இதுவரை நாம் பார்த்த காரியங்களின் தொகுப்பு தான் இப்பதிவு. வேதத்தில் உள்ள தீர்க்கதரிசன நிறைவேறுதலை இனி பார்க்க இருக்கிறோம். அதற்கான ஒரு சின்ன அறிமுக தொகுப்பு தான் இந்த பதிவு. இதுவரை நாம் பார்த்த ஒவ்வொரு ராஜ்யமும், வேதத்தில் தீர்க்கதரிசனமாக கூறப்பட்டுள்ளது. அந்த காரியங்களை தொடர்ச்சியாக நாம் பார்க்க இருக்கிறோம்.

இதுவரையில் நாம் பிரதானமான ராஜ்யங்களைப் பற்றிப் பார்த்தோம். முதலில் ராஜ்யம் ‌அமைத்தவர் நிம்ரோத். தேவனுக்கு எதிராக எப்படி மக்களை ஒன்று கூட்டினார் என்று பார்த்தோம். “கர்த்தருக்கு முன் பலத்த வேட்டைக்காரன்” என வேதம் ஏன் அவரைக் குறித்து கூறுகிறது என பார்த்தோம். அவர் மனைவி சிம்ராஸ் மூலம் வேசித்தனம், சிலை வழிபாடு பரவியது.

அடுத்ததாக எகிப்தியர்கள் இஸ்ரவேலரை அடிமைப்படுத்தினர். கர்த்தர் அவர்களைக் கொடுமைப்படுத்துவதற்காக எகிப்தியரிடம் அடிமையாக்கவில்லை. ஆபிரகாமுக்கு பின்னர், கானான் தேசத்திலேயே அவர்கள் வாழ்ந்து இருந்தார்களானால், வெறும் கானானியராகவே வாழ்ந்திருப்பார்கள். எனவே தான் அவர்களை தேவன் எகிப்துக்கு அழைத்துச்சென்றார். எகிப்தில், அவர்களை சுதந்திரமாக வாழ விட்டிருந்தால், அவர்களும் எகிப்தியராகவே வாழ்ந்திருப்பார்கள். எனவே தான் அடிமையாக அவர்களை விட்டார். எந்த எகிப்தியனும் அடிமையை திருமணம் செய்ய மாட்டான். அப்படி அவர்களை பொத்தி பாதுகாத்து, 70 பேராக போனவர்களை, 30 இலட்சம் பேராக பெருக்கி, இஸ்ரவேலர் என்ற இனத்தை உருவாக்கினார் தேவன். எகிப்தியர், அவர்கள் காலங்களில், பிறக்கும் ஆண் குழந்தைகளைக் கூட கொன்று ஆட்சி செய்துள்ளனர் எகிப்தியர்கள். ஆனாலும் யோசுவா மற்றும், மோசேயின் மூலமாக, கானானியர்களின் தேசத்தைப் பிடித்து இஸ்ரவேல் தேசம் உருவானது.

இஸ்ரேல் தேசம் உருவான பின்னர், நியாயாதிபதிகள் ஆட்சி நடந்தது. அவர்களுக்கு தேவனே ராஜாவாக இருந்தார். ஆனால் மக்கள், தங்களுக்கு ராஜா வேண்டும் என்று கேட்டதால், இஸ்ரேல் தேசத்துக்கு சவுல், தாவீது, சாலமோன் ராஜாவாகினர். சாலொமோனுடைய குமாரனுடைய நாட்களில், தேசம் வடதேசம் இஸ்ரேல் என்றும், தென்தேசம் யூதேயா என்றும் பிரிக்கப்பட்டது. இஸ்ரேல் தலைநகர் சமாரியா. யூதேயா தலைநகர் எருசலேம்.

முதல் சாம்ராஜ்யம் அசிரிய சாம்ராஜ்யம். அசீரியர்கள் இஸ்ரேல் தேசமாகிய வடதேசத்தில் இருந்தவர்களை, பல தேசங்களில் கொண்டு அகதிகளாக வாழ வைத்தார்கள். இன்றைக்கும் தெலைந்து போன பத்து கோத்திரங்கள் The lost 10 Tribes என்று அவர்களைக் கூறுகிறோம். அசீரிய சாம்ராஜ்யத்தில் மக்களை எவ்வாறெல்லாம் கொடுமைப் படுத்தினார்கள், மக்களின் தலைகளை வெட்டி குவியலாக வைத்தார்கள், கண்களை பிடுங்கி அவர்கள் கெஞ்சலை ரசித்தார்கள், என்றெல்லாம் நாம் பார்த்தோம்.

அடுத்ததாக பாபிலோன் சாம்ராஜ்யம். ராஜபுத்திரர்களை அடிமைகளாக சிறைப்பிடித்து சென்றார்கள். அவர்கள் பெயரை மாற்றி, உண்ணும் உணவை மாற்றி, மொழியை மாற்றி, பாபிலோனில் அடிமைகளாக வைத்தார்கள். பாபிலோன் சாம்ராஜ்யத்தில் எருசலேம் தேவாலய பரிசுத்த பாத்திரங்களை எடுத்து, அதில் பெல்ஷாத்சார் ராஜாவும், அவனுடைய மனைவியும், அவனுடைய வைப்பாட்டிகளும் மது ஊற்றிக் குடித்தார்கள். யூதர்களின் மத நம்பிக்கையை இழிவுபடுத்தினார்கள். பாபிலோன் சாம்ராஜ்யத்தில் கூட யூதர்கள் துன்புறுத்தப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள். உயிருக்குப் பயந்து பிற தேசங்களில் அகதிகளாகப் போனார்கள்.

மூன்றாவதாக மேதிய பெர்சிய சாம்ராஜ்யம். மேதியர்களும், பெர்சியர்களும் இணைந்து கூட்டாட்சி செய்தார்கள். பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் மூலம் தோவாலயம் கட்டப்பட அனுமதி அளிக்கப்பட்டது. கோரேஸ்க்கு பிறகு வந்த மன்னர்கள், யூதர்களின் எதிரிகள் கூறிய பேச்சைக் கேட்டு, தேவாலய கட்டுமான பணிக்குத் தடை விதித்தார்கள். பலவித இன்னலுக்குப் பிறகு தேவாலயம் கட்டி முடிக்கப்பட்டது.

நான்காவதாக, கிரேக்க சாம்ராஜ்யம். அலெக்ஸாண்டர் மகாராஜா, உலகின் 75 சதவீத நாடுகளைப் பிடித்தார். அவருக்கு பின், அவருடைய நான்கு தளபதிகளின் கீழ் தேசம் நான்காகப் பிரிக்கப்பட்டது. அந்தியோகஸ் எஃபிபானஸ் என்ற ராஜா, கிரேக்க கலாச்சாரத்தை எருசலேமில் பரப்ப தீவிரமாக இருந்தார். யூத மக்களை, ஓய்வுநாள் கலாச்சாரத்தை கைவிட சொல்லி துன்புறுத்தினார். ஓய்வுநாளில், யூதர்களை வேலை செய்ய சொல்லிக் கட்டாயப்படுத்தினார். யூத குழந்தைகளுக்கு விருத்தசேதனம் செய்தால், அந்தக் குழந்தையைக் கொன்றார். விருத்தசேதனத்துக்கு தடை கொண்டு வந்தார். எருசலேம் தேவாலயத்தில், கிரேக்க தெய்வமாகிய சீயஸ் சிலையை நிறுவி, ஒவ்வொரு யூதனையும் பணிந்து கொள்ளச் சொல்லி கட்டாயப்படுத்தினான். பணியாத யூதர்களைக் கொன்று குவித்தான். தன்னை எதிர்த்த யூதர்களை, ஓய்வுநாளில் போர் தொடுத்து, கொன்று குவித்தான். பழைய ஏற்பாட்டு யூதர்களைப் பொறுத்தவரை, ஓய்வுநாளில் போர் செய்யக்கூடாது. தேவாலய பலிபீடத்தின் மீது, அசுத்த மிருகமான பன்றியை, தான் பலியிட்டது மட்டுமல்லாது, யூதர்களையும் பலியிடச் சொல்லி கட்டாயப்படுத்தினான். மக்கபேயர் எழும்பி சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேற்றி, வெற்றி பெறும் வரை யூதர்கள் மகா தீங்குக்கு உள்ளானார்கள்.

ஐந்தாவது ரோம சாம்ராஜ்யத்தில், யூதர்கள் அடைந்த துயர் சொல்ல முடியாதது. இயேசுவை சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்தவர்கள் யூதர், சிலுவையில்அறைந்தவர்கள் ரோமர். அவருடைய சீஷர் ஒவ்வொருவரும் எப்படி மரித்தார்கள் என்று அறிந்தாலே, ரோமர்களின் கொடுங்கோல் ஆட்சியை அறியலாம். எருசலேம் என்ற பெயர், இஸ்ரேல் என்ற பெயர் வரலாற்றில் இருக்கக்கூடாது என்று, இஸ்ரேலுக்கு பெயர் மாற்றம் செய்து,‌ஒரு இஸ்ரவேலன் கூட இல்லாத அளவுக்கு அடித்து‌ துரத்தியவர்கள் ரோமர். புதிதாக முளைத்த கிறிஸ்தவ மதத்தையும் எதிர்த்து, கிறிஸ்தவர்களுக்கும் எதிராக வந்தவர்கள் ரோமர்.

இவ்வாறு யூதர்கள் ஒவ்வொரு ராஜ்யத்திலும் அடைந்த துயரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

அதன் பின்னர் ஆங்கிலேய ஆட்சி, அதைத் தொடர்ந்து அமெரிக்கா ஆட்சி. அடுத்ததாக European Union என்று எதிர்பார்க்கிறார்கள். கடைசியாக வரும் அந்தி கிறிஸ்து ஒருவேளை அந்த EU ஆட்சியில் இருந்தே வரலாம். வரும் காரியங்கள் ஆண்டவரே அறிவார். அந்தி கிறிஸ்துவின் ஆட்சியில், கிறிஸ்தவர்கள் துன்பப்பட்டாலும், யூதர்களே அதிகமாக பாடு அனுபவிக்க போகிறவர்கள். ஏனெனில் கிறிஸ்தவர்கள் இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப் படுவார்கள். இயேசுவை ஏற்றுக்கொள்ளாத யூதர்களே அந்த நாட்களில் பாடனுபவிப்பார்கள்.

வேதாகம தரிசனங்கள்

இதுவரையில் வேதத்தில் பல பகுதிகளைப் படித்திருப்போம். இப்போது வரலாறு முழுவதையும் நாம் ஓரளவுக்கு அறிந்து கொண்டதால், இனி வேதத்தை படிக்கும்போது ஒரு தெளிவு கிடைக்கும். வேதாகமத்தில் கடைசி நாட்களில் நடக்கப்போகிற நிகழ்வுகளைக் குறித்து அநேக தரிசனங்கள் கூறப்பட்டிருக்கிறது. அவையெல்லாம் தனித்தனியாக படிக்க வேண்டியவை. மிகச் சுருக்கமாக அந்த தரிசனங்கள் எப்படி நிறைவேறின என்பதை வரும் பதிவுகளில் பார்க்க இருக்கிறோம்.

1. தானியேல் 2ம் அதிகாரம்

2. தானியேல் 7ம் அதிகாரம்

3. தானியேல் 9ம் அதிகாரம்

4. வெளிப்படுத்தின விசேஷம் 13ம் அதிகாரம்

5. வெளிப்படுத்தின விசேஷம் 17ம் அதிகாரம்

வரும் பதிவுகளில் தொடர்ச்சியாக பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *