அசீரிய சாம்ராஜ்யம், பாபிலோன் சாம்ராஜ்யம், மேதிய பெர்சிய சாம்ராஜ்யம், மற்றும் கிரேக்க சாம்ராஜ்யம் பற்றி பார்த்தோம். அடுத்ததாக ரோம சாம்ராஜ்யம் பற்றி பார்க்கலாம். இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் ஆண்ட சாம்ராஜ்யம் ரோம சாம்ராஜ்யம். எனவே இதைப் பற்றி முழுமையாக நாம் அறிந்தால், வேதத்தை ஆழமாக படிக்க உதவியாக இருக்கும். முடிந்த வரையில் முழுமையாக, பொறுமையாக படியுங்கள்.
ரோம சாம்ராஜ்யம்
அடுத்ததாக ஆட்சி செய்த சாம்ராஜ்யம், ரோம சாம்ராஜ்யம். அதிக வருடங்கள் ஆட்சி செய்த சாம்ராஜ்யமும் இதுதான். கிமு 63ல் இருந்து, கிபி 538 வரை ரோம சாம்ராஜ்யமாகவும், கிபி 538லிருந்து கிபி 1798 வரை Reformed Roman Empire State ஒருங்கிணைந்த ரோம சாம்ராஜ்யமாகவும் இருந்த பெரும் சாம்ராஜ்யம். நமக்கு மிக முக்கிய சாம்ராஜ்யம் கூட ரோம சாம்ராஜ்யம் தான். இயேசு கிறிஸ்து பிறந்தது, அவரது மரணம், உயிர்த்தெழுதல், சீஷர்கள் துன்பப்படுதல், சீஷர்கள் கொலை செய்யப்படுதல், எருசலேம் முற்றிலும் அழிக்கப்படுதல், இஸ்ரேல் என்ற பெயரே இருக்கக்கூடாது என்று, இஸ்ரேலை பிரித்து வேறு பெயரிட்டது என்று பல சம்பவங்கள் நடந்தது, ரோம சாம்ராஜ்யம் ஆட்சியில் தான்.
பரிசேயரும் சதுசேயரும் என்று இரண்டும் இணைந்து, புதிய ஏற்பாட்டில் 95முறை உள்ளது. சதுசேயர் மட்டும் ஐந்து முறை உள்ளது. ஆனால் பழைய ஏற்பாட்டில் பரிசேயர் சதுசேயர் என்ற வார்த்தையே இருக்காது. இயேசுவுக்கும் அவர்களுக்கும் ஒத்துவராது. பவுலுக்கும் அவர்களுக்கும் ஒத்துவராது. ஆனால் பவுலே ஒரு பரிசேயர். பரிசேயர் சதுசேயர் இவர்கள் இருவர் நீதியிலும் உங்கள் நீதி அதிகமாய் இருக்க வேண்டும் என்று இயேசு கூறியிருப்பார். யார் இந்த பரிசேயர் சதுசேயர்? எப்போது தோன்றினார்கள்?
பரிசேயர்
நாம் ஏற்கனவே பார்த்தபடி, தாவீது சாலொமோன் காலத்தில், முழு இஸ்ரேலாக இருந்த தேசம், ரெகோபெயாமின் காலத்தில் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. மேல் பக்கம் 10 கோத்திரம் இணைந்து, இஸ்ரேலாகவும், கீழ்ப்பகுதி இரண்டு கோத்திரமான பென்யமீன் யூதா இணைந்து யூதேயா தேசமாகவும் மாறியது. லேவி கோத்திரத்துக்கு தேசம் பிரிக்கப்படவில்லை. ஒவ்வொரு கோத்திரத்திலும் 4 லேவிய பட்டணங்கள் இருந்தது. யூதேயாவிலும் கொஞ்சம் லேவியர் மாத்திரம் இருந்தனர். கிமு 722ல் இஸ்ரேல் தேசம் சிறைபிடிக்கப்பட்டு போனது.
கிமு 586ல் பாபிலோனியரால் எருசலேம் பிடிக்கப்பட்டது. பாபிலோனியர்கள் தேவாலயத்தை எரித்து, தரைமட்டமாக்கி தேவாலயத்தின் பொருட்களையும் எடுத்துக்கொண்டு சென்று விட்டனர். பாபிலோனுக்கு சென்ற யூதர்களை வழிநடத்த யாருமில்லை. நியாயப்பிரமாணத்தை கற்றுக் கொடுக்க யாருமில்லை. ஆதலால் யூதர்களே, தங்களுக்குள் கொஞ்சம் நல்லவர்களாய்த் தெரிந்தவர்களை, வேறு பிரித்தார்கள். யூதர்களுக்குள் கொஞ்ச லேவியர் இருந்தார்கள். ஆனால் அவர்கள் நல்லவர்களாக, வல்லவர்களாக யூதர்களுக்கு தெரியவில்லை. எனவே தலைவர்கள் போல் இருந்த, யூதா பென்யமின் கோத்திரத்தில் உள்ள சிலரைப் பிரித்து, பரிசேயராக வைத்தார்கள். பரிசேயர் என்றால் பிரித்து எடுக்கப்பட்டவர்கள் என்று அர்த்தம்.
இந்த நல்லவர்களாக தெரிந்தவர்கள் அதிகமாக நியாயப்பிரமாணம் தெரிந்தவர்களாகக் கருதப்பட்டனர். ஆவிக்குரிய காரியங்களை, பாபிலோனுக்கு சென்ற யூதர்களுக்கு கற்றுக் கொடுக்க, பரிசேயர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் இருந்து தான் ரபீக்கள் வந்தனர். ஆலயம் இல்லை… வேதம் எரிக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் பரிசேயர் தங்களுக்கு ஞாபகம் இருந்ததை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்தனர். சீஷர்களை உருவாக்கினர். பரிசேயரின் எண்ணிக்கை பெருகியது.
இப்போது இரு பரிசேயர்கள் கற்றுக் கொடுத்ததால், வேறு வேறு கருத்துக்கள் உருவாகின. மக்களும் வேறு வேறு கருத்துக்களைப் பின்பற்றி இரண்டாகப் பிரிந்தனர். ஷம்மாய் என்னும் ஒருவர், நியாயப்பிரமாணத்தின் படி வாழ மக்களை திணிப்பவர். ஓய்வு நாளில் நடக்கவும் கூடாது. நடந்தால் அதுவும் ஒரு வேலை. நீ இவ்வளவு தூரம் வேண்டுமானால் நடக்கலாம் என ஒரு சட்டம் போட்டார். ஹிலெல் என்ற மற்றவர் மக்களுக்குத் துணையாக இருந்தார். ஓய்வு நாளில் நோயோ, குழியில் கழுதை விழுந்தாலோ, இப்படி ஏதாவது அவசரம் என்றால், நீங்கள் நடக்கலாம். ஓய்வு நாளில் நடப்பது பாவமல்ல. ஷம்மாய் சொல்வதை அப்படியே கேட்டு நடக்க வேண்டிய அவசியம் இல்லை, என்று கற்றுக் கொடுத்தார். இயேசு வந்த காலத்தில் பரிசேயர்கள் அவரிடம் கேள்வி கேட்கும் போது, இயேசு ஞானமாக பதில் கொடுத்தார். ஹிலெல் ஆள் வந்து அவரிடம் கேள்வி கேட்டால், ஷம்மாய் பதிலையும், ஷம்மாய் ஆள் வந்து கேள்வி கேட்டால் ஹிலெல் பதிலையும், மாறி மாறி கொடுத்து ஞானமாய் பேசினார். எடுத்துக்காட்டாக உங்களில் ஓய்வு நாளில் ஒரு கழுதை விழுந்தால் தூக்கி விட மாட்டீர்களா என்று பதில் கொடுத்தது அவர்களுடைய உபதேசத்தை பொறுத்து.
பரிசேயரைப் பொறுத்தவரை, எல்லாமே தேவதூதர் தான். நின்றால் தேவதூதர், நடந்தால் தேவதூதர் என, தூதர்களை முன்நிறுத்தி பேசுவர். இயேசுவை இவர்கள் எதிர்க்கக் காரணம், அவர் பரிசேயராய் இல்லாதபோது, மக்கள் அவரை ரபீ என்று அழைத்ததே.
சதுசேயர்
மற்றொரு சாரார், லேவியர். இவர்கள் தோராவை மட்டுமே சார்ந்து வாழ்ந்தார்கள். அதிலும் உபாகமமை சார்ந்தே இருந்தார்கள். ஆதியாகமம் மட்டும் தான் தேவதூதர் வந்தார்கள், அதன்பின் அவர்களுக்கு வேலை இல்லை என்று கருதினார்கள். தேவதூதர் கிடையாது. உயிர்த்தெழுதல் கிடையாது. நம் வாழ்க்கை நம் கையில். உயிரோடு இருக்கும் போது, நாம் எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம் என்று வித்யாசமான போதனை கற்றுக்கொடுத்தார்கள். சதுசேயரும் பரிசேயரும் பாபிலோனில் இருக்கும்போதே, இரு பிரிவுகளாக பிரிந்திருந்தார்கள்.
பாபிலோன் சிறையிருப்பு முடிந்து, செருபாபேல் ஆலயம் கட்டி முடித்த பிறகு, பரிசேயர் ஆலயத்துக்குள் அதிகாரம் செலுத்த, சாதோக்கு என்னும் ஆசாரியர் தடுத்தார். இனி லேவியர் ஆலயப் பொறுப்பை பார்த்துக்கொள்வோம் என்று கூறிவிட்டார். சாதோக்குடன் பல லேவியர் இணைந்து கொண்டனர். இவர்கள் சாதோக்கியர்கள் என்று அழைக்கப்பட்டு, சதுசேயர் என்று மொழிபெயர்க்கப்பட்டனர்.
ஜெப ஆலயம்:
தேவாலயத்தின் மொத்த அதிகாரமும் சதுசேயருக்குப் போனதால், அவர்களின் உபதேசத்தில் பிழை இருப்பதாக எண்ணிய பரிசேயர், ஜெப ஆலயங்களை உருவாக்கி ரபீக்களாக இருந்தனர். ஏற்கனவே எசேக்கியேல் பாபிலோனில் இருக்கும்போதே, வீட்டில் ஆராதிக்க சொல்லிக் கொடுத்திருந்ததால், ஜெப ஆலயங்களை பரிசேயர் உருவாக்கி விட்டனர். இயேசு ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தக சுருளை வாசித்தார் என்பது கூட ஜெப ஆலயத்தில் தான். உயிர்த்தெழுதல் பற்றிய நம்பிக்கை உடையவர்கள் பரிசேயர். நமது பவுல் அப்போஸ்தலர் கூட, பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பரிசேயர் என்று வேதத்தில் பார்க்கலாம்.
தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெபஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார்.
லூக்கா 4 -16
பரிசேயர் சதுசேயர் அங்கீகாரம்
ஹனுக்கா பண்டிகை பார்த்தோம் அல்லவா, அன்டியோகஸ் எபிஃபானஸ் கிரேக்க மன்னன், எருசலேம் தேவாலயத்துக்குள் தீட்டைக் கொண்டு வர, மக்கபேயர் என்று அழைக்கப்படும், யூதா மக்கபே தலைமையில், போர் நடந்து, வெற்றி பெற்று, தேவாலயம் சுத்திகரிக்கப்பட்டது. அந்த யூதா மக்கபே தான், பரிசேயர், சதுசேயரை, சட்டப்படி ஒரு அமைப்பாக அங்கீகாரம் செய்தார்.
வேதபாரகர்
பழைய ஏற்பாட்டு காலத்தில், லேவியரில் சிலர் வேதப்பிரமாணத்தை எழுதுவார்கள். எரேமியா காலத்தில் பாரூக் என்பவர்எழுதியதாக வேதத்தில் பார்க்கலாம். இப்படி, நியாயப்பிரமாணத்தை எழுதுபவர்கள் வேதபாரகர். தேவாலயம் முற்றிலும் எரிக்கப்பட்டதால், நியாயப் பிரமாணத்தை திரும்ப எழுதினார்கள். வேதபாரகருடன் சதுசேயரும் இணைந்து வேலை பார்த்தனர். (ஆலயம் முற்றிலும் எரிக்கப்பட்டாலும், ஆலய புத்தக சுருள்கள் பாபிலோனில் நூலகத்தில் வைக்கப்பட்டது)
ஆயக்காரர்
ஆயக்காரர் என்பவர்கள் வரி வசூலிப்பவர்கள். இவர்கள் மீது ஜனங்கள் வெட்டிக் கொன்று போடும் அளவுக்கு ஆத்திரத்தில் இருப்பார்கள். நம் வீட்டுக்கு EBயிலிருந்து வந்து, கணக்கு எடுத்துப் போகும் ஒருவரைப் போன்ற வேலைதான் ஆயக்காரர். அதாவது, எஸ்தர் புத்தகத்தின்படி பார்த்தால், கிட்டத்தட்ட 127 நாடுகள் பெர்சியர் வசம் இருந்தது. அதற்குப் பின்னர், அலெக்ஸாண்டர் உலகைப் பிடித்தார். அதற்குப் பின்னர் ரோமர்கள். கிட்டத்தட்ட ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆசியா என்ற மூன்று கண்டமும், முழு உலகமும் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. அமெரிக்கா ஆஸ்திரேலியா போன்ற கண்டங்கள் கண்டுபிடிக்கப் படவில்லை. ரோமர்கள் முழு உலகையும் ஆட்சி செய்தனர். அவர்களால் எல்லா நாட்டு மக்களிடமிருந்தும் வரிப்பணம் வசூலிக்க போதுமான ஆட்கள் இல்லை. எனவே அந்தந்த ஏரியாவில் யார் பணக்காரரோ, அவர்கள் மற்றவர்களுக்கு வரி கட்டுவர்.
எடுத்துக்காட்டாக, சகேயு ஒரு ஆயக்காரர். இவர், அவர் ஏரியாவில் உள்ள மக்கள் அனைவருக்கும் சேர்த்து மொத்தமாக வரிப்பணத்தைக் கட்டி விட்டு, அதன்பின் மக்களிடம் அதை வசூலிப்பார். ரோமர்கள் ஒரே நாளில் வந்து வரிப்பணத்தை வாங்குவதற்கு, ஆயக்காரர் உபயோகமாக இருந்தார்கள். திரும்ப திரும்ப வரவேண்டிய அவசியம் இல்லை. மொத்த பணத்தையும் ஒரே நாளில் கலெக்ட் செய்துவிட்டு, தங்கள் நாட்டுக்குத் திரும்பி விடலாம். ரோமர்களுக்கு இது நன்மை.
சகேயுவுக்கு என்ன நன்மை என்றால், மற்றவர்களுக்கு அவன் வரி கட்டுவதால், அவன் குடும்பத்துக்கு வரி செலுத்த தேவையில்லை. ஒரு குடும்பத்துக்கு 10பணம் செலுத்தி இருந்தால், மாதம் ஒரு பணம் என்று, கிட்டத்தட்ட 12 பணம் சம்பளமாக அவன் பெற்றிருப்பான். எனவே சகேயுவுக்கு அது லாபம். மக்கள் ஏன் கோபப்படுகின்றனர்?
பட்டணத்தின் வாசலிலே, ஆயத்துறை என்று ஒரு இடம் இருக்கும். அங்கே இந்த ஆயக்காரர்கள் அமர்ந்து, ஊரிலுள்ள மக்கள் வெளியே செல்வதையும் உள்ளே வருவதையும் பார்த்து, வரிப்பணம் வசூலிப்பார்கள். ஒரு ஆயக்காரன், எடுத்துக் காட்டுக்கு சவுலையே வைத்துக் கொள்ளலாம். சவுல், X என்ற நபர் வெளியே செல்லும்போது கூப்பிட்டு, இன்னும் பணம் கட்டவில்லை என்று கையில் வைத்திருக்கும் நோட்டை காண்பிப்பார். அடுத்த வாரம் அந்த X கட்டினாலும், அதற்கு அடுத்த வாரம் மீண்டும் Xஐ அழைத்து வரிப்பணம் கட்டவில்லை என்று நோட்டைக் காண்பிப்பார். இப்படி ஒரு மாதத்தில் மட்டும், கிட்டத்தட்ட இரண்டு அல்லது மூன்று முறை ஏமாற்றி பணம் வாங்குவான். ஆனால் மக்களால் யாரிடமும் complaint பண்ண முடியாது. ஏனெனில் சகேயு தான் கவர்மெண்ட் ஆள். எதுவும் பண்ண முடியாது. எனவே சகேயு மேல் அவ்வளவு ஆத்திரத்தில் இருப்பார்கள். இயேசு சகேயு வீட்டுக்கு போனால், அதனால்தான் மக்களுக்கு கோபம் வந்தது.
எசீன்ஸ்(essennes)
எசீன்ஸ் என்பவர்கள் லேவி கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். பரிசேயர் சதுசேயர் வேதபாரகர் என்று எல்லாரையும் வெறுத்தவர்கள் இந்த லேவியர்கள். இவர்கள் மற்றவர்களைப் போல பாபிலோன் காலத்தில் உருவானவர்கள் அல்ல. கிரேக்க மன்னன் அன்டியோகஸ், வேறு தெய்வச் சிலையை கொண்டு வந்து தேவாலயத்துக்குள் வைத்த, அந்தக் காலகட்டத்தில் உருவானவர்கள். சதுசேயரும் லேவியர் தான். ஆனால் சதுசேயர், அரசாங்கத்துக்கு காக்கா பிடித்துக்கொண்டு வாழ்ந்தார்கள். எனவே சில லேவியர், பொதுவான இயல்பு வாழ்க்கையை விட்டு, வெளியே வந்தார்கள். அதாவது இவர்கள் திருமணம் செய்ய மாட்டார்கள். உணவு ஒருநேரம் மட்டும் தான் சாப்பிடுவர். உலக வாழ்க்கையை வெறுத்தார்கள். அவர்களைப் பொறுத்தவரை, ஆலயம் பரிசேயர் சதுசேயரால் தீட்டுப்பட்டு விட்டது. தேவன் வரும்போது ஆலயம் ஒன்றுமில்லாமற் போகும். எனவே ஆலயத்தை புறக்கணித்து, சுகபோக வாழ்க்கையை வெறுத்து, ஏதேனும் குகையிலோ, அல்லது ஏதேனும் ஒரு இடத்தில் கூட்டமாக வாழ்ந்தார்கள்.
எசீன்ஸ் தங்களுக்குள் கூட அதிகம் பேசிக்கொள்ள மாட்டார்கள். முழு நேரமும் வேதம் எழுதுவது தான் இவர்கள் வேலை. வேதத்தில் பிதாவின் நாமத்தை எழுதும்போது, அதாவது நம் பைபிளில் கர்த்தர் என்று எழுதியிருப்பது, போல்டாக(Bold letter) இருக்குமல்லவா! அந்தக் காலத்தில், எசீன்கள் அதை எழுதும்போது, எழுதுவதற்கு முன் ஆற்றில் மூழ்கி எழுந்து வந்து, எழுதிவிட்டு, பின்னரும் போய் மூழ்கி எழுந்து வருவர். அவர் பெயரை எழுத மட்டும் தனியாக வேறு பிரஷ் வைத்திருந்தனர். தேவனின் நாமத்திற்கு அவர்கள் கொடுத்த மரியாதை இது.
காலை, மாலை இருவேளையும் ஆற்றில் மூழ்கி எழுந்து துடைத்துக் கொள்வர். இதுதான் அவர்களின் குளியல். எப்போதும் எழுதிக் கொண்டே இருப்பார்கள். இடையில் ஒருவர் மட்டும் எழுந்து வேறு வேலை பார்த்து வருவார். தங்களுக்குள்ளே கூட அதிகம் பேசிக்கொள்ள மாட்டார்கள். ஒட்டகமயிர் உடை தரித்திருப்பார்கள். வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் சாப்பிடுவார்கள். நீங்கள் நினைக்கிறபடி, யோவான்ஸ்நானனும் ஒரு எசீன்ஸ் தான். எசீன்ஸ் கும்ரான் குகைகளிலும், தாவீதின் கல்லறைக்கு மேலே ஒரு மேல்வீடு கட்டியும் வாழ்ந்தனர்.
மக்களிடம் நேரடித் தொடர்பே காட்டாத ஒரு கூட்டத்தில் இருந்து, திடீரென ஒரு மனிதன் வந்து, நீங்கள் எல்லாரும் பாவிகள் என்று உரக்க பேசும்போது, அவன் குரலுக்கு மக்கள் செவிசாய்க்க தொடங்கினர். ஆம்… யோவான்ஸ்நானன் “விரியன் பாம்பு குட்டிகளே” என்று கூறும்போது, மனந்திரும்பினார்கள் ஜனங்கள். யோவான் தங்களுடைய எசீன்ஸ் பழக்கமான தண்ணீரில் மூழ்கி எழுதலை, ஞானஸ்நானமாக அறிமுகம் செய்தார். பல மக்கள் யோவானால் ஞானஸ்நானம் பெற்றனர். இயேசுவும் யோவானுடைய ஞானஸ்நானத்தை அங்கீகரித்து, அவரும் ஞானஸ்நானம் பெற்றார், கொடுத்தார். சீஷர்களையும் கொடுக்க வைத்தார். பவுல், இந்த ஞானஸ்நானத்தை அழகான மூல உபதேசமாக்கி ரோமருக்கு எழுதினார். தண்ணீரில் மூழ்குவது, அவரோடு மரிப்பதைக் குறிக்கிறது என்றும், வெளியே வருவது, அவரோடு உயிர்த்தெழுவதைக் குறிக்கிறது என்றும் அழகான உபதேசமாக, பரிசுத்த ஆவியானவர் துணையோடு நமக்குக் கொண்டு வந்து விட்டார். ஏரோதுவால் யோவான்ஸ்நானன் சிரைச்சேதம் செய்யப்பட்டார் என்பது நாம் அறிந்தது.
ஏரோது
இஸ்ரவேல் தேசத்தை, மூன்று பிரிவுகளாக பிரித்து ஆட்சி செய்தார்கள் ரோமர்கள். வேறுவேறு ராஜாக்கள் ஆட்சி செய்துள்ளனர் இந்தப் பகுதிகளில்,. யூதேயாவை ஆட்சி செய்தவர் ஏரோது.
1. நாசரேத், கப்பர்நகூம் – கலிலேயா
2. பெத்லகேம், எருசலேம், தெக்கோவா – யூதேயா நாடு
3. இரண்டுக்கும் கீழ் பகுதி – இதுமேயா
கலிலேயாவிலும், யூதேயாவிலும், எருசலேமிலும், இதுமேயாவிலும், யோர்தானுக்கு அக்கரையிலுமிருந்து திரளான ஜனங்கள் வந்து, அவருக்குப் பின்சென்றார்கள்.
மாற்கு 3- 8
ஏரோது ஏதோமிய வம்சத்தைச் சேர்ந்தவர். ஏதோமியர் யார் என்றால், யாக்கோபின் சகோதரனாகிய ஏசாவின் வம்சாவழி. சவக்கடலுக்கு அப்புறத்தில், சேயீர் மலைதேசத்தில், கன்மலைகளில் வாழ்ந்தவர்கள். ஒபதியா தீர்க்கதரிசன புத்தகத்தில் ஏதோமின் அழிவைப் பற்றி வாசிக்க முடியும். இன்று ஜோர்டான் நாட்டுக்கு சென்றால், பெட்ரா என்று ஒரு இடம் இருக்கும். கல்லுக்குள் கோவில், வீடு செதுக்கி வைத்திருப்பார்கள். மிகுந்த செல்வ செழிப்புடன் வாழ்ந்தவர்கள். இஸ்ரவேலர் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து கானானுக்கு வரும்போது , ஏதோமியர் அவர்கள் தேசத்தின் வழியே கடந்து செல்வதற்கு அனுமதி கொடுக்கவில்லை. அதேபோல் இஸ்ரவேலரை, எதிரி நாடுகள் தாக்கும்போது ஏதோமியரும் இணைந்து தாக்கினார்கள். எனவே ஏதோமியரை தேவன் சபித்தார். ஒபதியா புத்தகத்தில் இவர்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். தென்தேசத்தார் ஏதோமின் மலையைப் பிடிப்பார்கள் என்று தேவன் கூறியிருக்கிறபடி, ஏதோமியரை மொத்தமாக ஒரு தேசத்தார் அழித்தனர். அப்போது பணக்காரர்கள் சிலர், அங்கிருந்து தப்பி, சவக்கடலைக் கடந்து, கானான் தேசத்துக்குள் ஓடி, இஸ்ரவேலருக்குள் தங்கினர். தஞ்சம் கேட்டு வந்த பணக்கார ஏதோமியருக்கு அடைக்கலம் கொடுத்தனர் இஸ்ரவேலர்.
ரோம அரசு, ஜீலியஸ் சீசர் காலத்தில், பேரரசாக உருவாகிக் கொண்டிருந்த வேளையில், உள்ளுக்குள் அரசியல் பிரச்சினை இருந்தது. அப்போது, இஸ்ரவேலில் இருந்த ஏதோமியனாகிய அன்டிபேட்டர் என்பவன், சீசருக்கு உதவி செய்தான். அந்த ஆன்டிபேட்டரை யூதேயாவின் ராஜாவாக ஏற்படுத்தினார் சீசர். அவரது மகன்தான் ஏரோது. ரோம அரசுக்கு கீழிருந்த இஸ்ரவேலரை ஆட்சி செய்ய, ரோமரால் ஏற்படுத்தப்பட்ட ஏதோமியன் தான் ஏரோது. ஏரோது நரித்தனமாய் செயல்படுபவன், இஸ்ரவேல் மக்களிடம் இஸ்ரவேலருக்கு உதவி செய்பவன் போல பேசுவார், ரோமர்களிடம், ரோமருக்கு அடிமையாகப் பேசுவார்.
சாஸ்திரிகள்
30 வருடம் அரசாட்சி செய்து விட்ட ஏரோது, தனக்குப்பின் தன் மகன் ஆட்சிப் பொறுப்பில் இருப்பான் என்ற கனவுடன் இருக்கும் போது, சாஸ்திரிகள் வந்து, ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே என்று கேட்டால், சும்மா விடுவாரா? நாம் நினைக்கிறபடி, மூன்று சாஸ்திரிகள் வரவில்லை. நூற்றுக்கணக்கான சாஸ்திரிகள் வந்திருந்தார்கள். நூற்றுக்கணக்கானோர் ஒரே நேரத்தில் கூடி வந்ததால் தான், ஏரோதுவுக்கு பயம் வந்தது.
அந்தக் காலத்தில், ஒவ்வொரு நாட்டிலும் வானசாஸ்திரிகள் இருந்தார்கள். இவர்கள் நட்சத்திரங்களைப் பார்த்து சாஸ்திரம் கூறுபவர்கள். ‘ராஜாவுக்கு குழந்தை பிறந்தால், ராஜ்யம் எப்படி இருக்கும்? யுத்தத்துக்கு எந்த நேரத்தில் போக வேண்டும்?’ என்று கணிப்பவர்கள் இந்த சாஸ்திரிகள்.
நாமே ஒரு பரிசோதனை செய்து பார்க்க முடியும். ஒரே இடம், ஒரே நேரம் தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதாவது என் வீட்டு மொட்டை மாடியில் ஒரு இடத்தில் இருந்து, இரவு எட்டு மணிக்கு நான் நிலாவைப் பார்க்கிறேன் என்றால், அது என் வலப்பக்கத்தில் தூரமாக இருக்கும். இரண்டாம் நாள் எட்டு மணிக்கு, அதே இடத்தில் இருந்து பார்த்தால், கொஞ்சம் பக்கத்தில் இருக்கும். மூன்றாம் நாள், நான்காம் நாள் என்று பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். சரியாக எட்டாவது நாள், நிலா மறுதிசையில்(இடப்பக்கம்) இருக்கும். தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்க, சில நாள் நிலாவைப் பார்க்க முடியாது. மீண்டும் 25வது நாள், எட்டு மணிக்கு, என் வலப்பக்கத்தில், எனக்கு அருகில் இருக்கும். தொடர்ந்து பார்க்க, சரியாக 30வது நாள், இரவு எட்டு மணிக்கு, என் வலப்பக்கத்தில் எனக்கு தொலைவில் நிலா இருக்கும். நான் முதல் நாள் பார்த்த இடத்தில், சரியாக 30வது நாளும் அதே இடத்தில் இருக்கும்.இது நிலா சுற்றும் காலம்.
நிலாவைப் போன்றே, நட்சத்திரங்கள் சுற்றும் காலத்தை சாஸ்திரிகள் அறிந்திருப்பர். சில நட்சத்திரங்கள் மின்னும். சில நட்சத்திரங்கள் மின்னாது. சில நட்சத்திரங்கள் சூரியனைப் போல எரியும். சில கிரகங்கள், சூரியன் மூலம் ஒளியை வாங்கி நட்சத்திரங்களைப் போல மின்னும். வானசாஸ்திரங்களைக் கற்ற சாஸ்திரிகள் ஒவ்வொரு அரசாங்கத்திலும் இருப்பார்கள்.
ஒருநாள் இரவு, வழக்கம் போல நட்சத்திரத்தைப் பார்க்கும்போது, இதுவரை இல்லாத புது நட்சத்திரத்தைப் பார்க்கிறார்கள். இதுவரை அந்த நட்சத்திரம் இருந்ததாக எந்த ஏடுகளிலும் குறிப்பிடவில்லை. எனவே குழப்பமடைகிறார்கள். ஒவ்வொரு நாட்டிலும் இருந்த சாஸ்திரிகள் குழம்பிப்போய் பார்க்கிறார்கள். அடுத்த நாள் அதே நட்சத்திரத்தைப் பார்க்கிறார்கள், அது நகர்ந்து இருக்க வேண்டும். ஆனால் அதே இடத்தில் இருக்கிறது. 3வது நாள், 4வது நாள் என்று பார்க்கிறார்கள், நட்சத்திரம் அசையவே இல்லை. பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது. இரண்டு மாதம், மூன்று மாதம் என்று பார்க்கிறார்கள், நகரவே இல்லை. குழம்பிக் கொண்டு இருந்த சாஸ்திரிகள், தொடர்ந்து கண்காணிக்கிறார்கள். பலமாதம் கழித்து, திடீரென நட்சத்திரம் நகர்கிறது. அடுத்த நாள் இன்னும் சில தூரம் நகர்கிறது. ஒரே இடத்தில் எரிந்து கொண்டிருந்த நட்சத்திரம் நகர ஆரம்பித்து விட்டது. பண்டைய ஏடுகளில், காலத்தை வைத்துக் கணக்கிட்டால், ஏதோ தெய்வக்குழந்தையோ, அல்லது புதிய ராஜாவோ பிறந்திருப்பார் என்று அறிகிறார்கள். அந்தக் குறிப்பிட்ட ராஜா ஏதோ ஒரு விசேஷமானவர் என்று அறிகிறார்கள். அந்த நட்சத்திரத்துக்கு “அவருடைய நட்சத்திரம்” என்று பெயர் வைத்தார்கள்.
இஸ்ரேலுக்கு கிழக்கு நாடுகளான ஜப்பான், இந்தியா, இலங்கை, சீனாவில் இருந்து இன்னும் பல நாடுகளிலிருந்தும் சாஸ்திரிகள் கிளம்புகிறார்கள். ராஜா பிறந்திருந்தால் தங்கம்(பொன்) கொடுப்பார்கள். தெய்வக்குழந்தை என்றால் தூபவர்க்கம் போட நினைத்தார்கள். ராஜா மரணத்துக்கு என்றால் வெள்ளைப்போளம். எல்லாவற்றையும் தங்கள் குதிரைகள் ஒட்டகங்களில் ஏற்றி நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்தனர் சாஸ்திரிகள். எனவே பெரும் பொக்கிஷமே இயேசு பிறந்த பொழுது யோசேப்புக்கு கிடைத்தது. இயேசு ஏழை குழந்தை அல்ல. கிரேக்கர்கள் கிரேக்க மொழியை ஆட்சி மொழியாக நடைமுறைப்படுத்தி இருந்ததால், மொழி தடையாக இருக்கவில்லை. ரோமர்கள் ரோடு போட்டிருந்ததால், பாதையும் தடையாக இருக்கவில்லை. அவர்கள் போய்ச்சேர்ந்த போது, பிள்ளைக்கு ஒன்றரை வயது இருக்கலாம் என்று கணிக்கின்றனர் நட்சத்திரம் தோன்றிய காலம் வைத்து. அதனால் தான், இரண்டு வயதுக்குட்பட்ட பிள்ளைகளை ஏரோது கொலை செய்தார். எம்பெருமான் பிறந்தபோது, என் தாய்த்திருநாட்டில் இருந்தும் கூட சிலர் சென்று அவரை வணங்கினர் என்பது எமக்கு பெருமையே! அவர்களுக்கு வேதம் தெரியாது, பிதாவைத் தெரியாது. ஆனால் அவர்கள் கற்றிருந்த வானசாஸ்திர ஏடுகள், அவர்களை எம்பெருமான் முன் தலைகுனிந்து பணிய வைத்தது விந்தையே.
ரோம சாம்ராஜ்ய வரலாறு:
மிகப்பெரிய வரலாறை நம்மால் விளக்க முடியாது. கொஞ்சமாக ரோமர்களை அறிந்து கொள்ளலாம். ரோமின் ராணுவ குடும்பத்தில் பிறந்த ஜூலியஸ் சீசர், தன்னுடைய திறமையால் ஸ்பெயின் ஆட்சியாளர் ஆனார். கிமு 58ல் மூன்று வளமிக்க மாகாணத்தை ஆட்சி செய்து கொண்டிருந்தார் சீசர். கிமு 48ல் எகிப்து மன்னனை தோற்கடித்து, கிளியோபட்ராவை ராணி ஆக்கினார். எகிப்தின் வெற்றிக்கு பிறகு ரோம் இதுவரை கண்டிராத அளவு பெரிய ஆட்சியாளராக மாறினார் சீசர். ஆனால் கிமு 44ல் கொல்லப்படுகிறார் ஜீலியஸ் சீசர். அவரது மரணத்திற்கு பிறகு சீசரின் உறவினர் மார்க் ஆண்டனி என்பவன், சீசரின் மருமகன் ஆக்டேவா உடன் கூட்டணி வைத்து, எதிரிகளை தோற்கடிக்க சபதம் எடுத்து, அதை நிறைவேற்றி, ஆட்சியைப் பிடித்தனர் இருவரும். மேற்கு பகுதியை மார்க் ஆண்டனியும் கிழக்குப் பகுதியை ஆக்டேவாவும் ஆட்சி செய்ய ஆரம்பித்தனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல, ஆண்டனிக்கும் கிளியோபட்ராவுக்கும் ஏற்பட்ட பழக்கம் அக்டேவாக்கும் ஆண்டனிக்கும் இடையே விரிசலை உண்டாக்கியது. கிமு 31ல் ஆண்டனி – கிளியோபட்ரா கூட்டுப்படையை, ஆக்டேவா தோற்கடித்து, மிகுந்த அதிகாரமிக்கவராக மாறினார். ரோமின் முதல் பேரரசாக தன்னை அறிமுகப்படுத்தினார் ஆக்டேவா.
கிமு 27ல் ஆக்டேவா, தன் பெயரை அகஸ்டஸ் சீசர் என்று மாற்றினார். நாம் வேதத்தில் பார்க்கிற அகஸ்து ராயர் என்ற மன்னர் இவர்தான். இவரது காலத்தில் ரோம் புதிய உச்சம் தொட்டது. பல கடல்வழிப் பாதை, சாலைகளை உருவாக்கினார். இந்த சாலைகள் உருவாக்கப்பட காரணம், வணிகம் மற்றும் ராணுவம். ரோமப்பேரரசுக்கு கீழிருந்த நாடுகளில் மட்டுமல்லாமல், இந்தியா போன்ற நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டது. எனவேதான் அன்றைய காலத்தில் ரோம் எல்லா நாடுகளிலிருந்தும், தன் நாட்டிற்கு, கடல் வழிப் பாதையோ அல்லது தரைவழிப் பாதையோ போட்டு இருந்தது.
அகஸ்டஸ் என்பதன் அர்த்தம், வணக்கத்துக்குரியவர். கிபி 14லிருந்து, கிபி 68 வரை கொடுங்கோல் ஆட்சி செய்தவர்கள்,
Augustus
Tiberius
Caligula
Claudius
Nero
இவர்கள் அனைவரும் கொடுங்கோல் ஆட்சி செய்தவர்களாய் இருந்தார்கள். இவர்களின் கீழ் யூத மக்கள் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். இவர்களது காலத்தில்தான் இயேசுவும் வெளிப்பட்டார்.
ஹனுக்கா
ஜீலியஸ் சீசர் பேரரசரான பின், ஒருமுறை யூதர்களின் ஹனுக்கா பண்டிகையால், கவரப்பட்டார். தேச முழுவதும் வண்ண விளக்குகளால் நிரம்பி, கண்கொள்ளா காட்சியாக இருந்தது. அந்த பண்டிகை ஏன் கொண்டாடுகின்றனர் என்றால், நாம் ஏற்கனவே கிரேக்க சாம்ராஜ்யத்தில், கிமு167ல், அன்டியோகஸ் எபிஃபானஸ் என்ற ஒரு ராஜா, எருசலேம் தேவாலயத்தில், கிரேக்க தெய்வத்தின் சிலையை நிறுத்தி, மக்களை வழிபடச் சொல்லி, கட்டாயப்படுத்தியும், தேவாலயத்தின் பலிபீடத்தில் பன்றிகளை பலியிட்டார். மக்கபே யூதா என்பவரும் அவரது சகோதரர்களும், மக்களைத் தூண்டி விட்டு கலகம் பண்ண வைத்தனர். யூதர்கள் கலகம் பண்ணத் தொடங்கியதும், அந்தியோகஸ்ம் அவரது படைவீரர்களும், பயங்கரமாக யூதர்களைக் கொன்று குவித்தனர். கர்ப்பிணிகளை, தேவாலயத்து உப்பரிகையில் ஏற்றி, மேலிருந்து கீழே தள்ளி கொலை செய்தனர். இந்த மக்கபே, தன் தம்பிகளைக் கூட்டிக்கொண்டு மலைக்குச் சென்று, இரண்டு வருடம் கழித்து, போரிட்டு வெற்றி பெற்றார். இந்த சம்பவம் தள்ளுபடி ஆகமத்தில் மக்கபேயர் புத்தகத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அவர்கள் திரும்பி வந்து, தேவாலயத்தை சுத்திகரித்து, பிரதிஷ்டை செய்தார்கள். “கூடுதலாக ஒளி வந்தது” என்ற அர்த்தத்தில், ஹனுக்கா என்று பண்டிகைக்கு பெயர் வைத்து, 7விளக்குகள் உள்ள குத்துவிளக்கில், கூடுதலாக இரண்டு விளக்குகளை வைத்து, ஒன்பது விளக்குள்ள குத்துவிளக்கு ஏற்றினார்கள். இந்த பண்டிகையை யூதர்கள் கிஸ்லே மாதம் 25ல் தொடங்கி, எட்டு நாட்கள் பண்டிகையாக கொண்டாடுவார்கள். அந்த கிஸ்லே என்பது, நம்முடைய டிசம்பர் மாதத்தில் வரும்.
எனவே ஜீலியஸ் சீசர், அந்தப் பண்டிகையை, ரோமர்களின் பிரதான தெய்வமாகிய சூரியனுக்கு பண்டிகையாக்கி, டிசம்பர் 25ம் தேதியைக் கொண்டாட்ட நாளாக்கினார். பின்னர் 300 வருடங்கள் கடந்து ஆட்சிக்கு வந்த கான்ஸ்டன்டைன் மன்னன், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதால், சூரிய தெய்வத்தின் பண்டிகையை, கிறிஸ்து பிறப்பு நாளாக அறிவித்தார்.
ஏன் யூதரால் இயேசுவை ஏற்க முடியவில்லை?
ஏன் யூதர்களால் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை? ஏனென்றால் அவர் தன்னை தேவனுடைய குமாரன் என்று கூறினார். அதை யூதர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. யூதர்களைப் பொருத்தவரை அவர்களுடைய மேசியா வருவார். அவர் ஒரு ராஜாவாக வந்து அவர்களை ஆளுகை செய்வார். ஆனால் நம்முடைய ராஜாவோ கழுதையின் மேல் பயணம் செய்தார். நம்முடைய ராஜாவோ மீனவர்களுடன் தங்கியிருந்தார். யூதர்களின் பழைய ஏற்பாட்டு சட்டதிட்டங்களின்படி, கண்ணுக்கு கண் பல்லுக்கு பல். ஆனால் கிறிஸ்துவோ, ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காண்பிக்கச் சொன்னார். யூதர்களைப் பொருத்தவரை விபச்சாரம் செய்யக்கூடாது. விபச்சாரம் செய்து ஒரு ஸ்திரீ கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் இருவரையும் கல்லெரிந்து கொலை செய்ய வேண்டும் என்று நியாயப்பிரமணத்தில் கூறப்பட்டிருக்கும். ஆனால் பரிசேயர்களுடைய சட்டத்தின் படி, அந்த பெண்ணுக்கு மட்டுமே தண்டணை. எனவே இந்த யூதர்கள், களவாய் விபச்சாரம் செய்வார்கள்… ஒருவேளை விபச்சாரத்தில் கண்டுபிடிக்கப்பட்டால் ஸ்திரீயை மட்டும் கல் எரிந்து கொலை செய்வார்களே ஒழிய விபச்சாரம் செய்யாமல் இருக்க மாட்டார்கள். ஆனால் இயேசு அந்த காலகட்டத்தில் தோன்றி, ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்த்தாலே இருதயத்தில் விபச்சாரம் செய்தாயிற்று என்று கூறினார். இது யூதர்களுக்கு கோபமுண்டாக்கியது. இதே போல் யூதர்கள் வைத்திருந்த ஒவ்வொரு நம்பிக்கையையும் இயேசு உடைத்து எறிந்தார்.
யூதர்கள் ஓய்வு நாளில் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே நடப்பார்கள். ஓய்வு நாளில் நடப்பது கூட பாவம் என்று எண்ணுபவர்கள். ஆனால் இயேசுவோ ஓய்வு நாளில் நடந்து நோயுற்றவர்களை குணமாக்கினார். இதுவும் யூதர்களின் கோபத்துக்கு காரணம். என்னையன்றி வேறு தேவன் இல்லை என்று பிதாவானவர் கூறியிருக்க, இயேசுவோ என் நாமத்தினால் நீங்கள் எதை கேட்டாலும் அதை உங்களுக்கு அருளிச் செய்வேன் என்று கூறினார் இது யூதர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. யூதன் என்றாலே அவனது நாடும் அவனது தேவாலயமும் தான் அவன் உயிர் மூச்சு என்று ஏற்கனவே பார்த்தோம். யூதர்கள் பொதுவாகவே தங்கள் தேவாலயத்தை குறித்து பெருமையுடன் இருப்பார்கள். ஆனால் இயேசுவோ அந்த ஆலயத்தில் ஒரு கல்லின் மேல் மறு கல் இராதபடிக்கு அழிக்கப்பட்டு போகும் என்று கூறினார். இது அவர்களின் வெறியைத் தூண்டி விட்டது என்று கூறலாம். இப்படி பல காரணங்களுக்காக யூதர்கள் கிறிஸ்துவை வெறுத்தார்கள். கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளவில்லை. நியாயப்பிரமாணத்தை அழிப்பதற்காக இயேசு வந்திருக்கிறார் என்று இவர்கள் நினைத்தார்கள். பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதை இயேசு அவர்களிடம் புகுத்த நினைத்தார். ஆனால் யூதர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.சிலுவை மரணத்துக்கு ஒப்புக்கொடுத்தார்கள்.
சிலுவை மரணம்
கிரேக்கர்கள் ஆட்சிக்கு வந்து, கிரேக்க மொழியை உலகம் முழுவதும் பரப்பினார்கள் என்று பார்த்தோம். ரோமர்கள் உலகம் முழுவதும் ரோடு போட்டார்கள். அடுத்ததாக ரோமர்கள் கடுமையான தண்டனை கொடுத்தார்கள். ரோமர்கள் ஆட்சியில் தான், சிலுவைமரணம் நடைமுறைக்கு வந்தது. அது நம் கிறிஸ்து இயேசுவுக்காகவே நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது எனலாம். கிறிஸ்துவானவர் தன் கடைசி சொட்டு இரத்தம் வரை சிந்தி, இவ்வுலகை மீட்க வேண்டும் என்பது தீர்க்கதரிசனம். அதை நிறைவேற்றியவர்கள் ரோமர்கள். நாம் ஏதோ, அவரை சிலுவையில் அறைந்தார்கள். அவர் மரித்தார், அவர் உயிர்த்தார் என்று ஈஸியாக சொல்லிவிடுவோம். ஆனால் சிலுவை மரணம் என்பது என்ன தெரியுமா?
ரோமர்கள் பயங்கரமான குற்றவாளிகளுக்கு, 39முறை வாரினால் அடிப்பார்கள். அந்த வாரில் ஒரு கொக்கி இணைக்கப்பட்டிருக்கும். அடிக்கும்போது அந்த கொக்கி நம் உடலில் வந்து சொருகிக்கொள்ளும். அதை இழுக்கும்போது அந்த கொக்கி சொருகிய சதையை, இழுத்துக்கொண்டு வெளியே வரும். இப்படி 39 முறை ஒரு குற்றவாளியை அடிப்பார்கள். இயேசுவையும் அப்படி அடித்தார்கள். இயேசுவை மட்டும் அல்ல, பவுல் கூட ஐந்து முறை இதே போல் 39 அடிகள் வாங்கி இருக்கிறார். ஆதிகால கிறிஸ்தவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள் இந்த ரோமர்களால் என்பதை நாம் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். பவுல் ஒன்று குறைய 40 அடியாக, ஐந்து முறை அடிக்கப்பட்டு இருக்கிறேன் என்று கூறியிருப்பார். இயேசுவுக்குக் கூட அந்த தண்டனை கொடுத்து, அதோடு போதும் என்று பிலாத்து நினைத்தார். ஆனால் அவரை சிலுவையில் அறையும்படி கத்தியது யூதஜனங்கள் தான். யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளாததால், அவரை சிலுவையில் அறையச் சொல்லி கத்தினர்.
சிலுவை மரணம் எப்படி வரும்? கடைசி சொட்டு ரத்தம் வரை சொந்தப்பட வேண்டும். எப்படி? காலில் கையில் போட்ட ஓட்டையின் வழியே ரத்தம் சொட்டு சொட்டாக சிந்தி வெளியேறும். கால்களில் போட்ட ஓட்டைகளின் வழியாக ஒட்டுமொத்த ரத்தமும் உடலில் இருந்து வெளியேறி மரிப்பார்கள். ஒரு ஒட்டடைக்குச்சி மாதிரி ஒன்றில், ஒரு திரவத்தைத் தொட்டு, அந்த கால் ஓட்டையின் மீது அடிக்கடி பூசுவார்கள், கீழே நிற்கும் சேவகர்கள். அது ஏன் என்றால், அந்த திரவமானது இரத்தத்தை உறைய விடாது. நமக்கு சாதாரணமாக ஏதேனும் அடிபட்டால், இரத்தம் வரும்… ஆனால் உடனே உறைந்து நின்று விடும். ஆனால் இவர்கள் தேய்க்கும் அந்த அமிலம், இரத்தத்தை உறைய விடாமல் தடுக்கும். எனவே இரத்தம் முழுவதும் வெளியேறி, அந்த மனிதன் சாவான். இதுதான் சிலுவை மரண தண்டனை. இரத்தம் உறையாமல் இருப்பதால், கடைசி சொட்டு ரத்தம் வரை சிந்தி, ஒரு மனிதன் சாக மூன்று நாள் ஆகும்.
ஆனால் அடுத்த நாள் ஓய்வு நாள் என்றாலோ, அல்லது அந்த மனிதனை மூன்று நாள் வைத்திருக்க முடியாது என்றாலோ, ஒருவன் சீக்கிரம் சாக வேண்டும் என்று முடிவெடுத்தாலோ, அவனுடைய கால் எலும்பை முறிப்பார்கள். அப்பொழுது காலில் பேலன்ஸ் பண்ண முடியாமல், உடலின் எடை தாங்காமல், உடல் இறங்கி இறங்கி, மூச்சு இறுகி செத்துப் போவார்கள். கால் எலும்பை முறித்தால் உடலில் உள்ள மொத்த ரத்தமும் வெளியேறாது. மூச்சு முட்டிதான் செத்துப் போவார்கள். எனவே தான் இயேசுவின் கால் எலும்பு முறிக்கப்படவில்லை, அவர் தனது முழு இரத்தத்தையும் சிந்தி மரிக்கவே பிறந்தார்.
இவ்வளவு சீக்கிரம் அவர் சாக முடியாது என்று சேவகர்கள் எண்ணினார்கள். மேல் பக்கம் உள்ள ரத்தம் அனைத்தும் வந்து சேரும் இடம் விலா. ஒருவேளை கீழே உள்ள இரத்தம் காலின் வழியே வெளியேறினாலும், மேற்பகுதி உடலில் ரத்தம் தேங்கி இருந்தால், அது விலாவில் இருக்கும். அதனால் தான் விலாவில் குத்தி பார்த்தான் அந்த சேவகன். அவன் குத்திய போது ரத்தத்துடன் தண்ணீர் வந்தது. அதன் அர்த்தம் என்ன தெரியுமா? உடலில் கடைசி சொட்டு ரத்தம் வரை சிந்தப்பட்டு, மீதி தண்ணீர் வெளிவந்தது. இப்படிப்பட்ட கொடூர தண்டனைக்காக காத்திருந்து, இந்த தண்டனை கொடுக்கும் காலத்தில் தான் இயேசு பிறந்து, வெளிப்பட்டு, இதே தண்டனையில் மரணம் அடைந்து, நமக்காக சிலுவையில் ரத்தம் சிந்தினார். இந்த தண்டனையை உருவாக்கியவர்கள் ரோமர்கள்.
யூதர்கள் & மேசியானிக் யூதர்கள்
இயேசுவின் உயிர்த்தெழுதலின் பின்னர், யூதர்கள் இரண்டாகப் பிரிந்தனர். யூதமக்கள் பலர், எருசலேம் தேவாலயத்தை மையமாகக் கொண்டு, பிதாவை மட்டும் வழிபட்டு வந்தனர். அவர்களுக்கு இயேசு ஒரு தீர்க்கதரிசி மட்டுமே. ஆனால் சில யூதர்கள், இயேசுவின் போதனை, வாழ்க்கை முறை, உயிர்த்தியாகத்தால் கவரப்பட்டு, கிறிஸ்தவர்களாக மாறினர். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதால், அந்த யூத மக்கள் கிறிஸ்தவர்களாக மாறினர். இயேசுவின் சீஷர்கள் உலகம் முழுவதும் போய், கிறிஸ்துவின் அன்பை போதித்தனர். கிமு 14 முதல் 68 வரை அரசாண்ட 5 அரசர்கள் பெயர் ஏற்கனவே கூறியிருக்கிறோம். Augustus, Tiberius வேதாகமத்தில் வந்தவர்கள். அவர்களுக்குப் பின் வந்த மூன்று அரசர்கள், காலிகுலா, கிளாடியஸ், நீரோ யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் துன்பப் படுத்தினார்கள்.
ரோமர்கள், யூதர்களுக்கும், புதிதாக முளைத்த கிறிஸ்தவர்களுக்கும் எதிராக இருந்தார்கள்.இந்த மன்னர்கள் கிறிஸ்தவர்களை எதிர்த்தனர். ஒரு பெரிய மண்டபம் கட்டி, கிறிஸ்தவர்களை கம்பத்தில் கட்டி, அவர்களை உயிரோடே எரித்து, அந்த வெளிச்சத்தில் அரசனும், அவன் குடும்பமும், மந்திரி பிரதானிகளும் விருந்துண்டு சந்தோஷப்படுவார்களாம். இதுதான் ரோம அரசரின் இரவு உணவின் சிறப்பு.
பெரிய விளையாட்டு அரங்கங்களில், பட்டினி போடப்பட்ட பெரிய சிங்கங்களை வெளியே விட்டு, கிறிஸ்தவர்கள் கைகளை முன்னால் கட்டி விட்டு, ஓட விட்டு வேடிக்கை பார்ப்பார்கள். சிங்கம் அவர்களை உயிரோடே அடித்து சாப்பிடுவதை பார்த்து ரசித்துக் கொண்டு இருப்பர் அரசனும் மக்களும்.
கிபி 64ல் பெரும் தீவிபத்து ஏற்படுத்தி, ரோம் நகரை அழித்தான் நீரோ மன்னன். யூதர்கள் எண்ணிக்கை பெருகியிருப்பதும், புதிய கட்டுமானத்தில் நகரை புதிதாக அமைக்கத் திட்டம் தீட்டியதும் தான், ரோம் நகரை நீரோ மன்னர் எரித்ததற்கான காரணம். ஆனால், ‘கிறிஸ்தவர்கள் தான் இந்த உலகத்துக்கு முடிவு வரும். அம்முடிவு நெருப்பால் வரும் என்று கூறுகிறார்கள். எனவே ரோம் எரிய காரணம் கிறிஸ்தவர்கள்’ என்று கிறிஸ்தவர் மீது பழி போட்டான் நீரோ மன்னன்.
கிபி 38ல் காலிகுலா அரசனாக இருக்கும்போது, அலெக்சாந்திரியா பட்டணத்தில் ஜந்தில் இரு பங்கு யூதர்கள் இருப்பதைக் கண்டார். 500க்கு மேற்பட்ட யூதர்களைக் கொன்றவர், அவர்களின் வழிபாட்டுத்தலங்களையும் அழித்தார். காலிகுலாவின் மரணத்துக்கு பிறகே யூதர்கள் அவர்கள் சொத்துக்களை திரும்பப் பெற்றனர். எருசலேம் தேவாலயத்தில், தனது சிலையை நிறுவி வணங்கச் சொன்னார் காலிகுலா.
கிபி 54 முதல் 68 வரை ஆட்சி செய்தவர் நீரோ மன்னன். நீரோ மன்னன் கொடுமையான மன்னன். புரட்சி செய்த யூதர்களை தோற்கடித்து யூத கோவில்களைக் கொள்ளையாடினான். கிறிஸ்தவர்களையும் தீயில் தூக்கிப் போட்டு கொன்றான். பேதுரு சிலுவையில் அறையப்பட்டும், பவுல் தலை துண்டிக்கப்பட்டும் மரித்தது இந்த நீரோ மன்னனின் கொடுங்கோல் ஆட்சியில் தான். எருசலேமின் அழிவு கிபி 66ல் நீரோவால் ஆரம்பிக்கப்பட்டது. கிபி70ல் எருசலேம் முற்றிலுமாக அழிந்தது.
கிபி 70ல் எருசலேமின் அழிவின் போது, அநேக யூதர்கள் கொல்லப்பட்டனர். வாட்டசாட்டமான ஒரு லட்சம் யூதர்கள், colosseum மற்றும் பிற ரோம கட்டடங்கள் கட்டுவதற்கு, வெஸ்பேஸியன் மன்னனால் அழைத்துச் செல்லப்பட்டனர். கிட்டத்தட்ட மூன்று யுத்தங்கள், யூதர்களுக்கும் ரோமருக்கும் இடையே நடந்தது. ஆனால் ரோமர்கள் வெற்றி பெற்றனர். சில சட்டங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியிட்டனர். அதன்படி மோசேயின் நியாயப்பிரமாணம் கற்றுக்கொடுப்பது மரணத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது.
அந்த ஐந்து அரசர்களுக்குப் பின், வெஸ்பேஸியன் அரசனானான். அவருக்கு பின் அநேக அரசர்கள் வந்தார்கள். அதில் முக்கியமானவர் டிராஜன்(Trajan). இந்த அரசர் ஏன் முக்கியமானவர் என்றால், பிளினி என்ற கவர்னர் கிபி112ல் டிராஜன் என்ற ரோமப்பேரரசனுக்கு எழுதிய கடிதங்கள், இன்றும் உள்ளன. அக்கடிதம் அக்கால கிறிஸ்தவர்களின் வாழ்க்கை முறையை கூறுகிறது. கிபி 111ல் பதவியேற்ற பிளினி, அங்கே கிறிஸ்தவம் வளர்ச்சி அடைந்து, வேற்று மத கோவில்களே இல்லாதிருப்பதைக் காண்கிறார். கிறிஸ்தவர்கள் மூடநம்பிக்கை நிறைந்தவர்கள் என்று பிளினி கருதினார். ஒழுக்கம் சீரழிந்த ரோம சாம்ராஜ்யத்தில், கிறிஸ்தவர்கள் என்ற ஒருகூட்ட மக்கள் உயர்ந்த ஒழுக்க நிலையில் இருப்பது ஆச்சரியத்தை அளித்தது. கிறிஸ்தவர்கள் அதிகாலையில் எழுந்து, கீர்த்தனை பாடி, நாங்கள் திருட மாட்டோம், விபச்சாரம் செய்ய மாட்டோம் என்று உடன்படிக்கை செய்து வந்தனர். பிளினி எழுதிய கடிதத்தில், “நான் ஒரு கிறிஸ்தவனைப் பார்த்து, ‘நீ கிறிஸ்தவனா?’ என்று மூன்று முறை கேட்பேன். அவன் 3 முறையும் ‘ஆம்’ என்றால், உடனடியாக மரணத் தண்டனை கொடுத்து விடுவேன். அவன் ரோம பிரஜையாக இருந்தால், ரோமுக்கு அனுப்பி விடுவேன். ‘நான் கிறிஸ்தவன் அல்ல’ என்று சொல்பவனை உடனடியாக விடுதலை செய்வேன். ஆனால் உண்மையான கிறிஸ்தவன் ஒரு போதும் மறுதலிக்க மாட்டான்” என்று எழுதி இருந்தார். ஆதிகால கிறிஸ்தவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறதா?
சீடர்கள் மரணத்துக்குப் பிறகு, பலர் சபையை வழிநடத்தினர். Tamil dubbed polycorp என்ற படம் YouTubeல் பார்த்தால் புரியும். பாலிகார்ப், ரோமர்களுக்கு பயந்து, மறைமுகமாக சுவிசேஷம் அறிவிப்பார். அவரை உயிரோடே கம்பத்தில் கட்டி எரித்து விடுவார்கள். யோவானின் வயதான காலத்தில், அவரின் சீடராக இருந்தவர் இந்த பாலிகார்ப். கிபி112ல் உயிரோடு எரித்து கொல்லப்பட்டார்.
ஜஸ்டின் மார்ட்டர், வேற்று தெய்வங்கள் வழிபடும் குடும்பத்தில் பிறந்தார். பல தத்துவங்கள் கற்றவர், உண்மையான தெய்வத்தை தேடி அலைந்தார். எபேசுவில் தெருவில் நடந்து போய்க்கொண்டு இருக்கும்போது, வயதானவர் ஒருவர் மூலமாக இயேசுவை அறிந்தார். அந்நேரமே அவரை ஏற்றுக் கொண்டார். இயேசுவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவர்களாக மாறியதற்காக, அவரும் அவரைச் சேர்ந்தவர்களும், கிபி 163ல் கொல்லப்படும்போது, அவரிடம் சேவகர்கள், “இறந்த பின் உயிர்த்தெழுவாய் என்று நம்புகிறாயா?” எனக் கேட்டதற்கு, “அதை நான் நிச்சயமாக நம்புகிறேன்” என்று கூறி இறந்தார் ஜஸ்டின் மார்ட்டர்.
ஒரு அரங்கத்தில், அதாவது முதல் நூற்றாண்டில் கட்டப்பட்ட அந்த அரங்கம் இன்றும் இத்தாலியில் இருக்கிறது. அந்த அரங்கத்தில் வாள்போர் நடக்கும். இரண்டு மனிதர்களை போரிட வைத்து, எந்த மனிதன் இறந்து போகிறான் என்று ரசித்துப் பார்க்கும் ஜனங்களும் மன்னரும்… இதுதான் அன்றைய ரோமக் கலாச்சாரம். மூன்றாம் நூற்றாண்டின் கடைசியில், எல்லாரும் சண்டையை ரசித்துக்கொண்டு இருக்கும்போது, ஏதோ சத்தம் கேட்கிறது. முதலில் மெதுவாக ஆரம்பித்த குரல், கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து, அரங்கம் முழுவதும் எதிரொலிக்கிறது. “இயேசுவின் நாமத்தில் நிறுத்துங்கள்… இயேசுவின் நாமத்தில் நிறுத்துங்கள்” டெலிமாக்கஸ் என்ற கிறிஸ்தவர் உரத்த சத்தமாய் ஜெபிக்கிறார். ஒவ்வொரு மனிதனாக இருதயத்தில் குத்தப்பட்டு அரங்கை விட்டு வெளியே சென்றனர். அரங்கம் காலியானது. ராஜாவின் ஆட்கள் அவரைக் குத்தி கொலை செய்யும் போதும், அவரது வாய் அந்த வார்த்தைகளை முணுமுணுத்துக் கொண்டே இருந்தது. அவர் உயிர் அங்கே பிரிந்தாலும், அதன்பின் அந்த இடத்தில் வாள்போர் நடைபெறவே இல்லை என்று வரலாறு கூறுகிறது.
இப்படி பல ரத்த சாட்சிகள் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். பல கிறிஸ்தவர்கள் அடிக்கப்பட்டு நொறுக்கப்பட்டனர். பல யூதர்கள் அடித்து விரட்டப்பட்டனர். பிதா ஒருவரையே கடவுளாகக் கொண்ட யூதர்களுக்கு, இயேசு ஒரு தீர்க்கதரிசியாக மட்டுமே தென்பட்டார். அவரை பிதாவின் குமாரனாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிதாவை தூஷிப்பதாக எண்ணிய யூதர்கள், கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தினர். கிறிஸ்தவர்களை கொலை செய்தனர். ஒரு பக்கம் ரோமர்கள் கிறிஸ்தவரை கொலை செய்தனர்… மற்றொரு பக்கம் யூதர்கள் கிறிஸ்தவரை கொலை செய்தனர்.
கிபி130ல் ரோமப்பேரரசாக இருந்தவர், இஸ்ரேல் என்ற பெயர் உலக வரைபடத்தில் இருக்கவே கூடாது என்று சொல்லி, யூதேயாவிற்கு சீரியா பாலஸ்தீனா என்று பெயரிட்டார். உலகத்தில் இருப்பவர்களுக்கு இஸ்ரேல் என்ற பெயரோ யூதர்கள் என்ற பெயரோ தெரியவே கூடாது என்று பெயர் மாற்றி வைத்தார். யூதர்கள் அனைவரையும் நாடு கடத்தினார்.
கிபி 284ல் Diocletian பொறுப்பேற்று அரசாண்டார். கிபி235 முதல் கிபி 300 வரையுமே, தொடர்ச்சியாக யுத்தங்கள் நடந்து கொண்டிருந்தது. ரோமர்களின் எல்லைப் பிரச்சனைக்காக நடந்த போரில், பல கடன்கள் வந்தது. மிலிட்டரி மெயின்டெய்ன் செய்வதற்கு, நிறைய கடன் வாங்கப்பட்டது. அநேக குடிமக்கள் தங்கள் அடையாளத்தையும் சொத்துக்களையும் இழந்தனர். ரோமர்களே தங்களுடைய தெய்வத்தின் மீது சந்தேகமடைய ஆரம்பித்தனர். பன்னிரண்டு சீஷர்கள் வழியாக பரவிய கிறிஸ்தவம், அதன் புது கொள்கைகள் மக்களை ஈர்க்க ஆரம்பித்தது.
மக்களால் பல இடங்களில், சீஷர்களின் நிருபங்கள் எழுதப்பட்டு, மறைமுகமாக பகிரப்பட்டு வந்தது. பாலிகார்ப் படத்தில் அவர்கள் சீஸருக்கு மறைவாக எப்படி நிருபங்களை பரப்பினார்கள் என்று பார்க்க முடியும். புதிதாக ரோமர்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கிறிஸ்தவ மதத்தை Diocletian எதிர்த்தார்.ஆயிரக்கணக்கான நிருபங்களின் நகலை தீயிட்டு எரித்தார். எல்லா நிருபங்களும் சுட்டெரிக்கப்பட வேண்டும் என்றும், எந்த வீட்டிலாவது ஒரே ஒரு நிருபம் கண்டுபிடிக்கப் பட்டால், வீட்டையே தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்றும் சட்டம் போட்டார்.
அவருக்குப் பின், கிபி 312ல் கான்ஸ்டன்டைன் மன்னன் ஆட்சிப் பொறுப்பேற்றார். இந்த கான்ஸ்டன்டைன் புதிய ஒரு நகரைக் கட்டி, அதற்கு கான்ஸ்டன்டைன் நகரம் அல்லது பைசான்டைன் Byzantine என்று பெயரிட்டார். யுத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, தோற்றுப் போய்விடுவோம் என்ற நிலையில், ஒருநாள் இரவு கான்ஸ்டன்டைன் கனவு காண்கிறார். அவரது கனவில், ஒரு சிலுவை அடையாளம் காட்டப்பட்டு, By this sign you will conquer என்று சொல்லப்பட்டது. எனவே மன்னர், எல்லா போர்வீரர்களின் shieldலும் சிலுவை அடையாளத்தை பெயிண்ட் செய்யச் சொன்னார். அந்தப் போரில் எதிர்பாராத பெரிய வெற்றி அடைந்தார் கான்ஸ்டன்டைன்.
அந்த சிலுவை அடையாளம் என்ன என்று அவர் சிந்தித்துக் கொண்டு இருக்கும்போது, அவரது தாய் அவருக்கு சுவிசேஷம் அறிவித்தார். அவருடைய தாயாரும் ஒரு மறைமுக கிறிஸ்தவர் என்று சொல்லி விட்டு, இயேசுவைப் பற்றியும் அவர் உயிர்த்தெழுதல் பற்றியும் கூறினார். போரில் அதிசயத்தைக் கண்ட மன்னர், உடனடியாக இயேசுவை ஏற்றுக்கொண்டார்.
சிலுவை மரணம், ஓரினச்சேர்க்கை, விபச்சாரம், பிள்ளைகளை பலி கொடுப்பது, களியாட்டுகள் போன்ற எல்லாவற்றையும் தடை செய்தார் கான்ஸ்டன்டைன். இயேசு வாழ்ந்த இடங்களைத் தேடி, ஒவ்வொரு இடத்திலும் ஒரு ஆலயம் கட்டினார்.
Church of the Holy Apostle – Byzantine
Church of the Holy Sepulchre – Jerusalem
Church of the Saint Peter – Rome
போன்ற புகழ்பெற்ற ஆலயங்கள் கான்ஸ்டன்டைன் கட்டியதே. கான்ஸ்டன்டைன், இயேசுவின் மீது கொண்ட அன்பால், கிறிஸ்தவத்தை மதமாக அறிவித்தார். அதுவும் அரசாங்க மதமாக அறிவித்தார்.
கிறிஸ்தவர்களுக்கு அநேக சலுகைகள் கொடுத்தார். கிறிஸ்தவர்கள், வரி கட்ட வேண்டாம். இலவசமாக அப்பம் வாங்கலாம். கிறிஸ்தவர்களுக்கு இலவச குடியுரிமை என்று சட்டங்கள் இயற்றினார். அரசாங்கம் கொடுத்த சலுகைகள் காரணமாக அநேகர் கிறிஸ்தவர்களாக மாறினர். மனமாற்றம் இல்லாத மதம் மாற்றம் அந்தக் காலத்தில் நடைபெற்றது.
ரோமர்களுக்கு திரும்பும் இடமெல்லாம் தெய்வம். சிலைகள் நிறைந்து இருக்கும். இப்போது அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட கிறிஸ்தவத்தில், எந்த சிலையும் கிடையாது. எதை வணங்க வேண்டும் என்று மக்கள் திணறினர். மக்கள் மீண்டும் தங்கள் பழைய தெய்வங்களைத் தேடிப் போகாத படிக்கு, ஆலயத்துக்குள் சிலையைக் கொண்டு வந்து வைத்தார் கான்ஸ்டன்டைன். ரோமர்களின் ஒரு பெண் தெய்வம் ஒரு பெண் குழந்தையை கையில் வைத்தபடி இருக்கும். அந்த சிலையைக் கொண்டு வந்து ஆலயத்தில் வைத்து, இதுதான் இயேசுவும் மரியாளும் என்று கூறினார். அந்தச் சிலையை மக்கள் வணங்கும்படி வைத்தார் கான்ஸ்டன்டைன்.
முதலாவது இருந்த அந்த தெய்வத்துக்கு, அசிங்கமான கதை ஒன்று உண்டு. அதாவது சிலையில் இருக்கும் பெண் ஒரு தாய் என்றும், அவளுடைய மகன் திருமணத்திற்கு தன் தாயைப் போலவே முகம், தாயைப் போலவே அங்கங்கள் இருக்க வேண்டும் என்று கொச்சையாக கேட்டதாகவும், அந்தப்படி பெண் அவனுக்கு கிடைக்கவே இல்லை என்பதால், ஒரு குறிப்பிட்ட நாளை நியமித்து, அந்நாளில் தனக்கும் தாய்க்கும் திருமணம் என்று அறிவிப்பு வெளியிட்டு, அதேநாளில் திருமணமும் செய்தான். முதலிரவுக்காக தாயிடம் வரும்போது, தாய் தன் மந்திர சக்தியால் அவனை குழந்தையாக்கி இடுப்பில் தூக்கி வைக்கிறாள். இவர்களைத் தான் தெய்வம் என்று அந்த மக்கள் வழிபட்டு வந்தனர். ஆனால் அதே அருவருக்கத்தக்க சிலையை ஆலயத்தில் கொண்டு வந்து இயேசுவும் தாயும் என்று கூறிவிட்டார் கான்ஸ்டன்டைன். நமக்குள் சிலை வழிபாடு வருவதற்கு காரணம் இதுதான்.எப்படியாவது மக்கள் கிறிஸ்தவர்களாக மாற வேண்டும் என்று மன்னர் நினைத்தார். ஆனால் அவர்கள் மனம் மாறாமல், மதம் மட்டுமே மாறியது அவர் உணரவில்லை.
தெளிப்பு ஞானஸ்நானம்/ குழந்தை ஞானஸ்நானம்
கான்ஸ்டன்டைன் மகன் உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கும்போது, அவன் பரலோகத்துககுப் போக வேண்டுமானால், ஞானஸ்நானம் பெற்றிருக்க வேண்டும் என்று கருதிய கான்ஸ்டன்டைன், அவனுக்கு தெளிப்பு ஞானஸ்நானம் கொடுத்ததாகவும் அதுவே பின்நாளில் குழந்தை ஞானஸ்நானம் வருவதற்கு காரணமாக இருந்ததாக வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
கான்ஸ்டன்டைன் அரசனும், நெடுநாட்களாக ஞானஸ்நானம் எடுக்காமல் இருப்பார். ஆனால் அவர் மரிக்கும் தருணம் வந்தபோது, தன் உடல்நிலைக்கு முழுக்கு ஞானஸ்நானம் ஒத்துவராது என்று கருதியதால், அவர் தெளிப்பு ஞானஸ்நானம் எடுத்து, அதையே மக்களும் பின்பற்ற ஆரம்பித்தனர் என்று சிலர் கூறுகின்றனர்.
எது எப்படியோ, வேதத்தின் அடிப்படையில் பார்த்தால், வேதத்தில் எங்கும் தெளிப்பு ஞானஸ்நானமோ, குழந்தை ஞானஸ்நானமோ இல்லை. ஞானம் வந்தபின் எடுக்கும் ஸ்நானம். எனவே வேதத்தில் கூறப்பட்டதை பின்பற்றுவதே நமக்கு நலமானது. வேதத்தில் ஞானஸ்நானம் என்ற இடத்தில் உள்ள கிரேக்க வார்த்தை மூழ்கி எழுதல் என்னும் அர்த்தம் தரும்.
அதிகமாக பண்டிகை கொண்டாடிப் பழக்கப்பட்டவர்கள் ரோமர்கள். எனவே அவர்கள் பண்டிகை கொண்டாடுவதற்காக, அவர்கள் பிரமாண்டமாக கொண்டாடிய டிசம்பர் 25ம் தேதியை, சூரியக்கடவுளுக்காக கொண்டாடிய அந்த நாளை, இயேசுவின் பிறப்பின் பண்டிகையாக அறிவித்து, கொண்டாடச் செய்தார் கான்ஸ்டன்டைன்.
யூதர்களைக் கொலை செய்வதற்கு கிறிஸ்தவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார் கான்ஸ்டன்டைன். Christ killers என்று அழைக்கப்பட்டனர் யூதர்கள். யூதர்கள் கிறிஸ்தவர்களாக மாறும்படி வற்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். கான்ஸ்டன்டைன் மன்னர் காலத்துக்குப் பிறகு, கிறிஸ்தவர்கள் கொலை செய்யப்படுவது நின்று, யூதர்கள் மட்டுமே கொலை செய்யப்பட்டனர். கிறிஸ்தவம் மதமாகவும் யூதர்கள் பாவம் செய்தவர்களாகவும் எண்ணத் தொடங்கப்பட்டனர்.
கிபி538ல், ரோம சாம்ராஜ்யத்தின் வடபகுதி German Tribes எனப்படும் காட்டுவாசிகளால் பிடிக்கப்பட்டது. 538ல் Reformed Roman Empire State உருவானது. அதுவரை மதவாதியாக இருந்த போப், தனக்கு கீழே 10 நாடுகள் வைத்துக் கொண்டார். கிட்டத்தட்ட 1260வருடங்கள் போப் ஆண்டவர், அரசாண்டார்.
Short Timeline
• 313 – 636 கான்ஸ்டன்டைன் ஆட்கி
• 636 – 1099 அரேபியர்கள் ஆட்சி. பள்ளிவாசல் எருசலேமில் கட்டப்பட்டது.
• 1099 – 1291 லத்தீன் ஆட்சி
• 1291 – 1516 மம்லக் ஆட்சி
• 1517 – 1917 ஓட்டோமான் ஆட்சிக்குட்பட்டது. Osman மன்னரால் ஆரம்பிக்கப்பட்டதால், Osman ஆட்சி என்றும் அழைப்பர்.
• முதலாவது உலகப் போரில் இங்கிலாந்து துருக்கியர்களிடமிருந்து இஸ்ரேலைக் கைப்பற்றியது. துருக்கியர்களான ஓட்டோமன் ஆட்சி 400 வருடத்துக்கு பிறகு முடிவுக்கு வந்தது.
• இரண்டாம் உலகப் போரின் முடிவில், இஸ்ரேல் தனிநாடாக அறிவிக்கப்பட்டது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின், அவர்கள் தேசம் அவர்களுக்குக் கிடைத்தது.
ரோமானியர்களின் வீழ்ச்சி
ரோமப்பேரரசாக இருந்த ரோமில், 538ல் Reformed Roman Empire State உருவானது. அதுவரையில் மதவாதியாக இருந்த போப், தன்னை தலைவராக உயர்த்தி விட்டார். அவருக்கு கீழே 10 நாடுகள் வைத்துக் கொண்டு, ஆட்சி செய்ய ஆரம்பித்தார். 1798 வரையில், போப் காலம்தான். சுமார் 1260 வருடங்கள் போப் தலைமையில் இருந்தது.
1. பின்பு நான் கடற்கரை மணலின்மேல் நின்றேன். அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பிவரக் கண்டேன்; அதற்கு ஏழு தலைகளும் பத்துக்கொம்புகளும் இருந்தன; அதின் கொம்புகளின்மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின்மேல் தூஷணமான நாமமும் இருந்தன.
2. நான் கண்ட மிருகம் சிறுத்தையைப்போலிருந்தது; அதின் கால்கள் கரடியின் கால்களைப்போலவும், அதின் வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருந்தன; வலுசர்ப்பமானது தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது.
3. அதின் தலைகளிலொன்று சாவுக்கேதுவாய்க் காயப்பட்டிருக்கக் கண்டேன்; ஆனாலும் சாவுக்கேதுவான அந்தக் காயம் சொஸ்தமாக்கப்பட்டது. பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றி
வெளி 13-1,2,3,
கிபி 1798ல் நெப்போலியன் உலகைப் பிடிக்கும் ஆசையில், போப்பை சிறையில் அடைத்தார். பின் 1928 பிப்ரவரி 13ல் அவருக்கு மீண்டும் ராஜ்யபாரம் கொடுக்கப்பட்டது. ஆனால், போப்க்கு கீழிருந்த 10 நாடுகள் பிரிந்து விட்டார்கள். சாவுக்கேதுவான காயம் சொஸ்தமாக்கப்பட்டது.
பொதுவாக மதமும் ராஜபாரமும் ஒருங்கிணைய கூடாது. ஒரு ராஜ்யத்தில் மதமும் இணைந்து விட்டால், அந்த ராஜ்யத்தின் சிறுபான்மையினர் ஒடுக்கப்படுவார்கள். இயேசு கிறிஸ்துவின் ஆயிரம் வருட அரசாட்சியில் மட்டும் தான், மதமும் ராஜ்யமும் ஒருங்கிணைய முடியும். மற்றபடி மதமும் ராஜ்ஜியமும் எந்த ராஜ்யத்திலும் ஒருங்கிணைய முடியாது. ரோம சாம்ராஜ்யம் எல்லா மக்களையும் கிறிஸ்தவர்களாக மாற்றியது. போப் அரசர் கூறுவது, ஆண்டவரின் வாக்காக எடுக்கப்பட்டது. இதெல்லாம் வீழ்ச்சிக்கான காரணங்கள்.
1500களில் மார்ட்டின் லூதர் சூழ்ச்சியால் ரோம சாம்ராஜ்யம் வீழ்ந்தது என்று கூறுவர். அது தவறான கருத்து. மார்ட்டின் லூதர் எழுச்சி, தேவசித்தம். அவரது எழுச்சியால் தான் இன்று வேதபுத்தகம் நம் கைகளில் தவழ்கிறது. மார்ட்டின் லூதர் ரோமுக்குச் சென்று பார்க்கும்போது, போப் அரசர் ராஜ்யம் ஆரம்பிக்கும் போது மட்டுமே தாழ்மை இருந்தது. தற்போது, ஆடம்பரத்தின் உச்சத்தில் இருப்பதைக் கண்டார். உலக ராஜாக்களின் அரண்மனையை விட, போப் அரசர் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்ததைக் கண்டார். எனவே தான் ஜெர்மனிக்குத் திரும்பியவர், அவரது கருத்துக்களை ஆலயத்தில் ஒட்டினார்.
கிரேக்க ரோம மக்களுக்கு, வணங்குவதற்கு, தெய்வத்தின் சிலை தேவைப்பட்டது. எனவே ஆலயத்துக்குள் சிலை வழிபாடு கொண்டு வந்தனர். கிறிஸ்தவர்களாக வந்த மக்கள், ஆவிக்குள்ளாக வரவில்லை. ரோமர்களின் வழிபாடு எல்லாம் மதசாயம் பூசப்பட்டு ஆலயத்துக்குள் வந்தது. இவை எல்லாம் ரோம சம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு காரணமாய் அமைந்தது.
Leave a Reply