இஸ்ரவேலர் பற்றிய பதிவுகளை பார்த்து வருகிறோம். முதலில் ஆதாம் முதல் உள்ள மனிதர்களை வரிசையாகவும், பரிசுத்த வித்து உருவாகி ஆதாமிலிருந்து கடந்து வந்த வரிசையை பார்த்தோம். இஸ்ரவேல் நாடு உருவான விதம், நியாயாதிபதிகள் காலம், சவுல் அரசனான நிகழ்வு, தாவீது, சாலமோன், இஸ்ரேல் இரண்டாகப் பிரிதல், என்று பல நிகழ்வுகளை வரலாற்று ரீதியில் பார்த்தோம். இரண்டாகப் பிரிந்த தேசமானது, சமாரியா- எருசலேம், அல்லது இஸ்ரேல்-யூதேயா, அல்லது 10கோத்திரம்- 2 கோத்திரம் (யூதா,பென்யமீன் கோத்திரம்) என்று பிரிந்தது. அதன்பின், இஸ்ரேல் என்னும் 10 கோத்திரம், அதாவது சமாரியாவை தலைநகராக கொண்ட கொண்ட கோத்திரம், அசீரியாவின் பிடியில் சிக்கப்பட்டது என்று பார்த்தோம். பின்னர் எருசலேம், அதாவது யூதேயா பாபிலோனியரால் சிறைப்பட்டது என்பதை பார்த்தோம்.

பொதுவாக ஐந்து சாம்ராஜ்யங்கள், இஸ்ரவேலை ஆண்டதாக வரலாறு கூறுகிறது. அதன்படி, முதலில் எகிப்து பெரிய ராஜ்யம் அமைத்தாலும், அது சாம்ராஜ்யம் அல்ல. முதல் பெரிய சாம்ராஜ்யம் அசீரிய சாம்ராஜ்யம். அதன்பின் இரண்டாவது பெரிய சாம்ராஜ்யம் பாபிலோனிய சாம்ராஜ்யம். மூன்றாவது மேதிய பெர்சிய சாம்ராஜ்யம். நான்காவது கிரேக்க சாம்ராஜ்யம். ஐந்தாவது ரோம சாம்ராஜ்யம்.  

 கிட்டத்தட்ட 75 சதவீத உலகைப் பிடித்தவர் மாவீரன் அலெக்ஸாண்டர். தனது 32 வயதுக்குள்ளாக உலகையே தன் கைக்குள் கொண்டு வந்தவர் அலெக்ஸாண்டர். பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இருந்தது கிரேக்க சாம்ராஜ்யம். உலகம் முழுவதிலும், கிரேக்க கலாச்சாரத்தை திணிப்பதில் அதிக கவனம் செலுத்தியவர் அலெக்சாண்டர்.

கிரேக்க நாடுகளில், மாசிடோனியா தான், கலாச்சார குறைவான நாடாக இருந்தது. நாகரீக வளர்ச்சி இல்லாத நாடாக இருந்தது. அந்த நேரத்தில், அலெக்ஸாண்டரின் தந்தை இரண்டாம் பிலிப் ஆட்சி பொறுப்பேற்று, சீரமைப்பு செய்தார். தொழில்முறை இராணுவம் அமைத்து, மறுசீரமைப்பு செய்தார். கல்வி கொண்டு வந்தார். யாரும் மதிக்காத மாசிடோனியாவில்,  அந்த நேரத்தில் மாசிடோனியா மறுமலர்ச்சியைக் கொண்டு வந்தார் இரண்டாம் பிலிப். கிமு366ல் மாசிடோனியா தலைநகர் பெல்லாவில், இரண்டாம் பிலிப் மன்னனின், முதல் ஆண் மகனாக அலெக்ஸாண்டர் பிறந்தார். இரண்டாம் பிலிப்புக்கு அலெக்ஸாண்டரின் தாய் மூன்றாம் மனைவி. அநேக மனைவிகள் இருந்தாலும், முதல் ஆண் மகனாக பிறந்தவர் அலெக்ஸாண்டர் தான். வாரிசுரிமையிலும், தந்தையை படைக்காப்பாளன் ஒருவர் கொன்றதினாலும், தனது 20ம் வயதில் மன்னன் ஆனார் அலெக்ஸாண்டர்.

இந்த அலெக்ஸாண்டர் பல நாடுகளைக் கைப்பற்றினார். முக்கியமாக அதிக பலம் கொண்ட பெர்சியா நாட்டை தோற்கடித்தார். (இதற்கு முந்திய மேதிய பெர்சிய சாம்ராஜ்யம்) இந்த கிரேக்க அரசன் மகா அலெக்சாண்டர், எந்த நாட்டைப் பிடித்தாலும், அங்கே தன் கலாச்சாரத்தைப் புகுத்துவதை வழக்கமாகக் கொண்டார். தன் மொழியை அரச மொழியாக, நாடுகளின் மீது திணித்தார். அவருக்கே தெரியாமல், தேவசித்தத்தை செய்தவர் அலெக்ஸாண்டர்.

தான் ஜெயம் கொண்ட எல்லா தேசங்களிலும் அலுவல் மொழியாக கிரேக்க மொழியைப் புகுத்தினார் அலெக்ஸாண்டர். மக்கள் தங்களுக்குள் பேசும்போது, தங்கள் மொழியை பேசிக் கொள்ளலாம், ஆனால் வெளியிடங்களில் முக்கியமாக அரசவையில், கல்வியில், கிரேக்கம் தான் இருக்க வேண்டும் என்று உத்தரவு போட்டார். கிமு333லிருந்து கிரேக்க மொழி, உலகின் 75 சதவீத நாடுகளில் அலுவல் மொழியாக Official Language இருந்தது. நம் நாட்டிலும், இலங்கையிலும் கூட அகழ்வாராய்ச்சியில் கிரேக்க எழுத்துக்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.

இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில், மனிதனாகப் பிறக்கும்போது, வெறும் இஸ்ரவேலுக்கு மட்டும் வரவில்லை. முழு உலகத்துக்கும் வந்தார். அந்த சுவிசேஷம் முழு உலகத்துக்கும் அறிவிக்க வேண்டும் எனில், ஒரு பொதுமொழி இருக்க வேண்டும். இன்றைய நாட்களில் ஆங்கிலம் உலகப்பொது மொழியாக இருக்கிறது. ஆனால் அன்றைய நாட்களில் அப்படி பொது மொழி என்று ஒன்று கிடையாது. அந்த தேவசித்தத்தை நிறைவேற்றியவர் அலெக்ஸாண்டர்.

பவுல் சுவிசேஷம் அறிவிக்க நிறைய நாடுகளுக்கு, தீவுகளுக்குச் சென்றார் என்று நாம் வேதத்தில் வாசிக்கிறோம். ஒவ்வொரு நாட்டிலும் தீவிலும் வேறு வேறு மொழியில் தான் பேசுவார்கள். எல்லா இடங்களிலும் பவுல் எப்படி சுலபமாக பேச முடிந்தது? பவுல் அன்றைய நாட்காளில் உபயோகித்தது கிரேக்க மொழியை.

தோமா கேரளா, தமிழ்நாடு வந்தார் என்பது நமக்கு தெரியும். அவர் வந்த காலத்தில், நம் மொழிகளான மலையாளம் மற்றும் தமிழ் மொழியை படிக்க நேரமெடுத்துக் கொண்டிருந்தால், அப்போதே கொன்று இருப்பார்கள். மன்னன் முன் தைரியமாக பேசுகிறார் தோமா. எப்படி சரளமாக பேச முடிந்தது என்றால், தோமா உபயோகித்ததும் கிரேக்க மொழிதான் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். ஆங்கில மொழிக்கு அடித்தளம் பார்த்தால், கிரேக்க சாயல் இருக்கும். தேவசித்தம் நிறைவேற்றினார் அலெக்ஸாண்டர். ஆனால் அவருக்கே தெரியாமல் நிறைவேற்றினார்.

வீழ்ச்சி

கிரேக்க சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு பல காரணங்கள் உள்ளன. அருவருப்பான சாம்ராஜ்யம் என்று கூட சொல்லலாம். சில புத்தகங்களில் அலெக்ஸாண்டர் ஓரினச் சேர்க்கையாளர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அசீரியா சாம்ராஜ்யம், பாபிலோன் சாம்ராஜ்யம் வேதத்தில் குறிப்பிட்டுள்ளது போல, கிரேக்க சாம்ராஜ்யம் வேதத்தில் கூறப்பட்டிருக்கிறதா என்றால், சுமார் 175 ஆண்டுகளுக்கு முன்பே தானியேல் தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் உரைக்கிறார், கிரேக்க சாம்ராஜ்யம் வரும் என்று.

இந்த தானியேல் கிமு530களில் எழுதிய தீர்க்கதரிசனம், கிமு 333ல் நிறைவேறியது. எல்லா நாடுகளையும் பிடித்த அலெக்ஸாண்டர், எருசலேமையும் பிடிக்க சென்றார். அப்போது, மக்களனைவரையும் தேவனிடம் வேண்டுதல் செய்ய சொன்ன ஜத்வா Jaddua என்னும் பிரதான ஆசாரியர், அவரும் மற்ற ஆசாரியர்களும் ஆசாரிய உடை அணிந்தும், மற்றவர்கள் வெள்ளை உடை அணிந்தும் அலெக்ஸாண்டரைப் பார்க்கச் சென்றனர். யாரும் எதிர்பாராத விதமாக, அலெக்ஸாண்டர் அந்த பிரதான ஆசாரியரை எழுந்து சென்று வரவேற்றார். பெர்சிய சாம்ராஜ்யத்தை எதிர்த்த போரில் இருக்கும் போது, தன் கனவில் இதே பிரதான ஆசாரியனை, இதே உடையில் கண்டதாகக் கூறினார் அலெக்ஸாண்டர். பிரதான ஆசாரியரும் தானியேல் புத்தகத்தில் அவரைக் குறித்து எழுதப்பட்டிருந்ததைப் படித்து விளக்கினார். தான் பிறக்கும் முன்னமே, தன் நாடு குறுநில மன்னன் ஆட்சியில் யாரும் மதிக்காத நாடாக இருந்த போதே, தன்னைக் குறித்து தீர்க்கதரிசனமாக எழுதி இருந்ததைப் பார்த்த அலெக்ஸாண்டருக்கு நம் தேவன் மீது பெரிய மரியாதை ஏற்பட்டது. எருசலேமுக்கு சென்று, பிரதான ஆசாரியர் காட்டிய வழியில், தேவாலயத்தில் பலி செலுத்தியதாகவும், எருசலேம் மீது எந்த வரியும் விதிக்காமல் கடந்து சென்றதாகவும் வரலாற்று குறிப்புகள் கூறுகிறது.

அலெக்சாண்டர் எங்கு சென்றாலும், அங்கு ஒரு பட்டணத்தை கிரேக்கர்களின் சாயலுக்கு மாற்றி, அதை மக்களுக்கு பரப்புவாராம். அவர் பட்டணத்தில் நிச்சயமாக ஜிம்னாஸ்டிக் எல்லாம் இருக்குமாம். ஒரு நாட்டை தோற்கடிக்க வேண்டுமானால், அந்த மக்களுக்கு கேளிக்கை காரியங்களை கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது அவர் எண்ணம். எந்த நாட்டிற்கு சென்றாலும், தன் தெய்வத்தின் சிலையை வைத்து பணிய சொல்வார். கிரேக்க மொழியை திணிப்பார். ஆடைகளை திணிப்பார். ஆனால் எருசலேமை மட்டும் அப்படியே விட்டு விட்டதாக வரலாறு கூறுகிறது.

அலெக்சாண்டர் தன் 32வது வயதிலேயே இறந்து விட்டார். அவருடைய திடீர் மரணத்துக்கு காரணம் என்ன என்பது பலருக்கும் இன்றும் சந்தேகமே! சிலர் அவர் இயற்கையாக இறந்தார் என்றும், சிலர் அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார் என்றும் கூறுவர். அவர் பாபிலோனில் நேபுகாத் நேச்சார் அரமனையில் இருக்கும்போது, திடீரென காய்ச்சல் வந்ததாகவும், உடனடியாக அவருக்கு பேச முடியாமல் போனதாகவும், நடக்க முடியாமல் போனதாகவும், 12 நாட்களில் அவர் இறந்ததாகவும் வரலாறு கூறுகிறது. வேதத்தில் கூறியபடியே, அலெக்ஸாண்டர் மறைவுக்குப் பின், அவருடைய ராஜ்யம், நான்காகப் பிரிக்கப்பட்டு, நான்கு தளபதிகள் கீழ் ஆட்சி அமைக்கப்பட்டது.

தானியேல் 11ம் அதிகாரத்தில் உள்ளது அப்படியே நிறைவேறியது. அங்கு தென்திசை ராஜா என்று குறிப்பிட்டிருப்பது எகிப்து. வடதிசை சிரியா. தானியேல் 11ம் அதிகாரத்தை படித்து பார்க்கவும்.

தென்திசை ராஜா Ptolemy நாட்களில், அவன் பிரபுக்களில் ஒருவனான இரண்டாம் தாலமி மிகுந்த பெலமடைந்தான். இந்த இரண்டாம் தாலமியின் மகளை, வடதிசை ராஜாவாகிய இரண்டாம் அன்டியோகஸ்க்கு இரண்டாம் மனைவியாக திருமணம் செய்து கொடுத்தார். அதாவது தென்திசை ராஜா, வடதிசை ராஜாவுக்கு தன் மகளை இரண்டாம் தாரமாக கொடுத்தார்.

இந்த வடதிசை ராஜாவின் முதல் மனைவி Laodice. தென்திசை ராஜா இறந்த பிறகு, வடதிசை ராஜா தன் முதல் மனைவியை சேர்த்துக் கொண்டான். இந்த முதல் மனைவியும், அவளுக்கு பிறந்த இரண்டாம் செலூக்கஸ்ம் இணைந்து, இரண்டாம் மனைவியையும் அவள் மகனையும் விஷம் கொடுத்துக் கொன்றார்கள். தென்திசை ராஜா இறந்த பிறகு, வடதிசை ராஜா தன் முதல் மனைவியை சேர்த்துக் கொள்ள, முதல் மனைவியும் அவள் மகனும் சேர்ந்து, இரண்டாம் மனைவியான, தென்திசை ராஜாவின் மகளையும் அவள் மகனையும் கொலை செய்தார்கள்.

தென்திசை ராஜா இரண்டாம் தாலமிக்கு பின்னர், அவர் மகன் மூன்றாம் தாலமி ஆட்சி பொறுப்பேற்றார். இந்த மூன்றாம் தாலமி, வடதிசை ராணி கொன்ற இரண்டாம் மனைவியின் சகோதரர். தன் சகோதரியை திருமணம் செய்து கொண்டு, தன் தந்தை இறந்ததும், அவளைக் கொலை செய்ததால், தங்கைக்காக வஞ்சம் தீர்ப்பதற்கு மூன்றாம் தாலமி, தென்திசை நோக்கி படையெடுத்தார். தென்திசையில் இப்போது, இரண்டாம் அன்டியோகஸ்ன் முதல் மனைவியின் மகன் இரண்டாம் செலூக்கஸ் ஆட்சி செய்து கொண்டிருந்தார். வஞ்சம் தீர்ப்பதற்கு வந்த மூன்றாம் தாலமி, சீரியாவின் அரணுக்குள் நுழைந்து, பொன் வெள்ளியை அபகரித்துச் சென்று விட்டார். எனவே மூன்றாம் தாலமிக்கும், இரண்டாம் செலூக்கஸ்க்கும் இடையே அடிக்கடி போர் வந்தது.

இந்தப் போர், அடுத்த தலைமுறை வரை நீடித்தது. மூன்றாம் தாலமிக்கு பின் வந்த நான்காம் தாலமி என்ற தென்திசை ராஜாவுக்கும், இரண்டாம் செலூக்கஸ்ன் குமாரர்களான மூன்றாம் செலூக்கஸ், மூன்றாம் அன்டியோகஸ் இடையே அடிக்கடி போர் நடந்தது. மூன்றாம் அன்டியோகஸ், கிரேக்கு ராஜாவான பிலிப் என்பவருடன் இணைந்து, ஐந்தாம் தாலமியை முறியடித்தான். நீண்ட வருடங்களாக நடந்த போரில், வடதிசை ராஜாவாகிய மூன்றாம் அன்டியோகஸ் தென்திசை ராஜாவாகிய ஐந்தாம் தாலமியை முறியடித்தார். சீதோன், இஸ்ரேல், பெலிஸ்தியாவைக் கைப்பற்றிய வடதிசை ராஜா, தான் முறியடித்த ஐந்தாம் தாலமிக்கு தன் மகளை மணமுடித்து வைத்தார்.

வடதிசை ராஜாவாகிய மூன்றாம் அன்டியோகஸ் க்கு, நான்காம் செலூக்கஸ், நான்காம் அன்டியோகஸ் என்ற இரு மகன்கள் இருந்தனர். இஸ்ரேலைக் கைப்பற்றியதால், தேவாலயத்தில் இருந்து கொள்ளையிட, heliodorus என்ற முதல் மந்திரியுடன், தன் மகன் நான்காம் செலூக்கஸ் யும் அனுப்பி வைத்தார். ஆனால் பேராசை பிடித்த முதல் மந்திரி செலூக்கஸை கொன்று விட்டான். எனவே, செலூக்கஸின் சகோதரன் நான்காம் அன்டியோகஸ், Heliodorusஜ பதவி நீக்கம் செய்தார். இந்த நான்காம் அன்டியோகஸ் தான் கிரேக்கர்களின் வீழ்ச்சிக்கு காரணமானவர். தேவகோபத்துக்கு உள்ளானவர். அருவருப்பான காரியங்களைச் செய்தவர். அப்படி என்ன செய்தார்?

கிரேக்கர்களின் வீழ்ச்சி

நான்காம் அன்டியோகஸ் முழுப்பெயர், அன்டியோகஸ் எபிஃபானஸ்(Antiochus Epiphanes) இவர் எருசலேமை தன் கட்டுக்குள் கொண்டு வந்தார். எருசலேம் தேவாலயத்தில், தங்கள் பிரதான தெய்வமாகிய Zeus கடவுளின் சிலையை வைத்து, மக்களை வணங்குமாறு கட்டாயப்படுத்தினார். கிரேக்க பெயர்களை வைக்குமாறு கட்டாயப்படுத்தினார். எனவே இரண்டு பெயர்களை வைத்திருப்பர் மக்கள். (அநேகர் சவுலின் பெயரை தேவன் பவுலாக மாற்றினார் என்று கூறுவார்கள். அது தவறு. Saul(சவுல்) என்பது அவருடைய எபிரேய பெயர். அதாவது Jewish name. தங்கள் முதல் ராஜாவாகிய சவுலும் பென்யமீன் கோத்திரம் என்பதால், இவருக்கும் சவுல் என்பது எபிரேய பெயர்.  Paul(பவுல்) என்பது உண்மையில் அவருடைய ரோம பெயர்) சிலை வழிபாட்டை வெறுக்கும் நம் தேவனின் ஆலயத்தில், கிரேக்க தெய்வத்தின் சிலையைக் கொண்டு வந்தார் அந்தியோகஸ். ஒருகூட்ட மக்கள், சீயஸை வணங்கி சென்றனர். ஆனால் இன்னொரு கூட்ட ஜனங்கள், யூதனுக்குரிய வைராக்கியத்தோடே, சிலையை வணங்க மறுத்தனர். மறுத்த ஜனங்கள் கொல்லப்பட்டனர். நிறைமாத கர்ப்பிணிகளை தேவாலயத்தின் உப்பரிகையில் இருந்து கீழே தள்ளி விட்டான். பிரதான ஆசாரியராக இருந்த ஒனியாசை அகற்றிவிட்டு, தனக்கு சாதமாக இருந்த ஒனியாசின் சகோதரனை பிரதான ஆசாரியனாக்கி நியமித்தான். தேவாலயத்தில் பலி, காணிக்கையை ஒழியப் பண்ணினார். தேவாலய பலிபீடத்தில் அருவருப்பான, பன்றி இறைச்சியை பலியிட்டான். இதுதான் கிரேக்கர்களின் வீழ்ச்சிக்கு காரணம். பன்றி இறைச்சியை நம் பரிசுத்தருக்கு பலியிட்டு அவமானப்படுத்தினான்.

இந்த நாட்களில் தான் மக்கபேயர் எழும்பினர். அவனைத் தோற்கடித்து யூதாவைக் கைப்பற்றினர். பொதுவாக எருசலேம் தேவாலயத்துக்குள், குத்துவிளக்கு எரிந்து கொண்டே இருக்கும். அவ்வப்போது எண்ணெய் ஊற்றி திரியை வெட்டி விடுவது ஆசாரியனின் வேலை. ஆனால் இந்த மக்கபேயர் (மக்கபே என்னும் ஒரு ஆள் தன்னுடன் வாலிபர்களை சேர்த்து மக்கபேயர்) நடத்திய எட்டு நாள் யுத்தத்தில், யாருமே தேவாலயத்துக்குள் செல்ல முடியாமல், தேவாலயம் பூட்டப்பட்டது. எட்டு நாட்கள் கழித்து, போர் முடிந்து, தேவாலயத்தை திறந்து பார்த்தால், அப்போதும் அங்கு குத்துவிளக்கில் தீ அணையாமல் எரிந்து கொண்டிருந்தது. எனவே அந்த எட்டு நாட்கள் பண்டிகையாக, இன்றும் ஹனுக்கா பண்டிகை கொண்டாடிக் கொண்டு இருக்கின்றனர். இன்றும் யூதர்கள் எட்டு நாட்கள் சுத்திகரிப்பின் பண்டிகை கொண்டாடுகின்றனர். இந்த சுத்திகரிப்பு, மக்கபேயர் மூலமாக தேவாலயத்து சுத்திகரிப்பு நடந்ததைக் குறிக்கிறது . யோவான் எழுதிய சுவிசேஷத்தில், இயேசு கிறிஸ்து தேவாலய பிரதிஷ்டை பண்டிகைக்கு வந்தார் என்பதும், இந்த பண்டிகையை தான் குறிப்பிடுகிறது.

கிரேக்கர்கள், உலகம் முழுவதும் தன் மொழியைப் பரப்பினவர்கள். உலகம் முழுவதும் Zeus கடவுள் சிலையை வைத்தவர்கள். உலகம் முழுவதும் உடற்பயிற்சி கூடம் அமைத்து, மக்களை தேவனை மறக்கப் பண்ணியவர்கள். மருத்துவத்துக்கு ஒரு கடவுள் என அப்பொல்லோ என்ற கடவுளை உலகம் முழுவதுக்கும் பரப்பியவர்கள்.

இப்படிப்பட்ட கிரேக்கர்களுக்கும் கர்த்தருடைய ஒரு கிருபை கிடைத்தது. ஆனாலும் அந்த நாட்டின் மீது கர்த்தருடைய ஒரு பெரிய கிருபை இருக்கிறதை நாம் பார்க்க முடியும். இன்று Greece ஒரு குட்டி நாடு. ஆனால் அந்த நாட்டின் பிரதான தெய்வம் இயேசுகிறிஸ்து. எப்படி? இயேசுவுக்கு பிறகு, பவுல் பல நாடுகளுக்கு பிரயாணமாகப் போய் சுவிசேஷம் அறிவித்தார். மக்கதோனியா என்று வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாசிடோனியா, அத்தேனே பட்டணம் என்று குறிப்பிட்டுள்ள ஏதேன்ஸ் என்று கிரேக்கர்கள் மத்தியில் அதிக ஊழியம் செய்தார் பவுல். இது கிரேக்கர்களுக்கு நம் கர்த்தர் கொடுத்த மாபெரும் கிருபை.! அவர்கள் இன்று கிறிஸ்தவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *