முதல் சாம்ராஜ்யம் அசீரிய சாம்ராஜ்யம், அவர்கள் இஸ்ரேலின் 10 கோத்திரமாக இருந்த இஸ்ரவேலை சிறைபிடித்து, பல நாடுகளில் கலந்து விட்டார்கள். 2 இராஜாக்கள் 17ம் அதிகாரத்தோடு, 10 கோத்திரங்கள் வரலாறு முடிந்தது. இரண்டாம் சாம்ராஜ்யம் பாபிலோன் சாம்ராஜ்யம், அவர்கள் மீதமிருந்த 2 கோத்திரங்களை சிறைபிடித்து 70 வருடங்கள் கூட்டி சென்றனர் என்பது பற்றி ஏற்கனவே பார்த்தோம். இன்று மூன்றாம் சாம்ராஜ்யமான மேதிய பெர்சிய சாம்ராஜ்யம் பற்றி பார்க்கலாம். பாபிலோனை தோற்கடித்து பெர்சிய ராஜா கோரேஸ் ஆட்சியைப் பிடித்தார் என்று பார்த்தோம் அல்லவா! அதிலிருந்து தொடங்கலாம்.
3.மேதிய பெர்சிய சாம்ராஜ்யம்
உலக அளவில் மூன்றாவது பெரிய சாம்ராஜ்யம், மேதிய பெர்சிய ராஜ்யம். மேதியாவின் அரசன் தரியுவும் பெர்சியாவின் அரசனும் இணைந்தே இந்த சாம்ராஜ்யத்தை அமைத்தார்கள். இவர்கள் ஆளும்போது கிட்டத்தட்ட 127 நாடுகள் இவர்களின் கீழே இருந்ததாக வேதம் எஸ்தர் புத்தகத்தில் கூறுகிறது. நம் இந்தியாவும் இவர்கள் ஆளுகைக்கு கீழ் இருந்ததாகக் கூறப்படுகிறது.
1 ராஜ்யம் முழுவதையும் ஆளும்படிக்குத் தன் ராஜ்யத்தின்மேல் நூற்றிருபது தேசாதிபதிகளையும்,
2 ராஜாவுக்கு நஷ்டம் வராதபடிக்கு அந்த தேசாதிபதிகள் கணக்கு ஒப்புவிக்கிறதற்காக அவர்களுக்கு மேலாக மூன்று பிரதானிகளையும் ஏற்படுத்துவது தரியுவுக்கு நலமென்று கண்டது; இவர்களில் தானியேல் ஒருவனாயிருந்தான்.
3 இப்படியிருக்கையில் தானியேல் பிரதானிகளுக்கும் தேசாதிபதிகளுக்கும் மேற்பட்டவனாயிருந்தான்; தானியேலுக்குள் விசேஷித்த ஆவி இருந்தமையால் அவனை ராஜ்யம் முழுமைக்கும் அதிகாரியாக ஏற்படுத்த ராஜா நினைத்தான்.
தானியேல் 6:3
தரியு ராஜா, தானியேலை எவ்வளவு உயர்த்தி வைத்திருந்தார் என்பதை மேற்கண்ட வசனங்களில் பார்க்கலாம். முதலில், 127 நாடுகளுக்கு 120 Prime Minister இருக்கிறார்கள். அந்த 120 Prime Ministerக்கு மேல் கண்காணியாக 3 பேர் இருக்கிறார்கள். இத்தனை நாடுகளுக்கு அதிபதியாக இருக்கிற மூன்று பேரில் ஒருவராக தானியேல் வருகிறார் என்பது எவ்வளவு பெரிய பணி. பின்னர் மூவரையும் விட பெரியவராக தானியேல் இருக்கிறார். அப்படி என்றால், தானியேல் ராஜாவுக்கு அடுத்தபடியாக, ராஜாவுக்கு நிகரான அதிகாரம் உடையவராக இருந்திருக்கிறார். ஆனால், இவ்வளவு உயர்த்தப்பட்ட நிலையில் இருந்த தானியேல் என்ன செய்கிறார் என்று வாசிக்கலாம்.
1 கல்தேயருடைய ராஜ்யத்தின்மேல் ராஜாவாக்கப்பட்ட மேதிய குலத்தானாகிய அகாஸ்வேருவின் புத்திரனான தரியு ராஜ்யபாரம்பண்ணுகிற முதலாம் வருஷத்திலே,
2 தானியேலாகிய நான் எருசலேமின் பாழ்க்கடிப்புகள் நிறைவேறித்தீர எழுபதுவருஷம் செல்லுமென்று கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியோடே சொல்லிய வருஷங்களின் தொகையைப் புஸ்தகங்களால் அறிந்துகொண்டேன்.
3 நான் உபவாசம்பண்ணி இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட என்முகத்தை அவருக்கு நேராக்கி,
தானியேல் 9:3
இதுதான் யூதன். எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், அவன் இதயத்துடிப்பு இஸ்ரவேல் தேசமும், அதன் தேவாலயமும் தான். இரண்டாயிரம் ஆண்டுகளாக, தங்களுக்கென நாடு இல்லை என்றாலும், அவன் கண்கள் எருசலேமை நோக்கியே இருந்திருக்கும் என்பதை இதிலிருந்து புரிய முடிகிறது அல்லவா. தானியேல் பாபிலோனில் முக்கிய பதவியில் இருக்கிறதால், அவரால் நூலகத்துக்கு சென்று படிக்க முடியும். பாபிலோனியர்கள் எருசலேமிலிருந்து கொள்ளையிட்ட தோல் சுருள்களை, மேதியர்கள் பாபிலோனிலிருந்து கொள்ளையிட்டு அவர்கள் நூலகத்தில் வைத்திருந்தனர். அதைப் படித்ததன் மூலமாக, 70 வருடங்களில் தங்களுக்கு விடுதலை கிடைத்திருக்க வேண்டும் என்பதை அறிந்து ஜெபம் செய்கிறார்.
முஸ்லிம்கள் தொழுவதை கவனித்து இருக்கிறீர்களா? அவர்கள் மெக்காவின் திசைக்கு நேராகத் திரும்பி தொழுவார்கள். இதுவும் யூதனின் வழக்கம்தான். எருசலேமின் திசையை நோக்கிப் பார்த்தே அவர்கள் தேவனிடம் விண்ணப்பம் பண்ணுவார்கள்.
10 தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேலறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்.
தானியேல் 6:10
மூன்று குழுவாக எருசலேமுக்கு மக்கள் திரும்பி வந்தனர். முதல் குழு, செருபாபேல் தலைமையில், கோரேஸ் மன்னன் ஆட்சிக்காலத்தில், ஆலயம் கட்டுவதற்காக அனுப்பப்பட்டது. கிமு536ல் பெர்சிய மன்னர் கோரேஸின் தலைமையில், பாபிலோன் பெர்சியாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதாவது மேதியரும் பெர்சியரும் இணைந்து பாபிலோனைப் பிடித்தனர். மேதியனாகிய தரியு ராஜாவும், பெர்சியனாகிய கோரேஸ் ராஜாவும் இணைந்து பாபிலோனைப் பிடிக்கும்போது ஒரு ஒப்பந்தம் போட்டிருப்பார்கள், பாபிலோன் தரியு மன்னன் காலம் வரையிலும் தரியுவுக்கு. பின்னர் அது கோரேஸ்க்கு என்று. அதன்படி தரியுவுக்கு பிறகு கோரேஸ் பாபிலோனை கையகப்படுத்தினார்.
யார் இந்த கோரேஸ்?
ஏசாயா தீர்க்கதரிசியால் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே இவனது பிறப்பு முன்னறிவிக்கப்பட்டது. நன்றாகச் சொல்ல வேண்டுமானால், கோரேஸ் பிறப்பதற்கு முன்பதாகவே, பாபிலோனுக்கு யூதர்கள் சிறைப்பட்டு போவதற்கு முன்பதாகவே, கோரேஸைப்பற்றி தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது.
28 கோரேசைக் குறித்து: அவன் என் மேய்ப்பன்; அவன் எருசலேமை நோக்கி நீ கட்டப்படு என்றும்; தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்றும் சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் என்று சொல்லுகிறவர் நான்.
ஏசாயா 44:28
1 கர்த்தராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்துவைக்கும்படிக்கும், அவனைப்பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது:
ஏசாயா 45:1
அவன் ஆட்சிக்காலத்தின் தொடக்கத்திலேயே அவன் உள்ளத்தில் தேவன் பேசிய படியால், ‘பாபிலோனில் உள்ள யூதர்கள் திரும்பவும் தங்கள் தேசத்துக்கு போகலாம் என்றும், எருசலேமின் தேவாலயத்தை மீண்டும் கட்டவும் வேண்டும்’ என்றும் ஒரு உத்தரவு பிறப்பித்தான். அதோடு நில்லாமல் எருசலேமின் ஆலயத்துக்காக உதவி செய்யுங்களென்று, பொன் வெள்ளியும் மிருக ஜீவனும் கொடுக்கும்படிக்கு அவன் ராஜ்யத்திற்குள் இருந்தவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பினான். யூதர்கள், செருபாபேல், பிரதான ஆசாரியனாகிய யோசுவா தலைமையில் எருசலேமுக்கு புறப்பட்டார்கள். பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார் எருசலேமில் கொள்ளையடித்த, ஆலயத்தின் பணிமூட்டுக்கள் அனைத்தையும் கோரேஸ் திரும்ப ஒப்படைக்கிறார். யூதர்களில் சுமார் 50,000 பேர் எருசலேமுக்குச் சென்றார்கள். அங்கு போய் ஆலயத்தின் கட்டுமானப் பணியைத் தொடங்கினார்கள்.
பாபிலோனிலிருந்து வந்த யூதர்கள் முதலாவது பலிபீடங்களைக் கட்டினார்கள். அதில் பலியிட்டு பண்டிகை கொண்டாடினார்கள். அதன் பின்னர்தான் பிரச்சனையே ஆரம்பித்தது. சுற்றியுள்ள மற்ற ஜனங்கள் பொறாமை கொண்டு, ஆலயம் கட்ட விடாமல் செய்தார்கள். எதிரி ஜனங்கள் அர்த்தசஷ்டா ராஜாவிடம் பிராது கொடுத்து இந்த வேலையை செய்ய விடாமல் தடை செய்தார்கள். சோர்ந்து போன யூதர்கள் ஆரம்பித்த வேலையை அப்படியே கிடப்பில் போட்டு விட்டார்கள். சுமார் 16 வருடம் ஆலயம் கட்ட எந்த முயற்சியும் செய்யாமல், தங்களுக்கு மட்டும் என சொந்தமாக ஆஸ்தியை சம்பாதிக்க ஆரம்பித்தார்கள். நல்ல இடங்களைப் பார்த்து விவசாயம் செய்து வாழ ஆரம்பித்து விட்டார்கள்.
4 அதினால் அந்த தேசத்து ஜனங்கள் யூதா ஜனத்தின் கைகளைத் தளரப்பண்ணி, கட்டாதபடிக்கு அவர்களைச் சங்கடப்படுத்தி,
23 ராஜாவாகிய அர்தசஷடாவுடைய உத்தரவின் நகல் ரெகூமுக்கும், கணக்கனாகிய சிம்சாயிக்கும், அவர்கள் வகையராவுக்கு முன்பாக வாசிக்கப்பட்டபோது, அவர்கள் தீவிரத்துடனே எருசலேமிலிருக்கிற யூதரிடத்திற்குப் போய், பலவந்தத்தோடும் கட்டாயத்தோடும் அவர்களை வேலைசெய்யாதபடிக்கு நிறுத்திப்போட்டார்கள்.
24 அப்பொழுது எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தின் வேலை தடைபட்டு, பெர்சியாவின் ராஜாவாகிய தரியு ராஜ்யபாரம்பண்ணின இரண்டாம் வருஷமட்டும் நிறுத்தப்பட்டிருந்தது.
எஸ்றா 4:24
செருபாபேல் தலைமையில் ஜனங்கள் எருசலேமுக்கு திரும்பி வந்தார்கள் என்பதைப் பார்த்தோம். பொதுவாக நமக்கு ஒரு பழக்கம் உண்டு, ஒரு அரசியல் தலைவரோ, அல்லது ஒரு பாஸ்டரோ இறந்து போனால், அவர் இடத்தில் அவரது பையன் வருவாரா என்று நம் கண்கள் நோக்கும் அல்லவா? இதேபோல் தான் யூதமக்களும். தாவீதின் வழியில் மேசியா வருவார். அவர் ராஜாவாக வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.
11 பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகுங்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரரையும் பெற்றான்.
12 பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகோனியா சலாத்தியேலைப் பெற்றான்; சலாத்தியேல் சொரொபாபேலைப் பெற்றான்;
மத்தேயு 1:12
அப்படித்தான் அவர்கள் செருபாபேலை நோக்கி பார்த்திருப்பார்கள், ‘இவர் ராஜாவாக வந்து நம்மை விடுதலை ஆக்க மாட்டாரா’ என்று. செருபாபேலின் மகன் அபியூத், அபியூத்தின் மகன் எலியாக்கீம் என்று ஒவ்வொருவராய் நோக்கிப் பார்த்திருப்பார்கள். இவர்களின் தேடலில் தான் யோசேப்பு-மரியாளின் பிள்ளைகள் வருகிறார்கள். இயேசு தன்னை ராஜா என்று கூறியிருந்தால் ஏற்றுக்கொள்ள பெரிய கூட்டம் இருந்தது. ஆனால் இயேசுவோ, நான் தேவகுமாரன் என்று கூறினார். அதை யூதர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
யூதர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் மேசியா வந்து, அனைவரோடும் சண்டையிட்டு அவர்களைக் காப்பாற்றி, தாவீதின் சிங்காசனத்தில் அமர்வார் என்று எதிர்பார்ப்பு. ஆனால் இயேசுவோ, ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டச் சொன்னார். கடல்வாழ் மக்களோடு நெருங்கிப் பழகினார். அதனால் தான் யூதர்கள் இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த செருபாபேலுக்கு இப்போது பெரிய குழப்பம். சாலொமோன் கட்டியது போல, தன்னால் எப்படி ஆலயத்தைக் கட்ட முடியும்? மக்களும் தேவாலயத்தை மறந்து வாழ ஆரம்பித்து விட்டார்களே என்று. அப்போது தேவன் இரண்டு தீர்க்கதரிசிகளை அனுப்புகிறார், ஆகாய், சகரியா. எஸ்றா காலத்தில் தேவாலயம் கட்டத் தொடங்கினர்.
1 அப்பொழுது ஆகாய் தீர்க்கதரிசியும், இத்தோவின் குமாரனாகிய சகரியா என்னும் தீர்க்கதரிசியும், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யூதருக்கு இஸ்ரவேல் தேவனின் நாமத்திலே தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
எஸ்றா 5:1
சுற்றியுள்ள எதிர்ப்பினால், கிடப்பில் கிடந்த வேலையை பார்த்து, சோர்ந்து இருந்த யூதர்களை தட்டி எழுப்பவும், ஆரம்பித்த வேலையை முடிக்கும்படி உற்சாகப்படுத்துவதுமே ஆகாய்க்கு தேவன் கொடுத்த வேலை.
4 இந்த வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் மச்சுப்பாவப்பட்ட உங்கள் வீடுகளில் குடியிருக்கும்படியான காலம் இதுவோ?
8 நீங்கள் மலையின்மேல் ஏறிப்போய், மரங்களை கொண்டுவந்து, ஆலயத்தைக் கட்டுங்கள்; அதின்பேரில் நான் பிரியமாயிருப்பேன், அதில் என் மகிமை விளங்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
9 அதிகமாய் வருமென்று நீங்கள் எதிர்பார்த்திருந்தும், இதோ, கொஞ்சம் கிடைத்தது; நீங்கள் அறுத்து வீட்டுக்குக் கொண்டுவந்தும், நான் அதை ஊதிப்போடுகிறேன்; எதினிமித்தமென்றால், என் வீடு பாழாய்க்கிடக்கும்போது நீங்கள் எல்லாரும் அவனவன் தன் தன் வீட்டிற்கு ஓடிப்போகிறீர்களே, இதினிமித்தமே என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
ஆகாய் 1:9
ஆகாய் தீர்க்கதரிசி மூலமாக தேவன் ஒவ்வொரு யூதனுடைய இதயத்தையும் தூண்டி விடவும், மீண்டும் மக்கள் உற்சாகமாகி, தேவாலயம் கட்ட ஆரம்பித்தார்கள். ராஜா தேவாலயம் கட்ட தடை செய்திருந்தபடியால், யூதர்கள் அவருக்கு ஒரு கடிதத்தையும் எழுதி அனுப்பினார்கள்.
17 இப்பொழுதும் ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கட்ட ராஜாவாகிய கோரேஸ் கட்டளையிட்டதுண்டோ என்று பாபிலோனில் இருக்கிற ராஜாவின் கஜானாவிலே ஆராய்ந்துபார்க்கவும், இந்த விஷயத்தில் ராஜாவினுடைய சித்தம் இன்னதென்று எங்களுக்கு எழுதியனுப்பவும் உத்தரவாகவேண்டும் என்று எழுதியனுப்பினார்கள்.
எஸ்றா 5:17
எஸ்றா 6ம் அதிகாரத்தில் தியானித்தால், தரியு ராஜா கோரேஸ் மன்னன் நகலைக் கண்டுபிடித்து, யூத மக்களுக்கு சலுகை செய்வது விவரமாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும்.
செருபாபேலை ஆகாய் தீர்க்கதரிசி மூலமாக ஆண்டவர் திடப்படுத்தினார்.
9 முந்தின ஆலயத்தின் மகிமையைப் பார்க்கிலும், இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; இவ்விடத்திலே சமாதானத்தைக் கட்டளையிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
ஆகாய் 2:9
ஏன் இந்த வசனத்தை வாக்களித்தார் செருபாபேலுக்கு? அநேக குழப்பங்கள் அவர் இருதயத்தில் இருந்தது. சாலொமோன் போல கட்ட முடியுமா? தேவமகிமை இவ்வாலயத்தில் இறங்குமா? கேள்விக்குறியோடு இருந்த செருபாபேலுக்கு, இந்த ஆலயம்தான் மகிமையாயிருக்கும் என்று சொல்கிறார்.
சாலொமோன் காலத்தில், தேவமகிமை ஆலயத்தை நிரப்பியது. சாலமோனுடைய ஆலயத்தில், வெளிப்பிரகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம் என்று மூன்று பிரிவுகள் இருக்கும். தேவன் மோசேக்கு சொன்ன ஆசரிப்பு கூடாரத்தின் மாதிரியின்படியே அது கட்டப்பட்டிருக்கும். முழுவதும் பொன் தகடுகளால் (Gold Plate) செய்யப்பட்டது. செருபாபேலின் ஆலயமோ அப்படியே வித்தியாசமானது. மிகவும் சிறியது. மகா பரிசுத்த ஸ்தலம் என்று ஒரு இடம் இருந்தாலும், அதில் உடன்படிக்கை பெட்டி கிடையாது. பாபிலோனியர் படையெடுப்பின்போதே, உடன்படிக்கை பெட்டியை தேவன் மறைத்து விட்டார்.
தேவன் இருந்து பேசிய உடன்படிக்கை பெட்டி கிடையாது. அதனால் தான், அதற்கு அடுத்த காலங்களில் பிரதான ஆசாரியன் ஆவதற்கு போட்டி போட ஆரம்பித்தார்கள். ஏனெனில் பிரதான ஆசாரியன் உள்ளே சென்று வந்தாலும் அவனுக்கு எதுவும் ஆகாது. இப்படிப்பட்ட செருபாபேல் கட்டிய ஆலயத்துக்கு, முந்தின ஆலயத்தை பார்க்கிலும் மகிமை பெரிதாக இருக்கும் என்று தேவன் கூறுகிறார். அது ஏன்?
அவ்வாலயத்தில்தான் தேவகுமாரன் இயேசு எட்டாம் நாள் குழந்தையாகக் கொண்டு வரப்பட்டார். சாலமோனுடைய ஆலயத்தில் கர்த்தருடைய மகிமை இறங்கியது. செருபாபேலுடைய ஆலயத்திற்கு கர்த்தரே வந்தார். எவ்வளவு மகிமை நிறைந்த ஆலயம் அல்லவா! ஒவ்வொரு பண்டிகையும் மறைமுகமாக இயேசுவைக் குறித்தே இருந்தாலும், அத்தனை பண்டிகையையும் இயேசு அங்கு வந்து கொண்டாடினார் என்பது எவ்வளவு மகிமை அல்லவா! சாலமோனுக்கு அந்த மகிமை கிடைக்கவில்லையே. ஆனால் செருபாபேல் கட்டிய ஆலயத்தில், ரோமர் காலத்தில், ஏரோது சிறிது வேலைப்பாடு செய்து கொடுத்தாலும், அது செருபாபேல் கட்டிய ஆலயமே.
பாபிலோனிலிருந்து முதல் குழு, செருபாபேல் தலைமையில் எருசலேம் வந்தது. இரண்டாம் குழு எஸ்றா தலைமையில் ஆலயம் கட்ட வந்தது. மூன்றாவது குழு நெகேமியாவின் தலைமையில், அலங்கம் கட்டுவதற்காக வந்தது. யூதேவுக்கு(ஏருசலேமுக்கு) யூதர்கள் பலர் திரும்பிச் சென்றாலும், சிலர் அவரவர் இருந்த இடங்களில், அதே வேலையை செய்தபடி இருந்தனர். நெகேமியாவும், சூசான் அரமணையிலேயே தங்கி விட்டார். யூதேயாவுக்கு போன யூதர்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று விசாரிக்கிறார் நெகேமியா. இதுதான் யூதனின் குணம். அவன் எங்கிருந்தாலும், எவ்வளவு நல்ல நிலையில் இருந்தாலும், அவன் இதயம் அவன் தேசத்திலும், தேவாலயத்திலும் தான் இருக்கும்.
3 அதற்கு அவர்கள்: சிறையிருப்பில் மீந்திருக்கிறவர்கள் அந்தத் தேசத்திலே மகா தீங்கையும் நிந்தையையும் அநுபவிக்கிறார்கள்; எருசலேமின் அலங்கம் இடிபட்டதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கிறது என்றார்கள்.
4 இந்த வார்த்தைகளைக் கேட்டபோது நான் உட்கார்ந்து அழுது, சிலநாளாய்த் துக்கித்து, உபவாசித்து, மன்றாடி, பரலோகத்தின் தேவனை நோக்கி:
நெகேமியா 1:4
தன் ஜனங்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிந்தால், யூதர்கள் ஒன்றுகூடி விடுவார்கள். இங்கேயும் ராஜாவுக்குத் தெரிவித்து, அலங்கத்தைக் கட்டுகிறார் நெகேமியா.
இந்த நெகேமியா காலகட்டத்தில் தான், எஸ்தர் புத்தகமும் எழுதப்பட்டிருக்கும். எஸ்தர் சரித்திரம் நாம் அனைவரும் அறிந்ததே. மொர்தேகாய் தேவனை தவிர, ஒரு மனுஷனையும் வணங்க மாட்டேன் என்று கூறியதே, முழு யூதகுலத்தையும் ஆமான் அழிக்கத் திட்டம் போட்டதன் காரணம். ஆம், யூதன் யாரையும் வணங்க மாட்டான். அவன் நியாயப்பிரமாணத்தின்படி தேவனாகிய கர்த்தர் ஒருவரையே வணங்க வேண்டும்.
பாபிலோன் சிறையிருப்பின்போது, சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ என்ற யூத வாலிபர்கள், செத்தாலும் சாவேனே தவிர, வேறு ஒருவரை வணங்க மாட்டேன் என்று திமிராக நின்றார்கள். அதேபோல் தான், மேதிய பெர்சிய சாம்ராஜ்யத்தில், மொர்தேகாய். ஆண்டவரைத் தவிர என் இன மக்கள் யாரையும் வணங்க மாட்டோம் என்று கூறி, ஆமானின் கோபத்துக்கு உள்ளானார்.
ஏற்கனவே கூறியபடி நல்ல யூதன் வைராக்கியமானவன். யாரையும் வணங்க மாட்டான். விக்கிரகம் உண்டாக்க மாட்டான். கிமு 198ல் யூதா சீரிய ஆட்சியின் கீழ் வரும்போது, சீரியர் தங்கள் நாணய முறையை யூதாவில் கொண்டு வர முயன்றனர். முன்புறம் எருது தலையும் பின்புறம் நாணய மதிப்பும் இருந்தது. மக்கபே தலைமையில் பெரும் புரட்சி செய்து, சீரிய நாணயத்தை உபயோகிக்காமல், தனியாக நாணயம் உருவாக்கிக் கொள்ள அனுமதி வாங்கினர்.
நாட்டுக்குத் தேவையான நாணயங்களை நீரே அடித்துக்கொள்ள உமக்கு அனுமதி அளிக்கிறேன்.
1மக்கபேயர் 15-6.
அதன் பின் ரோமர்கள் யூதாவைப் பிடித்த போது, தங்களது நாணயங்களையே யூதாவிலும் நடைமுறைப்படுத்தினார்கள். அந்த நாணயத்தில் ரோம ராயனுடைய தலை உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். யூதர்கள் இந்த நாணயங்களைப் பிற காரியங்களுக்கு பயன்படுத்தினாலும், ஆலயம் மற்றும் ஆன்மீக காரியங்களுக்கு பயன்படுத்தினதில்லை. காரணம் நாணயத்தில் காணப்பட்ட மனித தலை. ஆதலால் ஆலயத்தில் காணிக்கை செலுத்தவும், ஆன்மீக காரியங்களுக்கு என்றும், யூத மத குருக்கள் தேவாலய காசுகள் என்று தனியாக ஒரு காசை வெளியிட்டனர். அந்த நாணயத்தின் முன்புறம் நாணய மதிப்பும், பின்புறம் 7 பிரிவான குத்து விளக்கும் பொறிக்கப்பட்டிருக்கும்.
ராயனுடைய தலை பொறித்த ரோம நாணயம் தேவ ஆலயத்திற்குள் செல்லாது. இக்காசுகளை நீங்கள் தேவாலயத்தில் காணிக்கையாக செலுத்த முடியாது. பலிக்கு தேவையான பொருட்களையும் வாங்க முடியாது. இதற்காகத்தான் தேவாலயத்தில் காசுக்காரர்கள் இருந்தார்கள். ஆலயத்தில் காணிக்கை செலுத்த விரும்பினால், முதலாவது நம்மிடம் உள்ள அரசு நாணயங்களை, இந்த காசுக்காரர்களிடம் தந்து தேவாலய காசுகளாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
இயேசுவின் காலத்தில் தேவாலயத்தில், இந்த காசுக்காரர்கள் தங்கள் இஷ்டப்படி காசுக்கான விலைகளை உயர்த்தி சம்பாதித்துக் கொண்டிருந்தனர். அதனால்தான் இயேசு அவர்களை அடித்து விரட்டினார்.
இயேசுவிடம் ஒரு முறை பரிசேயர், “ராயனுக்கு வரி செலுத்துவது நியாயமோ அல்லவோ” என்று கேட்டார்கள். இயேசு அவர்களிடம், வரிக்காசை எனக்கு காண்பியுங்கள் என்று சொல்லி, வரி செலுத்த இருந்த அரசு நாணயத்தை பார்த்து, இதில் உள்ள சொரூபம் யாருடையது என்று கேட்டு, “ராயனுடையதை ராயனுக்கும் தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்” என்றார். இதிலிருந்து ராயனுக்கு செலுத்த ஒரு காசும், தேவனுக்கு செலுத்த மற்றொரு காசும் புழக்கத்தில் இருந்தது என்பது தெரிகிறது.
ஒரு காசு விஷயத்தில் கூட, நல்ல ஒரு யூதனாய் இருப்பவன், வைராக்கியம் உள்ளவனாகத்தான் இருப்பான். யாரையும் வணங்க மாட்டான். யாருடைய உருவத்தையும் பொரிக்க மாட்டான். வைராக்கியமுள்ள ஜனம் ஆண்டவருக்குப் பிடிக்கும்.
மேதிய பெர்சியரின் வீழ்ச்சி
மேதிய பெர்சியர் ஆட்சி என்பது, மேதியா பெர்சியா என்ற 2 பகுதிகள் இணைந்து நடத்திய கூட்டாட்சி முறை. கிமு 538ல் இருந்து, கிமு 333வரை, கிட்டத்தட்ட 200 வருடங்கள், இரண்டு பேரரசு இணைந்து ஒரு சாம்ராஜ்யம் அமைத்துள்ளனர். பெர்சியர் கிழக்கு பகுதியில் இருந்த நாடுகளையும் மேதியர் மேற்கு பகுதியில் இருந்த நாடுகளையும் ஆட்சி செய்துள்ளனர். ஒரே யோசனையுடன் ஒருமித்து ஆட்சி செய்துள்ளனர் இரு அரசர்களும்.
அதிலும் பெர்சிய அரசன் கோரேஸ், பிறக்கும் முன்னமே பெயர் சொல்லி அழைக்கப்பட்டவர். கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்ற பேர் பெற்றவர். இவர் பிறப்பதற்கு 175 ஆண்டுக்கு முன்பே, ஏசாயா தீர்க்கதரிசி மூலம், ஆண்டவர் கோரேஸ் மன்னனுக்கு ஒரு வாக்குத்தத்தம் கொடுத்தார். அதை கோரேசுக்கு நிறைவேற்றவும் செய்தார்.
4 வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்; நான் என் தாசனாகிய யாக்கோபினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித்தமும், நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும் உனக்கு நாமம் தரித்தேன்.
ஏசாயா 45:4
மேற்கண்ட வசனம், ஆண்டவர் கோரேசுக்கு வாக்கு கொடுத்தார். அதை நிறைவேற்றவும் செய்தார். பாபிலோனிய மன்னர் பெல்ஷாத்சார் மன்னனை, அகழியின் தண்ணீரை வெளியேற்றி, பெருச்சாளி நுழைவது போல் ஊர்ந்து சென்று, பாபிலோனைக் கைப்பற்றினார் என்று ஏற்கனவே பார்த்தோம். அப்படி தண்ணீர் போகிற பாதையை நிறுத்தி, உள்ளே நுழையும்போது, தண்ணீர் செல்லும் பாதைக்கு கீழே பாதாள அறைகள் கட்டப்பட்டு, அந்த அறையில் எல்லா நாட்டிலும் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட புதையல்கள் வைக்கப்பட்டிருந்ததை, கோரேஸ் கவனித்து, அதை எடுத்துக் கொண்டார். இதைத்தான் ஒளிப்பிடத்தின் பொக்கிஷம் என்று ஆண்டவர் வாக்கு பண்ணியிருப்பார்.
பாபிலோன் மன்னனை கொலை செய்து, பாபிலோனை கையகப்படுத்திய வீரர்கள், அங்கே பாபிலோனின் நடுவில் மிகப்பெரிய ஒரு தெய்வத்தின் சிலையை கண்டார்கள். கிட்டத்தட்ட அந்த சிலை 90 அடி உயரத்தில் இருந்தது. எந்த கஷ்டமும் இல்லாமல், மிக எளிதாக வெற்றி பெற்றதால், அந்த சிலையை பார்த்து ஏளனமாக, அந்த 90 அடி சிலையை கீழே விழத் தள்ளினார்கள். அப்படி அந்த சிலையை உடைக்கும் போது தான் தெரிந்தது, சிலை முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது. இதைத்தான் ஆண்டவர் அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷம் என்று வெளிப்படுத்தி இருப்பார்.
கிரேக்க சாம்ராஜ்யத்தின் புகழ்பெற்ற மன்னன் மகா அலெக்ஸாண்டர், அவரது ரோல்மாடல் கோரேஸ் மன்னன் தான் என்றும், கோரேஸ் உலகை பிடித்த முறை, அவனது நல்லாட்சி, அவனுக்கு இருந்த புகழ் தான், தன்னையும் உலகைப் பிடிக்கத் தூண்டியதாக கூறி இருக்கிறார். அவ்வளவு புகழ்பெற்ற மன்னன் கோரேஸ்.
மூன்றாம் தரியு ஆட்சிக்கு வருவதற்கு முன் வரை, இரு ராஜ்யங்களும் இணைந்து செயல்பட்டது. மூன்றாம் தரியு ஆட்சிக்கு முன், மேதிய ராஜ்யம், பெர்சிய ராஜ்யம் இரண்டாகப் பிரிந்தார்கள். இதுதான் அவர்களது வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. ஒருமனமில்லாத இடத்தில் வீழ்ச்சி வரும்.
குறிப்பு:
இங்கே தரியு என்று அடிக்கடி பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கும். தரியு என்பது அரசனின் பெயர் அல்ல. அரசனுக்கு கொடுக்கப்பட்ட கௌரவ பெயர். எனவே இரண்டாம் தரியு, மூன்றாம் தரியு என்று அரசர்களைப் குறிப்பிட்டிருப்பர்.
சுவாரஸ்யமான விஷயம்:
மேதிய பெர்சியர் பற்றி படித்து, இரண்டு வருடங்கள் கழித்து, புதிதாக ஒரு விஷயத்தை கற்றுக்கொண்டேன். அது எந்த அளவுக்கு உண்மையானது என்பது எனக்கு தெரியாது. ஆனால் நான் கற்றுக் கொண்ட விஷயத்தை பகிர ஆசைப்படுகிறேன்.
இரண்டாவது சாம்ராஜ்யமான பாபிலோனியர், யூதர்களை சிறை பிடித்துக் கொண்டு தங்கள் தேசத்துக்கு செல்லும்போது, இடையில் மேதியர்களை பார்த்ததாகவும், யூதர்களில் பாதி பேரை, மேதியரிடம் விற்றுப் போட்டதாகவும் கூறுகிறார்கள்
5 அப்பொழுது சூசான் அரமனையிலே பென்யமீனியனாகிய கீசின் குமாரன் சீமேயினுடைய மகனாகிய யாவீரின் குமாரன் மொர்தெகாய் என்னும் பேருள்ள ஒரு யூதன் இருந்தான்.
6 அவன் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவாகிய எகொனியாவைப் பிடித்துக்கொண்டு போகிறபோது, அவனோடேகூட எருசலேமிலிருந்து பிடித்துக்கொண்டு போகப்பட்டவர்களில் ஒருவனாயிருந்தான்.
எஸ்தர் 2:6
அப்படி சிறைப்பட்டு போன மொர்தேகாய், எஸ்தரை ராஜஸ்திரீ ஆக்கிவிட்டான். அந்த கதை நம் எல்லாருக்கும் தெரியும். அந்த அரசர் பெயர் அகாஸ்வேரு.
2 ராஜாவாகிய அகாஸ்வேரு சூசான் அரமனையிலிருக்கிற தன் ராஜ்யத்தின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தான்.
எஸ்தர் 1:2
அகாஸ்வேருவின் மகன் தரியு ராஜா என்றும், அகாஸ்வேருவின் பேரன் கோரேஸ் என்றும் கூறுகின்றனர்.
1 கல்தேயருடைய ராஜ்யத்தின்மேல் ராஜாவாக்கப்பட்ட மேதிய குலத்தானாகிய அகாஸ்வேருவின் புத்திரனான தரியு ராஜ்யபாரம்பண்ணுகிற முதலாம் வருஷத்திலே,
தானியேல் 9:1
அதாவது, ஒருபுறம் பாபிலோனில் யூதர்கள் அடிமையாக இருக்கும் பொழுது, மற்றொருபுறம் யூத ஸ்திரீயாகிய எஸ்தர் , ராஜாவின் மனைவியாக அங்கே பொறுப்பேற்கிறாள். அவர்களுக்கு பிறந்த குழந்தை தரியு. எஸ்தர் மற்றும் மொர்தெகாயின் பராமரிப்பில் யூத சட்டங்களை அறிந்து வளர்கிறார் தரியு. மேதியர் பாபிலோனைக் கைப்பற்றியவுடன், தானியேலும் இந்த கூட்டத்தில் இணைந்து கொள்கிறார். எனவே தானியேல், எஸ்தர், மொர்தெகாய் வளர்ப்பில், கோரேஸ், தன்னுடைய தேவனைப் பற்றி நன்கு அறிந்து கொண்டார். இந்த கோரேசைப் பற்றி தான், 250 ஆண்டுகளுக்கு முன்பதாகவே, ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்தார் என்றும் கூறுகிறார்கள்.
ஒரு பிரச்சனை நம்மை நெருங்குவதற்கு முன்பதாகவே, அதற்கான பதிலையும் ஆண்டவர் ஏற்படுத்தி இருப்பார் என்பதை அறியலாம். பாபிலோனியர் சிறைபிடிக்கவே இல்லை. ஆனால் தேவன், பாபிலோனிலிருந்து கோரேஸ் மூலம் வெளிவருவீர்கள் என்று தீர்க்கதரிசனமாக சொல்கிறார். அப்போது கோரேஸின் தாய் கூட பிறந்திருக்க மாட்டார்.
மேதிய பெர்சியரின் வீழ்ச்சியை பற்றி படித்தோம். அவர்களுக்குள் ஒருமனம் இல்லாததே வீழ்ச்சிக்கு காரணம். இனி அடுத்து நான்காவது பெரிய சாம்ராஜ்யமான, கிரேக்க சாம்ராஜ்யத்தை பற்றி, தொடர்ச்சியாக வரும் பதிவுகளில் காணலாம்.
Leave a Reply