வெளிப்படுத்தின விசேஷம் 13ம் அதிகாரம்

சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பி வருகிறது என்று யோவான் தரிசனம் காண்கிறார். வேதத்தில் சமுத்திரம் என்பது, திரளான ஜனங்களைக் குறிக்கிறது (ஏசாயா 60-5). எனவே திரளான ஜனங்களின் மத்தியில் இருந்து, ஜனங்களுள் ஒருவர், ராஜாவாக எழும்பி வருவார் என்பதை இத்தரிசனம் குறிக்கிறது. மிருகம் என்பது ராஜ்யத்தைக் குறிக்காமல், ராஜாவை மட்டும் குறிக்கிறது.

தானியேல் 7ம் அதிகாரம் 11,12 வசனம்படி, ரோம சாம்ராஜ்யத்தின் மிருகம் அழிக்கப்பட்டது. மற்ற மூன்று சாம்ராஜ்யத்தின் ஆளுகை உயிரோடே வைக்கப்பட்டது என பார்த்தோம். இப்பொழுது யோவான் பார்க்கிற தரிசனத்தில், அந்த 3 மிருகத்தின் தன்மையும் வந்திருக்கும். தனித்தனியாக ஆட்சி செய்யும் போதே இஸ்றவேலரை கொடுமைப்படுத்தினர். 3 பேரும் சேர்ந்து என்றால், அந்திக்கிறிஸ்துவின் ஆட்சி எப்படி இருக்கும் என்பதை யோசிக்கலாம்.

அந்த மூன்று மிருகமும் இணைந்து இங்கே யோவான் தரிசனம் பார்க்கிறார் என்பதால், தானியேலின் தீர்க்கதரிசனத்தின் தொடர்ச்சி என்று இதை எடுத்துக் கொள்ளலாம். இங்கு யோவான் பார்க்கிற தரிசனத்தில், அவர் பார்ப்பது, அந்திகிறிஸ்துவை. சமுத்திரத்திலிருந்து எழும்பி வருகிற மிருகம் என்பது, ராஜாவாய் வந்து அமரப் போகிற அந்திக் கிறிஸ்துவைக் குறிக்கிறது.

நாம் ரோம சாம்ராஜ்யத்தில் பார்த்தபடி, கான்ஸ்டன்டைன் தலைமையில் பெரிய ரோம சாம்ராஜ்யம் இருந்தது. ஆனால் அவருக்குப் பிறகு ரோம சாம்ராஜ்யம் இரண்டாகப் பிரிந்து, ஒருபகுதி மட்டுமே ரோமாக இருந்தது. ஆனால் கிபி538ல் இரண்டும் இணைந்து ரோம சாம்ராஜ்யம் மீண்டும் உருவெடுத்தது. அதுவரை வெறும் மதக்குருவாக இருந்த போப், தன்னை ராஜாவாக அறிமுகப்படுத்தினார். தனக்கு கீழே 10 நாடுகள் வைத்துக்கொண்டு, அவர் தன்னை ஆண்டவராக்கி, போப் ஆண்டவராக மாறினார்.

முதல் வசனத்தில் நாம் பார்த்த ஏழு தலை என்பது ரோமையும், 10 கொம்பு என்பது 10 நாடுகளையும் குறிக்கும். ரோம் என்பது ஏழு மலைகள் சூழ்ந்த அழகிய நகரம். போப் ஆண்டவர் ரோமில் இருந்து அரசாண்டார். அவருக்குக் கீழே 10 நாடுகள் இருந்தது.

தலையிலொன்று சாவுக்கேதுவாய் காயப்பட்டிருந்தது என்பது, 1798ல் நெப்போலியன் போனபார்ட் என்பவர், அப்போதிருந்த போப்பை சிறையில் அடைத்து, ரோம சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்ததாக அறிவித்தார். ஆனால் ஆச்சரியப்படத்தக்க விதத்தில், 1928 பிப்ரவரி 13ல் அவருக்கு(போப்) மீண்டும் ராஜ்யபாரம் கொடுக்கப்பட்டது. ஆனால் அவருக்கு கீழே இருந்த நாடுகள் தனித்தனி 10 நாடுகளாய் மாறியது. அதில் சிலர் போப்பை ஏற்றுக் கொண்டனர். சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை.

(இந்த 10 நாடுகள் இணைந்து European unionஆக உருமாறி இருப்பதாகவும், அவர்கள் கையில் இருந்து ராஜ்யம் அந்திக்கிறிஸ்துவுக்கு கொடுக்கப்படப் போவதாகவும் வேதவல்லுனர்கள் கூறுகிறார்கள். முடிந்தால் வேறு பதிவில் பார்க்கலாம்.)

சாவுக்கேதுவான காயத்தைப் பற்றி பல கருத்துக்கள் கூறுகிறார்கள்.

1.ஒருவேளை அந்திகிறிஸ்து மரித்து, பின்னர் உயிர்த்தெழுவது போல் காட்டலாம் என்று கூறுகிறார்கள்.

2.ரோம சாம்ராஜ்யம் அழிந்து மீண்டும் உருவெடுத்ததைக் குறிக்கும் என்று கருதுகிறார்கள்.

3. புதிதாக ஒரு பெரிய சாம்ராஜ்யம் வரப்போவதையும் குறிக்கும் என்று சொல்லுகிறார்கள்

பவுல் அந்திக்கிறிஸ்துவைப் பற்றி மிகவும் தெளிவாக கூறியிருக்கிறார்.

அந்திக்கிறிஸ்து, மரிக்கும் நிலையிலிருந்து, அல்லது மரித்து பின்னர் உயிரோடு வந்தால், நிச்சயமாக மக்கள் அந்த அதிசயத்தைப் பார்த்து, எந்தவித கேள்வியும் தயக்கமும் இன்றி, அவனைப் பின் தொடர்வார்கள். எனவே பொய்யான அற்புதங்களோடு அந்திக்கிறிஸ்து ஆட்சிக்கு வரலாம்.

கிரேக்க சாம்ராஜ்யத்தில் யூதர்களை மிகவும் கொடுமைப்படுத்திய, அந்தியோகஸ் எஃபிபானஸ் (Antiochus Epiphanes) பற்றி நாம் படித்திருக்கிறோம். அவரை Theos Epiphanes என்றும் சொல்வார்கள். Theos என்பதன் அர்த்தம் God. Epiphanes என்பதன் அர்த்தம் Manifested. அந்த ராஜா தன் பெயரிலேயே தேவனை அவமதித்தார். “கடவுள் வெளிப்பட்டார்” என்ற அர்த்தத்தில் பெயர் வைத்திருந்தார். இந்த அந்தியோகஸ்தான், அந்திக்கிறிஸ்துவின் முன்னோடி என்று காண்பிக்கப்படுகிறார். கிரேக்க மிருகமான சிவிங்கியின் சாயல் தான் இந்த மிருகத்துக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்துவுக்கு முன், கிமு 130களில், அந்தியோகஸ், கிரேக்க கலாச்சாரத்தை எருசலேமில் பரப்ப மிகத் தீவிரமாக இருந்தார். ஓய்வு நாள் கலாச்சாரத்தை கைவிடச் சொல்லி துன்புறுத்தினார். ஓய்வு நாளில் யூதர்கள் கட்டாயமாக வேலை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். யூத குழந்தைகளுக்கு விருத்தசேதனம் செய்தால், அந்த குழந்தைகளை கொன்றார். விருத்தசேதனத்துக்கு தடை கொண்டு வந்தார். எருசலேம் தேவாலயத்துக்குள், கிரேக்க தெய்வமாகிய சீயஸ் சிலையை நிறுவி, ஒவ்வொரு யூதனையும் பணிந்து கொள்ளச் சொல்லி கட்டாயப்படுத்தினார். பணியாத யூதர்களைக் கொன்று குவித்தார். தன்னை எதிர்த்த யூதர்களை, ஓய்வு நாளில் போர் தொடுத்து, கொன்று குவித்தார். தேவாலய பலிபீடத்தின் மீது, அசுத்த மிருகமான பன்றியை, தான் பலியிட்டது மட்டுமல்லாமல், யூதர்களையும் பலியிடச் சொல்லி கட்டாயப்படுத்தினார். கர்ப்பிணிகளை தேவாலய உப்பரிகையிலிருந்து தள்ளி விட்டார். இப்படி யூதர்களுக்கு பல கொடுமைகள் செய்தவரைத்தான், அந்திக்கிறிஸ்துவின் முன்னோடி என்று கருதுகிறார்கள். ஹிட்லர் போன்று எத்தனையோ பேர், யூதர்களைக் கொன்று குவித்திருந்தாலும், யூதர்களின் தேவாலயத்தை அசுத்தப்படுத்தியவர் இந்த அந்தியோக்கஸ். இவரே அந்திக்கிறிஸ்துவின் டீசர்.

தானியலின் 70 வாரத்தில், மீதம் இருக்கிற ஒரு வாரம் பார்த்தோம் அல்லவா! அதாவது கடைசி ஏழு வருடங்கள். (7*12=84 மாதங்கள். அதில் பாதி 42 மாதங்கள். எனவே 42 மாதங்கள் என்பது, ஏழு வருடத்தின் பாதி. அதாவது மூன்றரை வருடங்கள்.) அந்த ஏழு வருடங்கள் தான் உபத்திரவ காலம். அந்த நாட்கள் ஆரம்பிக்கும் போது, முதலாவது எல்லா நாடுகளிலும் குழப்பங்கள் மேலோங்கி இருக்கும். அப்பொழுது எல்லா நாடுகளுக்கும் சமாதானத்தை அறிவிப்பவனாக, சமாதான தூதுவனாக உள்ளே நுழைபவன் அந்தி கிறிஸ்து. முதல் மூன்றரை ஆண்டுகள் இயல்பாக இருப்பான். ஆனால் அவனுடைய காயம் சொஸ்தம் ஆக்கப்பட்டவுடன், சாத்தான் தன் முழு அதிகாரத்தையும் அவனுக்கு கொடுத்து விடும். கடைசி மூன்றரை ஆண்டுகள், மகா உபத்திரவ காலம். அப்பொழுது அவன் மிருகம் போல் மாறி, யூதர்களை வேட்டையாடத் தொடங்குவான். இஸ்ரவேலை முழுவதுமாக ஒன்றுமில்லாமல் ஆக்குவது அவனுடைய லட்சியமாக இருக்கும். ஆனாலும் கர்த்தர், கழுகைப் போல அவர்களை, அவன் கைக்கு விலக்கி தப்புவிப்பார். அந்த உபத்திரவ நாட்களில் நாம் இருப்போமா என்பது பற்றி, பல வகையான கருத்துக்கள் இருந்தாலும், நீதிமான் தீங்கு வருவதற்கு முன்பே எடுத்துக் கொள்ளப்படுவான் என்ற வார்த்தையின் படி, நாம் எடுத்துக் கொள்ளப்படுவோம் என்றே விசுவாசிக்கலாம்.

யூதர்களையும் பரிசுத்தவான்களையும் வேட்டையாடுவான். யார் யாரெல்லாம் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள், அந்திகிறிஸ்துவை வணங்க மாட்டேன் என்று பிடிவாதமாய் இருக்கிறார்களோ, அவர்கள் எல்லாரையும் கொன்று போடுவான். கிறிஸ்துவை அப்போது மறுதலிக்காமல் இருப்பவனையே இங்கு பரிசுத்தவான் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

கடைசியான மகா உபத்திரவ காலம் என்பது (42 மாதங்கள்), முன்னர் எப்போதும் கண்டிராத அளவுக்கு, உலகத்தில் இருக்கும். ஏனென்றால் அந்திக் கிறிஸ்து யூதர்களையும் பரிசுத்தவான்களையும் எதிர்த்து போரிடுவான். அதே நேரத்தில் தேவனும் தம் கோபத்தை பூமியில் ஊற்றுவார். இதுவே மகா உபத்திரவ காலம். இந்த உலகத்தில் உள்ள எல்லாரும் அந்திகிறிஸ்துவை வணங்குவார்கள். ஆனால் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள் அவனை வணங்க மாட்டார்கள்.

புறஜாதிகளின் இரட்சிப்புக்காக, அதாவது இஸ்ரவேல் அல்லாத ஜனமாகிய நம்முடைய இரட்சிப்புக்காக, ஆண்டவர் கொடுத்திருப்பது கிருபையின் காலம். இந்த கிருபையின் காலத்தில், நாம் இரட்சிக்கப்படவில்லை என்றால், அந்த உபத்திரவ காலத்தில், ஒன்று கிறிஸ்துவுக்குள்ளாக இரத்த சாட்சியாக மரிக்க வேண்டும். அல்லது அந்திக்கிறிஸ்துவின் முத்திரையை தரித்து, நரகத்தை எதிர்நோக்கி காத்திருக்க வேண்டும். கிடைக்கப்பெற்ற இந்த நாளிலே, நாம் விசுவாசத்தை அறிக்கையிடலாமே!

இரட்சிப்பு என்பது ஏதோ பெரிய விஷயம் கிடையாது. இயேசு என்பவர், உண்மையாகவே தேவனுடைய குமாரன் என்றும், அவர் என் பாவங்களுக்காக மரித்தார் என்றும் நம்பி(விசுவாசித்து), அதை யாரிடமாவது கூறினால், அதாவது வாயாலே அறிக்கை இட்டால், அந்த நிமிடம் நாம் இரட்சிக்கப்பட்டு விட்டோம். கிறிஸ்தவ வாழ்வில் முக்கியமானது நம்பிக்கை(விசுவாசம்).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *