இஸ்ரவேலின் தேவனுடைய நாமத்தில் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் என்று வேதத்தில் வாசிக்கும் போதெல்லாம், இஸ்ரவேலைப் பற்றி அதிகமாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்படும். ஏன் அவர் இஸ்ரவேலின் தேவன்? இந்தியாவின் தேவனாக ஏன் அவர் இருந்திருக்கக் கூடாது? பிற மதத்தினர் சொல்வது போல வெளிநாட்டு கடவுளை வணங்கிக் கொண்டிருக்கிறேனா? இது போன்ற எண்ணங்கள் எனக்கு பள்ளிப்பருவத்திலே அதிகமாக வந்தது உண்டு. எவ்வளவு அதிகமாக வேதத்தை வாசிக்கிறேனோ, அவ்வளவு அதிகமாக இதைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருப்பேன். ஒருமுறை கல்லூரி காலத்தில் எனது தோழி என்னிடம், இயேசு எங்கே பிறந்தார் என்று கேட்டாள். நான் இஸ்ரேல் என்று பதில் சொல்லும்போது, “ஓ, வேற நாடா? நான் ஏதோ வட இந்தியா ல இருக்கும்னு நினைத்தேன்” என்று கூறினாள். அப்போது எனக்கே, நாம் வேறு நாட்டு கடவுளை வழிபடுகிறோமோ என்ற சந்தேகமே வந்து விட்டது. என் தெய்வத்தை பற்றி நான் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற தேடல் அதிகமானது. எனது கல்லூரி படிப்பை முடித்த பின், எனது திருமணத்திற்கு இடையில், சரியாக ஒரு வருடம் நான் வீட்டில் தான் இருந்தேன். அந்த ஒரு வருடத்தில் அதிகமாக இதைப்பற்றி வலைத்தளத்தில் தியானித்தேன். ஒரு கட்டத்தில் என்னுடைய தேடல், ‘இயேசு ஒரு தீர்க்கதரிசி மட்டுமே, தேவகுமாரன் அல்ல’ என்ற இடத்தில் வந்து நின்றது. மேலும், யூதர்கள் வழிபடும் யாவே கடவுளும், இஸ்லாமியரின் கடவுளும் கிட்டத்தட்ட ஒரே கடவுள்தான். யூதர்களின் கதை ஈசாக்கு வைத்து இருக்கும், இஸ்லாமியரின் கதை இஸ்மவேலை வைத்து இருக்கும் என்று ஓரளவு தவறாக எதையோ புரிந்து கொண்டேன். ஏதோ தவறான கருத்தில் நுழைகிறேன் என்பது புரிந்ததும், அந்த டாப்பிக் விட்டு வெளியே வந்து விட்டேன். பின்னர் திருமணம், வேலை, குழந்தைகள் என்று பிஸியாக மாறிய நான், மீண்டும் இப்போது தனிமை நேரம் கிடைக்க, இப்போது நான் தேடாமலேயே கிடைத்தது அநேக பொக்கிஷங்கள். இஸ்ரவேல் தேசம் இப்போது இஸ்ரேலாக, யூதர்களின் தேசமாக, உலக நாடுகளுக்கு சவால் விடும் நாடாக வளர்ந்து நிற்பது ஆச்சரியமே. அதன் வரலாற்றைக் கொஞ்சம் தெரிந்து கொள்வோமா?
ஏன் இஸ்ரேல்?
ஏன் நாம் இஸ்ரேலைப் பற்றி படிக்க வேண்டும்? ஏதோ ஒரு காலத்தில் இஸ்ரவேலர்கள் ஆண்டவரைத் தொழுது கொண்டு வந்தனர். ஆனால் இப்பொழுது அவர் நம்முடைய தேவனாகி விட்டாரே! நாம் ஏன் இஸ்ரவேலைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்? என்ற எண்ணம் நமக்கு ஏற்பட்டால், ஓரளவுக்கு அது சரிதான். நிச்சயமாக இப்பொழுது இஸ்ரேலோ, எருசலேமோ புனிதமான இடம் கிடையாது. பிற மதத்தினர் புனித பயணம் மேற்கொள்வது போல, நாம் இஸ்ரவேலுக்கு புனித பயணம் என்று மேற்கொள்ள அவசியமில்லை.
புனிதப் பயணம் சென்று வந்த சிலர் கூறிய கருத்து என்னவென்றால், இயேசு சிலுவையை சுமந்து சென்ற இடத்தில் நாமும் செல்லலாம் என்று, எடையில்லா பெரிய சிலுவை அந்த வீதியில் வாடகைக்கு விடப்படுகிறதாம். அங்கு செல்லும் வெளிநாட்டு பயணி, ஒருகையில் சிலுவையைப் பிடித்துக் கொண்டு, மறுகையில் கோக் குடித்துக் கொண்டு, போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்கள். இதுதான் புனித பயணம் செல்லும் பயணிகள் செய்கிற காரியம்.
சரி, ஏதோ பக்தி பரவசம் என்று எடுத்துக் கொண்டாலும், எருசலேம் எதற்கு பெயர் பெற்றது என்று தெரியுமா? ஓரினச்சேர்க்கையாளர்கள் உலகம் முழுவதும் இருந்து எருசலேமில் வந்து, ஐந்து நாட்கள் பண்டிகை கொண்டாட்டமாக, எருசலேமின் வீதிகளில் அருவருப்பான காரியங்களைச் செய்து வருகின்றனர். உலகம் முழுவதும் உள்ள ஓரினச் சேர்க்கையாளர்களின் தலைமையகம் எருசலேம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
உலகத்தைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் நாம் இஸ்ரேலுக்கு போகலாம். ஆனால் புனிதபயணமாக நாம் போவது சரியாக இருக்காது. ஏனெனில் இயேசு கிறிஸ்து இன்று நமக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்… நம்முடன் இருக்கிறார். இயேசு இங்கே நமக்குள் இருக்கும்போது, இஸ்ரேலில் யாரைத்தேடி போக வேண்டும்? பின் எதற்காக இஸ்ரவேலைப் பற்றி படிக்க வேண்டும்? எதற்காக இந்த கட்டுரை?
32 அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்த காலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்.
33 அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்.
மத்தேயு 24:32, 33
வேதத்தில் அத்திமரம், திராட்சைக்கொடி, திராட்சைத் தோட்டம் என்று குறிப்பிட்டிருப்பது இஸ்ரேலைத் தான் என்பது நாம் அறிந்ததே. அத்திமரம் துளிர்விடும் போது, என்று வேதத்ததில் குறிப்பிட்டிருப்பதால், இஸ்ரேல் நாடு தோன்றி துளிர்விடும் போது என்று அர்த்தம். இப்போது இஸ்ரேல் தோன்றி கிட்டத்தட்ட 75 ஆண்டு ஆகிறது. துளிர்விட்டு 75 ஆண்டுகள் ஆனபடியால், நம் மணவாளன் எந்த நேரத்திலும் வந்து நம்மை அழைத்துச் செல்லலாம். அதன்பின் அந்திக்கிறிஸ்துவின் ஆட்சி எப்போது வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். அதை நாம் அறிந்து கொள்வது அவசியமே.. வேதத்தில் கூறிய அநேக தீர்க்கதரிசனங்கள் நம் காலத்தில் நிறைவேறிக் கொண்டிருப்பது இன்னொரு அதிசயம். இப்போது நிறைவேறிக் கொண்டிருக்கிற தீர்க்கதரிசனங்களை, இக்கட்டுரையின் இறுதியில் சேர்த்து பதிப்பிக்கிறேன். இதைத் தெரிந்து கொள்வது மூலமாக, நம் தேவனிடம் இன்னும் அதிகமாக கிட்டிச் சேர்ந்து, அவர் வருகைக்கு ஆயத்தமாவோம்.
என்னைத் தூண்டிய காரணம்
இஸ்ரவேலைப் பற்றி நான் படிப்பதற்கு என்னைத் தூண்டியது ஒரே ஒரு கருத்து தான். நான் கல்லூரி படித்த நாட்களில் யார் மூலமாகவோ, நான் கேள்விப்பட்ட ஒன்று, இயேசு ஏன் இஸ்ரேலில் பிறந்தார் என்ற என்னுடைய பலநாள் கேள்விக்கு ஒருநாள் கிடைத்த விடையாக அமைந்தது. “உலகின் மையப்புள்ளி இஸ்ரேல் என்றும், அங்கே இயேசு பிறந்தால், உலகம் முழுவதுக்கும் அவர் பொதுவானவர் என்றும் அர்த்தம்” என்று கேட்டவுடன் இஸ்ரவேலின் மீதான ஆர்வம் இன்னும் அதிகமாகியது.
இந்த வரைபடத்தில் நடுவில் மிகச்சிறியதாக தெரியும் தேசமே இஸ்ரேல் தேசம்.
ஆனால் நான் தேடியவரையில் centre of earth, Turkey தான். எது உண்மை என்பதை இறைவனே அறிவார். ஆனால் யூதர்களைப் பற்றி, இஸ்ரவேலரைப் பற்றி அதிகம் படிக்கத் தூண்டியது, இந்த மையப்புள்ளி கருத்து தான் என்பதை மறுக்க முடியாது.
வரும் பதிவுகளில் தொடர்ச்சியாக பார்க்கலாம்.
குறிப்பு
இப்பதிவுகள் இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது. ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.
Leave a Reply