ஈசாக்கு முதல் மோசே

ஆபிரகாமின் மகன் ஈசாக்கு. ஈசாக்கின் மகன் யாக்கோபு. ஈசாக்கு 60 வயதாகும்போது யாக்கோபு பிறந்து விட்டார். ஈசாக்கு மரிக்கும்போது 180 வயது. யாக்கோபு, ஏசாவுக்கு பயந்து ஓடிப்போன பின்பு தான், யாக்கோபு திருமணம் செய்தார், எனவே ஓடிப் போகும்போது அவருக்கு 40 வயதாக இருக்கும் என்று வைத்துக் கொள்வோம். யாக்கோபுக்கு 40 வயது என்றால், ஈசாக்குக்கு அப்போது 100 வயது. 100 வயதாகும்போதே நான் சாகப்போகிறேன், வந்து ஆசீர்வாதம் வாங்கி கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால் மரித்தது 180 வயதில்தான். நாமும் சிலர், ஈசாக்கைப்போல, நம் மேல் இருக்கும் கிருபையை அறியாமல், இதோ மரிக்கப் போகிறேன் என்று கூறியே காலத்தை ஓட்டுகிறோம்.

 நாம் பார்த்துவந்த படி, பரிசுத்த வித்து இதுவரை மறைந்து வந்தது. இப்போது அது யாக்கோபுவுக்குள் வந்து விட்டது. யாக்கோபிடமிருந்து வித்து ஒரே ஒருவருக்குள் போனாலும், யாக்கோபின் 12 பிள்ளைகளும் பரிசுத்த சந்ததி ஆகிவிட்டார்கள். யாக்கோபின் 12 மகன்களில் ஒருவர் தான் யூதா. யாக்கோபின் பெயரைத் தான் இஸ்ரவேல் என்று தேவன் மாற்றினார். ஆண்டவர் ஆபிரகாமுக்கு கூறியபடி, இஸ்ரவேலின் மகன்கள் பஞ்சத்துக்காக எகிப்து தேசம் சென்றனர். 430 வருடங்கள் அங்கே இருந்தனர்.

ஏன் அந்த அடிமைத்தனம்? மக்கள் ஏன் எகிப்துக்கு செல்ல வேண்டும்?உண்மையில் தேவன், இஸ்ரவேலரை அடிமையாக வைக்கவில்லை. அவர்களைப் பாதுகாப்பாக ஒரு பேழைக்குள் வைத்து பாதுகாத்தார் என்றே சொல்ல வேண்டும். ஒரு வேளை யாக்கோபின் காலத்தில் அவர்கள் கானானுக்குள்ளே இருந்திருந்தால், கண்டிப்பாக அதன் பின் கானானியருக்குள்ளேயே திருமணம் செய்து கொண்டு இருந்திருப்பார்கள். அதனால் இஸ்ரவேலர் என்ற இனமே உருவாகி இருக்காது. கானானியராகவே இருந்திருப்பார்கள். ஆனால் இந்த ஜனங்கள் 70 பேராக வெளியே சென்றதினால் தான், அவர்கள் தனி ஒரு ஜனமாக உருவெடுத்தார்கள். ஒருவேளை எகிப்தில், நன்றாக வாழ்ந்து இருந்தால், அப்போதும் அவர்கள் எகிப்தியராக மாறி இருப்பார்களே ஒழிய, தனி ஜனமாக மாறியிருக்க மாட்டார்கள். எகிப்தியரின் கீழே அடிமையாக இருந்ததினால் தான், எகிப்தியரும் அவர்களோடு கலக்கவில்லை. எனவே இவர்கள் தனி பெரும் ஜாதியாக உருவெடுத்தார்கள்.

எகிப்தில், இஸ்ரவேலின் சந்ததி எபிரேய மொழி பேசியதால், அவர்களை எபிரெயர்கள் என்று அழைத்தனர் என்று ஒருசாரார் சொல்வார்கள். நாம் ஏற்கனவே பார்த்தபடி, ஆபிரகாமின் சந்ததி என்பதால், ஆபிராமியர் என்பது எபிரேயர் ஆனது. அல்லது, ஏபேர் என்பவரின் சந்ததியை எபிரேயர் என்று கூறினார்கள். எது எப்படியோ? யாக்கோபின் புதல்வர்கள் இஸ்ரவேலர்கள் என்பது நமக்கு வேதத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.  முதல் 100 வருடங்கள் எகிப்தில் வாழ்ந்த எபிரேயர்கள் நன்கு வாழ்ந்தனர். அதன் பின்னர் எகிப்தியர்களை விட எபிரேயர்கள் பலுகிப் பெருத்திருக்கின்றனர் என்பதைக் கண்டு, கொஞ்சம் கொஞ்சமாக எபிரெயர்களைக் கொடுமைப்படுத்த ஆரம்பித்தார் பார்வோன். மோசேயின் மூலமாக எபிரேயர்கள் எகிப்தை விட்டு கானானை நோக்கிப் பயணித்தனர். யோசுவாவின் காலத்தில் கானானை சுதந்தரித்தனர். இந்த வரலாறு நாம் வேதத்தின் மூலம் அறிந்தது தான்.

மோசே மூலமாக அநேக வாதைகளைக் கொடுத்து, எபிரேயர்களாகிய இஸ்ரவேலரை மீட்டார் ஆண்டவர். ஏன் ஒவ்வொரு முறையும் அவர் பார்வோனின் இதயத்தைக் கடினப்படுத்த வேண்டும்? அந்த வாதைகள் இல்லாமலேயே ஆண்டவர் வழி நடத்தியிருக்கலாம் அல்லவா?! ஒருமுறை யாக்கோபு தேவனிடம் கேட்கிறார், ‘நீங்கள் தானே எங்கள் கடவுள். உங்கள் பெயர் என்ன?’ என்று. ஆண்டவர் “என் பேர் உனக்கு எதுக்கு?” என்று சொல்லி முடித்து விட்டார்.

இஸ்ரவேலருக்கு உண்மையாகவே தங்கள் தெய்வத்தின் பெயர் தெரியாது. ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவன் என்பது மட்டுமே அவர்கள் அறிந்தது. அதைத் தவிர தங்கள் தெய்வம் தெரியாது… தங்களுடைய தெய்வம் ஆணா பெண்ணா என்பது பற்றி தெரியாது… தங்களுடைய தெய்வத்தின் உருவம் தெரியாது… தங்கள் தெய்வத்திற்கென்று எந்த சிலையும் கிடையாது… ஆனால் அவர்கள் வாழ்ந்தது எகிப்தில்.

எகிப்து தேசம், கடவுள்களுக்கு பெயர் பெற்ற தேசம். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு தெய்வம் உண்டு. நாம் காண்கிற பத்து வாதைகளுமே பத்து தெய்வங்கள் தான். எகிப்து தேசத்தில் பேன் ஒரு தெய்வம். தவளை ஒரு தெய்வம். நைல் நதி ஒரு தெய்வம். சூரியன் ஒரு தெய்வம். இப்படி அவர்களுக்கு செல்லும் இடமெல்லாம் தெய்வம். அந்த தெய்வங்களுக்கு அவ்வப்போது பண்டிகைகளும், கொண்டாட்டங்களும் இருக்கும். ஆனால் எபிரேயராகிய இஸ்ரவேலருக்கு, தங்களுக்கென்று ஒரு தெய்வம் உள்ளது என்பது மட்டுமே தெரியுமே ஒழிய, அவர் பெயர் கூட தெரியாது.

எகிப்தை விட்டு ஜனங்கள் வெளியே வரும்போது, தன்னை இஸ்ரவேலருக்கு காண்பிக்க தேவன் விரும்பினார். நீ பார்க்கிற ஒவ்வொரு தெய்வங்களையும் விட, நானே பெரியவர் என்று அவர்களுக்கு உணர்த்த விரும்பினார். அந்த எகிப்தை விட்டு வெளியே வரும்போது, “அந்த தெய்வங்களை எல்லாம் விட பெரிய தேவன், இஸ்ரவேலருடைய தேவன். அவைகள் தெய்வங்கள் அல்ல, வெறும் விக்கிரகம் மட்டுமே” என்பதை அவர்களுக்கு உணர்த்த விரும்பியதால் தான் அத்தனை வாதைகளும்.

கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் எகிப்தில் இருந்தவர்களுக்கு தங்கள் தேவனைப் பற்றி எதுவுமே தெரியாது. ஆனால் இப்பொழுது விளங்கிக் கொண்டார்கள், தங்கள் தேவன் மாத்திரமே தேவன் என்று. இதுவரை தாங்கள் நினைத்திருந்த பெரிய தெய்வங்கள் எல்லாரையும் விட, ஒரே தேவன், அது இஸ்ரவேலருடைய தேவன் என்று அவர்கள் அறிந்து கொண்டார்கள். மோசேயிடம் ஆண்டவர் அழைப்பு விடுக்கும் போது, மோசேயும் கடவுளிடம் கேட்ட கேள்வி, “உம்முடைய பெயர் என்ன”

தங்கள் தேவனைப் பற்றி எதுவுமே தெரியாத மக்கள், அவருடைய பலத்த அற்புதங்களைக் கண்டு, தங்கள் தேவன் மாத்திரமே உண்மையான தேவன் என்று உணர்ந்து, அந்த எகிப்தின் அடிமைத்தனத்தை விட்டு வெளியே வருகிறார்கள். அந்த ஜனங்களுக்கு தெய்வத்தின் பெயர் கூட தெரியாது.

சில வரலாற்று குறிப்புகள் என்ன கூறுகிறது என்றால், எகிப்து சாம்ராஜ்யம், இஸ்ரவேலர் அடிமையாய் இருந்த அந்த 400 வருடங்கள்(கிமு 1400 முதல் கிமு 1000) தான் அவர்களின் பொற்காலமாக இருந்தது. அந்த காலகட்டத்தில்(கிமு) பெண்களை வைத்து பரிமாறக்கூடிய ரெஸ்டாரன்ட் கட்டியிருந்தார்கள். பெரிய பெரிய பிரமிடுகள் கட்டப்பட்டது. 5000 அடி உயரமுள்ள பிரமிடுகள் கட்டப்பட்டது. ஒவ்வொரு கல்லும் பல டன் எடையுள்ளது. எப்படி அந்த கல்லை மேலே கொண்டு சென்றார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் 4000 ஆண்டுகளுக்கு முன்பு அதை கட்டி விட்டனர். இத்தனை வேலைக்கும் அவர்கள் அடிமையாக பயன்படுத்தியது இஸ்ரவேலரைத் தான். அவ்வளவு வல்லமையான சாம்ராஜ்ஜியம் எகிப்து சாம்ராஜ்யம்.

எகிப்திய வரலாற்று ஏடுகளின்படி, மோசே வரும்போது, பார்வோனாக இருந்தவர் யுத்தத்துக்கு போயிருப்பார். எனவே பார்வோனின் தம்பி, acting Pharoahவாக இருப்பார். பார்வோன் என்பது பெயர் அல்ல, நாம் அரசர், அல்லது மன்னன் என்பது போல, அவர்கள் பார்வோன் என்பார்கள். ஒரிஜினல் பார்வோன் யுத்தத்துக்கு போயிருந்த அந்த ஆறு மாத காலத்தில் தான் மோசே வந்து அழைத்து சென்றிருப்பார். பத்துவாதையும் பத்து நாட்களில் நடந்து முடியவில்லை. அதற்கு கிட்டத்தட்ட ஆறு மாத காலம் தேவைப்பட்டது. மோசே இஸ்ரவேலரை அழைத்து சென்றவுடன், ஒரிஜினல் பார்வோன் தன் சேனைகளோடு திரும்பி வருவார். அவர் நடந்த எதையும் நம்பாமல், இப்படி அடிமையாய் இருந்த ஜனத்தை விட்டு விட்டாயே என்று கோபப்பட்டு, பின்தொடர்ந்து போய், அவனும் அவன் சேனைகளும் தண்ணீரில் மூழ்கியதாக ஏடுகள் கூறுகின்றன.

எகிப்திய ஆட்சி முறையில் முதல் மகன் தான் பார்வோனாக முடியும். ஆனால் இந்த கால கட்டத்தில், ஆக்டிங் பார்வோனாக இருந்தவரே, அதாவது தம்பியே அதன்பின் தொடர்ந்து ஆட்சி செய்திருப்பார். அவருக்கு பின், இந்த தம்பியின் இரண்டாவது மகன் ஆட்சி செய்திருப்பார். ஏனென்றால் முதல் மகன், தலைப்பிள்ளை சங்காரத்தில் இறந்து போயிருப்பார். இதெல்லாம் வரலாற்று சான்றுகளாக உள்ளன.

மோசே கர்த்தரிடத்தில் பேர் கேட்கும்போது ஆபிரகாமின் தேவன் என்று கூறிய கர்த்தர், அவன் கேட்காத போது கூறுகிறார்.

ஆண்டவர் எதைச் செய்தாலும் நேர்த்தியாகச் செய்பவர். அத்தனை தெய்வங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து இருந்தாலும், உங்கள் தேவன் எல்லாரிலும் பெரியவர் என்று உணர்த்தி அவர்களை எகிப்திலிருந்து வெளியே அழைத்து வருகிறார். வெளியே அழைத்து வந்தவுடன் ஜனங்களுக்கு ஏதேனும் கட்டளைகள் கொடுத்தாரா? இல்லை. அதோடு நிற்காமல், இன்னும் பல அற்புதங்களைச் செய்கிறார். செங்கடலைப் பிளந்து நடக்க வைத்து, பார்வோனை மூழ்கடித்தார்.

பகலில் மேக ஸ்தம்பம், இரவில் அக்னி ஸ்தம்பம் என்று வழிநடத்தினார். ஏன் பகலிலும் இரவிலும் இந்த மேகம் அக்னி?

வரலாற்று ஆய்வாளர்கள் இஸ்ரவேலர் நடந்து வந்த பாதைகளில் ஆய்வு செய்வதற்காக, ஒருநாள் பகலில் நடந்து சென்று பார்த்தனர். அவர்களால் அந்த பாலைவனத்தின் வெயிலிலே நடக்க முடியவில்லை. சரி இரவில் உறங்கலாம் என்று பார்த்தால், இரவில் பாலைவனத்தில் கடுங்குளிர். உயிரையே எடுத்து விடும் போல இருந்தது. அதனால்தான் நேர்த்தியாக இரவில் குளிரிலிருந்து காப்பாற்ற அக்னி ஸ்தம்பம், பகலில் வெயிலில் இருந்து பாதுகாக்க மேகஸ்தம்பம் கொண்டு ஆண்டவர் வழிநடத்தினார் என்று அறிந்து கொண்டார்கள்.

அதன்பின் மன்னா. எதுவுமே செய்யாமல், வானத்தில் இருந்து சாப்பாடு வந்தது இஸ்ரவேலருக்கு. கல்லில் இருந்து தண்ணீர் கிடைத்தது. இப்படி அற்புதங்களைச் செய்த பிறகு தான், மோசேயை அழைத்து 10 கற்பனைகளைக் கொடுக்கிறார். 10 கற்பனைகளை பெற்றுக்கொண்ட மோசே, ஒரு எதிர்பார்ப்போடு கீழே இறங்கி வந்தால், மக்கள் ஒரு பொன்கன்றுக் குட்டியை செய்து அதன் முன்னே நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். எகிப்திய தெய்வங்களைப் பார்த்தே வளர்ந்தவர்கள் இஸ்ரவேலர். நம் நாட்டில் சில கோவில்களில், நுழைவு பகுதியில் நந்தி என்று ஒரு கன்றுக்குட்டி சிலை வைத்திருப்பார்கள். அதேபோல் தான் எகிப்தியரும். எகிப்தியரின் பிரயாணக் கடவுள் Apis. அவர்கள் பிரயாணம் செய்யும் போது, கன்றுக்குட்டி சிலையை தங்களுடன் எடுத்துச் செல்வர்.

மோசே மலைக்குச் சென்று 40 நாட்கள் ஆகிவிட்டது. மோசே இருக்கின்றாரா? செத்துப்போய் விட்டாரா என்று மக்களுக்குத் தெரியவில்லை. பிரயாணக்கடவுளை எடுத்துக் கொண்டு வரவில்லை. அதுதான் குற்றமாகி விட்டது என்று நினைத்து விட்டார்கள் மக்கள்.

அவர்கள் அறியாமல் செய்த பிழை அது. அவர்களுக்கு அதற்கு பின்பு தான், கர்த்தர் எழுதிக் கொடுத்த இரண்டு கற்பலகைகள் கிடைக்கிறது. அவர்கள் கர்த்தர் ஏதோ கோபத்தில் இருக்கிறார். அவரை சமாதானப்படுத்த பண்டிகை கொண்டாடலாம் என்று நினைத்து விட்டார்கள். எகிப்தியர்கள் கூடவே வாழ்ந்த மக்கள் அல்லவா! அப்போதும் கர்த்தருக்கு தான் பண்டிகை கொண்டாட நினைத்தார்கள்.

இந்த மோசேயைப் போல யாருமே இல்லை என்று கர்த்தரே சாட்சி கொடுக்கிறார்.

எவ்வளவு வல்லமையான தீர்க்கதரிசி அல்லவா! ஆண்டவர் மிகவும் நேசித்த ஒரு தீர்க்கதரிசி மோசே. அப்படியானால் மோசே எந்த இடத்திலும் தவறே செய்யவில்லையா?

இந்த மோசே தான், ஆண்டவரிடமிருந்து கற்பனைகளை பெற்றுக் கொண்டு வந்தவர். பிற ஜாதிகளிடம் கலக்கக்கூடாது என்று மக்களுக்கு உத்தரவு கொடுத்தவர். ஆண்டவரிடமிருந்து கட்டளை பெற்று மக்களை வழிநடத்தியவர். இதே மோசே என்ன தவறு செய்கிறார்? எத்தியோப்பிய ஸ்திரீயை விவாகம் செய்து கொள்கிறார். வழிநடத்திய அவரே தவறு செய்ததால் மிரியாமுக்கு கோபம் வருகிறது. மிரியாமும் ஆரோனும் அவர் மேல் கோபம் கொள்கிறார்கள். ஆனால் அடுத்த நொடியே ஆண்டவருக்கு மிரியாமின் மேல் கோபம் வருகிறது. உலகப் பிரகாரமாக பார்த்தால் இதில் என்ன நியாயம் இருக்கிறது என்று தோன்றும். ஆனால் ஆண்டவரின் பார்வை வேறு மனிதர்களின் பார்வை வேறு. எல்லா விஷயத்திலும் மனிதர்கள் பார்க்கிற படி ஆண்டவர் பார்க்க மாட்டார். மோசேயை தவறாகப் பேசிய காரணத்தினால் ஆண்டவர் மிரியாமுக்கு குஷ்டரோகத்தை கட்டளையிட்டார். ஆனால் மோசேயும் வேறு தேசத்தை சேர்ந்த ஸ்திரீயை விவாகம் பண்ணியது தவறு தானே. ஆண்டவருடைய செயல்களை புரிந்து கொள்ளவே முடியாது. மிரியாமுக்கு, ஏழு நாட்கள் அவள் புறம்பாக இருக்க வேண்டிய நிலை வந்தது. ஆனால் அதே இடத்தில் மோசேயின் கீழ் அடங்கியிருந்தவர் யோசுவா. யோசுவாவும் இந்த காரியத்தைப் பார்க்கத்தான் செய்கிறார். ஆனால் அதன் பின்பும் மோசேக்கு அடங்கி நடந்தார். அதனால் தான் மோசேக்கு அடுத்ததாக ஆண்டவர் தெரிந்து கொண்டது யோசுவாவை.

புருஷர் மாத்திரமே 6 லட்சம் என்றால், மனைவி 6 லட்சம், 2 பிள்ளைகள் என்று வைத்துக் கொண்டால், பிள்ளைகள் 12 லட்சம் என்று கிட்டத்தட்ட 24லட்சம் பேர் எகிப்தில் இருந்து, இஸ்ரவேலுக்கு செல்ல கிளம்பியிருப்பார்கள் என்று சரித்திரவியலாளர்கள்‌ கூறுகின்றனர்.

கீழ்க்கண்ட வசனங்களை வாசித்தால், இஸ்ரவேலரின் வனாந்திர பயணம், யாரெல்லாம் கானானுக்குள் நுழைந்தார்கள் என்பது பற்றி ஓரளவு புரிந்து கொள்ளலாம்.

முதலில் எண்ணும் போது, ஆறு லட்சம் புருஷர்கள் இருக்கிறார்கள்.

40 நாட்கள் இஸ்ரவேலர் சுற்றிப் பார்த்துவிட்டு, கர்த்தர் தங்களுக்கு கொடுத்த நல்ல தேசத்துக்காக சந்தோஷப்படுவதை விட்டு, முறுமுறுக்க ஆரம்பித்தார்கள். இதுவரை தேவன் தங்களை நடத்திவந்த விதங்களை மறந்து போய்விட்டார்கள். இஸ்ரவேலர் முறுமுறுத்து தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு கோபமூட்டினார்கள். எனவே கர்த்தர் அவர்கள் யாரும் கானானுக்குள் நுழைவதில்லை என்று தண்டனை கொடுத்தார்.

யோசுவா, காலேப் தவிர கானானுக்குள் நுழைந்தவர்கள், வனாந்தரத்தில் இருக்கும் போது 40 வயதுக்கு உட்பட்டவர்கள். யூதர்கள் பொதுவாக 40 வயதில் திருமணம் செய்வார்கள் என்பதால் நிறைய ஆண்களுக்கு திருமணமாகி இருக்காது. ஆனால் பெண்களுக்கு சீக்கிரமே திருமணம் செய்து வைப்பார்கள் என்பதால் அநேக பெண்கள் விதவைகளாக இருந்திருப்பார். கானானுக்குள் நுழையும்போது அனேக பெண்கள் விதவைகளாக இருந்திருப்பர்.

இப்போது கானானுக்குள் நுழையப் போகிறவர்கள் 40 வயதுக்குட்பட்டவர்கள். அவர்களுக்கு செங்கடல் தெரியாது. பத்து வாதைகள் தெரியாது. இப்போது உள்ள குழந்தைகளிடம் அந்த காலத்தில் போன் கிடையாது, டிவி கிடையாது, கரெண்ட் கிடையாது, என்று சொன்னால் அவர்கள் நம்புவது எவ்வளவு கடினமோ, அதே போல் தான், அந்தக்கால இஸ்ரவேலருக்கு. “நீங்கள் அடிமைகளாக இருந்தீர்கள்” என்று கூறினால் அவர்களால் நம்புவது மிகவும் கடினம். ஏனெனில் அவர்கள் பிறந்தது முதல் அவர்கள் பாலைவனத்தில் வளர்ந்தவர்கள். தங்களை யாராவது அடிக்க வந்தால் அடித்து துரத்தி விடுவது மட்டுமே அவர்களுக்கு தெரியும். நாங்கள் அடிமையாக அடி வாங்கினோம் என்று கூறினால், ஏன் திருப்பி அடிக்கவில்லை என்று கேள்வி கேட்பவர்கள். அதனால் தான் அவர்கள் அனைவரையும் உட்கார வைத்து, மோசே தனது இறுதி காலத்தில் மூன்று பிரசங்கங்கள் செய்கிறார். கர்த்தருடைய செயல்கள், கர்த்தருடைய உடன்படிக்கை, கர்த்தருடைய வாக்குத்தத்தம் என்று மூன்று பிரசங்கங்கள் உபாகமத்தில் இருக்கிறது.

இந்த மோசேயை தேவன் தெரிந்துகொண்டதற்கு இன்னொரு காரணம் என்னவென்றால், அவரது தாழ்மையும், தன் ஜனங்கள் மீதான அன்பும். 40 நாட்கள் மலையில் இருந்து, மோசே கீழிறங்கும் போது, ஆரோன் பொன்கன்றுக்குட்டியை செய்து மக்கள் வழிவிலகிப் போனர். கர்த்தருக்கு கோபம் வருகிறது. கர்த்தர் சொல்கிறார், இவர்களை அழித்துப்போட்டு, உன்னை ஒரு பெரிய ஜாதியாக்குகிறேன் என்று. எவ்வளவு பெரிய ஆசிர்வாதம் அல்லவா. மோசே சரி என்று சொல்லி இருந்தால், ஆபிரகாமின் சந்ததி, இஸ்ரவேலின் சந்ததி என்று சொல்வது போல, மோசேயின் சந்ததி என்று தனியாக வந்திருக்கும். ஆனால் மோசே ஒத்துக்கொள்ளவில்லை.

நீர் அவர்களுக்கு வாக்கு கொடுத்தவர். உம் மீது வாக்களித்தீரே, என்று தன் ஜனங்களுக்காக கெஞ்சி பிரார்த்தனை செய்கிறார் மோசே. அந்த இடத்தில் இருந்தது மோசே என்பதால்தான், நிச்சயமாக கர்த்தரும் இந்தக் கேள்வியை கேட்டிருப்பார். படைத்தவருக்கு தெரியாதா? தான் படைத்த படைப்பு என்ன பதில் சொல்லும் என்று. எபிரேயர்‌ என்ற இனம் உருவாகிவிட்டது. தொடர்ச்சியாக வரும் பதிவுகளில் பார்க்கலாம், அவர்களது வரலாறுகளை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *