பரிசுத்த வித்து

இஸ்ரேல் தேசத்தின் கடந்த காலங்களை, வேதப்பிரகாரமாகவும், சரித்திர ரீதியிலும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இடையிடையே, பரிசுத்த வித்து, என்ற ஒன்றையும் சேர்த்து பார்த்தோம். அந்த பரிசுத்த வித்து, எப்படி பயணம் செய்தது? யார் மூலமாக அடுத்த தலைமுறைக்கு வந்தது என்பதையும் பார்த்தோம். அதையே கொஞ்சம் விரிவாக இன்று பார்க்கலாம்.

முதலாவது தேவன் ஏன் ஆதாமை உருவாக்கினார்?

தேவன் ஆதாமை படைக்கும்போது, நீங்கள் சகலத்தையும் ஆண்டு கொள்ளுங்கள் என்று கூறினார். ஒரு தேவபக்தியுள்ள சந்ததி, ஆதாமிலிருந்து உருவாக வேண்டும் என்று விரும்பினார். ஆனாலும் சர்ப்பம் வஞ்சித்தது. பாவம் வந்தது. ஆதாம் பழத்தை சாப்பிட்டதால் பாவம் வந்தது என்றால், அதை விட முக்கியமானது, தேவனுக்கு கீழ்ப்படியாததால் பாவம் வந்தது. அவர் ஆதாமை படைத்ததன் நோக்கம், தேவபக்தியுள்ள சந்ததியை பெறும்படியாக. ஆனால் பாவத்தினால் மனிதன் விழுந்து போனான்.

ஆதாம் செய்த பாவம் என்ன?

இம்மரத்தின் கனியை புசிக்க கூடாது என்ற தேவனுடைய வார்த்தைக்கு அவன் கீழ்ப்படியவில்லை. கீழ்ப்படியாமை தான் பாவம்.

வேதத்தின் அடிப்படை வசனம் என்ன என்று நமக்குத் தெரியும்.

இவ்வசனம் தான் வேதத்தின் ஆதார வசனம். இதை நோக்கி தான் வேதம் பயணப்பட்டிருக்கும். ஆதாமுக்கு எத்தனை குழந்தைகள் இருந்தாலும், சேத் குடும்ப வரலாறு தான் கொடுக்கப்பட்டிருக்கும். ஆதாமிலிருந்து இயேசு வரை உள்ள ஒரு குடும்பத்தின் வரலாறு தான் வேதபுத்தகம். தேவன் சாத்தானிடம் சொல்லி விட்டார், “பெண்ணிடத்தில் பிறக்கப்போகும் ஒரு பிள்ளை, உன்னை அழிக்கும்” என்று. ஆனால் எந்த பிள்ளை என்று சாத்தானுக்கு தெரியாது. ஆதாமின் இரு மகன்களை பார்க்கிறான். ஆபேல் நல்லவனாகவும், காயீன் கொஞ்சம் தவறுபவனாகவும் தெரிகிறான். எனவே, ‘ஆபேலை கொன்று விட்டால் எல்லாம் முடிந்து விடும், ஆபேலிடம் தான், அந்த பரிசுத்த வித்து இருக்கிறது’ என்று எண்ணி, ஆபேலின் கதையை முடிக்கிறான். ஆனால் பரிசுத்த வித்து, சேத்திடம் வருகிறது.

ஆனால் பரிசுத்த வித்து யார் மூலமாக வருகிறது என்பது சாத்தானுக்கு தெரியவில்லை. தேவன் அதை மறைத்து வைத்திருந்தார். எனவே, அனைத்து மக்களையும் கறைப்படுத்த நினைத்து, தேவபுத்திரர்களை மனுஷ குமாரத்திகளோடு, கலக்க விட்டு, எல்லா மனிதரையும் அசுத்தமாக்கினான் என்று ஏனோக்கின் புத்தகம் மூலம் அறிந்தோம். ஆனாலும் தேவன், நோவா என்னும் ஒரு மனிதனை, எந்த அசுத்த வித்தும் கலக்காதவாறு, பாதுகாத்து, புது உலகை படைத்தார். புதிய உலகம் என்பது வேறு, புதிய பூமி என்பது வேறு. புதிய உலகம் என்பதை, Day 0 என்று கூறுவார்கள். அதே பூமி தான், ஆனால் நில அமைப்பும், கால நிலையும் மாறி இருக்கும்.

எடுத்துக்காட்டாக, நோவாவின் காலத்தில், வெள்ள பெருக்குக்கு முன், பூமியின் மேலே ஒரு தண்ணீர் படலம் இருந்ததால், சூரிய கதிர்கள் உலகுக்கு வராது, ஆனால் வெள்ள பெருக்குக்கு பின், கதிர்கள் உள்ளே வந்ததால், திராட்சை ரசம் புளித்தல், நொதித்தல் என்னும் செயல்பாடுகளுக்கு உட்பட்டு, தெரியாமல் குடித்த நோவா குடிகாரர் போல மாறினார் என்பதை பார்த்தோம். இதுதான் புதிய உலகம். அதே பூமி, ஆனால் உலகம் புதியது. நம் ஆண்டவரின் 1000 வருட அரசாட்சியில் கூட, அதே பூமி இருக்கும், புதிய உலகம் இருக்கும். எப்படி வெள்ள பெருக்குக்கு பின்னர், ஒரே கண்டமாக இருந்த பூமி, பல கண்டங்களாக மாறியதோ, அதேபோல, புதிய நில அமைப்பு 1000 வருட அரசாட்சியிலும் கூட இருக்கும். அதன் பின்னர் சாத்தானை தோற்கடித்து, புதிய பூமியை கொண்டு வருவார்.  

நோவாவுக்கு பின்னர், தேவன் எதிர்பார்த்த பரிசுத்த சந்ததி வந்ததா என்று பார்த்தால், இல்லை. காம் மூலம் பூமி சபிக்கப்பட்டது. ஆனாலும், சேமுடைய சந்ததி மூலமாக பரிசுத்த வித்து, அமைதியாக பயணித்து வந்தது.

சேமுக்கு பின்னர், இந்த பரிசுத்த வித்து யாரிடம் இருக்கிறது என்பதை சாத்தானால் கண்டறிய முடியவில்லை. ஆனால், அது ஆபிரகாம் வரை அமைதியாக பயணித்து வந்தது. ஆபிரகாம் பிறக்கும்போது, நோவாவிலிருந்து எல்லாரும் உயிரோடு இருந்தார்கள் என்பதையும் நாம் பார்த்தோம். ஆபிரகாம் வரை, வெறும் பரிசுத்த வித்தாக மட்டுமே வந்தது, ஆபிரகாமுக்கு, ஒரு இடத்தையும், ஒரு கூட்ட ஜனங்களையும்(கடற்கரை மணல் அளவு) வாக்கு கொடுக்கப்பட்டது.

பின்னர், அந்த வாக்குதத்த பூமியிலிருந்து, யாக்கோபை 70 பேராக எகிப்துக்கு அனுப்பினார். அந்த 70பேர், கானானிலேயே இருந்திருந்தால், கானானியராகவே இருந்திருப்பர். அதனால், எகிப்துக்கு போக வைத்தார். எகிப்தில் அடிமையாக இருந்தால் தான், எகிப்தியர் இஸ்ரவேலரை திருமணம் செய்ய மாட்டார்கள் என்று, எகிப்திலும் அவர்களை அடிமையாக வைத்து, கர்த்தர் பாதுகாத்தார் என்று பார்த்தோம். அதன் பின்னர் கிட்டத்தட்ட 24 முதல் 30 லட்சம் பேராக திரும்பி வந்தார்கள். கானானியரை துரத்தி விட்டு, அவர்கள் குடியேறினார்கள். 70 பேராக எகிப்துக்கு போன யாக்கோபின் குடும்பம், 24லட்சம் பேராக திரும்பி வந்து, இஸ்ரவேல் என்னும் தேசமானார்கள்.

பரிசுத்த சந்ததி அமைதியாக பயணித்து, தாவீது வரை வந்தது. தாவீதின் காலத்தில், ஒரே ராஜாவாக, இஸ்ரவேலை ஆட்சி செய்து, தேவ சித்தத்தை நிறைவேற்றினார். எருசலேமை பிடித்து, தாவீதின் நகரமாக்கி, பரலோக சாயலைக் கொண்டு வந்தார். தாவீதுக்கு பின்னர், சாலமோன் மூலமாக, இயேசுவுக்கு ராஜாவின் அதிகாரமும், நாத்தான் என்னும் மகன் மூலம், பரிசுத்த வித்து, ஸ்திரீயாகிய மரியாளுக்கு வந்து, இயேசுவுக்கு வந்தது. பரிசுத்த வித்து இயேசு வரை வந்தது. அதன் பின்னர், இயேசுவுக்கு திருமணம் ஆகவில்லை, குழந்தை இல்லை. அப்படியானால் பரிசுத்த வித்து, அதோடு முடிந்ததா?

அதற்கு தான் 14வது தலைமுறை என்று பார்த்தோம். ஆம், வேதத்தில் ஒரு வசனம் மறைந்து இருக்கிறது, அது 14வது தலைமுறையான நம்மைக் குறிக்கிறது. இயேசு …….( நம் பெயர்) பெற்றார் என்பது மறைந்திருக்கிறது. இயேசு டேனியலைப் பெற்றார் அல்லது இயேசு பெனியலைப் பெற்றார் என்று நம் பெயரை போட்டுக்கொள்ளலாம். இரட்சிக்கப்பட்ட எல்லாருமே, இயேசுவின் பிள்ளைகள் தான். இயேசு எனக்கு அப்பா என்பது வெறும் வாய் வார்த்தை அல்ல. அது வேதத்தில் எழுதப்பட்ட உண்மையுள்ள வார்த்தை. ஆனால் மறைந்திருக்கிற உண்மை.

நாம் எப்பொழுது தேவனை ஏற்றுக்கொண்டோமோ, அப்போதே இயேசுவின் பிள்ளைகள் ஆகிவிட்டோம். அப்போதே ஆபிரகாமுக்கும் பிள்ளைகள் ஆகி விட்டோம்.

ஆதாமின் தவறு நிவிர்த்தியானதா?

ஆதாம் செய்த தவறு, கீழ்ப்படியாதது என்று பார்த்தோம். இயேசு என்ன கீழ்ப்படிந்தார்?

இந்த வசனம் எனக்கு மிகவும் பிடித்தமான வசனம். கிட்டத்தட்ட 2 வருடங்களாக நான் புரிந்து கொள்ள முயற்சித்தும், இன்னும் முயற்சி செய்து கொண்டிருக்கிற வசனம்.

உங்களுக்கு என்றாவது தோன்றியிருக்கிறதா? இயேசு சிலுவையில் பாவத்தை ஜெயித்து விட்டார் என்றால், ஏன் இன்றும் கூட ஒரு விசுவாசி பாவத்தில் விழுகிறான்? இயேசு சாத்தானை ஜெயித்து விட்டார் என்றால், இன்றும் சாத்தானுக்கு வல்லமை இருக்கிறது ஏன்? இக்கேள்விகள் தான் வசனத்தின் ஆழங்களுக்கு நம்மை கூட்டிச் செல்லும்.

தேவன் ஆதாமுக்கு பிறகு, யாராவது முழுவதுமாக தேவனுக்கு கீழ்ப்படிவார்களா என்று பார்க்கிறார். அவரவர் தங்கள் வாழ்க்கையை பார்க்கிறார்கள், தேவனை தேடவில்லை. நோவாவிடம் எதிர்பார்த்தார். அந்த நோவாவே புதிய உலகத்துக்கு சாபத்தைக் கொடுத்து விட்டார். திரும்ப இஸ்ரவேலர் என்று ஒரு கூட்ட ஜனங்களை உருவாக்கி, மோசே மூலமாக நியாயப்பிரமாணம் கொடுத்தார். நியாயப்பிரமாணத்தில், 10 கற்பனைகளும், 613 கட்டளைகளும் உண்டு. நியாயப்பிரமாணத்தின் நோக்கம் என்ன? அதற்கு கீழ்ப்படிய வேண்டும். இந்த 10 கற்பனை, 613 கட்டளைகளுக்கு எந்த மனிதன் கீழ்ப்படிகிறானோ, அவன்தான் வெற்றி பெற்றவன். ஆதாமின் பாவத்தால் வந்தது என்ன? மரணம். அதாவது ஜீவனை (Life) இழந்து விட்டான். தேவன் ஜனங்களை மீட்பதற்காக, அதாவது இழந்த ஜீவனை திரும்ப பெற்று கொள்வதற்காக கொடுத்ததே, நியாயப்பிரமாணம். மீட்பு, இரட்சிப்பு என்று பேசிகிறோமே, அது இழந்து போன ஜீவனைப் பற்றியதுதான்.

மனிதனுக்காக தேவன் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தாலும், மனிதனால் முழுமையாக நியாயப்பிரமாணத்துக்கு கீழ்ப்படிய முடியவில்லை. அப்போதும் தேவன் மனிதனைக் கைவிடவில்லை. மனிதனுக்கு அடுத்த சந்தர்ப்பம் (next chance) கொடுக்க விரும்பினார். அதற்காக கொடுத்ததுதான் பலிகள்.  

ஒருவன் எல்லா நியாயப்பிரமாணத்தையும் பின்பற்றி, ஒன்றே ஒன்றில் தவறினால், எல்லாவற்றிலும் தவறியது போலதான் கருதப்படும். அதற்காக தேவன் கொடுத்த மீட்பு தான், பலி. குற்ற நிவாரண பலி, பாவ நிவாரண பலி, சமாதான பலி என்று தேவனிடம் நம்மை சேர்க்க உதவியது பலிகள். பலிகள் பற்றி வரும் காலங்களில், கர்த்தருக்கு சித்தமானால் நாம் தெரிந்து கொள்ளலாம்.

 நியாயப்பிரமாணம்- எடுத்துக்காட்டு

நியாயப்பிரமாணம் என்பது மனிதனை மீட்பதற்காக கொடுக்கப்பட்டது. ஆனால் மனிதனால் அதை நிறைவேற்ற முடியவில்லை என்பதுதான் உண்மை. எடுத்துக்காட்டாக ஒரு காரியம் பார்க்கலாம்.  என்னிடம் ஒருவர், கையில் குழந்தையுடன் வந்து பிச்சை கேட்கிறார், அவர் விக்கிரகத்துக்காக பிச்சை கேட்பவர் என்று, அவரைப் பார்த்தவுடன் தெரிகிறது என்றால், நான் இல்லை என்று சொல்லி விடுவேன். கொடுக்க மாட்டேன். ஏனென்றால் நியாயப்பிரமாணத்தின்படி, விக்கிரகங்களுக்கு உடன்படக்கூடாது. அது பாவம். ஆனால், ஒருவேளை, கையில் வைத்திருக்கும் குழந்தை உண்மையில் பசிக்காக அழுகிறது, அவள் பிச்சை கேட்பது குழந்தைக்காக. ஆனால் அவள் உடையைப் பார்த்து நான் மறுத்துவிட்டேன் என்று வைத்துக்கொள்ளலாம். இப்போது நியாயப்பிரமாணத்தின்படி, உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு. அப்படிஎன்றால், என்னிடத்தில் கேட்பது யாராக இருந்தாலும் நான் கொடுக்க வேண்டும். ஆனால் நான் கொடுக்கவில்லை. எனவே இப்போது நான் பாவம் செய்து விட்டேன். இது தான் நியாயப்பிரமாணம். 

நியாயப்பிரமாண காலத்தில், மனிதர்களுக்கு பரிசுத்த ஆவியானவர் நிரந்தரமாக கொடுக்கப்படவில்லை. எனவே அவர்களுக்கு முடிவெடுக்க தெரியவில்லை. இப்போது நம் காலத்தில், தேவன் புதிய உடன்படிக்கை தந்திருக்கிறார். அது என்ன புதிய உடன்படிக்கை?

இதுதான் புதிய உடன்படிக்கை. நியாயப்பிரமாணம் நம் உள்ளத்தில் இருக்கிறது. நமக்குள் ஆவியானவர் இருக்கிறார். அவர் நமக்கு சரியான வழிகாட்டுவார். “ஒருவேளை விக்கிரக உடை அணிந்து வந்தாலும், அவளுக்கு தேவை இருக்கிறது நீ கொடு” என்று ஆவியானவர் நம் உள்ளத்தில் பேசுவார்.  இதுதான் நமக்கு கிடைத்திருக்கிற பெரிய பாக்கியம்.

ஒவ்வொரு வருடமும், ஆலயத்துக்கு போய், பாவ நிவாரணபலி செலுத்த வேண்டும். அதற்கு பின்பு பாவம் செய்யக்கூடாது. அப்படி பாவம் செய்துவிட்டால், அடுத்த பாவ நிவாரண பண்டிகை வரை நான் காத்திருக்க வேண்டும். இப்படித்தான் நியாயப்பிரமாண காலம் இருந்தது. ஆனால் இப்போது எனக்கான பலி ஏற்கனவே செலுத்தப்பட்டு விட்டது. நான் பாவம் செய்து விட்டால், உண்மையாக உணர்ந்து அந்த இடத்திலே, அவரிடம் மன்னிப்பு கேட்டால், இயேசுவின் இரத்தம் என்னை மன்னித்து, நீதிமான் ஆக்கிவிடும். இது நமக்கு கிடைத்திருக்கிற பாக்கியம்.

நியாயப்பிரமாணம் 613 கட்டளைகள் மாடிப்படி போல. 100வது கட்டளையில் நான் தவறினால், திரும்ப முதல் படியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். இதுதான் நியாயப்பிரமாண காலம். ஆனால், இப்போது புதிய உடன்படிக்கையில், இயேசுவின் இரத்தம் என்னோடு இருக்கிறது. கிருபை எனக்கு இருக்கிறது. ஒரு Lift போல இருக்கும். நான் 50வது கட்டளையில் தவறினால், 50வது மாடியிலே லிஃப்ட்டுக்குள் இருப்பேன். தரைதளத்துக்கு போக மாட்டேன். சரிசெய்பவர், 50வது மாடிக்கு வந்து, லிஃப்ட்டை சரி செய்வார், அதுபோல, ஆவியானவர், எந்த நிலையில் நான் இருக்கிறேனோ, அங்கே வந்து என்னை சரிசெய்வார். பின் மீண்டுமாக நான் லிஃப்ட்டில் செல்ல ஆரம்பிப்பேன். இது தான் நம் காலம். நமக்கு கிருபை கிடைத்திருக்கிறது, இயேசுவின் இரத்தம் நமக்காக பேசுகிறது. புதிய உடன்படிக்கையில் இருக்கிறோம். அவருடைய பிள்ளையாக இருக்கிறோம். தேவன் நமக்கு கொடுத்த பாக்கியம் பெரிது. அதை உணர்ந்து செயல்படுவோம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *