக்குத் தூரமானால், கர்த்தர் உனக்கு அளித்த உன் ஆடுமாடுகளில் எதையாகிலும் நான் உனக்கு விதித்தபடி நீ அடித்து, உன் இஷ்டப்படி உன் வாசல்களிலே புசிக்கலாம்.
மோசே ஆசரிப்பு கூடாரத்தை வைக்க, தேவன் தெரிந்து கொண்ட ஒரு இடம் இருக்கிறது என்று கூறினார். ஆனால், அந்த இடம் எது என்று கூறவில்லை. இப்போது, யோசுவா, தேசத்தை பிரித்து 12 கோத்திரங்களுக்கு கொடுத்து விட்டார். ஆனால் ஆசரிப்பு கூடாரம் எங்கே வைக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை.
சீலோ(யோசுவா 18-1)
இஸ்ரவேல் புத்திரரின் சபையெல்லாம் சீலோவிலே கூடி, அங்கே ஆசரிப்புக் கூடாரத்தை நிறுத்தினார்கள். தேசம் அவர்கள் வசமாயிற்று. யோசுவா 18-1
மக்கள் ஒன்றுகூடி, சீலோ என்னும் இடத்தில் ஆசரிப்பு கூடாரத்தை நிறுவினார்கள் என்று பார்க்கிறோம். அதுதான் தேவன் சொன்ன இடமா? நமக்கு தெரியாது, வேதத்தில் அப்படி சொல்லப்படவில்லை. யோசுவாவுக்கு அடுத்து, நியாயாதிபதிகள் காலம் முடிந்தது.
18. நாற்பது வருஷகாலமாய் வனாந்தரத்தில் அவர்களை ஆதரித்து,
20. பின்பு ஏறக்குறைய நானூற்றைம்பது வருஷகாலமாய் சாமுவேல் தீர்க்கதரிசிவரைக்கும் அவர்களுக்கு நியாயாதிபதிகளை ஏற்படுத்திவந்தார்.
அப்போஸ்தலர் 13
கிட்டத்தட்ட 450 வருட காலம் முடிந்துவிட்டது. அவ்விடத்தில் தொடர்ந்து ஆராதனை(பலிகள்) நடந்துகொண்டே இருக்கிறது. அந்த சீலோ ஆலயத்தில் தான், அன்னாள் அவ்விடத்தில் வந்து குழந்தைக்காக வேண்டிக்கொண்டாள். சாமுவேலை அவ்விடத்தில் கொண்டுவந்து, ஏலியிடம் விட்டார். இந்த சாமுவேல் சீலோவில் இருக்கும்போது தான், தேவன் “சாமுவேலே சாமுவேலே” என்று கூப்பிட்டு பேசினார். அவ்வளவு முக்கியத்துவம் பெற்றது சீலோ என்கிற இடம்.
சாமுவேல் வளர்ந்து தீர்க்கதரிசி ஆகிவிட்டார். கர்த்தர் சீலோவிலே ஒரு தீர்க்கதரிசியை உருவாக்கி விட்டார். இப்போது, இஸ்ரவேலுக்கு விரோதமாக பெலிஸ்தர் வருகிறார்கள். ஆனால் பெலிஸ்தர் 4000 இஸ்ரவேலரைக் கொன்று விட்டார்கள். “யுத்தத்தில் நமக்கு ஏன் தோல்வி” என்று யோசித்த மூப்பர்கள், ‘இதுவரை வனாந்திரத்தில் யுத்தத்துக்கு உடன்படிக்கை பெட்டியை தூக்கி போனார்கள். அதனால் ஜெயித்தோம். இன்று உடன்படிக்கை பெட்டி இல்லை, அதனால் தோற்று விட்டோம். நாம் போய், உடன்படிக்கை பெட்டியை தூக்கிக் கொண்டு, நாளை யுத்தத்துக்கு வருவோம். வெற்றி பெற்றுவிடலாம்’ என்று சொல்லி அடுத்த நாள், பெட்டியை தூக்கிக்கொண்டு போய் விட்டார்கள்.
ஜனங்கள் திரும்பப் பாளயத்துக்கு வந்தபோது, இஸ்ரவேலின் மூப்பரானவர்கள், இன்று கர்த்தர் பெலிஸ்தருக்கு முன்பாக நம்மை முறிய அடித்ததென்ன? சீலோவிலிருக்கிற கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவருவோம்; அது நம்மை நம்முடைய பகைஞரின் கைக்கு விலக்கி ரட்சிக்கும்படி, நம்முடைய நடுவிலே வரவேண்டியது என்றார்கள்.
1 சாமுவேல் 4 :3
உடன்படிக்கை பெட்டியை யார் தொட்டாலும் மரணம். இஸ்ரவேலர் எப்படி தூக்கி சென்றார்கள்? ஆசரிப்பு கூடார அமைப்பிலேயே பெட்டி வைக்கப்பட்டிருந்ததால், அப்படியே, லேவியரை வைத்தே பெட்டியை தூக்கி வந்திருப்பார்கள் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். அடுத்து பெலிஸ்தர் பெட்டியை எடுத்து செல்லும்போதும், பெலிஸ்தருக்கு எதுவும் ஆகவில்லை. எப்படி? தேவனுடைய செயல் இது! நமக்கு புரியவில்லை என்றாலும், அவருடைய செயலுக்கு பின்னால், காரணங்கள் இருக்கும்.
எபெனேசர்(1 சாமுவேல் 4-3)
பெட்டியை மூப்பர்கள், யுத்தம் நடக்கும் இடமான எபெனேசருக்கு கொண்டு சென்றார்கள். இஸ்ரவேலர், பெட்டி வந்ததும் சந்தோஷமாக ஆர்ப்பரிக்க, சத்தம் கேட்டு பெலிஸ்தர் நடுங்குகிறார்கள். ஆனால் இந்த யுத்தத்தில் இஸ்ரவேலர் தோற்று போனார்கள். பெட்டி இல்லாதிருந்த நேற்று கூட, 4000பேர் தான் இறந்தார்கள். இன்றோ, 30,000 பேர் இறந்து விட்டார்கள். பெலிஸ்தர் பெட்டியைத் தூக்கி கொண்டு போய்விட்டார்கள்.
அஸ்தோத்(1 சாமுவேல் 5-1)
பெலிஸ்தர் பெட்டியைக்கொண்டுபோய் அஸ்தோத் என்னும் இடத்தில், தாகோனின் கோயிலில் கொண்டு வைத்தார்கள். தாகோன் நின்று கொண்டிருக்கிற இடத்தில் கர்த்தருடைய பெட்டி இருக்கிறது. அந்த பெட்டியின் மூடியான கிருபாசனத்தில் இருந்து தான், தேவன் மோசேயோடு பேசினார் என்று பார்த்தோம். அவர் மகிமையை 2 கேருபீன்கள் மூடி இருக்கும். உண்மையாக சொல்ல வேண்டுமானால், அது தேவன் வாசம்பண்ணும் இடம். நம் தேவன் அங்கிருக்கிறார். தாகோன் தேவனுக்கு முன்பாக, முகங்குப்புற விழுந்து கிடந்தது(1சாமு 5-3). அதை நேராக எடுத்து வைத்து சென்றவர்கள், மறுநாள் வந்து பார்க்கிறார்கள். இன்றும் தேவனுக்கு முன்பாக, தாகோன் முகங்குப்புற கிடக்கிறது. அதோடு, தாகோனின் கை, தலை எல்லாம் உடைந்து வாசற்படியில் கிடந்தது.(1 சாமு 5-4). உடனே அங்கிருந்து, கர்த்தருடைய பெட்டியை எடுத்துக்கொண்டு, காத் என்னும் வேறொரு இடத்தில் வைத்தார்கள்.
காத்(1 சாமுவேல் 5-8)
பெலிஸ்தர் பெட்டியை காத் என்னும் பெலிஸ்தரின் தேசத்திலுள்ள இடத்திலேயே, இடமாற்றம் செய்தார்கள். கர்த்தருடைய பெட்டி, அவருடைய தேசத்தில் இருந்தால் தான் அது ஆசீர்வாதம். வேறே தேசத்தில் இருந்தால் அது சாபம். ஏழு மாதங்கள் பெட்டி அங்கே இருந்தது. கர்த்தர் அங்கு இருந்தவர்களை மூல வியாதியினால் வாதித்தார்.(1 சாமுவேல் 5-9). செத்துபோகாமல் இருந்தவர்கள் போட்ட கூக்குரல் வானபரியந்தம் எட்டியதாம்(1 சாமுவேல் 5-12). அப்படியானால், நிறையபேர் செத்துவிட்டார்கள் என்று தானே அர்த்தம்.
எக்ரோன் (1 சாமுவேல் 5-10)
பெட்டியை பெலிஸ்தர் தேசத்திலே உள்ள, எக்ரோனுக்கு அனுப்பி விடலாம் என்று, காத் ஊரார் அனுப்புகிறார்கள். ஆனால், எக்ரோன் மனுஷர் பெட்டிக்கு பயந்து, ஊருக்குள்ளே பெட்டியை அனுமதிக்கவில்லை. “பெட்டியை எப்படி இஸ்ரவேலுக்கே திரும்பி அனுப்பலாம்” என்று பெலிஸ்தர் பூசாரிகளிடம் கேட்டனர். பூசாரி, சில பரிகாரங்கள் கூறிவிட்டு, (அதாவது பொன் சுண்டெலி போன்ற பரிகாரம்) பின் வருமாறு கூறுகிறார்.
1 சாமுவேல் 6:9 அப்பொழுது பாருங்கள்; அது தன் எல்லைக்குப் போகிறவழியாய் பெத்ஷிமேசுக்குப் போனால், இந்தப் பெரிய தீங்கை நமக்குச் செய்தவர் அவர்தாமே என்று அறியலாம்; போகாதிருந்தால், அவருடைய கை நம்மைத் தொடாமல், அது தற்செயலாய் நமக்கு நேரிட்டது என்று அறிந்துகொள்ளலாம் என்றார்கள்.
Tamil Easy Reading Version வண்டியைக் கவனியுங்கள். அது நேராக இஸ்ரவேலரின் சொந்த இடமான பெத்ஷிமேசுக்குப் போனால், நமக்கு இந்த நோய்களைத் தந்தவர் கர்த்தர் தான் என அறியலாம். ஒருவேளை பெத்ஷிமேசுக்கு அப்பசுக்கள் நேராகச் செல்லவில்லை என்றால், இஸ்ரவேலரின் தேவன் நம்மைத் தண்டிக்கவில்லை, இந்த நோய் தற்செயலாக வந்தது என்று அறிந்துகொள்ளலாம்” என்றனர்.
அப்படியே பெலிஸ்தர் அங்கிருந்து பெட்டியை அனுப்பி விட்டனர். பெலிஸ்தர் தேசத்தில் அஸ்தோத், காத், எக்ரோன் ஊருக்கு பெட்டி பயணப்பட்டது.
பெத்ஷிமேஸ்
1 சாமுவேல் 6:12 அப்பொழுது அந்தப் பசுக்கள் பெத்ஷிமேசுக்குப் போகிற வழியிலே செவ்வையாய்ப் போய், வலது இடது பக்கமாய் விலகாமல், பெரும்பாதையான நேர்வழியாகக் கூப்பிட்டுக் கொண்டே நடந்தது; பெலிஸ்தரின் அதிபதிகள் பெத்ஷிமேசின் எல்லைமட்டும் அவைகளின் பிறகே போனார்கள்.
Tamil Easy Reading Version பசுக்கள் நேராக பெத்ஷிமேசுக்குச் சென்றன. அவை நேராகச் சாலையில் வலது பக்கமோ இடது பக்கமோ திரும்பாமல் சென்றன. பெலிஸ்தர்கள் தொடர்ந்து நகர எல்லைவரை பின் சென்றனர்.
பூசாரி சொன்னபடியே, பெட்டி பெத்ஷிமேஸ்க்கு நேராக போய்விட்டது. இப்போது, பெலிஸ்தர் தெரிந்திருப்பார்கள், அவர்களுக்கு மூல நோய் வந்ததற்கு காரணம் உடன்படிக்கை பெட்டி என்று. பெட்டி இப்போது, இஸ்ரவேலுக்குள் வந்துவிட்டது.
1 சாமுவேல் 6:19 ஆனாலும் பெத்ஷிமேசின் மனுஷர் கர்த்தருடைய பெட்டிக்குள் பார்த்தபடியினால், கர்த்தர் ஜனங்களில் ஐம்பதினாயிரத்து எழுபதுபேரை அடித்தார்; அப்பொழுது கர்த்தர் ஜனங்களைப் பெரிய சங்காரமாக அடித்ததினிமித்தம், ஜனங்கள் துக்கித்துக்கொண்டிருந்தார்கள்.
Tamil Easy Reading Version ஆனால் அவர்கள் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைப் பார்த்தபோது அங்கே ஆசாரியர்கள் இல்லாமல் இருந்தனர். எனவே தேவன் பெத்ஷிமேசில் 70 பேரை கொன்றார். பெத்ஷிமேசில் உள்ள ஜனங்கள் இக்கொடுமையான தண்டனைக்காகக் கதறி அழுதனர்.
பெட்டி இஸ்ரவேலுக்கு திரும்பி விட்டது. ஆனால் தேவகோபம் மக்கள் மீது வந்தது. ஏன்? பெட்டி வந்த சந்தோஷத்தில், பெட்டிக்குரிய கனத்தை மறந்து, இந்த பெட்டிக்குள் என்ன இருக்கும் என்று ஆர்வக்கோளாறில், உள்ளே திறந்து பார்த்துவிட்டனர். அதை சுமக்கும் கோகாத் வம்சம் கூட, அதை கண்ணால் பார்க்க கூடாது என்று தேவன் கூறியிருந்தார். ஆனால், இப்போது மக்கள் துணிந்து பெட்டியை திறக்கவே செய்துவிட்டனர். மக்கள் பெட்டியை திறக்கவும், உள்ளிருந்து பயங்கரமாக தேவ மகிமை வெளிப்பட்டதாகவும், அவர் மகிமைக்கு முன் பாவம் நிற்க முடியாமல், சுற்றி இருந்த 50000 பேர் மரித்து விட்டதாகவும் கூறுகிறார்கள்.
பெலிஸ்தர் யுத்தத்தில் முதல் நாளில் 4000 பேர் இறந்தனர். இரண்டாவது நாளில், யுத்தத்தில் 30,000 பேர் இறந்தார்கள். ஏழு மாதம் கழித்து, இன்று பெட்டி திரும்பி வந்துள்ளது. ஆனால், 50,070 பேர் இறந்து விட்டார்கள். இன்று நாம் கூட, இப்படித்தான் துணிகரமாக செய்கிறோம். சில சமயங்களில், நம் தேவன் தானே என்று அசட்டை செய்து விடுகிறோம், இயேசுவின் இரத்தம் என்ற ஒன்று தான், நாம் எவ்வளவு பாவம் செய்தாலும், ஆலயத்துக்குள் சென்றவுடன் மரணம் வராமல் நம்மை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது என்பதை உணராமல் அலைகிறோம்.
இப்போது இஸ்ரவேலரை எண்ணிப்பாருங்கள். அவர்கள் தேவன் திரும்பி வந்து விட்டார். பெட்டி வந்து விட்டது. ஆனால் பெட்டியை சுற்றி 50,000 பிணம் இருக்கிறது. மக்களுக்கு எப்படி இருக்கும்? அவர்கள் கீரியாத் யாரீம் ஊர் மக்களை அழைத்து, பெட்டியை தூக்கி கொண்டு போகச் சொல்லி விட்டார்கள். கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், தேவன் அங்கு இல்லை. ஆனால் சீலோவில் ஆராதனைகள் (அதாவது காலை பலி, மாலை பலி) நடந்துகொண்டே இருக்கிறது.
கீரியாத் யாரீம் (அபினதாப் வீடு)
1.அப்படியே கீரியாத்யாரீமின் மனுஷர் வந்து, கர்த்தருடைய பெட்டியை எடுத்து, மேட்டின் மேலிருக்கிற அபினதாபின் வீட்டிலே கொண்டு வந்து வைத்து, கர்த்தருடைய பெட்டியைக் காக்கும்படிக்கு, அவன் குமாரனாகிய எலெயாசாரைப் பரிசுத்தப்படுத்தினார்கள்.
2.பெட்டி கீரியாத்யாரீமிலே அநேக நாள் தங்கியிருந்தது; இருபது வருஷம் அங்கேயே இருந்தது; இஸ்ரவேல் குடும்பத்தாரெல்லாரும் கர்த்தரை நினைத்து, புலம்பிக்கொண்டிருந்தார்கள்.
1 சாமுவேல் 7
கீரியாத் யாரீமுக்கு கொண்டு வந்த இஸ்ரவேலர், அங்கே யார் தலையில் தள்ளலாம் என்று பார்த்து, அபினதாப் என்னும் ஒருவன் வீட்டில் கொண்டுவந்து வைத்து விட்டார்கள். அவன் குமாரன் எலெயாசரை ஆசாரியனாக பரிசுத்தப்படுத்தி, அங்கேயே கர்த்தரை விட்டுப் போய்விட்டார்கள். இப்படியே 20 வருடம் போய் விட்டது.
இந்த 20 வருடமும், பெட்டியை இஸ்ரவேலர் சீலோவுக்கு எடுத்து செல்லவில்லை. ஆனால் சீலோவில், ஆசரிப்பு கூடாரமான அந்த ஆலயத்தில், பலிகள், பண்டிகைகள் எல்லாம் நடந்தது. எவ்வளவு பரிதாபம் அல்லவா? இன்று அனேக ஆலயத்தில் இயேசு இருக்கிறாரா என்பதே தெரியாமல், வழிபாடுகள், சிலை வழிபாடுகள் எல்லாம் நடக்கிறது, ஆனால் அங்கு நம் தேவன் இருக்கிறாரா, என்றால் கேள்விக்குறியே.
இஸ்ரவேலர்களின் முதல் முயற்சி
6. அவர்கள் அப்படியே மிஸ்பாவிலே கூடிவந்து தண்ணீர் மொண்டு, கர்த்தருடைய சந்நிதியில் ஊற்றி, அன்றைய தினம் உபவாசம்பண்ணி, கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம் என்று அங்கே சொன்னார்கள்; மிஸ்பாவிலே சாமுவேல் இஸ்ரவேல் புத்திரரை நியாயம் விசாரித்துக்கொண்டிருந்தான்.
7. இஸ்ரவேல் புத்திரர் மிஸ்பாவிலே கூடிவந்ததைப் பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தரின் அதிபதிகள் இஸ்ரவேலுக்கு விரோதமாக எதிர்த்து வந்தார்கள்; அதை இஸ்ரவேல் புத்திரர் கேட்டு, பெலிஸ்தரினிமித்தம் பயப்பட்டு,
8.சாமுவேலை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கும்படிக்கு, எங்களுக்காக அவரை நோக்கி ஓயாமல் வேண்டிக்கொள்ளும் என்றார்கள்.
1 சாமுவேல் 7
20 வருடம் பெட்டி இல்லை என்று கவலைப்பட்ட இஸ்ரவேலர், சாமுவேலிடம் வந்து கேட்கிறார்கள். சாமுவேல் அவர்களுக்கு, ஒரு நாள் உபவாச ஜெபம் செய்ய சொல்கிறார். அவர்கள் மிஸ்பாவில் ஜெபிக்கும் நாளில், பெலிஸ்தர் மறுபடியும் ஒரு யுத்தத்துக்கு வந்து விட்டார்கள். இப்போது, “பெட்டி திரும்ப வர வேண்டும்” என்ற ஜெபம் மாறி, “பெலிஸ்தர் கைக்கு விலக்கும்” என்று மாறி விட்டது. அந்த யுத்தத்தில் இஸ்ரவேலர் மிகப்பெரிய வெற்றி பெற்றார்கள். அவ்வளவு தான், அந்த வெற்றியின் சந்தோஷத்தில், அவரவர் வீட்டுக்கு போய் விட்டார்கள். பெட்டி, அபினதாப் வீட்டிலேயே இருக்கிறது.
அந்த இடத்தில் அவர்களுடைய ஒரு நாள் உபவாச ஜெபத்துக்கு பதில் வந்தது. ஒருவேளை, பெட்டியை திரும்பக் கொண்டுபோக ஜெபித்திருந்தால், அவர்களுடைய தேவனை அவர்கள் கொண்டு போயிருப்பார்கள். ஆனால், போராட்டம் வந்ததும், “தேவனே நீர் அபினதாப் வீட்டிலேயே இரும், எங்களை பெலிஸ்தரிடம் இருந்து பாதுகாரும்” என்று ஜெபித்தார்கள். நாமும் இன்று, “இயேசுவே, நீர் எங்கேயோ இருந்து கொள்ளும், எனக்கு இந்த உதவியை மட்டும் செய்யும்” என்று நம் காரியத்தை மட்டும் கேட்கிறோம். நமக்கு தேவை அவர் தான். அவர் நம்மோடு இருந்தால், எல்லாமே சரியாகி விடும்.
சாமுவேல் வாழ்க்கை முடிந்து விட்டது. சவுல் 40 வருட ராஜ்ய காலம் முடிந்து விட்டது. பெட்டி மட்டும், அபினதாப் வீட்டிலேயே இருந்தது. தோராயமாக கணக்கு செய்தால், பெட்டி 20 வருடம் இருந்தபோது, அந்த ஒரு நாள் உபவாச ஜெபம் யுத்தம் வந்தபோது, சவுல் ராஜாவாகவில்லை. அதன் பின் சவுலின் ராஜ்ய காலம் 40 வருடம். தாவீது 30 வயதில் ராஜாவாகி, 40 வருடம் ராஜாவாக இருந்தார், அதில் 7 வருடம் எபிரோன், 33 வருடம் இஸ்ரேல். எனவே அந்த 7 வருடம் கணக்கிட்டால், 67 வருடம். (20+40+7=67) கிட்டத்தட்ட 67 வருடங்கள், பெட்டி, ஆலயத்தில் இல்லை. அபினதாப் வீட்டில் இருந்தது. பின்னர் தாவீது மூலம் மீண்டும் சரியான இடத்துக்கு வந்தது. தாவீது பெட்டியை கொண்டு வரும்போது, மரணம் வந்ததா? பெட்டியை சீலோவில் வைத்தாரா? வேறு இடத்தில் வைத்தாரா? வரும் பதிவுகளில் பார்க்கலாம்.
Leave a Reply